உணவறையில் ஸ்வேதாவை அப்படி பார்த்ததும், கதிர் முடிவு செய்தான், அன்றைய இரவு அவளோடுதான் என்று. ஸ்லீவ்லெஸ் சுடிதாருடன் தன் இரண்டு கைகளையும் உயர்த்தி தனது அடர்த்தியான நீண்ட விரிந்த கூந்தலை சரி செய்து, தன் தலையில் இருந்து தனியாக முன் பக்கம் தொங்கும் ஒரு கத்தை முடியை எடுத்து காது மடல்களில் சொருகி, புன்னகையுடன் கதிரைப் பார்த்து ஒரு ஹாய் சொன்னாள் ஸ்வேதா. கதிருக்கு ஸ்வேதா பேரழகியாகத் தெரிந்தாள். அந்த கணம்தான் முடிவு செய்தான், அன்றைய இரவு ஸ்வேதாவோடுதான் என்று.

ஸ்வேதா கதிர் வேலை செய்யும் மென்பொருள் நிறுவனத்தில் புதிதாக வேலைக்குச் சேர்ந்திருக்கிறாள். அவள் சேர்ந்திருப்பது மென்பொருள் தயாரிக்கும் துறையில். இவன் இருப்பது மென்பொருளை சரி பார்க்கும் துறை. வாடிக்கையாளர் கேட்டது போல் மென்பொருள் பொறியாளர்கள் அதைத் தயாரிக்க, அதில் உள்ள குறைகளைக் கண்டறிந்து அதை சரி செய்யுமாறு மறுபடியும் தயாரிப்புத் துறைக்கு அனுப்பி, அந்த மென்பொருள் வாடிக்கையாளருக்கு சென்றடையும்போது குறைகளற்ற மென்பொருளாக சேர்ப்பதுதான் கதிரின் வேலை. அது கதிரின் வேலை மட்டும் அல்ல, சாப்ட்வேர் டெஸ்டிங் துறையின் வேலை. மதிய வேளையில் ஸ்வேதாவைப் பார்த்ததிலிருந்து அவன் இரவுக்காக காத்திருந்தான்.

இரவு உணவிற்குப் பிறகு சிகரெட் பிடிப்பது கதிருக்கு பல வருடப் பழக்கம். பால்கனியில் பாதி இருட்டில் நின்று புகை பிடித்துக் கொண்டிருக்கும் போதே, இரவின் முழு இருளுக்கு தயாராகிக் கொண்டிருந்தான். சிறிது நேரத்தில் அவன் அறையில் அவனை இருள் சூழ்ந்தது. ஸ்வேதாவை தன் கைகளால் இறுக அணைத்து முத்தம் கொடுக்கத் தொடங்கினான். ஆடை களைந்தான். உடல் முழுதும் பரவிக் கிடந்த காமம் தீர முத்தங்கள் கொடுத்தான். கொஞ்சம் பெற்றான். கண்கள் மூடி மறுபடியும் கட்டி அணைத்தான். ஸ்வேதாவின் மேலேறி காமத்தின் உச்சம் தொட்டான். சிறிது நேரத்தில் அவள் ஸ்விட்ச் போட்டதும் இருள் விலகி வெளிச்சம் பரவிய பிறகுதான் கதிர் உணர்ந்தான், அவள் ஸ்வேதா இல்லை, தன் மனைவி அபிநயா என்று.

சில இரவுகள் கதிருக்கு இப்படித்தான். தன்னைக் கவர்ந்த பெண்ணை மனதில் நிறுத்தி தன் காமத்தை அபிநயாவிடம் தீர்த்துக் கொள்வான். தன்னைக் கவர்ந்த பெண் என்றால் அது நிறைய பேர். இன்று எப்படி ஸ்வேதாவோ, வேறு வேறு நாட்கள் வேறு வேறு பெண்கள். பக்கத்து வீட்டிலிருக்கும் ஜென்சி பாப்பாவின் அம்மா, தான் பால்கனியில் இருந்து பார்க்கும் வாக்கிங் போகும் அந்த ரோஸ் நிற டீ ஷர்ட் அணிந்த பெண், தான் வழக்கமாக பொருட்கள் வாங்கும் டிபார்ட்மென்ட் ஸ்டோரில் பில் போடும் மோனிகா, தான் முடி வெட்டப் போகும் அந்த சலூனின் ரிசெப்ஷனில் ஒவ்வொரு மாதமும் கதிர் பார்க்கும் அந்த உயரமான குதிரை போன்ற வளமான தேகமுடைய அந்த கேரளப் பெண் என்று அந்த பெண்களின் பட்டியல் தொடரும். அதில் நடிகை சினேகாவும் அடக்கம். அபிநயா தான் எப்போதும் அபிநயாவாக இருக்கிறாள் என்றுதான் நினைத்துக் கொண்டிருக்கிறாள். அபிநயா, இரவுகளில் ஸ்வேதாவாகவும், சினேகாவாகவும், ஜென்சி பாப்பாவின் அம்மாவாகவும் இருப்பது கதிருக்கு மட்டும்தான் தெரியும்.

கதிருக்கு சில நாட்கள்தான் இப்படி. அபிநயாவிற்கு எல்லா நாட்களும் அப்படியே. தன் முதலிரவில் இருந்தே அவளுடைய இரவுகள் அப்படித்தான் இருந்து வருகிறது. பெண் பார்த்த நாள் முதல் கதிரேசனை அவளுக்கு மிகவும் பிடித்திருந்தது. முதல் சந்திப்பிலேயே தான் தினமும் இரண்டு சிகரெட் பிடிப்பதாக கதிர் சொன்ன நேர்மை அபிநயாவிற்குப் பிடித்திருந்தது. இப்பவும் அவனை ரொம்பவும் பிடிக்கும். வரன் பேசி முடித்த பிறகு, பெற்றோர்கள் இவர்களை போனில் பேசிக் கொள்ள அனுமதித்தனர். கதிரேசனுக்கும் அபிநயாவைப் பிடித்திருந்ததுதான். ஆனால் .... தன்னை விட அபிநயா கொஞ்சம் குண்டாக இருந்தாள்.. அவன் தன் மனைவியாக தன் சிறுவயதில் இருந்து கற்பனை செய்து பார்த்த தோற்றத்தில் முதுகுத் தண்டு முடியும் வரை நீண்ட கூந்தலைக் கொண்ட பெண்ணையே கற்பனை செய்து பார்த்திருக்கிறான். அபிநயாவிற்கு பின் கழுத்திற்கு கொஞ்சம் கீழே வரை மட்டுமே செல்லும் ஒரு சிறிய குதிரை வால் நீள முடிதான். ஆனால் நீண்ட தேடலுக்குப் பிறகு இவர்களுக்குத்தான் ஜாதகம் பொருந்தியிருந்தது. நிச்சயதார்த்தம் முடிந்த பின்னர் பெற்றோர்கள் இவர்களை காதலிக்கவும் அனுமதித்தனர். நிச்சயதார்த்தத்திற்கும் கல்யாண நாளுக்குமான இடைவெளியில் அதாவது நான்கு மாதங்கள் இவர்கள் காலை மாலை இரவென பேசிக் கொண்டே இருந்தார்கள். அவ்வப்போது சந்தித்துக் கொண்டனர். அபிநயாவிற்கு கதிரேசனை ரொம்பவும் பிடித்துப் போனது. அபிநயாவிடம் பேசப் பேச கதிருக்கும் அபிநயாவைப் பிடித்துப் போனது. அவள் புறத் தோற்றக் குறைகளை தாண்டி அவன் எதிர்பார்ப்புகளை தாண்டி அவள் பேசியதும், அவள் அவன் மேல் கொண்ட அன்பினாலும், கதிருக்கும் அபிநயாவைப் பிடித்துப் போனது.

அபிநயாவிற்கு அந்த நான்கு மாதங்கள் தன் வாழ்வில் மறக்க முடியாத நாட்கள். காதலில் லயித்துப் போயிருந்தாள். திரைப் படங்களில் வரும் காதல் பாடல்களை தேடித் தேடி கேட்டுக் கொண்டிருந்தாள். இளையராஜா பாடல் வரிகளைத் தேடி இணையத்தில் படித்து தன்னவனை நினைத்து சில பாடல்களை பாடத் தொடங்கினாள். அந்தப் பாடல்களை கதிருக்கு அனுப்பி வைத்து கேட்கச் சொன்னாள். சில பாடல்கள் இருவரும் கேட்டிருந்தனர். தனக்குப் பிடித்த பாடல்களை இருவரும் பகிர்ந்து கொண்டனர். அவர்கள் பேச்சு முதலிரவை நோக்கி நகர்ந்தபோதெல்லாம் "அதெல்லாம் அப்புறம் பேசிக்கலாம். நடக்கும் போது பாத்துக்கலாம்" என்று சொல்லி விடுவாள் அபிநயா. அந்த வருடம் வெளியான ஒரு திரைப்பாடல் "உனக்காகப் பொறந்தேனே எனதழகா ... பிரியாம இருப்பேனே பகலிரவா .." அபிநயாவிற்கு மிகவும் பிடித்திருந்தது. அந்த பாடலில் வரும் "என் உச்சி முதல் பாதம் வரை.... என் புருசன் ஆட்சி" வரிகளை தனது வாட்சப் நிலைத் தகவலாக வைத்திருந்தாள். அதைப் பார்த்த அபிநயாவின் அம்மா அதை தன் கணவரிடம் காண்பித்தாள். இருவரும் தங்கள் பெண்ணுக்கு மாப்பிள்ளை பிடித்துப் போயிருந்ததை நினைத்து சந்தோஷப்பட்டனர். அதைப் படித்த கதிர் "அப்படியா ... உன் உச்சி முதல் பாதம் வரை எனக்கா?" என்று கேள்வி அனுப்பி இருந்தான். "ஆமாம்.. உங்களுக்குத்தான் .." என்று பதில் அனுப்பி, கூடவே கொஞ்சம் வெட்கப்பட்டு சிரிக்கும் ஸ்மைலிகளையும், கொஞ்சம் சிவப்பு நிற காதல் ஸ்மைலிகளையும் அனுப்பி இருந்தாள்.

திருமணத்திற்குப் பிறகு தாங்கள் குடியேற வேளச்சேரியில் வீடு பார்த்து விட்டதாகவும், வீட்டிற்கு தேவையான அனைத்தும் வாங்கி வீடு அபிநயாவின் வருகைக்காக தயாராக உள்ளதாகவும் கதிர் சொல்லிக் கொண்டிருந்தான். அபிநயாவும் பொறியியல் பட்டதாரி என்பதால், அபிநயாவிற்கு விருப்பமென்றால் வேலைக்குச் செல்லலாம், என்று சொல்லியிருந்தான் கதிர். இந்த நாட்களை எல்லாம் அபிநயாவால் மறக்கவே முடியாது. அதுவும் திருமண நாளுக்கு ஒரு நாள் முந்தைய நாளை மறக்கவே முடியாது. அந்த நாள் அபிநயா காலையிலிருந்து தும்மிக் கொண்டே இருந்தாள். சளி, ஜுரம் என்று எதுவும் இல்லை. ஆனாலும் தும்மிக் கொண்டே இருந்தாள். காலையில் இருந்து தும்மல் நிக்கவே இல்லை. மாலை நான்கு மணிக்கு வரவேற்பு விழாவிற்கு தயாராவதற்கு முன் அழகு நிலயத்திற்கு போகும் வழியில் ஒரு மருத்துவரை பார்த்துவிட்டுச் சென்றனர். "ஏதாவது டஸ்ட் அலர்ஜியா இருக்கும்" என்று சொல்லிவிட்டு மருத்துவர் ஒரு ஊசி போட்ட பிறகுதான் அபிநயாவின் தும்மல் நின்றது. இது போன்று நிகழ்வது அவளுக்கு மூன்றாவது முறை. தன் பன்னிரெண்டாம் வகுப்புத் தேர்வில் பள்ளியில் முதல் மதிப்பெண் என்று ரிசல்ட் வந்த நாள், பிறகு அவள் பிறந்த நாள் பரிசாக தன் அப்பா அவள் கல்லூரி செல்வதற்கு ஒரு ஸ்கூட்டர் வாங்கிக் கொடுத்த நாள். இது மூன்றாவது முறை. அந்த சந்தோஷ நாட்களில் அப்படி நடந்து விட்டதே என்றதால் அந்த நாட்கள் அவள் நினைவில் இருந்தன.

கல்யாணம் முடிந்து இருவரும் எதிர்பார்த்த அந்த முதலிரவும் வந்தது. அபிநயா எதிர்பார்த்திருந்த அந்த கணங்கள் அவளுக்கு இப்படி வாய்த்திருக்க வேண்டாம். அந்த நாளை இன்று வரை அவள் வெறுக்கிறாள். சிகரெட் வாடையுடன் தன் அருகே வந்து முத்தமிடத் தொடங்கி அவனது முழு சுமையையும் அவள் மேல் சுமத்தி, ஏற்கனவே நாள் முழுவதும் திருமண சடங்குகளால் சோர்ந்து போன அவள் உடல் மீண்டும் வலிக்க அவளை இறுக்கி, தன்னிடம் மெதுவாய் ஒரு வார்த்தையும் பேசாமல் தன் மனதும் உடலும் தயாராவதற்கு முன்பே தன் ஆடைகளைக் களைந்து, நடந்து கொண்டிருப்பதை அவள் உணர்ந்து முடிக்கும் முன்பே எல்லாம் முடிந்து போயிருந்தது. சிறிது நேரத்தில் கதிர் தூங்கி விட்டான். ஒரு விபத்து போல நிகழ்ந்த அந்த இரவு அபிநயாவிற்கு பேரதிர்ச்சியாக இருந்தது. அதன் பிறகு ஒவ்வொரு இரவும் இப்படித்தான் நடந்தது. தேனிலவிலும் இப்படித்தான் நடந்தது. இது தனக்குப் பிடிக்கவில்லை என்று கதிரிடம் சொல்ல வேண்டும் என்று பல முறை நினைத்திருக்கிறாள். ஆனால் தன்னிடம் தினமும் "லவ் யூ " சொல்லும் கதிரிடம் தன் மேல் அன்பைப் பொழியும், தன் கன்னத்தை கிள்ளி கொஞ்சும் கணவரிடம் எப்படி இதைச் சொல்வது? ஒரு மாதத்தில் அபிநயா கருவுற்று இருந்தாள். அபிநயாவிற்கு ஒரு பக்கம் சந்தோசம் இருந்தாலும், ஓவென்று தன் அறையில் ஒரு முறை அழுது கொண்டாள்.

கதிருக்கு தான் அப்பாவாகப் போவதில் அளவற்ற மகிழ்ச்சி. சிறந்த மருத்துவமனைக்கு கூட்டிச் சென்றான். தினமும் பழங்கள் வாங்கி வந்தான். ஹார்லிக்ஸ் வாங்கி வந்தான். மாதுளைப் பழங்களை உரித்து ஜூஸ் போட்டுக் கொடுத்தான். தான் பேச நினைத்ததை பிறகு பேசிக் கொள்ளலாம் என்று அப்படியே விட்டு விட்டாள். சில மாதங்களில் மாதவரத்தில் உள்ள தன் அம்மா வீட்டுக்கு வந்து விட்டாள். சுகப் பிரசவத்திற்கு எவ்வளவோ முயன்றும் ஆபரேஷன் செய்துதான் பிரசவம் பார்க்க முடிந்தது. சில வார இறுதி நாட்களில் கதிர் மாத‌வரத்திலும் வார நாட்களில் வேளச்சேரியிலும் இருந்தான். அபிநவ் பிறந்து ஆறு மாதங்கள் கழித்துதான் மறுபடியும் கதிருடன் வேளச்சேரியில் இருக்கத் தொடங்கினாள். அபிநயாவின் அம்மா சில மாதங்கள் அவளுடன் இருந்து அபிநயாவையும் அபினவையும் கவனித்துக் கொண்டார்.

பிரசவத்திற்குப் பிறகான அபிநயாவின் தோற்றம் கதிருக்கு என்னவோ போல் இருந்தது. முகத்தில் பருக்களுடன், பெருத்த வயிறுடன், சதை தொங்கும் கருத்த கழுத்துடன் கதிருக்கு இந்த அபிநயா அவ்வளவாக சுவாரஸ்யமற்றவளாகி விட்டிருந்தாள். அபிநயாவிற்கு மறுபடியும் துயர்மிகு இரவுகள் தொடங்கின. தான் எப்போதோ பேச நினைத்ததை அபிநயா பேச ஆரம்பித்தாள். சிகரெட் பிடிப்பதை சொல்லித்தானே திருமணம் செய்தேன் என்று இருவருக்கும் அது வாக்குவாதத்தில் முடிந்தது. பிறகு வேறு பிரச்சனைகளை சொன்னாள். ஒவ்வொரு முறையும் இந்த பேச்சு வாக்குவாதத்தில் முடிந்தது. அபிநயாவிற்கு காமத்தில் நாட்டம் இல்லை என்று நினைத்து சில பாலியல் படங்களை தான் மொபைல் போனில் காட்டத் தொடங்கினான். அதைப் பார்த்த அவளுக்கு குமட்டிக் கொண்டு வந்தது.

ஒரு முறை " ஏன் .. உன் கூந்தல் இதுக்கு மேல வளராதா? " என்று விளையாட்டாகக் கேட்டான். வேறொரு முறை கழுத்தைப் பார்த்து "இங்க ஏன் இவ்ளோ கருப்பா இருக்கு?" என்றான். "குறை கண்டு புடிக்கற உங்க சாப்ட்வேர் டெஸ்டிங் வேலைய எல்லாம் ஆபிஸ்ல விட்டுட்டு வாங்க. என் கிட்ட வெச்சுக்காதீங்க" என்று சொல்லி விட்டாள். அபிநவ்வால் மட்டுமே வீட்டில் சப்தம் இருந்தது. இவர்களின் வாக்குவாதங்களை அபிநவ் திசை திருப்பி இருந்தான். இன்னும் சொல்லப் போனால் அபிநவ்வால் மட்டுமே இவர்கள் ஒரே வீட்டில் இருந்தனர். திருமண வாழ்க்கை இப்படி போய்க் கொண்டிருப்பதை அபிநயா விரும்பவில்லை. அதனால், தான் இனிமேல் எதுவும் பேசப் போவதில்லை என்று முடிவெடுத்தாள். அவளின் அமைதிதான் மறுபடியும் அவர்கள் தாம்பத்ய வாழ்க்கை தொடர்வதற்கான காரணமாக அமைந்தது. அப்படி தொடர்ந்த வாழ்க்கையில்தான் சில இரவுகள் அபிநயா வேறு வேறு பெண்ணாக கதிருக்கு மாறி இருந்தாள். அபிநயா திருமணமான தன் தோழிகளுடன் பேசிப் பார்த்தாள். அவர்களுடைய வாழ்க்கை இப்படி இல்லை.இது ஒரு வினோத தோல்வி நிலை. கதிருக்கு காமம் என்பது ஒரு பீர் பாட்டிலை திறந்து பீர் குடிப்பது போல அவ்வளவு எளிதானது. எப்போது வேண்டுமானாலும் குடிக்கலாம். எவ்வளவு விரைவில் வேண்டுமானாலும் குடிக்கலாம். ஆனால் அபிநயாவிற்கு அது அப்படி இல்லை.

ஒரு நாள் தங்கள் வீட்டில் இருந்த மிக்சி ரிப்பேர் ஆகி இருந்தது. அதன் வாரண்டி அட்டையை தேடித் கண்டு பிடித்த அபிநயா அதனுடன் இருந்த மிக்சியின் யூசர் மேனுவலாகிய பயன்பாட்டு புத்தகத்தையும் எடுத்துப் பார்த்தாள். அதில் பல மொழிகளில் அந்த மிக்சிக்கு எத்தனை ஜார்கள் உள்ளன, எந்தெந்த ஜார்கள் எதற்கெல்லாம் பயன்படுத்த வேண்டும், அதை எப்படி பராமரிக்க வேண்டும் என்று பதினைந்து பக்கத்திற்கு இருந்தது. ஒரு மூவாயிரம் ரூபாய் மிக்சிக்கு இருக்கும் பயன்பாட்டு புத்தகத்தைப் போல மனிதர்களுக்கு ஏன் அப்படி ஒன்று இல்லை என்று தோன்றியது. அவளுக்கு அப்படி ஒன்று இருந்திருந்தால் அதைப் படித்தாவது கதிருக்கு தன்னைப் பற்றி புரிந்திருக்கும் என்று எண்ணினாள்.

அபிநவ்வின் முதல் பிறந்த நாளை விமர்சையாகக் கொண்டாடினர். இப்படியே அபிநவ்வை சுற்றியே இவர்களின் நாட்கள் ஓடின. ஒரு நாள் காலையில் தன் வண்டியில் அலுவலகத்திற்குப் போன கதிர் அன்றிரவு காரில் இரண்டு நண்பர்களுடன் வலது கையில் பெரிய கட்டுடன் வீட்டிற்கு வந்தான். வலது கால் முட்டியில் ஒரு கட்டு, முட்டிக்கு கீழே நிறைய சிராய்ப்புகள் சிறிதும் பெரிதுமாக. இடது கால் பாதத்திலும் ஒரு கட்டு. பதறிப் போய் விட்டாள் அபிநயா. வீட்டிற்கு வரும் வழியில் ஒரு விபத்து நடந்து நண்பர்கள் மருத்துவமனைக்கு கூட்டிச் சென்று இருக்கிறார்கள். கதிர் கீழே விழுந்து அவன் மேல் வண்டியும் விழுந்ததில் வலது கையில் எலும்பு முறிவு. எலும்பு சேர்வதற்கு மூன்று மாதங்கள் ஆகும். ஒரு மாதம் கதிர் வீட்டில் இருக்க வேண்டுமென்று மருத்துவர் சொல்லி விட்டார். பத்து நாட்களுக்கு ஒரு முறை ஸ்கேன் செய்து கட்டு மாற்ற வேண்டும்.

கதிர் தன் அம்மாவை உதவிக்கு வரச் சொல்லவா என்று கேட்டபோது, அபிநயா தன் பெற்றோர், கதிரின் பெற்றோர் யாரும் வர வேண்டாம் என்றும், தானே கதிரை பார்த்துக் கொள்வதாகவும் சொல்லி விட்டாள். அபிநவ் ஒரு பக்கம், கதிர் ஒரு பக்கம் என அபிநயா கவனிக்கத் தொடங்கினாள். முதலில் அபிநவ்விற்கு உணவு ஊட்டி விட்டு, பிறகு கதிருக்கும் ஊட்டி விட்டாள். உணவளித்து விட்டு கதிருக்கான மாத்திரைகளையும் அவன் வாயில் போட்டு தாண்ணீர் ஊற்றினாள். அவன் மறந்தாலும் அவன் மாத்திரைகளை அபிநயா மறந்ததில்லை. கைகளில் பாலிதீன் கவர் சுற்றி கதிரைக் குளிப்பாட்டினாள். "அப்பாக்கு கைல ஊ .... கிட்ட வரக் கூடாது" என்று அபிநவ்விடமும் சொல்லி வைத்திருந்தாள். காலில் முட்டியில் உள்ள கட்டை அவிழ்த்து அவளே மருந்து போட்டு விட்டாள். அவனுக்குத் தேவையான தண்ணீர், மருந்து தின்பண்டம் என்று எல்லாம் அவன் பக்கத்திலேயே வைத்திருந்தாள். இரண்டு நாட்களில் அவன் சிறிது பதற்றத்துடன் காணப்பட்டான். "என்ன சிகரெட் புடிக்கணுமா?" என்று கேட்டு விட்டு சிகரெட் தேடிய அவன் உதடுகளுக்கு தன் உதடுகளில் முத்தம் கொடுத்தாள். "எப்ப சிகரெட் புடிக்கணும் போல இருக்கோ ..சொல்லுங்க .. இந்த சிகரெட்ட தரேன்.. இதுலல்லாம் கிக் வராதா?" என்றாள். அவன் சிரித்து விட்டான். சிகரெட் வாடை இல்லாமல் அவர்கள் கொடுத்துக் கொண்ட முதல் முத்தம் அதுதான்.

இவள் தன் பள்ளி வாழ்க்கையைப் பற்றியும் கல்லூரி வாழ்க்கையைப் பற்றியும் பேசிக் கொண்டிருந்தாள். அவனையும் கேட்டாள். அவன் முதலில் காதலித்த பெண்ணைப் பற்றி கேட்டாள். அவனும் பிரியதர்ஷினியைக் காதலித்து அவளிடம் சொல்லி அவள் மறுத்து விட்டதையும் சொன்னான். தன் அப்பா தனக்கு எவ்வளவு பிடிக்கும், அம்மா தன்னை எப்படி நடத்துவாள் என்று ஒரு நாள் சொல்லிக் கொண்டிருந்தாள். முகநூலில் இருந்து இவளது பழைய புகைப்படங்களை காண்பித்தாள். திடீரென்று முத்தம் கொடுத்து, லவ் யூ சொன்னாள். நீண்ட நாட்களுக்குப் பிறகு கதிர் "லவ் யூ" என்றான்.

அபினவ் பேச ஆரம்பித்திருப்பதை இருவரும் கேட்டு மகிழ்ந்தனர். அம்மா மட்டுமே சொல்லி வந்த அவன், முதன் முதலில் அப்பா சொல்ல ஆரம்பித்தான். "அப்பா ... கெட் வெல் சூன் " என்று அபிநயா சொல்லிக் கொடுத்ததை "அப்பா .. கெட் வெல் ச்சூ " என்று மழலையில் சொன்னான்.

கதிரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று பத்து நாட்களில் செய்ய வேண்டிய ஸ்கேனை செய்து கட்டு மாற்றி வீட்டுக்கு அழைத்து வந்தாள். அன்று தங்கள் திருமண ஆல்பத்தைக் கொண்டு வந்து இருவரும் பார்த்துக் கொண்டிருந்தனர். அந்த நான்கு மாதங்களைப் பற்றி பேசிக் கொண்டிருந்தனர். முட்டியில் இருந்த காயத்தில் காலில் இருந்த சிராய்ப்புகளில் தொடர்ந்து மருந்து போட்டு வந்தாள். அடுத்த ஸ்கேன் அடுத்த கட்டும் முடிந்தது. கதிரும் அபிநயாவும் அவர்களுக்குப் பிடித்த திரைப்படம் பார்த்தனர். பாடல்கள் கேட்டனர்.

இப்படியே ஒரு மாதம் ஓடியதே தெரியவில்லை. கட்டு பிரித்து வீட்டுக்கு வந்தான் கதிர். கால் காயங்கள் எல்லாம் ஆறி விட்டிருந்தன. அபிநவ் தூங்கி விட்டான். கதிர் அபிநயாவின் தோளைத் தொட்டு அவள் கண்கள் பார்த்து "தேங்க்ஸ்" என்றான். அவள் லவ் யூ என்றாள். அவள் கட்டியணைத்துக் கொண்டாள். முதன் முதலில் அவர்கள் வெளிச்சத்தில் காதல் கொண்டார்கள். அபிநயாவின் முதுகில் இருக்கும் மச்சத்தை அன்றுதான் முதன் முதலில் பார்த்தான் கதிர். அப்போது கதிருக்கு அபிநயா பேரழகியாகத் தெரிந்தாள். அந்த மச்சத்திலேயே ஒரு முத்தமிட்டான். அவளுக்கு உடல் சிலிர்த்தது. பிறகு இன்னும் சிலிர்த்தது.

நீண்ட நேரம் கழித்து அவர்கள் காதலின் உச்சம் தொட்டனர். அன்றுதான் அபிநயாவிற்கு முதலிரவு நடந்தது போலிருந்தது. அவள் கண்ணீர் விட்டு அழத் தொடங்கினாள். வேகமாக அவனை இறுக அணைத்தாள். அபிநயாவிற்கு அப்போது தும்மல் வந்து விட்டது. சிறிது நேரம் தும்மிக் கொண்டே இருந்தாள். அந்த நாளுக்குப் பிறகு அவர்கள் அறையில் அவ்வப்போது தும்மல் சத்தம் கேட்டுக் கொண்டே இருந்தது.

- ஞானபாரதி

Pin It