relationshipஇந்த வார்த்தையை நாம் சினிமாவில்... அடிக்கடி கேட்கிறோம். பார்க்கிறோம். ஆனால்... இந்த வார்த்தை தான் இந்த வாழ்வின் எல்லா சந்து பொந்துகளிலும் மூலை முடுக்கிலும் எல்லாம் வல்ல சூட்சுமமாய் இருக்கிறது.

ஒரு சினிமா நல்ல சினிமாவாக மாறும் இடம் எடிட்டிங் மேஜை என்பார்கள்.

பாரதிராஜாவெல்லாம்.. எடுத்த படத்தை வேறு படமாகவே மாற்றி விடுவாராம் எடிட்டிங் டேபிளில். அத்தனை மாற்றுப் பார்வையை.. எடிட்டிங் என்ற வடிவம் வைத்திருக்கிறது.

பொதுவாகவே மனிதன் தன்னளவில் தான் செய்வதெல்லாம்... சரி என்று தான் செய்வான். சொல்வதெல்லாம் சரி தான் சொல்வான். பார்ப்பதெல்லாம் சரி தான் பார்ப்பான். நினைப்பதெல்லாம் கூட சரி என்று தான் நினைப்பான்.

காரணம்... தான் என்பது தான் மட்டும் தான் என்று நினைக்கும் அறியாமை. இந்த உலகம் எல்லாவற்றுக்குமானது. எது தேவையோ அதை எடிட் செய்து எடுத்துக் கொள்ளும் வல்லமை தான் இங்கு அறியாமை நீக்கும் அற்புதம் செய்யும்.

எங்கே எதை பேச வேண்டும்... என்று அளந்து பேசுவது.. அது குறித்தான எடிட்டிங் மனதுக்குள் ஓடிக் கொண்டே இருக்கையில் தேவை இல்லாத பிரச்சனையில் இருந்து தப்பித்துக் கொள்ள முடியும்.

பெரும்பாலும் காதைத் திறந்து வை. வாயை மூடிக் கொள் என்பார்கள். அது தான் உலகை புரியும் அறிவு. அதைத்தான் தொடர்ந்து தெரிந்து கொள்ள செய்கிறது இந்த வாழ்க்கை பற்றிய பாடம்.

தொடர் படிப்பு என்பது... புத்தகம் தாண்டியதும்... அனுபவம் சார்ந்ததும்... அதில் எல்லாமே இந்த எடிட்டிங் என்ற நுட்பம் நிறைந்ததுமாக இருக்கிறது.

கொஞ்சமும் எடிட்டிங் சென்ஸே இல்லாமல் என்ன பேசுகிறோம் என்றே தெரியாமல்.... எதிரே இருப்போர் கேட்கிறாரா இல்லையா என்று கூட தெரியாமல் பேசிக் கொண்டே இருப்பது... சாட்சாத் தனக்கு தானே ஆப்பு வைத்துக் கொள்வது.

எடிட் செய்து நல்லதை மட்டும் எடுத்துக் கொள்ளாமல்.. எதிரே பேசுபவன் என்ன பேசினாலும் அப்படியே எடுத்துக் கொண்டு வேதவாக்காக மாற்றிக் கொண்டால்... சாட்சாத் உலகம் வைக்கும் ஆப்பில் தானாக சென்று அமர்ந்து கொள்வது அது.

நண்பர்களிடம்... உறவுகளிடம்... சுற்றார் உற்றார் என்று எங்கும் எப்போதும் எடிட்டிங் கருவி மண்டைக்குள் ஓடிக் கொண்டே இருக்க வேண்டும். எடிட்டிங் இல்லாத சொற்கள்.. பிரேக் இல்லாத வண்டி தான். எங்கு எப்போது எப்படி முட்டி நிற்கும் என்று யாருக்கும் தெரியாது.

தேவையான இடத்தில் என்ன பேசுகிறோம் என்பதை விட தேவை இல்லாத இடத்தில் என்ன பேச கூடாது என்ற முன் எச்சரிக்கையை உள்ளிருக்கும் எடிட்டர் தான் எடுத்துக் கொடுப்பார். வாயுள்ள பிள்ளை வாய்ப்பிருக்கும் போது தான் பிழைக்கும். செவியுள்ள பிள்ளை வழுக்கும் போது கூட பிழைத்துக் கொள்ளும்.

படம் பார்ப்பதில் இருந்து... பயணம் செய்வதில் இருந்து... தேர்ந்தெடுத்தல்... மிக முக்கியம். அதற்கு உள்ளிருக்கும் எடிட்டிங் டேபிளில் வேலை நடந்து கொண்டே இருக்க வேண்டும். எத்தனையோ புத்தகங்கள் படிக்கிறோம். எது தேவையோ அதை மட்டும் தான் எடுத்துக் கொள்ள வேண்டும்.

இன்னமும் படிப்பு வசப்பட்டு விட்டால்.. எது தேவையோ அதை மட்டும் தான் படிக்க வேண்டும். கண்டதை தின்பவன் குண்டன் ஆவான் போல கண்டதையும் படிப்பவன்... தண்டம் ஆவான். ஒரு நூல் நல்ல எடிட்டிங் இல்லாமல் நல்ல நூலாக உருவாகாது. ஒரு நல்ல மனிதன் தனக்குள் எடிட்டிங் தன்மை இல்லாமல் தன்னை முழுமையாக்க இயலாது.

நல்ல எடிட்டர் நல்ல காட்சியை ஒருபோதும் வீண் செய்ய மாட்டார். அதே நேரம் மோசமான காட்சியை வைத்திருக்கவும் மாட்டார். வாழ்க்கை பயணத்தில்... ரசனைக்கு பஞ்சம் கூடாது. அதே நேரம்... ரப்சருக்கும் இடம் கூடாது. மோசமான புட்டேஜைக் கூட எடிட்டிங் டேபிள் நல்ல சினிமாவாக மாற்றி விடும்.

மோசமான வாழ்வியல் சூழலைக் கூட எடிட்டிங் மண்டை நல்வழிப் படுத்தி விடும். உள்ளிருக்கும் எடிட்டர் கால போக்கில் மிக சாதுர்யமாக இந்த வாழ்வை கணக்கிட தெரிந்தவராக மாறக்கூடும். கொஞ்சம் கட்டுப்பாடு விதிப்பது போல இருந்தாலும்... அடுத்து என்ன நிகழும் என்று தெரியாத வளைவுகள் கொண்ட வாழ்வில் எடிட்டிங் மைண்ட் செட் ஹாரன் அடித்து விபத்துகளைத் தவிர்க்கும்.

நம்மை நாமே சுத்திகரிக்க நம் கையில் இருக்கும் எடிட்டிங் கத்தரிக்கோல் ஒரு போதும் தயங்க கூடாது. மிக சிறந்த எடிட்டராக நமக்கு நாமே இருக்கும் போது நம்மை சுற்றி நிகழ இருக்கும் தேவையில்லாத கத்தரிப்புகளுக்கு நாம் வாய்ப்பு தருவதில்லை.

-கவிஜி