அசாமின் பிஷ்வாந்த் மாவட்டம், பிஸ்வாந்த் சாரியலி கிராமத்தைச் சேர்ந்தவர் சவுகத் அலி என்ற 68 வயது நிரம்பிய முதியவர். அங்குள்ள மதுப்பூர் வாரச் சந்தையில் 40 ஆண்டுகளாக உணவகம் நடத்தி வருகிறார். அந்த உணவகத்தில் மாட்டிறைச்சி உணவு சமைத்து விற்பனை செய்தும் வருகிறார். இத்தனை ஆண்டுகளாக பிரச்சினை எதுவும் இன்றி தனது தொழிலை அந்த முஸ்லிம் பெரியவர் செய்து வந்துள்ளார். மேலும் அசாமில் மாட்டிறைச்சி விற்பதற்கும், அதை சாப்பிடுவதற்கு எந்தத் தடையும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் 07.04.2019 அன்று இந்த வாரச் சந்தைக்குள் புகுந்த காவி பொறுக்கிக் கும்பல் திடீரென சவுகத் அலியை கடைக்குள் இருந்து இழுத்துவந்து அடித்து உதைத்துள்ளனர். மாட்டிறைச்சி விற்பனை செய்ததைக் காரணம் காட்டி அடித்தது மட்டுமல்லாமல், சவுகத் அலியை பன்றி இறைச்சி சாப்பிடவும் வற்புறுத்தியுள்ளனர். இதுதொடர்பான வீடியோ சமூக ஊடகங்களில் தற்போது வைரலாகி இருக்கின்றது.

attack on assam muslim2016 ஆம் சட்டப்பேரவைத் தேர்தலில் அசாம் கண பரிஷத், போடோலாந்து கட்சியின் ஆதரவுடன் ஆட்சி அமைத்த பாஜக. அங்கு ஆட்சி அமைத்ததில் இருந்தே மிகத் தீவிரமாக இஸ்லாமிய எதிர்ப்புக் கொள்கையை அமுல்படுத்தி வருகின்றது. இதற்காகவே வங்கதேசத்தில் இருந்து வந்தவர்களை அடையாளம் கண்டு தனிமைப்படுத்தும் நோக்கத்துடன் ‘தேசிய குடிமக்கள் பதிவேடு’ (என்ஆர்சி) கொண்டு வரப்பட்டுள்ளது. அசாம் மாநிலத்தில் வசிக்கும் அனைவருமே தங்கள் குடியுரிமையை நிரூபிக்க உரிய ஆவணங்களோடு இந்தப் பட்டியலில் இடம் பெற விண்ணப்பிக்க வேண்டும் என்று கோரப்பட்டுள்ளது. அசாம் மாநிலத்தில் வசிக்கும் வங்கதேச முஸ்லிம்களின் குடியுரிமையை மறுக்கவும், அவர்களை நாடு கடத்தவும் இந்தப் பட்டியலை பயன்படுத்துவதுதான் இஸ்லாமிய எதிர்ப்பு மோடி அரசின் திட்டமாகும். மோடி அரசின் இந்த இஸ்லாமிய அழித்தொழிப்பு திட்டம் சட்டப்படியே உச்சநீதிமன்றத்தின் மேற்பார்வையில் நடந்து கொண்டிருக்கின்றது. பிஜேபியின் இஸ்லாமிய வெறுப்புக்கு உச்சநீதிமன்றமே சவுக்கிதாராக செயல்பட்டு வருகின்றது.

தற்போது சவுகத் அலி மீது தாக்குதல் நடத்திய கும்பல்கள் கூட அவரிடம் ‘வங்காள தேசத்தைச் சேர்ந்தவரா? என்றும் தேசிய குடிமக்கள் பதிவேட்டில் பெயர் உள்ளதா ? எனவும் கேட்டுத்தான் மிகக் கொடூரமான முறையில் தாக்கியிருக்கின்றார்கள்.

இப்படித்தான் 2015-ம் ஆண்டு, செப்டம்பர் 28-ம் தேதி பிரபல செக்ஸ் சாமியார் ஆதித்யா நாத் ஆட்சி செய்யும் உத்தரப்பிரதேச மாநிலம், தாத்ரியில் 55 வயதான முகமது அக்லக் என்பவரை வீட்டில் பசு மாட்டிறைச்சி வைத்திருந்ததாகக் கூறி, வீட்டுக்குள் இருந்த முகமது அக்லக்கையும், அவரின் மகன் தானிஷையும் வெளியே இழுத்து வந்து காவிப் பொறுக்கிகள் அடித்து உதைத்தனர். இதில் அக்லக்கின் மகன் மட்டும் உயிர்பிழைத்தார், அக்லக் கொல்லப்பட்டார். மேலும் முகமது அக்லக் வழக்கை விசாரித்து வந்த புலந்த்சாகர் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் சுபோத் குமார் சிங்கும் காவிப் பொறுக்கிகளால் திட்டமிட்டு உருவாக்கப்பட்ட போலி மோதலில் கொல்லப்பட்டார்.

இதே போல ஜார்க்கண்ட் மாநிலத்தில் 2017 ஆம் ஆண்டு ஜூன் மாதம் அலிமுதீன் அன்சாரி என்ற இறைச்சி ஏற்றுமதியாளர் கொடூரமாகக் கொல்லப்பட்டார். ஆனால் விசாரணையில் அன்சாரி கொண்டு சென்றது பசு இறைச்சி அல்ல எனத் தெரிய வந்தது. அதே போல ஜார்க்கண்ட் மாநிலம் கோதா மாவட்டத்தில், மாட்டு வியாபாரம் செய்து வந்த இசுலாமியர்கள் சிராபுதீன் அன்சாரி (35) மற்றும் முர்தாஸ் அன்சாரி (30) ஆகியோரை பசு குண்டர்கள் கொடூரமாக அடித்துக் கொலை செய்தனர். மேற்கு வங்காளத்தில் தினாஜ்பூர் மாவட்டத்தில் உள்ள இஸ்லாம்பூர் பகுதியில் சமீருதின் ஹக், நசீருல் ஹக் மற்றும் நசிர் ஹக் ஆகியோர் பசுக்களை திருட வந்ததாகக் கூறி சோனாப்பூர் என்ற கிராமத்தில் வைத்து காவிப் பொறுக்கிகளால் அடித்துக் கொலை செய்யப்பட்டனர்.

அதே போல பருகாலியா கிராமத்தில் பசு திருட்டு சந்தேகத்தில் கோச் பெஹார் மாவட்டத்தையும், அஸ்ஸாமின் துப்ரி மாவட்டத்தையும் சேர்ந்த 19 வயது நிரம்பிய இரு சிறுவர்கள் அடித்துக் கொலை செய்யப்பட்டனர். மேலும் ராஜஸ்தான் மாநிலம் அல்வாரை அடுத்த லாலாவண்டியில் பசுமாடுகளை வாங்கி கொண்டு வாகனம் மூலம் சொந்த ஊர்நோக்கி சென்று கொண்டிருந்த அக்பர் கான் என்ற ஹரியானா மாநில வியாபாரி காவிப் பொறுக்கிகளால் வழிமறைக்கப்பட்டு அடித்தே கொல்லப்பட்டார்.

மோடி அரசு பதவியேற்றதில் இருந்து நாடு முழுவதும் 10க்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் காவி பொறுக்கிகளால் பசுவை முன்னிறுத்தி அடித்தே கொல்லப்பட்டிருக்கின்றார்கள். பலர் மிக மோசமான முறையில் தாக்குதலுக்கு உள்ளாகி இருக்கின்றார்கள். இது போன்ற கொலைகளும்,கொடூரமான தாக்குதல் சம்பவங்களும் திட்டமிட்ட முறையில் நாடு முழுவதும் அரங்கேற்றப்படுகின்றன. இவை அனைத்திற்குப் பின்னாலும் ஆர்.எஸ்.எஸ் காவிப் பயங்கரவாதிகளின் சூழ்ச்சி நிறைந்த வலைப் பின்னல் உள்ளது. அவர்கள் இதன் மூலம் தெளிவான சமிக்ஞைகளை இந்துக்களுக்குத் தருகின்றார்கள் ‘இது எல்லாம் இந்து பாரம்பரியத்தை காட்டிக் காப்பாற்ற மேற்கொள்ளப்படும் புனிதக் கொலைகள் என்று.’

அவர்களைப் பொருத்தவரை புனித பசுக்களுக்காக கொல்லப்படுவது எல்லாமே புனிதக் கொலைகள் தான். ஒரு பக்கம் இந்து ஓட்டு வங்கியை நிலைப்படுத்திக் கொள்ளும் அதே சமயம் முஸ்லிம்களின் ஓட்டு இல்லை என்றாலும், தங்களால் வெற்றி பெற முடியும் என்று உறுதியாக இதன் மூலம் காட்ட விரும்புகின்றாரகள். உத்திரப் பிரதேசத்தைப் போல இந்துக்களை தனியாக தன்னுடைய சித்தாந்த மேலாண்மையில் கீழ் கொண்டு வருவதன் மூலம் நீண்ட கால பயனை அடைய அவர்கள் விரும்புகின்றார்கள்.

தமிழ்நாட்டிலும் பல இடங்களில் வியாபாரத்திற்காக மாடுகளைக் கொண்டு சென்றவர்களை மறித்து பொறுக்கித்தனங்களை இவர்கள் செய்ததை யாரும் மறந்திருக்க முடியாது. கொலை என்னும் அளவிற்கு தன்னுடைய கொடுங்கரங்களை அவர்கள் நீட்டாமல் இருந்ததற்கு ஒரே காரணம், தமிழ்நாட்டின் முற்போக்கு இயக்கங்களின் வலிமை மட்டுமே ஆகும். அவர்களுக்கு நன்றாகத் தெரியும், அப்படி நடந்தால் அதன் எதிர்விளைவுகள் எவ்வளவு மோசமாக இருக்கும் என்று.

மீண்டும் பாசிசம் தன்னை சட்டப்படியே தேர்ந்தெடுக்கச் சொல்லி உங்களிடம் வந்து நிற்கின்றது. உங்களின் வளங்களைக் கொள்ளையிடவும், எதிர்ப்பவர்களை சுட்டுக் கொல்லவும், இந்த அநீதிக்கு எதிராக குரல் கொடுக்கும் அறிவுஜீவிகளை சிறைக் கொட்டடியில் வைத்து சித்தரவதை செய்யவும், உங்களின் சமையலறையில் புகுந்து நீங்கள் என்ன தின்ன வேண்டும், என்ன தின்னக்கூடாது என்று உங்களுக்குக் கட்டளையிடவும், உங்கள் குழந்தைகளின் மூளைகளில் பார்ப்பன புராணப் புளுகுகளை அறிவியல் என்ற போர்வையில் திணிக்கவும், நீட் தேர்வின் மூலம் தகுதி திறமை என்ற பெயரில் மாணவர்களை தூக்குக் கயிற்றில் ஏற்றவும், மீச்ச மீதி இருக்கும் நாட்டையும் பன்னாட்டு முதலாளிகளுக்கும், அதானி, அம்பானி போன்ற தரகு முதலாளிகளுக்கு விற்கவும், விவசாயிகளையும், பழங்குடியின மக்களையும் கொன்று குவிக்கவும், இளைஞர்களை வேலையற்ற ரிசர்வ் பட்டாளமாக நாயினும் கேடாக அலைய வைக்கவும், எல்லாவற்றுக்கும் மேலாக நேற்றுவரை சொந்த சகோதரர்களாகப் பழகிக் கொண்டு இருந்த சிறுபான்மை மக்களை, வன்மத்தை தூண்டிவிட்டு உங்களை வைத்தே கொலை செய்யவும் உங்களிடம் கூப்பாடு போட்டு வந்திருக்கின்றார்கள்.

குறைந்தபட்ச மனிதாபிமானம் கூட இல்லாத, சிந்தித்துப் பார்க்கத் திராணியற்ற, ரத்தவெறி பிடித்த, சனாதனக் கழிசடைகள் மட்டுமே பிஜேபிக்கோ, இல்லை அதைத் தமிழகத்தில் தாங்கிப் பிடித்திருக்கும் அதிமுக லும்பன் கும்பல்களுக்கோ வாக்களிப்பார்கள். தன்மானமும் சுயமரியாதையும், எதிர்காலத் தலைமுறை மீது அக்கறையும் உள்ள யாரும் இந்தக் கழிசடை கும்பல்களை நினைத்துக்கூட பார்க்க மாட்டார்கள் என்று நாம் உறுதியாக நம்புகின்றோம். மக்கள் ஆராய்ந்து பார்த்து கடந்த ஐந்து ஆண்டுகளில் மட்டும் இல்லாமல் அதற்கு முந்தைய பத்து ஆண்டுகால காங்கிரஸ் ஆட்சியிலும் என்ன நடந்தது என்பதை சீர்தூக்கிப் பார்த்து தங்களது எதிர்காலத்தைத் தீர்மானிக்க வேண்டும். இல்லை என்றால் நிச்சயம் பாசிசம் உங்களைக் கொல்ல வரும் என்பதை நினைவில் வையுங்கள்.

- செ.கார்கி

Pin It