dharumapura aadheenamபல்லக்குத் தூக்குகிறவர்கள் எதுவும் சொல்லவில்லை, பல்லக்கில் போறவருக்கும் சுமப்பார் குறித்து கவலை இல்லை. உனக்கேன் அக்கறை? யாருக்கும் இல்லாத அக்கறை?

இதற்குத் திருவள்ளுவரே தெளிவாகச் சொல்கிறார்.

“அறத்தாறு இதுவென வேண்டா சிவிகை

பொறுத்தானோடு ஊர்ந்தான் இடை” - (குறள் 37)

மனிதனை மனிதன் சுமந்து செல்வது, இதை அறம் என்று சொல்லிவிடாதீர்கள் என்று அறத்துப்பாலில் உரைக்கிறார் வள்ளுவர். சகித்துக்கொள்வதும், தூக்கிச் சுமப்பதுவும் சரி எனப்போகும் மக்களிடம் சுயமரியாதை எண்ணத்தை விதைக்க வேண்டும் அல்லவா! உடன்கட்டை ஏறுதல், தேவதாசி ஒழிப்பு முறை, குழந்தைத் திருமண ஒழிப்பு என அரசு தலையிட்டது இல்லையா என்ன? இவற்றில் எல்லாம் பாதிக்கப்படுபவரை கேட்டுக் கொண்டா தலையிட்டது அரசு. தொடர்புடையவர்களே எதிர்த்த போதிலும், அரசு இவற்றிக்கு எதிராகச் சட்டம் இயற்றியது. சுயமரியாதைக்கு எதிரான இழிவான செயல்களை ஆதரிக்க இயலாது, அனுமதிக்கக் கூடாது.

முன்னதாக தருமபுர ஆதீனத்தின் பல்லக்கில் சுமந்து செல்லல் நிகழ்ச்சிக்குத் திராவிடர் கழகம் எதிர்ப்பு தெரிவித்து இருந்தது. இதைத் தொடர்ந்து மயிலாடுதுறை மாவட்ட வருவாய்த்துறைக் கோட்டாட்சியர் இந்த நிகழ்விற்கு அனுமதி மறுத்தார். பல்லக்கில் தூக்கிச் செல்வதைத் திராவிடர் கழகம் தொடர்ந்து எதிர்த்து வருகின்றது. பெரியாரின் அறிவுறுத்தலைத் தொடர்ந்து, மனிதனை மனிதன் சுமக்கும் பல்லக்குப் பயணத்தைக் கைவிட்டது சங்கரமடம். புதிய ஆதினம் தருமபுரத்தில் பொறுப்பேற்றதில் இருந்து மீண்டும் பல்லக்குத் தூக்கும் முயற்சிகள் நடைபெற, 2020-ஆம் ஆண்டு இது தொடர்பாக ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் வெளியிட்ட அறிக்கையில், மனித உரிமையைச் சிறுமைப்படுத்தும் நிகழ்ச்சியைப் புதுப்பித்து வருகிறார் என்ற தகவலை தெரிவித்து இருந்தார். இதனைத் தொடர்ந்து அந்த நிகழ்ச்சி நிறுத்தப்பட்டு இருந்தது.

பட்டினப் பிரவேசத்தில் பல்லக்குத் தூக்குவதை ஆதரிக்கும் அனைவரும் ஒரே குரலில் பேசவில்லை. ஒரு “நூல்” அளவில் நுண்ணிய வேறுபாடு உள்ளது. நானே சென்று பல்லக்கைத் தூக்குவேன் என்று சொல்லும் அண்ணாமலையும், மதுரை ஆதீனமும் நூலுக்கு இந்தப் பக்கம். நாங்கள் சுமப்போம் என்று சொல்லாமல் ஆதரிப்பதாகச் சொல்லும் மன்னார்குடி ஜீயர், ஹச்.ராஜா ஆகியோர் நூலுக்கு அந்தப் பக்கம். இதுதான் சனாதன வித்தியாசம்.

இதில் சோகம் என்ன என்றால், நூலுக்கு இந்தப் பக்கம் இருப்பவர்களிடம் ஒற்றுமையில்லை. அண்ணாமலை அவர்களுக்குப் பல்லாக்குக் கூட தூக்கக் கூட உரிமை இல்லை. இந்த அவமானம் அண்ணாமலைக்குத் தேவையா? அவரின் பேட்டி ஒன்றில் இந்து மதத்தில் சாதி இல்லை என்றும், 500 ஆண்டுகளாக நடைபெறும் மரபு என்றும் சொன்னார். அந்த மரபிலேயே சாதிதானே அவரைத் தடுக்கிறது. அண்ணாமலை அவர்களே இதைக் கூட கண்டுபிடிக்க தெரிவில்லை, எப்படி தான் IPS-ஆக பணியாற்றினீர்களோ! இந்த நிலையில் நீங்கள், கலைஞரை முட்டாளாக முதலமைச்சர் கருதுகிறாரா என்று கேள்வி கேட்கிறீர்கள்!

ஒரு திரைப்படத்தில் நடிகர் வடிவேலு “மங்குனி" என்று சொல்வார். அதுதான் இப்போது நினைவுக்கு வருகிறது.

மதுரை ஆதீனம், ஆளுநர் வருகைக்குப் பின்தான் இது போன்றவை நடைபெறுவதாக சந்தேகித்தார். மக்களுக்கும் அதே சந்தேகம்தான். ஆளுநர் வருகைக்குப் பிறகுதான் இது போல நின்று போய் இருந்த பழக்கங்கள் மீண்டும் தூசி தட்டப்பட்டுக் கொண்டுவர முயற்சிகள் எடுக்கப்படுகின்றனவா என்ற ஐயம் ஏற்படுகிறது. மன்னார்குடி ஜீயர் அவர்கள் “அமைச்சர்கள் நடமாட முடியாது” என்று மிரட்டும் தொனியில் கருத்துத் தெரிவித்திருந்தார். இது ஒன்றும் வன்முறைக் களம் இல்லை. பின்னர் பேராசிரியர் சுப.வீரபாண்டியன் அவர்களுடனான நேரடி விவாதத்தில், கருப்புக் கொடி காட்டுவோம், கேள்வி கேட்போம் என்று பின்வாங்கிக் கொண்டார்.

எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி சட்டமன்றத்தில் சிறப்புக் கவன ஈர்ப்புத் தீர்மானத்தைக் கொண்டு வந்து பல்லக்குத் தூக்கும் நிகழ்ச்சிக்குத் தடை விதிக்கக் கூடாது என்று வலியுறுத்தினார். பல்லக்குத் தூக்குவது மரியாதை குறைவுக் கிடையாது எனவும், விருப்பத்தின் பெயரிலேயே பல்லக்குத் தூக்குகிறார்கள் என்றும் கூறினார். என்ன செய்ய, அவர்கள் கட்சியில் விருப்பத்தின் பெயரிலேயே குனிந்தும், தவழ்ந்தும் சென்று முன்னாள் தலைமைக்கு விசுவாசத்தைக் காட்டிப் பதவி பெறுவதை வாடிக்கையாகக் கொண்டிருந்தார்கள். ஆகவே அவருக்கு இது தவறாக தெரியாமல் போகலாம்.

இது குறித்துச் சட்டமன்றத்தில் பேசிய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு அவர்கள் பட்டினப்பிரவேச நிகழ்வில் சுமுகமான முடிவு எட்டப்படும் எனவும், வரும் 22 ஆம் நாள் வரை காலம் உள்ளது எனவும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் ஆதீனம் அவர்களுடன் பேசுவார், நல்ல முடிவு எட்டப்படும், விரைவில் அறிவிப்பார் என்றும் கூறினார்.

அனைத்துச் சாதியினர்களும் அர்ச்சகர் ஆகலாம் சட்டத்தை முதலமைச்சர் ஆதீனங்களை அருகில் வைத்துக்கொண்டுதான் சாதித்தார். மக்கள் மனம் கவர்ந்த முதலமைச்சராக அனைத்து விதத்திலும் விளங்கும் தளபதி மு.க.ஸ்டாலின் அவர்கள் இந்தச் சிக்கலிலும் நல்ல முடிவை எட்டுவார் என நாம் எதிர்ப்பார்க்கலாம்.

பார்ப்பனர் அல்லாத ஆதீனங்கள் மீதும் அவர்கள் தம் தமிழ் பணிகள் மீதும் எல்லோருக்கும் மதிப்பு உண்டு. பொதுவாக ஆசைகளைத் துறந்தே துறவி ஆவதாகச் சொல்பவர்கள், பல்லக்கைக் கூடவா துறக்க முடியவில்லை!

Pin It