book review vanathupoochi‘நாம் நினைத்துக் கொண்டிருப்பதை விட...' என்னும் இத்தொடருக்கு அவரவர் சூழல் சார்ந்து பொருள் விரிவடையும். ஆனால் இக்கட்டுரைத் தலைப்பு நாம் வாழும் பூவுலகத்தைப் பற்றியது.

பொதுவாகச் சமுதாய நிகழ்வுகளைப் பார்த்து அல்லது கேள்விப்பட்டு, ‘ஒலகம் கெட்டுப் போச்சு’ என்று நீண்ட காலம் வாழ்ந்து, ஆண்டு அனுபவித்தவர்கள் கூறுவார்கள். பெரும்பாலும் சுற்றுச் சூழல் கேட்டைப் பற்றி, ‘ஒலகம் கெட்டுப் போச்சு’ என்று பேசமாட்டார்கள். அப்படிப் பேச வேண்டிய சூழலும் அவர்களுக்கு ஏற்பட்டதில்லை.

உள்ளங்கையில் உலகம் அடக்கப்பட்ட பிறகு, குறிப்பாகச் சொல்ல வேண்டும் என்றால் தொழிற்புரட்சி தோன்றி வளர்ந்த பிறகு இந்த உலகத்தில் ஏற்பட்டுக் கொண்டிருக்கும் ஆக்கங்கள் என்னும் பெயரிலான அழிவுகள் நாம் நினைத்துக் கொண்டிருப்பதை விட மிகப் பயங்கரமானவை.

இந்த அண்டத்தில் உலகம் தோன்றிப் பல கோடி ஆண்டுகள் ஆகி இருந்தாலும் உயிரினங்கள் வாழும் தகுதி பெற்றது சில லெட்சம் ஆண்டுகளுக்கு முன்னர்தான் என்று ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றார்கள். அண்டத்தில் கணக்கில் அடங்காக் கோள்கள் இருந்தாலும் பூமி மட்டுமே உயிரினங்கள் வாழும் சூழலைப் பெற்றுள்ளது.

இதுவும் ஏறக்குறைய உயிரினங்கள் வாழும் சூழலை இழந்து கொண்டிருப்பதால் விஞ்ஞானிகள் இருப்பதை விட்டுப் பறப்பதைப் பிடிக்க வேறு கோள்கள் உயிரினங்கள் வாழத் தகுதி உள்ளவையாக இருக்கின்றனவா என்று பெரும் செலவு செய்து ஆராய்ந்து கொண்டிருக்கின்றார்கள்.

ஐம்பெரும் பூதங்கள்

உலகில் இயங்கும் - இயங்கா உயிரினங்கள், கணக்கில் அடங்காதவையாகப் படிப்படியாக வளர்ச்சி அடைந்துள்ளன. அவை வளர்வதற்கு இந்த மண்ணும் அதில் உள்ள நீர், நெருப்பு, காற்றும், பாதுகாப்பு அரணாக உள்ள விசும்பும் குறிப்பிடத் தக்கவை. மகத்தான மாண்பைப் பெற்றிருக்கும் இந்த உலகத்தை உலக மதங்கள் அவற்றின் சக்திக்கு ஏற்ப விளக்க முயற்சி செய்துள்ளன.

பெரும்பாலும் எல்லா மதங்களும் கடவுள் இந்த உலகத்தைப் படைத்தார் என்றே குறிப்பிடும். ஆனால் மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர்த் தோன்றி இறவாப் புகழுடன் வாழ்ந்து கொண்டிருக்கும் ஒல்காப் பெரும்புகழ்த் தொல்காப்பியர், நாம் நெஞ்சம் நிமிர்ந்து நடக்கும் வகையில் - அஃதாவது அறிவின் உச்சம் தொட்டவர் தமிழர் என்னும் கருத்தை உலகறியப் பின்வருமாறு கூறுகின்றார்.

நிலம் தீ நீர்வளி விசும்போடு ஐந்தும்
கலந்த மயக்கம் உலகம்... (தொ.பொ. 639: 1-2)

இன்றைய உலகில் ஐம்பெரும் பூதங்களும் அக்குவேறு, ஆணி வேராகச் சிதைக்கப்பட்டுச் சுக்கு நூறாகச் சிதைந்து அழிந்து கொண்டிருக்கின்றன. இவை எவ்வாறு ஒன்றோடு ஒன்று இயைந்து இயங்கும் என்பதைத் தொல்காப்பிய உரையாசிரியர் இளம்பூரணர் எவ்வளவு நுட்பமாக ஆராய்கின்றார்! உலகமாவது முத்தும் மணியும் கலந்தாற்போல நிலம், நீர், தீ, காற்று, ஆகாயம் என விரவி நிற்கும். உலகினுள் பொருள் பொன்னும் வெள்ளியும் செம்பும் உருக்கி ஒன்றானாற் போல வேற்றுமைப் படாது நிற்கும். அவ்விரண்டனையும் உலகம் உடைத்தாகலின் கலந்த மயக்கம் என்றார்.

ஐம்பூதங்களும் ஒன்றோடு ஒன்று விரவி உலகிலுள்ள உயர்திணை, அஃறிணை உயிரினங்கள் இயங்க ஆற்றலைக் கொடுக்கின்றன. இயங்கும் இயங்காத உயிரினங்களும் உயிரற்ற பொருள்களும் மண்ணில் இவை உருக்கி விட்டவை போல நகமும் சதையும் போலப் பொருந்தி உள்ளன.

ஐம்பெரும் ஆற்றலும் பொருள்களும் இணைந்து இயக்கி - இயங்கினால் தான் சமச்சீரான சுற்றுச் சூழல் அமையும். காலங்காலமாக இப்படித்தான் இயக்கம் இருந்துள்ளது. தாவரங்கள் காய்கனி, கிழங்கு, கொட்டை, தழைகளைக் கொடுத்தன. இயங்கும் உயிரினங்கள் அவற்றைத் தேவைக்கு ஏற்பப் பயன்படுத்திக் கொண்டன.

சுற்றுச்சூழல்

குரங்குகள் தோட்டம், துறவுகளில் புகுந்து விட்டால் தாவரங்களில் இருக்கும் துளிர், மொட்டு, பூ, பிஞ்சு, காய் என எல்லாவற்றையும் பிய்த்துச் சிதைத்து விடும் அவை தின்பவற்றை விட அழிப்பவையே ஏராளம். இதே நிலையில்தான் ஆறாவது அறிவு முளைத்த மானுட இனமும் செய்து கொண்டிருக்கின்றது.

குரங்கிலிருந்து பரிணாம வளர்ச்சி பெற்றது மானுட மூளை. ஆறாவது அறிவின் முதிர்ச்சியால் அறிவியல் என்னும் ஆயுதத்தால் பட்டை தீட்டப் பட்டதால்தான் இவ்வளவு அசுர வேகத்தில் உலகின் சுற்றுச் சூழலைக் கெடுத்து உயிரினங்களை அழித்துக் கொண்டிருக்கிறது.

ஒன்றை அழிக்காமல் எவ்வாறு வளர்ச்சி ஏற்படும் என்று சில வலதுசாரி மூளைகள் இருக்கும். மானுடத் தேவைக்காகச் சில இயங்கும். இயங்கா உயிரினங்கள் பாதிக்கப்படும்; பயன்படுத்த உரிமை உண்டு; அழிக்க நமக்கு உரிமை இல்லை.

இயற்கையோடு இயைந்து வாழ்ந்த பழந்தமிழர்கள் மண்ணையும் அதனில் வளர்ந்த தாவரங்களையும் எவ்வளவு நுட்பமாகப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்!

காடுகொன்று நாடு ஆக்கி
குளம் தொட்டு வளம் பெருக்கி (பட். 283-284)

வான் பொய்ப்பினும் தான் பொய்யா / மலைத் தலைய கடற்காவிரி (பட்.5-6) என்று போற்றப்பட்ட சோழ நாட்டைப் பாடும் பட்டினப்பாலையில் உள்ளவை மேலுள்ள பாடல் அடிகள். சோழநாட்டில் அழிக்கப்படும் காடு முல்லை நிலமன்று. காவிரி காலங்காலமாகப் பாய்வதால் எங்கும் நீர் பரந்து திட்டுத் திட்டாகக் காணப்படும் மரஞ்செடிகொடிகள் அடர்ந்த பகுதி. குடி இருப்புக்காக நாடு உருவாக்க அந்தக் காட்டைக் கொல்கிறார்கள்.

காட்டை அழிக்கிறார்கள். குளங்களைத் தொடுகின்றார்கள். செயற்கையாக வெட்டவில்லை; இயற்கையாக நீர்நிறைந்து காணப்படும் பகுதிகளைக் குளங்களாகவும் ஏரிகளாகவும் செப்பம் செய்கின்றார்கள்.

சிறிய அளவில் அழிப்பு இருந்தாலும் பெரிய அளவில் வளர்ச்சி இருக்கவேண்டும். அவற்றைத்தான் நம் முன்னோர்கள் செய்தார்கள். பயன்பாட்டிற்காகவே அழிவும் ஆக்கமும் இருக்கவேண்டும். நம் முன்னோர்கள் மட்டுமல்லாமல் உலகிலுள்ள தொன்மைக் குடியாகிய பழங்குடி மக்கள் இவ்வாறே தாய்மண்ணையும் அதன் வளங்களையும் பயன்படுத்தி இருப்பார்கள். நுகர்வுக் கலாச்சாரமும் எலி, எறும்பு ஆகியவை போலச் சேமிப்பு ஆசையும் மக்களிடம் மூர்க்கத்தனமாக வளர்ந்த பிறகே அழிவு உச்சம் தொடத்தொடங்கியது.

நெல்லும் உயிரன்றே நீரும் உயிரன்றே
மன்னன் உயிர்த்ததே மலர்தலை உலகம் (புறம். 186: 1-2)

எவ்வளவு ஆழமான பொருளை உடையவை இந்தப் புறநானூற்றுப் பாடல் அடிகள்! சங்கப் புலவர் மோசிகீரனார் முடியாட்சிக் காலத்தில் ஆண்ட மன்னர்பால் எவ்வளவு நம்பிக்கை வைத்துள்ளார். மக்கள் மண்ணின் உயிர்த் துடிப்பாக மன்னர்களைப் பார்த்துள்ளார்கள். அவர்களிலும் பலர் மண்ணையும் மக்களையும் ஆழமாக நேசித்துள்ளமைக்குப் பழந்தமிழில் நிறையச் சான்றுகள் உள்ளன.

அன்பே உருவான தாய்வழிச் சமுதாய வீழ்ச்சிக்குப் பிறகு குரங்கு கையில் அகப்பட்ட பூமியைப் போலப் பூவுலகின் அமைதி மூச்சு விட இன்றுவரை திணறிக் கொண்டுதான் இருக்கின்றது.

தாய்வழிச் சமுதாயம் - ஆணாதிக்கச் சமுதாயம் எனப் பயன்படுத்தப்படும் தொடர்கள் வழியாகவே உலகில் ஏற்பட்டுள்ள ஆதிக்க வளர்ச்சியையும் சமன் இல்லாத மாற்றத்தையும் அறிந்துகொள்ளலாம். இனக்குழு வாழ்க்கையில் முரண் அதிகமில்லை. முடியாட்சி வளர்ச்சி அடைந்தபோதே பெரிய மீன்கள் சின்ன மீன்களை விழுங்கத் தொடங்கின.

நிலப்பிரபுத்துவம், முதலாளித்துவம் எனச் சமுதாயத்தில் மாற்றங்கள் ஏற்பட்டாலும் மக்களாட்சி என்னும் நிலை வளர்ந்திருந்தாலும் மன்னராட்சிக் காலத்தில் ஏற்பட்ட சுரண்டலும் ஊழலும் இன்றும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றன.

காலனிய ஆட்சிக்கு முன்னர் தொழில்களில் அடிப்படையானதும் முதன்மையானதுமாக இருந்தது வேளாண் தொழிலே. காலனிய ஆதிக்கத்திற்கு முன்பும் முடியாட்சிக் காலத்தில் சாகுபடி செய்யப்படும் நிலங்கள் மண்ணில் இறங்கி உழைக்காதவர்களுக்கு கோயில், மடம், பிரமதேயம் என்னும் பெயரில் மடைமாற்றம் செய்யப்பட்டன. சாகுபடி செய்த மக்கள் வறுமைக்கும் சுரண்டலுக்கும் ஆட்பட்டார்கள்.

தனிமனிதனும் காடுகளும் தேவைக்குமேல் பொருளாதார வளர்ச்சிக்கு ஆசைப்படுவதால்தான் உலகம் முழுவதிலும் இருந்த நிலக்கட்டமைப்பு உழைக்கும் மக்களிடமிருந்து கைமாறிப் பெரும் பரப்புகளாகத் தனியாரிடம் மாட்டிக் கொள்கின்றது.

மரபு சார்ந்த வேளாண் முறை, இயற்கை வளங்கள் எல்லாம் ஏறக்குறைய அழிக்கப்பட்டு விட்டன. கழுதை தேய்ந்து கட்டெறும்பான நிலைக்கு உலக வளங்கள் அழிக்கப்பட்டு விட்டன. பசுமைப் புரட்சியால் மண்ணும் மக்கள் உடல் நலமும் கெட்டன.

அமேசான் காடு பற்றி எரிகின்றது; ஆஸ்திரேலியாவில் காடு பற்றி எரிகின்றது என உலக நாடுகளைப் பற்றிய கவலையில் தோய்ந்திருந்த நேரத்தில் நீ வாழும் மண் மட்டும் என்ன கிழிக்கிறதாம் எனப் பொட்டில் தட்டுவது போல ஒரு நூலைப் படிக்கும் வாய்ப்புக் கிடைத்தது. அந்த நூலின் பெயர் ஒரு வண்ணத்துப் பூச்சியின் மரண சாசனம். பின்னட்டையில் குறிக்கப்பட்டது போல வண்ணத்துப் பூச்சிகளின் மரண சாசனம் நதிகளின் மரண சாசனம்தான்.

நதியில் தண்ணீர் வெள்ளமாக வந்த காலத்தில் வேளாண் தொழில் சார்ந்த மக்களின் வாழ்க்கையில் வறுமைதான் பிள்ளை இல்லாத வீட்டில் கிழவன் துள்ளிக்குதிப்பது போல விளையாடும். கார்பரேட் நிறுவனங்கள் இராஜா வீட்டுக் கன்றுக் குட்டிகள்; ஆளும் வர்க்கங்களுக்கு அவை கற்பகத் தரு - காமதேனுகள். பணமதிப்பு இழப்பு, ஜிஎஸ்டி வரிவிதிப்பு போன்றவற்றால் சிறு நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் அந்தரத்தில் நிற்கின்றன.

குளிர்சாதன அறையில் இருக்கும் பொருளாதார மேதைகள் நினைத்துக் கொண்டிருப்பது போல நாடு இல்லை; கதவைத் திறந்து கொண்டு வெளியே வந்து பார்க்கவேண்டும். கொரோனாத் தொற்று வேறு புரட்டிப் போட்டுக் கோடிக் கணக்கானோர் வேலை இல்லாமல் திண்டாடித் தெருவில் நிற்க வைத்துள்ளது.

எதிர்காலத்தில் விவசாயிகள் வருமானத்தை இரட்டிப்பு ஆக்குவோம் என்கிறார்கள்; நிகழ்காலத்தின் நிலையை அறியமாட்டார்கள். ஆளும் வர்க்கத்தினர், பொருளாதார நிபுணர்கள் பொதுமக்களுக்கு ஊட்டும் நம்பிக்கை ஆன்மீகவாதிகள் சொர்க்கத்திற்கு வழி காட்டுவது போல உள்ளது.

இந்த நூலை ஆழ்ந்து படித்த பிறகுதான் சுற்றுச் சூழல் கெட்டுவிட்டது என்னும் பொதுவான நினைப்பு, நாம் நினைத்துக் கொண்டிருப்பதை விட இந்தப் பூவுலகு இன்னும் அதிகமாகக் கெட்டுள்ளது; தமிழகம், இந்தியா மட்டுமல்லாமல் உலகம் முழுவதிலுமே சுற்றுச் சூழல் கெட்டுள்ளது என்பதை அறியமுடிந்தது.

அறிவியல், தொழிற்புரட்சி, தகவல் தொடர்பு வளர்ச்சி அடைந்த பிறகு உள்ளங்கையில் உலகம் என்று பெருமையாகப் பேசுகின்றோம். கோவிட்-19 எனப்படும் கொரோனா தொற்றுக் கிருமிக்கு இந்தப் பூமி உள்ளங்கையில் உலகமாகத் தெரிகின்றது.

ஒரு வண்ணத்துப் பூச்சியின் மரண சாசனம் என்னும் நூலின் ஆசிரியர் சி.மகேந்திரன்; ஒரு பொதுவுடைமைப் போராளி; பொதுவுடைமைச் சிந்தனையாளர்; நூலாசிரியர்; தாமரை இதழாசிரியர் எனப் பன்முகங்களைக் கொண்டவர்.

எங்கெங்கு அதிகார வர்க்கங்களின் கோரமுகங்கள் வெளிப்படுமோ அப்போதெல்லாம் தன் எழுது கோலால் தாக்கத் தயங்க மாட்டார். ஒரு வண்ணத்துப் பூச்சியின் மரண சாசனம் (2019) என்னும் இந்நூல் தற்போதுள்ள தமிழக ஆறுகள் அவற்றின் நீர், மணற்கொள்ளை போன்றவற்றை விளக்குகின்றது. இந்த அறச் சீற்றம் நூலாசிரியர் சி.மகேந்திரனிடம் புதிதாகத் தோன்றிவிடவில்லை. இளைஞர் பெருமன்றத்தில் இணைந்து பணியாற்றிய காலத்திலேயே தமிழகத்தைப் பாலைவனம் ஆக்காதே (1989) என்னும் ஒரு சிறுநூலை எழுதி வெளியிட்டுள்ளார்.

அபகரிப்பு

காடு மலைகளில் வாழும் விலங்கினங்கள் ஒரு எல்லை வகுத்துக்கொண்டு தம் உறவுகளோடு வாழும். எல்லை மீறி வருபவற்றைத் தாக்கும். மானுட இனம் மட்டும் இதற்கு விதி. சிறிய குழுவானது சூழ்ச்சி செய்து பூர்வக்குடிகள் வாழும் இடத்தில் குடியேறும்; போரிட்டு வளைத்துக்கொள்ளும். ஐரோப்பியர்களின் இந்திய நுழைவும் செவ்விந்தியர்களைக் கொன்றொழித்த அமெரிக்க ஆக்கிரமிப்பும் ஆப்பிரிக்க வளைப்பும் எல்லை மீறல்களே.

“ஒண்ட வந்த பிடாரி ஊர்ப்பிடாரியை விரட்டியதாம்’ என்றொரு பழமொழி இருக்கின்றது. இப்படித்தான் இன்று உலகின் பல நாடுகளின் நிலை இருக்கின்றது. வேறு எங்கும் சான்றுக்குச் செல்ல வேண்டியதில்லை. அண்டை ஓரத்தில் உள்ள இலங்கையை எடுத்துக் கொள்ளலாம்.

கடல்கோளால் அழிந்த குமரிக் கண்டத்தில் தப்பிப் பிழைத்த மேட்டுப் பகுதியே இலங்கை. பழந்தமிழருக்கு உரிமையான பகுதி இலங்கை. கைபர், போலன் கணவாய் வழியாக இந்தியாவில் பரவிய ஆரியரின் வழித் தோன்றலே சிங்களவர்கள். இன அடிப்படையிலும் மொழி அடிப்படையிலும் சிங்களவர் ஆரிய இனத்தைச் சார்ந்தவர்கள்.

ஆசையே துன்பத்திற்குக் காரணம் என்று தன்னுடைய முடியைத் துறந்த புத்தரின் புனித மதத்தைப் பின்பற்றுபவர்களே சிங்களவர். பேரின வாதம் பேசி, அங்கு வாழ்ந்த தமிழர்களைக் கொன்று குவித்தவர்கள் புத்த மதத்தைச் சார்ந்த சிங்களவர்கள். இதில் ஒரு பெரிய கொடுமை என்னவென்றால் இந்தியாவைப் போன்று பல நாடுகள் தமிழர்களை அழித்தொழிக்க இலங்கைக்கு உதவின. அவற்றில் சில மாமேதை கார்ல் மார்க்சின் சித்தாந்தத்தை ஆரத் தழுவியவை.

ஈழத் தமிழர்களுக்காகத் தமிழகம் எங்கும் பயணம் மேற்கொண்டு கடுமையாகப் போராடியவர் இந்நூலாசிரியர் சி.மகேந்திரன். நிறையக் கட்டுரைகள் எழுதியதோடு ஈழத் தமிழரின் குரலாகச் சில நூல்களையும் எழுதி வெளியிட்டுள்ளார்.

தீக்குள் விரலை வைத்தேன் (2002)

வீழ்வேனென்று நினைத்தாயோ (2011)

இலங்கை சென்று கண்டவையும் சேட்டவையும் எனத் தமிழரின் துயர் மிகுந்த வாழ்க்கையும் போராளிகளின் வீரமும் இரத்தமும் சதையுமாக இந்நூல்களில் இரண்டறக் கலந்துள்ளன.

தமிழகத்தின் இயற்கை வளச் சுரண்டல், இலங்கையில் தமிழர் அழித்தொழிப்புப் பற்றித் தொடர்ந்து இயங்கிக் கொண்டிருக்கும் சி.மகேந்திரனின் இன்னொரு நூல் அறிவு பற்றிய தமிழரின் அறிவு (2018). டிஸ்கவரி புக் பேலஸ் என்னும் பதிப்பகத்தின் வழி வெளிவந்த இந்நூலும் பரவலாகக் கவனம் பெற்று, மறுமதிப்பும் விரைவில் வெளிவர இருக்கின்றது. முதல் பதிப்பு ஜூனியர் விகடனில் தொடராக வந்து நூலாக வந்துள்ளது.

மன்னர் காலத்தில் இருந்தே ஆளும் வர்க்கத்துடன் தொடர்புடைய பார்ப்பனர்கள் நிலங்களை எல்லாம் கோயில், மடங்களுக்கு உரிமையாக்கிக் கொண்டு சுகபோகமாக வாழ்ந்தார்கள்; வாழ்ந்து வருகின்றார்கள்.

அதோடு மட்டுமல்லாமல் தொன்மை மிக்க தமிழர்களின் வரலாற்றை மறைத்து, தமிழ் மற்றுமுள்ள திராவிட மொழிகளுக்கு எல்லாம் வடமொழி எனப்படும் சமஸ்கிருதமே தாய்மொழி என்றார்கள். இந்திய வரலாற்றை எழுதிய மேலை நாட்டினரும் அவர்கள் கொடுத்த தரவுகளைக் கொண்டு தவறாகவே எழுதியுள்ளார்கள்.

இவற்றை எல்லாம் மனதிற்கொண்டு, சினத்தையும் வெளிப்படுத்திய படியே அறிவு பற்றிய தமிழரின் அறிவு என்னும் நூலை ஆராய்ந்து எழுதியுள்ளார். தொல்காப்பியம், சங்க நூல்கள், பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள், காப்பியங்கள் என்னும் செவ்வியல் தமிழ் நூல்களில் இயற்கையோடு இயைந்து வாழ்ந்த பழந்தமிழரின் அறிவை நூலாசிரியர் சி.மகேந்திரன் விரிவாக ஆராய்கின்றார்.

தமிழரின் அறிவுக் கோட்பாடு தத்துவ நூல்போலத் தனிநூலாக எழுதப்படாவிட்டாலும் இலக்கியங்களிலும் இலக்கணங்களிலும் இரண்டறக் கலந்துள்ளது. இயற்கைக்கு முரண்படாத பழந்தமிழரின் அறிவு எப்போதும் நிலைத்திருக்கும்.

உலகில் பல மொழிகளில் அறிவு தொடர்பாக எழுதப்பட்டுள்ளவை கடவுளைப் பற்றியவையாகவே உள்ளன. வாழும் மக்களுக்கும் அவர்களின் வாழ்வியலுக்கும் தொடர்பானவற்றை விட்டுவிட்டு, இறைவனுக்கும் உயிர், உலகம் போன்றவற்றுக்கும் இடையே உள்ள தொடர்புகள் விளக்கப்படுகின்றன.

பெரும்பான்மையான உழைக்கும் மக்களாக வாழ்பவர்களிடம் கடமையைச் செய்; பலனை எதிர்பாராதே என்று கூறும் தத்துவத்தை எப்படி எடுத்துக் கொள்வது? இதன் உள்நோக்கம் எந்த அளவிற்கு மக்களை வறுமையில் ஆழ்த்தும் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.

யாதும் ஊரே, யாவரும் கேளிர் (புறம். 192: 1), பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் (திருக். 972: 1) என்னும் பாடல் அடிகள் எல்லாம் மக்களில் பேதம் பார்ப்பவர்களுக்குப் பழந்தமிழர் கொடுக்கும் மரண அடிகள். அனைவரும் குறிப்பாக இளைய சமுதாயம், அறிவு பற்றிய தமிழர் அறிவு என்னும் சி.மகேந்திரன் எழுதிய நூலை தவறாமல் படிக்க வேண்டும்.

தமிழகத்தைப் பாலைவனம் ஆக்காதே (1989) ஒரு வண்ணத்துப் பூச்சியின் மரண சாசனம் (2019) என வெளிவந்துள்ள இரண்டு நூல்களுக்கும் இடையிலுள்ள கால இடைவெளி முப்பது ஆண்டுகள்! வளர்ச்சி என்னும் பெயரில் எவ்வளவு மாற்றங்கள்; எல்லாமே ஏமாற்றுதல் தான்.

முன்பு காலனியாக்கிக் கொண்டு மற்ற நாடுகளைச் சுரண்டினார்கள். இப்போது நண்பர்களாகி ஒப்பந்தம் போட்டுக் கொண்டு சுரண்டுகின்றார்கள். அவற்றுக்குப் பெயர்கள் தாராளமயம், தனியார்மயம், உலக மயம்.

நீ அவலைக் கொண்டுவா; நான் உமியைக் கொண்டு வருகிறேன்; இரண்டையும் சேர்த்து ஊதி ஊதித் தின்போம் என்னும் நிலைதான் ஆளும் வர்க்கங்களின் ஆசியுடன் இன்றும் நீடித்துக் கொண்டிருக்கின்றது.

சீமைக் கருவேல மரத்தின் தீங்கைப் பேசுகின்றோம். மேலை நாட்டினர் மானியம் கொடுக்கிறார்கள்; மரத்தை வாங்கிக் கொள்கிறார்கள் என்பதற்காக இங்கு வளர்க்கப்படும் யூகலிப்டஸ் என்னும் தைல மரம் சுற்றுச் சூழலைக் கெடுக்கும் முதல் எதிரி. எவ்வளவு வறண்ட காலமாக இருந்தாலும் காற்றிலுள்ள ஈரப்பதத்தை இழுத்துக் கொண்டு தளிர்த்துக் கிடக்கும்.

நம் நாட்டு மரங்கள் இளவேனிற் காலத்தில் தழை கொட்டும் போது தைல மரம் பட்டையை உரித்துக்கொள்ளும். மரத்தின் வழியாகவும் காற்றின் ஈரத்தை உறிஞ்சத்தான் இந்த ஏற்பாடு. அந்நிய நாட்டில் இருந்து கொண்டு வரப்பட்டது அல்லவா?

திருப்பூரின் பின்னலாடை ஏற்றுமதி, அதன்வழிக் கிடைக்கும் வெளிநாட்டு வருமானம் பற்றிப் பெருமையாகப் பேசுகின்றோம். வெளிநாடுகள் தங்கள் சுற்றுச் சூழலைப் பாதுகாத்துக் கொள்ள இங்கிருந்து ஆடைகளை இறக்குமதி செய்கின்றன. அணைகளில் வண்டல் படிவது இயல்பு.

ஆனால் திருப்பூர் பகுதிகளில் பின்னலாடை உற்பத்தியின்போது உருவாகும் கழிவுகள் ஒரத்துப்பாளையம் என்னும் அணையையே கழிவு நீர்த் தொட்டி ஆக்கிவிட்டன. அப்பகுதியிலுள்ள நிலத்தடி நீர் வண்ண மயமாக இருக்கின்றதாம்.

தோல் பதனிடும்போது உண்டாகும் கழிவுநீர், கழிப்பறைக் கழிவு, மருத்துவமனைக் கழிவு என அனைத்து வகைக் கழிவுகளுக்கும் நீர்நிலைகளே குப்பைத் தொட்டிகள்; ஆறுகள் வடிகால்கள்.

ஒரு வண்ணத்துப் பூச்சியின் மரண சாசனம் நூலாசிரியர் கள ஆய்வு செய்தும் பலரிடம் கேட்டறிந்தும் நூற்றுக் கணக்கான நூல்கள் கட்டுரைகளைப் படித்தும் தமிழக ஆறுகளை அமைப்பு அடிப்படையிலும் வரலாற்று நிலையிலும் விரிவாக ஆய்வு செய்துள்ளார்.

நூலாசிரியர் சி. மகேந்திரன் மிகவும் ஆழமாகச் சங்க இலக்கியங்களைக் கற்றுப் பட்டினப்பாலை அடிகள் சிலவற்றைக் குறிப்பிடுகின்றார்.

வான் முகந்த நீர் மலைப் பொழியவும்
மழைப் பொழிந்த நீர் கடல் பரப்பவும்
மாரி பெய்யும் பருவம் போல்
நீரினின்றும் நிலத்து ஏற்றவும்
நிலத்தினின்று நீர்ப் பரப்பவும் (பட். 126-130)

ஆயிரக் கணக்கான ஆண்டுகள் பழந்தமிழகத்தில் நடைமுறையில் இருந்த நீரியல் சூழலை இலக்கண நூற்பாப் போலச் சுருக்கி வைத்துள்ளன. பழந்தமிழகம் மட்டுமல்லாமல் இந்தியா, பர்மா, இலங்கை வரைக்குமான மழைச் சூழல் மேலுள்ள பாடல் அடிகளில் உள்ளன.

ஆனி-ஆடியில் மேற்குத் தொடர்ச்சி மலையில் தொடங்கும் தென்மேற்குப் பருவ மழை மெல்ல மெல்லப் பொழிந்து கொண்டே வடக்கு நோக்கி நகரும். தென்மேற்குப் பருவமழை மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதி அருகிலுள்ள மாநிலங்களிலேயே அதிகம் பெய்யும்.

இந்தியாவின் நடுப்பகுதியில் உள்ள மாநிலங்களில் மழையின் மணம் மட்டும் தெரியும். ஆடிக் காற்றுப் பலமாக வீசும்போது இங்கே மேலக் காற்று அடித்தால் மேட்டூர் அணை பெருகும் என்று பேசிக்கொள்வார்கள்.

ஆனி - ஆடியில் பயணம் தொடங்கிய தென்மேற்குப் பருவ மழை வடக்கே இமயமலை அடிவாரம் சென்று கிழக்கு நோக்கி நகர்ந்து வடகிழக்குப் பருவ மழையாகத் திரும்ப ஐப்பசி மாதம் ஆகிவிடும். ஐப்பசி மாத அடை மழை தொடங்கிவிடும். இந்தச் சமயத்தில் தான் பர்மியர் மழையை வரவழைக்க வழிபாடு செய்வார்களாம்.

இங்கிருந்து பர்மாவுக்குப் பிழைக்கப் போய் முள் இல்லாத மீனும் கல் இல்லாத சோறும் தின்று அகதிகளாக விரட்டப்பட்டவர்கள் பசுமை நிறைந்த நினைவுகளைப் பகிர்ந்து கொள்வார்கள்.

ஐப்பசியில் தொடங்கும் வடகிழக்குப் பருவமழை ஏறக்குறைய தென் மேற்குப் பருவமழை தொடாத பகுதிகளில் எல்லாம் பொழிந்து வெள்ளக் காடாக மாற்றிவிடும்.

இக்கருத்துகளை உள்ளடக்கியவையாகவே மேலுள்ள பட்டினப்பாலைப் பாடல் அடிகள் காணப்படுகின்றன. மலையில் பொழிவதும் கடலில் சேர்வதும் தென் மேற்குப் பருவமழை; மேகங்கள் இடையறாது பெய்வது வடகிழக்குப் பருவமழை. எழுபது - எண்பது ஆண்டுகளுக்கு முன்புவரை இந்தச் சூழல் தொடர்ச்சியாக இருந்துள்ளது. இவற்றால்தான் நூலாசிரியர் சி.மகேந்திரன் குறிப்பிடும் பட்டினப்பாலைப் பாடல் அடிகளை ஒப்பிட்டுப் பார்க்க முடிகின்றது.

பட்டினப்பாலை குறிப்பிடுவதைப் போலவே நூலாசிரியர் சி.மகேந்திரனும் தென்மேற்கில் தொடங்கி வடக்கே நகர்ந்து பழந்தமிழக ஆறுகள் வாழ்ந்த வாழ்க்கையையும் அவற்றால் ஏற்பட்ட வளர்ச்சியையும் இன்றைய அவலங்களையும் விரிவாக ஆராய்கின்றார்.

சிற்றுயிர்கள்

சி.மகேந்திரனின் ஒரு வண்ணத்துப் பூச்சியின் மரண சாசனம் மனிதனின் பேராசையால் காடு, மலை, நதி என்னும் அனைத்தையும் அழிக்கின்றான்; கழிவுகளைக் கொட்டி நீர்நிலைகளில் குறிப்பாக ஆறுகளில் கொட்டி நாசப் படுத்துகின்றான் எனச் சுட்டுகிறது.

நடப்பவை, பறப்பவை, ஊர்பவை என அனைத்தும் திண்டாடி அழிந்து கொண்டிருக்கின்றன. அவற்றுக்காக, அழுகுரல் ஒன்று எழுத்தினூடாக இழை ஓடிக் கொண்டிருப்பது நூலைப் படிப்பவர்களின் காதில் விழும்.

இறந்து விட்ட வண்ணத்துப் பூச்சியின் சிறகுகளை எறும்புகள் தங்கள் உணவுக்காக இழுத்துச் செல்கின்றன. பூமித்தாய் பெற்றெடுத்த எல்லாக் குழந்தைகளும் ஒவ்வொன்றும் ஒவ்வொன்றாக இறந்து கொண்டே இருக்கின்றன. இப்பதிவைப் படிக்கும்போது சுற்றுச் சூழலை அறியும் ஆவல் கொண்டவர்களும் அவர்கள் பகுதியில் உயிரினங்கள் எப்படி எல்லாம் அழிகின்றன என்கின்ற நிலைமை புரியும்.

மேம்பாலங்களின் மேலே இருசக்கர வாகனத்தில் போகும்போது பல வண்ணத்துப் பூச்சிகள் அடிபட்டுக் கிடப்பதைப் பார்க்கலாம். அடிபட்டவை பாலத்தின் கீழேயும் கிடக்கும். நூலாசிரியர் குறிப்பிடுவது போல எறும்புகள் இழுத்துச் செல்லும். மேலே தெரியும் இறகைப் பார்த்தால் கொடி பிடித்துச் செல்வதைப் போலத் தெரியும்; படகின் பாய்மரம் போலத் தெரியும்.

ஒரு வண்ணத்துப் பூச்சி இறகை விரித்துச் சாணியில் நிலைகொண்டுள்ளது. செத்ததாக இருக்குமோ என்று தொட்டுப் பார்த்தால் திடீரென்று பறக்கின்றது. தேன் உறிஞ்ச மலரில்லாமல் சாணியில் உறிஞ்சிக் கொண்டிருப்பதை அறிந்தபோது மனம் வேதனைப்பட்டது.

சாப்பிட்ட பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றிக் கழுவும் இடத்தில் வைத்து விட்டுச் சற்று நேரம் கழித்துப் பார்த்தால் அதில் ஈ, சிறு வண்டுகள் விழுந்து செத்து மிதக்கின்றன. முன்பெல்லாம் அப்படிப் பார்க்க முடியாது. இப்போது எப்படி இப்படி நடக்கின்றது என்றே தெரியவில்லை.

விளை நிலங்களில் இரசாயன உரம், பூச்சி, களைக் கொல்லிகளைப் பயன்படுத்துவதால் மண்புழு, மீன், நண்டு, நத்தை, தவளை என எல்லாமே அழிந்துவிட்டன. அவற்றைத் தீனியாகக் கொண்டு வாழ்ந்த பறவை, பாம்பு, நரி, கீரி போன்றவையும் போன இடம் தெரியவில்லை. பிள்ளை இல்லா வீடுபோல ஒரு சுடுகாடு போலவே விளை நிலங்கள் காணப்படுகின்றன.

நூலாசிரியர் மகேந்திரன் தமிழக நதிகளின் மரணத்தை மட்டும் குறிப்பிடவில்லை; தமிழரின் நீர்நிலைப் பாதுகாப்பு, கட்டுமானத் தொழில் நுட்பம், இந்தியா முழுவதும் பரவி இருந்த தமிழர் நாகரிகம், வெளி நாட்டவர் இந்தியாவை அடிமைப் படுத்தினாலும் கல்வி, விழிப்புணர்வு போன்றவற்றுக்கு அவர்கள் ஆற்றிய தொண்டு போன்றவற்றையும் குறிப்பிடுகின்றார்.

வேளாண் மக்களின் உழைப்பால் விளைவதை உண்டு கொண்டு எந்த விதமான கூச்ச நாச்சமும் இல்லாமல் அவர்களுக்கு எதிராகச் சட்டங்களை வகுப்பார்கள். அவர்கள் விளைச்சலைக் கையாளும்போது இறக்குமதி செய்வார்கள்; விலையைக் குறைப்பார்கள்.

இப்படித்தான் மலம் அள்ளவும் சாக்கடை அடைப்புகளைச் சீர் செய்யவும் மனிதர்களைப் பயன்படுத்துவார்கள். அறிவியல், ஆன்மீகத்தில் உச்சம் தொட்டு விட்டோம் என்பார்கள்.

நுகர்வுக் கலாச்சாரத்தால் நீர்நிலைகள் குப்பைத் தொட்டிகளாக மாறுவதைக் குறிக்கும்போது நூலாசிரியர் மகேந்திரன் இன்னொன்றையும் குறிப்பிடுகின்றார்: நாற்றமெடுத்த மனிதக் கழிவுகளை மனிதனின் தலையில் சுமக்க செத்த கழிவைப் போன்று, நுகர்வு வெறியில் கொண்டாடி முடித்த கழிவுகள் அனைத்தையும் மனிதன் நதியின் தலையில் சுமத்துகிறான் (ப. 27)

மலத்தைத் தலையில் சுமக்க வைப்பதும் இல்லாமல் அதற்கு விளக்கமும் கொடுக்கின்றார்கள். மலம் அள்ளுபவர்கள் நேராகச் சொர்க்கத்திற்குப் போவார்களாம்.

இருக்கும் கோயில், குளத்தைச் சுற்ற வேண்டியதில்லை; புதிதாகக் கோடிக் கணக்கில் செலவு செய்து கோயில் கட்ட வேண்டியதில்லை. இந்திரலோகம், சொர்க்க லோகம் செல்ல விரும்புகின்றவர்கள் அதைச் சுமந்து விட்டு அங்குப் போய் எல்லாச் சுகத்தையும் அனுபவிக்கலாமே?

சுரண்டலின் சொத்து

நூலாசிரியர் சி.மகேந்திரன் இந்தியாவின் தென்பகுதியாகிய தமிழகத்தின் தென்பகுதி தொடங்கி ஆறுகளுக்கு ஏற்பட்டுள்ள அவலங்கள் கண்ணீர் மல்க வைக்கும் என்று எழுதுகின்றார். நாம் நினைத்துக் கொண்டிருப்பதை விட இன்னும் அதிக அளவிலேயே அவை சீர்கெட்டுள்ளன என்பதைச் சான்றுகளுடன் எழுதுகின்றார்.

காலங் காலமாகவே வேளாண்மை செய்வோரும் அதை நம்பி வாழும் பெரும்பான்மையான மக்களும் பிற தொழில்கள் செய்வோரும் சுரண்டப்படுவதைப் போன்று நதிகளும் சுரண்டப்படுகின்றன. எத்தனை பேரின் தாக்குதலை அவை தாக்குப் பிடிக்கும்?

நதிக்கரைகளில் இந்தியா மட்டுமல்லாமல் உலகம் முழுவதிலும் நாகரிகங்கள் தோன்றின; ஆய கலைகளும் வளர்ந்தன. ஒரு பக்கம் மட்டும் பேசப்படுகின்றன. அந்த இடங்களைத் தோண்டிப் பார்த்தாலும் தூற்றிப் பார்த்தாலும் அத்தனை அவலங்கள் வெளிப்படும். எல்லா நதிக்கரை நாகரிகங்களிலும் வளமான நிலங்கள் கோயில், மடம், பார்ப்பனர், பண்ணையார்களிடம் இருக்கும் உழைக்கும் மக்கள், கதிரோன் தோன்றினான் / கவலை கொண்டு ஏங்கினோம் / உடையோ கோவணம் / உணவோ நீராகாரம் என்ற நிலையில் காலத்தை ஓட்டினார்கள்.

‘ஊரான் வீட்டு நெய்யே என் பொண்டாட்டி கையே’ என்னும் சொலவச் சொல்லைப் போலக் காலங்காலமாக மக்கள் உரிமையாக வைத்திருந்த நிலத்தையும் பொது நிலங்களையும் மன்னர்கள் மண்ணில் இறங்கி உழைக்காத மக்களுக்குத் தானமாக வாரி வழங்கினார்கள். நூலாசிரியர் சி.மகேந்திரன் பின்வருமாறு குறிப்பிடுகின்றார்: ஆற்றங்கரையின் வளம் நிறைந்த பகுதிகளில்தான் சதுர்வேதி மங்கலங்கள் உருவாக்கப்படுகின்றன. இவை மன்னர்களால் பிராமணர்களுக்குத் தானமாக வழங்கப்பட்டவை. (ப. 243)

நாகரிகத்தை வளர்த்தவர்கள் எல்லோரும் அற்ற குளத்து அருநீர்ப் பறவை போல அந்தந்த நதிக்கரைகளை விட்டுக் கம்பி நீட்டி விட்டார்கள். கூடாரம் அடித்துக் கொண்டு தங்கள் பிழைப்புக்கான காலம் வந்ததும் இடம் பெயரும் நிலைதான். ஆறுகள் வறண்டு போய் விட்டன.

மாடாய் உழைத்த மக்களுக்கும் கல்வியும் விழிப்புணர்வும் வேலை வாய்ப்பும் கிடைத்தன. அடங்க மறுப்பவர்கள் இருக்கும் இடத்தில் அடக்க நினைப்பவர்களுக்கு வேலை இருக்காது; எனவே, கூடாரத்தை மாற்றிக் கொண்டார்கள்.

இப்படி நதியை நீண்ட காலமாகப் பிடித்திருந்த ஏழரை நாட்டுச் சனி விட்டது என்றால் அடுத்து அதை விடப் பெரும் பெரும் சனிகள் பிடித்துக் கொண்டன. அவைதாம் நாட்டின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும் ஆலைகள்.

தமிழகத்தின் எல்லா நதிக்கரையிலும் அந்தந்தச் சூழலுக்கு ஏற்பத் தொழிற்சாலைகள். நூலாசிரியர் சி.மகேந்திரனின் கடுமையான உழைப்பு நூல் முழுவதும் தெரிகின்றது. முதலில் பொருநை நதி எனப்படும் தாமிரபரணியில் தொடங்குகின்றது.

இப்பொழுது தாமிரபரணி நதிக்கரையில் பத்துப் பெரிய ஆலைகளும் 250க்கும் மேற்பட்ட சிறிய நடுத்தரத் தொழிற்சாலைகளும் அமைந்துள்ளன. இவற்றில் பெரும்பாலானவை சுற்றுச் சூழல் விதிகள், அரசாங்கத்தின் சட்டங்கள், ஊடகங்களின் எச்சரிக்கை, சமூக ஆர்வலர்களின் போராட்டங்கள் எதையும் மதிக்கவில்லை. தாமிரபரணியில் பெருக்கெடுத்துக் கலப்பது, காகித ஆலை, துணி ஆலை போன்றவற்றின் இந்த ரசாயனக் கழிவுகள்தான் (ப. 43).

வையை என்ற பொய்யாக் குலக்கொடி (சிலப்.13: 170) நிலையும் தாமிரபரணியின் நிலையை விட எந்த விதத்திலும் குறையவில்லை. தமிழகத்தில் மட்டுமல்ல, இந்தியா முழுவதுமே வேற்றுமையில் ஒற்றுமையை நதிகளை மாசுபடுத்துவதிலும் சுற்றுச் சூழலை அழிப்பதிலும் அறியலாம்.

வையை முற்றிலுமாகச் சாக்கடை நதி ஆகி விட்டது. நீரை அழித்த நகர் இன்று நீருக்காக அனலில் தகித்துக் கொண்டிருக்கிறது. மதுரையின் காலைப்பொழுது குழாயடிச் சண்டையுடனே புலர்கிறது (ப.117). தூங்கா நகரத்தின் பெருமைகளுள் ஒன்றான வைகை வழி எங்கும் சுருங்கி விட்டது. அதைக் கடக்கும்போது மூக்குக்குப் போகும் கை ஆக்டோபஸ் போல விடுபட மறுக்கின்றது. இருப்பினும், வைகை நதி பழந்தமிழரின் இலக்கிய வருணனைகளுக்குப் புத்துயிர் கொடுத்துக் கொண்டிருக்கின்றது.

இவ்வகையான பழமை போற்றும் எச்சங்கள் கழிமுகப் பகுதியாகிய பூம்புகார்ப் பகுதியிலேயே கிடைக்கின்றன. காவிரிக் கரையில் கம்பீரமாகப் பேசப்படுபவை சுரண்டல் நாகரிகம்தான். வான்பொய்ப்பினும் தான் பொய்யா / மலைத் தலைய கடற்காவிரி (பட். 5-6). வளம் அனைத்தும் குறிப்பாக இடைக்காலச் சோழர் காலத்தில் மடைமாற்றி விடப்பட்டன.

அது ஒருவகைச் சுரண்டல் என்றால் விடுதலைக்குப்பின் காவிரி தொழிற்சாலைகளின் கழிவு கலக்கும் நதியாகி விட்டது. அடுத்தகட்டமாக மணற் கொள்ளைக்குக் காமதேனு ஆகிவிட்டது. காவிரி, அதன் கிளை ஆறுகளின் மரணங்களை நூலாசிரியர் சி.மகேந்திரன் கண்ணீரால் வடித்துக் காட்டுகின்றார்.

காவிரி அதன் கிளை நதிகள் என அனைத்துமே தொழிற்சாலையின் கழிவைச் சுமக்கும் கழுதைகள் ஆகிவிட்டன. பவானியின் நிலை பற்றி நூலாசிரியர் சி.மகேந்திரன் விளக்கும்போது எங்கும் இந்த இழவுதானா என மனம் வெறுத்துவிடுகின்றது

பவானியின் பெரும் துயரம் இதன் மீது கொட்டப்படும் பெரும் ஆலைகளின் கழிவு நீர்தான். நீர் எல்லை கடந்த கழிவுகளை சுமக்க நிர்ப்பந்திக்கப்பட்டால் அதன் உயிர்த்தன்மை இழந்துபோய்ச் சாக்கடையாக மாற்றம் பெற்று விடுகிறது.

நதிக்கரை முழுவதும் துணி ஆலைகளும் சாயப்பட்டறைகளும் தோல்பதனிடும் தொழிற்சாலைகளும் மரக்கூழ் ஆலைகளும் சென்ற நூற்றாண்டில் பெரும் கூட்டமாகப் பெருகிவிட்டன. இவற்றிலிருந்து வெளியேறும் ரசாயனக் கழிவுகளின் அபாயத்தில்தான் பவானி சிக்கித் தவிக்கிறது (ப. 245 - 246).

நொய்யல், பாலாறு என எல்லாமே எல்லாவற்றையும் ஆளும் வர்க்கமும் ஆலைகளும் சின்னாபின்னமாகச் சிதைத்து வளர்ச்சி என்று பெருமை பேசித் திரிகின்றன.

பழையன கழிதலும் புதியன புகுதலும் / வழுவல கால வகையினானே (நன். 462) என இடைக்காலத்தில் நன்னூல் என்னும் இலக்கண நூலை எழுதிய பவணந்தி முனிவர் குறிப்பிடுகின்றார். மொழிக்குக் கூறிய வரையறையை இலக்கியத்திற்கும் எடுத்துக் கொள்ளலாம்.

வேளாண்மை, தொழிற் துறைக்கு ஒரேயடியாகப் பழையவற்றைக் கழித்துப் புதியவற்றைப் புகுத்தினால் நோய்களுக்கு உடம்பு புற்றாகவும் கழிவுகளுக்கு ஆறு குப்பைக் கிடங்காகவும் மாறுவதில் வியப்பில்லை.

இப்படி ஒரு வண்ணத்துப் பூச்சியின் மரண சாசனம் என்னும் இந்த நூல் மட்டுமல்லாமல், நூலாசிரியர் சி.மகேந்திரன் தன்னுடைய அரசியல் வாழ்க்கை தொடங்கிய காலத்திலிருந்தே தமிழகத்தை பாலைவனம் ஆக்காதே என்று எழுதிக்கொண்டும் பேசிக்கொண்டும் இருக்கின்றார்.

தமிழ்நாடு, இந்தியா, உலகம் எனப் புவி முழுவதும் தொழிற்புரட்சி வழி முன்னேற வேண்டும் என்ற ஆவல் கொண்டிருந்தன. அதில் ஒன்றும் தவறில்லை. ஆனால் பிள்ளையார் பிடிக்கக் குரங்கானதுதான் சோகத்தில் சோகம். இந்தியா மட்டுமல்லாமல் உலக வளங்கள் முழுவதும் பகாசுரனைப் போல அபகரிக்கப்பட்டு அழிந்து வி¢ளிம்பில் நிற்கின்றன.

வளர்ச்சியின் உச்சம்

அன்றைய சோவியத்து ஒன்றியம் போல இந்தியாவும் அறிவியல், வேளாண்மை, தொழில் என அனைத்துத் துறைகளிலும் முன்னேற வேண்டும் என்பது பாரதப் பிரதமர் நேரு அவர்களின் கனவாக இருந்தது. அவர் எண்ணத்தை மேனாள் துணைவேந்தர் சே.சாதிக் பின்வருமாறு பதிவு செய்துள்ளார்.

1950 நடுவிலும் 1960 முற்பகுதியிலும் நேருஜியின் முற்போக்குச் சிந்தனைக்கு மிக வேகமான அரங்கேற்றம் தேவைப்பட்டது. கனரகத் தொழில் - உருக்கு ஆலைகள், கனிம வளம் தோண்டுதல், மின் உற்பத்திக்கு - நீர், அனல், அணு மின்சார நிலையங்கள், பாசன - நீர் மின் தேவைக்கு நீர்த் தேக்கங்கள், பெரிய அணைகள், கப்பல் கட்டும் தொழில், ரயில் போக்குவரத்துக்கான அடிப்படைச் சாதனங்கள் செய்தல், அறிவியல், பொறியியல், வேளாண்மை மேம்பாடு, விமானப் போக்குவரத்து, கலை கலாச்சார மேம்பாடு போன்ற பெரிய மேம்பாட்டுத் திட்டங்களைச் சுதந்திர இந்தியாவின் சாதனையில் வேண்டுமென்ற தணியாத ஆர்வம் நேருஜிக்கு இருந்தது (2016 - 2, ப. 190).

அறிவியல் கண்டுபிடிப்புகளில் முன்னேற்றம் அடைந்து தொழிற்புரட்சி ஏற்பட்டு, உற்பத்தி பெருகியபோது இந்தியாமட்டும் அல்லாமல் உலகின் இயற்கை வளங்கள் எல்லாம் அழியத் தொடங்கின.

போக்குவரத்திற்காகப் பெரிய சாலைகளும், இரயில்வழித் தடங்களும் அமைக்கப்பட்டபோது பெரும்பெரும் நீர் நிலைகள் துண்டாடப்பட்டன. ஊர் இரண்டு பட்டால் கூத்தாடிக்குக் கொண்டாட்டம் என்றொரு பழமொழி இருக்கிறது.

சாதாரணமாக, பெரிய பெரிய ஆறுகளின் கரையை ஒட்டி நிலம் வைத்திருப்பவர்கள் கரையின் உள்பக்கமாக நாணலை வளர்ப்பார்கள். வெள்ளம் வரும்போது நாணல் உள்ள இடத்தில் மணல் சேர்ந்து மேடாகும். ஆறு கெட நாணல் விடு என்றொரு பழமொழியே இருக்கின்றது. அப்படியே கொஞ்சம் கொஞ்சமாக நிலமாக்கி விடுவார்கள்.

விடுதலைக்கு முன்னும் பின்னுமாக அதிகார வர்க்கத்தோடு தொடர்புடையவர்கள் பெரும்பான்மையான நீர்நிலைகளைப் பட்டா போட்டுக் கொண்டார்கள். காலங்காலமாகவே நீர்நிலை, காடு போன்றவை அழிக்கப்பட்டுள்ளன. இருப்பினும், தொழிற்புரட்சிக்குப் பின்புதான் இவை படுவேகமாக வளர்ச்சி என்னும் போர்வைக்குள் அழிக்கப்பட்டன.

நம்மை ஆண்ட அந்நியர்கள் காபி, தேயிலைத் தோட்டங்கள் அமைக்கவும் இரயில்வே தண்டவாளக் கட்டைகள் தேவைக்காகவும் தெற்கு, வடக்கு என்னும் வேறுபாடு இல்லாமல் காடு, மலைகளிலுள்ள மரங்களை எல்லாம் வெட்டிச் சாய்த்தார்கள். இங்கு மட்டுமில்லை, உலகெங்கிலும் இயற்கை வளங்களை அரசுகள் அல்லது அவற்றின் ஆசி பெற்ற நிறுவனங்கள் அழிக்கத் தொடங்கின.

சிங்கம், புலி போன்றவை அடித்து வீழ்த்தி அவை தின்றவை போக எஞ்சியவற்றை ஓநாய், நரி, கழுகு, காகம் போன்றவை தின்பது போல மற்றவர்களும் இயற்கை வளங்களை அழித்தார்கள். அரசு அழித்தால் அது நாட்டின் வளர்ச்சி; மற்றவர்கள் அழித்தால் அவர்கள் விரோதிகள்.

பொதுவாக, காடுகளை அவை இருக்கும் இடத்தின் நுரையீரல் என்பார்கள். ஓர் ஊருக்குள் ஒரு காடு இருந்தால் அது அந்த ஊரின் நுரையீரல்; இப்படி மாநிலம், நாடு என விரியும். அமேசான் காடு உலகத்தின் நுரையீரல் என்பார்கள்.

அதுவே திடீர் திடீரென்று பற்றி எரிகின்றது. அதுவாகவும் எரியும்; எரிக்கவும்படும். மாமேதைகள் கார்ல்மார்க்ஸ் - பிரடெரிக் எங்கல்ஸ் வாழ்ந்த பத்தொன்பதாம் நூற்றாண்டில் - தொழிற்சாலைகள் அசுரவேகத்தில் வளர்ச்சி அடைந்த காலத்திலேயே காடுகள் அழிக்கப்பட்டுள்ளன.

காடு போன்ற இயற்கை வளங்களை அழிப்பது எதிர்காலச் சந்ததியினருக்குச் செய்யும் துரோகம் மட்டுமன்று. நாம் செய்யும் சீரழிப்புகளின் பலனைப் பனையைப்போல நாம் காண முடியாவிட்டாலும் எதிர்காலத்தினர் நிச்சயம் பாதிக்கப்படுவர்; நம்மைத் தூற்றுவர். நம் காலத்தில் செய்யும் கேடுகள் நம்மையே தாக்குவதை இப்போது அனுபவித்துக் கொண்டிருக்கின்றோம்.

தென்னை வைத்தவன் தென்னையின் பலனைத் தன் காலத்திலேயே பெறுவதைப்போன்று அண்மைக் காலத்தில் இயற்கை வளங்களை அழித்ததன் பலனை இன்று அனுபவித்துக் கொண்டிருக்கிறோம். பயங்கரமான வெப்பம், கடுமையான வறட்சி அல்லது வெள்ளம்.

காய வேண்டிய நேரத்தில் காய்ந்து பெய்ய வேண்டிய நேரத்தில் மழை பெய்தால்தான் தாவரங்கள், பிற உயிரினங்கள் தழைத்தும் பெருகியும் வளரும். அண்மைக் காலத்தில் தேவைப்படாத நேரத்தில் மழைபெய்து எல்லாவற்றையும் - குறிப்பாக, பயிரிட்டுள்ளவற்றை அழித்து விடுகின்றது. கெடுதி மழை என்பார்கள். இங்கு மட்டுமில்லை; இயற்கை வள அழிப்பு காலங்காலமாக உலகம் முழுவதும் நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கின்றது.

தொழிற்சாலைகள் வளர்ச்சியும் உற்பத்தியும் வலது சாரிக் கோட்பாடு கொண்டவர்கள் பெருமையாகப் பேசிய காலத்தில் இயற்கை வளங்களை உலக நாடுகள் அழிப்பதால் ஏற்பட்ட விளைவுகளைப் பிரடெரிக் எங்கல்ஸ் விளக்கி இருப்பதை அறியலாம்.

மெஸொபொடோமியா, கிரீஸ், ஆசியா மைனர் ஆகியவற்றிலும் இன்னும் பிற இடங்களிலும் சாகுபடி நிலங்களைப் பெறுவதற்காகக் காடுகளை அழித்த மக்கள், காடுகளை அழித்ததன் கூடவே ஒருங்குசேரும் இடங்களையும் நீர்த்தேக்கங்களையும் அழித்ததன் மூலம் தாங்கள் அந்த நாடுகளின் தற்போதைய அவல நிலைக்கு அடிகோலியதாகக் கனவில் கூடக் காணவில்லை.

இத்தாலியர் ஆல்ப்ஸ் மலைத்தொடரின் வடபகுதிச் சரிவுகளில் அத்தனை பரிவுடன் பேணிக் காக்கப்பட்ட ஊசியிலை மரக்காடுகளைத் தென்பகுதிச் சரிவுகளில் முழுமையாக வெட்டிப் பயன்படுத்தியதன் மூலம் அப்பகுதிப் பால் பண்ணையின் அடி வேரையே வெட்டி விட்டனர் என்பதையும், அம்மரங்களை வெட்டியதன் மூலம் ஆண்டின் பெரும் பகுதி, மலையிலுள்ள ஓடைகளுக்குத் தண்ணீர் இல்லாமல் போய்விட்டதையும் அதன் காரணமாக மழைக்காலங்களில் அவை கூடுதலான வெள்ளத்தைச் சமவெளியில் பாய்ச்ச வகை செய்தனர் என்பதையும் நினைத்துப் பார்க்கவில்லை (கார்ல் மார்க்ஸ் 200, பக். 126-127).

சமூக ஆர்வலர்கள் காலங்காலமாகவே இயற்கை வளங்களை அழிப்பதால் ஏற்பட்ட - ஏற்படும் - ஏற்படப்போகும் கேடுகளைக் கூறிக் கொண்டுதான் இருக்கின்றார்கள். அதிகார வர்க்கங்களின் இரும்புக் காதுக்குள் நுழைய வேண்டுமே! ந.வினோத்குமார் (2018: 12) கூறும் கருத்தையும் இங்குப் பதிவு செய்யலாம்.

மனிதச் செயல்களால் மரங்களும் நதிகளும் மலர்களும் மலைகளும் மண்ணும் மனங்களும் மாசடைந்து, மரத்துப் போய்விட்டன. சின்ன புழுவுக்கும் கூட இடம் தராத அளவுக்கு மனிதர்களின் பேராசை உலகைக் குறுக்கிக் கொண்டே வருகின்றது.

கழுதை தின்று அழிப்பதை விடப் புரண்டு அழிப்பதுதான் அதிகம் என்பார்கள். ஆளும் வர்க்கங்களின் அனுசரணையுடன் பெரும் வணிக நிறுவனங்கள் அடிக்கும் கொள்ளையால்தான் இயற்கை வளங்கள் அழிகின்றன.

காய்நெல் அறுத்துக் கவளம் கொளினே
மாநிறைவு இல்லதும் பன்னாட்டு ஆகும்
நூறுசெறு ஆயினும் தமித்துப்புக்கு உணினே
வாய்புகு வதனினும் கால்பெரிது கெடுக்கும்

(புறம். 184: 1-4)

அண்மைக் காலத்தில் கணினி யுகம் சார்ந்து உலகப் பணக்காரர்களாகப் பலர் ஆனாலும் பெரும்பாலானவர்கள் இயற்கை வளங்களை அழித்தே ஆனவர்கள் என்பது அப்பட்டமான உண்மை. இப்படிப்பட்டவர்களிடம் குவியும் பல்லாயிரக் கணக்கான கோடிச் சொத்துகளும் காலங்காலமாக நிலைத்திருக்க வேண்டிய - எதிர்காலத் தலைமுறையினருக்கு உரிமையான இயற்கை வள அழிப்பால் குவிந்தவையே என்பதில் ஐயமில்லை.

காடுகள், ஏரி, குளம் போன்ற நீர்நிலைகளை அழித்த பிறகு மலைகளையே சுக்கு நூறாகவும் பாளம்பாளமாகவும் சிதைத்துப் பெயர்த்து விட்டார்கள். பிறகு எப்படி மழை பொழியும்; பொழியக் கூட வேண்டாம். வாசலில் சாணி கரைத்துப் போடுவதைப்போல பனி பறப்பதைப் போலத் தூறக்கூட வானம் விரும்பவில்லை.

சிறிய அளவில் உருவாகும் மேகமும் பூமியைச் சக்களத்தியாள் பிள்ளையைப் பார்ப்பதைப்போல வெறுத்து வேகமாகச் செல்கிறது. ஓசோன் படலத்தில் ஓட்டை போடும் அளவிற்கு நம்முடைய பகுத்தறிவால் வளர்ந்த அறிவியலும் தொழிற்புரட்சியும் உச்சம் தொட்டுள்ளன.

இவ்வளவு தூரம் இயற்கை வளச் சுரண்டலும் சுற்றுச்சூழல் கேடும் உள்ளங்கை நெல்லிக்கனி போலக் கண்ணுக்குத் தெரிந்தாலும் ஒரு சாரார் வல்லரசு, கார்பரேட் நிறுவனங்களுக்குச் சப்பைக் கட்டுபவர்கள் சூழலியல் ஒன்றும் கெட்டுப் போகவில்லை; கெட்டு விட்டதாக வேண்டுமென்றே மிகைப்படுத்திப் பேசுகின்றார்கள் என்கின்றார்கள்.

“தேனை நக்கிவிட்டு இளிச்சவாயன் தலையில் தடவுவது போல' என்றொரு உவமை உள்ளது. தொழிற்சாலைக் கழிவுகள், நுகர்வுப் பொருள்களின் கழிவுகள் என எல்லாவற்றுக்கும் நதிகள், ஏரிகள், குளங்கள், குட்டைகள், கடைகள், சாலை ஓரங்கள், ஏழைமக்கள் வாழும் பகுதிகள்தான் சங்கமம் ஆகும் இடங்கள். இவற்றில்தான் எல்லாம் அழிகின்றன. அழிவை உண்டாக்குகின்றன.

தொழிற்புரட்சியின் வழி மண்ணிலுள்ள இயற்கை வளங்களை அழித்தார்கள்; காடுகள் அழிந்தன; நீர்நிலைகளை அழித்துச் சாலைகளையும் ஆலைகளையும் அழித்தார்கள்; ஆலைப் புகைவழி வான் மண்டலமே புகை மண்டலம் ஆகிவிட்டது. கழிவுகள் வழியாக எங்கும் சாக்கடை. ஆறு, ஏரி, குளம், குட்டை என எல்லாமே கழிவிடங்களாகி ஆண்டு முழுவதும் கொசு, பிற நோய்க் கிருமிகள் உற்பத்திக்குத் தொட்டில் ஆகிவிட்டன.

நுகர்வுக் கலாச்சாரத்தால் இப்படி ஒரு சுற்றுச் சூழல் கேடு வந்தது என்றால் எல்லோருக்கும் மூன்று வேளைக்கும் வயிறுமுட்ட உணவு அளிக்கப்போகிறோம் என்று பசுமைப் புரட்சியைக் கொண்டு வந்தார்கள். இதைப் பசுமைப் புரட்சி என்பதை விடப் பசுமைப் புரட்டு என்று பலர் குறிப்பதுதான் சரியாக இருக்கும்.

நேரு, சி.சுப்பிரமணியன், எம்.எஸ்.சுவாமிநாதன் போன்றோரின் பெருமுயற்சியால் தான் விடுதலைக்குப் பிறகு பசுமைப் புரட்சி மிகத் தீவிரமாக இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது. ஏட்டுச் சுரைக்காய் கறிக்கு ஆகாது என்பதைப் போகப்போக வேளாண் பெருங்குடி மக்கள் உணர்ந்து கொண்டார்கள்.

வேளாண் விஞ்ஞானிகளும் பட்டதாரிகளும் இரசாயன உரத்தைப் போடச் சொன்னார்கள்; விவசாயிகள் பயிரின் பச்சையைப் பார்த்து அள்ளிக் கொட்டினார்கள். கொழுத்தாடை வீசிய பயிரில் பூச்சித் தொல்லை; பூச்சிக் கொல்லிகளைப் பயன்படுத்தி மண்ணிலுள்ள கரையான், மண்புழு, நண்டு, நத்தை, மீன், பாம்பு, தவளை என அனைத்துமே சாகடிக்கப்பட்டன.

ஆண்டாண்டு காலமாக அம்மை, காலரா, பிளேக் போன்ற தொற்று நோய்களே இப்போது உலகை வளைத்துப் போட்டிருக்கும் கொரோனா போல மக்களைக் கொத்துக் கொத்தாகச் சாகடிக்கும். பசுமைப் புரட்சிக்குப் பிறகு பூமியை ஆட்கொண்டுள்ள நோய்களுக்குத் தொற்றா நோய்கள் என்று பெயர் வைத்துள்ளார்கள்.

மாரடைப்பு, புற்றுநோய், சிறுநீரகக் கோளாறு, சர்க்கரை நோய், மூட்டுவலி போன்ற பல நோய்கள் ஒருவருக்கு வருவதால் அவரை மட்டும் தான் பாதிக்கும் என்பதால் தொற்றா நோய்கள். ஆனால் இந்தத் தொற்றா நோய்கள் குடும்பத்தைப் பற்றிக் கொண்டு சீரழிக்கின்றன. மருந்து மாத்திரை உட்கொள்ளாத மக்களைப் பார்ப்பதே அரிது.

உணவு முறை, உடல் உழைப்பின்மை இவ்வகைத் தொற்றா நோய்களுக்குக் காரணம் என்பதில் கருத்து மாறுபாடு இல்லை. பலர் இவற்றைக் குறிப்பிடுகின்றார்கள். இரசாயன உரம், பூச்சிக் கொல்லி, களைக் கொல்லி, மரபணு மாற்றம் விதைகள் போன்றவற்றால் விளைந்த தானியம், பருப்பு, காய்கறி, கீரை போன்றவற்றை உண்பதால் தான் இவ்வகை நோய்கள் வருகின்றன என்பதை மெத்தப் படித்த வேளாண் விஞ்ஞானிகள், மருத்துவர்கள் சொல்லத் தயங்குகின்றார்கள். சில சமூக ஆர்வலர்களின் குரல்கள் மட்டும் கிணற்றுக்குள் இருந்து வெளி வருபவை போல ஒலிக்கின்றன.

ஒரு வண்ணத்துப் பூச்சியின் மரண சாசனம் என்னும் நூலாசிரியர் சி.மகேந்திரன் கூறி இருப்பதை வழிமொழிவதைப் போலக் கலாரசிகன் (தினமணி 22.3.2020: 8) கருத்துக் காணப்படுகின்றது.

கொரோனா வைரஸ் போன்ற நோய்த் தொற்றுகள் அடிக்கடி தோன்றுவதற்கும் பரவுவதற்கும் அடிப்படைக் காரணம் வனவிலங்குகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டிருப்பதுதான் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. ஒட்டுமொத்தப் பூமிப் பரப்பையும் மனித இனம் தனதாக்கிக் கொள்ள நினைப்பதால் ஏற்பட்டிருக்கும் எதிர் விளைவுகள்தான் நோய்த் தொற்றுகளும் இயற்கைச் சீற்றங்களும்.

இக்கருத்தில் நிறைய உண்மைகள் இருக்கின்றன. இவற்றைத்தான் நூலாசிரியர் சி.மகேந்திரன் நூல்முழுவதும் விளக்குகின்றார். வளர்ந்த நாடுகள் இயற்கை வளங்களை அழித்து, வளிமண்டலம் வரை மாசுபடுத்தினார்கள்.

இரசாயன, பூச்சிக்கொல்லி மருந்தைப் பயன்படுத்தி உணவு உற்பத்தியை அதிகமாக்கினார்கள். பெரும்பான்மை மக்களுக்கு இதயநோய், சர்க்கரை, சிறுநீரகக் கோளாறு, மூச்சுத் திணறல், மூட்டுவலி என ஏகப்பட்ட தொற்று நோய்கள். அவற்றைத் தீர்க்க மருந்து மாத்திரைகள்.

குறிப்பாகச் சொல்ல வேண்டும் என்றால் மருந்து மாத்திரை, அறுவைச் சிகிச்சை போன்ற நவீன மருத்துவ முறையால் எழுபது - எண்பது வயது என ஐரோப்பிய அமெரிக்கா போன்ற நாடுகளில் நூறுவயது வரை வாழ்கின்றார்கள். முதல் கொரோனா அலை அவர்களைத்தான் நோட்டம் விட்டது. லெட்சக் கணக்கில் பலியானார்கள்.

முதல் அலையில் அந்த அளவு இந்தியாவில் பாதிப்பு இல்லை என்றாலும் நன்றாகக் கையாண்டார்கள் என்றாலும் நோய் தீவிரம் இல்லை. நோயை விரட்ட இங்கு விளக்கேற்றுதல், கைத்தட்டுதல், பசுமூத்திரம் குடித்தல் போன்ற வழிமுறைகளைக் கூறினார்கள். நூற்றுக்கு மேற்பட்ட நாடுகளுக்கு உதவியதாகக் கூறினார்கள். நல்ல செய்திதான். இருந்தாலும் இரண்டாவது அலைக்குப் பட்டுக் கம்பளம் விரித்து வரவேற்று விட்டார்கள்.

மக்கள் தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும் என்று அறிவுரை கூறி விட்டுத் தேர்தல் கூட்டம், கும்பமேளா போன்றவற்றில் இலட்சக் கணக்கானோரைக் கூட்டினார்கள். இரண்டாவது அலை அதிகம் பாதிக்கும் என்ற மேலை நாடுகள் எச்சரித்ததோடு எதிர்கொள்ளவும் தயாராக இருந்து கணிசமான அளவு முதல் அலைபோல் இல்லாமல் நோய்பரவல், இறப்பைக் குறைத்து விட்டார்கள்.

இந்தியாவில் இரண்டாவது அலை மோசமாகப் பாதித்துவிட்டது. மருத்துவமனையில் படுக்கை வசதி இல்லை; பிராணவாயு இல்லை; மூச்சு விடமுடியாமல் மக்கள் செத்து மடிகிறார்கள்; இறந்ததை எரிக்க சுடுகாட்டில் இடமில்லை; விறகுமில்லை.

எவ்வளவுதான் அறிவியல் வளர்ந்தாலும் தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்துவதற்குள் மக்களைக் கூட்டிக் குப்பையில் தள்ளிவிடும். அம்மை, காலரா, பிளேக் எனப் பல நோய்கள் மானுடத்திற்குப் பாடம் கற்றுக் கொடுத்துள்ளன.

நம்முடைய பழந்தமிழ் இலக்கியங்கள் இயற்கை வளங்களின் பெருக்கத்தையும் எழிலையும் நிறையப் பேசுகின்றன. வணிக நோக்கில் அவை அழிக்கப்படவில்லை. தொழிற்புரட்சி வளர்ச்சி அடைந்த காலத்தில் எண்ணற்றோர் வாழ்ந்தாலும் வளர்ச்சி என்னும் பெயரில் இயற்கை வளங்களின் அழிப்பையும் ஏற்படக் கூடிய விளைவுகளையும் உலக அளவில் பேசியவர்கள் மாமேதைகள் கார்ல் மார்க்ஸ்-பிரெடரிக் எங்கல்ஸ் மட்டுமாகத் தான் இருப்பார்கள்.

இந்திய அளவில் இயற்கை வளங்கள் சுரண்டப்பட்டுச் சுற்றுச் சூழல் கெட்டுக் கொண்டிருப்பதைச் சுபாஷ் பலேக்கர், அருந்ததிராய், மேதாபட்கர், வந்தனா சிவா போன்ற பலர் சுட்டிக் காட்டுகின்றனர்.

தமிழக அளவில் நம்மாழ்வார், பாமயன், ஆர்.எஸ்.நாராயணன் எனப் பலர் சுற்றுச் சூழல் கேட்டையும் பசுமைப் புரட்சியின் எதிர் விளைவுகளையும் விளக்குகின்றனர்.

அதிகார வர்க்கத்திற்கும் இயற்கை வளங்களுக்கும் எப்போதும் பகைதான்போலும். நம் முன்னர்ப் பரந்து விரிந்து கிடக்கும் சோழ நாட்டையே காடுமலைகளை அழித்ததைப் போல அழிக்க அச்சாரம் போட்டு விட்டார்கள்.

இயற்கையை அழித்துப் பணக்காரர், உலகப் பணக்காரர் ஆகலாம். ஏழை - பணக்காரர் உருவாகலாம்; சாதி - மதம் பாராட்டலாம். ஆனால் அந்த இயற்கை சுனாமியாகவும் நிலநடுக்கமாகவும் வேறு வகையிலும் சீறி எழுந்தால் எல்லோருக்கும் சவக்குழி ஒன்றுதான். 2004இல் நம் கண் முன்னர் எழுந்த சுனாமியும் தற்போதைய கொரோனா அலைகளும் உள்ளங்கை நெல்லிக்கனிகள்.

இப்போது உலகையே சுற்றி வளைத்து ஆட்டிப் படைக்கும் கொரோனா தொற்று நோயும் மொழி, மதம், நாடு உயர்வு - தாழ்வு என்னும் எந்தக் கத்தரிக்காயையும் பார்க்கவில்லை. அனைவருமே அஞ்சி நடுங்குகின்றார்கள். வழிபாட்டுத் தலங்கள், கல்விக்கூடங்கள், போக்குவரத்து என அனைத்துமே மூடப்படுகின்றன; முடக்கப்படுகின்றன. வழிபாட்டுத் தலங்களைத் திறக்கவேண்டும் என ஒரு கூட்டம் குறுக்குச் சால் கட்டுகின்றது. கும்பமேளாக் கூட்டம் அமுத சுரபியாகக் கொரோனாத் தொற்றுக்குத் தாழ்ந்தும் கூக்குரல் இடுகின்றார்கள். பட்டறிவைப் படிப்பினையாகக் கொள்ள வேண்டும்.

சந்திரன், செவ்வாய் போன்ற கோள்களைக் காணும் மானுடத்திற்கு அழிந்த மலையை உருவாக்க முடியாவிட்டாலும் காடுகளை உருவாக்குவது கடினம் அன்று. மனிதன் காலடிபடாமல் இருந்தாலே பத்து - இருபது ஆண்டுகளில் காடுகள் ஆகிவிடும்.

பள்ளியில் படிக்கும் சிறுவர்களும் சமூக ஆர்வலர்களும் விதைப் பந்தைத் தயாரித்துப் பூமியில் இடுவதைப் படிக்கிறோம். அன்றாடப் பிழைப்புக்கு வாகனத்தில் சென்று வியாபாரம் செய்பவர் சாலை ஓரங்களில் விதை நடுவது கூடச் செய்தித்தாளில் வந்தது.

கழுதை விட்டையில் முன்விட்டை என்ன? பின்விட்டை என்ன? எல்லாம் ஒன்றுதான் என்பார்கள். நீ அதிகம் நச்சுக்காற்றை வெளியேற்றுகிறாய்; நான் குறைவாக என்று நாடுகளுக்குள் வீம்பு பேசாமல் அனைத்து நாடுகளும் ஒன்றுபட்டு மறுபடியும் பசுமை உலகத்தை மீட்டுருவாக்கம் செய்யவேண்டும். இல்லை என்றால் உலகம் செய்துள்ள முன்னூட்டத்திற்குப் பின்னூட்டமாக எல்லா அழிவுகளையும் சுமந்துதான் ஆக வேண்டும்.

இப்படி ஒரு வண்ணத்துப் பூச்சியின் மரண சாசனம் என்னும் இந்நூலைப் பற்றியும் நூலாசிரியர் சி.மகேந்திரனைப் பற்றியும் எழுதிக் கொண்டே போகலாம். நூல்களைப் படித்ததோடு கள ஆய்வு செய்தும் அவ்வளவு தரவுகளைத் திரட்டி இந்நூலை எழுதியுள்ளார்.

அவர் எழுதியுள்ள எல்லா நூல்களையும் படித்துள்ளேன். ஒரு வண்ணத்துப் பூச்சியின் மரண சாசனம் போல் இன்னொரு ஆகச் சிறந்த நூலை எதிர் காலத்தில் அவரால் எழுத முடியுமா? என்று தெரியவில்லை. எழுதினால் பாராட்டுவோம்.

இந்நூலுக்கு உரிய முக்கியமான இன்னொரு சிறப்பு என்னவென்றால் நூல் தொல்காப்பியத்திற்குப் பலர் உரை எழுதுவதைப் போன்று நூலாசிரியர் விளக்கியவை, தொட்டவை என எல்லாவற்றுக்கும் பக்கம் பக்கமாக எழுத வேண்டும் என்ற ஆவலைத் தூண்டுவதே.

கார்ல் மார்க்ஸ் சிந்திக்கவும் எழுதவுமே வறுமையை விலைக்கு வாங்கிக் கொண்டவர். மகாத்மாவும் அவ்வளவு எழுதிக் குவித்துள்ளார். லெனினும் ஆட்சி செய்து கொண்டே தொகுதி தொகுதிகளாகத் தொகுக்கும் அளவிற்கு எழுதியுள்ளார். பெரியாரையும் கார்ல் மார்க்சோடு ஒப்பிடலாம். அம்பேத்கர், அண்ணா, கலைஞர் போன்றவர்களும் தங்கள் ஆட்சி, அரசியல் பணிகளுடன் நிறையவே எழுதி உள்ளனர். இன்னும் பலர் தங்கள் அரசியல், பொதுவாழ்க்கைப் பணிகளுடன் சில, பல நூல்களை எழுதி உள்ளார்கள்.

சீர்திருத்தவாதிகளுக்குத் தங்கள் கருத்தை வெளிப்படுத்த எழுத்துத் தேவைப்பட்டது. பழமை வாதம் பேசுவோருக்கு ஏற்கெனவே உள்ள புராண, இதிகாசம், நீதிநூல், பக்தி இலக்கியங்கள் போதுமானவையாக உள்ளன. அவற்றை நியாயப் படுத்தவும் புதுப்பிக்கவும் எழுதுகின்றார்கள்.

அரசியல் ஈடுபாட்டோடு நூலாசிரியர் சி.மகேந்திரன் பழந்தமிழரின் அறிவுக் கோட்பாடு, ஈழத்தமிழர், சுற்றுச் சூழல் பற்றி நிறையவே எழுதியுள்ளார். இப்படி அரசியல் தொடர்புடையவர்கள் எழுதும் நிலை குறைந்து கொண்டே வருகின்றது. அரசியல் பண்ணுவதிலேயே காலம் ஓடி விடுகின்றதோ என்று எண்ணத் தோன்றுகின்றது.

எச்சங்களில் எழுத்து எச்சங்களே முதன்மை யானவை. ஒல்காப் பெரும் புகழ் தொல்காப் பியமும் சங்க இலக்கியங்களும் உலகப்பொதுமறை திருக்குறளும் இன்னும் பல சான்றோர்களின் படைப்புகளும் இப்போதும் படைத்தவர்களைச் சீரிளமையோடு காட்டிக் கொண்டிருக்கின்றன.

- ச.சுபாஷ் சந்திரபோஸ்