ஒரு வாரம் மிக நீண்ட பயணத்துக்குப் பின் புதிதாக குடியேறிய மாகாணத்தில் தான் ஜானுக்கு, வேயன் பாவ்டன் பழக்கம். வேயனுக்கு வயது சுமார் ஐம்பது இருக்கும். ஆனால், பார்பதற்கு என்பது வயதான ஆள் போலக் காட்சியளித்தார்.

ஜான் தனது வாகனத்தில் இருந்த பொருட்களை எல்லாம் ஒவ்வொன்றாக வீட்டிற்குள் எடுத்து வைத்துக் கொண்டிருக்கும் போது வேயன் அவரது வாகனத்தை பராமரித்துக் கொண்டிருந்தார். அப்போது ஜானைப் பார்த்த வேயன்
“ஹாய், திஸ் இஸ் வேன், நீங்க இந்த அப்பார்ட்மெண்டுக்கு புதுசா வாடகைக்கு வந்திருக்கிறீர்களா?” என்று கேட்டுக் தன்னை அறிமுகப்படுத்தினார் அந்த முதியவர்.

அடுக்குமாடிக் குடியிருப்பில் இரண்டாவது தளத்தில் இருந்து கீழே வந்தது கொண்டிருக்கும் போதே அவனிடம் அவராகவே பேச்சு கொடுத்தார். அவரை கண்டதும் “எஸ் வேயன், நான் ஜான் நைஸ் டூ மீட் யூ” என்று அவருக்கு பதிலளித்தான். ஒவ்வொரு வீட்டுக்கும் தனித் தனியாக வண்டி நிறுத்த இடம் இருந்தது. அவன் வண்டியை நிறுத்தும் இடத்திற்கு பக்கத்தில் தான் வேயனுடைய வண்டியும் நிற்கும்.

ஐந்து நாட்களுக்கு முன்னர் ஆரம்பித்தப் பயணம் 2400 மைல்கள் கடந்து, அன்றுதான் வேறு ஒரு மாகாணத்திற்கு வந்தடைந்தான் ஜான். வட மேற்கில் அமைந்திருக்கும் ஏழு மாகாணங்களின் வழியாக பயணித்த நீண்ட பயணம்.

வழி நெடுகிலும் பொட்டல் காடுகள், வரண்ட பாலைவன பகுதிகள், சிய்யாரா நவேடா மலைப்பகுதிகள், பணி விழுந்தால் நிலம் எதும் தெரியாது முழுவதும் வெள்ளை நிறத்தில் பூசிய சுண்ணாம்பு வண்ணம் போல் காட்சியளித்தது. கடைசி நாள் பயணம் ஒரு மலைப்பகுதியில் மேடு, பள்ளம் என நீண்டு கொண்டே சென்றது.

கரணம் தப்பினால் மரணம் நிச்சயம், அரை குறையாக தெரிந்த ஓட்டுநர் அனுபவத்தில் சற்றே சுதாரித்துக் கொண்டே வாகனத்தை இயக்கினான். அவனது வாகனத்தை தவிர பிற வாகனங்கள் எல்லாம் அவனை விட வேகமாக சென்றது. மலைக்காட்டு பகுதி ஆரம்பிக்கும் முன்னரே அறிவிப்பு பலகையில் “அடுத்த அறுபது மைல்களுக்கு இடையே எங்கும் வாகன எரிபொருள் நிலையங்கள் கிடையாது. இங்கேயே வானம் முழுவதும் எரிபொருள் நிரப்பி விடுங்கள்” என்று எழுதியிருந்தார்கள்.

ஜான் சற்றே சுதாரித்து கொண்டான், எரிபொருள் நிரப்பும் நிலையத்திலிருந்த சிறிய கடையில் சில உணவுப் பொருட்களையும் வாங்கிக்கொண்டு வாகனம் கிளம்பியது. கடந்த நான்கு நாட்கள் பயணித்த பகுதியை விட இது சற்றே வேறுவிதமாக இருந்தது.

சாலையை தவிர்த்து வேறு எங்கும் வாகனங்களும் இல்லை, மனிதர்கள், வீடுகள் என எதுவும் இல்லை. சாலையோரத்தில் காட்டு விலங்குகள் ஆங்காங்கே செத்து மடிந்து கிடந்தன. இந்த பகுதியில் வசிக்கும் ஒரு வித 'ஸ்கங்' என்ற விலங்கு மட்டும் செத்துக் கிடந்தால் அதன் கெட்ட வாடை காற்றில் சுமார் இருபது மைல்களுக்கு தாண்டியும் நெடி வீசியது.

பிற விலங்குகளிடம் இருந்து தன்னை தற்தாத்துக் கொள்ள ஒரு வகை திரவத்தை வெளியேற்றுமாம் இந்த ஸ்கங். ஏற்கெனவே ஸ்கங் போன்ற விலங்குகள் பற்றிய செய்திகளை தெரிந்திருந்தான் ஜான். அது பார்ப்பதற்கு அணில் போலவே பெரிய அளவில் கருப்பு நிறத்தில் இருந்தது. சாலையில் செத்த விலங்கைப் பார்த்தப்போது ஊரில் அணிலை பார்த்த ஞாபகம் வந்தது.

பரந்து விரிந்த பள்ளத்தாக்குப் பகுதிகளில் பூர்வகுடி மக்கள் ஆண்டாண்டு காலமாக வசித்து வந்திருக்கிறார்கள். ஐரோப்பியர்கள் அழித்தொழிப்பில் இருந்து மீண்ட சில பூர்வ குடிமக்கள் இன்னும் அதே இடத்தில் வசித்து வருகிறார்கள்.

ஒவ்வொரு முப்பது, நாற்பது மைல்கள் இடைவெளியில் வாகன ஓட்டிகள் இயற்கை உபாதைகளைக் கழிக்க ஓய்வு அறைகளை கட்டி வைத்திருக்கிறார்கள். அந்த ஓய்வு இடங்களில் அந்தப் பகுதிக்கான வரலாற்றையும் சேர்த்து எழுதி வைத்திருக்கிறார்கள்.

அதை வாசிக்கும் போது நம்மை அறியாமலேயே வியப்பு வாகன ஓட்டிகளை பிரம்மிக்க வைக்கும். ஒவ்வொரு ஓய்வு அறைகளை கடக்கும் போது அதன் வரலாற்று நெடி ஜானின் சுவாசத்தில் அடித்துக் கொண்டே இருந்தது.

கடைசியாக வந்து சேர வேண்டிய இடத்திற்கு களைப்புடன் வந்து சேர்ந்தான். இரண்டு வாரங்களுக்குப் பின்னர் ஒரு பெரிய வீட்டு குடியிருப்பில் ஒரு வீட்டை வாடகைக்கு ஒராண்டுக்கு ஒப்பந்தம் செய்திருந்தான் ஜான். வாடகைக்கு வீடு கிடைப்பது அவ்வளவு பெரியச் சிக்கலான காரியம் இல்லாததாக இருந்தது.

அவர்கள் கேட்கும் ஆவணங்களை கொடுத்தால் ஓரிரு நாட்களில் நமது பின்புலத்தை ஆராய்ந்து நமக்கான வீட்டை ஒப்பந்தம் செய்து விடுவார்கள். வங்கிக் கடன் அட்டைகளில் மூலம் எவ்வளவு செலவு செய்திருக்கிறீர்கள் என்பதை ஆராய்ந்து நாம் வைப்புத்தொகை எவ்வளவு கட்டவேண்டும் என்பதை கூறுவார்கள்.

வாடகைக்கு வீடு வாங்குவதே ஒரு புதிய அனுபவம் தான். "ஹலோ மிஸ்டர் ஜான் உங்களுக்கு இந்த வீட்டை நாங்க ஒப்பந்தம் செய்து தருகிறோம். ஆனா, நீங்க அட்வான்ஸ் அதிகமாகத் தர வேண்டியதிருக்கும்" என்றார் வாடகைக் குடியிருப்பு அலுவலகத்தில் வேலை செய்த பெண்மணி.

“இது எந்த அளவீடு மேடம், எதை வைத்து இப்படி சொல்லுறீங்க” என்றான் ஜான்.
“உங்களுக்குக் கடனைத் திருப்பிக் கொடுக்கும் திரன் எப்படி இருக்கிறது அதை பார்த்துவிட்டு தான், நாங்க மதிப்பீடு செய்வோம். இதோ பாருங்க உங்களுக்கு 'கிரெடிட் ஸ்கோர்' சுத்தமா இல்லை” என்றார்.

“மேடம் இப்பதான் வங்கிக் கணக்கை ஆரம்பித்து இருக்கிறேன். இனிமேதான் வங்கிக் கடன் அட்டை வாங்கணும். அதனால தான் எனக்கான கடன் வாங்கும் திறன் குறைவாக இருக்கிறது” என்றான்.

நமது ஊரில் கடைப்பிடிக்கப்படாத பல வழிமுறைகள் இங்கு கடைப்பிடித்தார்கள். வீடு வாடகைக்கு விடுவது என்பது ஒரு மிகப்பெரிய வர்த்தக நிறுவனமாக செயல்பட்டுக் கொண்டிருந்தது.

“நீங்க எந்த சாதி? வெஜிடேரியனா? இல்ல நான் வெஜிடேரியனா? உங்களுக்கு எந்த ஊரு? நீங்க எந்த மதம்? நீங்க பேச்சுலரா?” இவ்வாறு நம் ஊர்களில் கேட்கப்படும் கேள்வி எதுவும் அவர்கள் கேட்கவில்லை. வீட்டை ஒப்பந்தம் செய்வதற்கான விண்ணப்பத்தில் பெயர், முகவரி, அடையாள அட்டை தகவல்களை எழுதினால் போதுமானது.

'ஒரு வீட்டைக் கட்டிப்பார் கல்யாணத்தை நடத்திப்பார்' என்று ஊரில் பேசும் வழக்கம் உண்டு. அதையே 'ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்துப் பாரு அப்ப உனக்கு தெரியும் அதுல இருக்குற வலி என்னன்னு' ஊரில் இருக்கும் போது வாடகைக்கு எடுத்த அனுபவம் ஜானுக்கு இருந்தது. அதை நினைத்துப் பார்க்கும்போது இங்கு எவ்வளவோ பரவாயில்லை என்று அவனுக்கு தோன்றியது.

வேயன் இந்த அடுக்குமாடி குடியிருப்புக்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் வந்திருக்கிறார். அவரிடம் அழகான ஒரு நாய், கருப்பு வெள்ளை கலந்த நிறத்தில் வைத்திருந்தார். அது 'போர்டர் காலி' என்ற வகையை சேர்ந்த நாய். வீட்டு விலங்குகள் வளர்ப்பது என்பது இவர்களுக்கு மிகவும் பிடித்தமான ஒன்று.

அவரிடம் பேசிய சில நாட்கள் கழித்து தான் தெரியும் அவர் வீட்டில் ஒரு பூனைக்குட்டியும் வளர்த்து வளர்த்து வந்தார் என்பது. தினமும் வண்டியை பழுது பார்த்துக் கொண்டிருப்பது அவருக்கு பொழுதுபோக்கு. அவரது நாயையும் வண்டிக்கு உள்ளே வைத்து இருந்தார். ஜானை பார்த்தவுடன் 'வொவ்…. வொவ்... உர்…' என குறைக்க ஆரம்பித்துவிட்டது.

“ஹேய் ஷெய்டி வில் யூ ஷட் ஆப், ஹிஸ் அவர் நியூ நேபர்” என்றார் வேயன்.

'ஹாய் ஷெய்டி' என்று ஜானும் அந்த நாயிடம் அறிமுகப் படுத்திக் கொண்டான்.

மனிதர்களை நலம் விசாரிக்கிறோமோ? இல்லையோ? அவர்கள் வளர்க்கும் வீட்டு விலங்குகளை கண்டிப்பாக நலம் விசாரிக்க வேண்டும். இது இயற்கையாகவே அவர்களுக்குள் இருக்கும் ஒரு உளவியல்.

நாய் பூனைகளை நலம் விசாரித்ததோடு மட்டும் அல்லாமல் அன்றைய தினத்தின் கால நிலையைப் பற்றியும் அவர்களிடம் பேசினால் இன்னும் மகிழ்ச்சி கொள்வார்கள். இந்தத் தகவல்களை எல்லாம் புதிதாக குடியேறிய ஓரிரு மாதங்களில் அவர்களின் கலாச்சாரம் முறையையும் தெரிந்து கொண்டிருந்தான் ஜான். அந்த வகையில் வேயனுடன் பழகுவதற்கு மிகவும் எளிதாக போயிற்று.

"ஹே வேயன் ஹவ் இஸ் வெதர் டுடே" என்று பேச்சை ஆரம்பித்தான் ஜான்.

"யா, ட்ஸ் ஓகே டுடே நாட் பேட்," என்று கூறியவர் தனது கடந்த கால அனுபவங்களை எல்லாம் ஜானிடம் கூறிக்கொண்டே வந்தார். அவரது மூதாதையர்கள் இரண்டு மூன்று தலைமுறைக்கு முன்பு இந்தப் பகுதியில் வந்து குடியேறி இருக்கிறார்கள்.

நாங்கள் நின்று கொண்டிருந்த இடம் கூட ஒரு காலத்தில் ஏதோ பெரிய கடல்பகுதியாக இருந்த இடமாம். வேயனின் அப்பா ஒரு இரயில் எஞ்சின் டிரைவராக இருந்தாராம். வடக்கில் இருக்கும் மாகாணங்களையும் தெற்கில் உள்ள மாகாணங்களையும் இரயில் பாதை மூலம் இணைப்பது 'சால்ட் லேக்' என்ற ஏரியின் மேற்கு கரையில் அமைந்திருக்கும் பகுதியில் அமைந்திருக்கிறது. அதன் பெயர் 'The PROMONTORY POINT, Utah' முதன்முறையாக அந்த பாதையில் ரயில் சென்ற போது அதை இயக்கி சென்றது அவரது தந்தை தான். வேடன் அவரது கதையை சொல்லிக் கொண்டே வந்தார்.

ஜானுக்கும் அதன் வரலாற்றை மிகவும் ஆர்வத்துடன் கேட்டுக் கொண்டிருந்தான். "இந்தப் பகுதியில் இருக்கும் சால்ட் லேக் (உப்பு ஏரி) எப்படிப் பெயர் வந்தது வேயன்" என்று ஆர்வக்கோளாறில் ஒருமுறை அவரிடம் கேட்டான்.

அதற்கும் அவர் மிக தெளிவான ஒரு விளக்கத்தை எடுத்துக் கூறினார். "ஜான், 30,000 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால நாம் இங்கு நின்று கொண்டிருக்கும் பகுதியை 'Lake Bonneville' சூழ்ந்து இருந்தது, இந்த ஏரியில் இருந்து வேறெங்கும் நீர் வெளியே செல்வதில்லை.

ஐஸ் ஏஜ் காலத்தின் மனிதர்களுக்கு இது தண்ணீர் ஆதாரமாக இருந்துள்ளது. ஆனால், கால மாற்றத்தில் இந்த ஏரி முழுவதும் உப்புத் தன்மையானது. இப்போது அதனை யாரும் குடிக்க முடியாது. இப்போது 'சால்ட் லேக்' என்று கூறுகிறார்களே அது Lake Bonneville -ன் மிச்சமிருக்கும் பகுதி தான்" என்றார்.

அவர் சொல்வதையே வியந்து கேட்டுக் கொண்டிருந்தான் ஜான்.

"வேயன், இந்தப் பள்ளத்தாக்குப் பகுதியை டைனோசர் இனம் வாழ்ந்து வந்ததாக வரும் வழியில் படித்தேன், அதைப் பற்றி ஏதாவது உங்களுக்கு தெரியுமா?" என்று அடுத்தக் கேள்வியை கேட்டான் ஜான்.

"எஸ் ஜான், இந்த பள்ளத்தாக்கு தொடங்கி மெக்சிகோ வரையில் டைனோசர்கள் வாழ்நதிருக்கு. நீ ஒரு நாள் என் கூட வாயேன், நான் உன்னை டைனோசர் எலும்புக்கூடு கண்டுபிடித்த இடத்துக்கு நம்ம இரண்டு பேரும் போய் பார்த்து விட்டு வரலாம்" என்றார் வேயன்.

"எஸ், ஓகே வேயன், வீ வில் மீட் லேட்டர்…." என்று தானும் அங்கிருந்து புறப்பட்டு சென்றான. வீட்டுக்குத் தேவையானப் பொருட்களை வாங்குவதற்கு அருகில் உள்ள பல்பொருள் அங்காடிக்கு செல்ல வண்டியை ஸ்டார்ட் செய்தான்.

"ஜான், எனக்கு இருமல் இருக்கிறது ஒரு டைனலால் வாங்கி வருவாயா?" என்று கடைசியாக ஒரு வேண்டுகோள் வைத்தார் வேயன்.

"சரி, நான் கண்டிப்பாக வாங்கித் வருகிறேன்…" என்று உத்தரவிட்டு வண்டியை ரிவர்ஸில் பார்கிங் ஸ்பாட்டில் இருந்து வெளியே எடுத்தான்.

"வொவ்… வொவ்… வொவ்…" என்று விடாமல் அவரின் நாய் ஷெய்டி ஜானை பார்த்துக் குறைத்தது.

"பாய் ஷெய்டி" என்று ஜன்னலை இறக்கி டாட்டா கூறிவிட்டு வண்டியை வேகமாக சாலையில் திருப்பினான்.

கடையில் பொருட்களை எல்லாம் வாங்கிக் கொண்டு வீட்டிற்குத் திரும்புவதற்கு மாலை ஐந்து மணி ஆகிவிட்டது. மாலை ஐந்து மணி தான் என்றாலும் பார்பதற்கு குத்திருட்டில் நடப்பது போல் இருந்தது. குளிர் காலம் என்பதால் பகல் பொழுது குறைவாகவும் இரவு மிக நீண்டதுமாய் காணப்பட்டது. வீட்டில் உணவு தயாரித்துக் கொண்டிருந்தவனுக்கு அப்போது தான் நினைவுக்கு வந்தது,

'தான் வாங்கி வந்த மருந்தை வேயனுக்கு கொடுக்க வேண்டும்' என்று மேல் தளத்தில் இருந்து கீழே வந்தவன் அவரின் வாகனத்தைப் பார்த்தான். சிகப்பு நிற 'டாட்ஜ் ரேம் ட்ரக்' அவரது பார்கிங் இடத்திலேயே நின்றது. வேயன் வீடும் இரண்டாவது தளத்திலே இருக்கிறது. மேலே ஏறி வீட்டின் வெளியே உள்ள ஹாலிங் பெல்லை அளுத்தினானான்…..

"வொவ்… வொவ்… வொவ்…" என குறைத்துக் கொண்டு ஷெய்டி வெளியே வந்தது.

"ஐயம் சாரி வேயன் ஐ ஃபர்காட் யுவர் மெடிசின்" என்று வாங்கி வந்த மருந்து பாட்டிலை அவரிடம் கொடுத்தான்.

"தட்ஸ் ஓகே ஜான், தேங்க் யு வெரி மச்…" என்று பெரும் மகிழ்ச்சியுடன் அவனுக்கு நன்றியை தெரிவித்தார் வேயன்.

வேயனுக்கு இப்போதெல்லாம் உடம்புக்கு அடிக்கடி சரியில்லாமல் போய்விடுகிறது. அவருக்கு ஒரு மகன் இருக்கிறான். ஆனால், வேயனுடன் வசிப்பதில்லை. வேயனை தனியாக ஒரு வீட்டில் வாடகைக்கு அமர்த்தி விட்டு அவன் தனியாக வேறொரு இடத்தில் வசிக்கிறான். கடந்த பத்தாண்டுகளில் ஒருமுறை கூட அப்பாவை வந்து பார்த்தது இல்லையாம்.

அரசாங்கத்தின் முதியோர் ஓவ்வு ஊதிய திட்டத்தின் கீழ் மாதா மாதம் வீட்டு வாடகை, உணவு, மற்றும் பிற செலவுகளுக்கு பணம் பெற்றுக் கொள்கிறார். மதிய உணவு ஒரு வண்டியில் அவரது வீட்டுக்கு வந்து கொடுத்து விட்டு போவார்கள். இரவு உணவு அவரே வீட்டில் செய்து கொள்வார். பெரும்பாலும் சூப் அல்லது கிரவுண்ட் மாட்டிறைச்சி சமைத்து உண்ணுவார்.

தன்னுடைய வீட்டிற்கு திரும்பியதும் ஜானும் அவனது உண்வை உட்கொள்ள ஆயத்தமானான். குளிர்சாதன பெட்டியில் வைத்திருந்த பீர் ஒன்றையும் எடுத்துக் கொண்டான். உணவை சாப்பிட்டு முடிப்பதற்குள் நான்கு பீர் பாட்டில்களை முடித்திருந்தான். போதை சற்று மேல் ஏறியிருந்தது. எல்லாவற்றையும் முடித்து படுக்கும் போது இரவு பதினோரு மணி ஆகியிருந்தது.

படுக்கை அறையில் நுழைந்து அரை மணி நேரம் இருக்கும் வீட்டுக்கு வெளியில் இரண்டு ஆம்புலன்ஸ்களும் ஒரு போலிஸ் வாகனமும் வந்து நின்றது. எல்லாவற்றையும் உள்ளே இருந்து கவனத்துக் கொண்டு இருந்தான் ஜான். ஆம்புலன்ஸ் வந்திருந்தது வேயனை மருத்துவமனை கொண்டு செல்ல தான். வேயனை உள்ளே ஏற்றும் போது அவர் சுயநினைவு இல்லாமல் இருந்தார்.

வேயனுக்கு என்ன ஆகியிருக்கும் என்ன பதற்றம் ஒருபுறம் இருந்தாலும் வெளியே சென்று போலிஸிடம் பேச அவனுக்கு சற்றே தயக்கம் இருந்தது. சிறிது நேரத்தில் ஆம்புலன்ஸ் நகரத் தொடங்கியது அப்போது அவரது நாய் செய்டியும் உள்ளே இருந்ததை கவனித்தான்.

ஜானுக்கு உடனே மருத்துவமனைக்கு செல்ல வேண்டும் என்ற எண்ணம் தோன்றியது. ஆனால் தான் சற்றுக் குடித்து இருப்பதால் வாகனம் ஓட்டுவதில் சிக்கல் ஏற்படுமோ என்று தவிர்த்து விட்டான்.

இருந்தாலும் மனதிற்குள் 'ச்ச இன்னைக்கு போய் குடிச்சுட்டோமே...' என்று தன்னுள் வருந்திக் கொண்டான். இரவெல்லாம் தூக்கமே வரவில்லை. 'வேயன் மருத்துவமனையில் எப்படி இருப்பாரோ' என்று சிந்தித்துக் கொண்டே தூங்கிவிட்டான்.

காலையில் விடிந்ததும் வேயனிடம் இருந்து தொலைபேசி அழைப்பு வந்தது, "ஹாய் ஜான் தி ஸ் வேயன்" என்று சற்றே தாழ்வான குரலில் கேட்டார்.

"நீங்கள் எப்படி இருக்கிறீர்கள் வேயன்"

"ஐ எம் ஓகே…. நான் இப்போம் இன்டர் மௌண்டன் ஹாஸ்பிடலில் இருக்கேன், நீ வந்து என்னை பார்க்கலாம்" என்றார்.

ஜானும் உடனே தனது வாகனத்தை எடுத்துக் கொண்டு மருத்துவமனைக்கு விரைந்தான். மருத்துவமனைக்குள் வேயன் சுய நினைவில் தான் இருந்தார். மெதுவாக ஜானிடம் பேச்சுக் கொடுத்தார். "ஜான் இது எனக்கு மூன்றாவது ஹார்ட் அட்டாக், எனக்கு ஒன்றும் ஆகாது, நான் பிழைத்துக் கொள்வேன். என்றார்.

ஜானுக்கு என்ன பதில் சொல்வது என்று தெரியவில்லை ஆனால் பதிலாக கண்ணீரையே சிந்தினான். வேயன் இன்னும் ஒரு நாள் மருத்துவமனையில் தங்க வேண்டும். நாளை வேயனை மருத்துவமனையில் இருந்து விடுவித்து விடுவார்கள். ஜான் அங்கிருந்து கிளம்பும்போது அவரது நாயை அழைத்து செல்ல வேண்டும் என்று கூறியிருந்தார். வீட்டுக்கு வரும் போது நாயையும் கூட்டி வந்தான் ஜான்.

இந்த ஊரில் நாயை வளர்ப்பது என்பது அவ்வளவு சாதாரணமான விடயம் அல்ல. மக்கள் தங்கள் பிள்ளைகளைப் போலவே நாய்களையும் பராமரிக்கிறார்கள். செய்டியை வீட்டுக்கு அழைத்து வந்தவன் அதனை வெளியே சற்று உலாவ அழைத்துச் சென்றான்.

நாயை அழைத்து செல்லும் போது கையில் ஒரு சிறிய பையையும் வைத்துக் கொள்ள வேண்டும். சாலையோரங்களில் ஆங்காங்கே 'நாயின் கழிவுகளை உடனே அகற்ற வேண்டும்' என்று எழுதியிருந்தார்கள். ஷெய்டியின் கழிவுகளையும் ஒரு பையில் பத்திரமாக எடுத்து குப்பையில் வீசினான். இது அவனுக்கு ஒரு புதிய அனுபவம். ஊரில் தனது ஆட்டுக்குட்டிகளை இவ்வாறு மேய்பதற்கு அழைத்துச் சென்றிருக்கிறான். இங்கே நாயை அழைத்துச் செல்வது ஒரு வியப்பான சம்பவமாக இருந்தது.

மறுநாள் நாயை வீட்டில் வைத்துவிட்டு வேயனை அழைத்துவர ஜான் மருத்துவமனைக்குச் சென்று இருந்தான். வேயனுக்கு எல்லா சோதனைகளும் முடிந்து அவரை வீட்டுக்கு செல்ல அனுமதி தெரிந்தார்கள் மருத்துவர்கள். வரும் வழியில் வேயன் சற்றுச் சோர்வாக தான் காட்சி அளித்தார்.

"ஜான், இன்னும் எத்தனை நாளைக்கு நான் உயிரோடு இருப்பேன் என்று எனக்கு தெரியாது…" என்றார்.

"அப்படியெல்லாம் ஒன்றும் ஆகாது வேயன் நீங்கள் நன்றாகவே இருப்பீர்கள்" என்றான் ஜான். அவருக்கு மேலும் அழுத்தம் கொடுக்காதவாறு அதிகம் பேசாமலேயே வீட்டுக்கு வந்தார்கள் இருவரும். வீட்டிற்கு வந்ததும் ஷெய்டி மிகவும் ஆர்வத்துடன் காத்திருந்தது. "வொவ்… வொவ்… வொவ்…" என்று வேயனின் தோள்பட்டையில் ஏறி குதித்தது.

வேயன் நீண்டகாலமாகவே தனியாக இருந்ததால் அவருக்குப் பேச்சு துணைக்கு ஆள் இல்லாமல் இருந்தது. தனது முதல் மனைவியை அவரது முப்பதாவது வயதில் விவாகரத்து செய்துவிட்டார். அவர்களுக்கு ஒரே ஒரு மகன் முதல் மனைவியின் கட்டுப்பாட்டில் இருந்திருக்கிறான்.

இரண்டாவது திருமணம் செய்து கொண்ட அவரது வாழ்கையும் சிறப்பாக அமையவில்லை. இரண்டாவது திருமணமும் விவாகரத்தில் முடிந்து தனது சொத்துக்களில் பாதியை இரண்டாவது மனைவியிடம் பிரித்துக் கொடுத்திருக்கிறார். கிட்டத்தட்ட கடந்த பத்து ஆண்டுகளாக யாரும் இல்லாத ஒரு தனிப்பட்ட வாழ்க்கையை வாழ்ந்து வந்திருந்தார்.

ஜான், வேயனுடன் வெளியே செல்லும் போதெல்லாம் ஊரின் கதைகள் எல்லாம் நிறைய சொல்லிக் கொடுத்து இருக்கிறார். ஆனால் உப்பு ஏரிக்கு மட்டும் அவர்கள் இருவரும் பயணம் மேற்கொள்ளவில்லை. சில மாதங்கள் கழித்து ஜானுக்கு வேறு ஒரு மாகாணத்தில் இடமாற்றம் பெற்று அங்கிருந்து சென்று விட்டான்.

வேறொரு மாநிலத்திற்கு சென்றாலும் வாரத்திற்கு ஒரு முறை வெளியிடும் தொலைபேசி அழைப்பு செய்து நலம் விசாரித்துக் கொண்டிருந்தான். ஒருநாள் வேயனிடம் இருந்து அழைப்பு வந்திருந்தது.

"ஹாய் வேயன் ஹொவ் ஆர் யூ?" என்றான்.

எதிர்முனையில் பேசியவர் வேயன் இல்லை, அது மருத்துவமனை ஊழியர். வேயன் தனக்கு தெரிந்த எல்லோரிடமும் ஜானை அறிமுகம் செய்து வைத்திருந்தார். மருத்துவ மனையிலும் ஜானின் தொலைபேசி எண்களை கொடுத்திருந்தார்.

"வேயன் பாஸ்ட் அவே" என்றார் அந்த ஊழியர்.

அவருக்கு நான்காவது முறையும் ஹார்ட் அட்டாக் வந்திருக்கிறது. ஆனாலும் அதிலிருந்துப் பிழைத்து விட்டார். இப்போது அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதில் அவரது உயிரும் பிரிந்தது விட்டது.

வேயனுடன் சென்று சால்ட் லேக் ஏரியைப் பார்க்க வேண்டும் என்ற ஆசை ஜானுக்கு நிறைவேறவில்லை. கடைசியாக வேயனை பார்க்க வேண்டும் என்பது போல் இருந்தது. ஷெய்டி எப்படி இருக்கும் என்று மனதில் நினைத்து கொண்டிருந்தான்.

- பாண்டி