நேற்று இரவு ஒரு ஏழு மணி இருக்கும். கடைக்குச் சென்றிருந்தேன். எட்டு வயது பையன் ஒருவன் ரெண்டு... ரெண்டரை வயது பெண் குழந்தையைத் தூக்கிக் கொண்டு கடைக்கு வந்தான். அவன் பின்னால் 6 வயதில் ஒரு பையனும் 4 வயதில் ஒரு பையனும் வந்து சத்தியத்துக்கு கட்டுப்பட்டவர்கள் போல நின்றார்கள்.
சிறுமியைக் கடை ஒட்டி கீழே இருக்கும் சிறு திட்டில் அமர வைத்து விட்டு நான்கு லேஸ் பாக்கெட் வாங்கி அவர்கள் மூவருக்கும் ஒவ்வொன்று கொடுத்து விட்டு தனக்கொன்றை வைத்துக் கொண்டு 'சரி போலாம்' என்பது போல பார்த்தான். அந்த சிறுமி.. 'ம்ஹும்.. இன்னொன்னு வேணும்' என்பது போல பார்க்க... நின்று அந்த குழந்தையையே ஒரு கணம் பார்த்தவன் தன்னுடைய லேஸையும் அதனிடமே நீட்டினான். அது சிரித்துக் கொண்டே வாங்கிக் கொண்டது.
அதுவரை கூட சீன் இயல்பில் தான் இருந்தது. அந்த 6 வயது பையனும் சட்டென்று அவனுடைய லேஸை நீட்டினான். அதையும் வாங்கிக் கொண்டு சிரித்தது குழந்தை. அந்த 4 வயது பையன் அண்ணன்கள் இருவரையும் நான் என்ன செய்வது என்பது போல பார்த்தான்.
'நீ வெச்சுக்கோ' என்பது போல பெரியவன் ஜாடை செய்து விட்டு அந்த குழந்தையை தூக்கி கழுத்தில் அமர வைத்துக் கொண்டு நடக்க ஆரம்பித்தான். இரண்டு பக்கமும் அந்த சிறுவர்கள் ஆளுக்கொரு பக்கம் நடக்க... நடுவே பெரியவன் அந்த குழந்தையை கழுத்தில் அமர வைத்து கலைகளை நெஞ்சோடு சேர்த்து பிடித்துக் கொண்டு நடக்க ஆரம்பித்தான்.
அந்த சிறுமி பெரிய அண்ணன் கழுத்தில் அமர்ந்தபடியே இரண்டு கையிலும் லேஸை கெட்டியாக பிடித்தபடி சிரித்துக் கொண்டிருந்தது.
நான் பின்னால் இருந்து பார்த்துக் கொண்டே இருக்க... அவர்கள் மூவரும் எதுவோ பேசிக் கொள்கிறார்கள். மெல்ல நடந்தபடி இருக்கும் அந்தக் காட்சி ஒரு சில் அவுட் ஷாட்டில் ஒரு ஃபோட்டோ ஃபிரேம் நகர்வது போல இருந்தது.
ஒரு தங்கை மூன்று அண்ணன்கள். வரிசையாக இரண்டு வருட இடைவெளியில்... அந்த உறவு சாத்தியமாகி இருக்கிறது. மூன்று அண்ணன்களின் கையில் வளரும் பெண்பிள்ளை... எத்தனை ஆசீர்வதிக்கப்பட்டிருக்கிறது என்று ஒரு கணம் சிலிர்த்தது.
இதே அன்பும் ஆதரவும் காலத்துக்கும் இருக்க வேண்டும் என்று அந்த இருளுக்குள் ஒளி வீச நினைத்துக் கொண்டேன்.
தூக்கி வளர்த்த அண்ணனை பேருக்கு கூட கூப்பிடாமல் பிள்ளைக்கு காது குத்திய தங்கைகள் இருக்கிறார்கள். சொத்து தகராறில்... தம்பியை ஆள் வைத்து வெட்டிய அண்ணன்கள் இருக்கிறார்கள். பொண்டாட்டி பேச்சைக் கேட்டுக் கொண்டு தங்கையை வீட்டுப்பக்கம் விடாத அண்ணன்களும் இருக்கிறார்கள்.
காலம் என்ன சூனியம் வைக்க காத்திருக்கிறதோ. ஆனால் இந்த பசங்களும் அந்த பிள்ளையும்... அந்த சூனியத்தில் சிக்கிக் கொள்ளாத வரம் பெற வாழ்த்துகிறேன். வாழ்வின் பெரும் நம்பிக்கை சகோதரத்துவம். அது வாய்த்தோருக்கு வாழ்வின் வளைவுகள் சுலபமாய் நிமிர்ந்து விடுகின்றன. வாய்க்காதவர்கள் இப்படி வரி வரியாய் எழுதி கடக்க வேண்டி இருக்கிறது.
-கவிஜி