பெரியாரிய உணர்வாளர் கூட்டமைப்பு - மொழி வழி மாநிலங்கள் பிரிந்த நாளான நவம்பர் முதல் தேதியை ‘தமிழ்நாடு’ நாளாக பின்பற்ற வேண்டும் என்று முடிவு ஏற்கனவே செய்து, அந்த நாளில் தமிழ் நாட்டுக்கான கொடி ஒன்றை ஏற்ற கடந்த ஆண்டு முடிவு செய்தது. எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான ஆட்சி, நவம்பர் 1ஆம் தேதி தமிழ்நாடு நாளாக அறிவித்தது. விழா நடத்தியது. ஆனாலும், பெரியாரிய உணர்வாளர் கூட்டமைப்பின் அமைப்பாளர் பொழிலன் உள்ளிட்ட தோழர்களைக் கைது செய்தது எடப்பாடி பழனிச்சாமி ஆட்சி. இந்த ஆண்டு இதே போன்று நவம்பர் முதல் நாளை ‘தமிழ்நாடு’ நாளாகக் கொண்டாட பெரியாரிய உணர்வாளர் கூட்டமைப்பு முடிவு செய்தது. தமிழக முதல்வரிடம் நேரில் கோரிக்கை மனு ஒன்றையும் அளித்தது.

இந்த நிலையில் நவம்பர் 1, மொழி வழி மாநிலம் பிரிந்தபோது தமிழ்நாட்டுக்கு ‘சென்னை மாகாணம்’ என்கிற பெயர் இருந்தது. பெரியார் தமிழ் நாடு என்று பெயர் சூட்டப்பட வேண்டும் என்பதில் மிக உறுதியாக இருந்து அது தொடர்பாக பல அறிக்கைகளில் தொடர்ந்து வலியுறுத்தி வந்தார். தி.மு.க. 1957ஆம் ஆண்டு சட்டமன்றத்தில் தி.மு.க. எதிர்கட்சியாக இருந்தபோது, தமிழ்நாடு பெயர் சூட்டும் தீர்மானத்தைக் கொண்டு வந்தபோது, காங்கிரஸ் ஆட்சி அதை ஏற்க மறுத்தது. தொடர்ந்து 61, 62, 64ஆம் ஆண்டுகளிலும் தி.மு.க. கொண்டு வந்த தீர்மானம் தோற்கடிக்கப்பட்டது. 1967இல் தி.மு.க. ஆட்சிக்கு வந்த பிறகு, 1968 ஜூலை 18ஆம் நாள், முதல்வர் அண்ணா, ‘தமிழ்நாடு’ என்று பெயர் சூட்டும் தீர்மானத்தைக் கொண்டு வந்து, சட்டசபை யில் ஒரு மனதாக நிறைவேற்றச் செய்தார்.

‘சென்னை மாகாணம்’ என்ற பெயர் மாற்றி ‘தமிழ்நாடு’ என்று பெயர் சூட்டப்பட்ட நாள் தான் ‘தமிழ்நாடு’ என்று தமிழக அரசு சார்பில் முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்திருக்கிறார். அதே நேரத்தில் மொழி வழி மாநிலங்கள் பிரிவினை நாளான நவம்பர் 1ஆம் தேதிக்கும் மரியாதை தரும் வகையில் எல்லை மீட்புக்காகப் போராடிய உயிருடன் இருக்கும் எல்லைக் காவலர்கள் 110 பேருக்கு ரூபாய் ஒரு இலட்சம் பொற்கிழி வழங்கப்படும் என்ற அறிவிப்பையும் வெளியிட்டுள்ளார்.

இந்த நிலையில் தமிழக அரசு அறிவிப்புக்கு முன் பெரியாரிய உணர்வாளர் கூட்டமைப்பில் இடம் பெற்றுள்ள திராவிடர் விடுதலைக் கழகம் ஏற்கனவே கூட்டமைப்பு எடுத்த முடிவின்படி நவம்பர் முதல் நாள் விழாக்களில் இந்த ஆண்டு கலந்து கொள்கிறது. தமிழக அரசு ஜூலை 18ஆம் நாள் ‘தமிழ்நாடு நாள்’ என்று எடுத்த முடிவும், ‘நவம்பர் முதல் நாள்’ என்ற முடிவும் நோக்கத்தில் முரண்பட்டவை அல்ல. தமிழ்நாடு - தமிழர் என்ற உணர்வை தமிழர்களிடம் கொண்டு செல்ல வேண்டும் என்பதே இரண்டு அறிவிப்புகளின் முதன்மையான நோக்கம். இதை முரண்பாடாக மாற்றி, தி.மு.க. அரசுக்கு எதிராக திருப்பிவிட ‘திராவிட எதிர்ப்பு’ பேசுவோர் முயற்சி செய்வதற்கு வாய்ப்பளிக்கக் கூடாது என்றே கருதுகிறோம். விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன், நவம்பர் முதல் நாளை ‘தமிழ்நாடு இறையாண்மை’ நாளாக அறிவித்து, கருத்தரங்கம் ஏற்பாடு செய்த நிலையில், தமிழ்நாடு அரசின் அறிவிப்பை வரவேற்று, இனி வரும் காலத்தில் கலந்து பேசி ஒரு முடிவுக்கு வர வேண்டும் என்று கருத்து தெரிவித்துள்ளார். கருத்தரங்கமும் திட்டமிட்டபடி நடந்தது.

பெரியாரிய உணர்வாளர் கூட்டமைப்பு இது குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், “அரசு அறிவிப்பு குறித்துக் கூட்டமைப்பு கலந்து பேசி நவம்பர் 1ஆம் நாள் விழாவுக்குப் பிறகு அறிவிக்கும்” என்று அறிவித்திருக்கிறது. அந்த அடிப்படையில் கூட்டமைப்பு சார்பில் கொளத்தூரில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி, ‘நவம்பர் 1 - தமிழ் நாடு விழாவில்’ பங்கேற்று, தமிழ்நாட்டுக்கான கொடியையும் ஏற்றியிருக்கிறார். “தமிழ்நாடு அரசின் அறிவிப்பை வரவேற்கிறேன். பெரியாரிய உணர்வாளர் கூட்டமைப்புடன் கலந்து பேசி முடிவெடுப்போம்” என்று கூறியிருக்கிறார்.

அண்ணா, தமிழ்நாடு சட்டமன்றத்தில் தமிழ்நாடு பெயர் மாற்றத் தீர்மானத்தை நிறைவேற்றிய நாள் ஜூலை 18, 1968. ஆனாலும் அவர் உடல் நலிவுற்றிருந்த காரணத்தால் கூட்டங்களில் பேச முடியாத நிலையில் மூன்று மாதம் கழித்து, 1.12.1968 அன்று தான் மருத்துவர் ஆலோசனையையும் மீறி வெற்றி விழா கூட்டத்தில் பேசினார்.

“இன்றைய தினம் நான் பேசுவதால், என் உடலுக்கு ஊறு நேரிடுமானால் இந்த உடலிருந்து என்ன பயன்?” என்று கேட்டுவிட்டு, தமது அரசின் மாற்றிட முடியாத முப்பெரும் சாதனைகளைக் குறிப்பிட்டார். பள்ளிகளில் இந்தியை ஒழித்தது, சுயமரியாதை திருமணச் சட்டம், தமிழ்நாடு பெயர் மாற்றம் ஆகியவற்றைக் குறிப்பிட்டார். தமிழ்நாடு அரசின் இந்தச் சட்டத்துக்கு அன்றைய ஒன்றிய அரசு ஒப்புதல் வழங்கியது.

இந்தப் பின்னணியில், 1968 டிசம்பர் 6ஆம் தேதி, பெரியார் ‘விடுதலை’யில் ஒரு தலையங்கம் தீட்டினார். “இந்தப் பிரச்சினை வெற்றி பெற்றதற்கு அண்ணா தான் காரணம். இதை வேறு கட்சியினரால் செய்து முடித்திருக்க முடியாது” என்றும் பாராட்டிய பெரியார், அத்துடன் நிறுத்திக் கொள்ளவில்லை. பெயர் மாற்றத்தைவிட நாடு விடுதலை பெறுவதுதான் முக்கியமானது என்று அழுத்தம் திருத்தமாகப் பதிவு செய்தார். “சென்னை மாகாணத்துக்கு”, ‘தமிழ்நாடு’ என்று பெயர் சூட்டுவதற்கு தொடர்ந்து வலியுறுத்திய அதே பெரியார், பெயர் மாற்றத்தோடு முடிந்து விடவில்லை; சூத்திர இழிவு ஒழிப்பு நீடிக்கவே செய்கிறது; எனவே நாட்டு விடுதலை தான் ஒரே வழி என்று அடுத்த கட்டத்துக்கு நகர்கிறார். பெரியார் இவ்வாறு எழுதினார்.

“இந்தப் பெயர் மாற்றத்துக்கு அண்ணாவின் ஆட்சி தான் காரணம். ஆனால், தமிழ் மக்களுக்கு இந்தப் பெயர் மாற்றத்தால் என்ன பயன்? இது எப்படி இருக்கிறது என்றால், நமது ஆள் எதிரியிடம் உதை வாங்காமல் தப்பித்து வந்து விட்டான் என்பது போல்தான் இருக்கிறது. ஆசாமிக்கு கண் பொட்டை தான்; என்றாலும் பெயர் கண்ணப்பன் என்பது போல் தோன்றுகிறது எனக்கு. இப்போதும் டில்லி ஆட்சி இந்தப் பெயர் மாற்றத்தை மறுத்திருந்தால் நம் கதி என்ன? இராஜினாமா செய்வோம். அது நமது பலவீனத்தைத் தானே காட்டுகிறது? எப்படியானாலும் இது மற்ற கட்சியாரால் செய்து முடித்திருக்க இயலாது என்பதை ஒத்துக் கொள்ள வேண்டியது தான். இது ‘அண்ணாத்துரை நாடு’ என்று பெயர் மாறினாலும் தமிழர்கள் அடிமை நாட்டில் அடிமையாக வாழ்வது மாற்றமடையுமா?” என்று எழுதினார்.

அதே பெரியார், 1968ஆம் ஆண்டு செப்டம்பர் 21ஆம் நாள் போரூர் தி.மு.க. நடத்திய அண்ணா பிறந்த நாள் விழாவில் பேசிய போது, “தி.மு.க. ஆட்சி நீடித்து இருந்தாக வேண்டும். இவர்கள் சட்டத்துக்குட்பட்டே ஆட்சி செய்யட்டும். மற்ற பிரச்சினையை நாம் பார்த்துக் கொள்வோம்” என்று பேசினார்.

இந்தப் பின்னணியில் ‘தமிழ்நாடு - தமிழினம்’ தனது ஓர்மையை உணர்த்துவதற்கான குறியீடுகளே நவம்பர் 1-ம், ஜூலை 18-ம் ஆகும். குழந்தை பிறந்த நாளா? பெயர் சூட்டிய நாளா? என்ற ‘உளம் சார் உணர்வுகளை’ சமூக - அரசியல் விடுதலை கருத்தியலோடு இணைத்துப் பார்க்க முடியாது. ஒன்றிய பா.ஜ.க.வின் ‘ஒற்றை மதவாத’ ஆட்சிக்கு எதிராகப் போரிட, ‘தமிழ்-தமிழ்நாடு’ எனும் ‘ஓர்மை’ மிக அவசியமும், அடித்தளமுமாக இருக்கிறது. சமூகநீதி மற்றும் தமிழ்நாடு வளர்ச்சிகளை முன்னெடுத்து அவற்றை விளிம்பு நிலை மக்களுக்கான அதிகாரமாக்கி, ‘ஜாதி - சூத்திர’ இழிவிலிருந்து விடுபடும் தமிழ் நாட்டை உருவாக்கும் இலட்சியத்தை நோக்கி முன்னேறிச் செல்ல நாம் பயன்படுத்தும் குறியீடுகள் இவை. இவற்றில் முரண்பாடுகளைத் தவிர்த்து, நோக்கத்தை நெறிப்படுத்துவதே சரியான அணுகுமுறையாக இருக்க முடியும்!

- விடுதலை இராசேந்திரன்