கலை, இலக்கிய வெளிப்பாட்டு உத்திகளில் ஒன்றாக அங்கதம் கருதப்படுகிறது. ஓவியம், சிற்பம், பேச்சு, நடனம், வாய்மொழி இலக்கியம், எழுத்து இலக்கியம் எனப் பல தளங்களில் இதன் பயன்பாடு உலகளாவிய நிலையில் நீண்ட நெடும்பயணத்தைக் கொண்டது. பண்டைக் காலந்தொட்டே சிறந்த இலக்கியப் படைப்பாளர்களால் இலாவகமாகக் கையாளப்பட்டு வருகிறது. அதாவது சிறந்த படைப்பாளர்கள் இதனைத் திறம்படக் கையாள்பவராக இருப்பார்கள். அங்கதத்தைத் திறனாய்வாளர்கள் பல்வேறு விதமாகப் பகுத்துப் பார்க்கின்றனர். எது நேரடியான தர்க்கத்திற்கு ஆட்படுத்த முடியாது என்று கருதப்படுகிறதோ, எவை பேசுவதற்குத் தடையானவை என்று சமுதாயம் கருதுகிறதோ அவை அங்கதமாக அணுகுவதற்கு வழி தேடிக் கொள்கின்றன என்று கருதுகின்றனர் மேனாட்டுத் திறனாய்வாளர்.

பெரும்பாலும் அரசியல், சமயம், பால் ஆகியவற்றின் அடிப்படையில் மேனாட்டுப் படைப்பாளரின் அங்கதம் அமைவதைத் திறனாய் வாளர்கள் எடுத்துரைக்கின்றனர். தமிழிலக்கியத் திறனாய்வாளர் தனிமனித அங்கதம், சமுதாய அங்கதம், அரசியல் அங்கதம் என மூன்றாக வகைப்படுத்துகின்றனர். தனிமனிதன் சமுதாயத்தின் அங்கமாக ஆகிப்போவதால் அவனுடைய செயலின் பொதுமை சமுதாயத்தினுடையதாக உருக்கொள்கிறது எனலாம். அங்கதம் சமுதாயம், அரசியல், சமயம் முதலியவற்றோடு தொடர்புடைய கருத்தாக்கங்களின் சீர்கேடுகளை நகைச்சுவை உணர்வோடு வெளிப்படுத்துவதுடன் அவற்றைச் சீரமைப்பதற்கான நோக்கத்தையும் தேவையையும் வழிவகையையும் வெளிப்படுத்தி நிற்கிறது எனலாம். எனவே இலக்கியத்தில் அங்கதம் என்பது சமுதாயப் பயன் நோக்கியதாக அமைகிறது. அவ்வகையில் கவிஞர் மலையருவியின் மனிதத் தின்னிகள் என்னும் கவிதைப் படைப்பில் காணலாகும் அங்கத வெளிப்பாட்டை அறிமுகப்படுத்துவதாக இக்கட்டுரை அமைகிறது.

நூலாசிரியர் அறிமுகம்

கவிஞர் மலையருவி என்னும் புனைபெயரில் மனிதத் தின்னிகள் என்னும் கவிதைத் தொகுப்பை வெளியிட்டுள்ள முனைவர் நா. இளங்கோ புதுவைக் கல்லூரிகளில் 35 ஆண்டுகளாகப் பணியாற்றிவரும் தமிழ்ப் பேராசிரியர். இவர் காலடியில் தலை, மனிதத்தின்னிகள் என்னும் இரண்டு கவிதை நூல்களையும் பத்து திறனாய்வு நூல்களையும் வெளியிட்டுள்ளார். வெளிநாடுகளிலும் இந்தியாவிலும் சிறந்த நகைச்சுவைப் பேச்சாளராக இனங்காணப்படுபவர். முகநூல், இணையம் முதலானவற்றில் சமூகப் பிரக்ஞையுள்ள செய்திகளைத் தொடர்ந்து பரிமாறி வருபவர். இவருடைய சொற்பொழிவுகளிலும் எழுத்திலும் அங்கதச் சுவை நீக்கமற நிறைந்திருத்திருத்தல் குறிப்பிடத்தக்கதொன்றாகும். 

na ilango book 328சமுதாய அங்கதம்

சமுதாயத்தில் காணலாகும் நிகழ்வுகளிலும் சூழலிலும் எத்தகைய களையப்பட வேண்டிய சீர்கேடுகள் உள்ளன என்பதைப் பல கவிதைகளில் முன்வைக்கின்றார் கவிஞர் மலையருவி.

நல்ல காலம் பொறக்குது என்று கூவிக்கொண்டுவரும் குடுகுடுப்பைக் காரனின் சொற்களில் நம்பிக்கை வைத்து அவற்றைக் காது கொடுத்துக் கேட்பவர்கள் அநேகர். பாரதியாரும் குடுகுடுப்பைக்காரன் பாட்டு ஒன்றைப் படைத்து இந்தியாவின் எதிர்காலத்தை எடுத்துரைப்பார். மலையருவியின் கவிதையில் குடுகுடுப்பைக் காரனையே கேலிக்குரிய வனாக்கும் அங்கதம் நிறைந்திருக்கிறது.

   புண்ணியவான்! சாமி!

   புஷ் மனசு வச்சிட்டாரு!

   அணுசக்தி ஒப்பந்தம்

   அமெரிக்கா ஒப்பந்தம்

   நல்லா நடந்ததுன்னா

   நாடே செழிச்சிப்புடும்

   வல்லரசா இந்தியாவும்

   வளைச்சிப் போடும் ஆசியாவ       (அணுசக்தி ஒப்பந்தம் 23)

என்று குடுகுடுப்பைக்காரன் வழியாக மதக்கலவரம், அணுசக்தி ஒப்பந்தம் முதலான பெரிய விஷயங்களைப் பேசவைக்கிறார் கவிஞர். உலகத்திற்கே நல்லது சொல்லும் குடுகுடுப்பைக்காரன் இறுதியில்,

   வயித்துக்கு வழியில்ல சாமி

   காலணாவோ எட்டணாவோ

   போட்டுட்டுப் போனா

   புண்ணியமாப் போவும் (24)

என்று கூறுதல் அங்கதச் சுவையின் உச்சமாகும்.

செய்தித்தாள்களில் நாம் படிக்க விரும்பும் செய்திதான் என்ன? என்று அலசிப்பார்க்கிறார் கவிஞர். செய்தித்தாள்களைப் புரட்டினால் சாவு, கொலை, விபத்து, யுத்தம் முதலான செய்திகள் நிரம்பி வழிகின்றன. ஒருவேளை இத்தகைய செய்திகள் எதுவுமே செய்தித்தாளில் இடம்பெறவில்லை யென்றால் மனிதனின் மனநிலை எவ்வாறிருக்கும் என எண்ணிப் பார்க்கிறார் கவிஞர்:

ஏன் இப்படி

எங்கே? சாவும் பிணமும்

எங்கே? கொலையும் விபத்தும்

எங்கே? யுத்தமும் வெறியும்

எங்கே? இரத்தமும் சதையும்

என்ன எழவுச் செய்தித்தாள்

இவைகளில்லாமல்    (மனிதத் தின்னிகள் 33).

என்றாவது ஒருநாள் அப்படி நடந்துவிட்டால் மக்கள் செய்தித்தாள் படிப்பதையே வெறுத்துவிடக்கூடும். கொடுமையான நிகழ்வுகள் குறித்த செய்திகள் வெளியான பழைய இதழ்களையாவது தேடிக் கண்டுபிடித்து மீண்டும் ஒரு முறை ஆசைதீரப் படித்து மகிழ்ச்சியடைவார்கள் என்று புதுமையாகச் சிந்திக்கிறார் கவிஞர்.

   பழைய செய்தித்தாள்கள்

   பழைய குப்பைகள்

   புரட்டப் புரட்ட. . . 

   பிணவாடை மூக்கைத் துளைக்க

   பித்தம் தெளிய

   இருப்புக்குச் சேதமில்லாமல்

   நாள் தொடங்கியது (35)

என்று சமுதாயத்தினரின் அடிமன விருப்பத்தை வெளிப்படுத்துகிறார். இதனால் தன்னைத் தவிர்த்த சமுதாயம் துன்புற்றுஇ சீர்கெட்டுக் கிடத்தலையே மனிதன் விரும்புகிறான் என்னும் கொடுமையான உண்மையையும் உளவியல் நோக்கில் அங்கதத்தோடு வெளிப்படுத்துகிறார்.

புரிகின்ற தமிழில் குழந்தைக்குப் பெயர் இடாமல் தமிழ் இலக்கணப்படி சொற்களின் முதல் ஒலியாக வராத ரி, ரீ, லு, லூ என்றெல்லாம் வருகின்ற எழுத்துக்களில் பெயரிடுதல்இ பெயர்களில் ஜ, ஸ்ரீ;. ஷ முதலான வடமொழி ஒலிகள் வந்தால்தான் 'மாடர்னா' இருக்குமென்று கருதுகின்ற தவறான கொள்கை, எழுத்துக்களைக் கூட்டினால் கூட்டுத்தொகை இத்தனை வந்தால் வாழ்வு வளமாக இருக்கும் என்று நம்புதல் முதலிய சமுதாயத்தில் பரவிவருகின்ற அயற் பண்பாட்டு மோகத்தைக் கோபத்தோடு நையாண்டி செய்கிறார் கவிஞர்.

   குழந்தைக்குப் பெயர்?

   சூட்டி மகிழ

   தாய், தந்தை

   தாத்தா, பாட்டி

   உறவு, நட்பு 

   ஆயிரமிருந்தும்

   ஓடு, ஜோசியக்கானிடம்             (அடச்சீ! இதுக்கா பெத்தீங்க? 44)

என்று நடைமுறையைச் சுட்டும் இக்கவிதை, 'அடச்சீ! இதுக்கா பெத்தீங்க?' என்று முடிகிறது. இக் குரல் ஆசிரியருடையதா? அல்லது பிறந்த குழந்தை யுடையதா? என்பது வாசகர் யூகத்திற்கே. சமுதாயத்தில் வேர்விட்டுவளரும் மூடநம்பிக்கைகளைச் சாடுதலும் படைப்பாளர்களின் முக்கியப் பணியாகவே அமைகிறது. இல்லையெனில் ஒட்டுமொத்த சமுதாயமும் திசைதெரியாமல் குலைந்துபோகும் நாள் வரக்கூடும்.

தொழில்நுட்பச் சாதனங்கள் நம் வாழ்க்கையில் பெருமாற்றத்தை ஏற்படுத்தி நம் வளர்ச்சியைப் பலமடங்கு மேம்படுத்தியுள்ளமையை யாராலும் மறுக்க முடியாது. எனினும் இவ் வளர்ச்சியை விளைவிக்கும் சாதனங்களின் மாயக் கவர்ச்சியில் அவற்றைப் பயன்படுத்தும் அனைவரும் சிறிதுசிறிதாக அடிமை களாகவே மாறி அவற்றிலிருந்து தம்மை விடுவித்துக்கொள்ளும் வழிதெரியாமல் கட்டுண்டுகிடக்கும் நிலையினை அங்கதச் சுவையுடன் எடுத்துரைக்கிறார் கவிஞர். 

'உள்ளங்கையும் கட்டை விரலும்' என்னும் கவிதை அலைபேசிகளில் தம்மைத் தொலைத்துவிடும் மாந்தரை முன்னிறுத்துகிறது.

   பிரபஞ்சமே

   உதடுகளில் தொடங்கி

   செவிகளில் முடிந்து போனது

   கண்கள் மட்டும் களவு போயின (48)

என்று ஒருவரோடு ஒருவர் முகம்கொடுத்துப் பேச முனையாத மனிதநேய அழிவைக்காட்டி, 

   எதிரே

   உறவும் நட்பும்

   முகங்களைக் காணோம்

   எண்கள்... எண்கள்...

   கட்டைவிரல் 

   உள்ளங்கையில் தடவத் தொடங்கியது (48)

என எச்சரிக்கை ஒலி எழுப்புகிறது.

தொலைக்காட்சிப் பெட்டியை 'வீட்டுக்குள் வளர்ந்த விருட்சம்' என்று குறிக்கிறார் கவிஞர். விருந்தினர்கள், நண்பர்களிடையே அளவளாவுதல் மறைந்தது. நடுவீட்டில் குழந்தைகள் விளையாட அனுமதியில்லை என்று தொலைக்காட்சியால் வரும் சிக்கல்களைக் கவித்துவத்துடன் அலசுகிறது இக் கவிதை.

   யார்

   அந்த விதையைப் போட்டார்கள்

   என்றே தெரியவில்லை?

   போயும் போயும்

   வீட்டு வரவேற்பறையிலா

   அதைப்போடுவது. . . (51)

என்ற கேள்வியை எழுப்பும்போது உண்மையிலேயே வரவேற்பறையில் ஒருவர் முகம் ஒருவருக்குத் தெரியாமல் வியாபித்து நிற்கும் ஓர் அடர்ந்த மரம் நம் கண்முன்னே விரிகிறது.

வீட்டுக்குள் வளர்ந்த

ஆலமரத்தின் 

விழுதுகளுக்கு இடையே

வேர் முடிச்சுகளில் சிக்கி

கிளைகளின் ஊடே

இறுகிய முகங்களோடு

விழிகள் நிலைகுத்தி

உறைந்து போகிறோம் (51)

என்னும் பகுதி சிந்திக்கப்பட வேண்டிய ஒன்று.

 'விருந்தோம்பலும் பந்தியும்' என்னும் கவிதையில் அதன் அமைப்பிலேயே அங்கதம் துளிர்விடத் தொடங்கிவிடுகிறது. தொல்காப்பிய நூற்பாவின் அமைப்பில்,

 பந்தி என்பது பகரும் காலை

 முதல், இடை, கடை என மூன்றாகும்மே (55)

என்னும் தொடக்கம் அங்கத நடைக்கு அழைப்பு விடுக்கிறது. விருந்துப் பரிமாறப்படுவதைப் படம்பிடிக்கும் இக்கவிதையின் ஒவ்வொரு வரியும் அங்கதச் சுவையில் பரிணமிக்கிறது.

 முன்னவர் உண்டு முடித்து

 இலைமடித்து

 எழுவதற்குள்ளாக

 அந்த இருக்கையில்

 நுட்பமாய் உடலை

 நுழைத்து அமரணும்

 இல்லையென்றால்

 கண்மூடிக் கண்திறப்பதற்குள்

 பந்திநிரம்பி

 நம்மைப்

 பார்த்துச் சிரிக்கும் (56)

என்று சொல்லும்போது பந்தியில் இடம்கிடைக்காமல் பரிதவிப்போர் அசடுவழிய நிற்பதும்இ இடம் கிடைத்தவர்கள் தப்பித்தோம் என்று நமட்டுச் சிரிப்பு உதிர்ப்பதும் சொல்லாமல் புரிகிறது.

 இடம் பிடித்தபின்

 எச்சில் இலை

 முன்னே இருந்தாலும்

 காணாதது போல்

 கடமையில்

 கண்ணாயிருக்கணும் (57)

என்று விருந்துண்பவர்கள் செய்ய வேண்டிய அடுத்தகட்ட கடமையை எடுத்துரைக்கிறார் கவிஞர்.

 இலையெடுத்து

 மேசை துடைத்து

 வகையாய் இலைபோட்டு

 வீசியும் எறிந்தும்

 கொட்டியும் ஊற்றியும்

 சிந்தியும் சிதறியும்

 விருந்து பரிமாறும்

 விந்தைமிகு பக்குவத்தில்

 தமிழனின் விருந்தோம்பல்

 தலைக்குப்புற

 வீழ்ந்து கிடப்பதைப் பற்றி

 நமக்கென்ன கவலை (57)

என்று கவிதை முடிவில் தெறிக்கும் அங்கதத்தொனி விருந்தோம்பலுக்குப் பெயர்பெற்ற தமிழ்ச் சமுதாயத்தின் எதிர்கால நிலையென்ன என்பதை யோசிக்க வைக்கிறது.

'சாகும் வரைக்கும் வேண்டும் வேலை!', 'எப்படி இருந்த நாம இப்படி ஆயிட்டோம்', 'சுற்றுச் சூழல் உன் சுற்றம்', 'கணினிப் புரட்சி', 'அநியாயத்துக்குக் கொள்ளை அடிக்கறாங்கப்பா!', 'நானும் அழுக்கு நீயும் அழுக்கு!', 'சாதி அரசியல்', 'சுயதொழில் நாட்டை உயர்த்தும்', 'மகாத்மா நீ இன்னும் சாகவில்லை!' முதலான கவிதைகள் சமுதாயச் சீர்கேடுகளை அங்கதத்தோடு எடுத்துரைத்து வாசகர்களைச் சிந்திக்கவைப்பதில் வெற்றிபெறுகின்றன எனலாம்.

அரசியல் அங்கதம்

 'அரசியல் நாடகம் பார்க்கலாம் வாங்க!' என்னும் கவிதைத் தலைப்பே அதன் ஊடாக இழையும் அரசியல் அங்கதத்தை வெளிப்படுத்தி நிற்கிறது.

   அரிதாரம் பூசாத

   நடிகர்கள் எல்லாம்

   பாத்திரம் அறிந்து

   மிகையுமில்லாமல்

   குறையுமில்லாமல்

   கனகச்சிதமாய்

   வெளுத்துக் கட்டுகிறார்கள் (25)

என்று குறிப்பிடும் கவிஞர் அரசியல்வாதிகளைச் சிறந்த நடிகர்களாகக் காட்டுகிறார். அவர்தம் நடிப்பு சிறப்பாக அமைவதால்தான் தொண்டர்களால் அவர்களைப் புரிந்து கொள்ள முடிவதில்லையோ?

   முள்கம்பி வேலிகளுக்குள்

   வதை முகாம்களில்

   சிக்கி

   ஓர் உலகம்

   விழிபிதுங்கி

   சேறும் இரத்தமுமாய்

   சின்னா பின்னப்பட்டுக் கிடக்கையில்

   நாடகம் நடக்குது நலமாக (26)

என்று சமுதாய அவலத்தை முன்னிறுத்தும் கவிஞர் இவற்றைக் களையவேண்டியர்கள் அதைப் பற்றிய சிந்தனை இல்லாமல் தம் நடிப்பில் கவனமாக இருக்க,

   வேடிக்கை பார்க்கும்

   வெட்கம் கெட்டதுகளோ

   எப்போதும் போலவே

   விநோதமாய் ரசிக்குது (26)

என்று அதை உணராத மக்களையும் தொண்டர்களையும் ஒரு சேரச் சாடுகிறார் கடுமையாக.

மின்வெட்டு குறித்த மலையருவியின் கவிதை அரசு நிர்வாகத்தினை அங்கதச் சுவையோடு கேலிசெய்கிறது. மின்வெட்டினால் சிறுதொழில்கள் பாதிப்படைவதை,

   சிறுதொழில்கள்

   மின்சாரமின்றி நலிவடைகின்றதா?

   உலக முதலாளிகளும்

   பன்னாட்டு நிறுவனங்களும்

   இருக்கும்போது

   உள்ளூர்த் தொழில்கள் எதற்கு? (சிரிக்கப் பழகுங்கள் 27)

என்று கேள்வியில் அடக்குவதன் மூலம் மின்வெட்டு இருவகையில் சிக்கல் ஏற்படுத்துவதைப் புரியவைக்கிறது. உலக மயமாக்கல் முலம் அந்நிய முதலாளிகளை அரசியல் தலைவர்கள் சுயலாபத்திற்காக நம்நாட்டிற்குள் வியாபிக்க விட்டுவிட்டு அவர்களுக்குத் துணைபுரியும் வண்ணம் உள்நாட்டுத் தொழில்களை மின்வெட்டு என்னும் பெயரால் நசுக்கி அவர்களை இனி எப்போதும் தலை எடுக்கவியலாமல் செய்யும் தந்திரத்தை அங்கதச் சுவையோடு எடுத்துரைக்கிறார் கவிஞர். 

   பகல் இரவு 

   இரண்டு நேரங்களில் மட்டும்

   மின்சாரம் தடைபடலாம்

   வந்து வந்தும் போகலாம்

   வராமலும் போகலாம் (27)

என்னும் தொடர்களில் வெளிப்படும் வார்த்தை ஜாலம் அங்கதத்தை வெகுவாகவே வெளிப்படுத்துகின்றது. 'தேசிய முகமூடி', 'அரசு ஊழியர்கள்', 'ஆட்சி மாற்றம்' முதலான கவிதைகள் அரசியல்சார்ந்த செய்திகளை அங்கதச் சுவையோடு வெளிப்படுத்துகின்றன.

சமய அங்கதம்

   ஆயி மகமாயி ஆயிரம் கண்ணுடையா!

   சூலி திரிசூலி சொல்லறதக் கேளுமம்மா! (30)

என்று இறைவனைப் போற்றித் தொடங்குகின்ற 'மதமான பேய் பிடியாதிருக்க வேண்டும்' என்னும் தலைப்பில் அமைந்த கவிதை, மதத்தின் பெயரால் அயோத்தி, குஜராத், பம்பாய், கோவை எனப் பல இடங்களில் நடந்த பல்வேறு பிரச்சினைகளைக் கோடிட்டுக்காட்டி, 

இரத்தவெறி வேண்டாம் - அம்மா

யுத்தவெறி வேண்டாம்

குண்டுகள் வேண்டாம் - அம்மா

சூலங்களும் வேண்டாம்

மதம் வேண்டாம் தாயே - எங்களை

மனுஷங்களா வாழவிடு

ஆயுதங்கள் வேண்டாம் தாயே - எங்களை 

அன்போடு வாழவிடு (32)

என்று மதங்களில்லா உலகினை வரமாகக் கேட்கிறது அங்கத முரணோடு.

'சாமியேய்ய் மரணம் ஐயப்பா!', 'பிள்ளையார் அரசியல்', 'விமர்சனம்', எங்கே கடவுள்', 'பேரண்டமும் நானும்', 'யார் யாருக்குக் கவலை?' முதலான கவிதைகள் கடவுள் சார்ந்த அறியாமையைக் களைய அங்கதத்தைத் துணைக்கழைத்துக் கொள்கின்றன.

 இவ்வாறு மனிதத் தின்னிகள் என்னும் தொகுப்பில் இடம்பெற்றுள்ள அனைத்துக் கவிதைகளும் (34 கவிதைகள்) அங்கதச் சுவையை முரண் அழகுபடக் கையாண்டுள்ளன. மேலும்இ சீர்கேடுகளைச் சுட்டிக்காட்டுவதுடன் சமுதாயக் கண்ணோட்டத்தில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்துவது அங்கதத்தின் பயனாகும் என்று திறனாய்வாளர்கள் சுட்டும் பணியை மலையருவியின் கவிதைகள் செய்யவல்லன என்பதனை, 

மலையருவி நம்பிக்கை வறட்சி கொண்டவரில்லை; நம்பிக்கை உணர்வை எங்கும் எவருக்கும் பரப்புவதில் ஊக்கம் உடையவராக இருக்கிறார் (வல்லிக்கண்ணன், மலையருவி கவிதைகள், சென்னை : தமிழ்ப் புத்தகாலயம், 1985, 18) என்று கவிஞர் வல்லிக்கண்ணன் குறிப்பிடும் விமர்சனமும் அரண்சேர்க்கிறது.

- முனைவர் ஒளவை இரா.நிர்மலா, தமிழ்ப் பேராசிரியர், புதுச்சேரி-8

Pin It