mk stalin and sekar babuபிற்காலச் சோழப் பேரரசுக்கு அடிகோலிய தஞ்சை அரசன் விஜயாலய சோழனுக்குப்பின் எழுச்சி பெற்ற சோழப் பேரரசில், பார்ப்பனர்களின் ஆதிக்கம் தலைதூக்கி ஆடியது. பார்ப்பனர்கள் வடபுலத்தில் இருந்து பல்லவர்களால் தமிழ்நாட்டுக்குக் கொண்டு வரப்பட்டவர்கள்.

ஆட்சி செய்தவர்கள் மன்னர்கள் என்றாலும், ஆட்சி செய்வதற்கு ஆலோசனைகள் சொல்லவும், வழி நடத்தவும் ‘மகாமந்திரி’களாக இருந்தவர்கள் பார்ப்பனர்களே. அரசின் அதிகாரம் மறைமுகமாகப் பார்ப்பனர்களிடம் இருந்தது. காரணம் அவர்கள் பிரம்மத்தோடு தொடர்புடைய கடவுளாகத் தம்மைக் காட்டிக் கொண்டார்கள்.

வருண பேதங்களால் பிரித்து வைக்கப்பட்ட மக்களை, கடவுள் என்ற பிம்பத்தைக் காட்டி அகவயமாகப் பயமுறுத்தி வைத்தார்கள் பார்ப்பனர்கள். அதற்காக அவர்கள் தேர்வு செய்த இடம் தான் கோயில்கள். மன்னர்களின் ஆதரவாலும், ‘பிராமணர்’ என்ற சாதி ஆதிக்கத்தாலும் கோயில்களில் எல்லாம் பூசாரிகளாக நுழைந்து அவர்களின் இருப்பைப் பலப்படுத்திக் கொண்டார்கள் பார்ப்பனர்கள்.

கோயில்களுக்குப் பார்ப்பனர்களால் தரப்பட்ட “புனிதம்” என்ற காரணத்தால் கருவறை வரை கூட சூத்திர மன்னன் போக முடியாது. ஆனாலும் அக்கோயில்களின் பராமரிப்புச் செலவுக்கு என்று வரியில்லா நிலங்கள் இறையிலியாகவும், தங்கம், வெள்ளி, பித்தளை, செம்பு போன்ற பொருள்களாகவும் வாரி வழங்கினார்கள் மன்னர்கள்.

கடவுளுக்குப் பூசை செய்யும்போது மந்திரங்கள் சொல்ல வேண்டும் என்கிறது யஜுர்வேதம். ஆகவே கோயில்களில் பூசாரிகள் மந்திரமாக அர்ச்சனையைச் செய்தார்கள் மக்களுக்குப் புரியாத, அவர்களின் சமஸ்கிருத மொழியில்.

அதுமட்டும் இல்லாமல் கோயில்கள், அதன் சொத்துகள் அனைத்தும் பார்ப்பனர்களின் கட்டுப்பாட்டில் இருந்து வந்தன. இவைகளை வரையரை செய்து ஒழுங்குபடுத்த வேண்டும் என்ற காரணத்தினால் 1925ஆம் ஆண்டு, கோயில்கள் மற்றும் இந்து சமய நிறுவனங்களை மேலாண்மை செய்ய, அன்றைய நீதிக்கட்சி அரசால் இந்து சமய அறநிலைய வாரியம் அமைக்கப்பட்டது. 1927 ஆம் ஆண்டு இந்து சமயம் மற்றும் அற நிலையச் சட்டம் உருவாக்கப்பட்டது. அதுவே பின்னாளில் இந்து சமய அறநிலையத் துறையாக 1960 ஆம் ஆண்டு சனவரி திங்கள் முதலாம் நாள் அமைக்கப்பட்டு, பல கோயில்கள் அறநிலையத் துறையின் மூலம் அரசுக் கட்டுப்பாட்டிற்குள் வந்தன.

தலைவர் கலைஞரின் தி.மு.கழக ஆட்சியில் பல ஆண்டுகள் ஓடாமல், நிறுத்தி வைக்கப்பட்டிருந்த திருவாரூர்த் தேரை ஒடச் செய்ததைப் போல பல சீர்திருத்தங்கள் செய்யப்பட்டன.

தோழர் சுப.வீரபாண்டியன் சொல்வது போல, கலைஞரின் மறைவுக்குப் பின் அவரின் இரண்டாம் பாகமாக ஆட்சியில் இருக்கும் முதல்வர் ஸ்டாலின் அவர்களால் கோயில்கள் புதுப்பொலிவு பெறத் தொடங்கியுள்ளன. இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு அவர்களின் துடிப்பான செயல்பாடுகள் வியப்பில் ஆழ்த்துகிறது.

குறிப்பாகச் சொன்னால், “அன்னைத் தமிழில் அர்ச்சனை’’ என்று சொல்லி சமஸ்கிருத ஆதிக்கத்தை அகற்றித் தமிழைக் கருவறைக்குள் கொண்டு சேர்த்திருக்கிறார்கள் முதல்வரும், துறை அமைச்சரும்.

தமிழ்நாட்டுக் கோயில் கருவறையில் தமிழைக் கேட்க 1200 ஆண்டுகள் ஆகியிருக்கின்றன. முதல் தமிழ் அர்ச்சனையை மைலாப்பூரில் தொடங்கி வைக்கப்பட்ட பின்னர், இம்மாதத்திற்குள் 47 கோயில்களில் தமிழ் அர்ச்சனை கொண்டு வரப்படும் என்றும், பின்னர் 537 கோயில்களுக்கு விரிவுபடுத்தப்படும் என்று அமைச்சர் சேகர்பாபு சொல்லியிருக்கிறார்.

திருவாவடுதுறை ஆதினம் உள்ளிட்டச் சமயமடங்களால் வரவேற்பைப் பெற்றிருக்கும் தி.மு.கழக ஆட்சியின் இச்செயல்பாடுகள் உரக்கச் சொல்கின்றன, “திராவிடம், திராவிட இயக்கம் இந்துக்களுக்கு எதிரி இல்லை’’ என்று.

- எழில்.இளங்கோவன்

Pin It