பெற்றோர் எனும் விவசாயிகள், இணையவழி சுதந்திரம் என்னும் தீப்பந்தத்தை, குழந்தைகளின் கையில் கொடுத்து, சமுதாயம் என்ற கதிர் முற்றிய விளைநிலத்திற்குள் அனுப்பி வெகு நாட்களாகி விட்டது.

 என்னுடைய நண்பர் ஒருவரை பல மாதங்களுக்குப் பிறகு சமீபத்தில் சந்தித்தேன். சிறிது நேர கலந்துரையாடலுக்குப் பின் அவர் என்னிடம் கேட்டார். "உங்கள் மகன் எப்படி படிக்கிறான்?". எல்லாம் ஆன்லைனில் நன்றாக போய்க் கொண்டிருப்பதாக சொன்னேன். ஏதோ யோசித்தவர் "உங்கள் மகன் கதவை மூடிக்கொண்டு தான் ஆன்லைன் வகுப்பைத் தொடர்கிறானா?" என்றார். "இல்லை.. என் மனைவி ஏதாவது பொருள் எடுக்க அடிக்கடி அறைக்குள் செல்வாள். அதனால் கதவை மூடுவதற்கு அனுமதிப்பதில்லை" என்றேன். "நல்லது.. அப்படியே இருக்கட்டும்.. அப்படியே இருக்கற மாதிரி பாத்துக்கோங்க.." என்றார்.

online addictionஎனக்கு இவரை பதினோரு வருடங்களாகத் தெரியும். அவர் ஏதோவொரு மனஅழுத்தத்தில் உள்ளது போல் தோன்றியது. நான் "என்னங்க.. ஏதாவது பிரச்சினையா?" என்று கேட்டேன்.

மனிதர் மடை திறந்த வெள்ளம் போல் அனைத்தையும் கொட்டினார். இவர் மகன் எட்டாம் வகுப்பு மாணவன், எப்போதும் கதவை மூடிக்கொண்டு தான் வகுப்பில் கலந்து கொள்கிறான். கதவைத் திறந்து வைக்கச் சொன்னால் மிகவும் கோபமடைகிறான் என்றார். இவரும், இவர் மனைவியும் வெவ்வேறு துறைகளில் பணி செய்வதால், வீட்டில் பகல் பொழுதில் தொலைக்காட்சி சத்தம் மற்றும் சமையல் செய்யும் சாதனங்களின் இரைச்சல் போன்றவை மிகக் குறைவு. அதனால் அவன் கதவை மூடிக்கொள்ள எந்தத் தேவையும் இல்லை.

அவர் மேலும் தொடர்ந்தார், "பொழுதனைக்கும் செல்போன், இல்லையென்றால் கணினியில் உக்கார்ந்திருக்கான். எப்பொழுது பார்த்தாலும் கதவை மூடிக் கொள்கிறான். என்ன படித்து கொண்டிருக்கிறாய்? என்று கேட்டால், அவனுக்கு நிறைய கோபம் வருகிறது. இது போதாதென்று என் பொண்ணோட செல்போனை சும்மா பார்க்கக் கேட்டால் கூட, என் பெண் என்னை எரித்து விடுவது போல் பார்க்கிறாள். எனக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை" என்றார். நான் "கவலை வேண்டாம். எல்லாம் சரியாகி விடும்" என்று கூறி சற்று நேரத்தில் விடைபெற்றுக் கொண்டேன்.

ஆன்லைன் வகுப்பு, பள்ளி மற்றும் கல்லூரி செல்லும் மாணவ, மாணவிகளுக்குக் கிடைத்த ஒரு வரப் பிரசாதம் என்று இதுவரை நினைத்துக் கொண்டிருந்தேன். ஆனால் பல பெற்றோர்களுக்கும் குழந்தைகளுக்கும் இது பெருந்துன்பமாக இருப்பது போல் தோன்றுகிறது. சில சிறுவர்கள் அனைத்து கேள்விகளுக்கும் கூகிள் செய்தே விடை எழுதுகிறார்கள். இன்னும் சிலர் வகுப்பு நடந்து கொண்டிருக்கும் போது செல்போனில் கேம் விளையாடிக் கொண்டிருக்கிறார்கள்.சில வீடுகளில், அந்த சிறுவர்களின் தாய் தந்தையர் தான் பரீட்சை எழுதுகிறார்கள். பதின்ம வயது (பதின்மூன்று முதல் பத்தொன்பது வயது வரையான காலகட்டம்) சிறுவர்/சிறுமியர் நிறைய பேர் அடிக்கடி செல்போனில் நண்பர்களுடன் பேசிக் கொண்டிருக்கிறார்கள். பெற்றோர் அருகில் சென்றால், அவர்கள் விலகிச் சென்று பேசுகிறார்கள். யாருடன் பேசுகிறாய்? என்று கேட்டால் தகராறு தான். பெரும்பாலான சிறுவர் சிறுமியர்கள், தங்கள் பெற்றோர் ஆன்லைன் வகுப்பின் போது, தன்னருகில் சற்று நேரம் அமர்வதைக் கூட விரும்புவதில்லை, முடிந்தவரை அனுமதிப்பதும் இல்லை.

ஒரு நண்பர் கூறினார், பிள்ளைகள் நமக்குத் தெரியாததை இணையதளம் வழியாகத் தேடித் தெரிந்து கொள்கிறார்கள் எனும் பொழுது பெருமையாகவும் சந்தோஷமாக இருக்கிறது. ஆனால் அந்தத் தேடல்கள் அனைத்தும் எப்பொழுதும் கல்வி சம்பந்தப்பட்டவையாக இருக்கிறதா என்பது ஆண்டவனுக்குத் தான் வெளிச்சம் என்றார். நாம் மிகவும் பயப்பட வேண்டிய விஷயம் தான் இது. ஒரு பொருளின் Q.R. குறியீட்டை ஸ்கேன் செய்தாலோ, அல்லது அந்த பொருளின் பெயரை கூகிளில் தேடினாலோ, அது என்ன, எதற்குப் பயன்படுகிறது, எப்படி உபயோகிப்பது என்ற செயல் முறை விளக்கங்கள் அடங்கிய கட்டுரைகள் மற்றும் காணொளிப் பதிவுகள் அனைத்தும் நொடிப் பொழுதில் கிடைத்து விடும். 

இன்றைய காலகட்டத்தில் பொதுவாக மேல்தட்டு மற்றும் நடுத்தர குடும்பங்கள் யாரும் குழந்தைகளை அவர்களின் தவறுகளுக்காக அடிப்பது கிடையாது. குறைந்தபட்சம் முறைப்பதோடு சரி. அடிப்பதால் அவர்களின் தன்னம்பிக்கை குறைந்து விடும் என்பது அவர்களின் கருத்து. பலமணி நேர வேலைகளால் அவர்களால் குழந்தைகளுடன் நேரம் செலவிட முடிவதில்லை. இந்த தனிமை, குழந்தைகளுக்கு எங்கோ முன்பின் தெரியாத ஒருவரின் இணையவழி பாராட்டுதலுக்கோ அல்லது நலம் விசாரிப்புக்கோ ஏங்கச் செய்து விடுகிறது. ஒரு நண்பர் கூறினார், "வெளியில விளையாட அனுப்பினாலே, ஏதாவது சண்டை இழுத்துக்கிட்டு வந்து விடுகிறான்..அதனாலே அவன் செல்போனில் ஏதாவது செய்துகொண்டு உள்ளேயே இருந்தால் சரி என்று விட்டு விடுகிறேன்". அவரால் அவரது குழந்தையை ஒரு மணி நேரம் தன்னருகில் அமர்ந்து கொண்டு செல்போன் பார்க்கச் சொல்லுங்கள், நூறு சதவிகிதம் அந்தக் குழந்தை அதை விரும்பாது, அவர் அருகில் அமரவும் செய்யாது.

என் மற்றொரு நண்பர் ஒரு குறிப்பிட்ட சமூகத்தைச் சார்ந்தவர். அவர் மகன் பதினோராம் வகுப்பு மாணவன், வாட்ஸாப்பில் அவன் சார்ந்த சமூகக் கருத்துக்களை தொடர்ந்து பதிவிட்டுக் கொண்டே இருக்கிறான் என்றார். இதில் தன்னை உயர்வாகவும் பிறரை மட்டம் தட்டுவது போன்ற கருத்துக்களே அதிகம் உள்ளது என்றார். இரண்டு ஆண்டுகளுக்கு முன் சக மாணவர்களுடன் நட்பாக இருந்தவன், இப்பொழுது ஒரு சில பேருடன் மட்டும் தான் பேசுகிறானாம். கேட்டால், அவர்கள் வேறு நாம் வேறு என்கிறான் என்று கவலைப்பட்டார். இந்த கொரோனா தொற்றுப் பரவலால், நீண்ட காலம் சொந்த ஊரில் தங்கியதால் வந்த வினை என்கிறார். பொதுவாக பல மாணவர்களின் இணையத்தில் உள்ள சுயவிவரப் புகைப்படங்களை ஆராய்ந்தால் அதில் ஏதாவது ஒரு விலங்கை அடையாளமாக வைத்திருக்கிறார்கள். இந்த கலாச்சாரம் சமீபத்தில் சற்று அதிகமாக உள்ளதாகக் கவலைப்பட்டார். விலங்குகளை ஏற்றுக் கொண்டாலும், சக மனிதர்களை நண்பர்களாக ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் போல.

பல பெண் பிள்ளைகளின் நிலைமை சற்று கவலையளிக்கும் விதத்தில் இருக்கிறது. இணைய அச்சுறுத்தல் பொதுவாக பெண் குழந்தைகளுக்கு அதிகமே. கட்டுபாடற்ற இணைய வசதியால், இவர்களது நட்பின் எல்லை மொழி, இனம், ஏன் கடல் தாண்டியும் விரிகிறது. இதில் பலர் வெகு எளிதில் நாடகப் பேச்சுகளுக்கு இரையாகி விடுகின்றனர். எனக்குத் தெரிந்த ஒருவர், சிறு குழந்தை போல் கெஞ்சி, அடம்பிடித்து, தன்னை தன் பிள்ளைகள் முகநூல் (Facebook) நண்பராக ஏற்றுக் கொள்ளச் செய்தார். ஏனென்று கேட்டதற்கு, "பின்னாடி அழ வேண்டாம் பாருங்க" என்றார். இது அவர் தன் பிள்ளைகளின் பாதுகாப்பின் மேல் கொண்ட அக்கறையைக் காட்டுகிறது. சில வருடங்களுக்கு முன் பதின்ம வயது பெண்கள் மட்டுமே அதிகம் பாதிக்கப்பட்டு வந்தனர். ஆனால் இப்போது பதின்ம வயது எட்டாத குழந்தைகளும் (ஆண்/பெண் பேதமின்றி) பாதிக்கப்படுகின்றனர்.

தோழமையுடன் கூடிய தாயன்பும், நல்ல நண்பனாக நடந்து கொள்ளும் தந்தையுமாக இருந்தால் மட்டுமே இப்பிஞ்சுகள் நம்மை நம்புவார்கள். இணைய வசதி இப்பொழுது கணினி, செல்போன் இரண்டிலும் இருப்பதால், பள்ளி பாடமோ அல்லது உடலில் ஏற்படும் மாற்றமோ, எதுவானாலும் உடனே தேடி விடை கண்டுபிடித்து விடுகிறார்கள். நாம் சொல்லத் தயங்கும் போது, "No Problem.. நான் கூகிளில் பார்க்கிறேன்".. என்று கிலி ஏற்படுத்துகிறார்கள். பெண்களைப் பெற்றவர்கள் எக்காலத்திலும் வயிற்றில் நெருப்பை கட்டிக் கொண்டு தான் இருக்கிறார்கள். பெண்களை மற்றும் உடன் படிக்கும் சக மாணவிகளை, தவறாக இணைய தளங்களில் பதிவிடுவது மிகவும் மோசமான செயல் என்றும், இதனால் வரும் பின்விளைவுகளுக்கு பெற்றோராகிய நாமும் பாதிக்கப்படுவோம் என்று அடிக்கடி எடுத்துக் கூற வேண்டும். பெற்றோர் தங்களுக்கு வரும் ஆரோகியமான நகைச்சுவை குறுந்செய்திகளை தன் பிள்ளைகளிடம் பகிர்ந்து கொள்ள வேண்டும். இது ஒரு உளவியல் ரீதியான நட்புக்கு வழிவகுக்கும்.

எங்கள் அலுவலகத்தில் ஒரு குழந்தைகள் நல மருத்துவர், குழந்தைகள் நலம் தொடர்பான ஒரு வகுப்பை எடுத்தார். அதில் அவர் "யார் யாரோட குழந்தைகள் மோர் சாதம் சாப்பிடுறாங்க..கையைத் தூக்குங்கள்" என்றார். ஒரு சிலர் கை தூக்கினார்கள். ரசம் சாதத்திற்கு ஒரு சிலரும், கீரை, காய்கறி மற்றும் பழங்களுக்கு ஒரு சிலரும் கையைத் தூக்கினோம். அப்புறம் இன்னொன்றைக் கேட்டார், "யார் யாரோட குழந்தைகள் இதையெல்லாம் நீங்க ஊட்டி விடாம அவங்களா விரும்பி சாப்பிடுறாங்க?" நான் உட்பட யாருமே கை தூக்கவில்லை. அதே அவர் பிஸ்சா, பர்கர், நூடுல்ஸ் போன்றவற்றைக் குறிப்பிடும் போது, அனைவருமே கை தூக்கினோம்.

அப்பொழுது அவர் கூறியதாவது, "குழந்தைகளின் உணவு சுதந்திரம் அவர்களின் எதிர்கால வாழ்க்கைக்கு மிக மிக ஆபத்தானது" என்றார். மேலும் அவர், "ஓங்கி அழுகின்ற குழந்தைக்கு, முதலில் சாக்லெட்டை வாயில் வைப்பது, பெரும்பாலும் தந்தையர் தான். தயவு செய்து தொலைக்காட்சி பார்க்காமல் அவர்கள் என்ன சாப்பிடுகிறார்கள், எப்படி சாப்பிடுகிறார்கள் என்று கவனியுங்கள்" என்றார்.

என் தாய் வழி தாத்தா ஒருவர், காவல் துறையில் இருந்து ஒய்வு பெற்றவர். அவரை போலீஸ் தாத்தா என்று அழைப்போம். அவர் குழந்தைகள் சாப்பிடும் போது ஆர்வமாக அருகில் அமர்ந்து கொள்வார். ஆட்டு இறைச்சி சாப்பிடும் போது, "அந்த எலும்ப நல்லா கடிச்சு உறுஞ்சு, அந்த கோழி எலும்பெல்லாம் நல்லா பஞ்சு பஞ்சா கடிச்சு மென்னு சாப்பிடு" என்பார். பரங்கிக்காய் வறுவலை சூடாக அவர் பாராட்டிச் சாப்பிடுவதைப் பார்த்த நான், அன்று முதல் அதற்கு அடிமையாகி விட்டேன். எதையெதை எப்படி சாப்பிட்டால் நல்லது என்று அடிக்கடி சொல்லுவார். இன்று அது போன்ற தாத்தாக்கள் இல்லாததால் தான் என்னவோ அனைத்தும் boneless-ஆக வாங்குகிறோம்.

கொரோனா தொற்றுப் பரவலால், வீட்டிலிருந்தே வேலை செய்யும் பெற்றோர்களுக்கு இந்த ஆன்லைன் உணவு விநியோகம் பெரிய வரப்பிரசாதமாக போய் விட்டது. அதனால் அவரவர் விருப்பத்திற்கேற்ப உணவை ஆர்டர் செய்கிறார்கள். குழந்தைகள் கேட்பதில் சிலது ஆரோக்கியமற்றவை என்றாலும், "நீயா சமைக்கிற? ஆர்டர் செய்வதில் உனக்கு என்ன கஷ்டம்?" போன்ற விமர்சனங்களால் பெரும்பாலான தாய்மார்கள் கண்டும் காணாமல் விட்டு விடுகிறார்கள். ஒரு பக்கம் சமையல் கலையைச் சார்ந்து பல தொலைக்காட்சித் தொடர்கள் வெற்றிகரமாக ஒளிபரப்பாகிக் கொண்டிருக்க, இன்னொரு பக்கம் வீட்டில் சமையல் செய்வதை முற்றிலுமாகத் தவிர்க்கும் எதிர்கால சமுதாயத்தை உருவாக்கிக் கொண்டிருக்கிறோம்.

இணைய வழி கொள்முதல் வசதியால், யார் என்ன வாங்குகிறார்கள் என்று தெரிவதில்லை. சில பொருட்களின் பெயர்கள் வெளியே தெரியாதவாறு பேக்கிங் செய்வதால், எந்த வயதினரும் எதுவும் வாங்கலாம் என்று ஆகி விட்டது. ஒரு நண்பர் கூறினார், "எல்லா ஆங்கிலத் தொடர்களையும் தமிழில் வெளியிடுகிறார்கள். என் மகன்கள் (ஏழு மற்றும் பதிமூன்று வயதுடையவர்கள்) இப்பொழுது 'ஒரு புகழ் பெற்ற ஆங்கிலத் தொலைக்காட்சித் தொடரை' பார்க்கிறார்கள், ஆனால் அவர் அதை பார்ப்பதில்லை" என்று கூறினார். நான் அவரிடம் கூறினேன், "நீங்கள் அதைப் பார்க்க வேண்டாம், ஆனால் அந்த ஆங்கிலத் தொடர்கள் எந்த வயதினருக்கானது என்பதில் மட்டும் கவனமாக இருங்கள்.." என்றேன். இதே போல் பல வீடுகளில் சிறுவர்கள் செல்போனில் கேம் விளையாடிக்கொண்டு 'அடிடா.. அப்படி தான்.. அந்த gun-ஐக் கொடு..போட்றா அவனை.." என்று கூச்சலிட்டுக் கொண்டு தான் இருக்கிறார்கள். பல பெற்றோர்களோ..வெளியில் போய் நோய் எதுவும் வாங்காமல் உள்ளேயே இருந்தால் சரி தான் என்ற மனநிலையில் இருக்கின்றனர். குழந்தைகளின் இணைய வழி செயல்பாடுகளைக் கண்காணிப்பதும், அவர்களின் தவறுகளைக் கண்டிப்பதும், நாம் அவர்களின் எதிர்காலத்திற்குச் செய்யும் நன்மையாகும்.

ஒரு புகழ் பெற்ற குழந்தைகள் நல மருத்துவர் ஒரு நிகழ்ச்சியில் கூறுவார், "நன்மை தீமைகளைப் பற்றி நூறு முறையாவது குழந்தைகளிடம் கூறுங்கள்" என்று.

அதற்கு ஒரு தந்தை: "ஆயிரம் முறை கூறி விட்டேன், ஒன்றும் பலனில்லை.."

மருத்துவர்: "அப்படியென்றால் ஒரு லட்சம் முறை இன்னும் சற்று மென்மையாகக் கூறுங்கள்.."

தந்தை: "அப்படியும் கேட்கவில்லையென்றால்..?"

மருத்துவர்: "மீண்டும் ஒரு கோடி முறை மேலும் மென்மையாகக் கூறுங்கள்.."

தந்தை சலிப்படைந்து, "ஏன் இப்படி செய்ய வேண்டும்?.."

மருத்துவர்: "ஏனென்றால்.. ஏதாவது ஒரு முறை, அவர்கள் உங்கள் சொல்லை உணர வாய்ப்பிருக்கிறது".

- ஜெகன்ஜி