raj gowtham book 450 copyதமிழ் இலக்கிய வரலாற்றில் புதிய மலர்ச்சியைத் தோற்றுவித்தவர் மகாகவி பாரதி. தனது புதிய தமிழின் வாயிலாக உள்ளடக்கத்திலும், உருவத்திலும், வெளிப்பாட்டிலும் புரட்சிகரமான மாற்றங்களை நிகழ்த்தியவர் அவர். அவருடைய தாக்கங்கள் தமிழ் மொழியைப் புதுப்பித்து, கவிதை, கட்டுரை கதை, வடிவங்களில் வியக்கத் தகுந்த மாற்றங்களைத் தோற்றுவித்தன.

அவருடைய படைப்புக்களின் வாயிலாக, அன்றைய சமுதாய, பொருளாதார, அரசியல், கலை, இலக்கியம் போன்றவற்றின் சமகால நிலைமைகளை அறிந்துகொள்ள முடிகிறது. அவருடைய வாழ்க்கை பற்றிய கண்ணோட்டத்தை முன்வைத்துத் தமிழ் மொழியில் உன்னதமான இலக்கியப் படைப்பாளிகள் தோன்றி வளர்ந்தார்கள். அவர்களில் முதன்மையான வர்கள் ‘மணிக்கொடி’ எழுத்தாளர்கள். பாரதியின் சீடரான வ.ரா அவர்களின் தொடர்ச்சியான முயற்சியால் அவர்கள் உருவானார்கள். அவர்களில் குறிப்பிடத்தகுந்தவர் சொ.விருத்தாசலம் என்னும் புதுமைப்பித்தன். இவரும் தமிழ் இலக்கியத்தில் மாறுபட்ட கண்ணோட்டத்தில் பல புதுமைகளைச் செய்தவர்.

இவரது நண்பரான இலக்கிய மேதை தொ.மு.சி.ரகுநாதன் இவரைப் பற்றிய ஒரு தனி வரலாற்று நூலையே எழுதி இவரது தனித் தன்மையை உள்ளும், புறமுமாக வெளிப்படுத்தி உள்ளார். புதுமைப்பித்தனைத் திறனாய்வு செய்பவர்கள் தொடர்ந்து இந்த வரலாற்றைப் பயன்படுத்தி வருகிறார்கள். அவர் புதுமைப் பித்தனைப் பற்றிய தனித்தன்மையை தெளிவாக இப்படிக் குறிப்பிடுகிறார்: “புதுமைப்பித்தன் தமிழ்நாட்டின் சிறந்த கதாசிரியர். எனினும் தமது மேதமையைத் தமிழ்நாடு உணரச் சக்தியற்றுக் கிடக்கிறதே என்ற ஏக்கம் புதுமைப் பித்தனுக்கு இருந்ததுண்டு. ஆனால், இன்று அவரது மறைவுக்குப் பின் தமிழ்நாடு அவரைப் போற்றிப் புகழ்கின்றது. விழாக் கொண்டாடுகிறது. உண்மை யிலேயே அவரது மேதமையைத் தமிழ்நாடு உணர்ந்து கொண்டுவிட்டது என்று நாம் நம்பினால் புதுமைப் பித்தன் கூறிய மாதிரி அவர் ஆயிரம் வருடகாலம் பிந்திப் பிறந்தவர் அல்ல. ஐந்து வருடகாலமே பிந்திப் பிறந்துவிட்டார் என்று சொல்லக்கூடும்.”

“புதுமைப்பித்தன் இருபதாம் நூற்றாண்டின் தமிழ் இலக்கிய உலகிலே ஒரு தனி ஜாதி; தனி ஜோதி.”

இதை மிகத் தெளிவாகவே தனது, ‘புதுமைப் பித்தன் வரலாறு’ என்ற நூலில் தொமு.சி.ரகுநாதன் நிறுவுகிறார். “ஒரு முறை நான் அவரிடம், ‘ பிரம்ம ராட்சஸ்’ என்ற கதையைப் பற்றிப் பேசினேன். “அந்தக் கதையில் என்னதான் சொல்ல விரும்பு கிறீர்கள்; அதில் என்னவோ ஏழு சஞ்சிகளைப் பற்றி வேறு சொல்கிறீர்கள் எதுவும் புரியவில்லையே” என்று ஆரம்பித்தேன், முதலில் அவர் அந்தச் சஞ்சி களை என்னவென்று விளக்கவே தொடங்கிவிட்டார். “இந்த விளையாட்டெல்லாம் வேண்டாம். அந்தக் கதையை ஏன் எழுதினீர்கள்? நோக்கம் என்ன?” என்று நேராகவே கேட்டேன். உடனே அவர் சரசர வென்று சிரித்தார். பிறகு சொன்னார். “பச்சையாகச் சொல்லட்டுமா? வார்த்தைகளை வைத்துக்கொண்டு வாசகனைப் பயங்காட்டி மிரட்ட முடியும் என்பதற் காகவே அதனை எழுதினேன். படித்தால் பயமாக இருக்கிறதல்லவா?” என்று கூறி முடித்துவிட்டார் அவர்.

அந்தக் கதையில் உள்ள ‘பிரம்மராட்சஸ்’ என்ற குறியீட்டை முன்வைத்து ராஜ்கௌதமன், தற்போது “புதுமைப்பித்தன் என்னும் பிரம்மராக்ஷஸ்” என்ற ஒரு திறனாய்வு நூலைச் சிறப்பாக எழுதியுள்ளார். அதற்கான அடிப்படையையும் இவர் தெளிவுபடுத்து கிறார்.

“புதுமைப்பித்தன் சிந்தனையைக் கலையாக்கும் கலைஞன்.” கலைப்படைப்பு அவரது சிந்தனை - கற்பனையின் பிழிவு மேலோட்டமாக வாழ்க்கையைப் பார்த்து, நடக்கின்ற எதார்த்தத்தை இலக்கியப் படைப்பில் அவர் பிரதிபலிக்கவில்லை. அறிவு இகந்த விளிம்பில் தம்மை நிறுத்திக்கொண்டு அறிவார்ந்ததாகச் சொல்லப்படுகின்ற எதார்த்த வாழ்க்கையை அவதானிக்க முயன்றுள்ளார். இதனால் தான் இவர் கதைகளில் வேதாளம் பேசுகிறது, கல்லுக்கு உயிர்வந்து மீண்டும் கல்லாகிறது, மூட்டைப்பூச்சிகள் சாம்ராஜ்யம் நடத்துகின்றன. கடவுள் கந்தசாமிப்பிள்ளை வீட்டுக்கு அதிதியாக வருகிறார். வாதவூராரின் வேதனை வைகைப் பெரு வெள்ளமாகக் கரைபுரண்டு ஓடுகிறது. கிழவியுடன் எமன் தோற்றுப் போகிறான். அந்தக் காலத்தில் புதுமைப்பித்தனைத் தவிர வேறு எந்தப் படைப்பாளி யிடமும் இந்த விதமான ‘அபத்த’ அம்சங்களைப் பெரிதும் காண இயலாது.

“அறிவால் சிக்குண்ட அறிவிகந்த அம்சங்களைக் கொண்ட இந்த மனித இன வாழ்க்கையை எப்படித் தாக்குப் பிடிப்பது, எப்படி அணுகினால் மனதில் காயம்படாது என்பதைப் புதுமைப்பித்தன் எப்படியோ தெரிந்து வைத்துள்ளார். அவருடைய கதைகளில் இந்த உபாயத்தை உணர முடியும். புதுமைப்பித்தன் படைப்புக்களை இப்போது வாசிக்கிறபோது இந்த விஷயம் புலப்படுகிறது. 1970களின் தொடக்கத்தில் வாசித்தபோது இது புலப்படவில்லை. பிரதி அதேதான். ஆனால், புலப்பாடு வேறாகிவிட்டது. ‘புதுமைப்பித்தன் எனும் பிரம்மராக்ஷஸ்’ என்ற இந்நூலை எழுத இதுதான் காரணம். புதுமைப் பித்தன் படைப்புக்களைப் பொறுத்தவரை ஒரு விமர்சகனாக இருப்பதைவிட ஒரு வாசகனாக இருப்பதே சந்தோசமாக இருக்கிறது. எனது ‘அறம் அதிகாரம்’ (அக்டோபர் 1997) என்ற நூலுக்குப் பிறகு வெளிவரும் இந்நூல் புதுமைப்பித்தனைப் பற்றிய புதிய அறுதி உண்மைகளைப் பற்றியோ, புதுமைப் பித்தனின் இன்னொரு முகத்தைப் பற்றியோ பேசவில்லை. புதுமைப்பித்தனின் வாசகன் என்ற நிலையில் அவர் படைப்பினூடாகப் பயணம் செய்கிறபோது எதிர்பாராமல் எனக்குள்ளே எங்கோ ஒரு மூலையில் ஒரு புதுமைப்பித்தன் நிழலாடுவதை உணர முடிந்தது. அந்த நிழலை நெருங்கும் ஒரு முயற்சியாக இந்த நூலைக் கருதுகிறேன்!”

தனது ஆழ்ந்த விருப்பத்தையும், ஈடுபாட்டையும் அடிப்படையாகக் கொண்டு நேர்மையாக இந்த நூலில் புதுமைப்பித்தனை அடையாளப்படுத்துகிறார் ராஜ் கௌதமன்: “இந்த நூலின் ஆக்கம் பற்றிச் சில வார்த்தைகள், பதினொரு தலைப்புகளில் புதுமைப் பித்தனின் சிந்தனை, படைப்பு அம்சம் ஆகியவை விவாதிக்கப்பட்டுள்ளன.”

அதே சமயத்தில் புதுமைப்பித்தன் தன்னுடைய படைப்புக்களைக் குறித்துச் சொன்ன கருத்தையும் முன்வைக்கிறார். “வேதாந்திகள் கைக்குள் சிக்காத கடவுள் மாதிரிதான் நான் பிறப்பித்து விட்டவைகளும். அவை உங்களுடைய அளவுகோல்களுக்குள் அடங்கா திருந்தால் நானும் பொறுப்பாளியல்ல. நான் பிறப்பித்து விளையாட விட்டுள்ள ஜீவராசிகளும் பொறுப்பாளி அல்ல; உங்கள் அளவுகோல்களைத் தான் என் கதைகளின் அருகில் வைத்து அளந்து பார்த்துக் கொள்கிறீர்கள் என்று உங்களுக்குச் சொல்லிவிட விரும்புகிறேன்.”

தொடர்ந்து, ராஜ் கௌதமன் புதுமைப்பித்தனின் தனித்தன்மையை அடையாளப்படுத்துகிறார்: புதுமைப் பித்தன் எந்தக் கட்சிக்குள்ளும் மாட்டிக் கொள்ளாதவர். அவருடைய ஆதார சிந்தனை இதுதான். அவர் காலத்திய ஏகாதிபத்திய வல்லாண்மைக் கருத்துக்கள், சோசலிசக் கருத்துக்கள், கலை, இலக்கியம் பற்றிய புதிய விமர்சனக் கருத்துக்கள், ஏக தேசியம் பேசிய இந்துத்துவக் கருத்துக்கள், பெரியாரின், காந்தியின் கருத்துக்கள், ஆசார சீர்திருத்தக் கருத்துக்கள், சித்தர் மரபில் வந்த சிந்தனைகள், சைவ வேளாளத் தாக்கங்கள், கீழை - மேலை நாத்திகக் கருத்துக்கள் ஆகிய அனைத்தும் அவரை வெவ்வேறு அளவுகளில் பாதித்தன. ஆனால், இவை எவற்றிலும் ஆற அமரத் தங்கிக் கூடாரம் போட்டுக் கோசம் போடவில்லை.” இதை மேலும் அவர் தெளிவுபடுத்துகிறார். “ஏனெனில், மனிதர்கள் வாழும் வாழ்க்கை மேற்கூறிய கருத்துக்களின் தர்க்கப்படி நடப்பதில்லை என்பதைப் பதுமைப் பித்தன் உணர்ந்து கொண்டவர். சராசரி மனிதனை இயக்குவதில் மேற்படி அறிவுசார் விசயங்களைவிட, மனம், நம்பிக்கை சார்ந்த விசயங்களே முக்கியப் பங்கு வகிக்கின்றன. இதனால், தவறுகளும், பலவீனங்களும், பிரமைகளும் மனித இருத்தலுக்கான தர்க்கம் கடந்த காரணிகளாக இருந்து கொண்டிருக்கின்றன. இந்தப் பிரதேசத்தில் புதுமைப்பித்தன் அவ்வப்போது இளைப்பாறியிருக்கிறார். அவருடைய படைப்புக்கள் இந்தப் பிரதேசத்தில் அடித்தளம் கொண்டிருக்கின்றன.”

இவருடைய இந்தக் கருத்தைப் போலவே, தொ.மு.சி.ரகுநாதன் தன்னுடைய வரலாற்று நூலில் குறிப்பிடுவது நினைவுகூரத் தகுந்ததாக உள்ளது. “நான் அவரோடு பழகிய காலத்தில், அவர் சமூக அக்கறைகளைப் பற்றிப் பிரமாதமாகக் கவலை கொண்டார் என்றோ அவை பற்றிச் சிந்தித்தார் என்றோ சொல்ல முடியாது. ஆனால், சமூகத்தில் காணும் சிறுமைகளைக் கண்டு வருந்தும், மனம் குமையும், சினந்து சீறும் குணம் அவருக்கு என்றும் இருந்தது. ஆனால், இந்த உணர்வு பெரும்பாலும் மனப் புழுக்கத்துடனேயே நின்றுவிட்டது எனலாம்.”

தனது நூலில் ராஜ் கௌதமன் தன்னுடைய கலை இலக்கியக் கண்ணோட்டத்தைத் தொடக்கத்தி லேயே தெளிவுபடுத்துகிறார். “பொதுவாகக் கலை, இலக்கியம், சிறுகதை, கவிதை பற்றிய எண்ணங்கள் படைப்பின் சூட்சுமம்; அறிவியலுக்கும் கலை, இலக்கியத்திற்கும் மற்றும் வாழ்க்கைக்கும், கலை, இலக்கியத்திற்கும் உள்ள உறவுகள், நடைமுறை உண்மைக்கும் கலை, இலக்கியத்திற்கும் உள்ள உறவு, நாகரிகம், அறுதி உண்மை, கொள்கை பற்றிய மதிப்பீடுகள் மற்றும் கொள்கைக்கும், மாந்தர்க்கும் உள்ள உறவு பற்றியவையாகும்”

முதலில், நவீன கலை, இலக்கியம் பற்றிப் புதுமைப்பித்தன் எழுதியவற்றை அறிவதற்குமுன், அவர் காலத்திற்கு முன் இலக்கியத்தரம் பற்றி நிலவிய மரபான கருத்துக்களைச் சுருக்கமாக முன்வைக்கிறார். இது, விமர்சகரின் வரலாற்று உணர்வை இனம் காட்டுகிறது.

தமிழகத்தில், நவீன இலக்கியம் பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் தொடங்கிய சூழலைக் குறிப்பிடுகிறார். நவீன நாவல் இலக்கியம் குறித்து பி.ஆர்.ராஜமையர் மற்றும் அ.மாதவையா ஆகியோரின் புரிதலைப் புலப்படுத்துகிறார். சிறுகதை வடிவத்தின் முன்னோடி வ.வே.சு. ஐயர்தான் என்பதை இவர் நிறுவுகிறார். தாகூரின் இலக்கியத் தாக்கத்தை எடுத்துக்காட்டுகளுடன் விளக்குகிறார். “கருத்துலகும், படைப்புலகும் ஒத்திசைவாக இயங்கும் ஒரு படைப்பாளியைத் தமிழில் காண்பது அபூர்வம். இவரைப் பற்றி எழுத்தாளரது எழுத்தாளர் என்று ஜி.நாகராஜன் என்ற மற்றொரு அபூர்வமான படைப்பாளி குறிப்பிடுவது வெறும் பாராட்டுரையல்ல. அதுதான் உண்மை” என்ற கருத்தை இங்கு ராஜ் கௌதமன் நிறுவுகிறார்.

அதன்பிறகு, புதுமைப்பித்தனும் சக எழுத்தாளர் களும் என்ற வகையில் ஓர் ஒப்பாய்வை நிகழ்த்திக் காட்டு கிறார். இவருடைய சக எழுத்தாளர்களான கு.ப.ரா, பி.எஸ்.ராமையா, மௌனி, சிதம்பரசுப்பிரமணியம், பிச்சமூர்த்தி, க.நா.சுப்ரமணியம், சி.சு.செல்லப்பா போன்ற இலக்கியப் படைப்பாளிகளைக் குறிப்பிட்டு இவருடைய தனித்தன்மையை விளக்குகிறார். மணிக்கொடி, கலைமகள் போன்ற இலக்கிய இதழ்களின் பங்களிப்பைக் குறிப்பிடுகிறார்.

கால இடைவெளி இருந்தபோதும் பாரதியோடு புதுமைப்பித்தனை ஒப்பிடுகிறார். “பாரதியோடு, புதுமைப்பித்தன் ஒத்துப்போகும் இடமும் உண்டு. முரண்படும் இடமும் உண்டு” என்று தகுந்த எடுத்துக்காட்டுக்களுடன் விளக்குகிறார்.

தமிழ் இலக்கியத்தில் இரண்டு வகையான போக்குகள் தோன்றி வளர்ந்த விதத்தை விளக்கும் ராஜ் கௌதமன் தன்னுடைய முடிவைத் தெளிவு படுத்துகிறார்:

“ஒரே காலத்தில் முனைப்போடு எழுத்தில் ஈடுபட்ட புதுமைப்பித்தனையும், கல்கியையும், தனிமனிதர்கள் என்பதற்கும் அப்பால், நவீன எழுத்தில் இரண்டு பரிணாமங்களைப் பிரதிநிதித்துவம் செய்த இரு போக்குகளாகக் கொள்ளவேண்டும்.”

அடுத்து, ‘சைவ (வேளாள) மரபுக் கூறுகள்’ புதுமைப்பித்தனின் படைப்புக்களில் வெளிப்பட்டுள்ள தன்மைகளை இவர் ஆய்வு செய்கிறார்: “புதுமைப் பித்தன் சைவ - வேளாள - இந்துப் பெருமரபில் ஊறியவர் என்பதை, புறச் சமயங்களான கிறிஸ்துவம், இசுலாம், சமண - பௌத்தம் பற்றி அவர் எழுதிய கருத்துக்கள் வழியாகவும் அறிய முடியும்.”

சமயம் குறித்த புதுமைப்பித்தனின் கண் ணோட்டத்தை வாழ்வியலோடு ஒப்பிட்டு விளக்கிய ராஜ் கௌதமன் அதைக் குறித்த தனது முடிவான கருத்தை முன்வைக்கிறார்: “தர்க்கத்தின் வறட்டுத் தனமான ஆதிக்கம் கொண்டவையாக ஜைன - பௌத்த மதங்களைக் கொள்கை அடிப்படையில் விமர்சித்துள்ளார். சைவ மதத்தின் பக்தி எழுச்சிக் காலத்து உணர்ச்சிகளும், பாவங்களும் ததும்பிய கலை வடிவங்களை ரசித்துத் தமது சொந்தப் படைப்பு முயற்சிக்குரிய உத்வேகத்தைப் பெற்றவர் புதுமைப்பித்தன் என்பதை நினைத்துப் பார்க்க வேண்டும்.”

இதைப் போலவே, இசுலாமிய, கிறிஸ்துவ மதங்களின் கருத்துக்களைப் புதுமைப்பித்தன் ஆய்வு செய்துள்ளார். அவை பரவிய முறைகளையும் மதமாற்ற முயற்சிகளையும் புறக்கணித்தார். அதற்குக் காரணமாக இருந்த ஏகாதிபத்திய ஆட்சி முறையை புதுமைப்பித்தன் புறக்கணித்தார். அதைக் குறித்த கருத்தை விமர்சகர் இவ்வாறு குறிப்பிடு கிறார்: “மாற்றம், இயக்கம், உரிமைப் போராட்டம், சீர்திருத்தம் ஆகியவற்றிற்குப் பல சந்தர்ப்பங்களில் போதிய ஊக்கமோ, ஆர்வமோ காட்டாத புதுமைப் பித்தன் ஏகாதிபத்தியத்தின் செருக்கையும், அசட்டுத் தனங்களையும், உண்மைக்கும் அறிவுக்கும் மொத்த உரிமைகோரும் அதன் ஏகபோகத்தையும் தமது கதைகள் சிலவற்றில் கேள்விக்கு உட்படுத்தித் திகைக்க வைத்துள்ளார்.”

வாழ்வியல் பற்றிய புதுமைப்பித்தனின் மதிப்பீடு களை அவருடைய படைப்புக்களில் வெளிப்படும் தன்மைகளைக் குறித்து ராஜ் கௌதமன் தனது கருத்தை முன்வைக்கிறார்:

“புதுமைப்பித்தன் தமது கதைகளில் செய்துள்ள கிண்டல்கள் சும்மா விகடத்துக்காக இல்லை. என்பதைக் கூர்ந்து பார்த்தால் உணரலாம். அவருடைய விமர்சனங்கள் எல்லாமே பெரிதும் எள்ளல், அங்கதம், பகடி, நக்கல் வடிவங்களில் வெளிப் படுவதாகக் கொள்ளலாம். அவருடைய கதைகளில் அவர் வைக்கும் சிந்தனைப் பூர்வமான விமர்சனக் கருத்துக்களின் பச்சையான இருப்பினை இந்த எள்ளல், அங்கதச் சுவைகள் மறைத்துவிடுகின்றன.”

கலைக் கண்ணோட்டத்தில் புதுமைப்பித்தனின் ‘முரண்பார்வைகள்’ எப்படியெல்லாம் வடிவம் பெறுகின்றன என்பதையும் விளக்குகிறார்: “முரண் பார்வை என்றால் கருத்துக்களையும், உணர்ச்சி களையும், பொருட்களையும் பாத்திரங்களையும், சம்பவங்களையும் வேறுபட்ட முரண்களாகக் காண்பதாகும், புதுமைப்பித்தனின் கதைகளில் இந்தப் பார்வை முழுமையாக இயங்குகிறது.

தொடர்ந்து புதுமைப்பித்தன் எவ்வாறு தனது கண்ணோட்டத்தில் ‘மறுபடைப்புக்களை’ உருவாக்கு கிறார் என்பதையும் விமர்சகர் விவரிக்கிறார். “புதுமைப்பித்தன் பழைய - புராண - இதிகாச இலக்கியத் தகவல்கள், மாந்தர், நிகழ்ச்சிகளை நவீனச் சிறுகதைகளாக மறுபடைப்புச் செய்கிறபோது, அவற்றைப் பகுத்தறிவு, தர்க்க அறிவு ஆகியவற்றின் முழுக்கட்டுப்பாட்டுக்குள் அடங்கிவிடாதவாறு பார்த்துக்கொள்கிறார். பௌராணிக கற்பனைகளோடு நவீனத்துவ கற்பனைகளைக் கலாபூர்வமாக உரையாடச் செய்கிறார். அறிவும், சிந்தனையும் சற்று அடக்கி, கற்பனையும், ரசனையும் மேலெழச் செய்கிறார். அன்றைய மறுமலர்ச்சிக் காலத்தின் பகுத்தறிவின் உத்வேகத்தில் அவருடைய மறுபடைப்புக்கள் தோன்றினாலும், இவை பகுத்தறிவின் முழு ஆதிக்கத்துக்குள் அகப்பட்டுக் கொள்ளவில்லை என்பதுதான் புதுமைப்பித்தனின் ‘சிருஷ்டி ரகசியம்.’

மேலும், புதுமைப்பித்தனின் கதை சொல்லும் முறைகள் சிலவற்றைப் பற்றி இவர் தனது கணிப்பை முன்வைக்கிறார். “மிகக் காத்திரமான சிந்தனை கொண்ட புதுமைப்பித்தன், சிறுகதைகளைப் படைத்தபோது அச்சிந்தனையைக் கதை சொல்லும் முறைகள் மூலம் அடங்கச் செய்துள்ளார். சிந்தனையைச் சிறுகதையாக்குவதில் அவர்காலத்தில் அவருக்கு ஈடு இணை அவரேதான்”

பத்தொன்பதாவது நூற்றாண்டு இறுதியிலும், இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்திலும் இந்திய தேசிய காங்கிரஸில் ஆசார சீர்திருத்தங்களை ஆதரிக்கும் பிரிவும், எதிர்க்கும் பிரிவும் அவ்வப்போது மோதிக் கொண்டன. அந்தச் சூழலில் தனது படைப்புக்களை உருவாக்கிய புதுமைப்பித்தன் எடுத்துக் கொண்டது ஆசாரச் சீர்திருத்தப் பிரச்சினைதான் என்றாலும், அதற்கு அப்பாலும் செல்லுகிறார். கட்டுரை ஒன்றில் இலக்கியம், எதார்த்த உலகம் பற்றி எழுதும்போது, தர்மமானது இலக்கியத்தில்தான் வெற்றி பெறு வதாகக் காட்டமுடியும். எதார்த்த உலகத்தில் அல்ல என்று குறிப்பிடுகிறார்.

தலித்துக்களைப் பற்றிய தனது படைப்புக்களில் புதுமைப்பித்தனின் தனித் தன்மையை ராஜ் கௌதமன் இப்படி மதிப்பீடு செய்கிறார்: “தலித்துக்கள் பற்றிப் படைத்த தலித் அல்லாத படைப்பாளிகளில் புதுமைப் பித்தன் குறிப்பிடத்தக்கவர். பாதித்தவர்களைப் பற்றி எழுதும்போது செய்த நையாண்டித் தனங்களைப் பாதிக்கப்பட்டவர்களின் துயரங்கள், இழிவுகள் பற்றி எழுதும்போது செய்திருப்பது புதுமைப்பித்தனின் தனிப்பாணி என்றுதான் சொல்ல வேண்டும்.”

கடைசியாக, புதுமைப்பித்தன் எழுதிய “அன்னை இட்ட தீ” நாவல் குறித்து தனது மதிப்பீடு களை ராஜ் கௌதமன் முன்வைத்து விளக்குகிறார்: அதன் சிறப்பான அம்சங்களையும் அடையாளப் படுத்துகிறார். ‘அன்னை இட்ட தீ’ என்ற நூலில் இதுவரை வெளிவராத புதுமைப்பித்தனின் ஒருசில கதைகள், இரண்டு அதிகாரங்களோடு பூர்த்தி பெறாத அவரது ‘அன்னை இட்ட தீ’என்ற நாவல் மற்றும் கட்டுரைகள், மதிப்புரைகள், கடிதங்கள், விவாதங்கள் ஆகியவை சிறந்தமுறையில் தொகுக்கப்பட்டுள்ளன.”

தொடர்ந்து, ராஜ் கௌதமன் இந்த நூலின் சிறப்பைப் பற்றிக் குறிப்பிடுகிறார். “அன்னை இட்ட தீ தொகுப்பில் உள்ளவை, புதுமைப்பித்தனின் அறியப்படாத முகத்தை அறிந்து கொள்ளவும், அவருடைய கருத்தியல் என அறியப்பட்டதை அவருடைய படைப்புக்கள் வழியாக வரையறை செய்யவும் உதவுகின்றன.”

Ôபுதுமைப்பித்தன் எனும் பிரம்மராக்ஷஸ்’ என்ற ஆய்வு நூலை ஆழ்ந்த ஈடுபாட்டுடன் ராஜ் கௌதமன் வடிவமைத்திருக்கிறார். தமிழ் இலக்கிய வரலாற்றில் புதிய பரிமாணங்களை உருவாக்கிய புதுமைப்பித்தனை ஆழமாகப் புரிந்து கொள்ள உதவும் இந்த நூல் திறனாய்வு முறைக்க ஓர் எடுத்துக்காட்டாக உள்ளது. புதுமைப்பித்தனின் தனித் தன்மைக்குள் அடங்கியுள்ள மாறுபட்ட பரிமாணங்களை விருப்பு வெறுப்பு இல்லாமல் விரிவாகவும், ஆழமாகவும் இனம் கண்டு அடையாளப்படுத்துகிறார். இது ஒரு சிறந்த ஆய்வு நூல் என்று உறுதியாகக் குறிப்பிட்டுச் சொல்லலாம்.

தனது இலக்கியப் படைப்பு முயற்சியைக் குறித்து புதுமைப்பித்தன் தனது முன்னுரை ஒன்றில் குறிப்பிட்டது நினைவுக்கு வருகிறது. “வாழையடி வாழையாக வரும் எவனோ ஒரு ரசிகனுக்காக நான் எழுதுகிறேன்.” அந்த வாசகன் புதுமைப்பித்தனைத் தெளிவாகவும் ஆழமாகவும் புரிந்துகொள்ள இந்த நூல் உதவும்.

புதுமைப்பித்தன் எனும் பிரம்மராக்ஷஸ்
ராஜ் கௌதமன்
வெளியீடு: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட்.,
41-பி, சிட்கோ இண்டஸ்ட்ரியல் எஸ்டேட்
அம்பத்தூர், சென்னை - 600 098.
` 160/-
போன் : 044-26359906

Pin It