இன்னும் இருள் பிரியவில்லை. விடிய காத்திருந்த மேகம் இரவை கவ்விப் பிடித்திருந்தது போலிருந்தது. சாக்கு பையை எடுத்து கக்கத்தில் இடுக்கிக் கொண்டாள் வேணி. பர்ஸ் எடுத்து நெஞ்சிடுக்கில் சொருகிக் கொண்டு வீட்டை விட்டு வெளியே வந்தவள். வாசலை கூட்டி முடித்து கோலம் போட குனிந்திருந்தாள் சௌம்யா. “நீராகரம் குடிச்சிட்டு போயேன்ம்மா” கோலத்தில் குவிந்த கவனம் பிசகாது குனிந்திருந்தவள் குரல் இழுத்தது. “இவ்வளவு சீக்கிரமா நீராகரம் எங்க எடுபடும்” என்று பதில் சொல்லிவிட்டு நிற்காமல் நடக்கத் தொடங்கினாள். பாதையில் ஒரு மாடி வீட்டு சுவர் மீது பச்சை குக்குறுவான் குருவி தன்னுடல் கோதி சிலிர்த்துக் கொண்டு அதன் ஜோடி குருவியிடம் குட்ரூ குட்ரூ என்று தொடர்ந்து சொல்லிக் கொண்டிருந்தது. மாரியம்மன் கோவில் கூம்பு ஒலிபரப்பி “மாரியம்மா எங்கள் மாரியம்மா” என்று சத்தமிடத் தொடங்கியிருந்தது. தொலைவில் மாத கோவில் பரம பிதாவோடு பேச தயாரான அதே நேரம் மசூதியும் தன் பங்குக்கு அல்லாஹு அக்பரை அழைத்தது. ஒலிபரப்பிகளிலிருந்து வெளியில் கலந்த ஒளித்துணுக்குகள் மத வேறுபாடின்றி ஒன்றென கலந்து புழுதி போல் தெருவெங்கும் படிந்திருந்தது. ‘முன்னலாம் மார்கழி, ஆடி மாசத்துக்கு தான் கோன் கட்டுவானுங்க, இப்ப போட்டிகுன்னே அலையறானுங்க’ என்று தனக்குள்ளே அலுத்துக் கொண்டாள்.

இரண்டாம் சந்து முக்கிலிருந்து இரு சக்கர வாகனமொன்று கிளர்ந்து திரும்பியது. வாசல் தெளித்துக் கொண்டிருந்த அந்த வீட்டு பெண் வேணி நெருக்குவதை பார்த்ததும் தன் இடுப்பில் சொருகியிருந்த சேலையை இறங்கி விட அது மெல்ல நழுவி பாதங்களில் பட்டு விலகியது. ஒய்யாரமாய் காலை அகட்டி நின்றவள் அவசரமாக கால்களை நேராக்கி நின்று கொண்டு விளக்கமாரை உள்ளங்கையில் தட்டுவது போன்ற பாவனையில் இருப்பதை கவனித்த வேணி “என்ன ரம்யாவா இவ்வளவு சீக்கிரம் வாச தெளிக்க ஆரம்பிச்சாச்சா, இருட்டு முனி பிடிச்சிக்க போவுது” என்றாள். திண்ணை விளக்கு பளீரென்று அடித்தது. ரம்யா பதிலொன்றும் பேசாது அவசரமாக வாசலை கூட்ட குனித்த போது நிழல் நீண்டு வாசலை தாண்டியது. வேணி போய் விட்டாளா என்பது போல் குனிந்திருந்தே ஓரப்பார்வைப் பார்ந்தவளின் நெற்றி சுருக்கங்களை கவனித்தாள் ‘ஒன்னும் சரியில்ல, காலங்கார்த்தாலயே எதுக்கு இவ்வளவு பவுடர் பவுசு இந்த பிள்ளைக்கு. ஓழுக்கமா கட்டி போவளா’ என்று நினைத்தபடி கொஞ்சம் வேகமாக நடந்து அந்த இரு சக்கர வாகனத்தை அடையாளம் காண நினைத்தாள். சரியாக புலப்படவில்லை.

“என்ன வேணி மார்க்கெட் கிளம்பிட்டியா?” கோலத்திற்கு செம்மண் அடித்தபடி கோடி வீட்டம்மா கேட்டாள்.

“ஆமாக்கா இப்போ போனதா தான் நல்லப்பூ கிடைக்கும்”

“வீட்டுக்கு பிரிட்ஜ் வந்து இறங்கிடுச்சி போல”

“ஆமாக்கா நேத்து வந்ததது சௌமி சீட்டு கட்டி ஒன்னொன்னா வாங்கி போடற என்னத்துக்கு கேட்டா நாம வசதியா வாழ்தா தப்பாகிற”

“அவ சொல்றது சர்தானே வேணி நீ இருந்த இருப்பென்ன”

“அதெ விடுங்கக்கா, இப்போ எனக்கென்ன கொறச்சல் மகாராணியாட்டம் இருக்கேன், இரண்டு லஷ்மிங்க வீட்டுல இருக்கு. இரண்டும் தங்கம். என்னை தாங்கறாங்க”

“சரி தான் இனி பூவெல்லாம் அவ்வளவு நஷ்டமாவாது”

“ஆமாக்கா அது ஒன்னு இருக்கு”

“இனியாவது காமொட்ட கட்டறத கொஞ்சம் குரச்சிக்க, நேத்து நீ குடுத்த முழப்பூவுல நாலு இடத்துல ஜோடிப்பூ விழுந்துட்டது, கிளவி பல்லாட்டாம் பாக்க சகிக்கல”

“சரிக்கா இனிமே கவனமா இருக்கேன். லேட் ஆவது வரேன்”

‘இவ குடுக்கிற காசுக்கு காமொட்டு கழிச்சி செண்டாட்டம் கட்டி குடுப்பாங்க’ என்ற நினைத்தபடி பேருந்து நிலையம் அடைந்தாள். காய்கறி மார்கெட் போகும் பண்ணாரி காலை ஒடித்தவாறு நின்றுக் கொண்டிருந்தான். அவளை பார்த்து புன்னகைத்தான். “என்னக்கா முத்தண்ணா வர்லையா?” என்றான்.

“ஆமா பண்ணாரி அவருக்கு உடம்பு சரியில்லையாம். நல்லவேளை பஸ் இன்னும் போகல. ஒட்டமா ஒடியாந்தேன்”

வேலனை விட்டு வந்த நாளிலிருந்தே உள்ளூரில் முத்தண்ணாவிடம் பூ வாங்கி விற்று பிழைப்பை நடத்திக் கொண்டிருந்தாள். பிறகு குடும்ப செலவு கூடிப் போக வருமானம் வேண்டி பூ மார்கெட் போய் மொத்த விலைக்கு வாங்கி விற்கத் தொடங்கினாள். அவள் தொடுத்த மலர்களை சில வீடுகளில் வாடிக்கையாக அவளிடம் வாங்குவார்கள். இவள் உருட்டி உருட்டி நெறுக்கமாக பந்து போல் தொடுத்துத் தரும் மல்லிகைச் சரத்துக்காக வேணி எவ்வளவு கேட்டாலும், அதைக் கொடுத்து வாங்கிக் கொண்டு போவார்கள். சிலர் அப்படி கட்டித் தரச்சொல்லி முன் கூட்டியே பணம் கொடுத்து சொல்லி வைத்து விடுவார்கள். ஜடையலங்காரத்துக்கு பூப்பட்டைகளையும் உச்சிகொண்டைக்கு செண்டும் செய்வதற்கு வெளியூரிலிருந்து கூட சொல்லி செய்து வாங்கிக் கொண்டு போவார்கள். வேணியின் இரண்டாவது மகள் சசிகலாவுக்கு கற்பனை வளம் கொஞ்சம் அதிகம். விதமான விதமான சடைப்பட்டைகள் செய்வதோடு முகூர்த்த புடவை நிறத்திற்கேற்ப அதிலிருக்கும் ஜரி வடிவழகுகளுக்கு தகுந்தாற் போல சடைப்பட்டையில் பூ அலங்காரமும், கிளி, மயில் போல பூ வேலைபாடுகள் செய்வாள்.

‘யசோதா’ பஸ் வந்து நின்றது. வேணி டிரான்ஸ்போட் யசோதா பஸ் சர்வீஸாக மாறியதிலிருந்து அந்த பஸ்ஸில் அவள் பெரும்பாலும் போக தவிர்ப்பாள். மற்ற நேரங்களில் போக அவ்வாறு தோதுபடும். ஆனால் அந்த நேரத்துக்கு அது ஒன்று தான். அதுவும் முதல் பஸ். ஆறு மணிக்கு மேல் பத்து நிமிடத்துக்கு ஒரு வண்டி இருக்கும். கண்டெக்டர் அவளை பார்த்து வணக்கம் சொன்னான். டிக்கெட்க்கு பணம் வாங்க மறுத்தவனிடம் வலுக்கட்டயமாக டிக்கெட்டுக்கான சில்லரையை திணித்தாள். கண்டெக்டர் சீட்டில் இருந்தவரை எழுந்திருக்க சொல்ல போனவனை வேண்டாம் என்றாள். முதல் இருக்கையின் சீட்டின் பின்புறம் வேணி என்று பூ வேலைபாடு செய்த சீட் கவர் கிட்டத்தட்ட கிழிந்திருந்தது. வேலனோடு ஜோடியாக அந்த இருக்கையில் பயணித்த நினைவு அவளைப் பார்த்து கையசைத்தது. கண்களை கோர்ந்துக் கொண்டு வந்த கண்ணீரை மெல்ல துடைத்தாள். அருகில் நின்று கொண்டிருந்தவள் இவளை பார்ந்த அதே நேரம் தயங்கி முகம் திருப்பி, “கர்மம் மேல இருந்து ஒட்டர தூசி கொட்டுது, பழனி கொஞ்சம் பஸ்ஸ கீளின் பண்ணி பூஜ கிஜ போட மாட்டீங்களா” என்றாள். தொடர்ந்து மூன்று தினங்களாக முகூர்த்தத் தினம். ட்ரைவர் பின்புறம் லஷ்மி, கணபதி, சரஸ்வதி மூவரும் இருக்கும் படம் கும்பல் பிதுங்கியதால் கோணலாக தொங்கிக் கொண்டிருந்தது. ‘தினம் இந்த படத்துக்கு பூ கூட போட மாட்டீங்கிற பஸ் ஓனர் மவராசி’ என்று யோசித்துக் கொண்டே கூட்டத்தில் இடுக்கிக் கொண்டு நின்றாள். வேர்வையில் சின்னாளப்பட்டி சுங்குடிப் புடவை முதுகோடு ஒட்டிக் கொண்டது. ‘முத்தண்ணா வந்தால் ஏதாவது பேசிக் கொண்டே வருவார் இந்த பழைய கண்டராவி நினைப்பெல்லாம் வராது. பேச்சு துண மட்டுமா அவர் கூட வந்திருந்தா இன்னிக்கி கொள்ள காச அள்ளியிருக்கலாம். அவருக்கு பாழாப்போன காய்ச்சல் ஒவ்வொரு வைகாசிக்கும் வந்துடுது. அவரானும் காச்ச கண்ணி வந்தா ஓய்வெடுக்கலாம். ராசா கணக்கா பையன் வேற. நான் அப்படியா பெத்தது இரண்டும் பொட்ட. இரண்டையும் நல்ல கையில பிடிச்சி குடுக்கிற வர ஓடித்தானே ஆவணும்’

மல்லிகை, இருவாச்சி, சம்பங்கி, மரிக் கொழுந்து, வெட்டி வேர் அனைத்தும் கலந்த நறுமணத்தோடு, நேற்று விற்காது மிச்சமான பூக்களின் அழுகிய வாடையும் கலந்தே மார்கெட் முழுவதும் வீசியது. அங்காங்கே கிடக்கும் வாழை நார்களும் காலோடு பின்னிக் கொண்டு சர சரவென்று வந்தன. லாவகமாக காலை அகட்டி அதை விலகி விட்டு நடந்தாள். மார்கெட் வந்த புதிதில் இதிலிருந்து விலகி நடக்க தெரியாமல் தவறி விழப் போன போது முத்தண்ணா தான் தாங்கிப் பிடித்தார். ஒரு நொடி நேரம் தான் என்றாலும் அதன் பின் எப்போது மார்க்கெட் உள்ளே நுழைந்தாலும் வேணி ஜாக்கிரதையாகத் தான் நடப்பாள் எப்போதும் காலின் கீழ் ஒரு கவனமிருக்கும். “ஏன் அப்படி நரகலை மிதிச்ச மாறி நடந்து வர” உடன் வருபவர் கேட்காத ஆள் இல்லை. ஒரு சில கடைகளில் மஞ்சளை தண்ணீரில் சேர்த்து தெளித்திருந்தனர். சாணியுடன் சேர்ந்து மஞ்சளும் தனி மணமாய் கிளர்ந்து வீசியது. வழக்கமாக வாங்கும் கடையில் அதிக கூட்டம் நெரிந்தது. அடுத்த கடைக்கு நகர்ந்தாள். விலையை விசாரித்தவள் ‘யப்பா, மல்லிகைக்கு இன்று கை மீறின கிராக்கியால்ல இருக்கு’ என்று நினைத்துக் கொண்டாள். இருந்தாலும் பத்து கை மல்லிகையும், ஐந்து கை கனகாம்பரமும், கதம்பத்துக்கு சம்பங்கி, மரிகொழுந்து, ரோஜா எல்லாமே இருமடங்காக வாங்கிக் கொண்டு கிளம்பினாள்.

மார்கெட்டிலிருந்து திரும்பும் போது மணி எட்டாகி விட்டது. வந்து திண்ணையில் அமர்ந்தவள் அப்படியே அசதியில் தூண் மீது சாய்ந்து கொண்டாள். சூடாகக் காப்பியை கொண்டு வந்து கையில் கொடுத்து “குடிம்மா அக்கா தான் காலயே கஞ்சி தண்ணி குடுச்சிட்டு போன்னு சொன்னல, போயிட்டு வர வரைக்கும் எதுவும் தின்னு இருக்க மாட்ட, ஏன்ம்மா இப்படி பண்ற கூட வரேன்னு கேட்டாலும் ஒத்துக்கு மாட்ட” என்று சசி திட்டினாள். “சும்மா அம்மாவ திட்டாதடி” என்றாள் சௌமி. காப்பியை குடித்ததும் நிம்மதியாக இருந்தது. “இரண்டு மடங்கு சும அதான்” என்றாள் வேணி. திண்ணையில் காவேரி காற்று நெகிழ நெகிழ வீசியது நிம்மதியாய் இருந்தது. பத்து எட்டு வைத்தால் காவேரிக் கரை. பக்கத்தில் எல்லையம்மன் ஆலயத்தின் ஆலமரமும், வேப்பமரமும் கிட்டத்தட்ட வேணியின் குடிசை வரை நீண்டிருக்கும். மதியம் வரை நல்ல காற்று வரும். திண்ணைக்கு குச்சி இறக்கி ஓலை வேய்ந்து வைத்திருந்தாள் வேணி. வீட்டைச் சுற்றி கனகாம்பரம் செடி வைத்திருந்தாள், வெவ்வெறு நிறத்தில் கனகாம்பரம் பூத்து குலுங்கி சிரிப்பதை பார்த்தாலே எவருக்கும் கண்கள் மகிழ்ச்சியில் மினுக்கும். சில சமயம் வீட்டில் பூக்கும் பூக்களை தொடுத்து விற்றே மாத செலவை ஓட்டி விடுமளவுக்கு பூக்கள் மலரும். டிசம்பர் பூ, சாமந்தி பூச்செடிகளும் வைத்திருந்தாள். சமீபமாக சசி ரோஜாச் செடி கூட வைத்து வளர்க்கிறாள். சௌமி வீட்டை தூய்மை குறையாது வைத்திருந்தாள். நேற்று வந்திறங்கிய ப்ரிட்ஜ் ஆச்சரியபடும் அளவுக்கு சமையலறையிலேயே இடம் பிடித்திருந்தது எல்லாம் சௌமியின் திட்டம்.

மார்க்கெட்டிலிருந்து வந்த அசதி போக குளித்துவிட்டு வந்தவள், உடனே பூக்களை தொடுக்க அமர்ந்தாள். “சாப்பிட்டு உட்காரும்மா ஒரு வழியா” என்றவளிடம் “இப்ப தானே காப்பி குடிச்சேன், ஆயிரம் பூவானும் கட்டிட்டு வரேன், முத்தண்ணா வரும் போது அப்ப தான் முத சுற்றுக்கு கொடுக்க சரியா இருக்கும்” என்றாள். விறுவிறுவென்று தொடுக்க ஆரம்பித்தவள், “இன்னிக்கி பூவுல காவாசி காமொட்டா இருக்கு, சசி ஓடிப் போய் முத்தண்ணா வீட்டுல இருக்க காமொட்டையும் பொறுக்கிட்டு வா, இல்லைன்னா ரொம்ப நட்டமா போயிடும்” என்றாள். சசி போக கிளம்பிக் கொண்டிருக்கும் போதே பாஸ்கர் வந்து கொண்டிருந்தான்.

“என்னண்ணா மொட்டு பூவல்லாம் எங்கம்மா தலைல கட்டச் சொல்லி உங்கப்பா கொடுத்து விட்டாரா”

“சசீ சும்மா இரு. சௌம்யா பாஸ்கருக்கு காப்பி போடு கண்ணு”.

காப்பியை குடித்து விட்டு சசியிடம் கொஞ்சம் வம்படித்து விட்டு பாஸ்கர் கிளம்பும் போது, “அத்தே நான் கிளம்பறேன், மார்கெட்க்கு அப்பாவ விட்டு நீங்க மட்டும் தனியா போன, பஸ் ஸ்டாண்ட்ல பூவ இறக்கிப் போட்டுட்டு வாங்க. நான் ஆளுங்கல விட்டு எடுத்துட்டு வந்து கொடுக்கறேன். இன்னிக்கின்னு பார்த்து அந்த பெரிய இடத்து கான்ட்ராக்ட்டுக்கு போக வேண்டி போச்சு. அப்பா நீங்க சுமக்க முடியாம தூக்கிட்டு வந்தீங்கன்னு வருத்தப்பட்டாரு”.

“அதெலாம் பராவால்ல கண்ணு. பூவ அனாத போல போட்டு வர மனசு இல்ல. ஆட்டோ கேட்டேன், இன்னிக்கின்னு என்னவோ ஏகப்பட்ட கிரக்கி அடிச்சான். அதான்”

பாஸ்கர் விந்தி விந்தி நடந்து போவதை கொஞ்ச நேரம் பார்த்துக் கொண்டிருந்தவள் பரபரவென்று பெரிய பந்தை கட்டி முடிக்கும் போது பசி வயிற்றிலிருந்து எழுந்து தலையை கொய்து தின்று விடும் போலிருந்தது.

பழையதை பிழிந்து தட்டில் போட்டுக் கொண்டே “பாப்பா அந்த குழம்ப சுட வைச்சி எடுத்தா, பசி கொல்லுது” என்றாள்.

“அப்பவே சாப்பிட சொன்னேலம்மா, சாப்பிட்டு செஞ்சாலும் அதே வேல தானே” பாஸ்கர் கொண்டு வந்த இட்லியை எடுத்துக் கொண்டு அவள் அருகில் வைத்தாள்.

“இல்ல கண்ணு சாப்பிட்ட கொஞ்சம் சோம்ப தட்டிரும் அதான் கட்டி முடிச்சிட்டு வேற வேலய பாக்கலாம்ன்னு நினைச்சேன்.”

“வயித்த காய போடாதம்மா, எனக்கு கல்யாணமாகி போன பொறவு சசிய கரை ஏத்தற வரை நீ உழைக்கனும்ல்ல”

“பாப்பா உன்ன உள் ஊர்ல என் கூடவே இருக்கறப்பல மாப்பிள்ளை பாக்கலாம்ன்னு நினைக்கிறேன். எனக்கும் அப்ப தானே ஒத்தோசையா இருக்கும். நீ என்ன சொல்ற”

வெருட்டென சௌமி உள்ளே சென்றாள். “கல்யாண பேச்சு எடுத்தது ஓடறத பாரு, இன்னிக்கே நல்ல நாள் தான் முத்தண்ணா கிட்ட சொல்லி பாக்க ஆரம்பிச்சிடனும் அப்ப தான் வருஷம் தாண்டறதுக்குள்ள தேதி வைக்க முடியும்” என்று சொன்னது சௌமி காதில் விழுந்தது. எல்லாம் கவனித்துக் கொண்டிருந்த சசி உள்ளே வரும் போது சட்டென கண்ணீரை துடைத்துக் கொண்டாள் சௌமி.

“ஏன்க்கா உனக்கு இது பிடிக்கலன்னு சொல்ல வேண்டியது தானே”

“அதெல்லாம் ஒன்னுமில்ல. பரிட்சைக்கு தானே லீவ் விட்டுருக்கு. நீ படிக்கிறத மட்டும் பாரு.”

சாப்பிட்டு விட்டு முகம் கழுவி வந்து, மீண்டும் பூக்களைத் தொடுக்க ஆரம்பித்தாள், சாமர்த்தியமாக பெரிய பூக்களின் இடையிடையே மொட்டு மலர்களை வைத்து ஜோடி சேர்த்து கட்டிக் கொண்டிருந்தாள். கை பூவை கலைந்தெடுப்பதும், நாரை ஆள்காட்டி விரல் நடுவிரலால் மடித்து நீள் வட்டாமாக்கி பூவோ மாட்டி நாரை இறுக்கி இழுப்பதும் மீண்டும் பூ கலைவதும் என்று மின்னல் வேகத்தில் அவள் விரல்கள் இயங்கிக் கொண்டிருந்தன. ஒரு மொட்டை கூட விட்டு விடக் கூடாது என்ற கவனம் குவிந்திருந்தது.

“அம்மா இப்படி ஜோடி மாத்தி கட்டறத முதல நிறுத்து” என்றாள் கோபமாக.

திடுக்கிட்டு நிமிர்ந்தவள் “என்ன பாப்பா ஏன் கோவப்படற, அதுவும் பூ தானே தலையில ஏறிட்டு போவட்டுமே, கை அளவுல காசு கொடுத்து தானே அத வாங்கறோம்”

“உனக்கு காசு, உன் சுயநலம் இதெல்லாம் தான் முக்கியமா?”

“சசி விடு, அம்மாவ திட்டாத”

“நீ சும்மா இருக்கா”

“ஏய் என்னாச்சு வாய் நீளுது எப்பா பாரு சிடு சிடு பேசிட்டு மட்டு மரியாத இல்லாத”

“நீ பேசற கல்யாண பேச்சு அக்காவுக்கு பிடிச்சி இருக்கான்னு கேட்டியா?”

“நான் சொல்றத அவ கேட்டு கிட்டு தானே பேசமா இருக்கா”

“அவ என்னிக்கி வாய தெரந்து தனக்கு பிடிச்சத சொல்லி இருக்கா. அவளுக்கு இதில் இஷ்டமில்ல.”

“ஏன் சௌமி என்ன பேசறா இவ, உனக்கு இங்கேயே அம்மா கூட இருக்க இஷ்டமில்லையா?”

“அவள கேட்காத. சொல்ல மாட்டா. கிரி அண்ணாவ தான் அவளுக்கு பிடிக்கும்.”

சட்டென இருட்டிக் கொண்டு வந்தது. தட் தடா தடாம். கோடை மழைக்கு வெளியே இடி இடித்துக் கொண்டிருந்தது. பளிச்சென்று வெட்டிய மின்னலில் பிரமை பிடித்தவள் வேணி போல் முழிப்பது தெரிந்தது. “அய்யோ நான் என்ன பண்ணுவேன் ஏ மாரியாத்தா பொம்பள வளத்த பிள்ளைங்கன்னு இப்படி தான் ஊர்மேயும்ன்னு வாய் மேல சொல்ல போட்டு துப்பிடுவாங்களே. தனியா இவ பிள்ளய என்ன ஒழுக்கமா வளர்க்க போறான்னு ஊர்ல பேசினது போலவே ஆச்சே. இனி எப்படி தல நிமிந்து நடப்பேன்.” பெரிதாய் அழ ஆரம்பித்தாள் வேணி.

“அப்படி எல்லாம் ஒன்னுமில்லம்மா அழுவாதம்மா”

“அக்கா நீ பேசாத. அம்மா அவ கிரி அண்ணனை கட்டிகிட்டு நல்லா இருக்கட்டும். பூவுல கண்ணி விழுந்துச்சுன்னு பிரச்சனை இல்லம்மா, ஆனா?”

வேணி பேசாது இருந்தாள். அவளால் ஆற்றாமை தாங்கவே முடியவில்லை. “அய்யோ சௌமி நீ இப்படி பண்ணுவன்னு கொஞ்சமும் நினைக்கலயே. சின்ன சிறுக்கி ரோசாவோ முள்ளோன்னு இருக்கா, வெடுக்கு வெடுக்கு நெருப்ப கொட்டற, என் கடைசி காலத்துக்கு உன்ன தானே முழுசா நம்பி இருந்தேன்” சுவரில் பல்லி உச் கொட்டியது.

“தெய்வமே கவுலி வேற பட்பட்டுன்னு கெட்ட மூலைல இருந்து சகுனம் சொல்லுதே. வேணி வீம்பு பிடித்து குடும்ப மானத்த வாங்குறான்னு யதோசா சொல்றான்னு என் கிட்டயே சொன்னாவ கிரி அம்மா. வீதி வீதியா பூ விக்கறதெல்லாம் என்ன பொலப்புன்னு எத்தனை முற கேவலமா பேசி இருக்கா” புலம்புவதை சற்றே நிறுத்தினாள் வேணி.

“காவேரில தண்ணி எடுக்க போனாக் கூட நாம கால வைச்ச நடந்து போன கல்ல கூட கழுவிட்டு தான் அதில் உட்கார்ந்து தண்ணி மொப்பா கெட்ட ஜாதி பொம்பள, மகாராணி கணக்கா தர்பார் பிடிக்கிறவ. அவ கிட்ட எப்படி போய் சம்மந்தம் பேசறது. எங்கயோ விழற இடிய கொண்டு வந்து இப்படி என் தலல இறக்குவீங்கல சாமீ” வேணி திண்ணைத் தூணை பிடித்து உலுக்கியதில் பல்லி தடுமாறி கீழே விழுந்து ஓடியது.

“இப்ப என்ன ஒல போச்சுன்னு இவ்வளவு சீன் போடற”

“நிறுத்துடி. சௌமி வெளியூர் போயிட்ட அப்ப இந்த வீட்டையும் பார்த்து தொழிலையும் எப்படி பாக்கறது. உன்ன எப்படி கரை சேர்க்க”.

“உனக்கு எவ்வளவோ சுயநலம். உம் பொழப்பு முடிஞ்சது. என்னை பத்தி நீ கவல படாத. அக்கா கிரி கூட தான் கல்யாணம் கட்டுவா”

‘கிரி வீடு பெரிய இடம் சீர் செனத்தியெல்லாம் முடியுமா’ பூக்களை அப்படியே போட்டு விட்டு தலையில் கை வைத்து எதையோ வெறித்துக் கொண்டிருந்தாள். ‘சசி சொல்வது போல ஜோடி சரியில்லாமல் போய் விட்டால்’ என்று நினைந்த தருணம் காலையில் ரம்யாவின் இடுப்பிலிருந்து அவசரமாய் இறங்கி கால் தழுவிய புடவை நினைவுக்கு வந்தது. ‘வேணி மக தானா தேடி கிட்டாளாமே’ இது கூடவே கூடாது உடனடியாக எதாவது பண்ணியாகனும் என்று எழுந்து வெகுவெகுவென்று தெருவிறங்கி நடந்தாள்.

மீனாக்கா வீட்டுக்கு ஓடினாள். விரித்த கூந்தலை முடிந்து கூட போடாது அவசர அவசரமாய் வந்த வேணியின் மழையில் நனைந்த தேகமும், பீதி கலந்த அவள் பார்வையையும் பார்த்ததும் மீனாக்காவுக்கு பயத்தை தந்தது ஏதோ சிக்கலென்று புரிந்து கொண்டாள். வெளி திண்ணையில் முத்தண்ணாவோடு ஏதோ பேசிக் கொண்டிருந்தாள் மீனா. “வா வேணி” என்று சொல்லும் அதே நேரம் “உஸ்ஸ்ஸ்ஸ்” என்று குக்கர் சீட்டி கேட்டு உள்ளே எழுந்து போனாள். மழையில் உடலோடு ஒட்டிய சேலையில் வேணியை வெறிக்கப் பார்த்தவர் “என்ன ஆச்சு தாயீ ஏன் இவ்வளவு வெல வெலத்து போயிருக்க, என்ன பிரச்சனை?”

முத்தண்ணாவுக்கு பதில் சொல்லாமல் விறுவிறு என்று வீட்டுக்குள் போனவள். மீனாவின் கைகளை பற்றிக் கொண்டு “அக்கா நீ தான் என் மானத்த காப்பாத்தனும் சௌமிக்கு உடனே கல்யாணத்தை முடிச்சாகனும், கேடுகெட்ட சிறுக்கி குடி மானத்த வாங்கிடுவா போல, சின்னக் குட்டி சொல்ற அவ கிரிய விரும்பறான்னு. அவங்க வீட்டுல இவள நல்லா வாழ விடுவாளாக்கா. நீங்க இரண்டு பேரும் சரி சொல்லுங்க சௌமிய பாஸ்கருக்கு உடனே முடிச்சிறலாம்”

“நம்ம சௌமியா?”

“சசி தான்க்கா சொன்னா, இவ வாய தெரக்கல.”

“நம்ம ஆச வேற, நம்ம பிள்ளைங்க எண்ணம் வேற”

“இல்லண்ணா”

“விஷயம் இப்படின்னு தெரிஞ்ச அப்பறம், நாம நல்லபடி கிரி வீட்டில பேசறது தான் சரியா இருக்கும்”.

“அது எப்படிக்கா சரி வரும்”

“பாஸ்கர் கால் வேற கொறபட்டு கிடக்கு”

“அதெல்லாம் பரவால்லக்கா”

“இல்ல தாயி, பாஸ்கர வேற கேட்கனும்.”

குழப்பத்தோடு வீடு வந்தாள். மழை ஓய்ந்திருந்தது. அமைதியாக மீண்டும் பூக்களை தொடுக்க ஆரம்பித்தாள். பிள்ளைகள் மீண்டும் மீண்டும் வந்து பேச முயற்சி செய்தும் பேசவில்லை. தட்டில் சாப்பாட்டை பிசைந்து கொண்டு வந்து சௌமி சாப்பிட சொன்னாள். பருக்கை பூத்தது தான் மிச்சம். வேணி பேசவும் சாப்பிடவும் தண்ணீர் கூட குடுக்கவும் மறுத்தாள். இரவு சௌமி அழுவதை சகிக்க முடியாத சசி அம்மாவுடன் சண்டை போட ஆரம்பித்தாள். எதுவுமே காதில் விழாதது போலும் உறங்கி விட்டது போலும் பாவனை செய்தாள். சௌமி செல்ல பூனை போல அம்மா அருகில் வந்து இடுக்கி படுத்துக் கொண்டாள். வேணி விலகி படுத்துக் கொண்டாள். சௌமி அழும் போது உடல் குலுங்கியது இருட்டிலும் தெரிந்தது.

மறுநாள் பொழுது ‘சரக் சரக்’ என்று ஆவேசமாய் சௌமி வாசலை பெருக்கும் சத்தத்தோடு புலர்ந்தது. அவளை பார்க்க பார்க்க வேணிக்கு கொஞ்சம் மனம் இளகி வந்தது. ‘அய்யோ காரியம் கெட்டு போயிரும்’ என்று நினைத்து விட்டத்தை வெறித்துக் கொண்டு உட்கார்ந்திருந்தாள். “வீட்டு வாசல்ல இது ஊர் மேயறது தெரியாமா நான் மார்க்கெட், பூ, காசுன்னு இருந்துட்டேனே” என்று சௌம்யா காதில் விழும்படி உரக்க கூறினாள். இருள் முற்றிலும் நீங்கி இருந்தது, வாசலுக்கு போனவள். “எந்த சிறுக்கி மவன் இங்கே வந்து வலை வீசட்டும் வெட்டி போடறேன்”. வாசலில் இருந்த கூடையை எட்டி உதைத்தவள் “வாசலை என்ன தோண்டிட்டு இருக்க உள்ள போ நீ போட்ட கோலமெல்லாம் போதும், வீட்டு விட்டு வெளிய தலை தெரிஞ்சா கயித்த கட்டி உத்திரதில ஏத்தி விட்டுவேன்.” அப்படியே முறைத்து பார்த்த சௌம்யா உள்ளே போகாமல் நிற்க, பூச்செடியை அகற்ற பயன்படுத்தும் கழியை தூக்கி அவள் மேல் எறிந்தாள். “என்ன முறைக்கிற, இடுப்பு சீல சொருகிற அளவு கொழுப்பு இருந்தா போதும். அது கூடினா அரிப்பெடுத்து அலையச் சொல்லும், பேச்சு மட்டும் தானா, வீட்டுக்கு வரப் போவ இருந்தானா?”

“அம்மா அவ்வளவு தான் மரியாத”

கொஞ்ச நேரம் மௌனமாகவே இருந்தாள் வேணி. அவளது அகங்காரம் வேனில் கால வெக்கையாய் வீட்டில் பரவியது. ஊர் சிறுக்கியெல்லாரும் ஒழுங்கெட்டு தான் திரிறியறாங்க. “விஷ் விஷ்” என்று விசிறி சத்தத்தோடு, “ஸ்ப்பா” என்று வியர்வையை ஒற்றி எடுத்துக் கொண்டாள். இடம் கொஞ்சம் குளிரட்டுமென்று ஒரு பெரிய கிண்ணத்தில் தண்ணீர் விட்டு அதில் வீட்டில் மலர்ந்த ரோஜா பூக்களை மிதக்க விட்டிருந்தாள். கூடவே கொஞ்சம் வெட்டி வேரையும் போட்டு திண்ணை ஓரத்தில் வைத்தாள். வீட்டுக்கு கண் திருஷ்டி படாமல் இருக்க இப்படி அலங்காரம் தினம் சௌமி தான் செய்து வைப்பாள். இன்று வேணி அலங்கரித்த ரோஜா மணத்தோடு வீசும் காற்று வீசுவது ஆறுதலாக இருந்தது. வெட்டி வேர் சூட்டை தணித்தது. சசி படித்து கொண்டிருந்தவள் எழுந்து வந்து ரோஜா மிதந்த கிண்ணத்தை வெடுக்கென்று எடுத்துக் கொண்டு போய் “சூனியம் பிடிச்ச வீட்டுக்கு திருஷ்டி ஒன்று தான்” வேலியில் தண்ணீரையும் பூவையும் ஊற்றி விட்டு வந்து வெறும் கிண்ணத்தை வைத்தாள். கிண்ணத்தை எடுத்து திண்ணையில் அமர்ந்தவாறே உள்ளுக்குள் வீசி எறிந்தாள் வேணி. அது பீரோ மீது பட்டு நங்கென்று ஒலியெழுப்பியது. சௌமி பீரோவில் பட்ட காயத்தை தடவிப் பார்ப்பது திண்ணையிலிருந்தே தெரிந்தது.

நாட்கள் என்று நாள் நகர்ந்து கொண்டே இருந்தன. யாரும் சரியாக பேசிக் கொள்ளவில்லை.

“சௌமி ஆச படற. ஏம்மா அளிச்சாட்டியம் பண்ற?”

“கிரி அம்மா ஏத்துக்க மாட்டா. அப்பறம் சௌமி கதி?”

“கிரி அண்ணா படிச்சி பட்டணத்தில் வேல பாக்கறாங்க. இவ அங்க தானே இருப்பா அந்த அம்மா என்ன பண்ண முடியும்?”

“ஏன்டி கூறு கெட்டத்தனமா பேசற, ஒன் பாட்டி எனக்கு வினையம் பண்றேன்னு, யசோதாவ கூட்டிக்குடுக்கல, சௌமிக்கு மீனாக்கா வீடு தான் சரிபடும்”

“அம்மா கெடு கெட்ட கோவம் வந்துறும், எத்தன வாட்டி பொறுமையா சொல்றேன், ஏம்மா திரும்ப திரும்ப அந்த நொண்டிய அக்கா தலையில கட்ட பாக்கற”

“அறைஞ்சிடுவேன், மூஞ்சி திரும்பிக்கும். பாஸ்கர் மாறி தங்கம் கிடைக்க ஒரு பொண்ணு கொடுப்பினை இருக்கனும்.”

“அவன் தங்கம்ன்னா நீ கட்டிக்க.”

வேகமாக எழுந்து வந்த வேணி சசியை ஓங்கி ஒரு அறை விட்டாள்.

“அம்மா சசிய அடிக்காத.”

“நீ பாஸ்கர கட்டிக்க கொஞ்ச நாள்ல எல்லாம் சரியாப்போயிடும்”

“அய்யாவ விட்டு வந்த பின்ன கொஞ்ச நாள்ல எல்லாம் சரியாடும்ன்னு நீயும் உன் ஊர் புருஷன் கூட இருந்திருக்கலாமில்ல” கோபத்தில் தீயென ஜொலித்தது சௌம்யாவின் முகம்.

பொண்ணுகளா இவளுக. தட்டுவாணி முண்டைங்க. பாசம் பதப்பு ஒரு மண்ணாட்டியுமில்ல. வாயில பல்லிருக்கே அதை தாண்டி என்ன பேசனும் தெரிய வேணாம். என்ன போயா. இதுகளையா பெத்தேன், கட்டுனவன் நட்டாத்தில் விட்டும் பாடுபட்டு இவ்வளவு கஷ்டபட்டு வளத்தேன். மனம் போல தான் மார்க்கம். நாமே போய் கிரி வீட்டில் கேட்டாலும் சம்மதம் சொல்ல மாட்டார்கள். கெடு சிறுக்கிகளுக்கு கெடு தான் வரணும். ‘எப்படியாவது இது நடக்காமல் பண்ணிட்டா போதும், ஆத்தா உன் கோவிலே கதின்னு வந்திடுறேன்’ என்று வேண்டிக் கொண்டாள். கொஞ்சம் தெம்பாக இருந்தது. தூரத்தில் முத்தண்ணா வருவது தெரிந்தது முத்தானையை நன்றாக இழுத்து போர்த்திக் கொண்டாள்.

“ஸ்ப்பா என்ன வெயில், சௌமி கண்ணு நீராகரம் மோர் விட்டு குடுக்கிறியா? என்றவரை வாவென்று கூட கேட்காமல் முகவாயை கோணிக்கொண்டு சௌம்யா உள்கட்டுக்கு போனாள். அவள் முகபாவனையை கவனிக்க தவறியவன் “என்ன ஆத்தா, இன்னிக்கி இவ்வளவு மொட்ட கழிச்சி கட்டி இருக்க” என்றபடி திண்ணையில் அமர்ந்தார் முத்தண்ணா.

“ஜட அலங்காரத்துக்கு கொண்ட பூ சுத்த அதை தனியா கட்டிடலாம்ன்னு சசி சொன்னா. செண்டுல கூட கலரடிச்சி சொருகிக்கலாம்ங்கிற.” வேணியின் குரலுடைந்து மெல்லியதாக வெளி வந்தது.

“உனக்கு மொக்கு வீணாவ கூடாது அவ்வளவு தானே.”

“டீக்கடையில கிரி அப்பாவ பார்த்தேன், படாம விஷயத்த ஆரம்பிச்சேன். கிரி ஒரு வருஷம் முன்னமே ஒரு புள்ளய பிடிக்கும்ன்னான். அப்ப யார்ன்னு சொல்ல, வேணி மகளா? ரொம்ப சந்தோசம் முடிச்சிறலாம்ன்னு சொன்னாரு”

சௌம்யாவின் முகம் பிரகாசமாய் மலர்வதை பீரோ கண்ணாடி காட்டியது அதை கவனித்தவாறே “முத்தண்ணா இனி இங்கே வராதீங்க” என்றாள் வேணி

முத்தண்ணா தலை குனிந்தபடி எழுத்து போனார். இடியிடித்தது. மேகம் திரண்டு இன்றும் மழை வருவது போலிருந்தது. இனி என் பொழுப்பு என்று வேணி யோசித்து கொண்டிருந்த போது படார் படாரென மழை விழுந்தது.

- லாவண்யா சுந்தர ராஜன்

Pin It