Disease & Medicine in India, A Historical Overview. (Deepak Kumar, Editor) Tulika Books, New Delhi

சென்ற இதழின் தொடர்ச்சி...

இந்நூலின் முதற் பிரிவில் ‘நவீன இந்தியாவிற்கு முற்பட்ட காலம்' என்ற தலைப்பில் இடம் பெற்றிருந்த எட்டு கட்டுரைகள் குறித்த அறிமுகத்தைத் தொடர்ந்து இவ்விதழில் ‘நவீன இந்தியா’ என்ற தலைப்பில் இடம் பெற்றுள்ள பத்து கட்டுரைகளின் சுருக்கமான அறிமுகம் இடம் பெறுகிறது.

british doctor in indiaதொற்று நோய்கள்

மலேரியா

இந்தியாவில் பரவிய தொற்று நோய்களில் மலேரியா, காலரா, பெரியம்மை ஆகிய நோய்கள் முக்கிய இடத்தைப் பிடித்திருந்தன. இவற்றுள் மலேரியா நோய்ப் பரவல் குறித்து முதல் இரண்டு கட்டுரைகள் குறிப்பிடுகின்றன.

முதலாவது கட்டுரையின் ஆசிரியரான இதிசாம் காசி வங்கதேசத்தின் டாக்கா பல்கலைக் கழகத்தில் வரலாற்றுப் பேராசிரியர். மலேரியா நோய்ப் பரவலில் சுற்றுச் சூழல் வகிக்கும் இடத்தை இக்கட்டுரை வெளிப்படுத்துகிறது.

பத்தொன்பதாவது நூற்றாண்டின் நடுப்பகுதியில் வங்காளக் கிராமம் ஒன்றில் இந்நோய் முதலில் காணப்பட்டது. பின்னர் படிப்படியாக இன்றைய பங்களாதேஷ் மேற்கு வங்கம் உள்ளிட்ட வங்காளப் பகுதியில் பரவியது. மக்கள் இதைப் ‘புதிய காய்ச்சல்' என்றழைக்க ஆங்கில அரசு ‘பர்துவான் காய்ச்சல்' என்று பெயரிட்டது. இக்காய்ச்சலின் பரவலால் எண்ணிக்கை- யில்லாத அளவில் மக்கள் மடிந்தனர்.இப்போதுங்கூட இப்பகுதி மலேரியா, டெங்கு காய்ச்சல்களின் தாக்குதலுக்கு ஆளாகும் பகுதியாக உள்ளது. மலேரியா பரவுதலுக்கு முன்பு இருந்த காரணங்கள் இப்போதும் தொடர்கின்றன. இப்பகுதியில் நிகழும் வெள்ளப் பெருக்கு முடிவுற்றதும் பல்வேறு நோய்கள் உருவாகின்றன. அவற்றுள் ஒன்றாக மலேரியா அமைகிறது. இந்நோய்ப் பரவல் குறித்துப் பல்வேறு ஆய்வுக் கட்டுரைகள் வெளிவந்துள்ளன.

இக்கட்டுரை ஆசிரியரின் கருத்துப்படி இரயில் சாலைப் போக்குவரத்துக்கள் உருவாக்கத்தில் அக்கறை காட்டிய ஆங்கில அரசு நீர் வழிப் போக்குவரத்தைப் புறக்கணித்தது. சாலைகள் இரயில் பாதைகள் அமைத்தல், புதிய குடியிருப்புகள் உருவாக்குதல் என வளர்ச்சிப் பணிகள் நடந்தபோது குழிகளும் கற்குவாரிகளும் உருவாயின. இவற்றில் தேங்கும் நீர் மலேரியாக் கொசுக்களின் உற்பத்திக்குத் துணை நின்றது. இதனால் வளர்ச்சியின் விளைவால் உருவாகும் நோயாக மலேரியா சுட்டப்பட்டது. பல்வேறு ஆறுகள் பாயும் சமவெளிப்பகுதிகளைக் கொண்ட வங்காளத்தில் முறையான வடிகால்கள் இல்லாமையும் மலேரியா நோய் பரவலுக்கான காரணங்களில் ஒன்றாகியது. தண்ணீர் தேங்காது ஓடிக்கொண்டிருக்கும் ஆறுகள் பாயும் பகுதிகளில் உள்ள கிராமங்களை விட நீரோட்டம் இன்றி தேங்கிய நிலையில் உள்ள ஆற்றங்கரைக் கிராமங்கள் மலேரியாக் கொசுக்களின் உற்பத்தி மையமாக விளங்கின. வெள்ளத் தடுப்பிற்காகக் கட்டப்படும் தடுப்பணைகளில் தேங்கும் தண்ணீரும் மலேரியாக் கொசுக்களின் உற்பத்திக் களமாயின.

காலனிய அரசிற்கு வருவாய் ஈட்டுவதை மட்டுமே நோக்கமாகக் கொண்டு இரயில் பாதைகளும் சாலைகளும் அமைக்கப்பட்டமையால் இவற்றின் உருவாக்கம் நீர் தேங்கி நிற்பதற்குக் காரணமாக அமைவது கண்டு கொள்ளப்படவில்லை.வளர்ச்சித் திட்டங்களின் எதிர்விளைவாக மலேரியா தோன்றிப் பரவியது. ஆனால் இவ் உண்மையைக் காலனிய அரசு ஏற்றுக் கொள்ளவில்லை. மலேரியாப் பரவலுக்கு அது மக்களைக் குறை கூறியது. இந்நோயானது பாரம்பரியம் சார்ந்த ஒன்று, இனம் சார்ந்தது என்ற கருத்தை அது உருவாக்கிய ஆணையங்கள் முன்வைத்தன. பலவீனமான இனங்கள் இயற்கையின் வளர்ச்சிப் போக்கில் இறந்து போகும் என்றன. இது சமூக டார்வினியம் (Social Darwinism) சார்ந்த கருத்து வெளிப்பாடு என்று கட்டுரையாசிரியர் சரியாகவே மதிப்பிட்டுள்ளார். மலேரியா நோய் குறித்த கடந்தகால அனுபவம் சூழல் சீர்கேட்டின் அனுபவ வரலாறாக அமைந்து எதிர்காலத்திற்கான வழிகாட்டியாக அமைந்துள்ளது. இக் கட்டுரையின் மையச் செய்தியுடன் தொடர்புடையதாக அடுத்த கட்டுரையும் அமைந்துள்ளது.

பத்தொன்பதாம் நூற்றாண்டு மும்பை நகரைத் தாக்கிய மலேரியா குறித்த கட்டுரையை மும்பைப் பல்கலைக் கழகத்தின் வரலாற்றுத் துறைப் பேராசிரியர் சிம்கி சர்கார் எழுதியுள்ளார்.

1838-1841 காலகட்டத்தில் மும்பை நகரின் கொலாபா துறைமுகப் பகுதியில் மலேரியா பரவியது. கொலாபா வட்டார நிலப்பரப்பின் பெரும்பகுதி கடல்நீர் பரவியிருந்த தாழ்வான இடத்தைச் சீர்திருத்தி உருவாக்கப்பட்டதாகும்.

1861-1866 இல் இப் பகுதியின் நிலங்களைச் சீர்திருத்தம் செய்ததானது மலேரியா அதிகரிப்புக்குக் காரணமாக அமைந்தது. 1863 தொடங்கி 1866 வரையிலான நான்காண்டு காலத்தில் மலேரியாத் தாக்குதலால் நிகழ்ந்த இறப்புகளின் சராசரி எண்ணிக்கை 12,577ஆக இருந்தது. 1865இல் இது 18,767 ஆக உயர்ந்தது. இந்நிகழ்வுகளையடுத்து துறைமுகத்தின் விரிவாக்கம் 1903 க்கும் 1907 க்கும் இடைப்பட்ட காலத்தில் நிகழ்ந்தபோது மலேரியாப் பரவல் அதிகரித்தது. 1909இல் எடுக்கப்பட்ட மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்போது துறைமுகத்தை நோக்கியிருந்த வீடுகளில் வசித்தவர்களில் இருபது விழுக்காட்டினரும் துறைமுகத்தை விட்டுத் தள்ளியிருந்த வீடுகளில் வசித்தோரில் மூன்று விழுக்காட்டினரும் மலேரியாத் தாக்குதலுக்கு ஆளாகியிருந்தது தெரியவந்தது.

காவல்பணியில் ஈடுபடுவோர் , கூலிகள், தூய்மைப்படுத்தும் தொழிலாளர்கள் ஆகியோர் மலேரியாத் தாக்குதலுக்கு ஆளானார்கள். துறைமுகத்தில் புதிதாக உருவாக்கப்படும் கப்பல் துறைக்கு (Dock) எதிரே அமைந்திருந்த தூய ஜார்ஜ் மருத்துவமனை மும்பை நகரிலேயே மலேரியா மிகுந்த இடமாக விளங்கியது. மொத்தத்தில் மும்பை நகரில் மிகுதியான மக்களை மலேரியா பலிவாங்கியது. இந்த அளவுக்கு இதன், தாக்குதல் கிராமப்புறங்களில் இல்லை.

இச் செய்திகளின் தொடர்ச்சியாக மலேரியா நோய் உருவாதல் குறித்த பழைய கோட்பாடுகள், அது பரவும் முறை, அதைத் தடுக்கும் முறை, அதன் வகைகள் மும்பை நகரின் பொருளாதாரத்தில் மலேரியா ஏற்படுத்திய தீய விளைவுகள் எனபனவும் இக்கட்டுரையில் இடம் பெற்றுள்ளன.

காலரா

ஐவகர்லால் நேரு பல்கலைக் கழகத்தின் வரலாற்றுத் துறையில் முனைவர் பட்டத்திற்கான ஆய்வு மாணவராக இருந்த துருப் குமார் சிங் பத்தொன்பதாம் நூற்றாண்டில் (1817-1870) வாந்திபேதி (காலரா) நோய்ப் பரவல் குறித்த கட்டுரையை எழுதியுள்ளார்.

british indiaஇந்நோய்த்தாக்குதல் ஏற்படுத்திய உயிரிழப்பு குறித்து இங்கிலாந்தையும் இந்தியாவையும் ஒப்பிடும் புள்ளிவிவரங்களை இக்கட்டுரை ஆசிரியர் வெளிப்படுத்துவதுடன் இங்கிலாந்தில் இதன் பரவல் குறைந்து வர இந்தியாவில் அதிகரித்து வந்ததையும் சுட்டிக் காட்டியுள்ளார். காலனிய அரசின் இராணுவத்தில் குறிப்பிட்டுச் சொல்லுமளவுக்கு இந் நோய் பரவாமலிருந்துள்ளது. ஆனால் பின்னர் அங்கும் பரவத்தொடங்கியுள்ளது. இங்கிலாந்தில் இருந்த படைப்பிரிவைவிட மூன்று மடங்கு அதிகமாக இறப்பு எண்ணிக்கை இருந்ததாக 1859 இல் அமைக்கப் பட்ட ஆணையம் குறிப்பிட்டுள்ளது. முறையான கழிவகற்றலும் குடிநீர் வழங்கலும் இல்லாமையே இதற்கான காரணம் என்று அது குறிப்பிட்டது. இதன் அடிப்படையில் போர்வீரர்களுக்கென்று தனி வாழுமிடங்கள் (கன்டோன்மெண்டுகள்) உருவாக்கப்பட்டன. இருப்பினும் காலரா பாதிப்பு இந்தியப் படைவீரர்களை விட ஆங்கிலப்படை வீரர்களை அதிகம் பாதித்தது. 1867இல் வட இந்தியாவில் இருந்த ஆங்கில இராணுவ வீரர்களில் காலராவினால் இறந்தோர் எண்ணிக்கை ஆயிரத்துக்குப் பதினான்கு விழுக்காடாக இருந்தது. ஆனால் அதே இராணுவத்தில் பணியாற்றிய இந்தியர்களின் இறப்புவிகிதம் ஆயிரத்துக்கு மூன்று விழுக்காடாக இருந்தது. அது மட்டுமின்றி பல்வேறு நோய்த் தாக்குதலால் இறப்போரில் இந்தியப் படைவீரர்களின் எண்ணிக்கையை விட ஆங்கிலப் படைவீரர்களின் எண்ணிக்கையே அதிக அளவில் இருந்தது. இருப்பினும் காலரா நாடு என்ற பெயரை இந்தியா பெற்றது. அய்ரோப்பாவிற்குச் செல்லும் இந்தியக் கப்பல்கள் தனிமைப்படுத்தி நிறுத்தி வைக்கப்பட்டன. காலனிய அரசோ நோய்த்தடுப்பிலும் இனச் சார்பு நிலைப்பாடையே எடுத்தது.

சிபிலிஸ்

சபியா சாச்சி மஸ்தா என்பவர் சுரங்கங்கள் குறித்த கல்வியாளர். தான்பாத் நகரில் செயல்பட்டுவந்த கல்வி நிறுவனம் ஓன்றில் அறிவியல் தொழில் நுட்பம் குறித்த வரலாறு கற்பித்து வந்தார். இவர் எழுதியுள்ள கட்டுரை சிபிலிஸ் என்ற பால்வினை நோய் குறித்ததாகும். இந்நோயானது போரச்சுக்கீசிய வணிகர்களால் இந்தியாவில் பரவியது. இந்தியர்கள் இந்நோயை ‘பரங்கி நோய்' என்றழைத்தனர். (இந்நோயால் தோன்றும் புண்களைப் பரங்கிப் புண் என்று தமிழர்கள் அழைத்துள்ளனர்.) இந்நோய் பத்தொன்பதாவது நூற்றாண்டு இந்தியாவில் பரவி ஏற்படுத்திய பாதிப்புகளை இந்நூலின் இரண்டாவது பிரிவில் இடம் பெற்றுள்ள நான்காவது கட்டுரை ஆராய்கிறது.

இந்நோயால் மிகுதியாகப் பாதிக்கப்பட்டவர்கள் ஆங்கில இராணுவத்தினர் என்று குறிப்பிடும் கட்டுரையாசிரியர் காலனிய அரசு அதிகாரி களிடையிலான உரையாடலில் ஒரு பகுதியாக இது இருந்தது என்கிறார். இந்நோய்ப்பரவல் குறித்த அறிக்கை ஒன்று, போர்வீரர்களாக வரும் இளைஞர்கள் தம் பாலியல் வேட்கையைத் தணித்துக் கொள்வதற்கு சுய இன்பத்தில் ஈடுபடல் அல்லது பொருட் பெண்டிருடன் உறவுகொள்ளுதல் என்ற இரண்டு வழிமுறைகளே உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளது. மேலும் இவற்றுள் முதலாவது உடல் மற்றும் உள்ளச் சீர்குலைவுக்கும் இரண்டாவது அச்சமூட்டும் பால்வினை நோய்களுக்கும் வழிவகுக்கும் என்றும் குறிப்பிட்டுள்ளது. இந்நோய்ப்பரவல் படை வீரர்களிடம் மட்டுமின்றி உயர் இராணுவ அதிகாரிகளிடமும் இருந்துள்ளது.

இந்நோய்த்தாக்குதல் ஏற்படுத்தும் பாதிப்பு, இது குறித்த புள்ளி விவரங்கள், அறிக்கைகள் என்பனவற்றை அடிப்படையாக்க் கொண்டு இக் கட்டுரை எழுதப்பட்டுள்ளது.

கிறித்தவத்தின் மருத்துவப் பணி

இதற்கு அடுத்த கட்டுரையாக அமைவது கனடா நாட்டைச் சேரந்த கிறித்தவ மறைப் பணியாளர்கள் (The Canadian Baptist Missionaries) 1870 முதல் 1952 வரை தெலுங்கு மொழி வழங்கும் பகுதியில் மேற்கொண்ட மருத்துவப் பணிகளை அறிமுகம் செய்கிறது. இக்கட்டுரையின் ஆசிரியரான ராஜ் சேகர் பாசு கொல்கத்தாவிலுள்ள ரவீந்திர பாரதி பல்கலைக் கழகத்தின் வரலாற்றுத் துறையில் பேராசிரியராகப் பணியாற்றியவர். தென் இந்தியாவில் கிறித்தவ மறைப்பணியாளர்களின் செயல்பாடுகள் குறித்த ஆய்வில் தனித்துவம் உடையவர்.

1870ஆவது ஆண்டில் விசாகப்பட்டினத்திலும் அதன் சுற்றுப் பகுதிகளிலும் இச் சபையினர் செயல்படத் தொடங்கினர். பின்னர் சில ஆண்டுகளில் கோகொனாடா என்ற பகுதியை மையமாகக் கொண்டு தம் நடவடிக்கைகளை விரிவுபடுத்தினர். மறைப்பணியாளர்களாகப் பெண்களை நியமித்து யேசுவின் நற்செய்தி ஏடுகளைக் கற்பித்ததுடன் உயர்சாதியினருக்கும் தாழ்த்தப்பட்ட சாதியினருக்கும் பள்ளிகளைத் திறந்தனர். 1890இன் தொடக்கத்தில் மருந்தகங்களையும் மருத்துவ மனைகளையும்,பெரும்பாலும் தீண்டாமைக் கொடுமைக்கு ஆட்பட்ட மக்களுக்காகத் திறந்தனர். இவற்றில் பெண் மறைப்பணியாளர்களை நியமித்தனர்.

இம் மருத்துவப் பணியில் அவர்கள் பல்வேறு இடையூறுகளை எதிர்கொண்டனர். 1897 இல் நிகழ்ந்த பஞ்சத்தை அடுத்து காலராவும் அம்மை நோயும் பரவின. இதனால் பாதிக்கப்பட்ட மக் களுக்கு உதவும் பணியில் ஈடுபட்ட அரசுக்குத் தம் மறைப்பணியாளர்களை அனுப்பி உதவினர். அத்துடன் தீண்டாமைக் கொடுமைக்கு ஆட்படுத்தப் பட்டிருந்த மக்களுக்கு மருத்துவ உதவி வழங்கினர். உள்நாட்டுப் பகுதிகளில் மருந்தகங்களையும் மருத்துவமனைகளையும் நிறுவி அவற்றில் பணிபுரிய அனுபவம் வாய்ந்த மருத்துவப் பணியாளர்களை அனுப்பினர். 1898இல் மறைத் தளத்தின் அறிவுறுத்தலின்படி ஸ்மித் என்ற மருத்துவரும் செவிலியர் பயிற்சி பெற்றிருந்த அவரது மனைவியும் விசாகப்பட்டினத்திற்கு அருகிலுள்ள எல்லமஞ்சிலி என்ற ஊரில் சிறிய மருத்துவமனை ஒன்றை நிறுவினர். இது தொடங்கப்பட்ட சிறிது காலத்திற்குள்ளாகவே பெண் நோயாளிகளுக்கான சிறந்த மருத்துவமனை என்ற நற்பெயரை ஈட்டியது. இதன் விளைவாக சமூகத்தால் ஒதுக்கி வைக்கப்பட்ட வறுமை வாய்ப்பட்ட மக்கள் பிரிவைச் சேர்ந்த பெண்கள் கிறித்தவத்தைத் தழுவினார்கள்.

இவர்களின் மருத்துவப் பணியின் வளர்ச்சி நிலையாக பிதாப்புரம் என்ற ஊரில் பெதஸ்தா மருத்துவமனை என்ற பெயரில் மருத்துவமனை ஒன்று கனடா நாட்டைச் சேர்ந்த இரு பெண் மறைப்பணியாளர்களின் நிதியுதவியடன் உருவானது. 1904க்கும் 1908க்கும் இடைப்பட்ட காலத்தில் இந்தியாவிலும் கனடாவிலும் திரட்டப்பட்ட நிதியின் துணையுடன் பேறுகாலப் பிரிவு கட்டப்பட்டது. இதன் தொடர்ச்சியாக இம் மறைப் பணியாளர்கள் மேற்கொண்ட மருத்துவப் பணியின் வளர்ச்சி நிலையைக் கூறிச் செல்கிறார் இக் கட்டுரையாசிரியர்.

கட்டுரையின் இறுதியில் தம் மருத்துவப் பணிக்கான சமூக ஒப்புதலைப் பெற இவர்கள் எவ்வளவு சிரமப்பட்டார்கள் என்பதையும் குறிப்பிட்டுள்ளார். மேற்கத்திய மருத்துவம் குறித்து பாரம்பரியமாக நிலவிவந்த வெறுப்பு, கிறித்தவ மறைப் பணியாளர்களுக்கு எதிராகப் பிராமணக் குருக்களும் தாழ்த்தப்பட்ட மக்கள் பிரிவினரின் மாந்திரிகர்களும் மேற்கொண்ட எதிர்ப்பிரச்சாரங்களுக்கு ஊடாகத்தான் இவர்கள் செயல்பட வேண்டியிருந்தது. தொற்று நோய்களுக்கு இவர்கள் அளித்த சிகிச்சையின் வெற்றி மேற்கத்திய மருத்துவத்தின் மீது பரவலாக நிலவிவந்த ஒவ்வாமையை நீக்கியுள்ளது. எல்லாவற்றிற்கும் மேலாக இவர்கள் தம்மை இந்தியர்களாகப் பாவித்து மருத்துவப் பணியை ஆன்மீகப் பணியாகவும் உலகளாவிய சகோதரத்துவமாகவும் நோக்கினர். காந்தியவாதி ஒருவர் குறிப்பிட்டது போன்று தம் பாவங்களைப் போக்க இந்தியப் பூசகர்கள் புனித நீர்நிலைகளில் தம் கரங்களைக் கழுவிக் கொண்டிருந்தபோது இவர்கள் நோயாளிகளின் காயங்களைக் கழுவிக் கொண்டிருந்தனர்.

இந்திய விடுதலை இயக்கத்தில்

ஆங்கில ஆட்சிக்கெதிரான விடுதலை இயக்கத்தில் மக்களின் உடல் நலம் குறித்த சிந்தனைகள் இடம் பெற்றிருந்ததை காந்தியை முன்வைத்து அமித் மிஸ்ரா ஆராய்ந்துள்ளார். இவர் லக்னோ நகரில் செயல்பட்டு வரும் மருந்து ஆராய்ச்சி நிறுவனத்தின் விஞ்ஞானி.

தம் கட்டுரைக்கான சான்றுகளை மகாத்மா காந்தியின், தேர்வு நூல்களில் இருந்து திரட்டியுள்ளார். உணவூட்டம் (Nutrition), உடல் நிலை ஆக்க மேம்பாடு, (Sanitation), தொற்று நோய்கள், எதிர்ப்பாற்றல் (Immunization), மருந்துச் சிகிச்சை, இயற்கைச் சிகிச்சை, என்ற உட்தலைப்புகளைக் கொண்டதாக இக் கட்டுரை அமைந்துள்ளது.

காந்தியின் இயற்கைச் சிகிச்சை முறையை வளரச்செய்தால் அது கிராம மேம்பாட்டுத்திட்டத்தை உள்ளடக்கியதாகும் என்ற கருத்தில் இவருக்கு உடன்பாடுள்ளது.

பிற கட்டுரைகள்

கொல்கத்தா இரவீந்திர பாரதி பல்கலைக் கழகத்தின் வரலாற்றுத் துறை இணைப் பேராசிரியர் சுதா முகர்ஜி இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் வங்கப் பெண்களின் உடல் நலம் குழந்தைகளின் உடல் நலம் எவ்வாறிருந்தது என்பது குறித்து எழுதியுள்ளார். பெண்கள் குழந்தைகள் உடல்நலம் பேணுவதில் அய்ரோப்பியர்களின் தனியார் அமைப்புகளும் அரசு நிர்வாக அமைப்பும் வகித்த பங்களிப்பையும் ஆராய்ந்துள்ளார். இங்கிருந்த சுரங்கங்கள், சணல் ஆலைகள், மலைத்தோட்டங்கள் ஆகியனவற்றில் பணிபுரியும் பெண்களின் பேறுகால நலன் குறித்து அக்கறை காட்டுதல் ஓரளவுக்காவது நிகழ்ந்துள்ளது. பேறுகால இறப்பு, குழந்தை இறப்பு குறித்த புள்ளிவிவரங்களும் இக் கட்டுரையில் இடம் பெற்றுள்ளன.

கோட்டையம் மகாத்மா காந்தி பல்கலைக் கழகத்தின் வரலாற்றுத் துறையில் ஆய்வு மாணவராக இருந்த சுனிதா பி.நாயர் திருவிதாங்கூர் மாநிலத்தில் மேற்கத்திய மருத்துவமுறை பத்தொன்பதாவது நூற்றாண்டில் எவ்வாறு இருந்தது என்பது குறித்த சமூக வரலாற்றை எழுதியுள்ளார். அம்மைத் தடுப்பூசி அங்கு அறிமுகமானபோது அது கட்டாயமாக்கப்பட்டது. தடுப்பூசி போடுபவர்கள் ஒடுக்கப்பட்ட சாதியினருக்குப் போட மறுத்தனர்.

அம்மைத் தடுப்பூசி குத்திக் கொள்ள பல்வேறு காரணங்களைக் கூறி பெரும்பான்மையான மக்கள் தொடக்கத்தில் மறுத்துள்ளனர். பிராமணியத்தை இழந்து விடுவோம் என்று பிராமணர்கள் அஞ்சினர். பசு மாட்டிற்கு அம்மைக் கொப்பளம் வரச்செய்து அதிலிருந்து எடுக்கப்படும் அம்மைப் பாலை தம் உடலில் செலுத்திக் கொள்வது பசுவைப் புனித விலங்காகக் கருதும் தம் சமய நம்பிக்கைக்கு எதிரானது என்றனர். இத்தடுப்பூசி போட்டுக் கொள்வதால் பசுவின் குரல், உடல் அமைப்பு என்பன தம்மிடம் தோன்றிவிடும் என்றும் மனிதத்தலை மாட்டின் தலையாக மாறிவிடும் என்றும் நம்பினர் . கல்வியறிவு பெற்றிருந்தவர்களிட மிருந்தும் எதிர்ப்பு வந்தது.சிலர் தொழுநோய் சிபிலிஸ் போன்ற நோய்களை இத் தடுப்பூசி ஏற்படுத்தும் என்றனர்.

காலரா நோய் பரவியபோது நாட்டு வைத்தியர் ஒருவர் மருந்து தயாரித்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

ஆங்கில மருத்துவமுறை படிப்படியாக அறிமுகமானதையும் தனியார்கள் குறிப்பாகக் கிறித்தவ அமைப்புகள் மருத்துவ மனைகளை உருவாக்கியதையும் குறிப்பிட்டுள்ளார். மற்றொரு பக்கம் கேரளத்தின் பாரம்பரிய வைத்திய முறைகளில் ஒன்றான ஆயுர்வேத வைத்திய முறை நவீனமாதலை நோக்கி நகர்ந்தது.

இந்திய தேசிய இயக்கத்தினர் உள்நாட்டு மருத்துவ முறைக்கு ஆதரவாகக் குரலெழுப்பத் தொடங்கினர். இதன் தாக்கத்தால்1907இல் அகில இந்திய ஆயுர்வேத காங்கிரஸ் என்ற அமைப்பு உருவானது. 1889இல் ஆயுர்வேத பாடசாலைகள் உருவாயின. 18 9 5 - 9 6இல் இப் பள்ளிகளில் பயின்று தேர்ச்சி பெற்றவர்களுக்கு மருத்துவ மானியம் வழங்கப் படலாயிற்று.1917-18 இல் ஆயுர்வேத மருத்துவத்திற்கென்று தனித்துறை தொடங்கப்பட்டு ஆயுர்வேத இயக்குநர் என்ற பதவியும் உருவாக்கப்பட்டது. இத்துறை ஆயுர்வேத பாடசாலைகளின் பாடத் திட்டத்தை நவீனப் படுத்தியது. ஆயுர்வேத மருந்தகங்களும் மருத்துவ மனைகளும் செயல்பட்டு வந்தன. காலனிய ஆட்சியும் கூட ஆயுர்வேத மருத்துவ முறையின் வளரச்சியில் அக்கறை காட்டியுள்ளது.

மேற்கத்திய மருத்துவ முறை குறித்த இந்தியர்களின் நிலைப்பாடு மும்பை மாநிலத்தில் 1900-20 காலகட்டத்தில் எவ்வாறிருந்தது என்பதை மும்பை பல்கலைக் கழகத்தின் வரலாற்றுத் துறைப் பேராசிரியர் மிருதுளா ராமண்ணா ஆராய்ந்து எழுதியுள்ளார்.

நூலின் இறுதிக் கட்டுரை ஜவகர்லால் நேரு பல்கலைக் கழகத்தில் சமூக மருத்துவம் மக்கள் நலம் குறித்த மையத்தில் பணியாற்றி வரும் மோகன் ராவ், உலக வங்கியின் உடல்நல அரசியல் குறித்து ஆராய்கிறார். இக் கட்டுரையில் இடம் பெறும் வரலாற்றுச் செய்திகளில் இருந்து பலரும் நழுவிச் செல்வதைக் கருதியதாலோ என்னவோ இக் கட்டுரைக்கு ‘தவிர்க்கும் வரலாறு' (Eliding History) என்று தலைப்பிட்டுள்ளார். கட்டுரையின் இறுதியில் அவர் வெளிப்படுத்தியுள்ள கருத்துக்களின் ஒரு பகுதி வருமாறு:

“உலக முழுவதும் மட்டுமல்லாது நாடுகளுக்குள்ளும் 1980 முதல் ஏற்றத்தாழ்வுகள் கணிசமாக அதிகரித்துள்ளமை மிகத் தெளிவாகத் தெரிகிறது. இதனால் வறுமை அதிகரித்துள்ளது. இதன் காரணமாகக் காலனியம் முடிவுற்ற மூன்றாம் உலக நாடுகளிலும் மேற்கு உலக நாடுகளில் உருவான மக்கள் நல அரசுகளிலும் சுகாதார மற்றும் மருத்துவ முன்னேற்றங்கள் முறியடிக்கப்பட்டுள்ளன. உலக முழுவதும் மனிதரின் சராசரி ஆயுள் குறைந்துள்ளதுடன் குழந்தை மற்றும் சிறார் இறப்பு விகிதமும் அதிகரித்துள்ளது.”

“அடித்தளமக்களுக்குத் தொழில்நுட்பத்துடன் கூடிய மருத்துவ முன்னேற்றத்தை விட வாழ்க்கைத்தர முன்னேற்றம் அதிமுக்கியத்துவம் உடையது என்ற புரிதல் அவசியம். முன்பு இந்தியாவில் பிற அம்சங்களுடனும் ஒருங்கிணைந்த முன்னேற்றத்துடனும் உடல்நலனை இணைத்துப் பார்க்கும் போக்கு இருந்தது."

"இன்றைய புதிய முயற்சிகள் உலக வங்கியின் வழிகாட்டலில் பொதுச் சுகாதாரம் குறித்த பங்கையும் கண்ணோட்டத்தையும் வெறும் தொழில் நுட்பம் சாரந்தவையாக மாற்றிவிட்டன.”

“அதே சமயம், மக்களின் சுகாதார நலனைத் தீர்மானிப்பதில் இதுவரை அரசுக்கு இருந்து வந்த பங்களிப்பு இன்று பெருமளவில் குறைக்கப் பட்டுவிட்டது. வெறும் தொழில் நுட்ப உத்திகளைக் கொண்டு செயல்படும் சுகாதார மேம்பாட்டுத் திட்டங்களின் பயன் எப்போதும் நீடித்து நிற்பதில்லை. இந்தியாவில் செயல்படுத்தப்பட்ட மலேரியா ஒழிப்புத் திட்டம் இதை நிருபித்துள்ளது.மனித நாகரீக வளர்ச்சியின் கண்ணாடிகளில் சுகாதார முன்னேற்றமும் ஒன்று. அதில் இன்று தெரிவது உயர்வாகவும் இல்லை, மின்னுவதாகவோ மிளிர்வதாகவோ இல்லை.”

ஆ.சிவசுப்பிரமணியன்

Pin It