கொங்குப்பகுதியில் வசூலித்த வரிகள், தானியங்கள், கல்நடைகள், இத்தியாதிகளுடன் 1782ல் மைசூர் புலி ஹைதர் அலியின் திவான் முகமது அலி வருகின்றான். தீர்த்தகிரி என்ற 25 வயது நிரம்பிய இளைஞன் தலைமையில் ஒரு இளைஞர் படை வழிமறித்து நிற்கின்றது.

யார் நீ ? திவானின் அதிகாரக் கேள்வி எழுகிறது. சிவன்மலைக்கும், சென்னிமலைக்கும் இடையில் உள்ள சின்னமலை என்று உரிமைக்குரல் நீள்கிறது. இது மைசூருக்கு கட்டுப்பட்ட ஆட்சி என்கிறான் திவான். இங்கு எங்களாட்சி தவிர வேறு எந்த ஆட்சியும் செல்லாது என்று தீர்த்த கிரி தீர்மானமாக பதில் தருகிறான். தொடர்ந்து வரிப்பொருட்களை பறித்து மீண்டும் உரியவர்களிடம் ஒப்படைக்கின்றனர் தீர்த்தகிரியின் படையினர். வரிகளையும், அதிகாரத்தையும் திவான் இழந்து அவமானத்தைச் சுமந்து சென்றான்.

ஆம் கொங்குப் படுதியில் பழைகோட்டை பாளையத்தின் உரிமைக்காகவும், வெள்ளையருக்கு எதிராகவும் எழுச்சியுற்றபின் தீர்த்தகிரி, இவனது வீரத்தால் பிற்காலத்தில் தீரன் சின்னமலை என்றே அறியப்பட்டான். நான்குமுறை யுத்தகளத்தில் ஒரு முறை திவானையும், மூன்று முறை ஆங்கிலேயர்களையும் தோற்கடித்துள்ளான்.

1756ல் ஈரோட்டின் மேலப்பாளையத்தில் ஐந்து சகோதரர்களுடனும், ஒரு சகோதரியுடனும் பிறந்தான். குடும்பத்தின் மூத்தவனும், இளையவனும் பாளையத்தின் நிலங்களை பார்க்க இடையில் இருந்த தீர்த்தகிரியும் இருதம்பிகளும் நிர்வாகத்திலும், கிராமங்களிலும் பாதுபாப்பில் ஈடுபட்டனர். அப்பகுதி இளைஞர்களை திரட்டி உடற்பயிற்சி, பல்வேறு வித்தைகளை கற்பித்தனர். கிராமங்களின் வழிப்பறிகளை தடுத்து நிறுத்தினர். குடும்பப் பிரச்சனைகளைகளில் ஈடுபட்டு தீர்த்து வைத்தனர். பொதுத் தொண்டால் பாளையத்தில் புகழ்பெற்றனர். இதன் ஒரு பகுதிகளாகத்தான் திவானிடம் வரிகளை பறித்து மீண்டும் விநியோகித்தனர்.

வரிகளை பறிகொடுத்த திவான் சங்ககிரி சென்றான். தனது படைகளை திரட்டினான் தீர்த்தகிரி பாளையத்தின் மீது படையெடுத்து வந்தான். தகவல் அறிந்த தீர்த்த கிரி தனது பயிற்சி பெற்ற இளைஞர் படையுடன் காங்கேயம் நொய்யல் ஆற்றில் திவானின் படையை வழிமறித்து எதிர் கொண்டான். பாளையங்களை தாண்டியும் தீர்த்தகிரியின் கீர்த்தி பரவியது. தீர்த்தகிரியும் தனது படைபலத்தை 1000ம் ஆக உயர்த்தினான்.

தோல்வி அடைந்த திவான் மைசூருக்கு சென்று பெரும் படையுடன் திரும்ப நினைத்தான். ஆனால், அதற்குள் 1782ல் ஹைதர் அலி மரணம் அடைந்துவிட்டார். அவரைத் தொடர்ந்து அரியனை ஏறிய திப்பு சுல்தான் ஆங்கிலேயர்களை எதிர்க்க விரிவான அணியை உருவாக்கினான். கொங்கு நாட்டு தீர்த்த கிரிக்கும் அழைப்பு விடுத்தான். அண்டைய மன்னனின் ஆட்சியை ஏற்காத தீர்த்தகிரி அந்நிய ஆட்சிக்கு எதிராக போராடத்தயங்குவானா? தானும் இரு தம்பிகளுடனும், தனது நம்பிக்கைக்குரிய வீரர்கள் கருப்பன், வேலப்பருடனும், திப்புசுல்தானின் ஆங்கிலேய எதிர்ப்பு அணியில் இணைந்தான். 1000 பேர்கள் கொண்ட தீர்த்தகிரியின் படைக்கு திப்புவின் நண்பர்கள் பிரெஞ்சு தளபதிகள் பயிற்சி அளித்தனர். முறையான படைத்தளபதியாக உயர்ந்தான் தீர்த்தகிரி.

1799ம் ஆண்டு நடைபெற்ற மைசூர் யுத்தத்தில் தீர்த்தகிரியின் படைகள் மாளவல்லி என்ற இடத்தில் ஆங்கிலேயப்படையுடன் மோதியது. இப்போரில் ஆங்கிலப் படை பெருத்த சேதத்தை அடைந்தது. வெற்றி தீர்த்தகிரி பக்கம் இருந்தாலும் மைசூரில் நடைபெற்ற யுத்தத்தில் திப்புசுல்தான் உயிரிழந்தான். சட்டப்படி மைசூர் ஆங்கிலேயர் கைக்கு மாறியது. தீர்த்தகிரி ஆங்கிலேயருடன் மோதியபோது, அவனது நம்பிக்கைக்குரிய வீரன் வேலப்பன் ஆங்கிலேயர்களிடம் பிடிபட்டான். வேலப்பன் ஆங்கிலேயர்களின் ஏஜென்டாக இருப்பதாக கூறினான். அவர்களும் அதைஏற்று அவனை படையில் சேர்த்துக் கொண்டனர். ஆனால், வேலப்பன் அங்கிருந்து தீர்த்தகிரிக்கு தகவல் அனுப்பிக் கொண்டிருந்தான்.

தீர்த்தகிரி தனது படைபலத்தை பெருக்கினான் ஒடா நிலையில் கோட்டையை கட்டி முடித்தான். அங்கேயே ஆயுதங்களை உற்பத்தி செய்யத் துவங்கினான். பிரிட்டிஷாருக்கு, சேலமும், மலபாரும், மைசூரும் தங்கள் வசம் உள்ளபோது இடையில் உள்ள கொங்குப்பகுதி அவர்கள் வசம் இல்லாதது இடைஞ்சலாக இருந்தது.

தீர்த்தகிரிக்கு தூது அனுப்பி அவர்களுடன் இணைந்து வரிசெலுத்திட கோரினர். தீர்த்தகிரி தீர்க்கமாக மறுத்தான். எதிர்விளைவுகள் என்னவாக இருந்தாலும் சந்திக்க தயாரானான்.

மண்டியிட மறுத்த தீர்த்தகிரியை கைது செய்து வரும்படி கேப்டன் மக்கீஸ்கான் தலைமையில் காலாட்படையை அனுப்பியது. வேலப்பன் மூலமாக தகவல் அறிந்தான் தீர்த்தகிரி, நொய்யல் ஆற்றில் தனது படைகளுடன் காத்திருந்து வெள்ளையர் படையை எதிர்கொண்டு சிதறடித்தான் கேப்டன் மக்கீஸ் கானின் தலைதுண்டிக்கப்பட்டது. சினம் கொண்ட ஆங்கிலேயர்கள் கேப்டன் ஹாரிஸ் தலைமையில் 1802 குதிரைப் படைகளை அனுப்பியது. இப்படை ஓடாநிலையில் தீர்த்த கிரியின் படையுடன் மோதியது. தீர்த்தகிரி என்ற அந்ததீரன் சின்னமலையின் தனிதிறமை வாய்ந்த வீரத்தை யுத்தகளத்தில் நேரில் கண்டான். தனது படைகளுடன் சமாளிக்க முடியாமல் பின்வாங்கினான்.

எப்படியும் தீரன் சின்னமலையை வென்றே தீரவேண்டும் என்ற வெறியுடன் வெள்ளையர்கள் பெரும் பீரங்கிபடைகளை அனுப்பினர். வேலப்பன் மூலமாக தகவல் அறிந்த தீரன் சின்னமலை பின்வாங்கி பதுங்கிடத்திட்டமிட்டான். கருப்பனையும் மற்றவர்களையும் ஒரு பகுதியில் மறைந்திருக்க உத்தரவிட்டு, தான் இரு சகோதரர்களுடன் மற்றும் நல்லப்பன் என்ற சமையல் காரனுடன் பழனி கருமலை காட்டில் பதுங்கினான். ஒடாநிலை வந்து சேர்ந்த பீரங்கிப் படை கோட்டை காலியாக இருந்ததை கண்டு ஏமாந்தது. கோட்டையில் சோதனையிட்டதில் வேலப்பன் அனுப்பிய தகவல் குறிப்புகள் கண்டெடுத்து அதிர்ந்தனர். அந்த இடத்திலேயே வேலப்பனை சுட்டுபழிதீர்த்துக் கொண்டனர்.

எப்படியும் தீரன் சின்னமலையை பிடிப்பதில் தீவிரம் காட்டினர். தேடினர். பல அறிவிப்புகளை செய்தனர். ஆங்கிலேயர்களின் ஆசைவார்த்தைகளுக்கும், பணத்துக்கும் சமையல் காரன் நல்லப்பன் ஆங்கிலேயர்களை ஆயுதங்களுடன் சமையல் அறையில் தங்க வைத்தான். உணவிற்காக வந்த தீரன் சின்ன மலையையும், அவர்களது தம்பிகளையும் “நயமாக‘’ பேசி ஆயுதங்களை வெளியில் வைத்து, உள்ளே உணவருந்த அழைத்துச் சென்றான். காத்திருந்த கயவர்கள் இவர்களை கைது செய்தனர். அந்தோ “துரோகம்’’ மீண்டும் இங்கே அரங்கேறி தீரன் சின்னமலையின் யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவந்தது. இதை அறிந்த கருப்பனும் சரண் அடைந்தான்.

விசாரணைகள் நடந்தது, ஆங்கில ஆட்சியை ஏற்கவேண்டும் என்றனர். மண்டியிடுவதைவிட மரணமே மேலானது என முடிவெடுத்தான். விளைவு தூக்குத் தண்டனை 1805 ஜூலை 31  சங்ககிரியில் சாலையோர புளியமரத்தில் தீரன் சின்னமலை, அவரது இருசகோதரர்கள் கருப்பன் ஆகியோரை தூக்கிலிட்டனர். வெள்ளையர் காலத்தில் புளியமரங்கள் புளி கொடுப்பதைவிட விடுதலைப் போராட்ட வீரர்களின் உயிரெடுக்கவே அதிகமாக பயன்பட்டுள்ளது. தீர்த்த கிரியாக பிறந்து தனது வீரத்தால் பெரும் கீர்த்தி களைப்பெற்று தீரன் சின்னமலையாக இன்றும் வலம் வந்து கொண்டிருக்கிறான்.

Pin It