கீற்றில் தேட...

தமிழ் நாவல் வரலாற்றில் கடந்த இருபது ஆண்டுகள் மாற்றங்களை யும் வளர்ச்சியையும் கொண்டியங்குகின்றன. பல்வேறு கோட்பாடுகளின் ஊடாட்டம், உலக இலக்கியங்கள் மற்றும் அது குறித்த விவாதங்களை உடனுக்குடன் வாசிக்க வாய்ப்பு கிடைத்தமை, கணினியின் உதவியால் புத்தக வெளியீடு எளிதானமை, குறிப்பிட்ட எண்ணிக்கையில் மட்டுமே இருந்தாலும் நூல்கள் வாங்குவதும் வாசிப்பதும் அது குறித்த எதிர் வினையைப் பதிவு செய்வதும் தீவிரம் பெற்றமை, சிறுபத்திரிகை கள் அதிகமாகவும் தொடர்ச்சியாகவும் வெளிவந்தமை, நவீன இலக்கியவாதிகள் மற்றும் சிறுபத்திரிகைகளால் பதிப்பகங்கள் தொடங்கப்பெற்றுத் தொடர்ந்து நூல்கள் வெளிவந்தமை முதலானவை இக்காலகட்டங்களில் தான் நிகழ்ந்தன. தவிரவும் தமிழில் புதிதாக நாவல் எழுத வந்தவர்களும் அதிக பக்கங்களைக் கொண்ட நாவல்களும் இக்காலகட்டங்களில்தான் அதிகம்.

அதிகமான பக்கங்களைக் கொண்டு வெளியான நாவல்களுள் பெரும்பாலானவை ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில், குறிப்பிட்ட இனத்தின் வாழ்வியலை - குறிப்பாக அந்த இனத்தின் துக்கங்களைப் - பதிவு செய்தன (சான்று: ஆழிசூழ் உலகு, செடல் முதலானவை). ஒரு குடும்பத்தின் வாழ்வியலைப் புனைவதாக இருந்தாலும் அது அந்த இனத்தின் பின்புலத்திலிருந்தே சித்திரிக்கப்பட்டிருக்கும் (தலைமுறைகள், கவலை முதலானவை). இப்பின்புலத்தில் எஸ்.ராமகிருஷ்ணனின் ‘நெடுங்குருதி’ (2003, 469 பக்கங்கள்), வேல ராமமூர்த்தியின் ‘குற்றப்பரம்பரை’1 (2007, 399 பக்கங்கள்), சு. வெங்கடேசனின் ‘காவல்கோட்டம்’ (2008, 1046 பக்கங்கள்) ஆகிய மூன்று புதினங்களும்2 குற்றப் பழங்குடியினர் சட்டத்தையும் பிரான்மலைக் கள்ளர்களின் வாழ்வியலையும் அடிப்படையாகக் கொண்டு வெளிவந்துள்ளன. இப்புதினங்களை வாசித்த அனுபவம் குறித்து இக்கட்டுரை அமைகிறது.

புதினங்கள் குறித்து எழுதுவதற்கு முன் குற்றப் பழங்குடியினர் சட்டம் (Criminal Tribes Act) பற்றிய சுருக்கமான அறிமுகத்தைத் தருவது அவசியமாகப்படுகிறது. பழங்குடியினரின் சுதந்திரமான தனிநபர் வாழ்வும் சமூக அமைப்பும் அரசாங்கத்துக்குக் கட்டுப்படாத சுயேச்சையான நடவடிக்கைகளும் தனது நிர்வாகத்திற்கு இடையூறாக இருப்பதனை அறிந்த பிரித்தானிய அரசு, அவர்களுடைய சமூக நடைமுறையைச் சிதைத்து அடிமைப்படுத்துவதற்கான அனைத்துத் திட்டங்களையும் வகுத்தது. இந்தியாவில் பிரித்தானிய அரசை எதிர்த்து உருவான கிளர்ச்சி களைத் தொடர்ந்து இந்தியாவில் உள்ள அனைத்துப் பழங்குடியினர் மற்றும் சாதிகளைப் பற்றிய தரவுகளைக் கள ஆய்வின் மூலம் திரட்டும் பணியைப் பிரித்தானிய அரசு தொடங்கியது. இந்தியச் சமூகத்தினரின் பண்பாட்டை, உளவியலை அறிந்துகொண்டு அதற்கேற்ப அவர்களை ஒடுக்கி அரச கட்டுப்பாட் டிற்குள் வைத்துக்கொள்ள வேண்டுமென்பதே இவ்வாய்வின் நோக்கம். இங்கிலாந்து மற்றும் பிரான்ஸ் நாடுகளில் நடைபெற்ற கலகங்களுக்குப் பின்பும் அவர்களை ஒடுக்க ஆய்வுகளை மேற்கொண்டனர்; கடுமையான சட்டங்களை இயற்றினர்.

 இதே முறைமையிலான உத்திகளையே சாதிய மற்றும் இனக்குழுச் சமூகங்களாக வாழ்ந்திருந்த இந்தியச் சமூகத்தினருக்கும் பயன்படுத்தினர். ஆங்கிலேயருக்கு எதிராக ஆயுதம் ஏந்தியவர்களைக் ‘கட்டுப்படுத்த’ ரௌலட் சட்டம் கொண்டுவரப்பட்டது. இதேபோல் பிரித்தானிய அரசுக்கெதிரான எதிர்ப்புணர்வை ஒடுக்கத் தனிநபர் கட்டுப்பாட்டுச் சட்டம், வாய்ப்பூட்டுச் சட்டம், பத்திரிகைச் சட்டம் முதலான சட்டங் களும் இயற்றப்பட்டன. ஆனால் ஓர் இனத்தை அல்லது சாதியைச் சார்ந்த அனைவரையுமே ‘குற்றவாளிகளாக’ அடையாளப்படுத்தி ஒடுக்கும் அதிகாரம் ‘குற்றப் பழங்குடியினர் சட்டம்’ மூலமே நடைமுறைக்கு வந்தது. அந்நிய ஆதிக்கத்தின் மீதான எதிர்ப்புணர்வும் கையில் ஆயுதமும் கொண்ட சீக்கியர்கள் அதிகம் வாழும் மாநிலமான பஞ்சாபில்தான் இந்தியாவிலேயே முதன்முதலாகக் ‘குற்றப் பழங்குடி யினர் சட்டம்’ அமல்படுத்தப்பட்டது. பின்னர் மேற்குவங்கம், மகா ராஷ்டிரம், தமிழகம் எனப் பல மாநிலங்களுக்கும் விரிவுபடுத்தப்பட்டது.

‘1938 ஆம் ஆண்டில் தமிழகத்தில் வசித்த தொண்ணூhறு சாதிகள் குற்றப் பழங்குடியினர் சட்டத்தின்கீழ் இருந்தன. அவற்றுள் பெரும் பாலானவை குறவர், கள்ளர் மற்றும் மறவர்களின் பல்வகைப் பிரிவுகளே. மேலும் வேட்கோ பறையர், வெள்ளையாங்குப்பம் படையாச்சி முதலானோர் மீதும் இச்சட்டம் போடப்பட்டிருந்தது. வெள்ளையாங் குப்பம் படையாச்சிகளுக்குப் பன்றிக்கறி சாப்பிடும் பழக்கமிருந்ததே அவர்கள் மீது இச்சட்டம் திணிக்கப்பட்டதற்கான முக்கியக் காரணம். இச்சட்டம் ‘நாகரிகம்’ அற்ற பழங்குடிகளை அடக்கிச் ‘சீர்திருத்த’ காவல்துறைக்கு அளவற்ற அதிகாரத்தைத் தந்தது. நாடோடி வாழ்க்கையின் மூலம் வியாபாரம் உள்ளிட்ட தொழில்களில் ஈடுபட்ட இனங்களை ‘ராதாரி’ சீட்டு மூலம் காவல்துறை கட்டுப்படுத்தி அவர்களின் இயல்பான வாழ்வியலைச் சிதைத்தது. குறவர், எருக்குலா, கொறச்சாஸ், வாகனூர் பறையர் முதலானோரின் வணிகம் இதனால் பாதிக்கப்பட்டது;’ (தினகரன் ஜெய், ரேகை) கள்ளர், மறவர், குறவர், வலையர் உள்ளிட்டோரின் காவல்முறையும் பாதிக்கப் பட்டது. ஒரு இனம் தன்னுடைய மரபான தொழிலில் நெருக்கடி ஏற்படும்போதும், ஆட்சியாளர்களும் அதிகார வர்க்கமும் அவர்களின் வாழ்வியல் ஆதாரத்தைப் பறிக்கிறபோதும் அந்த இனம் வழிப்பறி, திருட்டு போன்ற குற்றங்களில் ஈடுபடுவது இயல்பே. பிரித்தானிய அரசு குறிப்பிட்ட இனங்களின் தொழிலையும் வாழ்வியலை யும் சிதைத்ததோடு அவர்களைக் குற்றப் பழங்குடிகளாக அடையாளப் படுத்திச் சுரங்கங்கள், கல்குவாரிகள், தோட்டங்கள், தொழிற்சாலை களில் கட்டாய வேலை செய்யவும் நிர்ப்பந்தித்தனர்.

‘சென்னை மாகாணத்திலேயே மதுரை மாவட்டத்தில்தான், குற்றத் தொழில் புரிபவர்கள் அதிகமுள்ளனர் என்றும், எனவே கள்ளர், மறவர், அகமுடையார், குறவர், ஒட்டர், வலையர் ஆகிய ஜாதியினரைக் குற்றப் பரம்பரையினர் என்றும் அரசு ஆணை பிறப்பித்தது (Madurai District Gazeteers; பக். 215-216)..... ஆறு சாதியினர் மீது இச்சட்டம் போடப்பட்டிருந்தாலும், நடைமுறையில் இச்சட்டத்தின்கீழ் பதிவு செய்யப்பட்டவர்களில் பெரும்பான்மையோர் கள்ளர்கள் என்று அழைக்கப்படும் பிரான்மலை நாட்டு இந்திரகுல கள்ளர்களேயாவர் (சு.வெங்கடேசன், 2001; ப. 99). பிரான்மலை நாட்டுக் கள்ளர்கள் மீது இச்சட்டம் கடுமையாக்கப்பட்டதற்குக் காரணம் இவர்கள் எந்த அரசுக்கும் பணியாத தன்னரசு நாட்டுக் கள்ளர்களாய் இருந்தனர். அரசாங்கத்துக்கு வரிகள் செலுத்தாததோடு அதன் எவ்வித சட்டங் களையும் பின்பற்றாமல் வாழ்ந்தனர். பிரித்தானிய அரசு காவல்துறையை உருவாக்கிய பின்பும் அதற்கும் அதன் அதிகாரத்திற்கும் ‘கட்டுப்படாத தோடு’ மதுரை நகரத்தைக் காவல் காக்கும் உரிமையைத் தங்களுக் குரியதாக எண்ணிச் செயல்பட்டனர். எனவேதான் பிரித்தானிய அரசு அத்தனை வன்மங்களோடு அவர்களை ஒடுக்கியது. இந்த ஒடுக்கு முறையால் கள்ளர்கள் அனுபவித்த வலிகளையும் இழப்புகளையும் புனைவின் வழிப் பதிவு செய்யும் வகையில் இம்மூன்று நாவல்கள் வெளிவந்துள்ளன.

களம் - காலம்

குற்றப் பழங்குடியினர் சட்டத்தையும் பிரான்மலைக் கள்ளர்களின் வாழ்வியலையும் அடிப்படையாகக் கொண்டு வெளிவந்த முதல் புதினம் நெடுங்குருதி. வேம்பலை கிராமம், வெயில், நாகு எனும் வேம்பன் ஆகியவற்றைச் சுற்றியே இந்நாவல் பின்னப்பட்டுள்ளது. இது குறிப்பிட்ட ஊரையோ, குறிப்பிட்ட இனத்தையோ சுட்டாமல் வேம்பர் களின் (கள்ளர்களின்) வலியை அனைவருக்குமானதாக உணர்த்துகிறது. பிற இரண்டு நாவல்களிலும் ஊர் எது என்பது தெளிவாக உணர்த்தப் படுகிறது. காவல்கோட்டத்தில் தாதனூரும் (கீழக்குயில்குடி) குற்றப் பரம்பரையில் கொம்பூதி கிராமமும் (பெருநாழிக்கு அருகில்) முக்கியக் கதைக்களமாகிறது. நெடுங்குருதி நாவலில் நாகு எனும் 11 வயது சிறுவனில் தொடங்கி அவனது மகன் (திருமால் பிரான்சிஸ்) மற்றும் மகளின் (வசந்தா) வாலிப வயதுவரை கதையின் காலம் அமைந்துள்ளது. கதை நிகழும் காலம் தெளிவாகச் சுட்டப்படாவிட்டாலும் பிரித்தானிய ஆட்சிக் காலத்திலேயே நாவல் புனையப்படுகிறது என்பதை வாசிப்பின்வழி உணர முடிகிறது. மாலிக்காபூரின் மதுரை படை யெடுப்பு தொடங்கிப் பெருங்காமநல்லூர் படுகொலை வரையிலுமான அறுநூறு ஆண்டுகள் காலகட்டத்தினைக் காவல்கோட்டம் கொண் டுள்ளது. குற்றப் பரம்பரையில் சேது எனும் சிறுவனில் தொடங்கி அவனது வாலிப வயதுவரை கதை நிகழ்கிறது. இந்நாவலின் காலமும் ஆங்கிலேயர் ஆட்சிக் காலமாகும். பிற இரண்டு நாவல்களிலும் கிராமமக்கள் பலரும் மையப் பாத்திரங்களாக அமைய, ‘நெடுங்குருதி’ நாகுவைச் (நாகர்களின் குறியீடோ?) சுற்றியே பின்னப் பட்டுள்ளது. இந்நாவலில் வரலாறு மாயாவாதத் தன்மையுடன் புனைவுமயப் படுத்தப்பட்டுள்ளது.

இம்மூன்று நாவல்களுள் அண்மையில் வெளிவந்ததும் குற்றப் பரம்பரைச் சட்டத்தின் கொடுமைகளுக்கு அதிக அழுத்தம் கொடுத்தது மான ‘காவல் கோட்டத்தை’ முதன்மைப்படுத்தி இக்கட்டுரை அமைகிறது. இந்நாவலின் தொடக்கமாக, மாலிக்காபூரின் படை யெடுப்பிலிருந்து, தான் காவல் இருக்கும் ஊரைக் காப்பாற்றும் முயற்சியில் கருப்பணன் உயிரை விடும் நிகழ்வு அமைந்துள்ளது. நிறைமாத கர்ப்பிணியான இவனது மனைவி சடச்சி தாதனூருக்கு வந்து குழந்தை பெறுகிறாள். இவளின் சந்ததிகளாகப் பெருகும் தாதனூர் கள்ளர்களை மையமிட்டே இந்நாவல் அமைந்துள்ளது.

தாதனூர்காரர்களின் வாழ்முறை, காவலின் நுட்பங்கள், களவின் சாகசங்கள், இரவின் இரகசியங்கள், மூதாதையர் வழிபாட்டு முறைகள், ஆண் - பெண் உறவுகள், பெண்ணின் ஆளுமை முதலானவை குறித்த சு.வெங்கடேசனின் (இனி சு.வெ.) கதைசொல்லல் முறைதான் நாவலின் பலம். மொண்டியின் கதையொன்றே தாதனூரின் பல்வேறு வழமை களைச் சொல்லிவிடுகிறது. களவுக்குப் போன மொண்டி கன்னம் போட்டு உடலை உள்ளே நுழைக்கும்போது உள்ளே இருந்தவர்களால் வெட்டப் பட்டு இறக்கிறான். ஊராருக்கு அவன் தலை கிடைத்தால் வீண்பிரச்சினை எனக் கருதிக் கூட வந்தவர்கள் ‘சூதானமாக’ உடைக் கல்லைப் போட்டு அவனது தலையை நசுக்கிவிடுகின்றனர். அவனது உடலோடு பனைமரத் தலையைச் சேர்த்துவைத்துப் புதைக்கின்றனர். அன்றிலிருந்து கன்னம் போட்டவுடன் ஆள் நுழையாமல், ஒரு கம்பில் துணியையோ சாக்கையோ தலைப்பாகை போல் சுற்றி உள்ளேவிடு கின்றனர். அக்கம்பிற்கு ‘மொண்டிக்’ கம்பு என்று பெயர். மொண்டிக் கம்புக்கு ஒன்றும் ஆகவில்லை என்றால்தான் ஆட்கள் உள்ளே போவர். மேலும் முதன்முதலில் கன்னம் போடப் போகிறவன் மொண்டிக்குக் காணிக்கை செலுத்தவேண்டும் எனும் வழமை உருவாகிறது. மொண்டியின் நினைவாகப் பனைமரத்தை வழிபட்ட அவனது உடன்பங்காளிகள் ‘பனைமரத்தான் வகையறா’ ஆகின்றனர். ‘பெரியாம்பிள’ மாயாண்டியின் தழும்பிலிருந்து கிளைப்பது போல் இப்படி எத்தனை எத்தனை கதைகள்! அதிலிருந்து எத்தனை எத்தனை சடங்குகள்! ‘கதை அறுந்துபோனால் ஊர் அறுந்துபோகும். ஊரும் கதையும் வேறல்ல, கதையும் உயிரும் வேறல்ல’ எனும் சு.வெ.வின் வார்த்தை நாவலுக்கும் பொருந்தும். குற்றப்பரம்பரையிலும் கன்னிமார்கள் கேட்கக்கூடாத காளத்தி கதை, வைரப் புதையலைத் தேடும் நாகமுனி கதை முதலானவை சிறப்பாக அமைந்துள்ளன. நெடுங்குருதியில் கொற்கைப் பாண்டியனின் வீரர்களால் விரட்டப் படும் வேம்பர்கள் கதை முதலானவை மாயத் தன்மையுடன் சித்திரிக்கப்பட்டுள்ளன.

கதைகளையடுத்து வாசகனை வியக்கவைப்பது பெண்ணின் ஆளுமை. தீராக் கோபம் கொண்டு எதிரிகளைக் கருவறுக்கும் கங்கா முதல் காவல் துறையினரின் வன்முறையை எதிர்த்து ‘பட்ட சாமி’யாகும் அங்கம்மா கிழவி வரை பெண்கள் தனித்துவமுடை யவர்களாக உள்ளனர். தன் புருஷனின் ‘உறவு’ சரியில்லாத காரணத்தால் தீத்துக்கொள்வது, இன்னொருவன் மீது ஏற்பட்ட பிரியத்தினால் மிகச் சாதாரணமாகக் கணவனைத் தீத்துக்கொள்வது எனப் பெண்கள் சுதந்திரமானவர்களாகவும் கணவன், குடும்பம் குறித்த மிகை மதிப்பீடு கள் இல்லாதவர்களாகவும் சித்திரிக்கப்பட்டுள்ளனர். பெண்கள் தங்களுக்குள்ளே பாலியல் கதைகளைச் சொல்லிக் கேலிசெய்து கொள்வ தோடு, வம்புக்கிழுத்த கிழவனையும் பாடுபடுத்துவது என எல்லா வகையிலும் சுதந்திரமாக இயங்குகின்றனர். தன் இனத்தின் பெருமையே பெண்ணுடலில்தான் பாதுகாக்கப்பட்டிருக்கிறது எனக் கருதும் சமூகத் தில் இவ்வாறான பதிவுகளும் அவற்றின் அரசியலும் மதிக்கத்தக்கவை. குற்றப்பரம்பரையிலும் தன்னை வல்லுறவு செய்யும் வெள்ளையனைத் தன் தலைமுடியாலேயே கழுத்தை இறுக்கிக் கொல்லும் ரௌத்திரம் நிறைந்த பெண்களும் சுதந்திரமான உடலியக்கம் கொண்டவர்களும் உலவுகின்றனர்.

களவும் வலியும்

களவின் நுட்பங்களும் சாகசங்களும் இருளின் இரகசியங்களும் காவல்கோட்டத்தில் பெரும்பான்மை இடம்பெறுகின்றன. களவுக்குப் போவதற்கு முன் தாதனூர்காரர்கள் எடுக்கும் பயிற்சி நாவலில் விரிவாகப் (639-642) பதிவு செய்யப்பட்டுள்ளது. மாயாண்டிக்கும் சின்னானுக்கும் நடைபெறும் களவுப்போட்டி போலச் சொல்லப்படும் ஒவ்வொரு களவின் நுட்பமும் தங்களுக்குள் போட்டியிடுகின்றன. திருமலை நாயக்கன் மாளிகையில் நடைபெறும் களவு ஒருபுறம் என்றால் எட்டப்ப நாயக்கனைத் தன் கோட்டையையே மாற்றிக்கொள்ளச் செய்யும் களவுகள் மறுபுறம். தங்கள் வலிகளிலிருந்தும் இழப்புகளிலிருந் துமே இவர்கள் களவின் நுட்பங்களை வளர்த்தெடுக்கின்றனர் என்பதற்கு மொண்டிக் கம்பே சாட்சி. கன்னம் போட்டவுடன் மொண்டிக் கம்பை உள்நுழைத்து நோட்டம் பார்ப்பது தாதனூர்காரர்களின் நுட்பமென்றால் ஆக்காட்டுக் குருவியை உள்ளேவிட்டு நோட்டம் பார்ப்பது கொம்பூதிகளின் (குற்றப்பரம்பரை) நுட்பம். காட்டுக் கொடியைக் கொடுத்து மாடுகளைக் கத்தவிடாமல் செய்து திருடிப் போவதோடு அதன் வாலில் முள்ளைக் குத்தி வேகமாக ஓட்டிச் செல்வது வேம்பர் களின் (நெடுங்குருதி) நுட்பம். இவர்களின் நுட்பமும் பழிவாங்கும் ரௌத்திரமும் 42 வேம்பர்களைச் சுட்டுக் கொன்று, அவர்களின் மனைவி மக்களின் குரல்வளையை அறுத்த வெல்சித்துரையைப் பயமாகத் துரத்திக் கொன்றுபோடுகிறது. இவ்வாறு மூன்று நாவல்களிலும் - குறிப்பாக, காவல் கோட்டத்தில் - களவின் நுட்பங்களும் சாகசங் களும் உயிர்ப்புடன் சொல்லப்பட்டுள்ளன. களவுக்கு வழியில்லாத போது கள்ளர்கள் வேட்டையைத் தேர்ந்தெடுப்பதாகவே மூன்று நாவல்களும் பதிவுசெய்துள்ளன. இவர்கள் வாழ்வின் பொருட்டுத் தங்கள் உடலையும் உயிரையும் பணயம் வைக்கும் வேட்டைச் சமூகத்தின் எச்சங்களாகவே உள்ளனர். களவின்போது நேரும் இழப்பு களையும் வலிகளையும் மூன்று நாவல்களும் பதிவு செய்திருந்தாலும் வேல ராமமூர்த்தியின் பதிவுகள் உயிர்த்தன்மையும் வீரியமும் உடையன. இத்தனை வலிகளுக்கிடையில் களவுசெய்யும் பொருளைத் துப்புக் கூலிக்குக் (நெடுங்குருதி, காவல்கோட்டம்) கொடுத்துவிடுகின் றனர்; அல்லது அந்தப் பொருளின் மதிப்பு தெரியாமல் தானியத்துக் கும் தவசத்துக்கும் (குற்றப் பரம்பரை) விற்றுவிடுகின்றனர்.

கள்ளர்களின் வலிகளையும் இழப்புகளையும் பதிவுசெய்த ‘காவல் கோட்டமும்’ ‘குற்றப்பரம்பரையும்’ களவு கொடுத்தவர்களின் மன நிலையைக் கற்பனை செய்துகூடப் பார்க்கவில்லை. நெடுங்குருதி மட்டும்தான் அதைச் செய்கிறது.

“குப்பையள்ளுபவர் அருகில் போய் தனக்கு களவு போன மாடு இருக்குமிடம் தெரியுமென்றான் (நாகு). ஆத்திரத்தில் மண்வெட்டியை உயர்த்தியபடி எங்க களவாண்டு வெச்சிருக்க சொல்லுடா எனக் கத்தினான்.

செல்லையா இதைக் கவனித்தவரைப் போல தனது கத்தியை உருவி எடுத்தபடி அருகே வந்து,

“விடுய்யா....மாடு களவு போச்சுனு கேள்விப்பட்டு துப்பு சொல்ல வந்தா அடிக்க ஓங்குறே... வகுந்துருவேன் வகுந்து” என மிரட்டினார்.

செல்லையாவின் திருக்கை மீசையை வெறித்தபடி அந்த ஆள் மண்வெட்டியைக் கீழே போட்டபடி செயலற்று நின்றான். செல்லையா மிரட்டும் குரலில் சொன்னார். “இருப்பிடத்தை சொல்லணும்னா துப்புக்கூலி இருபது முப்பது ரூபா ஆகும் பரவாயில்லயா.” ஆத்திரத்தில் நடுங்கும் கைகளுடன் அவன் மறுத்து தலையை ஆட்டினான். செல்லையா “வா மாப்பிள்ளை. நமக்கென்ன மாடு கைமாறிப் போகப் போகுது” என விறுவிறுவென அவனையும் கூட்டிக்கொண்டு நடக்கத் துவங்கினார். கீழே கிடந்த கரம்பைக் கட்டியை எடுத்து அவர்களை நோக்கி வீசிய அவன் தெலுங்கில் ஏதோ கத்தினார். அவர்கள் விடு விடுவென சந்திற்குள்ளாக நடந்தார்கள். ஊர் முனைக்கு வரும்போது ஒருவன் துப்புக்கூலி அதிகமென பேரம் பேசத் துவங்கினான். செல்லையா அப்படியானால் பத்துபடி கம்மம்புல்லும் பத்து ரூவாயும் தந்துவிடும்படி சொல்லி முடித்தார். (எஸ்.ராமகிருஷ்ணன், 2003; பக். 254-255)

விவசாயக் காலத்தில் மாட்டைக் களவாண்டால் என்ன துப்புக்கூலி கொடுத்தேனும் வாங்கும் விவசாயியின் நிலையை அறிந்து களவாடும் வேம்பர்களின் மனநிலையும், குழந்தைகள் அணிந்திருக்கும் நகைகளைக் களவாண்டால் அவை ஏங்கிப்போகும் என்பதற்காக அதனைத் தவிர்க்கும் வேம்பனின் (சிங்கி) மனநிலையும் நெடுங்குருதியில் ஒருசேரப் பதிவாகி யுள்ளன. மேலும் களவில் உடன் வந்தவர்களுக்கே துரோகம் செய்பவர்கள் (சின்னு, லட்சுமணன் மகன்) நெடுங்குருதியில் மட்டுமே வருகின்றனர். பிற நாவல்களில் வரும் கள்ளர்கள் களவாடிய பொருளுக்குக் கிடைத்த தானிய தவசங்களையும் காவல் உரிமைகளை யும் ஊருக்குப் பகிர்ந்து கொடுக்கும் நேர்மையானவர்களாக இருக் கின்றனர். கள்ளர்களின் வாழ்வை நெடுங்குருதி மனித பலவீனங்களுடன் சித்திரிக்கிறது. காவல்கோட்டமும் குற்றப்பரம்பரையும் தரப்படுத்தப் பட்ட கள்ளர்களின் வாழ்வியலையே பதிவு செய்துள்ளன. ‘பண்டு கலவரம்’ என்பதே உயர்சாதியினர் கள்ளர்களுக்கு எதிராக, அம்மை யப்பக் கோனாரைச் சூழ்ச்சி செய்து பயன்படுத்தியதன் விளைவுதான் என சு.வெ. பதிவுசெய்வது தற்செயலானதல்ல. கள்ளர் - கோனார் உறவு, வணிகத்தில் வளர்ந்துவரும் நாடார்களுக்குப் பாதுகாப்பளிக்கும் கள்ளர்கள் முதலானவை சமூகத்தில் இணக்கத்தை ஏற்படுத்தும் தன்மையில் அமைந்துள்ளமை வரவேற்கத்தக்கதே. அதே சமயம் கால்நடைகளைப் பறிகொடுத்த கோனார்களின் வலி, ரௌத்திரம் மற்றும் சிவகாசி கலவரத்தில் மேலூர் கள்ளர்களின் பங்கு முதலானவை மௌனப்படுத்தப்பட்டதன் அரசியல் குறித்த கேள்விகளும் எழாம லில்லை. டேவிட் சாம்ராஜ் பொன்னாங்கனாக மாறுவது போல மார்க் சிஸ்ட் சு.வெ. தாதனூர்காரராக மாறுகிறாரோ என்ற ஐயம் எழுகிறது.

குற்றப் பரம்பரைச் சட்டம்

கள்ளர்களின் வாழ்வில் குற்றப் பரம்பரைச் சட்டம் வினை புரிந்தது குறித்து இந்நாவல்கள் ஒவ்வொன்றும் புனைவுமயப்படுத்தியுள்ளன. நெடுங்குருதியில் கள்ளர்களின் துயரங்களுக்குக் காரணமாக ஆங்கிலே யர் மட்டுமே சித்திரிக்கப்படவில்லை; இந்நாவல் முழுக்க மனிதர்களை வருத்துவது வெயில். வெயிலின் கடுமையால் பிற மக்களோடு எறும்பு களும் கூட வெளியேறிப் போகும் கிராமத்தில் வேம்பர்கள் மட்டும் அதிகமாக வாழத் தொடங்குகின்றனர்.

‘கதவுகளற்ற தனது வீட்டிற்குள் வெயில் ஏறிவருவதைக் கண்ட சிங்கிக்கிழவன் ஆத்திரத்துடன் வைக்கோல் பிரிகளுக்குள் பதுக்கி வைத்தி ருந்த தனது கத்தியை எடுத்துக்கொண்டு சூரியனைப் பார்த்து கத்தினான்.

“வகுந்துருவேன் வகுந்து. சூரியன்னா பெரிய மசிரா. சங்கை அறுத்துப்புடுவேன்.”’ (எஸ். இராமகிருஷ்ணன், 2003, பக்.)

இவ்வாறு வறட்சியையும் ரௌத்திரத்தையும் அவர்களுக்குப் பழக்கியது வெயில். எனவேதான் இவர்களுக்கு வாழ்க்கை குறித்த மிகை மதிப்பீடுகளோ, கனவுகளோ ஏதுமில்லை. உயிர் வாழ்தலுக்காக உயிரைப் பணயம் வைத்துக் களவாடுவதுதான் இவர்களின் தொழில். களவில் பொருள் சம்பாதித்து வந்தால் குடியும் கறியும்தான் உச்சபட்ச மகிழ்ச்சி. கிணறு வெட்டும் தொழிலுக்குப் போவதிலோ, செருப்பு விற்பதிலோ எத்தகைய ஆர்வமுமற்று உயிரைப் பணயம் வைக்கும் களவிலும் வேட்டையிலுமே நாகுவின் அய்யாவிற்கு ஆர்வம் உண்டா கிறது. நாகுவின் அய்யா பெரும்பான்மை கள்ளர்களின் குறியீடு. இவர்களின் ஆறாவது விரலாகக் கத்தி இருக்கிறது. இவர்களிடம் இருந்து சமூகத்தைப் ‘பாதுகாத்து’ தங்களின் ‘அதிகாரத்தை’ நிலைநாட்டும் பிரித்தானிய அரசின் செயல்பாடுகள் இந்நாவலில் அழுத்தத்துடன் பதிவு செய்யப்படவில்லை; ஆங்காங்கேதான் பதிவு செய்யப்படுகிறது. ஏனெனில் பொதுவான வாழ்க்கையை நோக்கி நகரும் எஸ்.ரா.வின் மனநிலை வேம்பலையையும் வேம்பர்களையும் ‘தீமையின்’ உருக்களா கவே காண்கிறது. அதனால் தானோ என்னவோ தீமையின் உருக்கள் மீது திணிக்கப்படும் அரச வன்முறை இவரைப் பெரிய அளவு பாதிக்க வில்லை. அதேசமயம் வேம்பர்கள் என்பதனாலேயே பொது இடங்களில் காவல்துறையினரால் அவமானப்படுத்தப்படுவதின், தண்டிக்கப்படுவதின், தனிமைப்படுத்தப்படுவதின் வலி, களவாலும் காவல்துறையா லும் கணவனைப் பிரிந்து குடும்பத்தைக் காப்பாற்றும் பெண்களின் வலி முதலான மன உணர்வுகள் நுட்பமாகச் சித்திரிக்கப்பட்டுள்ளன.

‘குற்றப்பரம்பரை’யில் கள்ளர்கள் மீது குற்றப் பரம்பரைச் சட்டம் திணிக்கப்பட்டதற்குப் பெருநாழியில் வசிக்கும் வேறு சாதியினரே (என்ன சாதி என்பது உணர்த்தப்படவில்லை) காரணம் என்பதாகச் சொல்லப்படுகிறது. விக்டர், வில்லியம்ஸ் ஆகிய ஆங்கிலேயே அதி காரிகள் கள்ளர்கள் மீது மரியாதையும் அனுதாபமும் கொண்டவர் களாகச் சித்திரிக்கப்படுகின்றனர். அதேசமயம் பெருநாழிக்காரர்கள் சிலர் காவல்நிலையத்தை ஊருக்குள் கொண்டுவந்து கொம்பூதிக் காரர்களை ஒடுக்குவதாக நாவல் சித்திரிக்கிறது. காவல்துறையினரின் கடும் ஒடுக்குமுறைக்கு அடங்காத கொம்பூதிகள், தங்கள் கூட்டத்தைச் சேர்ந்த சேது, காவல்துறை உயரதிகாரியாக வந்து கேட்டுக்கொண்ட ஒரே காரணத்திற்காகக் ‘களவுக்குப் போகமாட்டோம்’ எனச் சத்தியம் செய்து கொடுக்கின்றனர். கள்ளர்களைச் ‘சீர்திருத்த’ வழங்கப்படும் கல்விக்குப் பச்சமுத்து எனும் வியாபாரியே பணஉதவி செய்கிறான். இவை எழுதப்பட்ட வரலாற்றுக்கு மாறான சித்திரங்கள். இவை வெகுசனரீதியில் கதையை விறுவிறுப்பாக்க ஆசிரியர் மேற்கொண்ட புனைவா? அல்லது வாய்மொழியாகச் சொல்லப்பட்டு வந்த கள்ளர் களின் (கொண்டையங்கோட்டை மறவர்களின்) அனுபவங்களா? என்பது தெளிவுபடவில்லை. ஆனால் உளவியல் ரீதியாகவும் பருண்மையாகவும் வினைபுரியும் அரச வன்முறையின் முழுச்சித்திரம் இந்நாவலுள் வெளிப்படவில்லை; காவல்கோட்டம் அதனை முழுமையாக வெளிப்படுத்தியுள்ளது.

நெடுங்குருதியிலும் குற்றப்பரம்பரையிலும் களவின்பேரால் அரச வன்முறை நிகழ்கிறதென்றால் காவல்கோட்டத்தில் காவலின் பேராலும் நிகழ்த்தப்படுகின்றது. களவின் மூலத்தைத் தேடிச் சென்று காவலைக் கண்டடைகிறார் சு.வெ. களவும் காவலும் வேறு வேறல்ல; புதிய காவலைப் பிடிக்கவும் அதனைத் தொடர்ந்து உறுதி செய்யவும் சில நேரங்களில் பிறர் காவலை உலைக்கவும் களவுதான் வழி. களவில் தேர்ச்சி பெற்றவர்களே காவலுக்குத் தகுதியானவர்கள். நாவல் முழுக்க ‘பெரிய நாயக்கர் கொடுத்த காவல்; அதை விடமாட்டோம்’ என்ற குரல் மந்திரம்போல உச்சரிக்கப் பட்டுக் கொண்டே இருக்கிறது. ஒரு அரசு ஆயுதங்களால் மக்களை, குறிப்பிட்ட இனத்தைக் கட்டுப்படுத்த முடியாதபோது சலுகைகளைக் கொடுத்து அவர்களைத் திருப்திப் படுத்தும். அரசுக்கு தன்னுடைய வளர்ச்சியும் நிலைத்த தன்மையும் தான் முக்கியமே தவிர, அறமோ பாசமோ ஒரு பொருட்டே அல்ல. பிரித்தானியரின் நிர்வாகத்துக்கும் சட்டத்துக்கும் எவ்வித ஒத்துழைப்பும் தராத மேலூர் பகுதி கள்ளர்களைப் பெரியாற்றுப் பாசனம் வழங்கிய தன் மூலம் கட்டுப்படுத்தியது பிரித்தானிய அரசு. மேலும் சாலைகள் அமைப்பது உள்ளிட்ட பொதுப்பணிகள் எவ்வாறு மக்களை எளிதில் கண்காணிக்கவும், அதிகாரம் செலுத்தவும் உதவுகிறது என்பதை மிக நுட்பமாகப் பதிவு செய்துள்ள சு.வெ. பெரியநாயக்கர் கொடுத்த காவலைக் கள்ளர்களின்வழிக் கொண்டாடுகிறார். அதேசமயம் கள்ளர்கள் மட்டுமல்ல; அவர்களின் சாமிகளும் தன் அதிகாரத்தின்கீழ் இருக்கவேண்டும் என்பதற்காகத் தந்திரமாகச் செயல்படும் நாயக்க அரசையும் பதிவு செய்யத் தவறவில்லை.

மதுரை வட்டாரத்திலேயே திறமையான காவல்காரர்களான தாதனூர்காரர்களின் காவல் நுட்பங்கள் இந்நாவலுள் விரிவாகப் பதிவு செய்யப்பட்டுள்ளன. அதேசமயம் இத்தனை திறமைவாய்ந்த தாதனூர் காரர்களின் ஊரிலேயே காது வளர்க்கவும் கவரடைப்பு (சுன்னத்) செய்யவும் வரும் குறவன் களவாண்டு போவது நுட்பமாகச் சித்திரிக்கப் பட்டுள்ளது. கால ஓட்டத்தில் பிரித்தானிய அரசால் மதுரை நகரம் மீள்நிர் மாணம் செய்யப்படும்போது காவல் மற்றும் நீதித்துறை அமைப்புகளும் உருவாக்கப்படுகின்றன. காவல்துறை கள்ளர், மறவர், குறவர், வலையர் உள்ளிட்டோரின் காவல்முறையை ‘நவீன’ ஆயுதங் களைக் கொண்டு ஒழித்து, தனது அதிகாரத்தினைப் படரவிடுவதனைத் தர்க்கபூர்வமாக சு. வெ. சித்திரித்துள்ளார். அதேபோல் ஆரம்பகட்டத் தில் காவல்துறையின் நடைமுறைகளை ‘விசித்திரமானதாக’ மக்கள் எதிர்கொண்ட விதம் குறித்தும் பதிவு செய்துள்ளார். கோபால் ஐயரைப் போலீஸ் உடுப்புடன் கண்டவர், ‘என்னவோ....ய், எப்படி வோய் இதப் போட்டீரு? நீர் விட்டத்துல தொங்கிக்கிட்டு, ஆத்துக்காரிய ரெண்டு ஓட்டைக்குள்ளேயும் கால் ரெண்டையும் வுட்டு மாட்டுன்னு சொல்லி மாட்டுனீரோ?’ என்று கேட்கிறார். இதைவிட மருதக்கோனார் இயற்றிய கச்சேரி கும்மி சுவாரசியமானது.

‘வெள்ளைக்காரெ கொடுத்த சட்டைய

       வேடிக்கையா நின்னு பாருங்கடி

 உள்ள காலுல பாதியக் காணோம்

       ஒதச்சு நடக்கிறதப் பாருங்கடி

 ஆட்டக்காரி ரவிக்க போல

       அரக்கையி தான் இருக்குது

 ஓட்ட போட்ட ரெண்டு மரக்கா

       காலுக்கு ஒண்ணா தொங்குது

 ......... ............ ......... ............ .......

 காத்துப் போக ஒரு ஓட்ட

       மூத்திரம் போக ஒரு ஓட்ட

 பாத்து பாத்து நடந்து வர்றாரு

       பரமசிவ முதலியாரு’ (சு.வெ; 2008; 438)

இவ்வாறு விசித்திரமாகவும் கேலியாகவும் பார்க்கப்படும் காவல் துறை தாதனூர்காரர்களிடம் கச்சேரிக்கும் காவல்கூலி கொடுக்கிறது. பின்னர் மெல்ல மெல்லக் காவல் காப்பவர்களையே களவாடுபவர் களாகவும் குற்றவாளிகளாகவும் உருமாற்றி அவர்களின் வாழ்வியலையே சிதைக்கும் வரலாறு நுட்பமாகவும் இயங்கியல் தன்மையோடும் சொல்லப்பட்டுள்ளது. மூன்று நாவல்களிலும் காவலையும் கள்ளர்களை யும் ஒடுக்கப் பிரித்தானிய அரசும் காவல்துறையும் மேற்கொள்ளும் நடவடிக்கைகளும்; அதற்கு எதிரான கள்ளர்களின் தீவிரமான எதிர்ப்பு களும் பதிவு செய்யப்பட்டுள்ளன. கள்ளர்களின் முக்கியப் பலமே ஆயுதங்களும் அவற்றைக் கையாளும் திறமும்தான். பிரித்தானிய அரசு சூழ்ச்சியாக அவ்வாயுதங்களைப் பறிப்பது, இரவில் ஆஜர் பார்ப்பதாகச் சொல்லி அவர்களின் தொழிலையும் தன்மானத்தையும் சிதைத்து மந்தைகளாக நடத்துவது, முகாம்களில் கட்டாயவேலை செய்யச் சொல்லி அவர்களின் உழைப்பைச் சுரண்டுவது முதலானவை வரலாற்றுப் புரிதலை உருவாக்கும் வகையில் பதிவு செய்யப்பட்டுள்ளன. மேலும் தொடக்கத்தில் கள்ளர்கள் காவல் துறையைக் கடுமையாக எதிர்த்தாலும் நவீன ஆயுதங்களால் ஏற்படும் இழப்புகளும் வலிகளும் செயலற்ற தன்மையும் மெல்ல மெல்ல அவர்களைக் ‘கட்டுப்படுத்து வது’ குறித்த சித்திரம் முக்கியமானது. சுதந்திரமாகச் சுற்றித் திரிபவர்களை அரசு உடல்ரீதியாகவும் உளவியல்ரீதி யாகவும் எப்படி ஒடுக்குகிறது என்பதற்கு சு.வெ. பதிவு செய்த பிரான்மலைக் கள்ளர்களின் வாழ்வு ஒரு குறியீடு.

ஆங்கிலேயரின் அரச வன்முறையைப் பதிவு செய்யும் இவர் சாதியச் சமூகத்திற்கு எதிராக அவர்கள் மேற்கொண்ட நடவடிக்கைகளையும் நேர்மையாகப் பதிவு செய்துள்ளார். தாழ்த்தப்பட்ட மாணவனைப் பள்ளியிலிருந்து நீக்க வேண்டும் எனும் உயர்சாதியினரின் நெருக்கடியை மறுத்து அனைவருக்கும் கல்வியை வழங்குதல், மதுரை மீனாட்சி கோவில் நிர்வாகக் குழுவைச் சீரமைத்தல் எனப் பிரித்தானிய அரசை நேர்மறையாக வும் பதிவு செய்துள்ளார். நாயக்கர் காலம் தொடங்கிப் பெருங்காமநல்லூர் படுகொலை வரையிலான காலகட்டத்தில் மதுரையின் புறக்கட்டுமானம் மற்றும் சமூக அசைவுகளில் நிகழும் மாற்றங்கள் வரலாற்றுணர்வுடன் பதிவு செய்யப்பட்டுள்ளன.3 எனவேதான் இந்நாவல் புனைவு என்பதைத் தாண்டி ஆவணம் எனும் தகுதியையும் பெறுகிறது. மிக நீண்ட தேடலினூடாகப் பெற்ற எழுத்தாவணங்கள், மக்களிடையே புழங்கும்/ புழுங்கிய நாட்டார் வழக்காறுகள் (குறிப்பாகக் கதை), சமூக இயங்கிய லுடன் கூடிய தர்க்கபூர்வமான கற்பனை முதலானவற்றின் இணைவு களோடுதான் பென்னாம் பெரிய நாவலான காவல்கோட்டத்தின் நிலையான இருப்பும் வெற்றியும் சாத்தியமாகியுள்ளது.

இந்நாவல் குறித்து எழுத எழுதத் தீராமல் ஊற்றெடுத்துக்கொண்டே இருக்கிறது. இருப்பினும் இந்நாவலில் சில இடைவெளிகள் புனைவு மயப் படுத்தப்படாமல் தவறவிடப்பட்டுள்ளன. மேலூர் கள்ளர்களை அடக்குவ தற்காக ரூம்ளேயின் தலைமையில் சென்ற படை 5000 பேரைக் கொன்று குவித்த நிகழ்வு இந்நாவலில் எட்டுவரிச் செய்தியாக மட்டுமே இடம் பெறுகிறது. இது அதிகம் அறியப்படாத நிகழ்வு. இந்த இடைவெளியைப் பூர்த்திசெய்யத் தன் கற்பனையாலும் புனைவுணர்ச்சியாலும் பாதிக்கப்பட்டவர்களின் வலியையும் கொன்ற வர்களின் வன்மத்தையும் சு.வெ. வாசகனுக்கு உணர்த்தியிருக்க வேண்டும்; அது தவறவிடப்பட்டுள்ளது. இதற்கு நம்பகமான தரவுகள் (எழுத்தாவணங்கள், நாட்டார் வழக்காறுகள்) இல்லாமல் எதையும் பதிவு செய்யவேண்டாம் என எண்ணும் படைப்பாளியின் மனநிலை காரணமாக இருக்குமோ என்று எண்ணத் தோன்றுகிறது. எழுதப்படும், சொல்லப்படும் வரலாறுகள் எல்லாம் ஏதோ ஓர் தற்சார்பினோடும் புனைவுத் தன்மையோடுமே கட்டமைக்கப்படுகின்றன. வரலாறு உண்மையானதா என்பதைவிட அதன் அரசியல் நியாயமானதா என்பது குறித்தே நாம் விவாதிக்க வேண்டியவர்களாக இருக்கிறோம்.

இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் (சமவெளிப்) பழங்குடி யினர் - கள்ளர்கள் - மீது நிகழ்த்தப்பட்ட அரச வன்முறை குறித்தும் அதனால் நிலைகுலைந்த அவர்களின் வாழ்வியல் குறித்தும் இருபத்தோ ராம் நூற்றாண்டில் புனைவின்வழி மூன்றுபேர் பதிவு செய்துள்ளனர். இவை வெறும் புனைவும் பதிவும் மட்டும்தானா? இந்த எழுத்துகளின் நிகழ்கால இயைபு என்ன எனும் கேள்வி எழலாம். இப்புனைவுகள் இனக்குழுக்களை அழித்துப் பேரரசை உருவாக்க முயன்ற வம்ப வேந்தர்கள் தொடங்கி இன்றுவரையிலும் நடைபெறும் அரச பயங்கர வாதத்தினை அதன் சூழ்ச்சிகளைக் குறியீடாக உணர்த்தவல்லன. இந்நாவல்கள், கள்ளர்களின் மீதான அரச பயங்கரவாதத்தை மட்டு மல்லாமல், தற்பொழுது வடகிழக்கு மாகாணங்களிலும் காஷ்மீரிலும் ஈழத்திலும் மாவோயிஸ்டுகள் மீதும் ‘தேசிய’ ஒற்றுமை மற்றும் பாதுகாப்பைக் காரணம்காட்டி நிகழ்த்தப்படுகிற அரச பயங்கரவாதங் களையும்4 சில பக்கங்களாவது புனைவுமயப்படுத்தியிருக்கலாம். (தாண்டவராயன் கதையில் இத்தகைய விரிவான புனைவு மயப்படுத் தலின் சாத்தியம் நிகழ்ந்துள்ளது.) மேலும் உலக அளவில் இஸ்லாமியப் பயங்கரவாதம், சோமாலியக் கடற்கொள்ளையர்கள் முதலானவை பற்றிய கற்பிதமான வரலாறுகளைப் புனைவுமயப்படுத்தி (கட்டுடைப்பு) இருந்தால் இந்நாவல்கள் மேலும் வீரியமுடையதாக அமைந்திருக்கும். இது உலகமயமாக்கப்பட்ட சூழலில் தமிழ் நாவல்கள் உலக அரசியலையும் தன் எழுத்துகளின் இடைவெளிகளினுடாகப் புனைவுமயப்படுத்த வேண்டும் என எண்ணும் வாசகனின் விருப்பமே தவிர இந்நாவல்கள் மீதான விமர்சனமல்ல.

அடிக்குறிப்புகள்

1.     இந்நாவல் கொண்டையங்கோட்டை மறவர்களின் வாழ்க்கையைக் கொம்பூதி கள்ளர்களின் வாழ்க்கையாகச் சித்திரிப்பதனை அவதானிக்க முடிகிறது.

2.     இம்மூன்று நாவல்கள் பற்றிய அறிமுகம் ஆவணம் பகுதியில் இடம் பெற்றுள்ளன.

3.     முதல் 272 பக்கங்களில் நாயக்கர் வரலாறு துல்லியமாகக் கூறப்படுகிறது. ஆனால் வரலாற்றுக்கும் புனைவுக்கும் அதிக வேறுபாடுள்ளது. சு.வெ. தொடர்ச்சியான தேடலினூடாகத் தொகுத்த தகவல்களையெல்லாம் சிறிதும் விடுபடாமல் பதிவு செய்திருக்கிறார். இவை ஆவணமாக அமைகின்றனவே தவிரத் தேர்ந்த வாசிப்பனுபவத்தை வழங்கவில்லை; சில இடங்களில் சலிப்பூட்டவும் செய்கிறது. அதேசமயம் வடுகப் பெண்களின் ஆளுமை, கொல்லவாருகள், சக்கிலியர் மற்றும் கள்ளர்களின் வீரம், நாயக்கர் காலப் போர் முறைமைகள் முதலானவை உயிர்ப்புடன் பதிவு செய்யப்பட்டுள்ளன. கொல்லவாருகள் மற்றும் சக்கிலியர்களின் வீரத்தால் நிர்மாணிக்கப்பட்ட விஜயநகரப் பேரரசில் வினைபுரியும் பலிஜவாருகளின் (சாதிய) அதிகாரம் தொடர்ந்து கேள்விக்குட்படுத்தப்படுகிறது. அதேபோல் பார்ப்பன‌ர்கள் யார் ஆட்சிக்கு வந்தாலும் நெகிழ்ந்து கொடுத்து அதிகாரத்தில் பங்கு வகிப்பது குறித்த விமர்சனமும் இடம்பெற்றுள்ளது. ஆனால் இவை நாவல் போக்கினோடு இயல்பாக அமையவில்லை; செயற்கையாகத் துருத்திக் கொண்டு நிற்கிறது.

4.     மக்களுக்கான அடிப்படைத் தேவைகள், கல்வி, வேலைவாய்ப்பு என எல்லாவற்றிலிருந்தும் ஒதுங்கிக்கொள்கிற இந்திய அரசு, பன்னாட்டு நிறுவனங்கள் இந்தியாவையும் இந்தியரையும் சுரண்ட அனுமதி கொடுத்து, ‘சட்டம் - ஒழுங்கை’ நிலைநாட்டும் பணியை உன்னிப்பாகச் செய்து வருகிறது. எனவேதான் விவசாயிகள் ஒடுங்கிப்போன நிலையில், நிலங்களைக் கையகப்படுத்தவும், மாவோயிஸ்டுகளை ஒடுக்கவுமான ‘வளர்ச்சி’ நடவடிக்கைகளைச் செயல்படுத்தி வருகிறது.

துணைநூற்பட்டியல்

1.     ராமகிருஷ்ணன், எஸ்., நெடுங்குருதி, உயிர்மை பதிப்பகம், சென்னை, முதல் பதிப்பு: டிசம்பர் 2003.

2.     வெங்கடேசன், சு., கலாச்சாரத்தின் அரசியல், வைகை வெளியீடு, மதுரை, முதல் பதிப்பு : ஜுலை 2001

3.     வெங்கடேசன், சு., காவல் கோட்டம், தமிழினி, சென்னை, முதல் பதிப்பு: டிசம்பர் 2008.

4. வேல ராமமூர்த்தி, குற்றப்பரம்பரை, காவ்யா, சென்னை, முதல் பதிப்பு : டிசம்பர் 2007.

குறும்படம்

5.     தினகரன் ஜெய், ரேகை, ஜெகமதி கலைக்கூடம். 

(கட்டுரையாளர், சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ் இலக்கியத் துறை முனைவர் பட்ட ஆய்வாளர். ‘இருபதாம் நூற்றாண்டு தொடக்ககாலத் தமிழியல் ஆய்வு’ குறித்து ஆய்வு செய்து வருகிறார். )