அது ஒரு கொண்டாட்ட சாவு. மாலை ஆறு மணிக்கு இறந்ததாகவும் மறு நாள்தான் அடக்கம் செய்வார்கள் என்றும், நீங்கள் காலையிலே வந்துவிட வேண்டும் எனவும் இறப்புச் செய்திச் சொல்ல வந்த இரு இளைஞர்கள் சொன்னார்கள். அவ்விரு இளைஞர்களிடம் ஐம்பது ரூபாய் கொடுத்து வழியனுப்பி வைத்தேன்.

“மொத ஆளே ஐம்பது ரூபாய் கொடுத்து இருக்கிறார், அப்போ நமக்கு நல்ல வசூல் ஆகும்டேனு” அந்த இளைஞர்கள் பேசிக் கொண்டு போனது என் காதில் விழுந்தது.

மறுநாள் எனக்கு வேலை இருப்பதால், அன்று இரவு ஒன்பது மணிக்கே அந்த இறப்பு வீட்டிற்குப் போய்விட்டேன். இறந்து போனது நண்பனின் அம்மா பூங்கோதை. நல்லா வாழ்ந்தவள். வயசு ஆனவள்தான், ஆனாலும் இன்னும் கொஞ்சகாலம் வாழ்ந்திருக்கலாம். அவ்வளவு அன்பான படர்ந்த முகம். நண்பனின் கைகளை இறுகப் பற்றிக்கொண்டு அருகில் அமர்ந்திருந்தேன். எதுவும் பேசவில்லை. சிறிது நேரம் கழித்து,

“நண்பர்கள் எல்லோரிடமும் தகவலை சொல்லிடுடா”னு தழுதழுத்த குரலில் நண்பனே மௌனம் கலைத்தான். நண்பர்களிடம் தகவலைச் சொல்லிக் கொண்டிருந்தேன். அப்பொழுது மிகவும் பரிச்சயமான குரல் தெரு முனையில் இருந்து அழுது கொண்டு வருவது என் காதில் விழுந்தது.

“அம்மா என்ன விட்டுட்டு போயிட்டியே, இனிமே எனக்கு யார் இருக்கா?” என்னும் அந்தக் குரல் பூங்கோதையின் ஒரே மகள் அக்கா தேவகியின் குரல்.

தேவகியை மட்டும் அல்ல, என்னையும் விட்டுட்டுதான் போய்ட்டா பூங்கோதை அம்மா. நான் எப்பொழுது போனாலும், சாப்டியானு கேட்டு சாப்பிட வைப்பவள்தான் இறந்து கிடக்கிறாள். இனி இந்த வீட்டில், என்னை வரவேற்க பூங்கோதை அம்மா இல்லை. என்னைக் கண்டதும் சமைத்துச் சுடச்சுடச் சோறு போடும் பூங்கோதை அம்மாவை இனிப் பார்க்கவே முடியாது. ஒரு வீட்டில் அம்மா இறந்து விட்டாள் என்றால், அந்த வீடு மட்டுமல்ல, வீட்டோடு தொடர்புடைய எல்லாவற்றையும் கைவிட்டு விடுகிறாள். இனி அந்த வீடு வேறொரு வீடாக இருக்கும். அந்த வீட்டிற்கான உறவுகள் அறுந்து கிடக்கும்.

கும்பகோணத்திற்கு அனுப்பி வைக்கப்பட்ட ஆறுமுகம் நையாண்டி மேளம், மற்றும் ஆட்டக்காரர்களுடன் வந்து சேர்ந்துவிட்டான். ஆட்டக்காரர்களை பார்க்கும் ஆவலில் அந்தச் சாவு வீடு மெல்ல மெல்ல கொண்டாட்ட வீடாக மாறிப்போனது. எப்படியும் மறுநாள் மாலை ஐந்து மணி ஆகிவிடும் பூங்கோதை அம்மாவை அடக்கம் செய்வதற்கு. அதுவரை இந்தத் தெருவில் யாரும் உலை வைக்கப் போவதில்லை. பசியோடு இருப்பவர்களுக்கு ரவா கஞ்சி வைத்து கொடுத்துக் கொண்டிருக்கிறாள் ரஞ்சிதம் அத்த. பூங்கோதைக்கு இரண்டு நாத்தனார். இரண்டாவது நாத்தனார்தான் ரஞ்சிதம் அத்த. ரஞ்சிதம் அத்தையும், தேவகி அக்காவையும் பார்ப்பதற்கு ஒரே மாதிரி இருப்பாங்க. இதனாலவே பூங்கோதை அம்மா, ரஞ்சிதம் மேல ரொம்பப் பாசமா இருந்தாங்க.

இருபது ஆயிரம் பணம் மற்றும் ஏடிஎம் கார்டை என்னிடம் கொடுத்து, இறுதிச்சடங்கிற்கான எல்லாப் பணிகளையும் பார்க்கும்படி நண்பன் கூறினான். ஊர்ப் பெரியவர்களிடம் பேசிக் கொண்டிருந்தபோது, என்னிடம் செய்திச் சொல்ல வந்த அந்த இரு இளைஞர்களும் வந்தார்கள்.

“அண்ணா நீங்க எப்ப வந்தீங்க?”

“நான் ஒன்பது மணிக்கே வந்துட்டேன். நீங்க இப்பதான் வர்றிங்களா?”

“ஆமாண்ணா, கொடுத்த ஊர்க்கெல்லாம் செய்தி சொல்லிட்டு இப்போதான் வர்றோம்ணா”

“தம்பி! நல்ல வசூல் ஆச்சா?”

“ம்ம்ம்.. நீங்க தொடங்கி வச்சிங்க, நல்ல வசூல் ஆச்சுணா... அண்ணா... அண்ணன் உங்கள்ட்ட இத கொடுக்கச் சொன்னாங்க. இரண்டு ஆப், கப், வாட்டர் இருக்குணா. சைடிஸ் வாங்க காசு பத்தலணா”.

“பரவாயில்லை தம்பி. இந்தாங்க சாவி. அப்படியே வண்டி டிக்கில வச்சுடுங்க”ன்னு சொல்லிட்டு, நேரத்தைப் பார்த்தேன்.

கழுவுற மீனுல நழுவுற மீனா அக்கூட்டத்தில் இருந்து நழுவி வண்டிய எடுத்தேன். எனக்கு முன் ஒரு பெண் அவசர அவசரமாக நடந்து போய்க்கொண்டிருந்தாள். நடப்பதற்கும் ஓடுவதற்கும் இடையேயான அவளின் வேகம் வண்டியின் வெளிச்சத்தில் தெரிந்தது. அவளைக் கடந்து செல்லும்போது பார்த்தேன். அந்தத் துயரம் படர்ந்து தோய்ந்த கண்கள் என்னை நில் என்று சொன்னது. கொஞ்சம் தூரம் போனதும், ஓர் அடி பம்பு இருந்தது. வண்டிய நிறுத்தி முகம் கழுவதுபோல் கழுவிக் கொண்டிருந்தேன். அதே வேகத்துடன் அவள் வருவது தெரிந்தது. வண்டியில் உட்கார்ந்து திரும்பிப் பார்த்தேன். யாராவது பார்க்கிறார்களா என அவளும் திரும்பிப் பார்த்துவிட்டு ஓடிவந்து வண்டியில் ஏறினாள்.

முதல் முறையாக இரவு நேரத்தில் இன்னொருவன் மனைவியை அழைத்துப் போகிறேன். ஆம், அவள் ஓடி வந்து வண்டியில் ஏறியபோது தாலிச் சரடிலிருந்த தாலி அந்த இரவின் நிலவின் வெளிச்சத்தில் பளீரென ஒரு கணம் மின்னியது. இதே மின்னல் ஒளியை அம்மாவிடம் பார்த்திருக்கிறேன். அத்தையிடம் பார்த்திருக்கிறேன். தங்கையிடம் பார்த்திருக்கிறேன். இவர்களிடமிருந்து வராத அச்ச உணர்வு, இவளிடமிருந்து மட்டும் ஏன் வருகிறது? இவள் என் அம்மாயில்லையா? அத்தையில்லையா? தங்கையில்லையா? இவள் யார்? நான் ஏன் பயப்படுகிறேன். எதற்கு அழைத்துப் போகிறேன்? எங்கே அழைத்துப் போகிறேன்? என்ற கேள்விகளுக்கெல்லாம் பதில் கிடைக்க வண்டியை நிறுத்தி அவளிடம் கேட்டேன்,

“மேடம்.. நீங்க எங்கே போகணும்?..”

“நீங்க சரக்கு அடிக்கதானே சார் போறீங்க?”

“ஆமாம். உங்களுக்கு எப்படித் தெரியும்?”

“நீங்கள் வந்ததிலிருந்து உங்களைக் கவனித்துக் கொண்டிருந்தேன். நீங்கள் ஆசிரியரா?”

“இல்லை.”

“கட்சியில் ஏதாவது பெரிய பொறுப்பில் இருக்கீங்களா?”

“இல்லை. ஏன் இப்படி கேட்கிறீர்கள்? “

“நீங்க நல்லாப் பேசுனீங்க. உங்களைச் சுற்றிக் கூட்டம் இருந்து கொண்டேயிருந்தது. உங்கள் பேச்சு எனக்கொரு நம்பிக்கையைத் தந்தது. பார்த்தவுடன் ஏதோ ரொம்ப நாள் பழகியது போல ஒரு உணர்வு. அதனால்தான் உங்களுடன் வந்துவிட்டேன். உங்களுக்குத் தொந்தரவு இல்லாத ஓர் இடத்திற்கு என்னை அழைத்துப்போங்கள். உங்களிடம் பேச வேண்டும். உங்கள் உதவி எனக்கு தேவைப்படுகிறது. நீங்கள் என்னைத் தவறாக நினைத்துப் பார்க்க வேண்டாம். நான் அப்படியான பெண் இல்லை. அந்தச் சாவு வீட்டு பந்தலில் இருந்ததுபோல் இயல்பாக இருங்கள். அச்சப்படாதீர்கள்.” எனக் கூறினாள்.

இருவரும் கிளம்பினோம். போகும் வழி விவசாய நிலப்பகுதி. சாலையின் இருபுறமும் சாகுபடி செய்யப்பட்டிருந்தது. நிலவைப் பார்த்து இளம்பயிர் கதிர்கள் சிரித்துக் கொண்டிருந்தன. சாலையில் உள்ள மேடு பள்ளங்களைத் துல்லியமாக காட்டியது நிலா. இரண்டு கிலோ மீட்டர் தூரம் போனதும், ஒரு புங்க மரத்தின் கீழ் படுத்திருந்தத மதகைப் பார்த்து வண்டியை நிறுத்தினேன். அருகில் ஓடிக்கொண்டிருந்த மோட்டார் தண்ணீரில் முகத்தைக் கழுவிவிட்டு வந்து மதகில் அமர்ந்தாள். இப்பொழுதும் அவள் கண்களில் கவலை படர்ந்திருக்கிறது. கவலையைக் கழுவிவிட முடியுமா என்ன?.

“மேடம், உங்கள் பெயர் என்ன? இந்த ஊரில் உங்களைப் பார்த்ததில்லை.”

“என் பெயர் சத்தியா, நான் வெளியூர். எங்க அக்கா வீட்டிற்கு வந்து இரண்டு நாள் ஆகுது. உங்கள் பெயர் மாறன்தானே!”

“ஆமாம்.”

“உங்களுக்கு என்ன உதவி வேண்டும்?” எனக் கேட்டதும், அவள் கண்களில் படர்ந்த துயரங்கள் எல்லாம் கண்ணீராய் வடிந்தது. சிறிது நேரம் கழித்து அவள் பேச ஆரம்பித்தாள்.

“மாறா என் கணவனைக் கொலை செய்யணும், அதற்கு உன் உதவி வேண்டும்“

“சத்தியா.. ஏன் இப்படிப் பேசுகிறாய்? அப்படி அவர் என்ன செய்தார்? என்னைப் பார்த்தால் உனக்கு கொலைகாரன் போலத் தெரியுதா?

“மாறா மொதல்ல நீ சரக்கடி. அப்பொறம் சொல்றேன்.”

“எனக்கு இப்போ சரக்கு வேண்டாம்.”

“ஏன்? பயமாயிருக்கா?”

“ஆமாம், நீ பேசுவது பயமாகத்தான் இருக்கிறது.”

வண்டியில் இருந்த சரக்கை அவளே எடுத்து வந்து,

“மாறா எனக்கும் சரக்கு வேணும்.

“நீ குடிப்பியா சத்தியா?”

“ஏன் நான் குடிக்கக் கூடாதா? இன்னைக்குத்தான் குடிக்கப்போறன், அதும் உங்ககூட. “

“வேணாம் சத்தியா, குடி உடலுக்கு கேடு. “

“உனக்கு வர கேடு, எனக்கும் வரட்டுமே மாறா. எனக்கு கேடு வந்தால் உலகம் அழிஞ்சுடுமா என்ன?. நீ கொடுக்கலன்னா நானே குடிப்பேன் மாறா.”

இரண்டு கப்பிலும் “சிட்டிங்” அளவில் சரக்கை ஊற்றி தண்ணீர் கலந்து வைத்தேன். ஒரு கப்பை எடுத்து சியர்ஸ்னு சொல்லி ஒரே மடக்கில் குடித்துவிட்டு, என் தலையை முகர்ந்துகொண்டாள்.

“மாறா! பயப்படாதே குடி. நமக்கு தலைதான் சைடிஸ். நீ கூச்சப்படாமல் என் தலையை முகர்ந்துகொள். இதெல்லாம் நம்ம சினிமாவில் கத்துக்கிட்டதுதான். இவ்வளவு காலமா ஏன் எங்களுக்கு குடி மறுக்கப்பட்டிருக்கிறது? நாங்கள் குடிச்சா உங்கள மீறிவிடுவோம்னு பயமா மாறா?”

சரக்கு ரொம்ப மட்டரகமா இருந்தது. இத எப்படிதான் இவ குடிச்சாளோன்னு நினைச்சு, அவள் தலையை முகரப் போனேன். என் கைகள் நடுங்கியது. அவ்வளவு அற்புதமான வாசனை.

“சத்தியா உன் கணவனை ஏன் கொலை செய்யச் சொன்னாய்? “

“மாறா! நான் மட்டுமில்லை. இந்தியாவில் பிறந்த ஒவ்வொரு பெண்ணும் தன் கணவனை ஒரே ஒரு கணமாவது கொலை செய்ய நினைப்பவர்கள்தான். ஆனால், நான் தினமும் நினைக்கிறேன்“.

“ஏன் இப்படி நினைக்கிறாய் சத்தியா?”

“கட்டிங் சரக்க ஊத்து சொல்லுறேன் .”

குடித்துவிட்டு ஒருவருக்கு ஒருவர் தலையை மீண்டும் மீண்டும் முகர்ந்து கொண்டேயிருக்கும்போது திடிரென கேட்டாள்.

“மாறா. உனக்கு ஏன் கைகள் நடுங்குகிறது?”

“முதல் முறையாக ஒரு பெண்ணுடன் குடிக்கிறேன், அதுவும் இரவு நேரத்தில். உன் தலையை முகரும்போது என் கைகள் நடுங்குகிறது சத்தியா”.

“உனக்குத் திருமணம் ஆகிவிட்டதா? உன் வயது என்ன மாறா...?”

“இல்லை சத்தியா. வயது 38.”

“நல்லது. இப்படியே இருந்து விடு மாறா. குடும்பம் ஒரு சிறை. என்னைவிட இரண்டு வயது மூத்தவனா நீ. உன்னை வாட போடனு கூப்பிடலாமா மாறா?”

“ம்ம்ம்... கூப்பிட்டுக்கோ சத்தியா”

“மாறா! சரக்க ஊத்துடா.“

ஆப் சரக்கு காலி. எங்கள் இருவருக்கும் அமட்டல். வாந்தி வருவது போலவே இருந்தது. ஒருவருக்கு ஒருவர் முகத்தை தலையில் புதைத்துக் கொண்டோம்.

“மாறா, எதாவது சாப்பிட வேணும் பசிக்குதுடா.”

“சரி வா, வண்டில ஏறு சத்தியா.”

“எங்கடா போகணும்?”

“அதோ..! வெளிச்சம் தெரியுதா! அது வாத்துக்காரவங்க தங்கியிருக்கிற வீடு. அங்கே போவம் வா.”

வாத்துக்காரவங்களை எழுப்பி 200 ரூபாய் கொடுத்து 10 முட்டைகளை பொறிச்சி வாங்கிட்டு திரும்பவும் புங்க மரத்திற்கு வந்து குடிக்க ஆரம்பித்தோம். சத்தியாவிற்கு போதை ஏறிவிட்டது.

“மாறா, பதினைந்து வருசமா நரக வாழ்க்கை வாழுறேன். யார்கிட்டையும் சொல்லவும் முடியல. இனிமேல் பொருத்துக்க முடியாதுன்னு என் வீட்டுக்காரன் மேல காவல் நிலையத்தில் புகார் கொடுத்துட்டுதான் என் அக்கா வீட்டிற்கு வந்துவிட்டேன். அக்கா வீட்டுக்கு வந்தா, அக்கா புருசனும் படுக்க கூப்டான். அவனத் திட்டிட்டு, அக்காவ கூப்பிடதான் எழவு வீட்டுக்கு வந்தேன். உன்னப் பார்த்தேன். இப்ப குடிச்சிட்டு சந்தோசமா இருக்கேன். இந்த இரவு எவ்வளவு அழகாய் இருக்கிறது. நட்சத்திரங்கள் விளையாடுவதை கீரிப்பிள்ளை வேடிக்கைப் பார்க்கிறது. தவளைகள் பாடுகிறது. இதுபோல இரவை நான் பார்த்ததேயில்லை. நான் பார்த்த இரவு எல்லாம் துயரமான இரவுகள்தான். இந்த ஓர் இரவை நெஞ்சில் நிறுத்தி, இனி வரும் எல்லா இரவகளையும் எதிர்கொள்வேன் மாறா.”

“சத்தியா! உன் கணவன் மேல் ஏன் புகார் கொடுத்த?”

“அந்த சைக்கோ என்ன தினமும் படுக்கக் கூப்பிடுறாம். நானும் திருந்துவான் திருந்துவானு பார்த்தேன். அவன் திருந்தவே மாட்டான். அவன் ஒரு சைக்கோ மாறா. எனக்கு இரண்டு குழந்தைகள். பொண்ணு பத்தாவது. பையன் எட்டாவது. இரண்டுயும் சீக்கிரம் தூங்க சொல்லுவாம். அவன் பெட்ரூம்க்கு வருவதற்குள் நான் போய் நிர்வாணமாய் நிக்கணும். அப்படி நிக்கலனா அடிப்பான். ஒரு நாள் படுக்குலனா, பால் வாங்கக் கூட காசு தரமாட்டான். என்னையும் வேலைக்கு போக வேணாம்னு சொல்லிட்டான். தினமும் நீ படுக்கணும்டி. இதான் உம் வேலைனு சொல்லுவான். நான் B.Sc கெமிஸ்ட்ரி படிச்சது தினமும் படுக்கவும் அடிவாங்குவதற்கும்தானா? எத்தனையோ முறை செத்துடாலாம்னு நினைப்பேன். ஆனால் என் குழந்தைகளுக்காகவே நரக வாழ்க்கை வாழ்கிறேன். அவன் குடிக்க மாட்டான். அவனுக்கு நான்தான் சரக்கு. எல்லா இரவும் ஒரு செத்த பிணம் எண்னை புணரும். இன்று இரவுதான் நான் நிம்மதியாக இருக்கிறேன். சரக்க உத்து மாறா”.

“உனக்கு போத அதிகமாயிடுச்சு. சரக்கு வேண்டாம் சத்தியா”

அவளே சரக்கு எடுத்து ஊத்தினாள். இருவரும் குடித்தோம். வாத்து முட்டை தீர்ந்து விட்டது. மாற்றி மாற்றித் தலையை முகர்ந்து கொண்டோம். அவள் பேச ஆரம்பித்தாள்.

“மாறா, உங்களுக்குக் குடிக்கவும் தெரியாது, படுக்கவும் தெரியாது. உங்களுக்குத் தெரிஞ்சதெல்லாம் பொம்பளைங்களத் திருப்திப்படுத்த முடியாது, திருப்திப்படுத்த முடியாதுன்னு சொல்லதாண்டா தெரியும். இததாண்டா எழுதுறீங்க. படிக்கிறீங்க. எங்களத் திருப்திப்படுத்த ஒரே ஒரு சொல் போதும்டா. அந்தச் சொல் உங்களிடம் ஒருபோதும் இருப்பதில்லை. உங்கள் வசம் இருப்பதெல்லாம் பிழையான சொற்கள்தாண்டா.

“சத்தியா! நீ பேசுவதெல்லாம் ஆச்சரியமா இருக்கு. எங்க... நீ இப்போ ஒரே ஒரு பிழையான சொல்லைச் சொல்லு பார்ப்போம்.

“உடலுறவு. வெறும் உடலை மட்டுமே மையப்படுத்தும் “உடலுறவு” என்ற சொல்லே பிழையானதுதானே. உடலுறவு என்பது வெறும் உடல் சம்பந்தப்பட்டதுதானா? சிறிதும் மனத்திற்குத் தொடர்பு இல்லையா?”

பேசிக்கொண்டேயிருந்தாள். நான் கேட்டுக் கொண்டேயிருந்தேன். எப்பொழுது தூங்கினோம் என்று தெரியவில்லை. கொண்டாட்டச் சாவிற்கான அடி காதில் கேட்டு விழித்துப் பார்த்தேன். மணி காலை 4.30. ஒரு குழந்தையைப்போல் என் நெஞ்சில் தலை வைத்துத் தூங்கிக் கொண்டிருந்தாள். அவளின் கூந்தல் என் முகத்தில் பரவிக்கிடந்து. நான் ஆதூரமாக வருடத் துவங்கினேன்.

- நீலன்

Pin It