உயர்மட்ட கல்விக் குழுக்கள், சங்கங்களின் அகபுற ஒழுக்கங்கள் சீர்கெட்டுப் போயுள்ள நிதர்சன உண்மையைப் பேசுபொருளாகத் தொடத் தயங்கும் எழுத்தாளுமைகளுக்கு மத்தியில் 'இளங்கன்று பயமறியாது' என்பதற்கேற்ப உயர்மட்டக் கல்விக் குழுவில் நிகழும் சிக்கல்களையும் சீர்கேடுகளையும் கடந்த 2017ல் அச்சிலேற்றினாலும் அதற்கும் நான்கு வருடங்களுக்கு முன்பே எழுதி முடித்த குறுநாவல் என்கிறார் 'முனைவர்' ஆசிரியர் தனது உரையில். பேசுபொருளாக எடுத்தாளப்படும் விஷயம் நம் அனுபவத்தால்தான் நிகழ்ந்திருக்க வேண்டுமென்பதோ, கதையமைப்பு இப்படியான கட்டமைப்போடு சட்ட திட்டங்களோடுதான் இருக்க வேண்டுமென்பதோ இல்லை என்பதைத் தெளிவாக உணர்த்துகிறது கதை. சமூகத்துக்குச் சொல்ல வந்ததை சாமானியனுக்கும் கடத்துவதே போதுமானது என்பதை முதல் நாவல் பறைசாற்றுகிறது. இனி அடுத்தடுத்த படைப்புகளில் மெருகேற்றட்டும்.

jeyaprakash book munaivar'முனைவர்' (குறு) நாவல் என்பதைவிட நடைமுறை என்பதாகிறது. ஆனாலும் முனைவரை முதல் குறுநாவல் என்று சாதாரணமாகக் கடந்து போய்விட முடியாது. நாயகி பாரதியை நவீன யுவதியாக வர்ணிப்பதில் தொடங்கி ஒற்றைப் பெண் பிள்ளையாய் தாய் தந்தையின் அன்பில் கரையும், பாட்டியின் அன்புக் கண்டிப்பில் தொடங்கும் நாவல் பல்கலைக்கழகத்தில் நுழைந்த பின்பான ஓரிரு நாட்களில் நம்பிக்கைச் சிறகு முளைப்பதற்கான வரிகளில் நமக்கேகூட நம்பிக்கை துளிர்க்கிறது.

இந்த நாவலின் ஊடாக வரும் Dr. பாண்டுரங்கன் கதாபாத்திரம் Dr. சவரிமுத்துக்கு நேரெதிர். பல்கலை தோறும் பாண்டுரங்கன்களாக இருந்துவிட மாட்டார்களா என ஏங்க வைக்கும் பாத்திரப்படைப்பு அவரது திட்ட அறிக்கையைப் படிக்கும்போது ஏற்படுகிறது.

நாவலின் ஊடாக ஆய்வு மாணவன் பார்த்திபனின் கதை ஒரு தனிக் கதையாகவே சோகம் சுமந்து மிளிர்கிறது.

அதிலும் அவனது ஊரைப் பற்றியும் அந்த ஊர் மக்கள் ஒன்றுகூடி தங்கள் ஊரில் யாருக்கும் தற்கொலை முயற்சி எண்ணம் வராமலும் அந்த சாபத்திற்கான விமோசனமாக மக்களே எடுக்கும் முடிவும் வாசிக்கும் போதே மனம் பரவசத்தில் கண்ணில் நீர் கோர்க்கச் செய்கிறது. இதையே சற்று விரிவாகக் கதைநீட்டிப்பு செய்திருப்பார்கள் மற்றவர்கள்.. ஆனால் ஆசிரியரோ இதில் தான் எடுத்துக்கொண்ட பிரச்சனையின் வீரியத்தை அப்படியே வாசகனுக்குக் கடத்த முனைந்த பாங்கு தெரிகிறது.

Ph.D. முடித்த முனைவர்கள் Over qualified என்பதால் பட்டத்தை மறைத்து முதுநிலைப் பட்டத்தோடு கிடைத்த வேலையைச் செய்யும் அவலத்தை நினைக்கும்போது மனம் வலிக்கிறது.

நாவலின் நிறைவுப் பகுதியில் VC பரமன் வந்தபின் ஒரு நம்பிக்கை ஏற்படுத்துகிறார்.

5 ஆண்டுகள் ஆகியும் Ph.D. முடிக்காதவர்கள் அதற்குத் தடையாக என்ன இருந்தாலும் கைடாகவே இருந்தாலும் தன்னிடம் புகார் செய்யலாம் என்கிறார்.

பார்த்திபனும் அவனது நண்பன் திலீபனும் ஒரு வழியாக தீஸிஸ் சமர்ப்பித்தபின் வைவாவைஸ்க்கு காத்திருக்கும் இடைப்பட்ட நாட்களில் பணிக்குச் செல்ல முடிவெடுத்து கல்கத்தாவில் புகழ்பெற்ற பார்மா கம்பெனிக்கு நேர்முகத் தேர்வுக்குச் செல்கிறார்கள்.

அங்குதான் காத்திருக்கிறது அதிர்ச்சி......

                எனக்கு இந்தக் கதை மனதுக்கு மிக நெருக்கமானது. ஏனெனில் தொடக்கத்தில் பாரதி குடும்பம் பாரதிக்கு சேனை தொட்டு வைத்த மருத்துவர், மகளை மருத்துவராக்க இயலாமல் போனது, இதெல்லாமே எங்கள் வீட்டில் நிகழ்ந்தவைகூட....

இந்த நாவல் கூடுமானவரை எல்லா மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டால் சிறப்படையும்.

நூலின் பெயர்: முனைவர்

நூல் ஆசிரியர்: கு. ஜெயபிரகாஷ்

பதிப்பகம்: கீற்று வெளியீட்டகம்

- செ.விஜயராணி, இராசபாளையம்

Pin It