வரலாறு என்ற அறிவுத்துறையானது தொடக்கத்தில் அரசியலை மையமாகக் கொண்டே எழுதப்பட்டுவந்தது. பின்னர் சமூகத்தை மையமாகக் கொண்ட சமூக வரலாறாக வளர்ச்சியுற்றது. இதன் பின்னர் ஒரு குறிப்பிட்ட நாட்டில் வாழும் மக்களின் சமூக வாழ்வின் பல்வேறு கூறுகளையும் ஆராய்ந்து வெளிப்படுத்தும் சமூக அறிவியலாக மாற்றமடைந்தது. இவ்வகையில் மக்களின் நலவாழ்வில் முக்கியப் பங்காற்றும் மருத்துவத்தின் வரலாறானது வரலாறு என்ற சமூக அறிவியலுக்குள் ஒரு கூறாக இடம்பெற்றது. மருத்துவத்தின் வரலாறு என்னும் போது மனிதர்களைப் பிடித்துத் துன்புறுத்தும் பிணிகளையும், பிணி தீர்க்கும் மருத்துவ முறைகளையும் உள்ளடக்கியது.

indian medicineபிணியும் பிணி தீர்த்தலும் மருத்துவத்துறை சார்ந்தவை என்பதில் அய்யமில்லை. ஆனால் பிணி வராது தடுப்பதிலும் வந்த பிணியைப் போக்குவதிலும் நாடு ஒன்றினை ஆளுவோருக்குப் பங்குண்டு. அப்பிணிக்கு ஆளான மக்களின் வாழ்க்கை நிலையில் ஏற்பட்ட மாற்றங்கள் அவர்கள் வாழும் நாட்டின் வளர்ச்சியில் தாக்கத்தை ஏற்படுத்தும் தன்மையன. இதனால்தான் நாடு என்பதற்கு இலக்கணம் வகுக்கும் வள்ளுவர் ஒரு நாடானது ‘ஓவாப் பிணி’(நீங்காத நோய்) இல்லாது இருக்க வேண்டும் என்று வரையறுத்துள்ளார்(குறள்:734).வரலாற்றுக் கல்வியில் புறக்கணிக்க இயலாத இடத்தைப் பெற்றுள்ள நாடு என்ற நிலப்பரப்பின் சிறப்பை நிலைநாட்டுவதில் நோயின்மையின் இடம் குறித்த சிறப்பான பதிவு இது.

நூல்: இங்கு அறிமுகம் செய்யப்படும் இந் நூலானது சமூக வரலாற்றில் நோயும் மருத்துவமும் வகித்த பங்களிப்பை இந்திய நாட்டை மையமாகக் கொண்டு அறிமுகம் செய்துள்ளது.

இந்திய வரலாற்றுக் கழகமானது The Indian History Congress) 2001ஆவது ஆண்டில் தனது அறுபத்தி ஒன்றாவது அமர்வை ஜனவரி 1-3 நாட்களில் கொல்கத்தாவில் நடத்தியது. அதில் இந்திய மக்களின் உடல்நலம், இந்தியாவின் மருத்துவ முன்னேற்றம் குறித்த சிறப்பு அமர்வு இடம் பெற்றது. அவ் அமர்வில் படிக்கப்பட்ட கட்டுரைகளின் தொகுப்பே இந் நூலாகும். இச் சிறப்பமர்வில் இடம் பெற்றிருந்ததுடன் அதன் தலைவராகவும் செயல்பட்ட பேராசிரியர் தீபக் குமார் இக்கட்டுரைகளைத் தொகுத்துப் பதிப்பித்துள்ளதுடன் ஓர் ஆழமான ஆய்வு முன்னுரையையும் எழுதியுள்ளார்.

இவர் ஜாகீர் உசேன் கல்வி ஆய்வு மையத்திலும் ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்திலும் அறிவியல் வரலாறு, சமூகமும் கல்வியும் என்ற பாடங்களைக் கற்பித்து வந்துள்ளார். பல்வேறு ஆய்விதழ்களில் இவர் எழுதியுள்ள ஆய்வுக் கட்டுரைகள் வெளியாகியுள்ளன. இவை தவிர ‘அறிவியலும் அரசும்’ (Science and the Raj 1857-1905)  என்ற நூலை எழுதியுள்ளார். ‘அறிவியலும் பேரரசும்’ (Science and Empire: Essays in the Indian Context)  என்ற நூலைப் பதிப்பித்துள்ளார்.

ஆய்வாளர்கள் பலர் எழுதியுள்ள கட்டுரைகளின் தொகுப்பாக அமையும் நூலொன்று ஓர் ஆழமான நூலாக அமையமுடியாது என்றாலும் இந்தியாவில் பரவிய நோய்கள், அவற்றுக்கான மருத்துவம் குறித்த சில அடிப்படைச் செய்திகளை இந்நூல் வெளிப்படுத்தி நிற்கிறது. இவ்வகையில் இந்தியாவில் காணப்படும் நோய்கள், அவற்றுக்கான மருத்துவம் குறித்த வரலாற்று வரைவுக்குத் துணை நிற்கும் தகுதி இந்நூலுக்கு உண்டு.

ராதா காயத்திரி, துருப்குமார் சிங் என இருவரும் பதினான்கு பக்க அளவில் இத் தலைப்பை ஒட்டிய நூல்களின் பட்டியல் ஒன்றைத் தயாரித்துத் தந்துள்ளனர். நூலின் இறுதியில் ( பக்கம்: 276-289) இடம் பெற்றுள்ள இப் பட்டியல் இத் தலைப்பில் மேலும் ஆய்வு செய்ய விழைவோருக்குத் துணை நிற்கும் தன்மையது.

பதிப்பாசிரியரின் முன்னுரை நீங்கலாக மொத்தம் பதினெட்டு கட்டுரைகளைக் கொண்ட இந்நூலில் உள்ளடக்கத்தின் அடிப்படையில், ‘நவீன இந்தியாவிற்கு முற்பட்ட காலம்’, ‘நவீன இந்தியா’ என்ற இரு தலைப்புகளில் கட்டுரைகளை இரு பிரிவுகளாகப் பகுத்துள்ளனர். முதற் பிரிவில் எட்டு கட்டுரைகளும் இரண்டாவது பிரிவில் பத்து கட்டுரைகளும் இடம் பெற்றுள்ளன.

பதிப்பாசிரியரின் முன்னுரை

disease and medicine in indiaஇந்நூலுக்கான ஓர் ஆழமான முன்னுரையை மிகச் சுருக்கமாக பதிப்பாசிரியர் தீபக் குமார் எழுதியுள்ளார். அவரது கருத்துப்படி அறிவியலின் வரலாறும், தொழில் நுட்பம், மருத்துவம் என்பனவும் வரலாற்றுக் கல்வியுடன் நெருக்கமான தொடர்புடையன. சமூகப் பண்பாட்டு நோக்கில் பார்த்தால் இவற்றைப் புறந்தள்ளிவிட முடியாது.காலந்தோறும் இந்திய வரலாற்றில் இவை தனிச் சிறப்பிடத்தைப் பெற்றுள்ளன. பதினொன்றாவது நூற்றாண்டில் எழுதப்பட்ட நூல் ஒன்றில் (Said al- Andalusi: Tabaqat al-Umam) அறிவியலை வளர்த்ததில் இந்தியா முதலாவது நாடு என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்திய மருத்துவர்கள் சமயப்புனித நூல்களுக்கு நெருக்கமானவர்களாக இருந்தபோதிலும் இயற்கையின் செயல்பாட்டினை உற்றுநோக்கி அறிதலை வலியுறுத்தி வந்தனர். “இயற்கை குறித்த அறிதலும் மனித குலத்தின் மீது அன்பு செலுத்துதலும் வெவ்வேறானவை அல்ல; இரண்டும் ஒன்றே” என்று சரகசம்ஹிதா என்ற நூல் குறிப்பிடுகிறது.

நாம் வாழும் இக்காலம் அறிவியல் வளர்ச்சிபெற்ற காலம். பல வரலாற்றியலர்கள் மருத்துவ வரலாறு பக்கம் திரும்பியுள்ளனர். தொடக்கத்தில் இந்திய மருத்துவ மரபு குறித்து தத்துவ பண்பாட்டு அணுகுமுறையிலான ஆய்வுகள் வெளிவந்தன. தற்போது தற்கால இந்தியாவின் வரலாறு சார்ந்த வரலாற்றியலர்கள் இந்திய மருத்துவ வரலாறு குறித்த வரலாற்றாய்வில் ஆர்வம் காட்டுகிறார்கள். அரசியலில் மருத்துவம் மருத்துவத்தின் அரசியல் எனப் பல ஆய்வுகள் நிகழ்ந்துள்ளன.மானுடவியலாளர்களும் சமூகவியலாளர்களும் இத் துறையில் சில நுண் ஆய்வுகளை நிகழ்த்தியுள்ளனர். அறிவியல் தொழில் நுடபம் குறித்த சமூகவரலாற்று வரைவுக்கு எவ்வகையிலும் தாழ்ச்சியுறாத நிலையை மருத்துவம் குறித்த சமூக வரலாறு பெற்றுள்ளது.

இச்செய்திகளையடுத்து இந்தியாவில் நிலவிய ஆயுர்வேத மருத்துவம், யுனானி மருத்துவம் என்ற இரு மருத்துவ முறைகளைக் குறிப்பிட்டுள்ளார். (ஆனால் தமிழ்நாட்டின் சித்த மருத்துவம் குறித்து எதுவும் குறிப்பிடவில்லை.)

இதன் தொடர்ச்சியாக இவை ஏன் நிறுவனமாக மாறவில்லை என்ற வினாவை எழுப்பி விடை தேடுகிறார். விதிக் கொள்கையும் சாதியும் ஏற்படுத்திய எதிர்மறையான விளைவுகளை விடையாக உணர்கிறார்.

அவரது கருத்துப்படி தெற்காசிய சமூகத்தில் நிலவும் சாதிய முறையானது கருத்தியலையும் (theory), செயல் முறையையும் (practice) தனித்தனியாகப் பிரிக்கும் அழிவுப் பணியைச் செய்துள்ளது. இது உடல் உழைப்பிலிருந்து மூளை உழைப்பை வேறுபடுத்துவதாகி விட்டது. சமய உணர்வும் சாதியும் இணைந்து போயின. இடைக்கால இந்தியச் சமூகத்தில் ஆளும் வர்க்கத்தின் பண்பாட்டுத் தோல்வியாக இது ஆகிப்போனது.

முகலாயர் ஆட்சிக் காலத்தில் வாழ்ந்த அபுல் ஃபசல் என்பவர் வெளிப்படுத்திய துயரம் தோய்ந்த பின்வரும் சொற்களை அவர் மேற்கோளாகக் காட்டுகிறார்:

“மரபு என்னும் பெருங்காற்றினால் பகுத்தறிவு என்னும் விளக்கின் ஒளிமங்கி... "எப்படி” “ஏன்” என்ற கேள்விக் கதவுகள் அடைக்கப்பட்டு கேள்விகேட்டலும் ஆராய்தலும் எட்டாக்கனியாகி புறச்சமயவாதிகளாயினர்.”

இதன் தொடர்ச்சியாக , இடைக்கால இங்கிலாந்து குறித்து ராய் போர்ட்டர் என்பவர் எழுப்பிய வினாக்கள் போன்று சில வினாக்களை எழுப்பியுள்ளார்:

  • நோய் போக்குதல் எவ்வாறு நிகழ்ந்தது? இதை யார் செய்தார்கள்?
  • நோயாளி இதை எப்படி உணர்ந்தார்?
  • மருத்துவ மானுடவியலாளர்கள் மந்திர- சமயச் சடங்கு, சடங்குகள், ஷாமன்கள்(மந்திர ஆற்றல் கொண்ட பூசாரி) ஆகியோரை ஆராய்ந்துள்ளார்கள். இவை வரலாற்று அடிப்படையில் பதிவு செய்யப் பட்டுள்ளனவா?
  • கீழ்நிலையிலுள்ள மக்களின் நோய் தீர்ப்பவர் யார்?
  • இத் தொழில் முறை எவ்வாறு உருவாகிறது?

இப்படிப் பல வினாக்களை தீபக் குமார் எழுப்பியுள்ளர். அவரது இவ் வினாக்கள் இத்துறையில் ஆய்வு செய்யப் புகுவோருக்கு உதவும் தன்மையன. இவ்வினாக்களை அடுத்து காலனியத்தின் நுழைவிற்கு முன் இந்தியாவில் பின்பற்றப்பட்ட நோய் போக்கும் முறைகள் குறித்தும், பயன்படுத்திய மருத்துவ நூல்கள் குறித்தும் விவரிக்கிறார். இறுதியாக, இந்தியாவில் நவீன மேற்கத்திய மருத்துவத்தின் அறிமுகம் குறித்த செய்திகளைக் குறிப்பிட்டுள்ளார். இவை வெறும் செய்திகளாக மட்டுமின்றி திறனாய்வுத் தன்மையுடன் இடம் பெற்றுள்ளன.

இம் முன்னுரையில் வேறு ஒரு முக்கிய பிரச்சினையும் விவாதிக்கப்பட்டுள்ளது. நமது பாரம்பரிய மருத்துவ முறைக்கும், காலனியம் அறிமுகம் செய்த நவீன மருத்துவ முறைக்கும் இடையிலான உறவை பதிப்பாசிரியர் சுட்டிக்காட்டி விவாதித்துள்ளார்.

இந்தியாவின் பாரம்பரிய மருத்துவ முறையானது அய்ரோப்பிய மருத்துவ முறை அறிமுகமான பின்னர் நிலைத்து நிற்கப் போராட வேண்டிய நிலைக்கு ஆளானது. புதிய அறிவுத் துறை ஒன்றை முழுமையாக ஏற்றுக் கொள்வதானது சில நேரங்களில் பழைய அறிவுத்துறையை முற்றிலும் புறந்தள்ளுவதாக அமைவதுண்டு. இத்தகைய நெருக்கடியில் நம் பாரம்பரிய மருத்துவ முறையானது விலகி நிற்கும் நிலைக்கு ஆளானது. இருந்தபோதிலும், பெரும்பான்மையான இந்தியர்கள் நம் பாரம்பரிய மருத்துவத்தைப் புத்தாக்கம் செய்து மறுமலர்ச்சியை ஏற்படுத்தவே விரும்பினார்கள். மேற்கத்திய மருத்துவமும் இந்திய மருத்துவமும் ஒன்றிணைந்து செயல்படவேண்டிய களங்கள் இருந்தன. ஆனால் அது கண்டு கொள்ளப்படவில்லை.

மேற்கத்திய மருத்துவம் நோய்க்கான காரணத்தைக் கண்டறிய அழுத்தம் கொடுத்தது. இந்திய மருத்துவம் குணப்படுத்தலை நோக்கமாகக் கொண்டிருந்தது. நுண்ணுயிர்கள், நுண்ணுயிர் நோக்கிகள்(மைக்ரோஸ்கோப்) என்பன நோயறியும் மருத்துவக் கண்ணாடிகளாக மேலை மருத்துவத்தில் பயன்பட்டன. ஆனால் இந்திய மருத்துவம் நோய் எதிர்ப்பாற்றலை வலியுறுத்தியது. இதன்படி நோயாளியின் உடல்நலத்தில் ஏற்படும் முன்னேற்றமானது நுண்ணுயிர்களையும் அவற்றை அழித்தலையும் விட இன்றியமையாதது.

இத்தகைய வேறுபாடுகள் இருப்பினும் இவ்விரு மருத்துவ முறைகள் குறித்த அறிவார்ந்த கலந்துரையாடல் எதையும் மேற்கத்தியமுறை மருத்துவர்கள் மேற்கொள்ளவில்லை என்று குறிப்பிடும் பதிப்பாசிரியர், தம்மை உயர்வானவர்களாக இவர்கள் கருதிக்கொண்டமையே இதற்குக் காரணம் என்ற முடிவுக்கு வருகிறார். இறுதியாக காலனியச் சார்புநிலை, தேசியச் சார்புநிலை என்ற இரண்டு பார்வைகளையும் கடந்து இரண்டு அறிவுத்துறைகளுக்கும் இடையே இணக்கத்தை ஏற்படுத்த வேண்டும் என்று அறிவுறுத்துகிறார்.

நவீன இந்தியாவிற்கு முற்பட்ட காலம்

நவீன இந்தியாவிற்கு முற்பட்ட காலத்தில் நிலவிய மருத்துவ முறைகளை ஆராயும் அல்லது அறிமுகம் செய்யும் எட்டு கட்டுரைகளில் முதலாவது கட்டுரையாக சுராஜ் பான் என்பவரும், தஹியா என்பவரும் இணைந்து எழுதிய கட்டுரை இடம் பெற்றுள்ளது. இவர்களுள் சுராஜ் பான் சிறப்பான தொல்லியலாளர். குருஷேத்திரா பல்கலைக்கழகத்தில் பண்டைய இந்திய வரலாறு மற்றும் தொல்லியலில் பேராசிரியராகப் பணியாற்றியவர். கட்டுரையின் இணையாசிரியரான தஹியா குறித்த பதிவுகள் எவையும் இடம் பெறவில்லை. இக் கட்டுரை கி.மு.2500-1900 காலத்தைச் சேர்ந்த ஹரப்பா நகரில் வாழ்ந்த மக்களின் நோய்கள், வழக்கிலிருந்த அறுவைச் சிகிச்சை முறை, மக்களின் உடல் நலம் குறித்த செய்திகளை வெளிப்படுத்துகிறது.

கட்டுரையின் தொடக்கத்தில் கட்டுரையாசிரியர்கள் முன்வைக்கும் பின்வரும் செய்திகள் அவர்களது சமூகப் பார்வையை வெளிப்படுத்தி நிற்கின்றன.

“அண்மைக்காலம் வரை உடல்நலம் என்பது நோயின்மை அல்லது உடல் வலு சார்ந்த ஒன்றாகக் கருதப்பட்டு வந்தது. ஏழ்மை அதோடு தொடர்புடைய சமூகக் காரணிகள் (கழிவகற்றல்) என்பன உடல்நலமின்மைக்கான முக்கிய காரணங்கள்" என்பதை மருத்துவ அறிவியல் படிப்படியாக உணர்ந்து கொண்டது.

உடல் நலத்திற்கான அடிப்படைத் தேவைகளாக அமையும் ஊட்டச்சத்து, தூய்மையான குடிதண்ணீர், உடல் நலம் பேணுதல், கழிவுகளை அகற்றல் எனபன கிடைத்து மன அழுத்தமும் வன்முறையும் கட்டுப்படுத்தப்பட்டால் மக்களின் உடல்நலம் குறிப்பிட்டுச் சொல்லுமளவுக்கு வளர்ச்சி பெறும்.

இச் செய்திகளின் தொடர்ச்சியாக ஹரப்பா நாகரிகத்தில் காணப்படும் மருத்துவம் தொடர்பான செய்திகளை வகைப்படுத்தி கட்டுரையாசிரியர் தந்துள்ளார். இவ்வகையில் உணவும் ஊட்டச்சத்தும், நோய்குறித்த உயிரியல் சான்றுகள், அறுவைச் சிகிச்சையும் உடல்நலமும், மக்களிடையே நிலவிய பாலியல் விகிதாச்சாரம், ஆயுட்காலம், உயர அளவு, தாக்கிய நோய்கள்குறித்து தனித்தனியே குறிப்பிட்டுள்ளார். இதற்கான தரவுகளாக அகழ் ஆய்வின்போது கிடைத்த எலும்புக்கூடுகளும் மண்டை ஓடுகளும் பயன்பட்டுள்ளன. கழிவுநீர் அகற்றுதல் தொடர்பாக அங்கு நிலவிய குறைபாடுகளையும் விவரித்துள்ளார்கள். மொத்தத்தில் அகழாய்வுச் சான்றுகள், உயிரியல் சான்றுகளின் அடிப்படையில் இச் செய்திகளை எழுதியுள்ளார்கள். அதே போழ்து இச் செய்திகள் நகரம் சார்ந்த செய்திகள் என்றும், இறந்தோரின் சமூகப் பின்புலம் (வர்க்கம், பால்) வரையறுக்கப்பட்டதாகவே உள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளனர். பெண்கள் உடல் அடிப்படையில் எவ்வாறு நடத்தப்பட்டனர் என்பதை ஆராயவேண்டியுள்ளது. மார்ஷல் என்பவரின் சேகரிப்பில் இருந்த பத்து மண்டை ஓடுகள் வரிசையில் முதலாவது மண்டை ஓடும் பத்தாவது மண்டை ஓடும் தாக்குதலுக்கு ஆளான பெண்களின் மண்டை ஓடுகளாக உள்ளன. கொடூரமான முறையில் பெண்கள் நடத்தப்பட்டமைக்கான சான்றாக இதைக்கொள்ளலாம். ஹரப்பா நகரின் பெண்கள் அங்கிருந்த ஆண்களைவிட உயரம் குறைவாகக் காணப்படுவது ஊட்டச்சத்து பால்வேறுபாட்டுடன் பகிரப்பட்டதை வெளிப்படுத்துகிறது.

ஹரப்பா நகர்களில் கழிவு நீர் வெளியேற்றியமை, உடல் நலம் பேணியமை, தூய்மையான குடிநீர், மாசில்லா சூழல் என்பன குறித்து மிகுதியான அளவுக்கு எழுதப்பட்டுள்ளன. இயற்கையின் தாக்குதல்களை எதிர்கொள்ளும் வழிமுறையாக, பெரிய அளவிலான தானியக் களஞ்சியங்களில் தானியங்களைச் சேகரித்து வைத்திருந்தார்கள். இது ஆளும் வர்க்கத்திற்கு அல்லது நகரின் மொத்த மக்களின் பயன்பாட்டிற்காக இருக்கலாம். இம் மக்களின் உடல்நலம் ஒரு கட்டுக்குள்தான் இருந்துள்ளது. மேலும் இது தொடர்பான ஆய்வுகளுக்கான சான்றுகளாக ஊட்டச்சத்து, கருவிகள், மூலிகை மருத்துவம் குறித்த தரவுகளுடன் தனிமனிதனின் உடல் நலத்தைப் பாதிக்கும் சமூக உண்மைகளையும் இணைத்து ஆராய வேண்டும் என்பது கட்டுரையாளர்களின் கருத்தாக உள்ளது.

இரண்டாவது கட்டுரை பாட்னா பல்கலைக் கழகத்தின் பண்டைய இந்திய வரலாற்றுத் துறையின் பேராசிரியர் விஜயகுமார் தாகூர் எழுதியது. இக்கட்டுரை பண்டைய இந்தியாவில் வழக்கிலிருந்த அறுவைச் சிகிச்சை முறைகள் குறித்தும், மருத்துவ அறிவியலின் வளர்ச்சி குறித்தும் அறிமுகம் செய்கிறது.

மூன்றாவது கட்டுரை கண்பார்வை குறித்த இடைக்கால இந்தியக்(1200-1750) கோட்பாடுகளையும், மூக்குக் கண்ணாடி அறிமுகத்தையும் குறிப்பிடுகிறது. மூக்குக் கண்ணாடி அணிந்து மீர் முசாவ்வீர் என்பவர் படித்துக் கொண்டிருக்கும் பதினாறாவது நூற்றாண்டு ஓவியம் ஒன்றும் இக்கட்டுரையில் இடம்பெற்றுள்ளது. இக்கட்டுரை ஆசிரியர் இக்பால் கனிகான் அலிகார் பல்கலைக்கழகத்தில் இடைக்கால இந்திய வரலாற்றையும் தொழில் நுட்ப வரலாற்றையும் கற்பிக்கும் பேராசிரியர்.

நான்காவது கட்டுரை இடைக்கால இந்தியாவின் மருத்துவர்கள் மருத்துவத்தையே ஒரு தொழிலாகக் கொண்டவர்களாக விளங்கியதை அறிமுகம் செய்கிறது. இக் கட்டுரையாசிரியர் அலீந்தீம் ரிஜாவி அலிகார் பல்கலைக்கழகத்தின் வரலாற்றுத் துறைப் பேராசிரியர்.

அய்ந்தாவது கட்டுரை 16ஆவது நூற்றாண்டு இந்தியாவில் பின்பற்றப்பட்ட மருத்துவர்களுக்கான விதிமுறைகளை அறிமுகம் செய்கிறது. கட்டுரையின் பின் இணைப்பாக நம் காலத்தில் மேற்கத்திய மருத்துவமுறையில் தேர்ச்சி பெறும் மருத்துவர்கள் எடுத்துக் கொள்ளும் ஹிப்பாகிராட்டிக் (Hippocratic)) உறுதிமொழியும் இடம் பெற்றுள்ளது. இக் கட்டுரையாசிரியர் சிரீன் மூசாவி மத்தியகால இந்தியப் பொருளாதார வரலாற்றில் வல்லுனர். அலிகார் பல்கலைக்கழகத்தின் வரலாற்றுத் துறைப் பேராசிரியர்.

ஆறாவது கட்டுரை இந்தியாவின் சிறந்த வரலாற்றுப் பேராசிரியர்களில் ஒருவரான இர்பான் ஹபிப் எழுதியது. இக் கட்டுரை மொகலாய இந்தியாவில் மருத்துவத் துறையில் நிகழ்ந்த மாறுதல்களையும் கண்டுபிடிப்புகளையும் அறுவை சிகிச்சை நடைமுறைகளையும் ஆராய்கிறது.

ஏழாவது கட்டுரை நவீன இந்தியா உருவாகும் முன்பு நிகழ்ந்த அம்மை நோய்ப் பரவல் குறித்தும் அதைப் போக்குவதற்கு மேற்கொண்ட சிகிச்சை முறைகள் குறித்தும் ஆராய்கிறது. இக் கட்டுரையாசிரியர் இஸ்ரத் அலம் அலிகார் பல்கலைக்கழகத்தின் வரலாற்றுத் துறையில் பணியாற்றிவருபவர். டச்சு மொழியில் பயிற்சி உடையவர்.

எட்டாவது கட்டுரை அம்மை நோய் குறித்து பதினெட்டாவது நூற்றாண்டில் வெளியான துண்டு வெளியீடு (Tract)) ஒன்றின் துணையுடன் அம்மை நோய் பரவும் காலம்,நோயாளிக்கான உணவு,சிகிச்சை என்பனவற்றை ஆராய்கிறது. இக்கட்டுரையின் ஆசிரியர் ஹரிஷ் நரேந்திராஸ், தில்லி பல்கலைக்கழகத்தின் சமூகவியல் துறையில் மருத்துவ சமூகவியலாளராகப் பணியாற்றி வருகிறார்.

இனி அடுத்து வரும் இதழில் நவீன இந்தியாவில் நோய்கள் மருத்துவம் குறித்த கட்டுரைகளைக் காண்போம்.

Disease & Medicine in India, A Historical Overview. (Deepak Kumar, Editor) Tulika Books, New Delhi

தீபக் குமார், பதிப்பாசிரியர் (2012)

- ஆ.சிவசுப்பிரமணியன்

Pin It