குழந்தைகள் சார்ந்து இயங்குபவர்கள் மத்தியில் இனியன் மிகவும் பரிச்சயமானவர். “பல்லாங்குழி” என்கிற அமைப்பை நிறுவி, தமிழ் மரபு விளையாட்டுகளைப் பட்டி தொட்டி எங்கும் கொண்டு சேர்ப்பவர். சிறுவர்களால் “மொட்டை மாமா” என்று செல்லமாக அழைப்படுபவர். அவர் ஒரு நாடோடி, இலக்கிய விரும்பி, தமிழ்ச் சிறுவர் இலக்கிய ஆர்வலரும் கூட. தமிழ்ச் சமூகத்தில் அவர் கண்டறிந்த சமகாலச் சிறார் நூல்களைத் தமிழ் குழந்தைகளுக்கு அறிமுகப்படுத்தும் ஒரு முயற்சியாக “குழந்தைகளுக்கான‌ கலை இலக்கியக் கொண்டாட்டம்” நிகழ்வை முன்னெடுத்து இரண்டு நகரங்களில் வெற்றிகரமாக நடத்தி முடித்துள்ளார். அந்த நிகழ்வைப் பற்றிய அவருடைய நேர்காணல் உங்கள் பார்வைக்கு.

iniyan 540எப்படித் தோன்றியது இந்த எண்ணம்? இதற்கான அவசியம் என்ன என்று நினைக்கிறீர்கள்?

எப்படித் தோன்றியது என்றால், இலக்கிய விழாக்கள் புத்தக வெளியீட்டு விழாக்கள் என்று போகும் போதெல்லாம், அங்கே கொண்டாடப்படுகின்ற அல்லது பேசப்படுகின்ற புத்தகங்கள் மற்றும் பேசுபொருட்கள் போன்றவற்றைக் கவனித்தால் அதில் குழந்தைகள் சார்ந்த அல்லது குழந்தைகள் இலக்கியம் சார்ந்த எந்தவொரு பேசு பொருட்களும் துளிக்கூட இல்லை என்பதை உணரமுடிந்தது. அதேநேரம் இலக்கிய வட்டத்திற்குள் தொடர் புறக்கணிப்பில் இருப்பதும் குழந்தைகள் இலக்கியம்தான் என்பதையும் உணரமுடிந்தது. தேர்ந்த புத்தக வாசிப்பாளர்களில் பலரும் குழந்தைகள் இலக்கியம் சார்ந்த புத்தகங்களை வாசிப்பதோ அல்லது அது தொடர்பாக உரையாடுவதோ இல்லை என்பதையும் பல உரையாடல்களின் மூலம் உணர முடிந்த அதேவேளையில் பெரும்பான்மையானவர்களிடம் குழந்தைகள் இலக்கியம் சார்ந்த புத்தகங்கள் தமிழில் இல்லை என்கிற குற்றச்சாட்டையும் குழந்தைகள் வாசிப்பதில்லை, வாசிப்பு அற்ற பெருஞ் சமூகம் போன்ற சொற்களையும் பெற முடிந்தது.

நிலை அதுதானா என்றால், ஆம் அதில் ஓரளவு உண்மையும் இருக்கவே செய்கிறது. ஆனால் 90களின் மத்தியக் காலத்திற்குப் பிறகு குழந்தைகள் இலக்கியத்தில் ஏற்பட்ட தேக்க நிலை தற்போது உடைபடத் துவங்கிப் புத்துணர்வு பெற்று வருகிறது. இந்தப் புத்துணர்வை தக்க வைத்துக் கொள்வதற்கான களமாக ஒருங்கிணைந்த இலக்கியச் சூழல் இங்கே இருக்கிறதா எனக் கேள்வி கேட்டால் இல்லை என்பதுதான் பதிலாகக் கிடைத்தது. அப்போது அந்த ஒன்றிணைப்பு எதன் மூலம் சாத்தியமென்றால் வெளியீட்டு விழாக்கள், அறிமுகம் மற்றும் விமர்சனக் கூட்டங்கள் போன்றவற்றைத் தொடர்ந்து குழந்தைகள் இலக்கியத்திற்காக முன்னெடுக்க வேண்டிய தேவையும் இருக்கிறது என்பதையும் உணர முடிந்தது. அந்த உணர்சிகளை விளையாட்டாய் நண்பர்களிடம் பகிர்ந்துகொண்டபோது நாமே செய்யலாமே என ஊக்கம் கொடுத்தனர். அந்த ஊக்கத்தில் இருந்து உருவானதுதான் “குழந்தைகளுக்கான கலை இலக்கியக் கொண்டாட்டம்” நிகழ்வு.

இதிலும் கூட வெறுமன புத்தக அறிமுக விழாக்கள் போல் அல்லாமல் குழந்தைகள், பெற்றோர்கள், ஆசிரியர்கள், கலைஞர்கள், எழுத்தாளர்கள் என அனைவரும் ஒன்றிணையும் புள்ளியாக இருக்க வேண்டும் என அதற்கான வடிவமாக நிகழ்வை வடிவமைக்க முயற்சித்தோம்.

அவசியம் ஏன்? ஏனென்றால் உலகில் குழந்தைகளுடன் தொடர்பில்லா மனிதர்கள் என யாருமில்லை. ஆனால் தொடர்பை அறுத்துக் கொண்டவர்கள் ஏராளம். அப்படித் தொடர்பு இருப்பதாக நம்புகிற மனிதர்களைக் குழந்தைகளோடும் கலைகளோடும் ஒன்றிணைக்கும் போது குழந்தைகள் பற்றிய முன்முடிவுகளைச் சிறிதுசிறிதாக நமது இந்தப் பொதுச் சமூகத்தில் நீக்கி விட முடியும் என்ற நம்பிக்கையைக் கொடுத்திருப்பதைதான் அவசியமாகக் கருதுகிறேன்.

மேலும் வாசிப்பற்ற சமூகம் என்ற தேக்கநிலையை முற்றிலும் நீக்கி விட முடியாது என்றாலும், ஏதோ ஓரளவு வாசிப்பு பற்றிய அனுபவங்களைக் குழந்தைகளிடம் கொண்டு சேர்க்கவும் அவசியமாய் இருகிறது. 

பள்ளிகள் இதைப் போன்று செய்யவில்லை என்று நினைக்கிறீர்களா?

அப்படி ஒருபோதும் நான் நினைத்ததில்லை. பள்ளிகளில் ஒருசில ஆசிரியர்களின் முயற்சிகளால் ஆங்காங்கே சில பள்ளிகளில் நடை பெறுகிறது. ஆனால் அங்கே ஏதோவொரு கட்டாயத் தன்மை குழந்தைகள் மத்தியில் இருப்பதை உணர முடிகிறது. அதற்குக் காரணம் இந்தக் கல்வியியல் அமைப்புதான் எனவும் நினைக்கிறன்.

பள்ளிகளில் நடத்தப்படும் விழாக்களுக்கும் இந்தக் கொண்டாட்டத்திற்கும் என்ன வித்தியாசம் இருக்கிறது?

அந்த அமைப்பிற்குள் இருந்து கொண்டு செயல்படும் ஆசிரியர்கள் அனைவரும் பாராட்டுக்குரியவர்கள். இருப்பினும் அங்கே தன் பள்ளிக் குழந்தைகள், தன் வகுப்புக் குழந்தைகள், போன்ற பிரிவினைவாதமும் அவர்களறியாமல் அவர்களுக்குள் இயல்பாய் திணிக்கப்படுகிறது. அது தடுக்க முடியாததும் கூடத்தான். ஆனால் வெளியில் குழந்தைகளை ஒருங்கிணைக்கிற போது அதுபோன்ற சிக்கல்கள் இல்லை.

children 636அந்த வித்தியாசத்தைக் குழந்தைகள் எவ்வாறு உணருகிறார்கள்?

ஒருவித சுதந்திரத்தை உணர்கிறார்கள். பல தரப்பிலான அறிமுகத்தைப் பெறுகிறார்கள். தங்களுக்குள்ளான அறிமுகங்களை ஏற்படுத்திக் கொள்கிறார்கள். வகுப்பறை என்னும் நான்கு சுவர்கள் அற்ற நிலையில் சக நண்பர்களைக் கொண்டாடுகிறார்கள். தாங்களும் அதனை நோக்கி பயணிக்க வேண்டும் என விரும்புகிறார்கள். வகுப்பறையில் இருக்கிற பாகுபாட்டை இதில் அவர்கள் உணர்வதில்லை.

எவ்வாறு குழந்தைகளைத் தேர்வு செய்கிறீர்கள்?

குழந்தைகளை நாம் தேர்வு செய்வதில்லை. மாறாகக் குழந்தைகள்தான் புத்தகங்களைத் தேர்வு செய்கிறார்கள். தாமாக முன் வந்து புத்தகத் தேர்வு மற்றும் வாசிப்பை நோக்கிச் செல்லும் குழந்தைகளுக்கான மேடைகளைத்தான் நாம் உருவாக்குகிறோம்.

குழந்தைகளினுடைய ஒத்துழைப்பும், பங்களிப்பும் எந்த அளவு உள்ளன? பெற்றோர்கள், ஆசிரியர்களின் பங்களிப்பும் ஒத்துழைப்பும் எப்படி உள்ளது?

குழந்தைகள் எப்போதும் ஆர்வம் மிக்கவர்கள். எதையொன்றையும் புதிதாக முயற்சிக்க வேண்டும் என்ற எண்ணம் உடையவர்கள். அவர்களுக்குத் தேவையான அவர்கள் உணரக் கூடிய சுதந்திரத்தை நாம் உருவாக்கிக் கொடுத்தாலே போதுமானது அவர்களிடம் நாம் ஒத்துழைப்பை எதிபார்க்காமலே நமக்கான ஒத்துழைப்பைத் தரத் தயாராவார்கள்.

பல பெற்றோர்களுக்கு இது புதுவிதமான நிகழ்வாகவே தெரிவதால் ஓரளவு புரிய வைக்க முடிகிறது. ஆசிரியர்கள் இவற்றின் தேவையை நன்றாகவே உணர்ந்துள்ளனர் என்பதால் குழந்தைகளை வாசிப்பிற்குள் கொண்டு வருவதற்கான முழு ஒத்துழைப்பையும் பயிற்சிகளிலும் தாமாக ஈடுபடுகின்றனர். அதிலும் சில ஆசிரியர்கள் மட்டுமே.

குழந்தை இலக்கியத்தில் பல வகையான புத்தகங்கள் கிடைக்கப்பெறுகின்றன, நீங்கள் எந்த வகையான புத்தகங்களைத் தேர்வு செய்கிறீர்கள்? எப்படித் தேர்வு செய்கிறீர்கள்?

தேர்வு செய்வது என்பது மிகக் கடினமான வேலையாகத்தான் இருக்கிறது. அதில் கூடுமான அளவிற்கு அதீத கற்பனைகளைக் கொண்ட புத்தகங்களையும், சிரமமமான மொழி பெயர்ப்பு புத்தகங்களையும் தவிர்த்து விட்டு ஓரளவு கற்பனையுடன் கூடிய எதார்த்தங்களைச் சொல்லக் கூடிய இலகுவான நேரடித் தமிழ் புத்தகங்களையே தேர்வு செய்கிறோம். மேலும் நேரடி நீதிக் கதைகள் போன்றவற்றை முற்றிலுமாக தவிர்த்து வருகிறோம். ஆனால் பரிசளிக்கும் போது அனைத்து வகையான புத்தகங்களையும் பரிசளிக்கிறோம்.

எதிர்வரும் காலங்களில் வயது வாரியாக, கற்பனைப் கதைகள், அறிவியல் கதைகள், கணிதக் கதைகள், சமூகநீதிக் கதைகள், எதார்த்தக் கதைகள், பகுத்தறிவுக் கதைகள் எனப் பிரிவுகளாக வரும் பட்சத்தில் அதற்கேற்றாற்போல் நிகழ்வுகளை மாற்றியமைக்கவும் திட்டங்கள் இருக்கிறது. 

தற்போது சென்னையிலும், கோத்தகிரியிலும் நிகழ்வுகளை முடித்தாயிற்று. இந்த இரு நிகழ்வுகளில் இருந்து நீங்கள் கற்றது என்ன பெற்றது என்ன ?

இரு நிகழ்வுகளுமே வெவ்வேறு நிலப்பரப்புக்கான நிகழ்வுகள். கற்றது பெற்றது எனப் பிரித்துச் சொல்லக் கூடிய அளவிற்கு எதுவும் இருக்கிறதா என்று சொல்லத் தெரியவில்லை. ஆனால் வெவ்வேறுவிதமான அனுபவங்கள் கிடைத்திருக்கின்றன என்று வேண்டுமானால் சொல்லலாம். அதேநேரம் தொடர்ந்து செயல்படுவதற்கான உத்வேகமும் கிடைத்திருக்கிறது. வருடத்திற்கு 2 என்கிற விகிதாசாரத்தை குறைந்தது 4 என்ற முறையில் மாற்றிட வேண்டும் என்ற முனைப்பு உருவாகியிருக்கிறது. கூடுதல் கவனமும் கூடுதல் உழைப்பும் தேவை என்பதை மட்டுமே இரு நிகழ்வுகளின் மூலம் கற்றதும் பெற்றதாகச் சொல்ல முடியும். நிறைய சிந்திக்க வைத்துள்ளன இரு நிகழ்வுகளும். சிந்தித்தவற்றை எல்லாம் செயல்படுத்துவது பற்றிக் காலம் மட்டுமே பதில் சொல்லிட முடியும்.

எந்த இலக்கை நோக்கிய பயணம் இது? இதற்கான அடுத்த கட்ட நகர்வு எப்படி இருக்கப் போகிறது?

இலக்கு என்றால் பரந்துபட்ட வாசிப்பு அறிமுகங்கள். அதிலும் குறிப்பாக அடித்தட்டுப் பகுதி குழந்தைகள் மற்றும் வளரிளம் பருவத்தினரிடம். நகர்வு என்றால் நிகழ்வோடு நிறுத்தி விடாமல் அவர்களை அடுத்தடுத்த வாசிப்புத் தளத்திற்கு கொண்டு சேர்த்திட சில கூட்டு முயற்சிகள் செய்ய வேண்டியதாகத்தான் இருக்கும். அதேபோல் பல்வேறுபட்ட நில அமைப்பு குழந்தைகள், பெற்றோர்கள், ஆசிரியர்கள், எழுத்தாளர்கள், கலைஞர்கள் என அனைவருக்குமான ஒரு தொடர்பை ஏற்படுத்தி அதிலிருந்து ஒருங்கிணைந்தப் படைப்புகள் அதிகரித்தல் மற்றும் சமத்துவச் சமூகம் சார் செயல்பாடுகள் எனப் பயணிக்க வேண்டும். முயற்சிப்போம். ஆனால் இப்போதைக்கு இதுதான் இலக்கு என்ற நிலையில் இல்லை.

கேள்விகள் : ஜெயக்குமார்

Pin It