கீற்றில் தேட...

பெரியம்மை

பெரியம்மை உலகின் மிகக் கொடூரமான பழைமை வாய்ந்த நோய்.  பழங்காலத்தில் உலகின் மக்கள் தொகையில் 10 சதவீதத்தினருக்கு மரணத்தை ஏற்படுத்திய பிளேக்கை விட மிகவும் கடுமையாக மனித குலத்தை வாட்டியது என்று வரலாற்று ஆசிரியர்கள் குறிப்பிடுகின்றனர்.

வங்காளத்தில் 7 ஆண்டுகளுக்கு ஒருமுறை பெரியம்மை கொள்ளை நோயாக மார்ச், ஏப்ரல், மே மாதங்களில் தோன்றி, மழை ஜூன் மாதம் ஆரம்பித்த பின்னரே அதன் கொடூரம் மறையும்.  அக்காலத்தில் பெரியம்மை இந்தியர் அல்லது ஐரோப்பியர் என்று பாராது பொதுவாக அம்மைக் கொப்புளம் தோன்றி முதல் மூன்று நாட்களுக்குள்ளே மரணத்தை ஏற்படுத்தியது.

ஜென்னருக்கு முன் இந்தியாவில் அம்மைக்குத் தடுப்பூசி

பெரியம்மை நோய்க்குத் தடுப்பு முறையாகத் - தடுப்பு ஊசி (innoculation) இங்கிலாந்தில் 1715இல் அறிமுகப்படுத்தப்பட்டது.  ஆனால் இந்தியாவில் ஐரோப்பியர்கள் இந்தியாவிற்கு வருவதற்கு முன்னரே நோய்த் தடுப்பு ஊசி குத்தப்பட்டது.  இந்நோயுடன் வட இந்தியாவில் சீதலா (Sitala)  என்றும், தென் இந்தியாவில் மாரியம்மா என்ற பெண் தெய்வத்துடனும் இணைத்துப் பேசப்பட்டது.  இந்நாட்டார் தெய்வங்களே இந்நோயிலிருந்து தங்களைக் காப்பாற்றும் என்றும் மற்றும் நோய் உண்டாவதற்குக் காரணமாகவும் உள்ளது என்றும் நம்பினர்.

தடுப்பு ஊசி போடுபவர் யார்?

பெரியம்மைக்கான தடுப்பு ஊசி (அம்மைக் கொப்பளத்தின் திரவத்துடன் போடும் ஊசி) டிக்காடர் (Tikatar) என்ற ஒருவகை பிராமண வகுப்பினர் கிழக்கு இந்தியாவில் வசந்த காலத்தில் ஆண்டுக்கொரு முறை (பிப்ரவரி, மே) கூட்டமாகப் பல நகரங்களுக்கும், கிராமங்களுக்கும் சென்று அவ்விடத்திலுள்ள குழந்தைகளுக்கு ஊசி போடுவர்.  இவர்கள் தங்களுக்கென பழக்கப்பட்ட சில ஊர்களுக்கு ஆண்டுக்கொரு முறை வழக்கமாகப் போய் வந்து தடுப்பூசி போட்டுப் பணம் பெறுவது வழக்கம் (Op. Jaggi, p. 139).

இவர்களைத் தவிர கல்கத்தாவிலிருந்து பானை செய்பவர், கிளிஞ்சல், சங்கு போன்றவற்றில் அழகுப் பொருட்களைச் செய்பவர்களும் இத்தொழிலை மேற்கொண்டனர்.  மாறாக,  உள்நாட்டு வைத்தியர்கள் இரத்தத்தையும், சீழையும் தொட அருவருத்து இத்தொழிலை நாடுவதே இல்லை.

பீகாரில், காப்பச்சா அல்லது பச்னியா என்ற தோட்ட வேலை பார்ப்பவரும், வடக்கு வங்காளத்திலுள்ள ரங்பூரில் ரோஜாஸ் (Rojas)என்ற பாம்புக் கடிக்கு மருத்துவம் செய்பவர்களும் மற்றும் நாவிதர், விவசாயி, துணி நெய்யும் இஸ்லாமியர்கள், பயிர்களுக்குத் தீங்கு விளைவிக்கும் பறவை மற்றும் விலங்குகளை விற்கும் சிந்தூரிஸ்கள், மேற்குக் கடற்கரையில் நிலவுடைமை சாதியினரான கும்பீஸ், கோவாவில் அடிமட்ட ஊழியம் செய்யும் கிறித்தவ குருமார்களும் அம்மைக்கு ஊசி போடும் தொழிலை மேற்கொண்டனர்.

இதற்கு மாறாக மதராஸ் ராஜதானி என்ற தென் இந்தியாவில் தடுப்பு ஊசி போடும் தொழிலை யாரும் மேற்கொள்ளவில்லை.

இந்நோய்க்கு ஆயுர்வேதத்தில் எந்த மருந்தும் குறிப்பிடப் படவில்லை.  ஆனால், மருத்துவமாக குளிர்பான உணவு, மலக்குடல் கழுவுதல், உணவில் மீன் போன்றவற்றைத் தவிர்த்தல் ஆகியவைகள் கடைப்பிடிக்கப்பட்டன.

சுதேசி வைத்தியர், பூசாரி, அம்மை குத்துபவர் தங்களைக் காப்பாற்றிக் கொண்டனர்.

அம்மை நோய் கண்டபின் உள்ளூர் வைத்தியர்களும் பூசாரிகளும் இந்நோய் தொற்று நோய் என்பதால் மருத்துவம் புரியாது நோயைப் பற்றி அறியாத ஏழை மலகார்ஸ் (தோட்ட வேலை செய்பவர்) என்ற அம்மை ஊசி போடுபவரிடம் இந்த நோயாளிகளைக் கவனித்துக் கொள்ளச் சொல்லி, புத்திசாலித்தனமாக நோயாளியைக் கைவிட்டு விடுவர்.

இதுபோல பிராமணர்கள் தடுப்பு ஊசி போட்டு அதில் கொப்புளம் வரும்பொழுது அவ்வூரைவிட்டே மறைந்து விடுவர்.  அதன்பின் மலகார்ஸ்களே ஊசி போடப்பட்டவருக்கு வைத்தியராக, செவிலியராக, பூசாரியாக, கோபங்கொண்ட சீதலா தெய்வத்தை அமைதிப்படுத்துபவராகச் செயல்படுவார்கள்.  ஆக, ஊசி குத்தும் பிராமணர்கள் ஊசி போட்ட பிறகு ஏற்படும் பிரச்சனைகளை எதிர்கொள்ளாமல் தூரத்திலிருந்தே தன் தொழிலை மேற்கொண்டனர்.

ஜென்னரும் அம்மை குத்துதலும்

பெரிய அம்மைக்குத் தடுப்பு முறையாக, ஜென்னரின் அம்மை குத்துதல் 1802 இந்தியாவில் பிரிட்டிஷாரால் லார்ட் கிளைவ் ஆதரவுடன் அறிமுகப்படுத்தப்பட்டது.  இதன்படி டாக்டர் வில்லியம் ரசல் அம்மை குத்துவதற்கான கண்காணிப்பாளராக அவ்வாண்டே நியமிக்கப்பட்டு அம்மை குத்த விருப்பம் கொண்ட இந்து, இஸ்லாமிய டாக்டர்களை அறிந்து அவர்கள் மூலம் குழந்தைகளுக்கு அம்மை குத்த முயன்றார்.  இவருடைய செயலால் கல்கத்தா மற்றும் அதனைச் சுற்றியுள்ள நகரங்களில் இருந்த ஐரோப்பியக் குழந்தைகள் பயன் அடைந்தனர். 

டாக்டர் ரசலுக்குப் பிறகு, டாக்டர் ஜெ.ஸ்ஹீரஸ் பிரட் என்பவர் 1803இல் பொறுப்பேற்றவுடன் பல இடங்களில் பெருமளவில் குழந்தைகளுக்கு அம்மை குத்தப்பட்டது.  பிறகு இவர் இதை இன்னும் வேகப்படுத்த அம்மைக்குத் தடுப்பு ஊசி போட்டுக் கொண்டிருக்கும் பிராமணர்களை அம்மை குத்தும் அலுவலராக்கி அவர்களுக்கு ஓய்வூதியமும் கொடுக்க வேண்டும் என்று கோரினார்.  இதில் இவர் சிறிதளவே வெற்றி கண்டார். 

இதற்காக அவர் எடுத்த நடவடிக்கை 1805 அம்மை ஊசிபோடும் சுதேசி பிராமணர்களுக்கு ஓய்வூதியம் வழங்கி, கல்கத்தா மற்றும் அதைச் சுற்றியுள்ள இடங்களில் தடுப்பு ஊசி அவர்களால் போடக் கூடாது என்று கேட்டுக் கொள்ளப்பட்டது.  ஜென்னர் கண்டுபிடிப்பை அவர்கள் நம்பும் பொருட்டு அவர்கள் முன்னிலையில் பசுவிடமிருந்து பெறப்பட்ட அம்மைப்பால் மக்களுக்குக் குத்திக் காண்பிக்கப்பட்டது.  இதன் பிறகு 26 பிராமணர்கள் இதனால் எந்தக் கேடும் இல்லை என்று கையொப்பமிட்டு இது தங்கள் தடுப்பு ஊசிக்கு மாற்று என்று கூறினர். (Op. Jaggi, p. 147)

அம்மை குத்திக் கொள்ள ஆதரவு திரட்ட பொய்யான செய்திகள் கூறப்பட்டன

ஆனால் இதற்கு மாறாகப் பம்பாயிலும், மதராசிலும் அம்மை குத்துதல் கல்கத்தாவைப்போல் அல்லாது வேகமாக நடைபெற்றது.  1895க்குப் பிறகே, பசுவிடமிருந்து பெறப்பட்ட அம்மைப் பாலை டிக்கடர் என்ற பிராமணர்கள் பயன்படுத்த முனைந்தனர்.  இருப்பினும், உயர்சாதிக்காரர்கள் புனிதப் பசுவிடமிருந்து பெறப்பட்ட அம்மைப் பாலைக் குத்திக் கொள்ள இசைவு தரவில்லை.  இதனைக் களைய மதராஸ் எப்.டபிள்யு. எல்லிட்ஸ் என்பவர் அம்மை குத்துதல் குறித்த ஒரு சமஸ்கிருதப் பாடலை ஒரு பழைய தாளில் எழுதி, இது பழங்காலத்திலே நடைபெற்றதுதான் என்பதை ஊர்ஜிதப்படுத்தி, ஜென்னர் அம்மை குத்துதலை எப்படியாவது எல்லோரும், குறிப்பாக உயர்சாதி இந்துக்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.  இதே போன்றே மதராஸ் டாக்டர் ஆண்டர்சனும் பொய்யான செய்திகளைக் கூறி, அம்மை குத்த வழி கண்டார் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.

1899 - 1902இல் ஒருவருக்கு அம்மை குத்த 1 அணா 3 பைசா ஆனது.  அம்மை குத்துபவர் மிகுந்த படிப்பறிவு இல்லாதவரே.  இவருக்கு மாதத்திற்கு ரூ. 5- 10 சம்பளம் கொடுக்கப்பட்டது.

எவ்வளவுதான் அம்மை குத்திக் கொள்ள அரசு வலியுறுத்தினாலும், அம்மைத் தடுப்பு ஊசி (innoculation)  டிக்கடர்களால் 1890 வரை நீடித்தது.  அதன் பிறகு அம்மை குத்திக் கொள்ளுதல் மிகுதியாக நடைமுறைக்கு வந்தது.

தமிழ்நாட்டில் மாரியம்மா

அம்மை குத்திக் கொள்வதில் தமிழ்நாட்டிலும் அதிகம் ஆர்வம் காட்டவில்லை.  இதற்குக் காரணம், அம்மை நோய்க்குத் தமிழ்நாட்டில் மாரியம்மா என்ற பெண் தெய்வத்தின் கோபமே என்று நம்பப்பட்டது.  இதைத் தணிக்க நேர்த்திக் கடனாக அம்மை உடலில் குறைந்து கொப்புளங்கள் வடுவான பிறகு, மூன்று முறை குளிப்பாட்டி மாரியம்மன் கோயிலுக்குச் சென்று மாவிளக்கு வைத்து விளக்கு ஏற்றி வழிபட்டனர்.  இது தவிர அம்மையுடனும் அக்கோயிலிலே பகல் இரவு தங்க வைத்தனர். இது இன்றும் பரவலாக பல இடங்களில் காணப்படும் காட்சியாகும்.

அம்மை குத்திக் கொள்ள அரசு மேற்கொண்ட நடவடிக்கைகள்

அரசி ராணி கௌரி லெட்சுமி 1811 ஆம் ஆண்டு திருவாங்கூரில் ஆட்சி புரிந்தபொழுது பெரியம்மைக்குத் தடுப்பு முறைக்காக அம்மை குத்த கிறித்தவப் பாதிரிகளுக்கு அனுமதியளித்தார்.  இதற்கு முன்னர் யாரும் இங்கு இவ்வகைத் தடுப்பு மருத்துவத்தை அறிமுகம் செய்ததில்லை.  அதன்பிறகு அம்மை கொள்ளை நோயாகப் பரவியதன் காரணமாக திருவாங்கூர் திவானாகப் பணிபுரிந்த கவர்னர் மன்றோ கொடுத்த அழுத்தமான பரிந்துரையின் காரணமாக ராணி, அம்மை குத்த ஒரு டாக்டருடன் ஒரு அமைப்பையும் நிறுவினார்.  இதுவே ஆங்கில மருத்துவம் திருவாங்கூரில் தன் காலைப் பதித்த முதல் தடயம்.

இதே இடத்தில் பெரிய அளவில் பெரியம்மை 1871இல் பரவி பல உயிர்களைக் குடித்தது.  இக்காலத்தில் மிக அதிகமான அளவில் தடுப்பு முறையாகப் பாதிரிகளால் அம்மை குத்தப்பட்டது.

இதனைத் தொடர்ந்து 1880இல் பெரியம்மைக்குத் தடுப்பாக எல்லோரும் அம்மை குத்திக் கொள்ள வேண்டும் என்ற அரசின் அறிவிப்பின் காரணமாக அரசு ஊழியர்கள், பள்ளிக் குழந்தைகள், வழக்குரைஞர்கள் மற்றும் ஜெயில் காவலில் உள்ளோருக்குக் கூட அம்மை குத்தப்பட்டது.  இது அரசு மருத்துவ அலுவலர்களின் நேரடி மேற்பார்வையில் அலுவலர்களால் நாள் ஒன்றுக்கு 50 நபர்களுக்குக் குத்தப்பட்டது.

அம்மை குத்திக் கொள்ள எதிர்ப்பு - காரணம் என்ன?

பொதுவாக அம்மை குத்திக் கொள்ள பொதுமக்களிடம் ஆரம்ப காலத்தில் எதிர்ப்பு கிளம்பியது.  அம்மை குத்துபவர்களில் இரண்டு புலையர்கள் அம்மை குத்த ஊழியர்களாக அமர்த்தப்பட்ட நிலையில் உயர்சாதியினர் அவர்களிடம் அம்மை குத்திக் கொள்ள மறுத்தனர்.

குறிப்பாகப் பிராமணர்களால் பூசிக்கப்படும் பசுவின் நிணநீரிலிருந்து எடுக்கப்படும் அம்மைப் பால் அம்மை குத்தப் பயன்படுத்துவதால் தங்கள் பிராமணியத்தையே இழக்க நேரிடுவதாகக் கூறி எதிர்ப்பு தெரிவித்தனர்.

இது தவிர, பசுவின் உடலமைப்பும் மற்றும் அதன் குரலும் அம்மை குத்திக் கொண்ட பின்பு வந்துவிடுமோ எனப் பயந்தனர்.  இன்னும் சிலர் தங்கள் தலை, பசுவின் தலையைப் போல மாறிவிடும் என அச்சப்பட்டனர். மற்றும் சிலர் இதனால் பெரு வியாதியும் வரக்கூடும் என வாதிட்டனர்.  ஒட்டுமொத்தத்தில் படித்தவர்களிடம்கூட அம்மை குத்திக் கொள்ள எதிர்ப்பு காணப்பட்டது.

இவ்விதமான எதிர்ப்புகள் தோன்ற, அக்காலத்தில் வெளியிடப்பட்ட ராயல் கமிஷன் அறிக்கையும் ஒரு காரணமாக இருந்தது.  அந்த அறிக்கையில் அம்மை குத்துவதால் மட்டும் அம்மையை ஒழிக்க முடியாது.  இதற்குத் தேவை ஒழுங்கான துப்புரவே எனக் கூறியதும் ஒரு காரணமாகும்.  இதன் விளைவாகப் பொதுமக்களிடம் ஒருவிதமான பயமும், அம்மை குத்துவதால் ஏற்படும் பயன் குறித்து அவநம்பிக்கையும் ஏற்பட்டு மக்கள் மனதில் ஒரு குழப்பத்தையே ஏற்படுத்தின.

இக்குழப்பத்தை உறுதிப்படுத்தும் விதமாக 1850-51ஆம் ஆண்டில் 552 நபர்கள் அம்மை குத்திக் கொள்ள மறுத்தனர். இவர்களில் 18 பேர்கள் குற்றம் சாட்டப்பட்டு 13 நபர்களுக்குத் தண்டனை கொடுக்கப்பட்டது.

எல்லோருக்கும் - பாட்டா

அம்மை குத்திக் கொள்ள பொதுமக்கள் ஆர்வத்தைத் தூண்ட, அம்மை குத்திக் கொள்பவர் மற்றும் அவர்களின் பெற்றோர்களுக்கும் அம்மை குத்துபவர்களுக்கும் “பாட்டா” என்ற போர்வையில் பணம் கொடுக்கப்பட்டது.

பெரியம்மையைப் போலவே காலராவும் 1869-70ஆம் ஆண்டில் பெருமளவில் மக்களைத் தாக்கியது என்றாலும் 1881-82 நாகர்கோவில், சுசீந்திரம் ஆகிய ஊர்களில் காலரா கொள்ளை நோயாகத் தோன்றியது.  தடுப்பு முறைகளை அரசு மேற்கொண்டபோதும் நோய் அதிகமாகப் பரவியது.  இக்காலத்தில் இந்நோயைக் குணப்படுத்த முத்துசாமி பிள்ளை என்பவரால் நாட்டு மருந்து கண்டுபிடிக்கப்பட்டுக் கொடுக்கப்பட்டது.

இதே கால கட்டத்தில் பிளேக் நோயும் இம்மாநிலத்தில் பரவியது.  அம்மை, காலராவைப் போலவே நோய் பரவாமல் தடுக்க, இந்நோய்க்கும் தடுப்பு ஊசி போட முயற்சி எடுக்கப்பட்டது.  இதற்கு ஊக்கமளிக்க மறுத்த மக்களை ஊக்கப்படுத்த, கிராம முக்கியஸ்தர்கள், சாதித் தலைவர்கள், ஆசிரியர்கள் மற்றும் கிராம அதிகாரிகளின் உதவி நாடப்பட்டது.  ஆனாலும் சில சமயங்களில் தடுப்பு ஊசி, நிர்ப்பந்தப்படுத்தியும் போடப்பட்டது.  பிளேக் நோய் பரவிய இடங்களில் தேவையான  நபர்கள் அரசால் நியமிக்கப்பட்டு நோய்க்கு ஆளாகாதவர்களை அப்புறப்படுத்தியது.

- டாக்டர் சு.நரேந்திரன்