நாம் விடுதலை பெற்று நம்முடைய துன்பங்கள் எல்லாம் ஒழிந்து சுகத்தோடு வாழ வேண்டுமென விரும்பினால், முதலில் நம்மை நாம் சீர்திருத்தஞ்செய்து கொள்வது அவசியமானதாகும். நாம் விடுதலை பெறுவதற்குப் பெரிய தடைகளாக நம்மைச் சூழ்ந்து கொண்டு நிற்பவை எவை என்று ஆராய வேண்டுவது முதல் வேலை. ஆராய்ந்து கண்டுபிடித்து அத்தடைகளை அடியோடு நீக்குவதற்கான எண்ணத்தைப் பலப்படுத்திக் கொண்டு, பின்பு அவற்றை ஒழிப்பதற்குரிய வழிகளைக் கண்டு பிடிக்க வேண்டும்; கண்டு பிடித்த அவ்வழிகளை உறுதியோடும், உண்மையோடும், அஞ்சாமலும் கைக்கொண்டு அந்தத் தடைகளை ஒழிக்க முயல வேண்டியதே சிறந்த செய்கையாகும். இவ்வாறு தான் மற்ற நாகரீகம் பெற்ற - சுயேட்சை பெற்ற நாடுகளில் உள்ளவர்கள் நடந்து அவர்கள் தற்காலத் திலிருக்கும் உன்னத நிலையை அடைந்திருக்கின்றனர். நமது நாட்டிலோ பலருடைய மனத்திலும், விடுதலை பெற வேண்டும் என்ற எண்ணம் மாத்திரம் சில ஆண்டுகளாக உறுதிப்பட்டு நிலைத்திருந்தாலும், எந்த வழியில் அந்த விடுதலையை அடைவது என்பதைப் பற்றிச் சரிவரச் சிந்திக்காமலும், சரியான முடிவுக்கு வர மனமில்லாமலும் இருக்கின்றனர்.

“விடுதலையை வாங்கித் தருகிறோம்” என்று சொல்லித் தேச மக்களுக்குத் தலைமை வகித்து நடத்துகிறவர்களும், சரியான வழியை மக்களுக்குக் காட்டாமல் இருக்கின்றார்கள். மற்ற நாட்டினர் தங்கள் சமூகத் தில் பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாகக் குடி கொண்டிருந்த எந்தெந்த நடவடிக்கைகளை ஒழித்ததன் மூலம் விடுதலை பெற்றார்கள் என்பதை இந்தத் தலைவர்கள் என்பவர்கள் அறியாதவர்கள் அல்லர். அறிந்திருந்தும், நம்மிடத்திலும் அது போல் உள்ள அந்த நடவடிக்கைகளாகிய தடை களைப் பற்றிய தீமைகளை ஜன சமூகத்திற்கு எடுத்துக் காட்டாமலும், அவைகளை ஒழிக்க வேண்டுமென்று கூறாமலும் மறைத்து வைத்துக் கொண்டிருக்கின்றனர். இதற்குக் காரணம் அவைகளின் மேல் இவர்கள் கொண்டுள்ள ஒருவிதக் குருட்டு நம்பிக்கையேயாகும். அந்த நமது முன்னேற்றத்திற்குத் தடையான நம்முடைய நடவடிக்கைகள், “நமது முன்னோரால் கையாளப்பட்டவை; அவைகள் தெய்வீகத் தன்மை யுள்ளவை; ஆகையால் அவற்றை அழிக்கக்கூடாது” என்ற ஒரு பகுத்தறி வற்ற, பிடிவாதமான எண்ணமே யாகும்.

periyar and kamarajarஆகையால் தான், நமது நாட்டில் சமூகச் சீர்திருத்தம் செய்ய முன் வந்தவர்களும், வருகின்றவர்களும், அரசியல் விடுதலைப் பெற முன் வந்தவர்களும், வருகின்றவர்களும், பழமையான காரியங்களுக்கு ஒரு கெடுதியும் இல்லாமல் அவைகளுக்குப் பாதுகாப்புத் தேடிக் கொள்வதை முதன்மையாக வைத்துக் கொண்டே, சமூகச் சீர்திருத்தமும், அரசியல் விடுதலையும் பெற விரும்பினார்கள், விரும்புகின்றார்கள். நாம் வேறொரு நல்ல இடத்தை அடைய வேண்டுமானால், இருந்த பழைய இடத்தை விட்டுப் புறப்பட்டால் தான் குறிப்பிட்ட நல்ல இடத்திற்குப் போக முடிவதைப் போல், பழமையாக நம்மிடம் குடி கொண்டிருக்கும் பல நடவடிக்கைகளை ஒழித்தால் தான் புதுமையான விடுதலையை அடைய முடியும் என்பதை அவர்கள் சிறிதும் சிந்திப்பதில்லை; சிந்தித்தாலும், தமது இரத்தத்துடன் கலந்து உடம்பில் ஊறிப் போயிருக்கும் “பழய நம்பிக்கை” அவர்களைப் பழமையை விட்டு அசைய விடுவதில்லை.       

பழமை யென்னும் பாழும் கோட்டைக்குள் உறுதியாக உட்கார்ந்து கொண்டே புதுமையான விடுதலை, சமூக சமத்துவம் இவற்றைப் பெற வேண்டுமெனப் பேசி வருகின்றனர். இதற்காக இவர்கள் செய்யும்படி காட்டுகின்ற முயற்சிகளும், வழிகளும், இன்னும் நாம் பல ஆயிரம் ஆண்டு களானாலும், தற்போது இருக்கும் நிலைமையிலிருந்து இம்மியளவும் மாறாமல் நிறுத்தி வைக்கக் கூடிய வழிகளாகவும் முயற்சிகளாகவுந் தான் இருக்கின்றன.

இவற்றை விளக்கச் சில உதாரணங்களைக் கீழே எடுத்துக் காட்டுகிறோம். அவற்றைக் கொண்டு மேலே நாம் கூறியவைகளின் உண்மையை ஆராய்ந்து பார்த்துத் தெரிந்து கொள்ளலாம். நாகரீகம் பெற்ற நாடுகளில் வாழுகின்ற அறிஞர்களும், சீர்திருத்தக்காரர்களும், அரசியல் வாதிகளும், தமது நாட்டு மக்கள் மனத்தில் தன்னம்பிக்கையை வேரூன்றச் செய்கின் றனர்; நன்மை தீமையைப் பகுத்தறிந்து சிந்தித்து ஒரு காரியத்தைச் செய்யும் படி மக்களின் எண்ணத்தைத் திருப்புகின்றனர். பழமையைப் பற்றிச் சிறிதும் பொருட்படுத்தாமல், காலத்திற்கேற்ப தம்முடைய நடத்தைகளையும், எண்ணங்களையும், செயல்களையும் மாற்றிக் கொள்ளும்படியான மனப்பான்மையை உண்டாக்குகின்றனர்.

நமது நாட்டில் வாழும் தலைவர்கள் என்று சொல்லப்படுகிறவர்கள் செய்கையோ இதற்கு முற்றிலும் வேறு பட்டதாகவே இருக்கின்றது. நமது மக்களுக்குத் தன்னம்பிக்கை சிறிதும் உண்டாகாதபடி “ஆண்டவன்” என்பவனை நம்புவதனாலும், பிரார்த்தனைகளை நடத்துவதாலுமே காரியங்களை முடிக்கலாமென்னும் மூடத்தனத்தைப் பரவச் செய்கின்றனர். எதையும் ஆராய்ந்து பார்க்கும் பகுத்தறிவை உண்டாக்காமல், “மதக் கட்டளை” “கடவுள் மொழி” “பெரியோர் சொல்” “மகாத்மா வாசகம்” என்று சொல்லி அவற்றைச் சரியோ, தப்போ அப்படியே நம்பும்படியான மனப்பான்மையை உண்டாக்குகின்றனர், காலத்திற்குப் பொருந்தாத பழய நடவடிக்கைகளை மாற்றிக் கொள்ளும் எண்ணத்தை உண்டாக்காமல், “பழமையான நடவடிக்கைகள்” பரிசுத்தமானவை, அவற்றை மாற்றிக் கொண்டால் நமது மதத்திற்கு அழிவு வந்து விடும்; நமது புராதன நாகரிகத்திற்குச் சிதைவு வந்து விடும்; ஆகையால் பழமையை விட்டுவிடக் கூடாது என்ற எண்ணத்தை உறுதியாக நிலைக்கச் செய்யக்கூடிய வேலையையே செய்கின்றனர்.

நாகரீக தேசத்தார்கள், தம்முடைய நாட்டு மக்களை உலக நாகரீகத்திற்கு வேண்டிய சிறந்த கல்விகளை கற்கும்படி செய்கின்றனர். அதாவது:- கைத்தொழில் சம்பந்தமான கல்வி, வியாபார சம்பந்தமான கல்வி, விவசாய சம்பந்தமான கல்வி, விஞ்ஞான சாஸ்திர சம்பந்தமான கல்வி, சுகாதார சம்பந்தமான கல்வி, அரசியல் சம்பந்தமான கல்வி முதலிய உலக வாழ்க்கைக்குப் பயன்படத் தகுந்த கல்வியை வளர்க்க முயற்சி செய்கின்றனர். ஆனால் நமது நாட்டுத் தலைவர்கள் என்பவர்களோ, மேற்கூறிய பலவகைப்பட்ட கல்விகளைக் கற்பதற்கு வசதியுள்ள நூல்கள் நிரம்பிய பாஷையையே நமது நாட்டை விட்டு ஒழித்து விட வேண்டு மென்று வேலை செய்கின்றனர். மக்களுக்கு உலக நாகரீகத்தைப் போதிக் காமல், சோம்பேரித் தனத்தையும், மூடநம்பிக்கைகளையும் உண்டாக்கக் கூடிய சில புராணங்கள் மாத்திரம் உள்ளதும், சிறந்த இலக்கியங்கள் கூட இல்லாததுமாகிய ஹிந்தி பாஷையையே எல்லா மக்களும் படிக்க வேண்டும் என்று பிரசாரம் பண்ணுகின்றனர்.

மற்ற நாட்டு தலைவர்கள் எல்லோரும், மக்களுடைய கஷ்டமான உழைப்பைக் குறைத்து, எல்லாத் தொழில்களையும் இயந்திரங்களைக் கொண்டு விருத்தி செய்து, நாட்டின் விவசாயம், கைத்தொழில் முதலியவை களை வளர்க்க முயற்சிக்கின்றனர். இதன் மூலம், நமது நாட்டு விவசாயமும், கைத்தொழிலும், அந்நிய நாட்டு விவசாயத்திற்கும், கைத்தொழில்களுக்கும், சளைக்காமல் அவைகளுடன் போட்டி போடவும், வியாபாரத்தின் மூலம் தங்கள் நாட்டில் செல்வத்தை பெருக்கவும் முயற்சி செய்து வெற்றி பெறுகின்றனர்.

நமது நாட்டுத் தலைவர்கள் என்பவர்களோ இயந்திரங்களின் மூலம் தொழில்களை விருத்தி செய்ய வேண்டும் என்னும் எண்ணமே மக்களிடம் தோன்றாமலிருக்கும்படியும், எல்லாத் தொழில்களையும் பிறர் உதவி இல்லாமல் தாமே கையினால் செய்து கொள்ள வேண்டும் என்னும் குறுகிய மனப்பான்மையையும் “தேசீயம்” என்னும் பெயரால் உண்டாக்குகின்றனர். இதனால் நாட்டின் விவசாயம், கைத்தொழில்கள் முதலியன வளர்ச்சியடைய ஒட்டாமலும், எந்த வகையிலும் அந்நிய நாடுகளுடன் வியாபாரம் செய்து போட்டி போட முடியாமலும், நாட்டின் செல்வ நிலை வளர முடியாமலும் பாழ்படுத்துகின்றனர்.

மற்ற நாகரீகம் பெற்ற நாடுகளிலோ, தொழிலாளர்கள் முதலாளிகள், ஏழைகள் பணக்காரர்கள், தாழ்ந்த சாதிக்காரர்கள் உயர்ந்த சாதிக்காரர்கள் என்ற வித்தியாசங்கள் ஒழிந்து, எல்லா மக்களும், சம சுதந்தரமும், சம சுகமும் அடைவதற்கான வழிகளையும் முயற்சிகளையும் செய்து கொண்டு வருகின்றனர்.

நமது நாட்டில் உள்ள தலைவர்கள் என்பவர்களோ, வருணாச்சிரம தரும மனப்பான்மையைச் சிறிதும் மாற்றிக் கொள்ளாமல், கஷ்டப்பட்டு கொண்டிருக்கின்றவர்கள் நிரந்தரமாகவே கஷ்டப்பட்டுக் கொண்டே வாழவும், ஏழை மக்களை நசுக்கிப் பிழிந்து அவர்கள் உழைப்பின் பலனை அனுபவித்துக் கொண்டிருப்பவர்கள் எப்பொழுதும் அப்படியே அனு பவித்துக் கொண்டிருக்கவுமே பாதுகாப்புத் தேடிக் கொண்டு வருகின்றனர்.

மற்ற நாட்டினர், தங்கள் நாட்டு வாலிபர்களுக்குச் சிறந்த கல்விப் பயிற்சியும், தொழில் செய்யும் திறமையும், நாட்டிற்கு ஆபத்து வருங் காலத்தில் அதைக் காப்பாற்றுவதற்காக ராணுவ பயிற்சியும் கொடுத்து அவர்களைச் சிறந்த வீரப்பிரஜைகளாகச் செய்கின்றனர்.

நமது நாட்டுத் தலைவர்கள் என்பவர்களோ, நமது வாலிபர்களுக்குக் கல்விப் பயிற்சியும், தொழிற்பயிற்சியும் கற்றுக் கொள்ளும் படியான ஊக் கத்தை உண்டாக்காமலும், ராணுவப் பயிற்சியை அடைய வேண்டுமென்னும் எண்ணத்தை மிகுதிப்படுத்தாமலும் வாலிபர்களைக் கோழைகளாக்கு கின்றனர். அன்றியும் “சத்தியாக்கிரகம்” “ஆத்ம சக்தி” என்னும் பெயர் களால் நமது வாலிபர்களை அடிபடவும், உதைபடவும், மான ஈனமின்றி உண்டியல் பெட்டிகளைத் தூக்கிக்கொண்டு, தெருத்தெருவாக, வீடுவீடாகப் போய் பிச்சை வாங்கும் பேடிகளாகவும் செய்கின்றனர்.

மற்ற நாட்டுத் தலைவர்கள், மக்களுடைய பகுத்தறிவுக்கும், தன்னம் பிக்கைக்கும், முயற்சிக்கும் தடைகளாயிருந்து, அவர்களைச் சோம்பேறி களாகவும், மூடர்களாகவும் ஆக்கி வைத்துக் கொண்டு, வெகுகாலமாக நிலை பெற்று வரும் மதங்களையும், கடவுள்களையும், வேதங்களையும், ஒழித்து இவைகள் மக்களின் கவனத்தைக் கவராமல் இருக்க முயன்று ஜெயம் அடைகின்றனர்.

நமது நாட்டுத் தலைவர்கள் என்பவர்களோ நமது தேசத்தில் ஒன் றோடு ஒன்று கலகம் புரிந்து கொண்டிருக்கும் மதங்கள், கடவுள்கள், வேதங்கள் இவைகளால் உண்டான நாகரீகங்கள் ஆகிய பலவகையான பிரிவுகள் எல்லாம் என்றும் அழியாமல் நிலைத்திருப்பதற்கு வேண்டிய பாதுகாப்புகளை உறுதியாக ஏற்படுத்தி அவைகளை நிலைக்க வைக்கப் பாடுபடுகின்றனர்.

மற்ற நாட்டுத் தலைவர்கள், மனித சமூகத்திற்குப் பயன்படாமல் ஒரு சிலரின் சுய நலத்திற்காகப் பயன்பட்டுக் கொண்டிருக்கும் மடங்களின் சொத்துக்களையும், கோயில்களின் செல்வங்களையும், மற்றும் மத ஸ்தா பனங்களின் பொருள்களையும் பறிமுதல் செய்கின்றனர். அவற்றைத் தேசத்தின் சுகாதாரம், கல்வி, கைத்தொழில் முதலியவைகளுக்குச் செலவு செய்து தேசத்தை உயர்ந்த நிலைமைக்குக் கொண்டு வருகின்றனர்.

நமது நாட்டுத் தலைவர்கள் என்பவர்களோ, மடங்களின் சொத்துக் களும், கோயில்களின் சொத்துக்களும், மற்றுமுள்ள தரும ஸ்தாபனங்களின் சொத்துக்களும் பரம்பரையாக எந்தக் கூட்டத்தாரின் சுய நலத்திற்குப் பயன் பட்டு வந்ததோ அந்தக் கூட்டத்தாரின் நன்மைக்கே இன்னும் நிலையாக உபயோகப்பட்டு வரவேண்டுமெனப் பாதுகாப்புத் தேடுகின்றனர். இவைகளை மாற்றுவது மதவிரோதமென்றும், “கடவுள்” என்பவருக்கு விரோத மான செய்கை என்றும், அவைகளில் தலையிட பொது ஜனங்களுக்கும், அரசாங்கத்தாருக்கும் உரிமையில்லை என்றும் கூச்சலிட்டுக் கொண்டு வரு கின்றனர். இதன் மூலம் ஏராளமான செல்வத்தை தேசத்திற்குப் பயனில்லா மல் சில சுயநல கூட்டத்தாரே அனுபவித்து வருகின்றனர்.

மற்ற நாட்டில் உள்ளவர்கள், பெண்மக்களும், ஆண்மக்களைப் போலவே சமூக வாழ்விலும் அரசியல் வாழ்விலும் சம சுதந்தரம் அனு பவிக்க உரிமை வழங்கி வருகின்றனர்.

ஆனால் நமது நாட்டிலோ, “பால்ய விவாஹத்தை தடுப்பது மத விரோதமான காரியம்; விதவைகளைக் கல்யாணஞ்செய்து கொள்ள அனு மதிப்பது மதத்துரோகம்; கோஷா முறையை நீக்குவது “கடவுள்” கட்ட ளைக்கு விரோதம்; “உயிர்களை உற்பத்தி செய்வதும், அவைகளைக் காப்பாற்றுவதுந்தான் பெண்களுக்கு இடப்பட்ட கட்டளை” என்று கூறிப் பெண்மக்களுடைய சுதந்திரத்திற்கு விரோதமாக வேலை செய்கின்றனர்.

மற்ற நாடுகளில், ஜனங்களுக்கு லௌகீக ஞானம் உண்டாகும் பொருட்டும், சுகாதாரத்தோடும், பகுத்தறிவோடும் வாழக்கூடிய வழிகளைக் காட்டும் பொருட்டும், சுகாதாராக் காட்சிகள், கல்வி கண்காட்சிகள், விவசாயக் கண்காட்சிகள், கைத்தொழிற் கண்காட்சிகள், விஞ்ஞான சாஸ்திர சம்பந்தமான கண்காட்சிகள் முதலியவைகளை நடத்தி வருகின்றனர். இவ்வகை யிலேயே ஏராளமான பணங்களைச் செலவிட்டுத் தேச மக்களை அறிவுடைய மக்களாக்குகின்றனர்.

நமது நாட்டிலோ மக்களுடைய அறிவை மழுங்கச்செய்து அடிமைப் படுத்துவற்காகப் பொய்யாகவும் புனைந்துரைகளாகவும் எழுதப்பட்ட புராணங்களை நம்பி அவற்றில் உள்ள கதைகளையே திருவிழாக்களாக ஏராளமான பொருளைச் செலவு செய்து நடத்தி வருகின்றனர். அல்லாமலும், புராணக் கதைகளையே ஆதாரமாகக் கொண்ட பண்டிகைகளையும் கொண்டாடுவதுடன், தேசீயத்தின் பேரால் இன்னும் புதுப்புதுப் பண்டிகைகளையும் உற்பத்தி செய்து வருகின்றனர்.

இக்காரியங்களின் மூலம் மக்களை இன்னும் குருட்டு நம்பிக்கை யுடைவர்களாகவும், பகுத்தறிவற்றவர்களாகவும் ஆக்கி வருகின்றனர்; மக்களுடைய முயற்சியையும், நேரத்தையும், பாடுபட்டுத் தேடிய செல்வங்களையும் பயனற்ற வீணான வழியிற் செலவு செய்யும்படி தூண்டி விடுகின்றனர். மற்ற நாட்டில் உள்ளவர்கள், சந்திரமண்டலத்தில் குடியேறு வது எப்படி? அதற்கு மேல் உள்ளதாகக் கூறப்படும் உலகங்களை கண்டுபிடிப்பது எப்படி? ஆண் பெண் சேர்க்கையில்லாமல் மக்களை சிருஷ்டிப்பது எப்படி? ஒவ்வொரு மக்களும் தனித்தனியே ஆகாய மார்க்கமாகப் பறந்து செல்வது எப்படி? என்று ஆராய்ந்துக் கொண்டிருக்கின்றார்கள். இதற்காக அந்நாடுகளில் உள்ள அறிஞர்கள் தங்கள் காலத்தையும் அறிவையும் செலவழித்து வெற்றிப் பெற்றுக் கொண்டும் வருகின்றார்கள். ஆனால் நமது நாட்டில் உள்ள பண்டிதர்களும், அரசியல்வாதிகளும், தீண்டாதவர்கள் கோயிலுக்குள் செல்லுவதும், அவர்கள் பொதுச்சாலைகளில் நடப்பதும், பொதுப் பள்ளிக்கூடங்களில் படிப்பதும், பொதுக்கிணறுகளிலும், பொதுக்குளங்களிலும் தண்ணீர் எடுப்பதும், மதவிரோதமா? அல்லவா? சாஸ்திர விரோதமா? அல்லவா? கடவுள் கட்டளைக்கு விரோதமா? அல்லவா? என்று ஆராய்ச்சி செய்து கொண்டிருக்கின்றனர்.

அன்றியும் ஐந்து தலைமுறைக்கு முன் தாயாதியாக இருக்கும் குடும்பத்தில் ஒருவர் வெளியூரில் இறந்து போய்விட்டார் என்ற சங்கதியை இறந்த இரண்டு தினங்கள் கழிந்த பின் கேள்விப்பட்டால் அப்பொழுது ஸ்நானம் செய்ய வேண்டுமா? வேண்டாமா? என்ற விஷயத்தைக் கண்டுபிடிக்க நமது நாட்டுப் பண்டிதர்கள் சாஸ்திரங்களை புரட்டிக் கொண்டு, ஒருவர்க் கொருவர் அபிப்பிராய வேறுபாடுகளுடன் ஆராய்ச்சி செய்து கொண்டிருக்கின்றார்கள். நாகரீகம் பெற்ற அவர்கள் தம் நாட்டுக் குழந்தைகள், ஆண் பெண்கள் அனைவருக்கும் கட்டாயக் கல்வி போதிப்பதற்காகச் சட்டங்கள் செய்து, அதற்கேற்றாற் போல் நாடெங்கும் ஏராளமான பள்ளிக்கூடங்களை ஏற்படுத்திக் கல்வியை விருத்தி செய்து வருகின்றார்கள். நாமோ கல்விக்கு அதிதேவதை “சரஸ்வதி” என்பவள் என்று வைத்துக் கொண்டு ஒவ்வொரு வருஷமும் பூஜை செய்து வருவதோடு, பதினெட்டாம் பெருக்கு என்னும் ஆடிமாதப் பண்டிகையில் நமது புத்தகங்களை எல்லாம் ஆற்றில் கொண்டு போய் போட்டு அழித்து வருகிறோம். இந்த மாதிரியான எந்த விஷயங்களைப் பார்த்தாலும் அவர்கள் முன்னே சென்று கொண்டிருப்பதும், நாம் பின்னே சென்று கொண்டிருப்பதுமாகவே இருக்கின்றோம்.

நாகரீகம் பெற்ற நாட்டினராகிய அவர்கள் செய்யும் எந்தக் காரியங்களும் இவ்வுலக வாழ்க் கைக்குப் பயன் தரக் கூடியனவாகவே இருந்து வருகின்றன; இவ்வுலகில் எல்லா மக்களும் அறிவோடும், நாகரீகத்தோடும், சுகத்தோடும், சமத்துவத் தோடும் வாழுவதற்குச் செய்யும் காரியங்களாகவே காணப்படுகின்றன. ஆனால், நாம் செய்யும் காரியங்களோ, இவ்வுலக வாழ்க்கையில் மற்ற நாகரீக நாட்டினருடன் சமநிலைக்கு வர வழியில்லாமல், புராணக் காலத்திலிருந்த அநாகரிக மக்களாகவே இன்னும் இருந்து கொண்டிருக்கவே உபயோகப்படுகின்றன; இன்னுஞ் சிறிது கவனித்துப் பார்த்தால் நமது காரியங்கள், நமக்குள்ள கடவுள், புராண மத நம்பிக்கைகளின் மூலம் “நாம் இறந்த பின் எங்கேயோ போய் எதையோ அடைந்து சுகம் அனுபவிக்கப் போகிறோம்” என்ற எண்ணத்தை மனத்தில் வைத்துக் கொண்டு செய்யப்படும் காரியங்களாகவே இருக்கின்றன. இன்னும் காலப்போக்கை அறிந்த அவர்கள் செய்யும் காரியங்களைப் பற்றிச் சுருக்கமாகவும், விளக்கமாகவும் கூற வேண்டுமானால், அவர்கள், இனி வரப் போகும் காலம் எப்படியிருக்கும் அக்காலத்தில் நமது சமூக வாழ்வு, அரசியல் வாழ்வு இவைகள் எப்படியிருக்கும்? அவைகளுக்குத் தகுந்தபடி நம்மை இப் பொழுதே எப்படிச் சரிப்படுத்திக் கொள்ளுவது? என்ற கவலையோடும், எண்ணத்தோடுமே காரியங்களைச் செய்து கொண்டு போகின்றார்கள். இக் காரியங்களுக்குத் தகுந்த வகையில் தங்கள் கொள்கைகளையும், நம்பிக்கைகளையும், பழக்கவழக்கங்களையும் தாராளமாக மாற்றிக் கொண்டு செல்லு கின்றார்கள். நாமோ, “ருக்வேத காலத்தில் எப்படியிருந்தோம்? தொல் காப்பியக் காலத்தில் எப்படியிருந்தோம்?

அந்தப் பழய நாகரீக நிலைக்குப் போவதே, நாம் செய்ய வேண்டிய தேசப்பணி; மதக்கடமை என்ற எண்ணத்துடன் அவைகளைப் பற்றி ஆராய்வதும், பிரசாரஞ் பண்ணுவதுமாகவே இருக்கின்றோம். இந்த வகையாக இரண்டு வேறுபட்ட வழிகளில் வேலை செய்து கொண்டுவரும் தேசத்தார்களில் எவர் அறிவு படைத்தவர்கள்? எவர் அறிவில்லாதவர்கள்? எவர் முன்னேற்றமடையக் கூடியவர்கள்? எவர், தாம் இருக்கும் கீழ் நிலையை விட்டு மாறாமலே இருக்கக் கூடியவர்கள்? என்பதைப் பகுத்தறிவு கொண்டு ஆலோசித்துப் பாருங்கள். கால நிலைக்கு ஏற்றவாறு தங்களைச் சரிப்படுத்திக் கொண்டு போகின்ற தேசத்தார் முன்னேற்றமடைவார்களா? அல்லது “எது எப்படியானாலும், எமது நாட்டுப் பழய நாகரீகத்தை விட மாட்டோம்” என்று முரட்டுப் பிடிவாதம் செய்து கொண்டிருக்கும் தேசத்தார் முன்னேற்றமடைவார்களா? என்பதையும் யோசித்துப் பாருங்கள்.

இன்று நமது நாட்டில் நடைபெறும் “தேசிய இயக்கம்” என்பவைகள் நம்முடைய பழைய நாகரீகத்தை நிலை நிறுத்த வேண்டும் என்ற எண்ணத்துடன் தானே பாடுபடுகின்றன? “தேசீய இயக்கத்தை”ச் சார்ந்து நின்று வேலை செய்யும் மற்றவர்களும் இக்கொள்கைக்குத் தானே ஆதரவளித்து வருகிறார்கள். திரு.காந்தி உட்பட எல்லாத் தேசீயத் தலைவர்களும், வைதீக பாழும் கோட்டைக்குள் உட்கார்ந்துக் கொண்டு தானே “ராஜ்ய” சுதந்திரத்திற்குப் போராடுகின்றனர்? தற்சமயத்தில் பரிபூரண ராஜ்ஜிய சுதந்திரம் கிடைத்து விட்டாலும், அதைக் கொண்டு நமது பழய நாகரீகத்தை நிலை நிறுத்தத் தானே முயற்சி செய்யப்படும்? “பழய நாகரீகத்தைக் கொண்டு தான் நமது நாட்டைச் சமாதானமாக வைத்திருக்க வேண்டும்” என்ற கொள்கையைக் குரங்கு பிடியாக பிடித்துக் கொண்டிருப்பவர்கள் கையில் தானே தற்கால நிலையில் ராஜீய அதிகாரம் போய்ச் சேரும்? இத்தகைய வைதீக மனப்பான்மை யுடையவர்கள் கையில் தேசம் அகப்பட்டு ஏழை மக்கள், கஷ்டப் படுகிறவர்கள், தாழ்த்தப்பட்டவர்கள் முதலியவர்கள் அவர்களுடைய பரிதாபகரமான நிலையிலேயே இருப்பது சரியா? அல்லது இவர்களுக்கு அனுகூலஞ் செய்யாவிட்டாலும், இவர்கள் முன்னேற்றத்திற்குத் தடை செய்யாமல் இருக்கின்ற கூட்டத்தார் கையில் அதிகாரம் இருப்பதனால் இப்பொழுது ஒன்றும் முழுகிப் போய்விடவில்லை என்பது சரியா? என்பவைகளில் எது சரியென்பதை நன்றாய் யோசனை செய்து பாருங்கள்.

அதன் பிறகு, நாம் தேசீயத்தின் போக்கைக் கண்டிப்பதைப் பற்றியும், திரு.காந்தி போன்ற வைதீகர்களின் போக்கைக் கண்டிப்பதைப் பற்றியும் குறை கூறலாம். எதையும் பகுத்தறிவோடு ஆராய்ந்து பார்க்காமல், “மதம்”, “கடவுள்”, “வேதம்” இவைகளின் மேல் பாமர மக்கள் வைத்திருக்கும் மூடநம்பிக்கையைப் போலவே, “காங்கிரஸ்”, “காந்தி”, “தேசீயம்” என்ற பெயர்களின் மேலும், குருட்டு அபிமானமும், மூட நம்பிக்கையும் வைத்துக் கொண்டு சுயமரியாதை இயக்கக் கொள்கைகளைக் குறை கூறுவதில் ஏதாவது பொருள் உண்டா என்று கேட்கிறோம். ஆகையால், குருட்டு அபிமானமில்லாமல், மூடநம்பிக்கையில்லாமல், ஆத்திரமில்லாமல், பொறுமையோடு, பகுத்தறிவோடு நினைத்துப் பாருங்கள்! அப்பொழுது நாங்கள் கூறுவதில் உள்ள உண்மை விளங்காமற் போகாது என்று தான் சொல்லுகிறோம்.

(குடி அரசு - தலையங்கம் - 27.12.1931)

Pin It