“சனாதனச் சேற்றை விட்டு நம் மக்கள் இன்னமும் வெளியேறாதது மட்டுமல்ல. பலருக்கு இன்றும் அந்தச் சேறு சந்தனமாக தெரிகிறதே, அதை எண்ணும்போது தான் துக்கம் மட்டுமல்ல, வெட்கமும் நமக்கு உண்டாகிறது” – அறிஞர் அண்ணாவின் சனாதனம் குறித்தான பார்வை இன்றளவும் பொருந்துகிறது. இந்த சேற்றை பூசிக் கொண்டு அலையும் ஆர்.எஸ்.எஸ்., இந்துத்துவ கும்பல்களின் நச்சுக் கருத்துக்களுக்கு பலரும் இரையாவதும் தொடர்கிறது.

இந்திய மக்களை பிராமணன், சத்திரியன், வைசியன், சூத்திரன் என நான்கு வர்ணப் பிரிவுகளாகப் பிரித்து, பிறப்பால் ஏற்றத்தாழ்வை புகுத்தியது சனாதனம். அதனை ஒழிக்க வேண்டும் என சமீபத்தில் பேசிய அமைச்சர் உதயநிதியின் மீது வடநாட்டு ரவுடி சாமியார்கள் கொலைமிரட்டல் விடுவதும், இனப்படுகொலை செய்வதாகப் பேசினார் எனப் பொய்யாக வட ஊடகங்கள வன்மத்தைப் பரப்புவதும் தொடர்கிறது.

“ஆபத்தான நேரத்தில் அடங்கியது போல் பாசாங்கு செய்யும். ஆனால் சனாதன சோமரசம் பருகியதும் மீண்டும் தலைகால் தெரியாது வருணாசிரம வெறியாட்டம் ஆடும். இது பார்ப்பனியத்தின் இயல்பு. இந்த இயல்பை யாராலும் மாற்ற முடியாது.” அண்ணாவின் தெளிவான கூற்றுக்கேற்ப, இந்த சோமரசம் பருகிய பார்ப்பனியம்தான் இப்பொழுதும் ஆட்டம் போடுகிறது. ஊற்றிக் கொடுத்த ஆசாமிகளும் ஆட்டம் போடுகின்றனர்.annadurai 339சனாதனம் என்பதற்கு நிலையானது, மாறாதது என பார்ப்பனர்கள் விளக்கம் கொடுத்து வருகிறார்கள். இவ்வுலகில் மாற்றங்கள் என்பது வளர்ச்சியின் போக்கில் தொடர்ந்து நிகழும் என்பதே அறிவியல். இதனை மறுக்கும் சனாதனவாதிகள் விஞ்ஞானத்திற்கு முற்றிலும் எதிரானவர்கள் என்பதை அண்ணாவே இடித்துக் காட்டுகிறார்.

“மின்சார விளக்குகள் தேவையில்லை – பழைய குத்து விளக்கு தான் இருக்க வேண்டும். விமானம் பறக்கக் கூடாது – கருடன் தான் பறக்க வேண்டும், ரயில் வண்டி கூடாது – கட்டைவண்டி தான் சிறந்தது, தீப்பெட்டி தேவையில்லை – சிக்கி முக்கிகள் தான் தேவை துப்பாக்கியா வேண்டாம் – வேலும் வில்லும் போதும், மாளிகைகள் தேவையில்லை – பர்ணகசாலை தான் வேண்டும் என்று யாரும் பேசுவதில்லை” – என்று விஞ்ஞான மாற்றங்களை பட்டியலிடுகிறார். மாற்றமே மானுடத் தத்துவம் என்பதை நிறுவுகிறார்.

“வைதீக தம்பி, இங்கே வா, விஞ்ஞானியின் அறிவு கண்டுபிடித்து கொடுத்த கிராமபோனிலே உள்ள பழைய பஜனை பாட்டை பாட வைத்து மகிழ்கிறாயே! மகிழலாமா, யோசித்துப் பார். கோபப்படாதே! உண்மை, அப்படித்தான் கொஞ்சம் நெஞ்சை உறுத்தும்.” என தனக்கே உரிய நகைச்சுவை தொனியில் பார்ப்பனத் தம்பிகளுக்கு அறிவுரையும் சொல்கிறார் அண்ணா. அந்த வைதீகத் தம்பிகள் விஞ்ஞான மாற்றம் தந்த கருவிகளின் பயனை அனுபவித்துக் கொண்டே, அதன் மூலமே அடுத்தவரின் பகுத்தறிவைக் கெடுக்கும் வழிகளையே இன்றும் செய்து கொண்டிருக்கிறார்கள்.

ஆரியத்தின் கோட்பாடான சனாதனம் விஞ்ஞானத்திற்கு நேர்மாறானது போல, சனாதன உற்பத்தியாளர்களான ஆரியர்கள் வஞ்சகத்திற்கு இணையானவர்கள் என்பதை அண்ணா, “பகைவரை அடுத்துக் கெடுத்ததன்றிப் போரிட்டு அடக்கிய வரலாறு ஆரியருக்குக் கிடையாது. மாற்றாரைப் போரிட்டு அடக்கியதன்றி அடுத்துக் கெடுத்த வரலாறு திராவிடருக்குக் கிடையாது” என்று நாம் போர் அறம் உடையவர்கள் என்பதையும், ஆரியம் சனாதனத் தந்திரத்தை பயன்படுத்தியே வெல்லும் என்பதையும் வரலாற்றுப்பூர்வமாக வெளிச்சமிட்டுக் காட்டுகிறார்.

ஆரிய மாயையை அடுக்கி, ஆப் டியுபா என்கிற ஆங்கிலேய அறிஞர் பார்ப்பனர்களைப் பற்றிக் கூறிய சொற்களையே கவிதையாக்கித் தந்தார் அண்ணா.

“பேராசைப் பெருந்தகையே போற்றி
பேச நா இரண்டுடையாய் போற்றி
….
சிண்டு முடிந்திடுவோய் போற்றி
சிரித்திடு நரியே போற்றி
….
எம் இனம் கெடுத்தோய் போற்றி
ஈடில்லாக் கேடே போற்றி”

– ஆரிய சனாதனவாதிகளின் நரித்தந்திரத்தை கவிதைகளாக வடித்தார்.

இந்த ஆரியத்தின் கண்டுபிடிப்பே வர்ணாசிரமம். இராமாயணம் மகாபாரதம் போன்ற புராணப் புளுகுகள் கலைகளின் வழியாக எளிதில் மக்களிடையே வர்ணாசிரமத்தை ஊன்றி விட்டன. அதையே அண்ணா, “கலை எனும் அருவியோரத்திலே, ஆரிய நாரைகள் அமர்ந்துள்ளன. அருவியோரத்து நாரையின் நினைப்புத் துள்ளிக் குதித்திடும் மீனினத்தின் மீது! ஆரிய நாரைகளுக்கோ கலையருவியில் குளித்து இன்புற வேண்டி வரும் தமிழரைக் கொத்தித் தின்பதென்றி வேறில்லை” – எனத் தமிழர்கள் ஆரிய ஆதிக்கத்தில் கலை ஊடாக சிக்கியதை போட்டுடைக்கிறார். கரையோரத்து நாரைகள் கூட ஓயலாம், ஆனால் ஆரிய நாரைகள் ஓய்வதுமில்லை, தமிழர்களை பழைமை முன்பு கூத்தாட வைப்பதில் இருந்து விலகவுமில்லை.

“ஆரியராவது! திராவிடராவது! எப்பொழுதோ எழுதி வைத்த பழைய சரித்திரத்தை பேசுவதற்கு இது காலமா? இரு சமூகமும் எவ்வளவோ ஆண்டுகளுக்கு முன் ஒன்றாக கலந்து விட்டன. இனப்பிரிவை உயிர்ப்பிக்க முனைவது நாட்டுக்கு நலமன்று என ஒரு சாரார் கூறிக்கொண்டே இருக்கின்றனர். எவ்வளவு விளக்கினாலும் அவர்கள் மரமண்டையில் உண்மை குடி போவதே இல்லை, ஆயினும் அடி மேல் அடி வைத்தால் அம்மியும் நகரும் எனக் கருதி, சென்னை நீதிமன்ற நீதிபதிகள் 1941-ல் கொடுத்த தீர்ப்பை எடுத்துக் காட்டுகிறோம்” – என அண்ணா மனுதர்மப் பிரிவுகளையும், அதன்படி அமைந்த தீர்ப்பையும் விளக்குகிறார்.

“பிராமணனால் சூத்திரப் பெண்ணுக்கு பிள்ளை பிறந்தால் அவனுக்குத் தந்தையின் சொத்தில் உரிமையில்லை என்கிறது மனுதர்மம்”. பார்ப்பனர் உருவாக்கிய சாஸ்திரத்தின் மேல் இந்து சட்டம் கட்டப்பட்டிருந்தது என்பதற்கு ஒரு 1941-ல் நடந்த வழக்கை எடுத்து கையாள்கிறார் அண்ணா.

 வக்கீலாக இருந்த ஜானகிராமமூர்த்தி என்னும் பார்ப்பனருக்கு இரண்டு மனைவிகள். முதல் மனைவி பார்ப்பனப் பெண். இரண்டாம் மனைவி திராவிட (சூத்திர) பெண். அவர் இறந்து விடுகிறார். அதனால் இரண்டாவது மனைவி, தன் இரண்டு குழந்தைகளுக்கும், தனக்கும் ஜீவனாம்சம் கொடுக்குமாறு முதல் மனைவி மீது வழக்குத் தொடர்ந்தார். மாவட்ட நீதிபதி சூத்திர மனைவிக்கு ரூ 20 ஜீவனாம்சம் கொடுக்கவும் தீர்ப்பளிக்கிறார். முதல் மனைவி அத்தீர்ப்பை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கிறார். பார்ப்பன நீதிபதிகள் விசாரித்து இந்தத் திருமணம் செல்லாது என மனுதர்மப்படி தீர்ப்பு கூறுகின்றனர்.

“பிராமணனால் சூத்திரப் பெண்ணிடத்தில் பிள்ளை பிறந்தால், அவனுக்குத் தந்தையின் சொத்தில் உரிமையில்லை” என்பது மனுதர்ம சாஸ்திரம். இந்த மனுசாஸ்திரத்தின் மேல் கட்டப்பட்டதே அப்போதைய நீதியாக இருந்தது என்பதை சுட்டிக் காட்டுகின்றார்.

“பிராமணனுக்குச் சூத்திர மனைவியிடத்தில் பிறந்துள்ள புத்திரன் செய்யும் சிரார்த்தமானது பரலோக உபயோகம் ஆகாததால், அந்த பிள்ளை உயிரோடிந்தாலும் பிணத்திற்கு ஒப்பாவான்” இதனால் தந்தையின் கருமத்தில் சூத்திர மகனால் பங்கு பெற இயலாது. அதனால் அவனால் சொத்து பெற இயலாது. நான்கு பிரிவுகளிலே பெண்களையும் சேர்க்காததால் பெண்களினமும் சொத்து பெற முடியாத நிலையை விளக்கிக் கூறுகிறார் அண்ணா. நம் பெண் சமூகம் சொத்துரிமையின்றி அடிமைப்பட்டுக் கிடந்ததற்குக் காரணம் ஆரியக் கொடுமையே என்பதை அடிக்கோடிட்டுக் காட்டுகிறார் அண்ணா.

மனுதர்மம் நிகழ்த்திய அநீதியை இன்னொரு வழக்கின் மூலமாகவும் சுட்டிக் காட்டுகிறார். ஒரு திராவிட (சூத்திரர்) ஆணை ஒரு சூத்திரப் பெண் மூன்று மாதக் கருவை சுமக்கும் போதே ஏமாற்றி மணந்து கொள்கிறார். பிறகு உண்மை தெரிந்ததும் விவாக விடுதலைக்கு அந்த ஆண் வழக்கு தொடுக்கிறார். ஆனால் நீதிபதி, ஒரு சூத்திரர் விபச்சாரக் குற்றம் கற்பித்து மனைவியை விலக்க உரிமை இல்லை என்று தீர்ப்பளித்து விடுகிறார். இவ்வாறு சூத்திரனுக்கு ஒரு நீதி, பார்ப்பனனுக்கு ஒரு நீதி என்பதையே மனுதர்மம் நிலைநாட்டி வைத்திருந்ததை, அண்ணா இரண்டு வழக்குகளின் ஊடாகவும் நிரூபிக்கிறார்.

அம்பேத்கர் இந்திய அரசியல் சாசனச் சட்டம் கொண்டு வரும் வரை இந்து சட்டம் என்பது ஒரு குலத்துக்கு ஒரு நீதியாகவே இருந்தது என்பதை அண்ணா உரைத்த இரண்டு வழக்குகளும், மனுதர்மப்படியான தீர்ப்புகளின் வாயிலாகவே அறியலாம்.

“விளைநிலத்துக் களை போல தமிழகத்திலே தோன்றி, வீறு கொண்டோரை விம்மிடச் செய்து விட்டதும் ஆரியமே! தோள்தட்டி, மார்தட்டி வாழ்ந்த மறத் தமிழனை, இன்று வயிறு ஒட்டி கன்னத்தே குழிதட்டிப் பட்டியில் வாழும் பாமரனாக்கியதும் ஆரியமே! அபினைக் கொடுத்து உடலைக் கெடுத்து, பின்னர் அந்த அபின் கிடைக்காவிட்டால் எதைக் கொடுத்தேனும் அந்த அபினை பெற்றேத் தீர வேண்டிய கேவலமான நிலைக்கு கொண்டு வரப்பட்டவர்கள் போல ஆரியம் பையப் பையத் தன் நஞ்சினை ஊட்டி தமிழனை செயலற்றவனாகி விட்டது! – ஆரியத்தால் சீரழிந்த தமிழர் நிலையினை வருத்தமுற வடித்தவர் அண்ணா.

“சேரி கூடாது; அக்கிரகாரமும் கூடாது; பள்ளுப்பறை என்னும் பழமொழி கூடாது; பார்ப்பனர் என்னும் பாதக மொழியும் கூடாது; இதைத் தானே கூறுகிறது திராவிடர் இயக்கம். கூறக் கூடாதா? கூறுவது குற்றமா?” – திராவிட இயக்கங்களின் சமத்துவப் பார்வையில் தமிழர்கள் எழுந்தனர். ஆரியம் வகுத்த ஏற்றத்தாழ்வான சனாதனக் கொள்கையால் தமிழர்கள் சாதியாலும், வர்க்கங்களிலும் பிளவுபட்டனர் என்பதை அண்ணாவின் இந்தக் கூற்றுக்களிலே அறியலாம்.

அண்ணா ஆரியப் பார்ப்பனியத்தின் புராணப் புளுகல்களை கிழித்து தொங்க விட்டவர். சனாதனத்தையும், வர்ணாசிரமத்தையும் அடித்துத் துவைத்தவர். தமிழர் செம்மாந்து வாழ்ந்த வாழ்வு எவ்விதம் குன்றியது என்பதை எளியவர்களும் அறியும் வகையில் கலை, இலக்கியம், நாடகம், கட்டுரை, நாவல், சிறுகதை, கவிதை ஊடாக எடுத்துரைத்தவர். அண்ணாவின் ஒவ்வொரு எழுத்துக்களும் பகுத்தறிவைப் பேசியது. ஒவ்வொரு சொற்றொடரும் தமிழர்களின் மீட்சியையே விரும்பியது. ஈராயிரமாண்டு ஆரியக் குணத்தை அப்பட்டமாய் தோலுரித்தது.

பகுத்தறிவுப் பகலவன் பெரியாரின் மாணவராக தமிழ் சமூகத்திற்கு பகுத்தறிவு வெளிச்சம் பரப்பியவர் நம் அண்ணா. காஞ்சிப் புத்தனாக பார்ப்பனியத்தின் சனாதனக் கொடுமைகளை எதிர்த்து சமர் புரிந்தவர். தமிழிலக்கியப் படைப்பாளியாக சங்ககாலத் தமிழர்களின் பெருமைகளை அள்ளித் தெளித்தவர்.

பார்ப்பனர்களின் சனாதனக் கூடாரங்கள் பெரியாரை இகழ்வதும், அண்ணாவைத் தூற்றுவதும் தமிழர்களுக்கான விழிப்புணர்வு கேடயங்களாக இவர்கள் விளங்கினர் என்பதனால்தான். அண்ணாவின் எழுத்துக்களே சனாதன சங்கிகளின் கழுத்தைப் பிடிக்கும் கருவி. அண்ணாவின் ஆற்றல் அளவிட முடியாதது. தமிழர்களுக்கு வழங்கிய அறிவாற்றல் கொட்டிக் கிடக்கிறது. அறிவாயுதப் பெட்டகமான அண்ணாவைப் போற்றுவோம். பார்ப்பனியம் காலத்திற்கேற்ப விரிக்கும் வஞ்சக வலையிலிருந்து தப்பிக்க அண்ணாவை வாசிப்போம்.

சனாதனத்தை வாழ்வியல் முறையென பரப்பி விட்டு தங்கள் பணபலத்தை செழுமைப்படுத்திய வடநாட்டு முதலாளிகள் பற்றிய அண்ணாவின் பணத்தோட்டம் என்பது பல பொருளாதார அறிஞர்களே சொல்லத் திணறுகிற விஷயங்களை பாமரர்களுக்கும் புரியும் படியான எளிமையாக சொன்ன நூல்.

போரின் பொழுது உருவான பணப்பெருக்கத்தினால் தங்களின் “பொருளாதாரப் போருக்கு புதிய பாசறை” அமைத்துக் கொள்ள வங்கிகளை வடநாட்டவர் உருவாக்கிக் கொண்டதை புள்ளி விவரத்துடன் எடுத்துக் கூறி, கருப்பண்ணனுக்கு கிடைக்காத வாய்ப்பு கரம்சந்த்துக்கு எப்படி கிடைத்தது என்கிற கேள்வியை எழுப்பும் அந்நூலை வாசிப்போம். சனாதனக் கூட்டணிகளான பார்ப்பனிய – பனியா கூட்டம் பொருளாதாக ரீதியாக நம்மை சுரண்டியதை அறிவோம்.

“திராவிடம் தனி அரசு ஆனால் தொழில் துறையிலும் பொருளாதாரத் துறையிலும் வட நாட்டார் ஆதிக்கம் செலுத்த முடியாதபடி சட்டரீதியான ஏற்பாட்டைச் செய்து கொள்ள முடியும்” என்ற அவரின் இலக்கான திராவிட நாடு திராவிடருக்கே என்னும் முழக்கம் இன்னும் முடியவில்லை. மொழி வழி மாகாணமாகப் பிரிந்து இன்னும் கூர்மையாக தமிழ்நாடு தமிழருக்கே என்னும் முழக்கமாக நம் கையில் கிடைத்ததன் காரணங்களை வாசிப்போம். சனாதனம் அரசியலாக நம்மை சுரண்டியதையும் அறிவோம்.

- மே பதினேழு இயக்கம்

Pin It