hills busசாப்டிருக்கலாம். சாப்பிட்டிட்டு இருக்கலாம். சாப்பிடாமல் கூட இருக்கலாம்.

ஆனால்... பேருந்து வந்து விட்டால்... எல்லாவற்றையும் விட பேருந்தில் ஏறி சீட் போடுவது தான் முக்கியம். பேருந்து பொள்ளாச்சி பேருந்து நிலையத்துக்குள் வரும் போதே அசரீரி சொல்லி விடும். பிறகு ஆச்சரியங்கள் நடந்தேறும்.

ஆக நிறைய வயிறுகள் பசித்தபடி இருக்கும். நிறைய வயிறுகள் தேநீருக்கும் கடிக்கும் காத்திருக்கும். ஆழியார் வரை... டிக்கெட் எடுப்பது... சீட்டில் அமர்வது... அமர அட்ஜஸ்ட் செய்வது... தெரிந்த முகம் இருந்தால்... நலம் விசாரித்துக் கொள்வது என்று அடுத்த அரைமணி நேரம் எப்படி போகிறது என்று தெரியாது. ஆனால்.. ஆழியார் காற்று... ஜன்னல் வழியே கும்மி அடிக்கும். ஈரக்காற்றுக்கு முந்தி அடிக்கும் தோராயமான ஒரு வகை காற்று அது.

ஆழியார் -ல்... பேருந்து பத்து நிமிடம் நிற்கும். அது 10 நிமிடமா 15 நிமிடமா என்று அன்றைக்கு தான் தெரியும்.

சரி... ஆழியார் தேநீர் கடையில் பேருந்து நின்றதும்... இறங்கினோர் முதலில் இயற்கை உபாதைக்குச் செல்வார்கள். அதன் தொடர்ச்சியாக டீ சொல்லி விட்டு வடையோ பஜ்ஜியோ எடுத்து கடிப்பார்கள். (டோக்கன் எல்லாம் இப்போது தான் ) வயதானவர்கள்... இறங்க விரும்பாதோர்கள்... மற்றும் கிறக்கமாக இருப்போர்கள்... கீழே இறங்க வேண்டாம் என்று பேருந்துக்குள்ளேயே இருப்பார்கள்.

அப்படியானவர்களுக்கு டீயும் வடையும் ஜன்னல் வழியே கூட வந்தவர் கொண்டு வந்து கொடுப்பார்கள். அந்தக் காட்சியே ஒரு தூர தேசத்துக்கு செல்வதற்கான முன் தயாரிப்பாக இருக்கும். 3 மணி நேர பயணம் இப்போது சுருங்கி இருக்கலாம். அப்போது அது நீண்ட நெடிய தூரம்.

இப்போது தான்.. வேதாத்திரி மகரிஷி கட்டடத்துக்கு சற்று முன்னால் இருக்கும் தேநீர் கடையில் பேருந்து நிற்கிறது. முன்பெல்லாம் அதைத் தாண்டி செக் போஸ்ட்க்கு சற்று முன்பு தான் பேருந்து நிற்கும். மதிய நேரத்தில் பேருந்து அங்கு சென்று விட்டால் ஓட்டுனரும் நடத்துனரும் மதிய உணவு அங்கு தான் சாப்பிடுவார்கள். நானும் தாத்தாவோடு சேர்ந்து சில முறை சாப்பிட்டுருக்கிறேன். வால்பாறையில் இருந்து காலை 10 / 10.30 மணிக்கு கிளம்பும் பேருந்து 12./ 12.30 மணி வாக்கில் ஆழியார் வந்து சேரும். அப்போது கண்டிப்பாக அங்கு தான் சாப்பாடு.

ஊரில் உப்புத் தண்ணியையும் சப்பத் தண்ணியையும் குடித்து நாக்கு செத்து போனவனுக்கு ஆழியார் பச்சை தண்ணி அமிர்தம். முதலில் ஒரு கண்ணாடி டம்ளர் முழுக்க தண்ணீர் வாங்கி குடித்து விட்டு தான் பிறகு டீ- க்கு செல்வேன். ஆழியார் காற்று மேலே பட்டதுமே... மனதுக்குள் ஒரு விடுதலை உணர்வு மேலோங்கும். எதிலிருந்தோ விடுபட்ட மனம் வெள்ளந்திக்குள் வந்து அமர்ந்து கொள்ளும்.

கூட ஆங்காங்கே நின்றும் அமர்ந்தும் டீ குடித்துக் கொண்டிருக்கும் எல்லாருமே தெரிந்தவர்கள் போல நடந்து கொள்தலில் ஒரு தூரத்து இணக்கம் பொருந்தி இருக்கும். எல்லாமே பழக்கப்பட்ட முகம் போன்ற பாவனையும்... உடல்மொழியும் அங்கே ஒருவகை பாதுகாப்பு உணர்வை பெறச் செய்யும்.

இதே இடம் வால்பாறையில் இருந்து பொள்ளாச்சி வருகையில் வளைவுகளிகளினாலும்... தூரங்களினாலும்... பேருந்துக்குள் இருந்த களைப்புக்கு அந்த தேநீரும்... கடியும்.. வெளிக்காற்றும்... வெளியே நிற்பதும்... புத்துணர்ச்சி ஏற்படுத்தும். அதே போல கீழே இருந்து மேலே செல்வோருக்கு மனத்தளவிலும் உடல் அளவிலும் தங்களை தயார்ப்படுத்தும் இடமாகவே தான் இந்த ஆழியார் டீ கடைகள் இருந்தன.

சில பேருந்துகள்.. ஆழியார்- ல் நிறுத்தாமல்... அட்டகட்டியில் நிறுத்துவார்கள். அது அதை விட குளுமை நிறைந்த உச்சி. அங்கு கிடைக்கும் பச்சைத் தண்ணீர் இன்னும் சிலிட்டிருக்கும். போண்டா வாடை முறுக்கு என்று அதுவும்... ஆசுவாசத்தை இன்னும் கொஞ்சம் மெருகேற்றி விடும் இடம்தான். காது அடைத்து... உலகை விட்டே தனித்து ஒதுங்கி விட்ட ஒரு வகை பெருமூச்சை நான் உணர்ந்திருக்கிறேன்.

சில பேருந்துகள்... அங்கும் நிற்காமல்... ஊமாண்டி மொடக்கில் நின்றதும் உண்டு.

கரடி அதிகாமாக நடமாடும் இடம் ஒன்று உண்டு. புலி பள்ளத்தாக்கு தாண்டியதும் அந்த இடம் வரும். வாட்டர்பால்ஸ் - ன் ஒரு எஸ்டேட் என்று நினைக்கிறேன். அந்த இடத்தின் பெயரை மறந்து விட்டேன்.

அங்கும் சில பேருந்துகள் நின்றதுண்டு. ஓட்டுநர்களையும் நடத்துனர்களையும் பொறுத்தது.. எங்கு நிறுத்தப்படுகிறது என்பது. எங்கு நிறுத்தினாலும்... நமக்கு டீயும் கடியும் கண்டிப்பாக உண்டு.

பொள்ளாச்சி டூ வால்பாறை - வால்பாறை டூ பொள்ளாச்சி பேருந்து பயணத்தில் இருந்து ஒருக்காலும் விடுபடவே விடுபடாத கடியும் டீயும்... அந்த 64 கிலோ மீட்டரை ஆசுவாசமாக கடப்பதற்கான எனர்ஜி டானிக்காகவே தான் நான் பார்க்கிறேன்.

அதுமட்டுமல்லாமல் டீயும் கடியும் இல்லாத அந்த பேருந்து பயணத்தில் ஜீவன் ஒருபோதும் இருக்காது..!

- கவிஜி

Pin It