corona newஎங்கும் கொரோனா எதிலும் கொரோனா என்று நாம் நொந்து போயிருக்கிறோம். ஆனால் கொரோனாவை வித்தியாசமான கண்ணோட்டத்தில் பார்ப்பவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்! வட இந்தியாவில் கொரோனா காலத்தில் பிறந்த மூன்று குழந்தைகளுக்கு ‘கொரோனா, கோவிட் (இவர்கள் இரட்டைக் குழந்தைகள்), லாக் டவுன்,’ என்று பெயர் சூட்டியிருக்கிறார்கள்! மேற்குவங்கத்தில் ஒரு பெண் பாராளுமன்ற உறுப்பினர் தன் குழந்தைக்கு ‘கொரோனா’ என்று பெயர் வைத்திருக்கிறார்! இதை நினைத்துச் சிரித்த அதே நேரத்தில் எனக்குத் தெரிந்தவர்களில் சிலரது வித்தியாசமான அர்த்தமுள்ள, அர்த்தமில்லாத பெயர்கள் என் நினைவுக்கு வந்தன.

எனது கல்லூரித் தோழி ஒருவரது பெயர் ‘போதும்பெண்’. ஏழாவது பெண்ணாகப் பிறந்ததால், இனி பெண் குழந்தை வேண்டாம் என்று அப்பெயரை வைத்தார்களாம். ஒவ்வொரு ஆசிரியரிடமும் தன் பெயர் விளக்கம் தரும் போது அவர் நொந்து போவார்.

என் பள்ளித்தோழிகள் பலர் பொன்மதி, ரதிமாலா, தமிழரசி, கயல்விழி (இவரது தாயார் பெயர் பர்வதவர்த்தினி), பூரணபுஷ்கலா, குந்தவி, சந்திரவதனா, அன்னம், பர்வதராணி, இளவரசி, நித்யகலா, சிவகாமசுந்தரி, நீலவேணி, பொன்மைதிலி போன்ற அழகிய பெயர்களைக் கொண்டிருந்தனர்.

என் தந்தையின் கீழ்ப் பணிபுரிந்தவர்களில் சிலரது பெயர்கள் - கடற்கரை, போர்வாள் என்ற இப்பெயர்கள் இராமநாதபுரம் மாவட்டத்தில் இன்றும் வழக்கில் உள்ளன.

எங்கள் உறவினர்களில் மிக இலக்கிய நயத்தோடு சூட்டப்பட்ட பெயர்கள் சில: வனரோஜா,சிவகடாட்சம், ராஜகுமாரி, திரிபுரசுந்தரி, சோழமன்னன், குலோத்துங்கன், வணங்காமுடி, மேகநாதன், பூமிநாதன், சோழமாதேவி, சேவற்கொடி, மலர்க்கொடி, சுபாங்கி, ஏலம்பூ, வேம்பு, அன்புக்கரசி, மங்கையர்க்கரசி, அங்கயற்கண்ணி, கண்ணகி, கயல், நிலா, நித்திலா (நித்திலம் என்றால் முத்து என்று பொருள்).

ஆனால் வண்டார்குழலி என்ற அழகான பெயர் உடையவரைச் சுருக்கமாக ‘வண்டு’ என்றும், மைதிலி என்ற பெயரை ‘மைதா’ என்றும் அழைக்கும் முட்டாள்தனமும் இங்குண்டு! கம்யூனிசக் கோட்பாடுகளில் பற்று உள்ள சிலரது வீடுகளில் வழங்கும் பெயர்கள் ரஷியா, ஸ்டாலின், லெனின் ஆகியவை.

தஞ்சாவூர் மாவட்டத்தில் சில கிராமங்களில் வழங்கும் சில காரணப்பெயர்கள் வேடிக்கையானவை. பனிரெண்டு பிள்ளைகள் உள்ள வீட்டிற்குப் பெயரே ‘புள்ளகுட்டி வீடு’! அதில் பிள்ளைகளுக்கு என்னென்ன பெயர்கள் என்று வீட்டில் உள்ளவர்களுக்கே மறந்து போய், பெரியதம்பி, நடுத்தம்பி, சின்னத்தம்பி, கட்டித்தம்பி (சிறு குழந்தையாய் இருந்தபோது இவருக்கு வயிற்றில் கட்டி வந்து, பிழைத்ததே பெரும்பாடாகி விட்டதால் இந்தப் பெயராம்), பெரியாப்பா (பெரிய பாப்பா என்பதன் மரூஉ), நடுபாப்பா, சின்னாப்பா, செவத்தாப்பா (சிவந்த நிறம் உடையவர் என்பதால் சிவந்த பாப்பா) என்ற பெயர்களே நிலைத்துவிட்டன! ராஜேந்திரன் என்ற பெயர் மறந்து மொட்டை என்ற பெயரே வழங்கி, அவரது வீடு ‘மொட்ட வீடு’ என்றே ஆகிப்போனது.

அவர் வீட்டுப் பெண் குழந்தைகள், இன்றும் பெரியம்மு, நல்லம்மு, சின்னம்மு என்றே அழைக்கப் படுகிறார்கள். கட்டாரி, கல்கண்டு, மண்டை (தலை பெரிதாக இருந்ததால்) என்று சில முதியவர்கள். அவர்களது இயற்பெயர்கள் அவர்களுக்கே தெரியாது!

நாகை, குடந்தை, மாவட்டங்களிலும் மற்றும் சுற்றுப் பகுதிகளிலும் வேளாங்கண்ணிக்கு வேண்டிக்கொண்டு, பெண் குழந்தை பிறந்தால், அவர்களுக்கு என்ன பெயர் வைத்தாலும், ‘மேரி’ என்றே அழைப்பார்கள்.

எங்கள் உறவினர்களில் நிறைய ‘மேரிகள்’ உண்டு. மத நல்லிணக்கத்துக்கு இதைவிடச் சிறந்த எடுத்துக்காட்டு உண்டா?

முன்னாள் அமைச்சர் திரு. இராகவானந்தம் அவர்களது மகன்களின் பெயர்கள்-விடுதலை, ஈரோடு. “ஈரோடு என்று யாராவது பெயர் வைப்பார்களா? என்று கேலி செய்பவர்களிடம் அவர், பழனி, சிதம்பரம் என்று வைக்கலாம், ஈரோடு என்று வைக்கக் கூடாதா?” என்று திருப்பிக் கேட்பாராம்.

ஆனந்த விகடன் பத்திரிகை ‘மாணவப் பத்திரிகையாளர் திட்டத்தை’ அறிமுகப் படுத்தியபோது, குற்றாலம் பராசக்தி மகளிர் கல்லூரியிலிருந்து இரு மாணவிகள்-செண்பகக்குழல்வாய்மொழி, தேனமிர்தசியாமளா ஆகியோர் மிக்க முனைப்புடன் எழுதி வந்தார்கள்.

இப்பெயர்கள் எங்கள் குடும்பத்தினர் அனைவரையும் ஈர்த்தன. அத்தோடு நாங்கள் அனைவருமே கல்கியின் ‘பொன்னியின் செல்வனின்’ தீவிர ரசிகர்கள். இவ்விரண்டின் தாக்கத்தால் உருவான எங்கள் குடும்பத்துப் பெயர்கள் சில: செண்பகப் பூங்குழலி (‘பொன்னியின் செல்வனின்’ கதாநாயகியரில் ஒருத்தி), சுதந்திரப் பொன் வந்தியத்தேவன்(சுதந்திரப் பொன்விழா ஆண்டில் பிறந்ததால்), தேனமிர்தவர்ஷிணி, செஞ்சுடர் தமிழருவி (கார்த்திகைச் சுடரன்று பிறந்ததால்), அருள்மொழிவர்மன் (பொன்னியின் செல்வன்), அநிருத்தன், சங்கமித்ரா (அசோகச் சக்ரவர்த்தி புத்த மதத்தின் அரிய கருத்துக்களைப் பரப்பத் தன் மகளுக்கு வைத்த பெயர்) ஆகியவை.

எங்கள் நெருங்கிய குடும்ப நண்பர் ஒருவர் வீட்டு நபர்களின் பெயர்களைப் பார்க்கும் போது அவர்களுக்கு இருக்கும் தமிழ்ப் புலமையும், இரசனையும் வியக்க வைக்கின்றன. இயல்பறி (பிறரது இயல்பை அறிந்து நடப்பவர்), நிநீகா (நிலம் நீர் காற்று ஆகியவற்றின் முதலெழுத்துக்கள்), அளவறி (அளவறிந்து வாழ்பவர்), வமநீ (வளி, மண், நீர் ஆகியவற்றின் முதலெழுத்துக்கள்), அறிதி, (அன்பு, அறிவு, அமைதி ஆகியவற்றின் முறையே முதல், இடை, கடை எழுத்துக்கள்), அடவி (காடு), அதியன், ஆதிரை, அருவி, வெண்பா, திருவள்ளுவன், தொல்காப்பியன் ஆகிய இவ்வினிய தமிழ்ப் பெயர்கள் கேட்கும்தோறும் கூறும்போதும் இனிமை பயக்கின்றன அல்லவா? இன்னொரு நண்பர் வீட்டுப் பெயர்கள்: தமிழ்வேல்,

தமிழினியன், தமிழ்மறை, தமிழ்மணி, கார்குழலி, மகிழினி. வங்கியில் பணிபுரியும் எனது தோழியின் பெயர் வெண்மதி. அவரது சகோதரியின் பெயர் வெண்ணிலா. ஒரு பொருட்பன்மொழிக்கு அருமையான எடுத்துக்காட்டு அல்லவா? எனக்கு அறிமுகமுள்ள ஒரு வனத்துறை உயரதிகாரியின் பெயர் வள்ளல் பாரி.

எழிலி என்ற கல்லூரி முதல்வரும், யாழ், கீர்த்திவாசினி, யாழினி, மோகனசுந்தரி, தமிழினி, இதழ், தேன்மொழி, சிந்துவிநோதினி, பாவை, பனிமலர் ஆகிய யுவதிகளும், சிபிச் சக்ரவர்த்தி, மணிமாறன், செல்லக்குமரன், ராஜமன்னன், இரும்பொறை ஆகிய இளைஞர்களும் எனக்கு அறிமுகமான சிலர்.

கோவையில் ஒரு சமூகத்தினரிடம் இன்றும் ஒரு பழக்கம் தொடருகிறது. பெண் குழந்தைகளுக்குக் ‘குங்கும’ என்றும் ஆண் குழந்தைகளுக்கு ‘அங்கு’ என்றும் தொடங்கும் பெயர்களைத்தான் வைப்பார்கள். அந்த வகையில் எனக்குத் தெரிந்தவர்கள், குங்கும வைஷ்ணவி, குங்குமத் தேன், அங்கு அசோக், அங்கு ரித்விக் ஆகியோர்.

எனது மாணவர்களில் பலர் தமிழழகும் இலக்கிய நயமும் கூடிய பெயர்களைக் கொண்டுள்ளனர். ராகநிவேதினி, சுருதிநந்தினி என்ற சகோதரிகள், மாதுளா, மிதுளன், முகிலன் என்ற உடன் பிறந்தோர்கள், அகரமொழி, இலக்கியன் என்ற உடன் பிறந்தோர்கள், கண்மணி, சுருதிலயா, சரயு சம்ப்ரிதி (சரயு என்பது ஒரு புண்ணிய நதியின் பெயர்.

இவரது தாயார் பெயர் கங்கா) போன்ற பெயர்களால் இம்மாணவர்கள் என்றும் என் நினைவில் இருக்கிறார்கள். என் ஆசிரியர்களில் குறிப்பிடத்தக்க பெயர்கள் சில: நட்சத்திரம், மதனசுந்தரி, ராதை, அன்புமீனாள், லட்சுமி பெருந்தேவி ஆகியவை.

எங்களுக்கு மிகவும் வேண்டப்பட்ட ஒரு குடும்பத்தினர் தீவிர திராவிட முன்னேற்றக் கட்சியின் ஆதரவாளர்கள்; திரு. மு. கருணாநிதியின் அபிமானிகள். அவர்கள் குடும்பத்தோரது பெயர்களைப் பாருங்களேன்: கனிமொழி, மதுமதி, குமணன், மகிழன், அகிலன், தமிழ், புகழ்.

இவர்கள் தவிர நம் எல்லோருக்கும் தெரிந்த சில பிரபலங்களின் வித்தியாசமான பெயர்கள்: தாமரை (கவிஞர், திரைப்படப் பாடலாசிரியர்), திலகபாமா (கவிஞர்), தமிழ்ப்பூங்குயில் மொழி (வழக்கறிஞர்), சமுத்திரக்கனி (இயக்குனர்), சிங்கம்புலி (திரைப்படத் தயாரிப்பாளர்), ஜோதிர்லதா கிரிஜா (எழுத்தாளர்), இன்சுவை(எழுத்தாளர்) , இறையன்பு (குடிமைப்பணி அதிகாரி), இன்பசாகரன் (ஓய்வு பெற்ற குடிமைப்பணி அதிகாரி) போன்றவை.

எங்கள்வீட்டுப் பெயர்களால் கவரப்பட்டு பல நண்பர்கள், தங்கள் குழந்தைகளுக்கு நல்ல தமிழ்ப் பெயர்களாகச் சொல்லும்படி கேட்பார்கள். சிலர் எண் சோதிடப்படி ‘ல’, ‘ட’ போன்ற எழுத்துக்களில் ஆரம்பிக்க வேண்டும் என்று நிபந்தனை வேறு போடுவார்கள்! அவர்களிடம் நான் ‘தமிழ்ச் சொற்கள் இவ்வெழுத்துகளில் ஆரம்பிக்க மாட்டா’ என்று கூறி அன்போடு மறுத்துவிடுவேன்.

மற்றவர்க்கு மெனெக்கெட்டு நேரம் ஒதுக்கி அழகிய பெயர்கள் பல உருவாக்கி மின்னஞ்சல் மூலம் உடனே அனுப்புவேன். பின்பு எப்போதாவது சந்திக்கும் போது கேட்டால், ‘ஜோத்ஸ்னா’, ‘ஷர்மிளா’ என்று பெயர் வைத்ததாகச் சொல்வார்கள். நொந்து போவேன்!

கடைசியாக ஒரு செய்தி: எங்கள் வீட்டுக் கிளியின் பெயர் புலிகேசி!

- இரா. கற்பகம்

Pin It