மதிய வெயில் சற்று அகோரமாக விஸ்தரித்து இருந்தது. இது வரையில் தன் வாழ்வில் இப்படி வெப்பத்தில் நனையாமல் கடந்து விட்டிருக்கிறோம் என்பதை மனதில் அசை போட்டுக் கொண்டு சாலையின் ஓரமாக நடந்து கொண்டிருந்தார் பெரியசாமி…… வயது எழுபதைக் கடந்திருந்தது. நரைமுடியின் ஒவ்வொரு வளர்ச்சியும் நம் வாழ்வின் மிச்சமில்லாத நீசப்பட்ட ஒன்று எத்தனை நொடிகள் ஆமைகளாய் போவதுண்டு. கைகளில் ஊன்றும் தடி கூட சில சமயம் சித்தாந்தம் பேசுவதுண்டு

தேகத்தில் முடை தளர்ந்த போது கணவனை உடையாகிய குடும்பினி பலசமயம் முகம் காட்டி போவதுண்டு. வயதின் குணமோ, இல்லை பரிணாமத்தின் வடுவோ, குறைந்த வயதை பார்க்கும்போது கோபம் முளைப்பதுண்டு. முற்றத்தில் இருக்கும் பட்டாம்பூச்சியின் ரக்கைகளை பல சமயம் சுமந்ததுண்டு. இதற்கெல்லாம் வளைந்து, குறுகிப் போன மூளை வீட்டில் உள்ள தாத்தாக்களை எல்லாம் காசி, ராமேஸ்வரம் சென்று வரச் சொல்கிறது

தன்னுடைய வழுக்கைத் தலையில் சிறுமொட்டுகளாக துளிர்த்திருந்த வியர்வை சூரிய வெளிச்சத்தில் மின்னியிருந்தது. பெயர் சொல்லும் பிள்ளை என்பது எல்லோருடைய அகராதியில் ஒரே பொருள் அல்ல என்பது பெரியசாமியின் முதல் மகன் ராஜாவே சாட்சி. பெயருக்கு ஏற்றார் போல எப்போதும் பச்சைக் கடையில் அரசபையை கூட்டுவதுண்டு. மனைவியின் மாத வருமானம் பல குவாட்டர் பாட்டல்களை அலங்கரித்தது.

இளைய மகள் அமுதா சிறுதளவு கூட அமுதம் இல்லாது எப்போதுமே எல்லையற்ற எதிர்பார்ப்போடு பயணிப்பவள். கடைக்குட்டி சத்யவாணி சரித்திரத்தில் பெரிய பிழை. இவர்களை எல்லாம் தன் தோளிலும் மாரிலும் சுமந்த பெரியசாமி, கோவிந்தசாமி நாய்க்கர் வீட்டின் காவலாளி….. கதவு திறக்கப்படும்போதெல்லாம் தன் வலது கை மேலுயரும். தோள்களில் இருக்கும் தசை நார்கள் நீர்த்துப்போய் இருக்கும். கதவுகளின் கைப்பிடியில் தன் ரேகை படர்ந்திருக்கும். வீட்டிற்கு வரும் பொழுது யாரும் பெரியசாமியின் நொடிந்த கைகளைப் பார்ப்பது இல்லை, மாறாக கைகள் சுமந்துவரும் நொறுக்குத் தீனிகளையே எதிர்பார்த்திருந்தார்கள். பெரியசாமியின் மனைவி காமாட்சி மட்டும் தான் உயிர்ப்போடு அவரை விசாரித்து உபசரிப்பாள். காமாட்சி ஒரு குழந்தை உள்ளம் கொண்டவள். சில சமயம் கணவரிடமும் பல சமயம் பிள்ளைகளிடமும் திட்டு வாங்குவது உண்டு. எதையுமே பெரிதாக எடுத்துக் கொள்ளாதவள். பெரியசாமிக்கு எப்போது எது வேண்டும் என்பதை நன்கு தெரிந்திருந்தவள்.

எல்லோரையும் கரை சேர்த்துவிட்ட பெரியசாமி ஒரு கட்டத்தில் காமாட்சியை இழக்கும் நிலை வந்தது. வாழ்வில் மிகப்பெரிய வலி இன்னொருவருடைய மரணம் கொடுக்கும் என்றால் அது மனைவியின் மரணம் மட்டும் தான். பெரியசாமி தான் சேர்த்து வைத்திருந்த தொகையையும் அரசின் உதவித் தொகையையும் வைத்து அவரும் மனைவியும் வாழ்ந்து வந்திருந்தார்கள் ஒரு வீட்டை போகியத்திற்கு எடுத்து ஒரு வேலை மட்டும் சமைத்து கடன் சுமைகளைத் தவிர்த்து இருந்தார்கள். காமாட்சியை இழந்த பின், பெரியசாமி தன்னை ஒரு தனிமரமாய் எண்ணத் துவங்கினார்.

வெகுதூரம் நடந்திருந்த பெரியசாமி ஒரு தேநீர்க் கடையை அடைந்தார்.

“ஒரு டீ சர்க்கரை கம்மியா…………………….” என்றார்.

தன் வேட்டியைத் தூக்கி பட்டாப்பட்டியில் முடிந்திருந்த கசங்கிப் போயிருந்த பத்து ரூபாய்த் தாளை நிதானமாக எடுத்தார்.

தேநீரை மெதுவாக ஊதிக் குடித்தார். நேற்று இரவு கடைசியாக சாப்பிட்ட இட்லி குருதியோடு இணைந்து கரைந்திருக்கும்.

“தம்பி இந்த அய்யம்பட்டி ஐய்யனார் கோவில் இன்னும் எவ்ளோ தூரம் ….”

“பெரியவரே அது இன்னும் நாலு கிலோமீட்டர் போகணும்…… பேசாம அந்த பஸ் ஸ்டாப்பில நில்லுங்க….. பஸ் வரும்…….” என்று சொல்லி முடிப்பதற்குள் பெரியசாமி கடையைக் கடந்திருந்தார். சாலை ஓர மரங்கள் அவர் பயணத்தை ஆசுவாசப்படுத்தியது. பழைய நினைவுகள் நிழலாய்த் தொடர்ந்தது.

காமாட்சியின் மறைவுக்குப் பின் வீட்டில் தனியாக அமர்ந்து கொண்டு ஆன்மீகப் புத்தகங்களை வாசித்துக் கொண்டிருந்தார். பெரியசாமிக்கு கடவுள் வழிபாடு என்பது ரத்தத்தில் ஊறி இருந்தது.
"அப்பா………………. " என்ற குரல் கேட்டதும் சற்றும் தாமதிக்காமல் வெளியில் வந்து பார்த்தார். அது கடைக்குட்டி சத்யவாணியின் குரல்.

“வா….. மா…. எப்படி இருக்க?"

“இருக்கேன்… பா..” என்று தன்னை வருத்திக் கொண்டு மௌனமானாள்.

மகள் வந்த மகிழ்ச்சியில் பெரியசாமி குளிர்ந்திருந்தார்.

“காபி.. டீ….. ஏதாவது வாங்கிட்டு வரட்டுமா..”

“வேண்டாம்…. பா… இன்னைக்கு நானே சமைச்சு உங்களுக்கு தரப்போறேன்” என்றதும் பெரியசாமி கண்ணீர் மல்க……. “எதுக்கம்மா உனக்கு சிரமம்" என்று சொன்னாலும் நல்ல சாப்பாடு சாப்பிட்டு வெகுநாட்கள் ஆனதால்…. மெல்லிய புன்னகையுடன்,

“சரி உன் இஷ்டம் …” என்றார்.

மனைவியின் மறைவுக்குப் பிறகு விருந்தாளியாக வந்திருந்த சத்யவாணி அன்று நன்றாக சமைத்திருந்தாள்.

“அப்பா….. இந்தாங்க, உங்களுக்குப் பிடிக்குமேனு நானே கடையில வாங்கி வந்த முள்ளங்கி………. பொரியல் நல்ல இருக்கா..”

“எல்லாமே நல்லா இருக்கு மா..”

“அப்பா………………. அம்மா எனக்குன்னு பாத்திரம் கொஞ்சம் வச்சிருந்தாங்க. அத நான் எடுத்துட்டுப் போகட்டுமா” என்றாள்.

அரைபட்டுக் கொண்டிருந்த சாதம் பெரியசாமி தொண்டையில் சிக்கி நின்றது.

இப்போது நிறையாத வயிறு பசி அறிவதில்லை.

வெகு நேரம் நடந்த பெரியசாமி ஒரு மரத்தடியில் அமர்ந்தார். ஓர் ஆடு தன் குட்டியை நாவால் நக்கிக் கொண்டிருந்தது. பெரியசாமியின் கண்கள் குளமானது.

“அப்பா…………….. என்ன பண்றீங்க …. அண்ணா வந்தானா” என்று வீட்டுக்குள் விரைந்தாள் அமுதா.

“அமுதா வாம்மா …” என்றார் பெரியசாமி.

“இல்ல.. ம்மா..”

"சரி இனிமே நீங்க சமைக்க வேண்டாம். பேசாம, பக்கத்துல இருக்கற மெஸ்சுலே ஆர்டர் பண்ணி சாப்புடுங்க. உங்க உடம்ப நீங்க பத்திரமா பார்த்துக்கணும்" என்று பேசிக் கொண்டே

“… அப்பா ….. அப்பறம்….. அம்மா சாகும் போது அவுங்க போட்டிருந்த நகை எல்லாம் இப்போ உங்ககிட்ட தான சும்மா இருக்கு. அத குடுத்தீங்கனா உங்க பேத்திக்கு அம்மா ஞாபகமா போட்டுக்குவேன் இல்ல..”

பெரியசாமியின் இருளியலில் கடைசி தீக்குச்சி அணைப்பு.

அய்யனார் கோவிலுக்கு இன்னும் ஒரு கிலோமீட்டர் என்று மயில் காட்டி இருந்தது. தன் வேகத்தை சற்று அதிகப்படுத்தினார். கால்கள் முன்னேறியும், காலங்கள் பின்னோக்கியே இருந்தது…

“இனிமே இங்க இருக்காதீங்க…. ப்பா.. எங்ககூட வந்து இருந்துருங்க” என்றதும் திகைத்துப் போன பெரியசாமி, விடுப்பில் விடுதலையாகும் ஒரு குழந்தையைப் போல உணர்ந்தார்.

“எனக்கு சந்தோசமா இருக்கு… ஆனா உங்களுக்கு எதுக்கு….” என்று தன் மகிழ்ச்சி முக்தி பெறுவதற்குள்.

“இந்த போகிய பணம் நான்கு லட்சத்தை எங்களுக்கு பங்கு போட்டு தந்தீங்கனா …..” என்றதும் பொய்முகங்கள் எல்லாம் புன்னகைக் கீற்றுகளை வாரிக்கொண்டு தம்பட்டம் அடிப்பது பெரியசாமி காதில் ஓயாமல் அதிர்ந்தது.

“சரி செஞ்சுட்டா போச்சு……. ஒரு நிமிஷம் இதோ வரேன்" என்று கூறிவிட்டு வீட்டை விட்டுக் கிளம்பிய கால்கள்...

இன்று அய்யனார் கோவிலை அடைந்திருந்தார் பெரியசாமி

'பிள்ளைகள் வாழ்க்கையில் நல்லா முன்னுக்கு வந்துட்டாங்க, அதுக்கெல்லாம் காரணமா இருந்த அய்யம்பட்டி அய்யனாரை நாமோ ஒருதடவை போய் வேண்டிட்டு வந்தரனும்' என்ற காமாட்சியின் குரலைத் தாங்கி, பெரிய மீசையுடன், பெரிய கத்தியுடன் இருக்கும் அய்யனாரைப் பார்த்து
கண்சிவக்க, உடல் அதிர பெரியசாமி கேட்டார் "நீயெல்லாம் ஒரு பெரிய…. சாமி"

- சன்மது

Pin It