இந்திய மண்ணில் மேலை மருத்துவமும் ஹோமியோ மருத்துவமும் காலூன்றிய பிறகு, உள்ளூர் மருத்துவத்திற்கான மதிப்பு கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்து, திரும்ப மீள முடியாத அளவிற்குச் சென்றது எனலாம். ஏனெனில் ஆயுர்வேதம், யூனானி அல்லது சித்த மருத்துவம் ஆகிய முறைகளில் புதிய தடுப்பு முறைக்கான ஊசிகள் அல்லது புதிய உத்தியில் நோயை அறியும் முறைகள் மேலை மருத்துவத்திற்கு இணையாக இல்லை. இத்துடன் அம்முறையில் தோன்றுவதாகவும் இல்லை. இதனால் உள்நாட்டு மருத்துவர்கள் மிகவும் பாதிக்கப்பட்டனர். எடுத்துக்காட்டாக, 1835இல் மிகவும் பிரபலமாகச் சுதேச மருத்துவம் புரியும் கங்காதர் ராய் என்பவர் நொந்துபோய் கல்கத்தாவையே விட்டு வேரூருக்குச் சென்றுவிட்டார்.
மாகாண மருத்துவக் கவுன்சில் ஆரம்பிக்கப்பட்ட பின் மேலை மருத்துவப் பட்டம் பெற்று தகுதியானவர்கள் அனைவரும் இதில் உறுப்பினராகப் பதிவு செய்துகொள்ள வேண்டும் என்று 1912, 1917களில் சட்டம் இயற்றியது. இது சுதேசி மருத்துவர்கட்கு பேரிடியாகி இக்கவுன்சிலில் அங்கம் வகிக்க முடியாத படி போய் உள்ளூர்வாசிகளிடமே மதிப்பிழந்து வாழ வேண்டியதாயிற்று. மேலும், அரசு வேலைகளுக்கும் மேலை மருத்துவம் கற்றவர்களே பணி அமர்த்தப் பட்டனர். இதனால் மேலை மருத்துவத்திற்கு ஈடு கொடுக்க முடியாமல் அவர்கள் பழைமையையே நாடிச் சென்றதில் வியப்பில்லை எனலாம்.
மேலை மருத்துவத்தின் வருகையால் உள்நாட்டு மருத்துவர்களுக்கு நோயாளி வருகை மிகவும் குறைந்தது. மக்களிடம் இருந்த மதிப்பும் குறைந்தது. மக்களும் உடன் தீர்க்கும் மருத்துவம் தங்களுக்கு ஒரு புதிய வரவு என மேலை மருத்துவத்தை வரவேற்று, இதுபோல் தாங்கள் எப்போதும் கண்டதில்லை என வியந்தனர்.
இது இப்படி இருக்க, சுதேசி மருத்துவர்கள் தங்கள் தொழில் பாதிக்கப்படுவதற்குக் காரணம், பிரிட்டிஷ் அரசே என்று குறை கூறினர். ஏனெனில், மேலை மருத்துவத்தை மட்டும் அரசு நடைமுறைப் படுத்தி அதன் மேம்பாட்டிற்குப் பேருதவி செய்தது. இதனால் முன்னர் சுதேசி மருத்துவத்தை ஆதரித்த அரசர், ஜமீன்தார், உள்ளாட்சி (நகராட்சி) அமைப்பினர் ஆகியோர் மேலை மருத்துவத்திற்குத் துணை போயினர்.
உள்ளூர் மருத்துவத்தைப் பேண அரசு எந்த முயற்சியும் எடுத்துக் கொள்ளவில்லை. சுதேசி முறைக்குப் புத்துயிர் அளிக்க சரியான நிதி உதவியும் செய்யவில்லை. இதுவே, முஸ்லீம் பேரரசுகள் இந்தியாவில் அரசாண்டபோதும் நடைபெற்றன. ஆகவே, இது ஒன்றும் புதிதில்லை என்றும் கூறப்பட்டது. (Medicine and Raj, p.68)
இப்படியாக, உள்நாட்டு மருத்துவமுறை வலிமை குன்றி சென்றுகொண்டிருந்தபோதும், 19ஆம் நூற்றாண்டு முழுவதும் வழக்கம்போலவே சுதேசி வைத்தியர்கள் பாரம்பரியமாகத் தங்கள் தொழிலை வளர்த்து வந்தனர். இது புதிதாக, இந்தியாவில் நுழைந்த ஹோமியோ மருத்துவ முறைக்கு மாறாக எதிர்மறையாக இருந்தது. ஹோமியோவில் குறைந்த அளவே போதிக்க பள்ளிகள் இருந்தன. இருப்பினும் அலோபதி மருத்துவர்களைப் பார்த்து, நிர்ணயிக்கப்பட்ட ஆலோசனைக் கட்டணம், மருந்து மற்றும் உரிய விளம்பரம் ஆகியவைகளைக் கற்றுச் செயல்படுத்தினர்.
தஞ்சை இரண்டாம் சரபோஜியும் மருத்துவமும்
உள்ளூர் மருத்துவத்தை மேம்படுத்த எந்த நிறுவனங்களும் சமூக அமைப்புகளும் முயற்சி எடுத்துக் கொள்ளாத நிலையில் மேலை மருத்துவக் கோட்பாடு மற்றும் இந்திய அனுபவ அறிவையும் இணைத்து ஒரு புதிய முறையை அறிமுகப்படுத்தினால் உள்நாட்டு மருத்துவர்கள் மிகவும் பயனடைவார்கள். குறிப்பாக, உள்நாட்டு கிராம மக்கள் மிகவும் பயனடைவார்கள் என்று கருதிய மராட்டா அரசர்களில் கடைசியாக அரசாட்சி செய்த ராஜா இரண்டாம் சரபோஜி ஒரு புதிய முறையை அறிமுகப் படுத்தினார்.
ராஜா சரபோஜி, தன் உண்மையான ஆட்சியைப் பிரிட்டிஷாரிடம் ஒப்படைத்த பின், தன்னுடைய நண்பரும் வழிகாட்டியுமான ஜெர்மன் பாதிரியார் சுவாட்ஸ் - உடன் இவர் வாழ்நாளைக் கழித்தார். அரசர் பல மருத்துவ முறைகளை அறிந்த நிலையில் தஞ்சாவூர் தன்வந்திரி மகால் என்ற ஆராய்ச்சிக் கூடத்தைத் திறந்தார். இதில் ஆயுர் வேதம், யூனானி, மேலை மருத்துவம் மற்றும் சித்த மருத்துவம் கற்ற வல்லுநர்களை வரவழைத்து அவர் களுடன் மருத்துவ குணங்களைப் பற்றி விவாதித்து, நோயாளிகளுக்குப் பலமுறை, பலவித மருத்துவங் களை நோயாளிகளுக்கு அளித்து, அம்மருத்துவர் களின் மருத்துவம் சிறந்ததாக இருந்தது என்பதை குறித்துக்கொண்ட பிறகு, தகுந்த புலவர்களைக் கொண்டு, அம்மருத்துவமுறைகளை, பாட்டுக்களாக வடிவமைத்து, “சரபேந்திர வைத்திய முறைகள்” என்ற நூலை வெளியிட்டார்.
சரபோஜியின் இம்முயற்சியானது, இக்கால கட்டத்தில் தனித்து விடப்பட்ட சுதேசி மருத்துவர் களுக்கும் ஹக்கீம்களுக்கும் ஓர் உந்துதலாக இருந்தன.
இதுபோல மற்றொரு திட்டம் பஞ்சாப்பில் 1867இல் பல கிராமங்களில் நடைமுறைப்படுத்தப் பட்டது. இதன்படி ஒரு வீட்டிற்கு ஒன்றரை அணா வசூலிக்கப்பட்டது. இதற்கு மேல் பன்மடங்கு கூட சில செல்வந்தர்கள் நன்கொடை அளித்ததை அவ்வூர் குழு திரட்டி, ஒரு சுதேசி மருத்துவரை (ஹக்கீம்) பணியில் அமர்த்தி நன்கொடை மூலம் மருந்துகளும் வாங்கப்பட்டது. இத்துடன ஊரில் சிறப்பாகக் கல்வி கற்கும் மாணவரை மேலை மருத்துவம் கற்க பணஉதவி செய்து மீண்டும் அவர் ஊரிலேயே தங்கி மருத்துவம் பார்க்க அழைத்துக் கொள்ளப்பட்டனர். (op.Joggi, p.341)
சுதேசி மொழியில் படிப்பவர்கள் - சுதேசி பைத்தியங்கள்
மேலும் சமஸ்கிருதம் அல்லது மற்ற சுதேசி மொழிகளில் படிப்பதை அக்காலத்தில் கல்வியில் சிறந்தவர்கள், “சுதேசி பைத்தியங்கள்” என்று குறை கூறினர். மேலும், இவர்களுக்கு மேலை மருத்துவ நூல்களை அரசு மொழிபெயர்த்து வைத்தியர்களின் வாரிசுகளுக்கு உதவ வேண்டும் எனவும் வேண்டு கோள் விடுத்தனர். ஆனால், இதற்கு ஐரோப்பிய மருத்துவர்களும் மேலை மருத்துவம் கற்ற இந்தியர் களும் பெரும் தடையாய் இருந்தனர். இக்கால கட்டத்தில் சுதேசி வைத்தியர்களை அரசு கண்டு கொள்ளாது, அவர்கள் வளர்ச்சிக்கு உதவாது இருப்பதை, விடுதலைக்காகப் போராடிக்கொண்டிருந்த இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி இந்திய மருத்துவ அலுவலர் கழகப் பிரிவை (IMS) இந்தியாவில் செயல்பட வைக்க வேண்டும் (1893 - 1907) என்று ஒவ்வொரு கூட்டத்திலும் வலியுறுத்தியது. மேலும், சுதேசி மருத்துவம் என்பது இந்திய கலாச்சாரத்தின் சின்னம். ஆகவே, இதனை உயிர்ப்பிப்பது அரசின் கடமை என்றும் கூறியது. ஏனெனில், இந்தச் செயலும் இந்திய விடுதலைக்கு உதவக்கூடும் என்று அக்கட்சி நினைத்தது. இதன் பயனாக அரசு, “ஹோம் ரூல் மூவ்மெண்டின் உச்சபட்ச வெளிப்பாடாக” முதல் ஆயுர்வேத மருத்துவக் கல்லூரியை, ஜாமினிரோயால் 1916இல் கல்கத்தாவில் தங்கள் ஆதரவாளர்களின் நிதி உதவியுடன் திறந்தது.
இதேபோல் யூனானி முறைக்கும் தில்லியின் சிறந்த மருத்துவரான ஹக்கீம் அஹ்மல்கானினால் முதன்முதலில் பாரம்பரிய முறையைத் தகர்த்து, எல்லோருக்கும் கற்பிக்கும் கல்லூரி திறக்கப்பட்டது. இதில் கற்பிக்கும் மருத்துவர்களுக்கும் ஊதியம் அளிக்கப்பட்டது.
நீர்த்துப் போன நீரியல் கோட்பாடு
சுதேசி மருத்துவம் உடல்கூறு, வேதியல், மகளிர் மருத்துவம், அறுவை மருத்துவம் ஆகிய துறைகளில் மிகப் பின்தங்கிய நிலையிலேயே உள்ளது. மேலும் ஆய்வுகளும் மிகக்குறைவானதே என்பது பொதுவான கருத்தும், உண்மையும் கூட; காலரா, பெரியம்மை, மலேரியா, பிளேக் ஆகிய நோய்கள் கொள்கை நோயாக வரும்பொழுது அவற்றிற்கான தடுப்புமுறையோ அல்லது மருத்துவமோ இல்லை என்பதும், பெரும்பான்மையான உண்மையாக இருந்தது. மேலை மருத்துவக் கண்டுபிடிப்பான பாக்டீரியா இவர்கள் கூறும் உடம்பிலுள்ள நீரியலான தாதுக்களின் நிலை சார்ந்ததென கருத்திற்கு (Humoral theory) ஈடுகொடுக்கக் கூடியதாக இல்லாது, பெரும் இடர்ப்பாட்டை ஏற்படுத்தி அடிப்படைத் தத்துவத் திற்கே வேட்டு வைப்பதாக இருந்தது. மேலும் சுதேசி மருத்துவம் குணமாவதைக் குறிப்பிடுகிறதே தவிர எப்படி, நோய் ஏற்படுகிறது என்பதற்கான காரணங்களைக் கூறுவதில்லை எனவும் விமர்சிக்கப் பட்டது. மேலும் நோயை வகுத்துக்கூறும் முறை (Nosology) சுதேசி மருத்துவத்தில் இல்லாததும் பெரும் குறையாக இருந்தது.
நுண்நோக்காடி (Microscope) மற்றும் பாக்டீரியாக் களுக்கான ஆண்டிபயாடிக் என்பவைகளுக்குச் சுதேசி மருத்துவம் பதில் சொல்ல இயலவில்லை. சுதேசி மருத்துவத்தில் நோய் எதிர்ப்புத்தன்மை மற்றும் நோயின் குணப்பாட்டைக் குறித்து மருத்துவம் அளிக்கப்பட்டதே தவிர, அந்நோயை உருவாக்கிய கிருமிகளை அழிப்பது என்ற கொள்கைக்கு ஈடான மருத்துவம் இல்லை என்பதும் ஒரு பெரும் குறைபாடாகக் கருதப்பட்டது.
பிரிட்டிஷ் அரசு, மேலை மருத்துவத்திற்கு ஒப்ப சுதேசி மருத்துவத்தை ஏற்றுக்கொள்ளவில்லை. அதை ஒருபோதும் விஞ்ஞான அடிப்படையிலான ஒன்று என்று அதன் நூல்களைப் பார்த்தும் ஏற்றுக் கொள்ள மறுத்தது. அதன் குணப்பாடு மற்றும் நவீன மருத்துவத்திற்கான அதன் பங்களிப்பு ஆகியவைகள் இல்லாமையால் கேலி பேசுவதாக இருந்தது. மேலும், அரசு கொள்ளை நோயின் தாக்குதலின்போது சுதேசி மருந்துகள் பயனற்று இருந்ததால், அரசு இதன் மேல் கவனம் செலுத்தவில்லை. ஆகவே, சுதேசி மருத்துவத்திற்கு நிதி ஒதுக்கீடு செய்து வளர்க்கவும், கல்லூரிகளைத் தொடங்கவும் அரசு விரும்பவில்லை.
இக்கருத்துக்களை 20ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் கல்வியில் தேர்ச்சி பெற்ற இந்தியர்களும், சில சுதேசி மருத்துவர்களும் அறிந்திருந்தனர். எடுத்துக்காட்டாக, தில்லி கல்லூரியைத் தில்லியில் திறந்து வைத்து உரையாற்றிய மகாத்மா காந்தி, “எனது எண்ணத்தை வருத்தத்துடன் பதிவு செய்ய விரும்புகிறேன். நம் வைத்தியர்களுக்கும், ஹக்கீம் களுக்கும் குறித்துச் சொல்லும் அளவிற்கு ஆராய்ச்சி மனப்பான்மை இல்லை. அவர்கள் நோய்க்கான மருந்து செயல்முறைப் பட்டியல் குறிப்புகளைக் குறித்து, கேள்வி கேட்காமலேயே நடைமுறைப்படுத்து கின்றனர். மேலும் மிகக் குறைவாகவே பரிசோதனைகளை மேற்கொள்கின்றனர்.
உண்மையில், சுதேசி மருத்துவத்தின் நிலைமை, இரங்கத்தக்கதாகவே உள்ளது. இந்நிலையில், ஆய்வைப் பின்னடையாது சேர்ந்தாற்போல் வளர்க்காவிடில் பெருமளவில் இகழ்ச்சிக்கு உள்ளாக நேரிடும். ஆகவே, இக்கல்லூரி இந்தக் குறைபாட்டை நீக்கி ஆயுர்வேதம், யூனானி மருத்துவத்தின் பண்டைய பெருமையை நிலை நாட்ட வேண்டும்,” என்று கேட்டுக்கொண்டார். இதே போல் மற்றொரு முறை மகாத்மா, “சுதேசி மருத்துவம் வளர்ச்சியுறும் அறிவியலாக இல்லாது, பண்டைக் காலத்தில் தோன்றியதை ஒத்ததாகவே செயலற்று உள்ளது. எனக்குத் தெரிந்தவரை ஒரு புதிய கண்டு பிடிப்பு என மேலை மருத்துவத்தினர் மார்தட்டி சொல்லிக் கொள்வதுபோல் ஆயுர்வேத மருத்துவர்கள், ஆய்வு செய்ய முனைந்துள்ளனரா என்பது கேள்விக் குறியே” என்றும் கவலை கொண்டார். (op.Joggi, p.334)
வைத்தியர் ராஜ் மோகன்ராய் வங்காள கவர்னர் சர் சார்லஸ் எலியட்டிடம் ஓர் ஆயுர்வேதக் கல்லூரியை ஆரம்பிக்க ஆதரவு கோரினார். இதற்கு அவர் இசைவு தெரிவிக்கவில்லை. ஆனால், 1926ஆம் ஆண்டிற்குப் பிறகு விடுதலைப் போராட்டம் சூடு பிடித்த பின்னரே சுதேசி மருத்துவத்தை உயிரூட்ட சில சலுகைகள் வழங்கப்பட்டன.
இதற்கு அப்போது லக்னவ் மருத்துவக் கல்லூரி உயிரியங்கியல் துறைப் பேராசிரியர் டாக்டர் பர்ரிட்ஜ் (Dr.Burridge) ஆயுர்வேதம் மற்றும் யூனானி வளர்ச்சிக்கு அளிக்கப்படும் நிதி, நவீனப் போருக்கு உதவிட அம்பையும் வில்லையும் கொடுப்பதற்கு ஒத்தது என்று கேலி பேசினார். இதனைக் கண்ணுறும் போது, மேலை மற்றும் சுதேசி ஆகிய இரண்டு முறைகளையும் இணைக்கவோ அல்லது சுதேசி மருத்துவத்தை இன்றைய நிலைக்குக் கொணரக் கூடிய விதத்தில் புதுப்பிக்கவோ இருவரும் விரும்ப வில்லை என்பது வெள்ளிடை மலையாகத் தெரிகிறது. 1820இல் சுதேசி மருத்துவக்கல்லூரி ஆரம்பிக்க இருந்த வேகம் அதன்பிறகு இல்லை என்பதும் வெளிப்படையாகத் தெரிகிறது.
சாதியத்தில் தலையிடாதே - அரசு கவனம்
மருத்துவக் கல்வியைப் பொறுத்தமட்டில், 1850-51 Board of Education அறிக்கையின்படி என்ன கற்பிக்க வேண்டும், எப்படி கற்பிக்க வேண்டும் என்பது 1835ஆம் ஆண்டில்தான் தெளிவானது. ஆனால் 1835இல் யாருக்குக் கற்பிக்க வேண்டும், ஏன் கற்பிக்க வேண்டும் என்பது காலனி அரசிற்கு விடுவிக்கப்படாத கேள்வியாகவே இருந்தது.
இந்த அறிக்கையின்படி ஒரு சிறிதளவே கல்வி அளிக்க அரசு முனைந்துள்ளது என்பது தெளிவாகிறது. அதுவும் உயர்சாதியினருக்கு ஐரோப்பிய அறிவியலைக் கற்பிப்பது என்பது மேலை இலக்கியங்களை அவர்கள் நாட வழி அமைக்கவே ஆகும் என்பதும் அவர்கள் எண்ணமாக இருந்தது.
இந்நிலையில் மிஷினரிகள் கீழ்தட்டு வர்க்கத்திற்கு, கல்வி அளிக்க முன்வந்தாலும், அரசு முன்வரவில்லை. இதைப்பற்றி எல்பின்ஸ்டன் குறிப்பிடுகையில் கவனமாக நாம் கல்வியை ஒரு புதிய வகுப்பினருக்கே அளிக்க வேண்டும், இது பிராமணர் அல்லது பிராமணர் களை ஒத்தவர்களுக்கே அளிக்க வேண்டும். அரசு, எல்லோருக்கும் கல்வி என்பதை விதியாகக் கொள்ளத் தேவையில்லை. ஜாதி பாகுபாட்டில் நாம் தலையிடத் தேவையில்லை. அது அப்படியே இருக்கட்டும் என்றார். ஆக, அரசு சமூகத்தினூடே தலையிடாக் கொள்கையைக் (Social Non Interference Policy) கடைப்பிடித்தது. இது போலவே, மருத்துவக் கல்வி என்பதும் ஒரு சமூக மாற்றத்திற்கு என்பதற்குப் பதிலாக, காலனி அரசை மேலும் வலுப்படுத்தக் கூடிய விதத்திலேயே அமைந்தது.
சுதேசி மொழியும் - சாதீயமும்
இதற்குச் சான்றாக, ராணுவத்தில் ஆங்கிலம் பயிற்றுமொழியாக உயர்சாதியினருக்கும், சுதேசி மொழி தாழ்த்தப்பட்டவர்களுக்குமாக இருந்தன. மேலும் அரசு பரம்பரை வைத்தியத்தை மேம்படுத்த விரும்பவில்லை. ஏனெனில், சுதேசி மருத்துவம் வழக்கற்ற, நாகரிக வளர்ச்சியற்ற காலத்தில் தோன்றியது என எண்ணினர். 1835இல் ஆர்ய சமாஜம் மற்றும் அஞ்சுமன் பஞ்சாப் இயக்கத்தின் தூண்டுதல் காரணமாக லாகூர் மருத்துவக் கல்லூரியில் உள்நாட்டு மொழியில் மருத்துவம் வழங்கப்பட்டது. ஏனெனில் இவ்வியக்கத்தினர் சுதேசிக் கல்லூரி, சுதேசிப் பல்கலைக்கழகம் என்ற கொள்கையை வலியுறுத்தியதால் அதன் விளைவாக லாகூர் மருத்துவக் கல்லூரிகளில் உள்நாட்டு மொழிக்கல்வி புகுத்தப்பட்டது. ஆனால் இக்கல்லூரிகளில் சரியான பாடத்திட்டங்களுடன் கல்வி கற்பிக்கப்படவில்லை. இவ்வகுப்புகளில் பயின்ற மராட்டா பிராமணர்கள் 1871இல் நாக்பூர் மருத்துவப் பள்ளியில் உடல்கூறு படிக்க, சவப் பரிசோதனைப் பயிற்சிக்குத் தங்களை உட்படுத்திக் கொள்ளாது படித்து வந்தனர். ஆக இவ்விடர்பாடுகள் காலனி அரசிற்கு முழு மருத்துவக் கல்வியை அளிக்க இயலாததாக இருந்தது. மேலும், சுதேசி வழி படித்தவர்கள் காலனி அரசிற்கோ இராணுவத்திற்கோ பயன்படாதவர்களாக இருந்தனர்.
1890இல் ஒரு இராணுவ மருத்துவ மாணவருக்கு ரூ.952/-ம், மற்றவர்களுக்கு ரூ.144/-ம் படிக்க பணம் செலவானது. இதில் இராணுவ மாணவர்க்கான செலவை முழுவதும் அரசே ஏற்றுக் கொள்ள வேண்டியதாக இருந்தது. மற்ற மாணவர்களிடம் பணம் உதவியாகவோ அல்லது கட்டணமாகவோ பெறப்பட்டது. மேலும் இந்தியாவில் உள்ள கல்லூரிகளில் ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு விதமான செலவினங்கள் இருந்தன. இச்செலவுகள் இராணுவத்திற்கான பண ஒதுக்கீட்டைப் பாதிக்கக்கூடும் என அரசு நினைத்தது.
எல்.எம்&எஸ்., எம்.டி., படித்தவர்களைப் பெரும் நகரங்களிலும், தனிப்பட்ட ஆலோசனை வழங்கவும், அரசு பணிக்கு அமர்த்த அரசு நினைத்தாலும், கிராமப்புறத்தில் உள்ள மருத்துவர்கள் மருத்துவக் கல்லூரியிலிருந்து படிப்பை முடிக்காதவர்களே பெரும்பாலும் நிறைந்திருந்தனர். இவர்களினால் நோயாளிகளுக்குத் தீங்கு ஏற்படுமே ஒழிய நன்மை விளையாது என டாக்டர் எம்.எல்.சர்க்கார் தன் மருத்துவ சஞ்சிகையில் எழுதியுள்ளார்.
மருந்தின் பயன்குறித்த பாடங்களை நடத்தாதே - மருந்து தயாரித்து விடுவார்கள் அரசு, மருந்தின் பயன்களைக் குறித்த பாடங் களை நடத்த ஆர்வம் காட்டவில்லை. 1890இல் ஒரு வகுப்பு நடத்த முற்பட்டாலும் அது ஆரம்ப கட்டப் பாடங்களையே கற்பித்தது. ஏனெனில், அதிக ஊக்கத்துடனோ அல்லது பெருமளவிலோ கற்பித்தால் இந்தியர்கள் மருந்து தயாரிக்க முனைந்து விடுவார்கள் என நினைத்தது. ஏனென்றால், கிட்டத் தட்ட எல்லா மருந்துகளும் ஐரோப்பாவிலிருந்தே இறக்குமதி செய்யப்பட்டன. ஆனாலும், பிரிட்டிஷாரால் மேலாண்மை செய்யப்பட்டு, சென்னை, பம்பாய், கல்கத்தாவில் மிகக் குறைந்த அளவு மருந்து தயாரிக்கப் பட்டது. ஆக, 19ஆம் நூற்றாண்டுவரை எந்த மருந்துத் தயாரிக்க முனைந்தாலும் அதனை ஏகாதிபத்திய அரசு ஆதரிக்காது, ஒட்டுமொத்தமாகத் தடுத்து நிறுத்தியது.
சுதேசி மொழியில் ஆரம்பிக்கப்பட்ட மருத்துவக் கல்லூரி ஆங்கிலமொழி வழிக் கல்லூரிகளுக்கு முதலிடம் கொடுத்து அதற்கான தேவையை அதிகரித்ததன் விளைவாக சுதேசி மொழிக் கல்லூரி களை ஒவ்வொன்றாக, காலனி அரசு மூடியது. இதற்கு எதிர்ப்புத் தெரிவிக்க அல்லது சுதேசி மருத்துவத்தை மொழிபெயர்த்துக் கொடுக்க, படித்த இந்திய மக்கள் ஜப்பானியரைப்போல் முன்வரவில்லை. இது அவர்கள் தங்கள் கலாச்சாரத்தின் பேரில் கொண்ட பிடிப்பின்மையைக் காட்டியது.
மேலும் இந்தியாவில் ஆட்சி செய்த அரசர்களும், ஹைதராபாத் அரசரைத் தவிர மருத்துவக் கல்வி அளிக்க முன்வரவில்லை. காலனி அரசு எடுத்துக் கொண்ட முயற்சியைக் கூட இவ்வரசர்கள் எடுத்துக் கொள்ளவில்லை. ஆனால் இவ்வரசர்கள் தேவையான பிரிட்டிஷ் மருத்துவர்களைத் தங்களுக்குத் தேவைக்குத் தகுந்தபடி வைத்துக்கொண்டு, மக்களைப் பற்றிக் கவலைப்படவில்லை. இது 1920இல் பிரஜா மண்டல் இயக்கம் தொடங்கும்வரை தொடர்ந்தது.
பிரிட்டிஷார் இந்தியர்களை விஞ்ஞானத்தில் மற்றும் மருத்துவத்தில் உலகில் நடைபெறும் விஞ்ஞான மாற்றங்களுக்கும் ஆய்வுகளுக்கும் உட்படாது இருக்க புறந்தள்ளியே வைத்தனர். ஆகவே, கல்வி மற்றும் ஆய்வில் இந்தியப் பல்கலைக்கழகங்கள் சிறப்பான முறையில் தனித்து நின்றே தன் பணிகளை மேற் கொள்ள முனைந்தன.