நாம் இந்தக் கட்டுரையில் குழந்தைகள் எது கேட்டாலும் இல்லை என்று சொல்லாத, அல்லது சொல்லத் தயங்கும் பெற்றோர்களைப் பற்றி பார்ப்போம். குழந்தைகள் மீது மிக அதிகமாகச் செல்லம் கொடுத்து வளர்ப்பவர்கள் இவர்கள்.

உங்கள் வீட்டிற்கு வந்திருக்கும் விருந்தினர்களுடன் நீங்கள் பேசிக்கொண்டிருக்கும்போது, உங்கள் குழந்தை ஓடி வந்து ‘அப்பா! இப்போதே எனக்கு ஐஸ்கிரீம் வேண்டும்' என்று கெஞ்சிக் கேட்பதாக வைத்துக் கொள்வோம். நீங்கள் என்ன செய்வீர்கள்? சொன்னவுடன் வாங்கிக் கொடுத்து விடுவீர்களா? அல்லது இப்போது வேண்டாம், பிறகு வாங்கித் தருகிறேன் என்று காரணங்களைச் சொல்லி சமாதானப்படுத்துவீர்களா?

குழந்தை கேட்கும் போது எப்படி சும்மா இருக்க முடியும்? உடனடியாக வாங்கிக் கொடுத்து விடுவேன் என்று சொன்னால், நீங்கள் இந்த தாராள அனுமதி கொடுக்கும் பெற்றோர்கள் வகையில் வருகிறீர்கள். நீங்கள் உங்கள் குழந்தை மீது வைத்திருக்கும் பாசமும் அக்கறையும் மிக அதிகம். அதனால் உங்கள் குழந்தைக்கு எந்த எல்லையையும் நிர்ணயித்து அவர்கள் மனம் வருந்துவதை விரும்பாதவர்கள்.

parents with kidsகுழந்தைகள் வளரும் விதம் பற்றி ஆராயும் மனவியலாளர்கள் இப்படிக் குழந்தைகளின் விருப்பங்களை எல்லாம் உடன் அனுமதித்து நிறைவேற்றிக் கொடுத்துக் குழந்தைகளை வளர்க்கும் வகைக்கு PERMISSIVE PARENTING என்று சொல்லுகிறார்கள். இவ்வகையான பெற்றோர்களுக்கு குழந்தைகளிடம் இருந்து எதிர்பார்ப்புகள் எதுவும் இருக்காது. ஆனால் குழந்தைகளின் வளர்ச்சியில் பெற்றோர்களின் பங்களிப்பு அதிகமாக இருக்கும்.

குழந்தைகள் நல்ல பழக்க வழக்கங்களையும், பண்புகளையும் கற்றுக் கொள்ள வேண்டும். நன்றாகப் படித்து வாழ்வில் உயர வேண்டும் என்றெல்லாம் அதிகம் ஆசைப்பட மாட்டார்கள். அப்படியே ஆசை இருந்தாலும் மிகவும் குறைவுதான். ஆனால் வீட்டில் குழந்தைகள் மகிழ்ச்சியாக வளருவதற்கான சூழல் எப்போதும் இருக்கும்படி பார்த்துக் கொள்வார்கள். எல்லா நேரங்களிலும் உணர்வு பூர்வமான பாசம், அன்பு, அக்கறை நிறைய உண்டு. பாசமழை பொழிந்து கொண்டே இருப்பார்கள். வீட்டில் நடக்கும் அனைத்து நிகழ்வுகளும் குழந்தைகள் விருப்பப்படிதான் நடந்தேறும். குழந்தைகள்தான் இவர்களின் உயிர், உலகம் எல்லாம்.

இவ்வகைப் பெற்றோர்களின் குணாதிசயங்கள்

இவர்கள் வீட்டில் குழந்தைகளுக்கு எந்தக் கட்டுப்பாடும் இருக்காது. அப்படியே இருந்தாலும் அனைத்து கட்டுப்பாடுகளும் பெயரளவில்தான் இருக்கும். கட்டுப்பாடுகளை மீறும் குழந்தைகளைக் கண்டிக்கவும் மாட்டார்கள். குழந்தை என்றால் அப்படித்தான் இருக்கும் என்று சொல்லி மேலும் கொஞ்சுவார்கள். குழந்தைகள் எது கேட்டாலும் உடன் கிடைக்கும். குழந்தைகள் கெஞ்சினால் கேட்கவே வேண்டாம், முதலில் குழந்தையைத் திருப்திப்படுத்திய பிறகுதான் அடுத்த வேலை பார்ப்பார்கள்.

குழந்தைகள் படிப்பிலோ அல்லது விளையாட்டிலோ சிறந்து விளங்கினால் பரிசு கொடுத்து பாராட்டி அவர்களை ஊக்கப்படுத்தலாம். ஆனால் இவர்கள் குழந்தைகள் எதுவும் சாதிக்காமல் இருந்தால் கூட அவ்வப்போது அவர்களைப் பரிசு மழையில் திக்குமுக்காட வைத்து விடுவார்கள். இம்மாதிரி சாதிக்காமல் கிடைக்கும் பரிசுகள் குழந்தைகளிடம் எந்த நல்ல பழக்கத்தையும் உண்டு பண்ணுவது இல்லை. மேலும் கொடுக்கும் பரிசுகளுக்கும் மரியாதை இல்லாமல் போய் விடுகிறது; கொடுத்த பரிசும் இரண்டாம் நாளே வீட்டின் ஒரு மூலையில் கேட்பாரற்றுக் கிடக்கும்.

குழந்தைகளைத் தங்களுக்குச் சமமாக நண்பர்கள் போல் பாவித்து வளர்ப்பதால், குழந்தைகள் எல்லைகளை மீறும் போது இவர்களால் கண்டிக்க முடியாமல் போய் விடுகிறது. தோளுக்கு மேல் வளர்ந்த பிறகுதான் தோழன். அதாவது பதின் பருவத்தில் நுழையும் போதுதான் குழந்தைகளைத் தோழர்கள் போல் பாவித்து வளர்க்கலாம். ஆனால் இவ்வகைப் பெற்றோர்கள் சிறு பிராயத்திலிருந்தே குழந்தைகளை தோழனாகக் கருதுவதால் கண்டிக்க முடிவதில்லை. நாளடைவில் குழந்தைகளுக்குச் சிறு சிறு பரிசுகளும், உறுதிமொழிகளும் கொடுத்துதான் அவர்களிடம் இருந்து எந்த வேலையையும் வாங்க முடியும். சில நேரங்களில் அவர்கள் பள்ளிக்கூடம் போவதற்கே தினம் பாக்கெட் மணியும், பலதரப்பட்ட உத்திரவாதங்களும் கொடுக்கும் நிலை வந்து விடுகிறது.

குழந்தைகளுக்கு உண்டாகும் விளைவுகள்

ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையுமா என்பார்கள். சிறுவயதிலேயே நல்ல பழக்க வழக்கங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து வளர்க்காததால் இம்மாதிரி குழந்தைகளின் மேனரிசங்கள் அவ்வளவாகப் பாராட்டும்படி இருக்காது. உடை உடுத்துதல், சாப்பிடும் முறை, கழிப்பறைப் பழக்கங்கள், புதியவருடன் பழகும் முறை முதலியன அவ்வளவாக செம்மையுற்று இருக்காது.

அனுமதி தாராளம் என்பதால் நிறைய கவர்ச்சியான விளம்பரங்களால் ஈர்க்கப்படும் குழந்தை துரித உணவுகள், சர்க்கரைச் சத்து அதிகம் உள்ள உணவுகள் போன்ற ‘ஜங்க் ஃபுட்,' வகைகளைச் சாப்பிட்டு உடல் பருமன் பிரச்சினையால் அவதிப்படலாம். மேலும் என்ன சாப்பிடுவது, எப்போது சாப்பிடுவது என்பதும் குழந்தையின் விருப்பப்படிதான் அமையும்.

வீட்டில் கண்டிப்பு இல்லை என்பதால் பள்ளியில் படிக்கும் காலங்களில் வீட்டுப்பாடங்கள் எல்லாம் முடிக்க மாட்டார்கள். படிப்பிலும் ஆர்வம் இல்லாததால் வகுப்பில் தர வரிசையிலும் பின் தங்குவார்கள். தற்போது எல்லாம் கைபேசி, தொலைக்காட்சி என இவர்களின் கவனங்கள் திரும்பி, திரை நேரம் அதிகமாகிக் கொண்டே இருப்பதால் குழந்தைகளின் உடல் பருமன் மேலும் அதிகரிக்கத்தான் வாய்ப்பாகி விடுகிறது. கண்டிப்பும் கட்டுப்பாடும் இல்லாமல் வளருவதால் விடலைப்பருவம் வந்தவுடன் மது, போதை போன்ற கெட்ட பழக்கங்கள் எட்டிப் பார்க்கத் தொடங்கி விடுகின்றன.

இம்மாதிரி வளரும் குழந்தைகளுக்கு எளிதில் மற்றவர்களுடன் பழகி அவர்களை நண்பர்கள் ஆக்கிக் கொள்ளும் திறமை அதிகம். தன்னம்பிக்கை அதிகம் என்பதால் நண்பர்கள் புடைசூழ தலைவன் ரேஞ்சுக்கு இருப்பார்கள். எப்போதும் நண்பர்களிடம் இருந்து வரும் பாராட்டுகள் மட்டுமே இவர்களுக்குப் பிடிக்கும். பாராட்டுகள் கிடைக்காமல் விமரிசனங்கள் கிடைக்கும் போது கோபத்தைக் கட்டுப்படுத்தத் தெரியாததால் சில நேரங்களில் ஆபத்தையும் வரவழைத்துக் கொள்வார்கள்.

பெற்றோர்கள் எப்படி மாறலாம்?

இந்த வளர்ப்பு முறையில் குழந்தை வளர்க்கும் பெற்றோர்கள் கட்டாயம் குழந்தைகளுக்கான தெளிவான வரைமுறைகளையும் எல்லைகளையும் வகுத்துக் கொள்ள வேண்டும். குழந்தைகளின் விருப்பத்திற்கு எல்லாம் உடனடி அனுமதியும், நிறைவேற்றித் தரும் ஆர்வமும் தேவையில்லை.

பாச மிகுதியால் அவர்களை உடனடி சந்தோஷம் (INSTANT GRATIFICATION) என்ற போதைக்கு அடிமையாக்க வேண்டாம். குழந்தைகள் கேட்பதில் நியாயம் இருப்பின் செய்யுங்கள். இல்லை என்றால் கிடையாது என்று உறுதியாகச் சொல்லுங்கள். தேவைக்கும் ஆசைக்கும் உள்ள வித்தியாசத்தை அவர்களும் புரிந்து கொள்வார்கள்.

அடுத்து குழந்தைகளிடம் இருந்து எதையும் எதிர்பார்க்காமலேயே அவர்கள் போக்கில் விட்டு வளர்க்க முடியாது. நல்ல பழக்கங்கள், பண்புகள், நெறிமுறைகள் எல்லாம் தானாக வந்து விடாது. இன்றைய உலகில் சமூகமும், பள்ளிக்கூடமும் வெளி உலகமும் உங்கள் குழந்தைக்கு இதையெல்லாம் சொல்லித் தராது. குழந்தைகளிடம் ஒவ்வொரு செயலையும் பெற்றோர்கள்தான் விளக்கிச் சொல்ல வேண்டும். சொன்னதை செய்ய வேண்டும் என்றும் எதிர்பார்க்க வேண்டும். செய்யாவிட்டால் என்ன செய்வது என்று தீர்மானித்து செயல் படுத்த வேண்டும். குழந்தை என்றால் அப்படித்தான் இருக்கும் என்று சொல்லி பெற்றோர்களுக்கு இருக்கும் குழந்தை வளர்ப்பு என்னும் பொறுப்பைத் தட்டிக் கழிக்க முடியாது.

பொதுவாகவே இரண்டு வயது ஆனவுடன் பெற்றோர்கள் பாசத்தை எல்லாம் மனதுக்குள்ளேயே வைத்துக் கொண்டு, வெளியில் அக்கறையும் கண்டிப்பும் தெரியும்படியாக வளர்க்க வேண்டும். குழந்தைகள் செய்யும் செயலுக்கு அவர்களைப் பொறுப்பேற்கச் செய்ய வேண்டும். அப்போதுதான் அடுத்த முறை செய்யும் செயல் சிறப்பாக அமையும். ஒவ்வொரு முறையும் நல்ல செயல் செய்யும் போது எல்லாம் மனம் திறந்து பாராட்டுங்கள். அதுவே குழந்தைகளுக்கு மிகுந்த உற்சாகத்தைக் கொடுக்கும்.

பரிசுகளை எல்லாம் குழந்தைகள் அதிகம் எதிர்பார்க்க மாட்டார்கள். பரிசு கொடுக்க வேண்டும் என்று நினைத்தால் ஒரு அரை மணி நேரம் தொலைக்காட்சிக்கு அனுமதிக்கலாம். அதற்கு மேலும் தொலைக்காட்சி வேண்டும் என்று குழந்தை அடம் பிடித்தால் நீங்கள் மீண்டும் ஒரு நல்ல பழக்கத்திற்கு குழந்தையிடம் உத்திரவாதம் கேளுங்கள். இப்படித் திரை நேரத்தையே பரிசாக மாற்றுங்கள். சுருக்கமாகச் சொல்ல வேண்டும் என்றால் நீங்கள் கொடுக்கும் பரிசும் பாராட்டும் குழந்தையை மாற்ற வேண்டும். ஆரம்பத்தில் இது பெற்றோர்களுக்கு சிரமமாக இருந்தாலும் நாளடைவில் குழந்தைகள் நல்லவைகளை எளிதில் கற்றுக் கொள்வார்கள். தாங்கள் வளரும் வீட்டுச் சூழலையும் பாதுகாப்பாக உணருவார்கள். பெற்றோர்களுக்கும் அளவில்லா மகிழ்ச்சி உண்டாகும்.

- மருத்துவர். ப. வைத்திலிங்கம், குழந்தைகள் நல மருத்துவர்.