அந்தத் தெருவின் முகப்பு தார்சாலையின் மேல் படிந்துக் கொண்டிருந்த துகில்கள் காற்றில் பரந்த படி வரவேற்றது. எதிர்பார்த்த மரங்களின் அசைவுக்கு மாறாக மனிதர்களின் நடமாட்டம் அதிகம் இருந்தது.

குட்டை என்ற பெயர் கொண்ட இடம் உயரம் கொள்ளாத கட்டிடங்களால் நிரப்பப் பட்டிருந்தது. கொஞ்சம் வசதி கொண்டதாய் நின்றிருந்தது பூபதி மன்றம். வடமேற்கில் நினைத்ததை போல ஒரு பெட்டிக்கடை, எத்தனை நாட்கள் கமர்கட் மிட்டாய்க்கு கைநீட்டி இருக்கக் கூடும்.

அதற்காகவே இடதுபுற சட்டைப்பையில் நிறைந்துக் கொண்டிருக்கும் பத்து காசுகள். அன்று இருபத்தைந்து காசுகளில் முடிந்துக் கொள்ளும் அன்றைய பட்ஜெட். பெட்டிக்கடை ஒட்டி கிழக்கே பார்த்து நிற்கும் மாகாளியம்மன் கோவில் புதுவர்ணம் கொண்டு மிழறியதே தவிர அப்படியே அன்றைய மஞ்சள் நிற வெயிலை வாங்கிக் கொண்டு என்னுடைய முப்பத்தைந்து ஆண்டுகள் முன் வாழ்ந்துக் கொண்ட கடவுளுக்கும் எனக்குமான நெருக்கத்தை இன்று அடித்துக் கொண்ட உச்சிகால பூஜையின் மணியோசை என்னை மெல்லக் கடத்தியது.

‘டேய் வண்டியைப் பார்த்து ஓட்டு. என்ன உங்கப்பனூட்டு ரோடா... இப்படி கண்ணமூடிடு ஓடற'.

துளிர்விட்டுக் கொண்ட ஞாபகங்களில் மிதந்துக் கொண்டவன் அந்த வட்டார மொழியில் மீண்டு கொண்டான். தன் வண்டியை இன்னும் மெதுவாக இயக்கினான். மாநகராட்சி பள்ளிவந்தது. தரை முழுக்க செம்மயில் கொன்றை பூக்கள் காய்ந்த நிலையில் மொழுவிக் கொண்டதில் பள்ளிவிடுமுறை வாசம் தெருவில் அலைந்துக் கொண்டிருந்தது.

இரும்பு வேலி கொண்டு எழுப்பப்பட்ட தடுப்பு அப்போது இல்லாததால், கண்ணாடிக் கிழவியின் ஈமொய்க்கும் கிழங்கும், மரவள்ளி சீவல்களும் மறுபடியம் உயிர் பெற்று உச்சி நாக்கில் நின்று கொண்டது.

தென்கிழக்கு பகுதியில் பள்ளியைத் தாண்டி அமைந்திருந்த கிணறு அன்றிலிருந்து இன்றுவரை மூடி இருந்தும் எனக்குள் அன்றைவிட இன்று முளைத்துக் கொண்ட அவா மெதுவாக எட்டிப் பார்த்தது.

தண்ணீர் பிடித்துக் கொள்ள பல வண்ணங்களில் காலிக் குடங்களுடன் பெண்களின் வரிசை அன்று சாலை முழுதும் ததும்பிக் கொண்டது.

நூலென பிரிந்துக் கொண்ட குறுக்கு தெருக்களில் ஒன்று பெருமாள் கோவில் வீதி, சதிஷ், கண்ணன், பாலாஜி அப்போது தெருவில் விளையாடிக் கொண்ட கிரிக்கெட்டில் அடிக்கடி தெருக்களின் குறுக்கே நின்ற வடிகாலில் விழுந்துக் கொள்ளும் பந்தை யார் எடுப்பது என்பதில் நிறைவு கொள்ளும் அன்றைய விளையாட்டு.

அன்று ஆலமரத் தடியில் தனியாக அமர்ந்திருந்த பிள்ளையார் இன்று கட்டிக் கொடுக்கப்பட்ட சிறு கோபுரத்தின் உள் பாதுகாப்பாக அமர்ந்திருந்தார். அவர் பால் குடித்த போது நானும் வரிசையில் பால் குடத்துடன் நின்றிருந்தேன்.

ரங்கநாதன் தெரு, வேகமாக அன்று நாய்க்கர் கேட்ட கிளாசிக் சிகரெட்டை வாங்கி ஓடிவந்து முக்குத் திரும்பும்போது சைக்கிள் ஒன்று இடித்து மேலேறியதில் இடதுகால் எலும்பு முறிந்தது. இன்றுவரை இந்த இடதுகால் எலும்புகளில் பதிந்து போய் இருந்தது அன்று ஒட்டுமொத்த தெருவும் என் அழுகைக் குரலுக்கு சூழ்ந்த. அந்த தெருவின் தொடக்கத்தில் அண்ணாச்சிக்கடை, அங்கு பலநாள் நாலணா அரிசிமுறுக்கு வாங்க அம்மாவிடம் லஞ்சம். என் வாழ்க்கையில் முதுலும் கடைசியுமான லஞ்சம்.

தெருக்களை பார்த்துக் கொண்டிருந்த அன்றைய வானம் மட்டும் மாறாமல் இருந்தது. வண்டியை ஓரமாக நிறுத்தி நடக்கத் தொடங்கியதில், சிறுவயதில் நடந்துக் கொண்ட பாதையின் தொடர்ச்சியாக அன்றைய நடை இருந்தது. உடல் இடை கூடியிருந்ததாலும் முகத்தில் சவரம் செய்யாமல் முளைத்துக் கொண்ட முடியுனாலும், யாரும் இதுவரை கண்டு கொள்ளவில்லை.

செட்டியார் பாட்டி வீடு வந்தது, அங்கு தான் கருப்பு வெள்ளையில் கேபிள் டிவி படம் காட்டப்படும். விரட்டாத குறை, கடைசியில் அவர்களே புதுப்படத்திற்கு தூது அனுப்பினார்கள். அவர்கள் பேரக் குழந்தைகள் மத்திய உணவிற்கு நான் தான் பகல் பூச்சாண்டி.

செட்டியார் வீட்டில் குடியிருந்தவள் தான் நிஷா மலையாள வாடை கொண்ட தமிழில் பேசிய போது மொழி வலிமை உடைபடாமல் இனிமையாக காது கொண்டதின் நிலைப்பாடுதான் அன்று இலைமறை காயாய் இருந்துக் கொண்டது இப்போது காதெலென புரிந்தது. தேடாத இடம் இல்லை, முகநூலில் துழாவாத நாட்கள் இல்லை. இப்போது வரை அவளை பற்றிய தகவல் இல்லை

செட்டியார் வீட்டின் எதிர்புறம் தான் நான் வசித்துவந்த நாய்க்கர் வீடு. அழைத்துப் பார்த்ததில் யாரும் வரவில்லை

கதவு தள்ளியவுடன் திறந்துக் கொண்டது. அன்றிருந்த எங்கள் செல்ல ஸ்நோயி பதிலாக விகாரமான உடலமைப்புடன் நாக்கைத் தொங்க விட்டவாறே உயரமாக கருப்பு நிறத்தில் நின்றுக் கொண்டிருந்தது ஒரு நாய். என்னைப் பார்த்து ஏனோ குரைக்காமல், சிறிது நேரம் பார்த்துவிட்டு பின்னங்காலில் அமர்ந்துக் கொண்டது.

வீட்டில் யாரும் இல்லைபோலும். எல்லாமே மாறிப்போயிருந்தது. நானும் புஷ்பராஜும், மாறி மாறி அம்மா போடும் அரிசியை ஆட்டாங்கல்லில் ஆட்டியதும், தேர்வு முடிவுகளை எதிர்பார்த்து துவைக்கின்ற கல் மேல் அமர்ந்து கிளி கொண்டதும் திரைக்கொண்டு நீண்டது.

இப்போது அவ்விடம் தரையேற்றப்பட்டு வெவ்வேறு அறைகளாக மாறி இருந்தது.

பார்த்தவை அனைத்துமே மாறி இருந்தது. இன்னும் மனம் நிறைந்த பாடில்லை, அப்போது பார்த்தது இப்போது இல்லை. மாற்றங்களின் நிலைக் கொள்ளாமை புதிய நிலை எட்டிக் கொள்ளும் நிலையில், தன்னை மாற்றிக் கொள்வதில் மனது ஒன்றிப் போவதில்லை எதிர்பார்ப்புகளில் தேங்கிக் கொள்கிற மனது எப்போதும் சமரசம் செய்துக் கொள்வதில்லை.

எதோ நிர்பந்தத்தில் அந்த இடத்தை விட்டு நகரத் தொடங்கினான்.

‘ரமேஷ்... தான...’  மலையாள வாடைக் கொண்ட தமிழ் மனம் கமழ்ந்தது. அது நிஷா தான். ராமேசுக்கு பேச்சு வரவில்லை.

அதிர்ச்சியில் செய்கை மட்டும் வந்தது.

‘இந்த நாய்க்கர் வீட்டை நாங்கதான் வாங்கியிருக்கோம்….’’

‘நீ எப்படி இருக்க... எங்க இங்க... கல்யாணம் ஆயிருச்சா...’

ஒருவிதமான மகழ்ச்சி உடலெங்கும் கிளைகொண்டது. உணர்ச்சிகளில் வார்த்தைகள் எப்போதும் போல தடுமாறியது. அன்று பேசிய கடைசி வார்த்தையிலிருந்து தொடங்குவதா இல்லை புதிதாக துவங்குவதா... தனக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை என்று சொல்லி..

‘அம்மா...' என்று மழலைக் குரல் தனித்து ஒலித்தது.

நிதானிக்காமல் வந்து விழுந்தது வார்த்தை.

‘ஒன்னும் இல்ல நிஷா’ ... வாழ்ந்த இடம் பார்த்து ரொம்ப வருஷம் ஆச்சு அது தான் எப்படி இருக்குனு பார்க்க வந்தேன்...’

சன்மது

Pin It