திராவிடக் கட்சிகள் தமிழ்நாட்டின் ஆட்சிக் கட்டிலில் ஏறி 50 ஆண்டுகள் ஆகிவிட்டதாகப் பெருமைப்பட்டுக் கொள்கின்றனர் சிலர்.
67-ல் திமுக ஆட்சியைப் பிடித்த ஆண்டி லிருந்து ஐம்பதாண்டுகள் ஆகிவிட்டன என்கின்றனர்.
ஆனால், திமுக ஆட்சிக் கட்டிலுக்குள் நுழைய முயன்ற 1952-லிருந்து அது வெற்றி பெற்ற 1967 வரை அதைத் ‘திராவிடக் கட்சி’ என்று பெரியார் அறிவிக்கவில்லை.
1949-இல் திமுக தொடங்கப்பட்டு 1952-இன் தேர்தலின் போது திராவிட நாடு விடுதலைக் கொள்கையை ஏற்பவர்களுக்குத் தாங்கள் ஆதரவளிப்பதாக அறிவித்தது தி.மு.க.
1957-இல் நடந்த தேர்தலில்தான் திமுக நேரிடையாகப் பங்கேற்றது.
எனவே 1957-ஆம் ஆண்டுத் தேர்தலின் அரசியல் முகமை குறித்து அறியும்போதுதான் திமுகவின் தேர்தல் அரசியல் நுழைவு எந்த வகையில் திராவிடக் கொள்கையுடையதாயில்லை என்பதையும் தமிழக நலனுக்கு அடித்தளமாக அமையவில்லை என்பதையும் உணர முடியும்.
திராவிடர் கழகம் கொண்டிருந்த பார்ப்பன எதிர்ப்பு, சாதி எதிர்ப்பு, மூடநம்பிக்கை எதிர்ப்பு, இந்திய எதிர்ப்பு, கடவுள் மறுப்பு உள்ளிட்ட எவற்றையும் தி.மு.க. முன்னெடுத்துத் தங்கள் கொள்கையாக அறிவித்துக் கொள்ளவும் இல்லை, பரப்புரை செய்யவும் இல்லை.
திராவிடர் கழகம் ஆரியப் பார்ப்பனர் அல்லாதார் திராவிடர் எனும் கருத்தில் அடை யாளப்படுத்தியிருந்ததைக்கூட திராவிட முன் னேற்றக் கழகம் அவ்வாறு கூறாமல், நில அடிப்படையில், தமிழகம், ஆந்திரம், கருநாடகம் ஆகியவற்றை இணைத்த திராவிட நாடு என்கிற அடையாளத்திலேயே முன்னிறுத்தியது.
பெரியாரும் 1956-க்கு முன்பாக (1938-க்குப் பிறகு) ‘திராவிட நாடு’ எனப் பேசியிருந்தாலும், 1956-க்குப் பின்னர், தெலுங்கரும், கன்னடரும், மலையாளிகளும் திராவிட நாடு கருத்துக்கு வருவார்கள் என்று முன்னாள்களில் தான் நம்பியதாகவும், இப்போது தான் நம்பவில்லை என்றும் ‘தமிழ்நாடு தமிழருக்கே’ - என்பதே சரி என்றும் அறிவித்திருந்தார். இருப்பினும் ஆரியப் பார்ப்பனர் அல்லாதவரைத் திராவிடர் என்பதாக அடையாளப்படுத்தி வந்தார். பார்ப்பனர்கள் தங்களைத் திராவிடர் என ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் & அதனால் நாமெல்லாம் அதாவது பார்ப்பனர் அல்லாதார் எல்லாம் திராவிடர் என்பதாகக் கூற வேண்டிக் கருத்தறிவித்தார்.
1952-ஆம் ஆண்டு காங்கிரசுக் கட்சியிலிருந்து போட்டியிட்டு வென்ற இராசாசி, முதலமைச்ச ரானதோடு, அவர் கொண்டு வந்த குலக் கல்வி, ஒவ்வொரு சாதியினரின் குலத் தொழில் எதுவோ அதிலேயே அவரவர்கள் ஈடுபட வேண்டும் என்பதான திட்டத்திற்குக் காங்கிரசுக் கட்சியிலிருந்தே எதிர்ப்புகள் வரத் தொடங்கவும், 1954-இல் பதவி விலகிக் கொண்டார் இராசாசி.
பதவி விலகிக் கொண்டவர் சும்மாயிருக்காமல், சி.சுப்பிரமணியத்தை முதலமைச்சராக அமர்த்த பரிந்துரைத்தார். ஆனாலும் காமராசரை எதிர்த்து சி.சுப்பிரமணியத்தால் ஆதரவு பெற முடியாத சூழலில் காமராசரே 1954 முதல் 1957 வரை முதலமைச்சராக இருக்க முடிந்தது.
ஆக, காங்கிரசுக் கட்சியின் வழியாக பார்ப்பன ரல்லாதார் ஆட்சியாகக் காமராசர் ஆட்சிக் கட்டி லேறினார் என்பதாக மட்டுமன்று, காமராசரின் ஆட்சியையே பெரியார் தமிழரின் ஆட்சி என்று பெருமைப்படவும், வரவேற்கவும், புகழவும் செய்தார்.
காங்கிரசிலிருந்து வெளியேறியிருந்த நிலையில் இராசாசி ‘காங்கிரசு சீரமைப்புக் குழு’ என்கிற முனைப்பில் ‘இந்தியத் தேச சனநாயகக் காங்கிரசு’ என்கிற பெயரில் கட்சியைத் தொடங்கினார்.
ஏறத்தாழ இதே காலத்தில் 1956-இல் திருச்சியில் கூடிய தி.மு.க. மாநாடு - ஓட்டு வழியா, வேட்டு வழியா என்று கருத்து கேட்டு ஓட்டு என்றே தீர்ப்பு வரவேண்டுமான முயற்சி எடுத்துத் தேர்தல் களத்தில் ஈடுபடுவது என்கிற முடிவெடுத்தது.
அவ்வகையில் 1957-இல் நடந்த தேர்தலிலும் இராசாசிக்கு எதிராக இருக்கிறார் என்பதால் காமராசருக்காகக் காங்கிரசை ஆதரித்தார் பெரியார்.
‘காமராசர் தமிழர் என்பதோடு, தமிழருக்காகத் தன்னால் இயன்றவரை செயல்படுகிறார். இராசாசி கொண்டு வந்த குலக் கல்வித் திட்டத்தை மறுத்து நிறுத்தினார். கல்வித் துறையிலும் அரசுத் துறையிலும் தமிழர்களே பெருமளவில் பயனடைய வழி செய்திருக்கிறார். பார்ப்பனர்களும், தி.மு.க.வும் எப்படியாவது காமராசரை நீக்கிவிட வேண்டும் எனச் செயல்படுகின்றன. எனவே காமராசரை வெற்றியடையச் செய்ய வேண்டியது தமிழர்களின் கடமை’’ என்று பெரியார் அறிவிக்கை விடுத்தார்.
காமராசரை எப்படியாவது ஒதுக்கிவிட வேண்டும் என இராசாசி தனியாகக் கட்சி தொடங் கிய போதிலும், இராசாசி, காங்கிரசிலிருந்த பக்தவத்சலத்தையும், சி.சுப்பிரமணியத்தையும் திரைமறைவிலிருந்து இயக்கிக் கொண்டிருந்தார்.
இந்த நிலையில் 1957 ஆம் ஆண்டு தேர்தலைத் தனிக்கட்சி (சுயேட்சை)யாகச் சந்தித்த தி.மு.க.விற்கு 13 இடங்கள் கிடைத்தன.
1959 இல் சுதந்திரா கட்சியை இராசகோபாலாச்சாரி காங்கிரசுக்கு எதிராகத் தொடங்கினார்.
பெரியார் கொண்டிருந்த பார்ப்பனர் எதிர்ப்பு, இந்திய எதிர்ப்புகளைத் தி.மு.க.வும் முன்னெடுத் துவிடக் கூடாது என்பதற்காக, அதனிடமிருந்த கொள்கை மெலிவு(பலகீன)ப் போக்கைப் பயன்படுத்திக் கொண்டு, தி.மு.க.வைத் தமிழியத்திற்கு எதிராகச் செயல்பட வைக்க வேண்டுமான கீழறுப்பு வேலையைச் சுதந்திராக் கட்சியின் வழியாகச் செய்தார் இராசாசி.
அத்தகைய இராசாசியின் உறவு நிலையில்தான் 1962 - ஆண்டுத் தேர்தலைச் சந்தித்தது தி.மு.க.
62-ஆம் ஆண்டு தேர்தலைச் சந்தித்ததில் தி.மு.க. செய்த மேலுமான நெகிழ்வு போக்குகளையும் அறிய வேண்டும்.
1957 தேர்தலுக்குப் பின்னர் தி.மு.க.விலிருந்து ஈ.வெ.கி. சம்பத் விலகியவுடன் அதைச் சரிக் கட்டவே ‘அடைந்தால் திராவிடநாடு இல்லையேல் சுடுகாடு’ என்று அண்ணா அடுக்கிப் பேசினார்.
1955 இல் இந்தியக் கொடி எரிப்பு அறிவித்ததோடு 1960 இல் தமிழ்நாடு நீங்கலாக இந்தியப்பட எரிப்பைப் பெரியார் அறிவித்துத் தடுப்புக் காவல் சட்டத்தில் சிறையிலிருந்த நிகழ்வுப் போக்குக்கெல்லாம் தி.மு.க.வை விடுதலைக் கருத்துடைய கட்சியாக ஈடுகொடுத்துக் காட்ட வேண்டும் என்பதற்காக, 1961-இல் மதுரை திருப்பரங்குன்றத்தில் நடந்த தி.மு.க. மாநாட்டில் திராவிட நாடு விடுதலை குறித்துத் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
அந்தத் தீர்மான வரிகள் கவனிக்கப்பட வேண்டியவை:
‘‘இந்தியப் பேரரசின் ஆதிக்கப் பிடியில் சிக்கிக் கிடக்கும் மொழிவழி மாநிலங்களான, தமிழ்நாடு, ஆந்திரம், கருநாடகம், கேரளம் ஆகிய நான்கும், மொழி அடிப்படையிலும், இன அடிப்படையிலும் திராவிட நாட்டின் அமைப்புகள் ஆகலின், இந்த நான்கும் இந்தியப் பேரரசின் ஆதிக்கப் பிடியிலிருந்து தம்மை விடுவித்துக் கொள்ளவும், தத்தமது வளர்ச்சி உரிமைக்கான ஆக்கமும் பாதுகாப்பும் இருக்கத் தக்க ஏற்பாட்டுடன் சுதந்திர திராவிட சமதர்மக் குடியாட்சி அமைத்துக் கொள்ள வழிவகைக் காண்பதைக் குறிக்கோளாகக் கொண்டு, பணியாற்றிவரும் விடுதலை இலட்சியம் நிறைவேற எவ்வகையான இன்னல்களையும் இழப்புகளையும் ஏற்கும் உறுதியுடன் பணியாற்ற திராவிட முன்னேற்றக் கழகம் முனைந்து நிற்கிறது என்பதை மீண்டும் வலியுறுத்திச் சுதந்திர திராவிடச் சமதர்மக் குடியரசுக் கூட்டாட்சி அமைக்கும் இந்த விடுதலைப் போருக்குத் துணை நிற்க வேண்டும்."
என்று தீர்மானம் இயற்றியது.
மேலும், 1962-ஆம் ஆண்டு மார்ச்சு மாதத்தில் வெளியிட்ட அறிக்கையொன்றிலும், ‘திராவிட முன்னேற்றக் கழகத்தின் அடிப்படைக் கோட்பாடு சுதந்திரத் திராவிட நாடு’ எனும் இலட்சியத்தில் எந்தவகை மாற்றமும் இருக்காது’ என்று அண்ணா தெளிவுபடுத்தியிருந்தார்.
இவ்வாறு திராவிட நாட்டுத் தீர்மானங்களை இயற்றியதும், பேசியதும், மொழிவழியாக ஆந்திரம், கருநாடகம், கேரளம் ஆகியவை பிரிக்கப்பட்டு விட்ட சூழலில்தான் என்பதையும், இக் கோரிக்கைக்கு ஆதரவாக அங்கெல்லாம் எந்தக் குரலும் எழவில்லை என்பதும் கவனிக்கப்பட வேண்டியவை.
ஆனால் அதே 1962 அக்தோபருக்குப் பிறகு அண்ணாவின் அறிக்கைகளைக் கவனித்தால் அவரின் தலைகீழ் மாற்றத்தை உணர முடியும்.
‘‘சீன ஆக்கிரமிப்பு நமது பிரச்சனைகளையும், வேற்றுமைகளையும் விரோதங்களையும் இயற்கையாகவே உதறிவிட்டது. அதனால் எல்லா சனநாயகவாதிகளும் சீன ஆக்கிரமிப்புக்கு எதிராக ஒரு பலமான அணியாகத் திரண்டிருக்கிறார்கள். தி.மு.க. பிரதமர் நேரு தெரிவித்த உறுதியைப் பாராட்டுகிறது; வரவேற்கிறது.’’
- என்று அண்ணா அறிக்கை விடுத்தார்.
1963- அக்டோபர் 5 இல், ‘‘தேர்தலில் பங்கெடுக்க விரும்புகிற எவரும் இனிமேல் இந்திய அரசினுடைய இறையாண்மையையும், ஒருமைப்பாட்டையும் பேணத் தவற மாட்டோமென உறுதிமொழி தர வேண்டும்.’’
- என இந்திய அரசியல் சட்டத்தின் 16 ஆம் திருத்தம் நிறைவேற்றப்பட்டது.
எனவே, உடனடியாக 1963 நவம்பர் 3 ஆம் நாள் தி.மு.க. கீழ்க்காணுமாறு அறிக்கை வெளியிட்டது.
‘‘திராவிட நாடு கேட்பதற்கான காரணங்கள் அப்படியே உள்ளன. நாங்கள்தாம் கைவிட்டு விட்டோம்’’ - என்றது அவ்வறிக்கை.
இந்தியா என்பது மொழித் தேசங்களின் ஒன்றியம்தான் என்றோ, காங்கிரசு கட்சியே கூட 1945 - தேர்தல் அறிக்கையில் ‘‘நன்கு அமைந்துள்ள எந்த ஒரு பகுதிக்கும் இந்திய சமஸ்டி அல்லது யூனியனிலிருந்து பிரிந்து செல்லும் உரிமை இருக்கும்’’ என்று கூறித்தான் இந்திய விடுதலைப் போராட்டத்தை நடத்தியது என்றும், எனவே தமிழ்நாட்டு (அல்லது திராவிட நாட்டு) விடுதலைக் கருத்தைக் கொள்கையாகக் கொண்டிருப்பதும் பரப்புவதும் எங்களின் உரிமை என்றுமாகத் தி.மு.க. போராடாமல், உடனடியாகத் தலைக்குப்புற விழுந்து நாங்கள் விடுதலைக் கொள்கையைக் கைவிட்டு விட்டோம் - என்றவுடன், இந்திய அரசு தி.மு.க.வின் நெகிழ்வுப் போக்கை வைத்தே அவர்களை இந்திய வழிக்கு இழுத்துக் கொண்டது. இவர்களும் சறுக்கியது சாக்கென இந்தியாவிற்குள் மூழ்கிப் போயினர்.
மேலும், இந்த நிலைக்கு ஆட்பட்ட தி.மு.க., பார்வார்டு பிளாக், முசுலீம் லீக் கட்சிகளோடு மட்டுமல்லாது இராசாசியின் சுதந்திரா கட்சியோடும் கூட்டு வைத்துக் கொண்ட 1962 ஆம் ஆண்டு தேர்தல் நிகழ்வுகளின் வாய்ப்பிய (சந்தர்ப்ப) போக்குகளையும் அறிய வேண்டும்.
‘‘வெளிப்படையாக வகுப்புவாதம் பேசும் கட்சிகளை விட முழு வகுப்புவாதக் கட்சியாகவே காங்கிரசு இயங்குகிறது.’’
- என்று இராசாசி, காமராசர் தலைமையிலான காங்கிரசுக் கட்சியை எதிர்த்தார்.
அதேபோது,
‘‘எனக்கு அகவையாகி விட்டது. நான் அதிகக் காலம் வாழ மாட்டேன். நான் இறந்த பிறகு தமிழர்க்கு முழுக் காவலராகக் காமராசரே இருப்பார். அவர்தான் என்னுடைய பிறங்கடை.. எனவே காங்கிரசுக்கு வாக்களியுங்கள். இராசாசி சவாரி செய்யும் தி.மு.க. குதிரை உங்களைக் கீழே தள்ளி இரக்கமில்லாமல் நசுக்கிவிடும்’’
என்று பெரியார் அறிக்கை விட்டார்.
1962 ஆம் ஆண்டுத் தேர்தலில் காமராசர் வெற்றி பெற்று முதலமைச்சரான போதிலும், இந்தியப் பார்ப்பனியம் செய்த இன்னொரு சூழ்ச்சியையும் கவனித்தறிய வேண்டியிருக்கிறது.
1963 ஆம் ஆண்டு காமராசர் காங்கிரசின் அகில இந்தியத் தலைவராக்கப்பட்டுத் தமிழக அரசியலிலிருந்து விடுவிக்கப்பட்டார்.
இதன் விளைவாக இராசாசியின் வழி காட்டலிலான பக்தவத்சலம் காங்கிரசின் முதல்வராக்கப்பட்டதோடு மட்டுமல்லாமல், காங்கிரசிடம் காமராசரின் முயற்சியில் கிடைத்த தமிழர் நலன், தமிழக நலன் முயற்சிகளுக்கு முட்டுக் கட்டைகளிடப்பட்டது; பார்ப்பனரல்லாதார் நலன் நோக்கிய போக்கும் சிதைக்கப்பட்டது.
இதன் சூழலால் வலுப்பட்ட பார்ப்பன நரியான இராசாசியின் போக்குக்கு வலு சேர்த்திடும் வகையிலும் தமிழ்நாடு அல்லது திராவிட நாடு விடுதலை முயற்சிக்குத் தடையாக அமைந்திடும் வகையிலும் தி.மு.க.வின் கொள்கை மெலியத் தொடங்கியது.
1967 ஆம் ஆண்டின் தேர்தலுக்குத் தி.மு.க. தன் வெற்றிக்கென முன்னெடுத்த உத்திகள் & தமிழிய நலனுக்கானவையோ, ஆரியப் பார்ப்பனியத்தை வீழ்த்திடும் வகையில் திராவிட நலனுக்கானவையோகூட அல்ல.
1965 ஆம் ஆண்டு காங்கிரசுக் கட்சி செய்த இந்தித் திணிப்பை எதிர்த்துத் தன்னெழுச்சியாய்க் கிளர்ந்த மாணவர்களின் பேரெழுச்சியைத் தங்கள் ஆட்சியைப் பிடிப்பதற்கான வாய்ப்பிற்காகவே தி.மு.க. பயன்படுத்திக் கொண்டது.
‘வடக்கு வாழ்கிறது; தெற்கு தேய்கிறது’
‘வடக்கத்தியர்கள் நம்மவரும் அல்லர்; நல்லவரும் அல்லர்’
- என்றெல்லாம் வடக்கு, தெற்கு என்று கூறி, இந்திய அரசைக் கூர்மைப்படுத்தி எதிரி எனக் காட்டாமல், வடக்கத்தியர் எனப் பொதுப்படக் கதைத்துக் கொண்டிருந்ததோடு, பின்னர் இந்திய ஒற்றுமை குறித்துத் தமிழக நலன்களைக் காவு கொடுத்த கட்சியாகவே தி.மு.க. இயங்கியது.
1967 மார்ச்சு 3&இல் ஆட்சிக் கட்டிலேறியப் பின்னர் ஏப்ரல் 8-ஆம் நாள் தில்லி சென்ற அண்ணா & அங்கு செய்தியாளர் கூட்டத்தில் பேசிய பேச்சு கவனிக்கத்தக்கது:
‘‘நாட்டின் ஒருமைப்பாட்டையும், ஒற்றுமையை யும் பாதுகாப்பதற்கு எவ்வளவு அதிகாரங்கள் தேவையோ அவற்றை மட்டும் மத்திய அரசு வைத்துக் கொண்டால் போதும். இப்படி அதிகாரங்களைப் பங்கீடு செய்வதற்கும், அரசியல் சட்டம் செயல்படுவதற்கும் ஓர் உயர் அதிகார ஆணைக் குழு ஒன்றினை அமைக்க வேண்டும்’’ என்றார் அண்ணாத்துரை.
ஆக,
‘அடைந்தால் திராவிட நாடு இல்லையேல் சுடுகாடு’ என்றவர்கள்,
‘திராவிட நாடு அடைவதற்கான காரணங்கள் அப்படியே இருக்கின்றன; நாங்கள்தாம் கைவிட்டு விட்டோம்’’ என்றும்,
‘மத்தியில் கூட்டாட்சி, மாநிலத்தில் சுயாட்சி’ என்றும்,
‘நேருவின் மகளே வருக! நிலையான ஆட்சி தருக’ என்றும்
‘மொழியால் தமிழன், இனத்தால் திராவிடன், நாட்டால் இந்தியன்’
- என்றுமாகவெல்லாம் தமிழர்களின், தமிழ்நாட்டின் உரிமைகளைச் சிதைத்தும், மெலித்தும், காவு கொடுத்தும் சீரழித்ததே திராவிட முன்னேற்றக் கழகம் என்பதை விளங்கிக் கொள்ள வேண்டும்.
மொழித்தேச மாநிலங்களின் உரிமைகளை யெல்லாம் படிப்படியாக இந்திய அரசுக்குக் காவு கொடுக்கத் தொடங்கியவர் அண்ணா என்றால், அவரைத் தொடர்ந்து வந்த கருணாநிதி அண்ணாவினும் அதிகமாகத் தமிழகத்தை இந்தியாவுக்குக் காவு கொடுத்தார். கலைஞருக்குச் சிறிதும் குறைபடாதவர்களாகவே இன்னும் மேலதிகமான நிலையிலேயே அதிமுக எம்.சி.ஆர்., செயலலிதா முதலிய முதலமைச்சர்களும், தமிழகத்தை இந்தியாவுக்குக் காவு கொடுத்தனர்.
* காவிரி நீர் உரிமையை விட்டுக் கொடுத்தது,
* கட்சத் தீவை விட்டுக் கொடுத்தது -
* முல்லைப் பெரியாற்று உரிமையை விட்டுக் கொடுத்தது -
* கல்வி உரிமையை விட்டுக் கொடுத்தது -
* கனிம உரிமைகளை விட்டுக் கொடுத்தது -
* அயலுறவு உரிமைகள், துறைமுக உரிமை களை விட்டுக் கொடுத்தது...
என்றெல்லாம் தொடங்கி, இன்றைக்கு...
- பன்னாட்டு நிறுவனங்களின் சுரண்டல் கொள்ளைக்கு வழியமைத்துத் தமிழக தொழிலுரிமையைப் பாழடித்தது,
- கூடங்குளம் என அணுமின் நிலையங்களை உருவக்கி அழிவுக்கு வழிவகுத்தது,
- நியூட்ரினோ, கெய்ல், மீத்தேன், சேல், ஐட்டிரோ கார்பன் என அனைத்துக்கும் தலையசைத்தது,
- ஆழ்கடல் மீன்பிடிப்புரிமையை அயல் நாட்டினர்க்கு அளித்தது,
- தமிழகக் கடற்பரப்பை இந்திய வெறிப் படைகளுக்குக் கையளித்தது -
- பன்னாட்டுக் கழிவுகளைத் தமிழகக் கடற்கரைக்குக் கொண்டு வந்துகொட்ட அனுமதித்தது,
- தமிழக மீனவர்கள் 600 பேர்கள் சுடப்பட்டு இறந்த பிறகும், இந்திய அரசுக்குக் கடிதம் எழுதிக் கொண்டு அடிமையாய்க் கிடந்தது,
- நெய்வேலி நிலக்கரியை, நரிமணம் கன்னெய்யை, சேலம் இரும்பை என எல்லாவற்றையும் இந்தியக் கொள்ளையர்கள் சூறையாடிச் செல்ல வழி கொடுத்தது,
- நெடுஞ்சாலைகளில் வழிப்பறிக் கொள்ளையடிக்க சுங்கச் சாவடிகளை இந்திய வெறியாட்சியர்கள் அமைக்கப் பங்கு வாங்கிக் கொண்டு இசைந்ததும், வாய்க்கரிசி போட்டுக் கொண்டதும்,
- பாலாறு தொடங்கி, காவிரி, வைகை, தாமிரவருணி என எல்லா இடங்களிலும் ஆழ்துளையிட்டு நீரை உறிஞ்சி புட்டிகளில் அடைத்து விற்க பன்னாட்டு நிறுவனங்களுக்கு இடம் கொடுத்தது,
- தரவல் தொழில் நுட்பப் பூங்கா & என்கிற பெயரில் மனாவாரியாகப் பல ஆயிரம் ஐ.டி. குழுமங்களைத் திறந்து விட்டுத் தமிழகத்தையே காவு கொடுத்துத் தமிழர் தொழில் வளர்ச்சியைப் பாழாக்கியது,
- இந்தித் திணிப்பை மெல்ல மெல்ல ஏற்றுக் கொண்டது,
- சமசுக்கிருத வயமாக்கத்தைப் படிப்படியாகக் கண்டு கொள்ளாமல் விட்டது
- ஆங்கில வழிக் கல்வியைப் பேணி வளர்த்தது,
- ஆங்கில மருத்துவத்தை வளர்த்துத் தமிழ் மருத்துவத்தைப் பாழாக்கியது
- போன்ற இவையெல்லாம் திராவிடக் கட்சி ஆட்சியில் தமிழகத்திற்கான மாட்சி(!)களல்லவா!
ஒரு மொழித்தேச அடையாளத்தைக்கூட உரிமைப் படுத்தித், தான் ‘தமிழன்’ என்று பதிவு செய்கிற போக்கை விடுத்துத் தன்னை ‘இந்தியன்’ என்பதாக இழிவுபடுத்துகிற பதிவை உருவாக்கியது தி.மு.க.வின் சிறப்பல்லாமல் வேறென்ன?
தமிழர்கள் இந்திய அரசியல் சட்டத்திற்கு ஆட்பட்ட நிலையில் இந்தியக் குடிமக்களாக இருக்க முடியுமே அல்லாமல் எப்படி இந்தியர்களாக முடியும்?
மலையாள மொழியினன் மலையாளி என்பது போல,
வங்காள மொழியினன் வங்காளி என்பது போல,
கன்னட மொழியினன் கன்னடன் என்பதுபோல,
இந்தி மொழியினன் தானே இந்தியனாக இருக்க முடியும்...
தமிழன்- இந்தியன் என்றால், அது அடிமைத் தனமல்லாமல் வேறென்ன?
இது கூடவா திராவிட நாடு இல்லையேல் சுடுகாட்டுக்குப் போவதாகப் பசப்பிய தி.மு.க. தலைவர்களுக்கு விளங்கவில்லை.
ஆக, தமிழிய அரசியல், பொருளியல், வாழ்வியல் உரிமைகளுக்கு முழுக்க முழுக்கத் தடையாய் இருந்து தமிழர்களை அடிமைப்படுத்தியது தி.மு.க,, அ.தி.மு.க. அல்லாமல் வேறென்ன?
இக்கட்சிகள் தமிழர்கள் உரிமைக்குப் போராடியதும் இல்லை, போரிட்டதும் இல்லை.
ஆளுநர் பதவி தேவையில்லை என்று 1962 இல் தாங்கள் ஆட்சிக்கு வருவதற்கு முன்பு சட்டப் பேரவையில் பேசிய தி.மு.க.வின் பேச்சை, ஆட்சிக்கு வந்தபின் அவர்களின் நிகழ்வுகளோடு ஒப்பிட்டுப் பார்த்தால் தெரியும்.
‘‘கவர்னர் பதவி என்பது தேவையற்ற ஒன்று. அந்தப் பதவிக்காக ஆண்டுதோறும் பல இலக்கம் ரூபாய்களைச் சம்பள மாகவும், படிகளாகவும் மக்கள் வரிப்பணத் திலிருந்துகொட்டிக் கொடுப்பது அர்த்தமற்ற ஊதாரிச் செலவாகும். மற்றும் தமிழ்நாட்டிற்கு ஒரு வடவரை கவர்னராக நியமிப்பது, தமிழர்கள் வடவருக்கு அடிமைகள் என்பதை எடுத்துக் காட்டுவதாகவே உள்ளது. தமிழரை அவமதிக்கும் இச் செயல் கூடாது என்பதே திராவிட முன்னேற்றக் கழகத்தின் கருத்தாக இருந்து வருகிறது.
இக் கருத்தைச் சட்டமன்றத்தில் வலியுறுத்தும் பொருட்டு ஆண்டுதோறும், சட்டமன்றக் கூட்டத்தைத் தொடங்கி வைக்கும் கவர்னர் உரை நிகழ்த்தும்போது, அந்த உரையைப் புறக்கணிப்பது என்று தி.மு.கழகச் சட்டமன்றக் கட்சி முடிவு செய்திருந்தது. அதற்கு இணங்க, ஆளுநர் உரை நிகழும் எந்த நிகழ்ச்சியிலும் தி.மு.கழகச் சட்டசபைக் கட்சியினர் கலந்து கொள்வதில்லை’’
- என்று அறிவிப்பு செய்தார் அண்ணாத்துரை. ஆனால் இப்போதோ திமுகவின் தலைவர்கள் பிற கட்சி ஆட்சி செய்கிறபோது, தமிழக சட்டப்பேரவையை இந்திய அரசு கலைக்க வேண்டும் எனச் சொல்லுவதும் ஆளுநர் ஆட்சியைக் கொண்டுவரச் சொல்லிக் கோரிக்கை வைப்பதும் எந்த அளவு அடிமைப் போக்குடையது.
தமிழகத்தின் சட்டப் பேரவையை இதுவரை நான்கு முறை கலைத்திருக்கிறது இந்திய அதிகார வெறியரசு.
ஆளுநர் என்கிற இந்திய அரசின் கைப்பாவைக் குரிய அதிகாரியைக் கையில் வைத்துக் கொண்டு இந்திய அதிகார வெறி அரசு தமிழகத்திற்குள் வந்து நேரடி ஆட்சி செய்திருக்கிறது.
1976 சனவரி 31 ஆம் நாள் முதல் 1977 சூன் 30 ஆம் நாள் வரை ஏறத்தாழ ஒன்றரை ஆண்டுகளும்,
1980 பிப்ரவரி 17 முதல் சூன் 9 ஆம் நாள் வரை ஏறத்தாழ நான்கு மாதங்களும்,
1988 சனவரி 30 முதல் 1989 சனவரி 27 ஆம் நாள் வரை ஏறத்தாழ ஓராண்டுகளும்,
1991 சனவரி 30 முதல் சூன் 24 வரை ஏறத்தாழ ஆறு மாதங்களும்
ஆக மொத்தம் மூன்றரை ஆண்டுகள் இந்திய அதிகார வெறி அரசு ஆளுநரைக் கொண்டு தமிழக சட்டப் பேரவையைக் கலைத்து விட்டு ஆட்சி செய்திருக்கிறது என்றால், அது தமிழ்நாட்டிற்கு, தமிழர்க்கு நேர்ந்த இழிவில்லையா?
ஆளுநர் உரையைக்கூட ஏற்க மாட்டாமல், புறக்கணிப்போம் என்றவர்கள், ஆளுநர் ஆட்சிக்கு ஏன் அடிபணிந்து போயினர்.
ஆக, திராவிட நாடு கேட்டவர்கள், இந்தியப் பாதந்தாங்கிகளாக மாறி அடிமைப்பட்டுப் போனார்கள் என்பதல்லாமல் வேறென்ன?
ஆக, தமிழ்நாட்டு உரிமைகளுக்கே போராடாத இவர்கள், உருவாகாத திராவிட நாட்டுக்கு எப்படிப் போராடியிருக்க முடியும்?
அவர்களின் திராவிட நாட்டு முழக்கம் என்பது வெற்றுப் பசப்பு முழக்கம் அல்லாமல் வேறென்ன?
தங்களை அடையாளப்படுத்திப் பெரிதாகக் காட்டிக் கொள்ள வேண்டும் என்பதற்கான ஏய்ப்பு முழக்கங்களையல்லவா அவர்கள் முழங்கிக் காட்டினர்.
தமிழ்நாட்டைப் பற்றியே கவலைப்படாத இவர்கள் தமிழ்நாடு, கேரளம், ஆந்திரம், கருநாடகம் ஆகியவற்றை இணைத்துத் திராவிட நாடு கேட்டதாகக் கூறியதும், அதைப் பெறவில்லை என்றால் சுடுகாட்டுக்குப் போய்விடுவதாகக் கூறியதும் ஏய்ப்பும் & ஏமாற்றும் அல்லாமல் வேறென்ன?
தமிழ்நாட்டையே ஒருங்கிணைக்க, உறுதிப்பட வென்றெடுக்கத் திட்டமில்லாத இவர்களால் திராவிட நாட்டை (தமிழக, ஆந்திர, கருநாடக, கேரள) எப்படி ஒருங்கிணைத்து எப்படி வென்றெடுத்திருக்க முடியும்.
‘ஏன் வேண்டும் இன்பத் திராவிடம்’ & என எழுதிய முரசொலி மாறன், பின்னர் ‘மலர்க மாநில சுயாட்சி’ என்று மாநில சுயாட்சிக்கு விளக்கம் எழுதியதும், அதற்கும் பின்னால் இந்திய ஆட்சிக் கட்டிலில் அமைச்சராய் வலம் வந்த போதெல்லாம் அந்த மாநில சுயாட்சி குறித்துகூட வாய் திறக்காமல் இந்திய ஆட்சியின் பதவிக்காக வெளிநாட்டுக் கூட்டுக் கொள்ளைக்கு வழி ஏற்படுத்திக் கொடுத்திட்ட ‘உலக வர்த்தக தோகா மாநாட்டுப் பேச்சையே உச்சி முகர்ந்து பாராட்டிவிட்டு வந்த வகையில், தமிழகத்தை அடிமைப்படுத்தியதான கேடு கெட்ட போக்காகவே அவர்களின் வரலாறு நாற்றமெடுக்கிறது.
டால்மியாபுரத்திற்கு மாறாகக் ‘கல்லக் குடி’ எனப் பெயர் வைக்கக்கோரித் தண்டவாளத்தில் தலைவைத்த கருணாநிதிதான் மார்வாடிகளின் மடியில் தலைவைத்து வடசென்னைத் தெருவுக்கு ‘சோர்டியோ மால் ஜெயின்’ எனப் பெயரிட்டும், பழைய மாமல்லபுரம் சாலைக்கு ராஜீவ் காந்தி சாலை என்றும், சென்னை - பொது மருத்துவமனைக்கு ராஜீவ்காந்தி மருத்துவமனை என்று பெயர் வைத்தும் தில்லிக்கு மண்டியிட்டுத் தமிழ்நாட்டை முற்றாகச் சூம்பச் செய்து இரண்டகம் செய்தார்.
தமிழீழத்தின் 2009 இல் நடந்த இன அழிப்பு அட்டூழியத்திலும் அதற்கு முன்பும் பின்பும் நடந்த பல்வேறு தாக்குதல்களிலும் இந்திய அரசோடுகூடிக் குலாவிக் கொண்டு தமிழ்நாட்டையே இந்தியாவுக்குக் காவு கொடுத்த கயமைப் போக்கையே தி.மு.க.வும், தொடர்ந்து அதிமுகவும் செய்தன.
ஆக, முழுக்க, முழுக்க பசப்பிலும் பொய்யிலும், புரட்டிலுமே தோன்றி வளர்ந்த தி.மு.க.வையும் அதைத் தொடர்ந்து அதிமுகவையும் தமிழ்நாட்டை, அதன் உரிமை வாழ்வைப் பாழடித்த கட்சிகள் என்று சொல்லாமல் வேறெப்படிச் சொல்வது.
இடஒதுக்கீடு, தமிழில் வழிபாடு, சீர்திருத்தத் திருமணம் & எனச் சில குமுக சலுகைகள் (அவற்றையும் அரைகுறையாகவே) பெற்றுத் தந்திருப்பதைத் தவிர வேறென்னவற்றையும் இவர்கள் செய்து விடவில்லை.
ஆனால் - இப்படியான இவர்களின் கொள்கை தவறுகளை, நடைமுறை ஏய்ப்புகளைப் பட்டியலிட்டுச் சுட்டிக் காட்டித் திறனாயாமல், அவற்றுக்கு மாறாக அவர்கள் பிறப்பால் தமிழர்கள் இல்லை என்பதாகவும், எனவேதான் தமிழ்த்தேசம் பேசாமல் திராவிடம் பேசினார்கள் என்பதாகவும் குறை பேசுவது, உண்மையான திறனாய்வும் இல்லை; சரியான திசை வழியும் இல்லை.
மார்க்சை செருமானியர், அம்பேத்கரை மராட்டியர் எனவே அவர்கள் தமிழர்களுக்குத் தலைவராக முடியாது, அவர்களின் கருத்துகள் தமிழர்களுக்கு விடிவைத் தர முடியாது என்பதாகக் கருத்துடைய சிலர், பெரியாரைக் கன்னடர் என்றும், அவரால்தான் தமிழ்த் தேச எழுச்சி சிதைக்கப்பட்டதாகவும் பிதற்றி வருகின்றனர்.
ஒருவரைப் பிறப்பால் அடையாளப்படுத்தி, இழிவுபடுத்துகிற பார்ப்பனிய மனு தரும வெறி, அப்படியானவர் மூளைகளுக்குள்ளும் புகுந்து கொண்டது...
எனவேதான், அவர்கள் பெரியாரின், அண்ணாத்துரையின், கருணாநிதியின் இன்ன பிற கட்சித் தலைவர்களின் குருதிகளை ஆய்வு செய்து, இது தமிழ்க் குருதி, இது கன்னடக் குருதி, இது தெலுங்கு குருதி என்று இனப்பாகுபாடு படுத்துவதோடு இது நாடார் குருதி, இது கள்ளர் குருதி, இது பறையர் குருதி, இது நாயுடு குருதி என்று சாதி, வருணப் பாகுபாடும் செய்து இழிவுபடுத்துகிற இழிவு அறிவைக் கொண்டிருக்கின்றனர்.
பிறப்பொக்கும் எல்லாவுயிர்க்கும் என்று இடித்துரைத்த வள்ளுவ அறம் அவர்களின் மூளைகளுக்குள் இன்னும் பதிவாகவில்லை.
ஒருவருடைய செயல்களையும், அவரவர் களின் கொள்கை கோட்பாடுகளையும் நடைமுறை களையும் திறனாய்வதும், திருத்துவதம், தெளிவு படுத்துவதுமே குமுகப் பொறுப்புடைய அனைவரின் கடமையுமாகும்.
ஆனால் பிறப்பால் ஒருவரை இழிவுபடுத்துகிற ஆரியப் பார்ப்பனிய நடைமுறையைத் தமிழக அற உணர்வினர்கள் ஏற்க முடியாது; ஏற்கக் கூடாது.
அந்த வகையில் அண்ணாத்துரை அல்லது கருணாநிதி கொண்டிருந்த கொள்கையும் கோட் பாடும் மட்டுமல்ல, அவர்கள் மேற்கொண்ட இந்திய அடிமைத் தமிழக அரசின் தேர்தல் வழி நாடாளுமன்ற சட்டமன்ற நுகர்ச்சிக்கான வழிமுறைகளும் பிழைபாடானவை, தமிழ்த்தேச விடுதலை எழுச்சிக்குத் தடையானவை; பகையானவை என்று ஓங்கி ஒலிக்காமல் அண்ணாத் துரையின் பெற்றோரில் ஒருவர் தெலுங்கர் என்றும், கருணாநிதியின் குலம் இசைவேளாளர் குலம் அது, தமிழ்க்குலம் இல்லை என்றும் இழிவுபடுத்துவது திமிர் பிடித்த பார்ப்பனிய வெறி உணர்வில்லாமல் வேறல்ல.
அடுத்து, தமிழ்த்தேச எழுச்சிக்கான பகை இந்திய அரசும், பன்னாட்டு வெறி ஆளுமையுமே தவிர வேறல்ல & என்பதையும் தெளிவுபட உணர்ந்தாக வேண்டும்.
எனவே, இந்திய அரசை எதிர்த்துக் களம் அமைக்காமல், அண்டை இன மக்களையெல்லாம் எதிரிகளாகக் களம் அமைக்கிற நடைமுறை குழப்ப மானது மட்டுமல்ல; எதிரிக்கு வாய்ப்பானதும் கூட.
இதைத்தான் எதிரியான இந்திய அரசும் செய்கிறது, விரும்புகிறது.
இந்தியப் பார்ப்பனியம் தொடக்கத்திலிருந்தே மொழித் தேசிய மக்களை மோதவிட்டு அதில் குளிர் காய்ந்து கொண்டுள்ளது. இந்நிலையில் இந்திய அரசை வலுவான வகையில் எதிர்க்கவில்லை என்று தி.மு.க.வினரைக் குறை கூறுகிறவர்கள் தாங்களும் இந்தியாவை முதன்மையாக நிறுத்தி எதிர்க்காமல் திராவிடம்தான் எதிரி என்று எதிரியைக் கூர்மைப்படுத்தும் முனையை மழுக்குகின்றனர்.
சிலர் பெரியாரைக் கொச்சைப்படுத்துவதிலும், கருணாநிதியை இழிவுபடுத்துவதிலும் காட்டுகிற முனைப்பை இந்தியத்தை எதிர்ப்பதில், மோடியை எதிர்ப்பதில், ஆர்.எசு.எசுவை எதிர்ப்பதில், பன்னாட்டு நிறுவனங்களை எதிர்ப்பதில், சாதிவெறி ஆணவங்களை எதிர்ப்பதில் காட்டுவதில்லை.
ஆக, ஐம்பதாண்டுத் திராவிடக் கட்சிகள் செய்யாமல் விட்டதை நாம் செய்தாக வேண்டுமானால்,
இந்தியத்தை அடிசாய்க்கிற முதற்பணியை மேற்கொண்டாக வேண்டும்.
பார்ப்பனியத்தைக் கருவறுக்கிற அடித்தளத் பணியைச் செய்தாக வேண்டும்.
தமிழ்நாட்டையே விழுங்கிச் சூறையாடும் பன்னாட்டு நிறுவனங்களை விரட்டியாக வேண்டும்.
தமிழர்களைக் கூறுபடுத்திடும் சாதி வெறி ஆணவங்களைத் தீய்த்தாக வேண்டும்.
இவையே 50 ஆண்டுக்காலத் திராவிடக் கட்சியின் ஆட்சி மட்டுமல்ல, தமிழ்நாட்டின் இன்றைய சூழலும் நமக்குப் பாடமாகச் சொல்லித் தந்திருக்கிறது.
(தமிழ்நிலம், இதழ் 9, ஏப்ரல் 2017)
- பொழிலன்