kuthoosi gurusamy 300மகாவிஷ்ணுவின் அவதாரங்கள் ஆட்சிபுரிந்த காலத்திலும் பரமசிவன் அருள்பெற்றவர்கள் வாழ்ந்திருந்த காலத்திலும் நடைபெறாத சங்கதி! அந்தக் காலத்தில் பிராமண போஜனம் ஒன்றுதான் தர்மங்களிலெல்லம் தலைசிறந்த தர்மம் என்பார்கள்! இந்தக் காலத்தில் அப்படிச் சொல்கிறவனை அடிக்காமலிருந்தாலே அதிசயமாகும்! இன்று இரத்த நன்கொடை தருவதுதான் தலைசிறந்த தர்மமாகும்! இரத்தக் குறைவினால் ஆஸ்பத்திரிகளில் சாகின்றவர்கள் பலருண்டு.

இவர்களுக்குப் பிறருடைய இரத்தத்தை ஊசி மூலம் உள்ளே செலுத்திப் பிழைக்க வைக்கிறார்கள். இதற்காகப் பல ஆஸ்பத்திரிகளில் இரத்த நன்கொடை கேட்டு வாங்கி Blood-bank (இரத்த சேமிப்பு) என்ற பெயரால் இரத்தத்தைச் சேகரித்து வைத்து, ஆபத்து வேளையில் பயன் படுத்துகிறார்கள்!

உடலில் நோயில்லாதவர்களும் வலுவுள்ளவர்களும் இரத்த நன்கொடை கொடுப்பது ஒரு சிறந்த தியாகமாகும்! (ஆட்சியாளர் 6-7 அவுன்ஸ் அரிசி தந்து நம் இரத்தத்தைச் சிறுகச் சிறுக எடுத்துக் கொள்வதை இரத்த நன்கொடையில் சேர்க்கக் கூடாது!) கடந்த போர் நடந்து கொண்டிருந்தபோது பல்லாயிரக்கணக்கான மக்கள் இரத்த நன்கொடை தந்து பல உயிர்களைக் காப்பாற்றுவதற்குத் துணையாயிருந்தனர்.

சென்னையில் பேசிய ஆசாரியா கிருபளானி பின்வருமாறு கூறியிருக்கிறார்:-

பிரிட்டிஷார் கொடுக்கவேண்டிய ஸ்டர்லிங் கடனை நாம் பெறவில்லை. அவர்கள் கொடுக்கவேண்டிய கடன் இந்திய மக்களின் ரத்தமேயாகும்.

யுத்தத்தில் தம் உயிரை அற்பமாக மதித்துப் போராடிய இந்தியரின் இரத்தந்தான் இவர்கள் நமக்குக் கொடுக்க வேண்டிய கடன்.”

- சரியான பேச்சு! சந்தேகமில்லை. இன்று சுமார் 1,000 கோடி ரூபாய்க்கு மேல் பிரிட்டன் நமக்குக் கடன் தரவேண்டும்.

தக்ளியில் நூல் நூற்று இங்கிலாந்துக்கு விற்றுச் சேகரித்த பணமா இது? அல்ல!

போஸ்டாஃபீசுக்குத் தீ வைத்து அந்தச் சாம்பலை ஏற்றுமதி செய்து சம்பாதித்த பணமா இது? அல்ல.

கடந்த உலகப் போரில் இந்தியப் போர் வீரர்கள் இரத்தஞ் சிந்திச் சேமித்துவைத்த பணம்! (அதாவது கதர்க்குல்லாய்கள் குல்லாய்க்குள்ளேயிருக்கின்ற சரக்கைப் பயன்படுத்தாமல்,)

1. பட்டாளத்தில் சேராதே!
2. யுத்தத்துக்குப் பணம் தராதே!

- என்று கூச்சல் போட்டார்களே! அந்தச் சமயத்தில் அவர்கள் கூச்சலைப் பொருட்படுத்தாமல், லட்சக் கணக்கில் பட்டாளத்தில் சேர்ந்தார்கள்! கோடிக் கணக்கில் பணம் கொடுத்து உதவினார்கள்! நம் உற்பத்திப் பொருள்கள் ஏராளமாக ஏற்றுமதி செய்யப்பட்டன. பிரிட்டன் நமக்குக் கடனாளியாயிற்று!

இப்பேர்ப்பட்ட வீரர்களைச் சோற்றுப் பட்டாளம் என்றார்கள், கதர்க் குல்லாய்கள்.

அந்த வீரர்கள் தேடி வைத்த வெற்றி மீதுதான் இன்று சுயராஜ்யக் குடிசையை எழுப்பியிருக்கிறார்கள்! அந்த வீரர்கள் அன்று தேடிவைத்த யுத்த லாபப் பணந்தான் இன்று இவர்களுக்கு வேண்டுமாம் - தூதுவர்கள் போன்ற டம்பாச்சாரி செலவுக்காக!

‘ஸ்டர்லிங்க நிதி’ இந்தியரின் நிதி தான்! ஆனால் எந்த இந்தியரின் நிதி? போலீஸ்காரர் மீது பெட்ரோல் ஊற்றிக் கொளுத்தினார்களே, அவர்களுடைய இரத்த நிதியா?

பல ஊர்களில் மாஜிப் போர் வீரர்களுக்குக் கொடுக்கப்பட்டிருந்த நிலமான்யங்களைப் பறித்து, ஆகஸ்ட் தியாகிகளுக்குத் தந்திருக்கிறார்களாம்! வத்தலகுண்டு என்ற ஊரில், பரம ஏழையான மாஜிப் போர் வீரனிடமிருந்து நிலமான்யத்தைப் பிடுங்கி லட்சாதிபதியான ஒரு ஆகஸ்ட் தியாகிக்குக் கொடுத்திருப்பதாக என்னிடம் கூறினார்கள்! பல ஊர்களில் இப்படியே நடந்திருக்கிறது!

இது இரத்த நன்கொடையல்ல! இரத்தம் உறிஞ்சும் தேச சேவை! எவனுடைய இரத்தத்தையோ எவனோ உறிஞ்சுகிறான். உயிரை வெறுத்துப் போர் முனைக்குச் சென்றவனின் இரத்தத்தை, சிறையில் ரொட்டியும் வெண்ணெயும் தின்ற சுகவாசி உறிஞ்சிக் கொண்டிருக்கிறான், சுயராஜ்யம், என்ற பெயரால்! (பார்ப்பான் பரலோகம் என்ற பெயரால் உறிஞ்சுவது போல!)

வாசகர்களே! நீங்கள் இரத்த நன்கொடை கொடுங்கள்; உங்கள் உடம்பில் இரத்தம் இருந்தால்! ஆனால் இரத்தத்தை உறிஞ்ச விடாதீர்கள் - இரத்தம் இருந்தால் கூட!

ஸ்டர்லிங் சேமிப்பு நிதிக்கும், தண்டவாளம் பிடுங்கிகளுக்கும் என்ன சம்பந்தம்? சிந்தித்துப் பாருங்கள்!

- குத்தூசி குருசாமி (31-1-51)

நன்றி: வாலாசா வல்லவன்

Pin It