இந்தியாவில் இன்றைய அரசாங்கமானது ஆட்சி முறையில் எவ்வளவு தூரம் பாமர மக்களுக்கு விரோதமாகவும், பணக்காரர்களுக்கு அனுகூலமாகவும் இருக்கின்றது என்கின்ற விஷயம் ஒருபுறமிருந்தாலும், நிர்வாக முறையானது ஏழைக்குடி மக்களுக்கு மிகவும் கொடுமை விளைவிக்கக் கூடியதாகவே இருந்து வருகின்றது.
அரசியல் நிர்வாகத்திற்கென்று குடிகளிடம் இருந்து வசூலிக்கப்படும் தொகைகள் 100க்கு 75 பாகம் அக்கிரமமான வழிகளிலேயே - பெரிதும் செல்வவான்களுக்குப் பயன்படும் மாதிரியிலேயே - சிலரை செல்வவான்களாக்குவதற்குமே நடைபெறுகின்றன. பாமர மக்கள் - ஏழை மக்கள் ஆகியவர்களின் உழைப்பெல்லாம் வரியாகவே சர்க்காருக்கு போய் சேர்ந்து விடுகின்றது. அந்த வரிகள் பெரிதும் சம்பளமாகவே செலவாகி விடுகின்றன. இதன் பயனாய் ஒரு நல்ல ஆட்சியினால் குடிகளுக்கு என்ன விதமான பலன்கள் ஏற்பட வேண்டுமோ அப்பலன்களில் 100க்கு 5 பாகம் கூட ஏற்படாமல் இருந்து வருகின்றன.
பிரிட்டிஷ் அரசாங்கம் இந்தியாவுக்கு வந்து சுமார் 175 வருஷ காலமாகிய பிறகும் இன்றும் கல்வித் துறையில் 100க்கு 8 பேர்களேதான் நம்மவர்கள் படிக்கத் தெரிந்தவர்களாக இருக்கிறார்கள் என்றால் அதுவும், பெரிதும் பணக்காரர்களும், மேல் ஜாதிக்காரர்களுமே என்றால் இந்த நிர்வாகமானது ஏழைகளுக்குப் பயன்படும் முறையில் தனது வரிப் பணத்தைச் செலவு செய்து இருக்கின்றது என்று சொல்ல முடியுமா? என்று கேட்கின்றோம்.
ஆனால் அரசாங்கத்திற்கு வரி வருமானங்கள் மாத்திரம் நாளுக்கு நாள் விஷம் ஏறுவது போல் உயர்ந்து கொண்டே வந்திருக்கிறது.
நமக்குத் தெரியவே இந்திய வருமானம், வருஷம் ஒன்றுக்கு 75 கோடி ரூபாயாக இருந்தது இன்று வருஷம் 1-க்கு 175 கோடி ரூபாயாக ஆகியிருக்கின்றது.
இராணுவச் செலவுக்கு வருஷம் 20 கோடி ரூபாயாக இருந்தது 7 கோடியாகி, இன்று 60 கோடியாக இருந்து வருகின்றது.
மற்ற அநேக துறைகளிலும் உத்தியோகச் செலவுகள் இதுபோலவே உயர்வாகி வருகின்றது.
உதாரணமாக கல்வித் துறையை எடுத்துக் கொண்டால் கல்வி இலாக்கா உத்தியோகச் செலவுகள் இதுபோலவே வளர்ந்திருக்கிறது. ஆனால் கல்விப் பெருக்கத்தில் மாத்திரம் சென்ற 10-வது வருஷத்திற்குமுன் 100-க்கு 7 பேராயிருந்த கல்விவான்கள் இன்று 100-க்கு 8 பேராகத்தான் ஆகி இருக்கிறார்கள் என்றால் இந்த நிர்வாகம் ஏழை மக்களுக்கும், பொது மக்களுக்கும் அனுகூலமானது என்று எப்படிச் சொல்ல முடியும்? ரூ. ஒன்றுக்கு பட்டணம் படியால் 6 படி 7 படி சில இடங்களில் 8 படி அரிசி வீதமும் கிடைக்கக்கூடிய இந்தக் காலத்தில்- B.A., M.A. படித்த மக்கள் மாதம் 15ரூ 20ரூ. சம்பளம் கூட வெளியில் கிடைக்காமல் திண்டாடுகின்ற இந்தக் காலத்தில் அரசாங்க நிர்வாக உத்தியோகங்களில் ஏராளமான ஆட்களை நியமித்துக் கொண்டு அவர்களுக்கு மாதம் 100, 200, 500, 1000, 5000 வீதம் சம்பளங்களை அள்ளிக் கொடுப்பதென்றால் இப்படிப்பட்ட அரசாங்கமும், அரசாங்க நிர்வாக உத்தியோகங்களும் இந்திய பாமர ஏழை குடி மக்களைச் சுரண்டும் கூட்டுக் கொள்ளை ஸ்தாபனம் என்று சொல்ல வேண்டியதா? அல்லவா? என்று கேட்கின்றோம்.
இன்றைய ஆட்சியானது அழிக்கப்பட வேண்டியது என்பதற்கு இந்த ஒரு உதாரணம் போதாதா என்றும் கேட்கின்றோம். ஆட்சி நிர்வாகம் என்பது சுத்த விளையாட்டுத்தனமாகவும், யோக்கியப் பொறுப்பற்றதனமாகவும் இருந்து வருகின்றது என்பதற்கு இதைவிட வேறு என்ன அத்தாட்சி வேண்டும். சென்னை மாகாணமானது சுமார் 20 வருஷங்களுக்கு முன்பு 2-மந்திரிகளாலேயே நிர்வாகம் செய்யப்பட்டு வந்தது யாவரும் அறிந்ததாகும். ஆனால் இப்பொழுது 7-மந்திரிகளால் நிர்வாகம் செய்யப்பட்டு வருகின்றது. இதன் பயனாய் மக்கள் அடைந்த பயன் என்ன என்பதை கவனித்தோமானால் மேலே கூறியபடி 2-மந்திரிகள் இருக்கும்போது 100-க்கு 7-பேர் படித்தவர்களாய் இருந்தது இப்போது கல்விக்காக என்று ஒரு தனி மந்திரி மாதம் 5000 ரூ. சம்பளத்தில் ஏற்படுத்தி அந்த இலாக்காவில் 20-வருஷங்களுக்கு முன் இருந்ததைவிட 100-க்கு 200-பங்கு பணம் அதிகம் செலவழித்தும் இன்றும் 100-க்கு 8-பேர் படித்தவர்களாய் இருக்கிறார்கள் என்கின்ற அளவில் தான் அபிவிருத்தி காட்டப்படுகின்றது. ஆனால் இந்த மந்திரிப் பதவிகள் இந்தப்படி 100-க்கு 350-பங்கு வளர்ந்ததற்கு காரணம் என்ன என்று பார்ப்போமானால் ஆட்சிமுறையை ஒரு திருட்டு தனம்போலவும் மந்திரிப் பதவிக்காரர்கள் அந்த திருட்டில் தங்களுக்கு ஒரு பாகம் கூட்டு கொடுக்காவிட்டால் அத்திருட்டைக் காட்டிக் கொடுத்து விடுவோம் என்று மிரட்டி பங்கு பெற்றது போலவும்தான் ஆகி இருக்கின்றதே தவிர வேறு ஒன்றுமே இல்லை.
இப்படி 100-க்கு 8-வீதமான கல்வி என்பதும் செல்வவான் வீட்டுப் பிள்ளைகளுக்கு மாத்திரம் கிடைக்கும்படியாகவேதான் கல்வியின் தத்துவமும், கல்வி இலாக்காவும் அமைக்கப்பட்டிருக்கின்றது.
உதாரணமாக ஒரு பையன் S.S.L.C., படித்து வெளிவர வேண்டுமானால் மாதம் 1-க்கு 5-4-0 ரூ. சம்பளம் கொடுக்க வேண்டும். அவன் புத்தகம் முதலியவைகளுக்கு மாதம் 2-ரூ வீதம் செல்லும். ஆக மாதம் 7-4-0 ரூ. வீதம் ஒரு மாணவனுடைய படிப்புக்கு வேண்டி இருக்கிறது. இந்த தொகையான மாதம் 7-4-0 ரூ. கூட 4,5 பேர்களைக் கொண்ட ஒரு குடும்பத்திற்கு வரும்படி இல்லாத மக்கள் நம் நாட்டில் 100-க்கு 60,70 பேர்கள் இருப்பார்கள் என்றால் இவர்கள் வீட்டுப்பிள்ளைகள் எல்லாம் எப்படி படிக்க முடியும் என்பதை யோசித்துப் பார்த்தால் கல்வி தத்துவத்தின் புரட்டும், அயோக்கியத்தனமும், சுலபத்தில் விளங்காமல் போகாது. மேற்கண்ட கல்விச் செலவானது மாதம் 7-4-0 ரூ. என்பது பட்டணத்துப் பிள்ளைகளுக்குத்தானே ஒழிய, கிராமாந்திர பிள்ளைகளுக்குப் பட்டினங்களுக்குச் சென்று படிக்க மாதம் 17-4-0 ரூ. ஆகிவிடுமென்பதை நினைத்துப் பார்த்தால் 100-ல் 1 பிள்ளையாவது குறைந்த யோக்கியதா பக்ஷப்படிப்பு என்னும் S.S.L.C., படிப்பு படிக்க முடியுமா என்று கேட்கின்றோம்.
மக்கள் நிலை இந்தப்படி இருக்கும்போது இந்தப் படிப்பு சொல்லிக் கொடுக்கும் உபாத்தியாயர்களுக்கு மாதம் 75 முதல் 350 ரூ. வரை சம்பளம் கொடுப்பது என்றால் இது எவ்வளவு கொடுங்கோன்மையான நிர்வாகம் என்பதற்கு வேறு என்ன அத்தாட்சி வேண்டும். மாதம் ஒன்றுக்கு 30-ரூ. 35-ரூ. சம்பளத்தில் வேலைக்கு வருவதற்கு 100 க் கணக்கான பி.ஏ., எல்.டி., கள் இன்று காத்துக் கொண்டிருக்கிறார்கள். அந்தப்படி பலர் அமர்ந்தும் இருக்கிறார்கள். அது மாத்திரமல்லாமல் பி.ஏ., எல்.டி., படிப்பையும் பரீட்சையையும், வஞ்சகமில்லாமல் இன்னம் சிறிது தாராளமாய் விட்டால் மாதம் ஒன்றுக்கு 20 ரூபாயிலும் 25 ரூபாயிலும் கிடைக்கும்படியாக ஆயிரக்கணக்கான பி.ஏ.,எல்.டி., உபாத்தியாயர்களைக் காணலாம். அப்படிக்கெல்லாம் இருக்க படிப்புக்காக மக்களிடம் இருந்து வசூலிக்கும் வரியையும் அபாரமாக்கி தனிப்பட்ட முறையில் படிப்புக்காக பெற்றோர்கள் செய்ய வேண்டிய செலவையும் அபாரமாக்கி அவ்வளவையும், உபாத்தியாயர்களுக்கும் படிப்பு இலாகா நிர்வாக உத்தியோகஸ்தர்கள் என்பவர்களும் வீணாய் கொட்டிக் கொடுத்து அந்தக் கூட்டத்தைச் செல்வான்களாகவும் ராஜபோகக்காரராகவும் ஆக்குவதல்லாமல் அந்தப் படிப்பால் மக்களுக்கு பலனும் இல்லாமல் செய்து மொத்த ஜனத்தொகையில் 100-க்கு 92-பேர்களை கையெழுத்துக்கூடப் போடத் தெரியாமல் தற்குறிகளாய் வைக்கப்பட்டிருக்கிறதென்றால் இந்த அக்கிரமங்களை மக்கள் எப்படித் தான் சகித்துக் கொண்டிருப்பது என்பது நமக்கு விளங்கவில்லை.
இப்படிப்பட்ட கொடுமைகளையும் அயோக்கியத்தனங்களையும் மக்கள் என்றென்றும் தெரிந்து கொள்ளாமலும், தெரிந்தாலும் சகித்துக் கொண்டும் இருக்க வேண்டும் என்பதற்காகத்தான் பள்ளிக் கூடத்தில் பிள்ளைகளுக்குக் கடவுள் செயல் பிரசாரத்தையும் ராஜ பக்தி பிரசாரத்தையும் கொண்ட புஸ்தகமும் படிப்பும் கற்பிக்கப்படுகின்றது என்று தீர்மானிக்க வேண்டியதாய் இருக்கிறது.
ஆயிரம் சமாதானம் சொன்ன போதிலும் இன்றைய ஆக்ஷி முறையும் நிர்வாக முறையும் முதலாளித் தன்மை கொண்டது என்பதிலும், இவை ஏழைமக்களுக்கு விஷம் போன்றது என்பதிலும், கண்டிப்பாக இவை அழிக்கப்பட்டே ஆக வேண்டும் என்பதிலும் நமக்குச் சிறிதும் சந்தேகமோ தயவோ தாக்ஷண்யமோ தோன்றவில்லை. ஆனால் இப்படிப்பட்ட சூழ்ச்சி ஆக்ஷித் தன்மைக்கு இந்தியாவில் இன்று தூண்கள் போல் இருந்து வருபவை முதலாளித் தன்மையும் புரோகிதத் தன்மையுமே பிரதானமாகும். அதற்கேற்ற முறையிலேயே காங்கிரசும் - காந்தீயமும் வேலை செய்து கொண்டு வந்திருக்கின்றது என்பதுடன் அதில் இருந்தால் தங்களுக்குப் பதவி கிடைக்காது எனக் கருதி வெளிவந்து அவற்றோடு போட்டி போட்டுக் கொண்டு இருக்கும் மற்ற அரசியல் ஸ்தாபனங்களுமே நடுத்தூண்களாய் இருந்து வருகின்றன.
இந்தக் காரணத்தால் தான் நாம் காங்கிரசை அழித்தாக வேண்டும் என்றும் காந்தீயத்தை ஒழித்தாக வேண்டும் என்றும் அதே தத்துவம் கொண்ட, மற்ற அரசியல் கிளர்ச்சிகளையும் ஒழிக்க வேண்டும் என்றும் புரோகித சம்மந்தமான எந்த உணர்ச்சியையும் அடியோடு புதைத்தாக வேண்டும் என்றும் கூப்பாடு போடுகின்றோம்.
இக்கூப்பாட்டைக் கண்டு முதலாளிகளும் முதலாளிகளின் கூலிகளும் உத்தியோக வர்க்கங்களும் உருமுவதில் நமக்கு அதிசயமொன்றுமில்லை. ஆனால் ஏழைமக்கள் தொழிலாளிகள் சரீரத்தால் சதாகாலமும் பாடுபட்டு துன்பப்படும் கூலிமக்கள், முதலாளிகளுக்கும் முதலாளிகள் கூலிகளுக்கும் ஆதரவளிப்பதும் அவர்களை அண்டுவதும் நமக்கு அதிசயமாய் இருக்கின்றது.
ஆகையால் வரப்போகும் தேர்தல்களில் ஏழை மக்கள் தொழிலாளிகள் ஆகியவர்கள் இவற்றை உணர்ந்து ஏமாந்து போகாமல் நடந்து கொள்வார்களாக.
(குடி அரசு - தலையங்கம் - 29.10.1933)