சில ஆண்டுகளாக கோவை ஈச மைய நிறுவனர் ஜக்கி வாசுதேவ், பா.ச.க.வின் தமிழ்நாட்டு மாநிலத் தலைவர் அண்ணாமலை ஆகியோர் இந்து அறநிலையத் துறை கோவில்களை நிர்வகிப்பதை விட்டு வெளியேற வேண்டும் என்று பேசி வருகின்றனர். தெலங்கானா மாநிலத்திற்கு அக்டோபர் மாதம் தேர்தல் பரப்புரைக்கு வந்திருந்த இந்திய அரசின் தலைமை அமைச்சர் நரேந்திர மோடி, தமிழ்நாடு அரசு இந்துக் கோவில்களை ஆக்கிரமித்துள்ளது என்று பேசினார். தற்போது நவம்பர் 2இல் இந்திய அரசின் நிதி அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் தமிழ்நாட்டு அரசு கோவில் பணத்தைக் கொள்ளை அடிக்கிறது என்று பேசினார். இவர்கள் வேண்டுமென்றே தமிழ்நாட்டு அரசின்மீது வீண்பழி சுமத்துகின்றனர்; இந்து அறநிலையத் துறை ஏற்படுத்தப்பட்டதே கோவில்கள் மடங்களின் சொத்துக்களைப் பாதுகாப்பதற்கேயாகும்.

சங்க காலத்தில் தமிழ்நாட்டில் பெரிய கோயில்கள் எதுவும் இல்லை. பல்லவர் ஆட்சிக் காலத்தில்தான் கற்கோயில்கள் கட்டப்பட்டன. பல்லவ அரசர்களால் கோயில்களுக்கு நிலங்கள் பெருமளவில் கொடையாக அளிக்கப்பட்டன. பார்ப்பனர்களுக்கும் நிலக்கொடை வழங்கப்பட்டது.

பிற்காலச் சோழர்கள் ஆட்சியில் பெரிய, பெரிய கோயில்கள் கட்டப்பட்டன. கோயில்களுக்குப் பெருமளவில் நிலங்களும் பொன்னும் பொருளும் கொடையாக அளிக்கப்பட்டன. பிரமதேயம், சதுர்வேதி மங்கலம் என்ற பெயர்களில் பார்ப்பனர்களுக்கு நிலங்கள் வழங்கப்பட்டன. கோயில்கள் மன்னராட்சிக் காலத்தில் அரசர்களின் நேரடிக் கட்டுப்பாட்டில் இருந்தன.

பார்ப்பனப் பூசாரிகள் கோயில் நகைகளைத் திருடுவது சோழர் ஆட்சிக் காலத்திலேயே இருந்தது என்பதைக் கல்வெட்டுச் சான்றுகளின் மூலம் பிற்காலச் சோழர் வரலாறு எனும் நூலில் சதாசிவப் பண்டாரத்தார் குறிப்பிட்டுள்ளார். கும்பகோணத்திற்கு அண்மையிலுள்ள சிவபுரத்தில் கி.பி.1239-இல் எழுதப்பட்டுள்ள கல்வெட்டொன்று அவ்வூர் கோயிலைச் சேர்ந்த இரண்டு சிவப்பிராமணர்கள் சிவப்புரத்தெழுந்தருளியுள்ள இறைவியின் அணிகலன்களை கவர்ந்து தம் காதற் பரத்தைக்குக் கொடுத்தும், தம்மிடம் அளிக்கப்பட்டிருந்த கோயிற்குரிய நிவந்தப் பொருளை வேறு வகையில் செலவிட்டும் வந்ததை கண்டுபிடித்து, மகேச்சுவரராலும் ஊர் சபையினராலும் தண்டிக்கப்பட்டனர். (Ins 287 of 1927; Annual Report on South Indian Epigraphy for 1927, Part II, Para 30) (பிற்காலச் சோழர் வரலாறு சதாசிவப் பண்டாரத்தார், பக்கம் 431, தமிழ்க் குடிஅரசுப் பதிப்பகம்).tamilnadu templeஇதன்மூலம் தமிழ்நாட்டில் கோயில்களில் திருடுவது, கோயில் சொத்துகளை அரசனுக்குத் தெரியாமல் விற்பது போன்ற செயல்கள் ஆயிரம் ஆண்டு காலமாக நடந்து வந்தது தெரிய வருகிறது. பிற்கால மன்னராட்சிக் காலங்களிலும் இதே நிலைதான் நீடித்து வந்தது. கிழக்கிந்திய வணிகக் குழுமத்தின் ஆட்சி ஏற்பட்ட பிறகு கோவில் சொத்துகள் கொள்ளைப் போவதை தடுப்பதற்கு சில சட்டங்களை இயற்றினர்.

1795இல் செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியராக இருந்த லெயன்ஸ் ப்ளேஸ் என்பவர் காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோவிலுக்கு சில வைரம், பொன் நகைகளை காணிக்கையாக அளித்தார். சில மாதங்கள் கழித்து அவர் சென்று பார்த்த போது அவர் அளித்த நகைகள் அங்கு இல்லை. எனவே கோவில்களில் மிகப்பெரும் ஊழல்கள் நடக்கின்றன. கோவில் நிர்வாகத்தை அரசின் கட்டுப்பாட்டின்கீழ் கொண்டு வர வேண்டும் என்று கிழக்கிந்திய வணிக குழும நிர்வாகத்திற்குக் கடிதம் எழுதினார். வேறு சில மாவட்ட ஆட்சியர்களும் கடிதம் எழுதியுள்ளனர். அதன் அடிப்படையில் 1817ஆம் ஆண்டு கோயில் நிர்வாகத்தை வருவாய்த் துறையின்கீழ் கொண்டு வந்தனர். சென்னை மாகாணத்தில் 8292 கோயில்கள் கிழக்கிந்திய வணிகக் குழும நிர்வாகத்தின் (அரசின்) நேரடி கட்டுப்பாட்டிற்குள் வந்தன.

1858இல் பிரித்தானியரின் கிழக்கிந்திய வணிகக் குழுமத்தின் ஆட்சி முடிவுற்றது. ஆங்கில அரசின் நேரடி ஆட்சி இந்தியாவில் ஏற்படுத்தப்பட்டது. அதன்பிறகு பிரிட்டிஷ் அரசும் 1863இல் கோயில்களை அரசின் கட்டுப்பாட்டில் கொண்டு வந்தது. புதிய இந்துமத அறநிலையச் சட்டத்திலும் பல ஓட்டைகள் இருந்தன. கோயில் சொத்துகள் கொள்ளை போவது தொடர்கதையாகவே இருந்து வந்தது.

பெரியார் அவர்கள் காங்கிரசுக் கட்சியில் இருந்த போது 1915ஆம் ஆண்டு சூலை மாதம் 24, 25 நாள்களில் டாக்டர் டி.எம்.நாயர் தலைமையில் காங்கிரசு கட்சியின் கோயம்புத்தூர் மாவட்ட இரண்டாவது மாநாடு ஈரோட்டில் நடைபெற்றது. பெரியார் வரவேற்புக் குழுத் தலைவராகப் பணியாற்றினார். அந்த மாநாட்டில் 2ஆவது தீர்மானமாகக் கீழ்க்கண்ட தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

“தர்ம ஸ்தாபனங்கள் மத சம்பந்தமான தேவாலயங்கள் சரிவர பரிபாலனம் செய்யப்படாததால் கிராமமாய் நடக்கும் வண்ணம் இப்போதிருக்கிற சட்டத்தைக் கொஞ்சமேனும் தாமதிக்காமல் சீர்திருத்தம் செய்து மாற்றிட வேண்டுமென்று கவர்ன்மெண்ட்டாரை இம் மாநாடு வற்புறுத்துகிறது” (இந்தத் தீர்மானத்தை ஸ்ரீமான் B.V. நரசிம்மய்யர்தான் முன்மொழிந்திருக்கிறார் என்பது நமது ஞாபகம்." -பெரியார் ஈ.வெ.ரா. (குடிஅரசு 22.11.1925).

அதன்பிறகு நீதிக்கட்சி என்னும் தென்னிந்தியர் நல உரிமைச் சங்கம் 1916 திசம்பர் 20ஆம் நாள் தொடங்கப்பட்டது. முதல் பார்ப்பனரல்லாதார் மாநாடு 19, 20.08.1917 நாள்களில் கோயம்புத்தூரில் நடைபெற்றது. அம்மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட 5ஆவது தீர்மானம் வருமாறு :

சமஸ்கிருதப் பள்ளிகளை உருவாக்க சத்திரம் மற்றும் இதர அறக்கட்டளை நிதிகளைப் பயன்படுத்துவதற்கு இந்த மாநாடு எதிர்ப்புத் தெரிவிக்கிறது. எங்கெல்லாம் இயலுமோ, அங்கெங்கெல்லாம் இந்த நிதிகளைக் கொண்டு தொடக்கப் பள்ளிகளை உருவாக்க வேண்டும் என்று அரசுக்கும் அறக்கட்டளைகளின் அறங்காவலர்களுக்கும் இந்த மாநாடு பரிந்துரைக்கின்றது.

சமஸ்கிருதப் பள்ளிகளால் பார்ப்பனர் சமுதாயம் மட்டுமே பயனடைகிறது என்பதை மருத்துவர் டி.எம். நாயர் சுட்டிக்காட்டினார். “திருப்பதி மடத்தின் கணக்குகளை எவரேனும் பரிசீலித்துப் பார்த்தால் அதற்குக் கிடைத்த நிதியில் 99.5 விழுக்காடு பார்ப்பனரல்லாத மக்களிடமிருந்தே வந்திருக்கிறது. அந்தப் பணத்தைக் கொண்டு பார்ப்பனர்களுக்கான சமஸ்கிருதப் பள்ளிகளை மட்டுமே தொடங்கியுள்ளனர். இது மிகவும் கண்டிக்கத்தக்கது” என்றும் டி.எம். நாயர் பேசினார்.

1917 திசம்பர் 28, 29 நாள்களில் நீதிக் கட்சியின் முதல் மாகாண மாநாடு சென்னையில் நடைபெற்றது. அதில் உரையாற்றிய வெங்கிடகிரி ராசா மத அறக்கட்டளைகள் தொடர்பான ஒரே வழக்கில் எட்டு இலட்சம் ரூபாய் வழக்குரைஞர் கட்டணமாகப் பார்ப்பனருக்குக் கொடுக்கப்பட்டதைச் சுட்டிக்காட்டினார். பார்ப்பனரல்லாதாருடைய சொத்துகளைப் பார்ப்பனர்கள் கொள்ளையடிப்பதை தடுக்க வேண்டும் என்றும் கூறினார்.

தென்னிந்தியர் நல உரிமைச் சங்கம் மாண்டேகு­ செம்ஸ்போர்டு சட்டத் திட்டத்தின்படி இரட்டை ஆட்சி முறையை ஏற்றுக்கொண்டு 1920இல் நடைபெற்ற தேர்தலில் வெற்றி பெற்று, 20.12.1920 அன்று சென்னை மாகாணத்தில் ஆட்சி அமைத்தது. தங்கள் கொள்கைகளைப் பார்ப்பனரல்லாதார் நலன் கருதி ஒவ்வொன்றாக நிறைவேற்றும் வகையில் வகுப்புரிமை ஆணைகள், கல்லூரி மாணவர் சேர்க்கைக் குழு என்று ஒவ்வொன்றாக நடைமுறைப்படுத்தினர்.

1922 ஆம் ஆண்டு திசம்பர் 18ஆம் நாள் இந்துமத அறநிலையச் சட்டத்தை அப்போதைய முதலமைச்சர் பனகல் அரசர் முன்மொழிந்தார். அதை சட்டமன்றத்தில் 22.12.2022 அன்று ஆதரித்துப் பேசிய திராவிடர் சங்கத்தை தோற்றுவித்த மருத்துவர் நடேசனார் தம் உரையில், “கோவில் குளங்கள் என்ற பெயரால் பெரும் பணத்தைக் கொட்டிக் கொடுத்து அவைகளின் வருவாயை ஒரு சமுதாயத்தின் உற்றாரும், சுற்றத்தினரும் அனுபவித்து வரும்படி நம் முன்னோர்கள் விட்டுவிட்டனர். இப்படி விடப்பட்ட சொத்துச் சுதந்தரங்களுக்கு அவர்களே உரிமையும் கொண்டாடிக் கொள்ளவும் ஆகிவிட்டது, செத்துப் போய்விட்ட மொழியான சமஸ்கிருத மொழியின் வளர்ச்சிக்கு தர்ம ஸ்தாபனங்களின் சொத்து தண்ணீரெனச் செலவழிக்கப்பட்டது, அன்றும், இன்றும், என்றும் இயங்கி, இயங்குகிற, இயங்கும் கலைச் செல்வமாம் தமிழ் இலக்கியங்களைப் படுபாதாளத்தில் புதைத்தனர். ஆனால் இப்போது காலம் மாறிவிட்டது. நமது மாண்புமிக்க முதல் அமைச்சர் பனகல் அரசர் துணிந்து இம்மசோதாவைக் கொண்டு வந்துள்ளார். அறநிலையங்களைச் சீர்திருத்தம் செய்வதோடு மட்டுமின்றி, அறநிலையச் சொத்துக்கள் யாவும் எல்லா மக்களுக்கும் கல்வி புகட்டுவதற்காகவும், சுகாதார வசதி செய்து கொடுப்பதற்காகவும், மருத்துவ விடுதி, பிரசவ விடுதி, குழந்தைப் பாதுகாப்பு விடுதி ஆகிய நற்காரியங்கள் காண்பதற்காகவும், இம்மசோதாவைக் கொண்டு வந்துள்ளார். இப்படிப்பட்ட உபயோகமுள்ள காரியங்களைச் செய்வதற்கென இம்மசோதாவை கொண்டு வந்துள்ள முதல் மந்திரியை நாம் யாவரும் பாராட்ட வேண்டும்” என்று பேசினார்.

பனகல் அரசரின் இந்த மசோதா அவ்வளவு எளிதில் நிறைவேறிவிடவில்லை. நீண்ட விவாதங்கள், பல திருத்தங்கள், சட்டமன்றத்திற்கு வெளியேயும் எதிர்ப்புகள் என எல்லாவற்றையும் மீறி 1923இல் நிறைவேற்றப்பட்டது. ஆளுநர் மாளிகையிலும், வைசிராய் மாளிகையிலும் பணியாற்றியப் பார்ப்பனர்கள் வைசிராய் இதில் கையொப்பமிடாமல் பார்த்துக் கொண்டனர்.

அப்போதெல்லாம் மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை தேர்தல் நடக்கும். 1924-இல் நீதிகட்சி வெற்றி பெற்று பனகல் முதலமைச்சரானார். 1924 ஏப்ரலில் இந்து அறநிலைய மசோதாவை மீண்டும் சட்டமன்றத்தில் அறிமுகப்படுத்தினார். இம்முறை சுயராச்சிய கட்சியின் தலைவரான எஸ். சத்தியமூர்த்தி அய்யர் சட்டமன்ற உறுப்பினராக இருந்தார். அவர் மத விவகாரங்களில் அரசு தலையிடக்கூடாது எனக் கடுமையாகப் பேசினார். அவர் ஒருவர் மட்டுமே 475 திருத்தங்களைக் கொடுத்தார். மிக நெடிய விவாதத்திற்கு பிறகுதான் சட்டமன்றத் தில் இச்சட்டம் நிறைவேறியது.

இந்தச் சட்டம் சட்டமன்றத்தில் விவாதத்தில் இருந்த போது பார்ப்பனர்களின் சூழ்ச்சிகளைக் கண்டித்து பொரியார் தமது குடிஅரசு ஏட்டில் கீழ்க்காணும் தலைப்புகளில் கட்டுரைகள் எழுதி பனகல் அரசருக்கு மக்கள் ஆதரவைத் திரட்டினார்.

1. தேவஸ்தான மசோதா 22.11.1925.

2. இந்து தேவஸ்தான சட்டம் 7.3.1926.

3. மதமும் மத தர்ம பரிபாலனமும் சென்னை சட்டமும் அதன் விரோதிகளும் 30.5.1926.

4. தேவஸ்தான சட்டம் பார்ப்பனர் குட்டு வெளியாய்விட்டது (15.8.1926).

5. தேவஸ்தான மசோதா குறிப்பு 5.9.1926.

6. இந்து மத பரிபாலன மசோதாவும் பார்ப்பனர் கள் சூழ்ச்சியும் பனகல் ராஜாவுக்கு ஜே! (26.9.1926).

“தென்னாட்டுப் பார்ப்பனர்களின் எவ்வளவோ சூழ்ச்சிக்கும் தப்பி இந்துமத பரிபாலன மசோதா என்று சொல்லப்படும் தேவஸ்தான மசோதா சட்ட சபையில் சட்டமாக நிறைவேறி விட்டது. தேவஸ்தான சட்டம் சட்ட சபைக்கு வந்தவுடன் பலர் அதை வெட்டித் தள்ளிவிட என்ன என்னமோ சூழ்ச்சிகள் செய்து பார்த்தும் சுமார் 500 திருத்தப் பிரேரேபணைகளைக் கொண்டு வந்து தங்களால் ஆனவரையில் அதை ஒழிக்கப் பார்த்தார்கள். கடைசியாகப் பொது ஜனங்களின் அதிகப்படியான பிரதிநிதிகளும் சர்க்காரும் இவைகளுக்குக் கொஞ்சமும் மனந்தளராமல் ஒரே உறுதியாய் இருந்து சட்டத்தை நிறைவேற்றிவிட்டார்கள்” என்று பெரியார் எழுதினார் (குடிஅரசு 26.9.1926).

இதற்கு ஆதரவாளரான சென்னை உயர்நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி டி.வி. சதாசிவ அய்யர் அவர்களை இந்த வாரியத்தின் தலைவராகப் பனகல் அரசர் நியமித்தார். இதனால் கோயில் சொத்துகள் கொள்ளைப் போவது ஓரளவு தடுக்கப்பட்டது.

அதன்பிறகு மீண்டும் சென்னை மாகாண அரசின் முதலமைச்சர் ஓமந்தூரார் இராமசாமி ஆட்சியில் இச்சட்டத்திற்கு மேலும் வலிமையூட்டி வாரியம் என்பதை துறையாக மாற்றப்பட்டது. 11.7.1947இல் சட்டமன்றத் தில் இதற்கான சட்ட முன்வரைவின் மீதான விவாதத்தின் இறுதியில் ஓமந்தூர் இராமசாமி பேசிய போது, "35 கோயில்களில் நடைபெற்ற ஊழல் பட்டியலை கையில் வைத்துள்ளேன். அதை தடுப்பதற்கு எங்களுக்கு அதிகாரமில்லை. தஞ்சாவூர் ஜில்லாவில் வேதாரண்ய ஈஸ்வரர் தேவஸ்தானத்துக்கு 16,000 ஏக்கர் நிலம் கொண்ட 45 கிராமங்கள் சொந்தமாக இருந்துங்கூட ஆண்டு வருமானம் வெறும் ரூ.75,000 மட்டுமே கணக்கில் காட்டப்படுகிறது” என்று இதுபோன்ற நீண்டப் பட்டியலைப் படித்துக் காட்டி இவற்றைத் தடுப்பதற்காகவே இச்சட்டம் கொண்டு வரப்படுகிறது என்று கூறினார்.

“மேலும் ஓமந்தூர் இராமசாமி சென்னை மாகாணத்தில் கோயில் மடங்களுக்கு எட்டு இலட்சம் ஏக்கர் நிலங்கள் உள்ளன. அவற்றிலிருந்து ஆண்டுக்கு மூன்றரை கோடி ரூபாய் வருமானம் கிடைக்கிறது. அதைப் பராமரிக்க அதிகாரமும் பொறுப்புமுள்ள ஒரு சட்டமும் தேவையாக இருக்கிறது. அதைத்தான் இந்த மசோதாவின் மூலம் செய்து வருகிறோம்” என்று கூறினார்.

இப்போது உள்ள இந்து அறநிலையச் சட்டம் 1959ஆம் ஆண்டு காமராசர் ஆட்சியில் ஏற்படுத்தப்பட்டதாகும்.

தி.மு.க. அரசின் இந்துச் சமய அறநிலையத் துறை மிகவும் சிறப்பாகச் செயல்படுகிறது. சிதம்பரம் நடராசர் கோயில் ஆண்டு வருமானம் தீட்சிதர்கள் கட்டுப்பாட்டில் இருந்த போது ரூ.37,199 என்றும் செலவு ரூ.37,000 என்றும் மீதம் ரூ.199 ரூபாய் நீதிமன்றத்தில் கணக்குக் காட்டப்பட்டது. அதே கோயில் கலைஞர் முதல்வராக இருந்தபோது தமிழ்நாட்டு அரசின் இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் இருந்தபோது 15 மாத வருமானம் ரூ.25,12,485 ஆகும். கோயில் நிர்வாகம் தனியாரிடம் வழங்கினால் என்ன நடக்கும் என்பது இதன்மூலம் உறுதியாகிறது.

தற்போதைய தி.மு.க. ஆட்சிக் காலத்தில் கோயில் சொத்துக்களின் ஆவணங்கள் அடங்கிய நான்கு கோடி பக்கங்கள் படப்படி எடுக்கப்பட்டு (Scan) இணைய தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. அறநிலையத் துறை ஒன்பது கலைக் கல்லூரிகளை, ஒரு தொழில்நுட்ப கல்லூரி, இருபத்தைந்து மேல்நிலை மற்றும் உயர் நிலைப் பள்ளிகளை நடத்துகிறது அதில் இருபத்து அய்ந்து ஆயிரம் மாணவர்கள் பயிலுகின்றனர்.

கடந்த இரண்டு ஆண்டு காலத்தில் தி.மு.க. அரசு பழைய கோயில்களைப் புதுப்பிப்பதற்காக இருநூறு கோடி ரூபாய் மானியமாக வழங்கியுள்ளது. கிராமப்புற சிறுகோவில்கள் பராமரிப்புப் பணிக்காக ஒரு கோவிலுக்கு இரண்டு இலட்சம் வீதம் 5000 கோயில்களுக்கு நூறு கோடியை அரசு மானியமாக வழங்கி உள்ளது. இரண்டு ஆண்டுகாலத்தில் ஒரு ஆயிரத்து நூறு ஏழைகளுக்கு இலவயத் திருமணத்தை நடத்தி வைத்துள்ளது. கோயில் உண்டியல் பணம் பலர் முன்னிலையில் எண்ணப்பட்டு வங்கிக் கணக்கில் செலுத்தப்படுகிறது. கோயில் பணத்தை அரசோ, தனியாரோ எடுத்துக் கொள்ளாத வகையில் கண்காணிப்புக் கேமராக்கள் பொருத்தப் பட்டுள்ளன. இதுவரை தி.மு.க. அரசு இரண்டு ஆண்டு காலத்தில் 621 கோடி ரூபாய் மானியமாக இத்துறைக்கு அளித்துள்ளது. 38 மாவட்டங்களுக்கும் மாவட்ட அறங்காவலர் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. 5000க்கும் மேற்பட்ட கோயில்களுக்கு அறங்காவலர்கள் நியமிக்கப் பட்டுள்ளனர். ஆயிரத்துக்கும் மேற்பட்ட கோயில்கள் புதுப்பிக்கப்பட்டுக் குடமுழுக்கு நடத்தப்பட்டுள்ளது.

எல்லாவற்றையும்விட முதன்மையானது கடந்த 2 ஆண்டுகளில் தனியார் ஆக்கிரமிப்பில் இருந்து 5,500 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்கள் மீட்கப்பட்டு, அந்தந்த கோவில்களுக்குத் திருப்பி அளிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டு அரசின் இந்து சமய அறநிலையத் துறை மிகச் சிறப்பாகச் செயல்படுகிறது. தத்துவ அடிப்படையில் பா.ச.க.விற்கு எதிராக இருக்கும் தி.மு.க. அரசின் மீது வீண்பழிச் சுமத்தி பக்தர்களிடையே கெட்ட எண்ணத்தை உருவாக்கவே தலைமை அமைச்சர் முதல் பா.ச.க.வின் கடைசி தொண்டர்கள் வரை திட்டமிட்டு பொய்ச் செய்திகளைப் பரப்பி வருகின்றனர். பக்தர்களை திராவிட கருத்தியலுக்கு எதிராகத் திருப்பிட இந்தக் கருத்தை ஆர்.எஸ்.எஸ். கையில் எடுத்துள்ளது. தமிழ்நாடு அரசின் அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு அவர்களும், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களும் தக்க பதிலடி கொடுத்து வருகின்றனர். நிர்மலா சீத்தாராமனுக்கு இருப்பது பக்தி அல்ல; பகல் வேடம் என முதல்வர் பதிலடி கொடுத்துள்ளார்.

நீதிக்கட்சி ஆட்சிக் காலத்தில் உருவாக்கப்பட்ட இந்து அறநிலையத் துறை கோவில் சொத்துக்களைப் பாதுகாத்து வருகிறது. கோவில்கள் அரசின் கட்டுப்பாட்டில் இருப்பதே கோயில்களுக்கும் அவற்றின் சொத்துக்களுக்கும் - ஏன் கடவுளர்களுக்கும் (சிலைகளுக்கும்) பாதுகாப்பு ஆகும்.

- வாலாசா வல்லவன்

Pin It