கூடியிருந்தோருக்கும் கொஞ்சம் அதிர்ச்சியாகத்தான் இருந்தது. “இந்தக் கூத்த எங்கேயாவது கண்டதுண்டா..? மாமனாரே பேயா வந்து மருமகள பிடிச்சிருக்கானே” என்றாள் கூட்டத்திலிருந்த கிழவி ஒருத்தி. ‘அதானே’ என்றனர் மற்றவர்களும்.

இறக்கி வேயப்பட்ட கூரை வீடு. இடதுபக்கமிருந்த திண்ணையில் வடக்குப்பக்கமாகத் திரும்பி கையில் உடுக்கையோடு அமர்ந்திருந்தார் பூசாரி. அவருக்கு அருகிலேயே கிழக்குப் பக்கமாக அமர வைக்கப்பட் டிருந்த லட்சுமி இரண்டுநாட்களாகப் பேயாடிக் கொண்டிருக்கிறாள். விரித்துப் போட்ட தலைமுடியோடும் சோர்ந்த முகத்தோடும் இருந்தாள். சனிப்பொணம் தனியாகப் போவாது என்பதுபோல ஒருத்தரை ஒருபேய் மட்டும் பிடிப்ப தில்லை. ஒருத்தரை ஒரு பேய் பிடித்துவிட்டால் பல பேய்கள் வந்து அவருடம்பில் குடியேறிவிடும்.

இரண்டு நாட்களில் லட்சுமியைப் பிடித்திருந்த இருபது பேய்களை ஓட்டி யிருந்தார் பூசாரி. பெரும்பாலான பேய்கள் அற்பக் காரணங்களுக்காகவே அவளைப் பிடித்திருந்தன. ஒரு பேய் பீடி கேட் டது. இன்னொரு பேய் முருங்கக்கீரை குழம்போடு கம்மஞ்சோறு கேட்டது. மற்றொன்று கருவாட்டுக் குழம்புடன் சோறு கேட்டது. வேறொன்று சாராயம் கேட்டது. இப்படி பேய்கள் கேட்கும் எளிமையான பொருட்களை எல்லாம் கொடுத்து ஒவ்வொன்றாக ஓட்டிக் கொண்டிருந்தார் பூசாரி. “இன் னும் எத்தனப் பேய் பிடித்திருக்கோ?” என்றாள் வழியாகத்தாள் பாட்டி.

ஒவ்வொரு பேயும் போகும்போது, தான் போவதற்கு அடையாளமாகத் தலைமுடியில் சிலவற்றை எடுத்துப் பூசாரியிடம் நீட்டும். அதை அவர் முடி போட்டுவிடுவார். எல்லாப் பேயை யும் ஓட்டிய பிறகு கடைசியாகச் சுடு காட்டுக்கருகில் இருக்கும் புளியமரத் தில் அந்த முடிகளைக் கத்தரித்து எடுத்து ஆணியால் அடிப்பார். அதற்குப் பிறகு அந்தப் பேய் யாரை யும் பிடிக்காது. இப்போது லட்சுமி யின் தலையில் இருபது மயிர் முடிச்சு கள் தொங்கிக் கொண்டிருந்தன.

இரண்டு நாட்களாகத் தொடர்ந்து பேயோட்டிக் கொண்டிருந்ததால் பூசாரியும் களைத்துப் போய்தான் இருந்தார். பேயோட்டுவதற்கான வெள்ளெருக்கம் குச்சி, வேப்பிலை, விளக்குமாறு, செருப்பு முதலியன பூசாரியின் அருகில் கிடந்தன.

தளுகை வட்டாரத் திலேயே பேயோட்டுவதில் இந்த அக்காண்டி பூசாரிதான் பேர் பெற்றவர். அவர் உடுக்கை எடுத்து அடிக்கும் லாவகத் தையும் பாடும் பாடலையும் பேயோடு பேசும் பேச் சையும் அவர் உடுக்கை ஒலிக்கு ஏற்ப தலை விரித்தா டும் பேயாட்டத்தையும் பார்க்க பெருங்கூட்டம் கூடியிருந்தது.

“அடங்காம எங்கெங்க திரிஞ்சாளோ இத்தனப் பேய் பிடிச்சிருக்கு” என்றாள் லட்சுமியின் மாமியார் அலமேலு.

கொண்டையம்பள்ளியிலிருந்து தளுகைக்குத் திருமணம் பண்ணிக் கொண்டு வந்தவள்தான் லட்சுமி என் றாலும் அவளைப் பிடித்திருந்து எல் லாமே தளுகையில் இருந்த பேய்கள் தான். லட்சுமியைப் பிடித்திருந்த பேய் களில் இருபத்தியோராவது பேயாக வந்தவர் அலுமேலுவின் கணவர் பெரியசாமி.தன் கணவன் பேயாக வந்திருக்கிறான் என்றதும் அதுவரை முணுமுணுத்துக் கொண்டே இருந்த அலமேலு வாயடைத்துப் போனாள்.

மூத்தமகன் ரெங்கராஜீக்குத் தூரத்து உறவுப்பெண்ணான லட்சுமியைத் திரு மணம் பண்ணி வைத்தது அலமேலு தான். திருமணமாகி இரண்டு ஆண்டு கள் ஓடியும் அவள் வயிற்றில் ‘கரு’ தங்கவில்லை. குலதெய்வக் கோயி லுக்குக் கிடா வெட்டி பொங்கல் வைத் தும் ஒன்றும் நடக்கவில்லை. இதனா லேயே மாமியார் மருமகள் சண்டை அன்றாட வழக்கமாகிவிட்டது.

மருமகள் பற்றிய வசைபாடுவதே மாமியாருக்குப் பொழப்பாய் போயிற்று.

அக்கம்பக்கத்தில் அலமேலுக்கு ‘ராக் காச்சி’ என்றுதான் பெயர். யாருடனா வது சண்டை வந்துவிட்டால் சாமானி யத்தில் விடமாட்டாள். இரண்டு மூன்று நாட்களுக்குத் திட்டிக் கொண்டே இருப்பாள். சாடைமாடை யாகப் பேசுவது அவளுக்குக் கைவந்த கலை. தன்வீட்டுக் கோழியைத் திட்டு வது போல் பக்கத்து வீட்டுக்காரியைத் திட்டிக்கொண்டிருப்பாள். அவள் தன் மருமகளையும் விட்டுவைக்க வில்லை. மாமியாருக்கும் மருமகளுக் கும் நடைபெறும் சண்டை சிலபோது குடுமிப்பிடியிலும் முடிவதுண்டு.

லட்சுமியின் கணவனுக்கு இதுபற்றி யெல்லாம் கவலை இல்லை. செய் வது கூலிவேலை என்றாலும் குடிப்ப தற்கு மட்டும் அவன் குறை வைத்ததே கிடையாது, தன் தந்தையைப்போல.

அடிக்கடி அவன் குடித்துவிட்டு வந்து லட்சுமியோடு சண்டைபோட்டு அவளை அடிப்பதும் உண்டு. சில நேரங்களில் அவள் கோவித்துக் கொண்டு தாய்வீடு சென்றுவிடுவாள். பிறகு ஓரிரு நாட்கள் சென்று அவனே அழைத்துவிடுவான். மாமனாரும் மரு மகனும் ஒன்றாகச் சேர்ந்து குடிப்பார் கள் என்பதால் மருமகனின் செயல் பாடு பற்றி மாமனார் கண்டு கொள்வ தில்லை.லட்சுமியின் தாயார்தான் இது பற்றி அடிக்கடி கவலைப்படுவாள். ஆனாலும் என்ன செய்வது?

கணவன் சாராயம் குடிப்பதும், தான் தாய்வீடு போவதும் லட்சுமியைப் பொறுத்தவரை ஒரு பிரச்சினையே இல்லை. மாமியார் சண்டைதான் பெரும் பிரச்சினையாக இருந்தது.

மாமியார் மருமகள் சண்டையின் உச்ச மாக அலமேலு கிளப்பிவிட்டதுதான் லட்சுமிக்குப் பேய் பிடித்திருக்கிறது என்ற செய்தி.பேய் பிடித்திருந்தால் குழந்தை பிறக்காது என்ற நம்பிக்கை யும் லட்சுமிக்கு இரண்டு ஆண்டுக ளாகக் குழந்தை இல்லை என்ற பல வீனமும் அலமேலுவின் வார்த்தையை அனைவரும் நம்பும்படி ஆக்கி விட்டன. அவளுடைய கெட்டநேரம் சில ‘பேய்களும்’ அவளைப் பிடித்திருந்தன.

தன் கணவனே வந்து மருமகளைப் பிடித்திருக்கிறான் என்றதும் அலமேலு கொஞ்சம் ஆடித்தான் போனாள். அவ ளுடைய கணவர் பெரியசாமியும் கூலி வேலை செய்பவர்தான். கிடைக்கும் கூலியைக் குடித்தே ஒழித்துவிடுவார். பிற குடிகாரர்களிடமிருந்து இவர் கொஞ்சம் வேறுபட்ட வர். மற்றவர் களெல்லாம் குடித்த பிறகுதான் பெரிய பெரிய தத்துவங்களையும் ‘நாகரிக’ வார்த்தைகளையும் பேசுவார்கள். ஆனால் பெரியசாமியைப் பொறுத்த வரை குடித்த பிறகு யாரிடமும் ஒரு வார்த்தையும் பேசமாட்டார். தட்டுத் தடுமாறி, தள்ளாடி வீட்டுக்கு வரும் அவர் அலமேலுவின் வசைப்பாட் டுக்குப் பதிலே பேசமாட்டார். “ஏய்... சும்மாரு” என்பதுதான் அவர் அதிக பட்சம் பேசும் வார்த்தைகள். அவர் பேச வேண்டியதோடு சேர்த்து அவள் இரண்டு மடங்கு பேசிவிடுவாள். தன் கணவனைத் திட்டுவது போன்றே தன் னோடு சண்டை போட்ட அத்தனைப் பேரையும் கரித்துக் கொட்டிவிடுவாள்.

எத்தனையோ இரவுகள் அவர் குடித்து விட்டு வந்து திண்ணையிலேயே படுத்துத் தூங்கியிருக்கிறார். பல நாட்கள் அவளுக்கு அவள் சாப்பாடு கூட போட்டதில்லை.

ஒருநாள் அளவுக்கு மீறி குடித்து விட்டுத் தள்ளாடி வந்தார் பெரியசாமி. மாலை 7 மணியிருக்கும். வேலைக்குப் போய்விட்டு வந்து சோறாக்கிக் கொண்டிருந்த அலமேலுக்கு அவரைக் கண்டதும் ஆத்திரம் பொத்துக் கொண்டு வந்தது. அது போதாதென்று பெரியசாமி “சோறு இருக்காடி” என் றார். அவ்வளவு தான் விளக்கமாத்தை எடுத்து அவர் தலையில் அடியோ அடி யென்று அடித்தாள்.“குடிகாரப்பயலே, குடிச்சுட்டுவந்து கேள்வியா கேக்கிற? ஒருபைசாவுக்கு வக்கில்ல, உனக்குச் சோறு ஒரு கேடா..” என்று சாத்தி எடுத்துவிட்டாள்.

‘ஏய்... அடிக்காதடி’ என்று அவரால் சொல்லத்தான் முடிந்ததே தவிர அடியைத் தடுக்க முடியவில்லை. பக்கத்து வீட்டுக்காரர்களோடு இவள் ஏற்கனவே சண்டை போட்டிருந்த தால் யாரும் வந்து அவளைத் தடுக்க வில்லை. அப்படியே வந்து தடுத்தா லும் “ஏம் புருஷன நான் அடிக்கிறன் நீ யாருடி கேக்கறத்துக்குத் தேவிடியா” என்ற பேச்சு வாங்க யாரும் தயாராய் இல்லை.

அடிவாங்கிய பெரியசாமி வாசலிலி ருந்து நகர்ந்து நகர்ந்து வந்து திண்ணை யில் படுத்துக்கொண்டார். திட்டிக் கொண்டே இருந்த அவள் அவருக்குச் சோறுகூட போடாமல் தன் இரு பையன்களோடு கதவடைத்துப் படுத்துக்கொண்டாள். பையன்களுக் கும் இதுவெல்லாம் அடிக்கடி பார்க்கும் காட்சிதான்.

அடுத்தநாள் காலையில் எழுந்த அவள் திண்ணையில் படுத்திருந்த கண வனைத் திரும்பிக்கூட பார்க்க வில்லை. “எல்லாருக்குந்தான் புரு ஷன் வாச்சிருக்கானுங்க... எனக்குந் தான் ஒருத்தன் வந்து வாச்சிருக் கானே...” என்று பேசிக் கொண்டே வாசலைத் தண்ணீர் தெளித்துப் பெருக்கினாள். பிறகு, இருந்த பழைய சோத்தைப் பசங்களுக்குக் கொஞ்சம் வைத்துவிட்டு தூக்குப்பொவணியில் மீதியை ஊற்றிக் கொண்டு வேலைக்குக் கிளம்பிவிட்டாள். சிறிதுநேரம் விளையாடிக் கொண்டிருந்த சிறுவர்கள் இருவரும் வெயில் நன்றாக வந்தவுடன் இரண்டு ஆட்டுக்குட்டிகளை ஓட்டிக்கொண்டு மேய்க்கச் சென்றுவிட்டனர்.

மத்தியானம் 2 மணிக்கு வேலை முடிந்து வீட்டுக்குத் திரும்பினாள் அலமேலு. காலையில் திண்ணையில் படுத்திருந்த கணவனைக் காண வில்லை. “குடிகாரப்பய... எங்கப் போய் தொலைச்சானோ...” என்று திட்டிக்கொண்டே கதவைத் திறக்கப் போனாள். ஆனால் கதவு திறந்திருந் தது. அவளது கோபம் இன்னும் கொஞ் சம் அதிகமாக கதவைப் படார் எனத் தள்ளினாள். உள்ளே பெரியசாமி தூக்கில் தொங்கிக் கொண்டிருந்தார்.

தன் மருமகளைத் தன் கணவனே வந்து பிடித்திருக்கிறான் என்றதும் இந்தக் காட்சிகளெல்லாம் அவள் மனக் கண்ணில் வந்து சென்றன.

“ஏய்... பெரியசாமி எதற்காக இந்தப் புள்ளைய பிடிச்சிருக்க... உனக்கு என்ன வேணும்?” என்றார் பூசாரி.

“அதைக் கேட்க நீ யாருடா?” என்றார் பெரியசாமி. கோவம் கொண்ட பூசாரி உடுக்கை யைக் கீழே வைத்துவிட்டு “என்ன பாத்தா யாருனு கேக்கிற? நான் யார் தெரியுமா? நான்தா’ பெரிய காளி என்னையே எதுக்குறியா..? என்றவர் அருகில் இருந்த விளக்கமாறை எடுத்து தலையில் மடமடவென அடித்தார். அடி கொஞ்சம் வலுவாகத்தான் விழுந்திருக்க வேண்டும். பார்த்துக் கொண்டிருந்தவர்கள் எல்லாம் ‘அட பாவமே’ என்றனர்.

பெரியசாமி சட்டென அழ ஆரம்பித் தார். பூசாரி அடிப்பதை நிறுத்தி விட்டு கொஞ்சம் தணிந்த குரலில் “பெரிய சாமி உனக்கு என்ன வேணும்ணு சொல்லு... குடுக்கிறேன். அத வாங்கிக் கிட்டு பேசாமப் போயிரு. நான் உன்ன அடிக்கல...” என்றார்.

அழுகையை நிறுத்திய பெரியசாமி “எனக்கு இப்ப சாராயம் வேணும்” என்றார். ஏற்கனவே வாங்கி வைத்தி ருந்த சாராயம் இருந்ததால் உடனே அதை எடுத்துக் கொடுத்தார் பூசாரி.

சாராயத்தைக் குடித்த பெரியசாமி தன் முன்னால் அமர்ந்திருப்பவர்களையும் நின்று கொண்டிருப்பவர்களையும் ஒருமுறை ஏறிட்டுப் பார்த்தார். அவர் பார்த்த பார்வையில் சிறுபிள்ளைகள் எழுந்து ஓடி தூர நின்றன.

“எனக்கொரு பீடி வேணும்” என்றார்.

பூசாரி பீடியை எடுத்துக் கொடுக்க... அதை வாயில் வைத்துக்கொண்டே பூசாரியிடம் முகத்தை நீட்டி... ம்... பத்த வை என்றார். பூசாரி பீடியைப் பற்ற வைத்ததும் சுகமாக நாலு இழுப்பு இழுத்தார் பெரியசாமி.

பூசாரி மீண்டும் “எதுக்காக இந்தப் புள்ளைய புடுச்ச? என்றார். பூசாரியை ஏறிட்டுப் பார்த்த பெரியசாமி “என் பொண்டாட்டிய என் முன்னால வந்து ஒக்கார சொல்லு. அவள ஒரு முற நான் பாத்துட்டு போயிடறேன்” என்றார்.

பூசாரி அலமேலுவைக் கூப்பிட்டு பெரியசாமியின் முன்னால் உட்கார வைத்தார். தன் மனைவியில் முகத்தை நன்றாகப் பார்த்தார் பெரியசாமி.

“நம்ம மருமகள நீ புடிச்சிருக்கிற.... இது ஞாயமா? என்றாள் அவள். ஏதோ பேசவேண்டுமே என்பதற்காக.

மனைவி பேசியதும் சட்டென அவர் முகம் இறுகியது. கண்களில் கோபம் தெறிக்க அவளைப் ‘பளார்’ என ஓங்கி அறைந்தார்.

எதிர்பார்க்காத பூசாரியும் கொஞ்சம் தடுமாறித்தான் போனார். “ஏய் பெரிய சாமி....” என்று சொல்லிக் கொண்டே நாக்கைக் கடித்துக் கொண்டு எருக்கங் குச்சியைக் கையில் எடுத்தார்.

“நிறுத்து, நான் போயிறேன்” என்று முடியெடுத்துக் கொடுத்தார் பெரிய சாமி.

லட்சுமியைப் பிடித்திருந்த கடைசிப் பேய் அவளைவிட்டு நீங்கியது.

Pin It