இந்தியத் துணைக் கண்டத்தில் மிகவும் செழிப்பான காவிரி பாயும் பிரதேசமாகிய தஞ்சாவூர் நாட்டை 1676 - 1855-ஆம் ஆண்டு வரை 12 அரசர்கள் ஆண்டு வந்துள்ளனர். இதில் 6 அரசர்கள் கலைகளைப் போற்றி வளர்த்தார்கள். இந்த அறுவரில் மூன்று அரசர்கள் தாங்களே பெரும் அறிஞர்களாகவும் இருந்து கலைகளை வளர்த்தார்கள்.

மராத்திய மன்னர்கள் - நாயக்கர்களைப் பின்பற்றிச் சமஸ்கிருதத்திற்கும், தெலுங்கிற்கும் முதலிடம் கொடுத்து, கற்றுத்தேர்ந்து, தமிழைப் புறந்தள்ளியதால், சைவ மதத்தினரைக் காப்பாற்றும் நிலையில் தமிழகத் திருமடங்கள், குறிப்பாகத் திருவாவடுதுறை ஆதீனம் தமிழை வளர்க்கும் நிலையில் இருந்தது. மாறாகத் தமிழ் மருத்துவத்தை வளர்ப்பதில் எந்த மதமும், திருமடங்களும் கவனம் செலுத்தவில்லை என்றாலும், அதன் வளர்ச்சிக்குத் தடை செய்யவில்லை. தஞ்சாவூரைச்சுற்றி மராட்டியர் ஆண்ட காலத்தில் 5783 கிராமங்களில் பரம்பரை மருத்துவர்கள் ஒன்றரை ஏக்கர் நிலத்தை இறையிலியாகப் பெற்று மருத்துவம் புரிந்து வந்தனர். இது தவிர மற்ற சித்த மருத்துவர்களும், கிராமங்களில் தம் தொழிலை நடத்தி வந்தனர்.

ஆனால் இவர்களுக்குப் போட்டியாக ஆயுர்வேத மருத்துவர்களும் அவ்வூரில் மருத்துவம் புரிந்துவந்தனர். இவர்களுக்கு அக்கிராம மக்கள் காய், கனி, பால் மற்றும் தம்மிடமுள்ள மிகையாக விளைந்த விளை பொருட்களையும், நன்றிக்கடனாக அளித்து, தங்களை அறுவைச் சிகிச்சையிலிருந்து காப்பாற்றிக் கொள்வதாக நம்பினர். மருத்துவர்கள் தம்மிடமுள்ள ரகசிய மருத்துவ முறைகளைக் கொண்ட சுவடி நூல்களில் உள்ளவற்றை, தங்களை நம்பும் பொருட்டுப் படித்துக் காண்பித்து, தங்களுக்கான மருத்துவத்திற்குப் பணத்தைப் பெற்றுக் கொண்டனர். கவலை அளிக்கும் எந்த அளவிலும் உள்ள பலதரப்பட்ட நோய்களையும் நாடி பிடித்துப் பார்த்து, நோயை அறிந்து மருந்து வழங்கினர். இவர்களில்

சிலர் மிகப்புகழ் பெற்று நாடு முழுவதுமுள்ள செல்வந்தர்களுக்கும் மருத்துவம் அளித்தனர். இக்காலக் கட்டத்தில் நாட்டு மருத்துவர்கள் கிழக்கிந்தியக் கம்பெனியின் இந்தியப் படையிலும் பணியமர்த்தப் பட்டனர்.

நோயாளிகளுக்குத் தனியாக மருத்துவமனைகள் அக்காலகட்டத்தில் இல்லாத நேரம். ஆகவே இவர்கள் வீட்டிலேயே மருத்துவம் செய்யப் பெற்றனர். ஒரு விடியலாக மராத்திய மன்னர் சஹாஜி (Sahaji - 1684 - 1712) மருத்துவமனைகளைக் கட்டி, ஹைதராபாத் மற்றும் அரேபியாவிலிருந்து மருத்துவர்களை வரவழைத்தார். இந்த மருத்துவமனையில் நோயாளிகள் சோதனை செய்யப்பட்டு, அரசர் செலவில் அவர்களுக்கு மருந்தளிக்கப்பட்டது. இத்துடன் கட்டணமற்ற தங்கும் விடுதிகள் (சத்திரங்கள்) இராமேஸ்வரம் போகும் சாலையோரங்களில் கட்டப்பட்டு, நடந்து செல்லும் பயணிகளுக்கு நோய் ஏற்பட்டால், அங்குத்தங்கி மருத்துவமும் பெற்றனர். இச்சத்திரங்களில் தஞ்சாவூர் மாவட்டத்தில் சாதாரண நோய்களைத் தீர்க்கவல்லதாக எட்டு மருந்தகங்கள் அமைக்கப்பட்டிருந்தன.

சஹாஜி வெளியூரிலிருந்து மருத்துவர்களை அழைத்த செயல் பீஜப்பூர் சுல்தானைப் பார்த்துச் செய்த செயலை ஒத்தது ஆகும். இச்செயல் சஹாஜி மன்னர் மராட்டிய அரசர்களில் இரண்டாமவன் என்பதால் உள்நாட்டின் மருத்துவர்களின் திறமையை அறியாமல் இருந்ததே காரணமாகும். மேலும் துளஜாஜிக்கு முன்பிருந்த வர்களும் சித்த மருத்துவர்களின் பெருமையை, மன்னர்களிடம் கொண்டிருந்த உறவை அறிந்தவர்களாக இல்லை. இத்துடன் அரண்மனையிலிருந்த மருத்துவம் பற்றிய பதிவுக் குறிப்புகள் (1773 - 1776) எரிக்கப் பட்டதினாலும் ஆகும். மராட்டிய அரசர்கள் தங்கள் பதிவுகளை மோடி எழுத்தில் சுவடியில் பதிவு செய்து வைத்தார்கள். இதில் 1000 சுவடிக்கட்டுகள் இன்னும் சரஸ்வதி மஹால் நூலகத்தில் உள்ளன. இதில் பெரும் பகுதி இன்றுவரை மொழி பெயர்த்து வெளியிடப் படாமலே உள்ளன. இவை வெளியிடப்பட்டால் பல அரிய மராத்திய சரித்திரக் குறிப்புகள் கிடைக்கக்கூடும்.

மன்னர் துளஜாஜி இரண்டு மருத்துவ நூல்களைச் சமஸ்கிருதத்தில் எழுதியுள்ளார் என்றாலும், அதில் மருத்துவத்திற்கு ஆற்றிய பணிகளை, சேவையை அறிய முடியவில்லை. இவரால் சுவீகாரம் எடுக்கப்பட்ட அரசர் சரபோஜி - மிமி, உள்நாட்டு மருத்துவத்திற்கு முதன்மை கொடுத்து, இதற்கான மருத்துவக் குறிப்புகளைச் சேகரித்துப் பத்திரப்படுத்தினார்.

இம்மருத்துவமுறைகள் செயல்பாட்டில் இருக்க பல உத்திகளைக் கையாண்டார். எ.கா. மக்களின் துப்புரவு மற்றும் உடல் நலத்தைப் பேண, சரபோஜி தஞ்சையிலுள்ள கோட்டைக்குள் இருந்த சேப்பாண நாயக்கன் ஏரி, சிவகங்கைக் குளம் ஆகியவைகளை ஊரில் உள்ள பல நல்ல தண்ணீர்க் கிணறுகளுடன் இணைத்துப் போதுமான தண்ணீரைப் பொது மக்களுக்குக் கிடைக்க வழியமைத்தார். இது தவிர தஞ்சையில் 6 மைல்கள் சுற்றளவிலுள்ள கருவுற்ற 9 மாதத்திலிருந்து குழந்தை பிறந்த பின் மூன்று மாதங்கள் வரை பாலைத் தாய்க்கும், சேய்க்கும் இலவசமாக அளித்தார். இதை அவர் மகன் சிவாஜியும், தான் இறக்கும் வரை, அதாவது பிரிட்டிஷ் கிழக்கிந்தியக் கம்பெனி தஞ்சையை முழுவதுமாக ஆட்சிப் பொறுப்பைக் கைப்பற்றும் வரை இச்சலுகைகளை வழங்கினார்.

தஞ்சையில் அன்றைய கால கட்டத்தில் குருகுல முறைப்படி போதிக்கப்பட்ட மருத்துவம் மறைபொருளாக எழுதி வைக்கப்பட்டு, பலநூறு ஆண்டுகள் இச்செயலே நீடித்ததால் பலருக்கு, பலதரப்பட்ட மருத்துவ முறைகளுடன் மிகவும் சக்தி வாய்ந்த மருத்துவமாகவும், சிலருக்குச் சக்தியற்றதாகவும், மந்திரத்தன்மையற்றதாகவும், பல மருந்துகளைக் கொண்டு குறுக்கு வழியில் குணப்படுத்தக் கூடியதாகவும் மருத்துவம் அமைந்தது. மருத்துவம் பொதுமைப் படுத்தப்படாது மருத்துவப் பள்ளிகள் இன்றி முறைப்படி மருத்துவம் போதிக்காததே இதற்குக் காரணம்.

மேலும் அன்றைய மருத்துவர்கள் தன்னிடம் உள்ள ஓலைச்சுவடிகளை, மருத்துவச் சுவடி நூல்களை வழிவழியாக வழிபட்டு வந்தனர். இந்நூல்கள் மற்றவர்கட்குக் கொடுத்து வாங்கல் என்பதும் இல்லாது இருந்தது. இந்நூல்களில் மருத்துவத்தைக் கண்டறிதல், குணப்பாடு, அதனால் ஏற்படும் முன்னேற்றம் ஆகியவைகள் முறையாக வகைப்படுத்தப்பட்டு எழுதப்படாது இருந்ததும் ஒரு குறையாகவே காணப்பட்டது. பெரும்பாலான மருத்துவச் சுவடிகளில் நோயின் அறிகுறி, மருத்துவம், குணப்பாடு ஆகியவை அங்குமிங்குமாக இருந்தது. இதன் காரணம் மருத்துவத்தை அறிந்து எழுதியவருக்குப் பிறகு அதைப் பின்பற்றும் சீடர்கள் தனக்கு ஆர்வம் உள்ளதை அல்லது தனக்கு வேண்டியதை மட்டும் ஓலைச்சுவடியில் படி எடுத்திருக்கலாம்.

மேலும் மருத்துவர்களுக்குத் தேர்வு எழுதிச் சான்றிதழ்கள் பெறவோ அல்லது மருத்துவம் புரிய உரிமையோ பெற தேவையின்றி இருந்தது. இதன் காரணமாகப் பல மருத்துவர்கள் மிகக் குறைந்த அளவு மருத்துவ அறிவுடன் தான் இருந்ததால் பண்டைய முடிவுகளைப் பற்றித் தனக்குத் தெரிந்தவரை கையாண்டு மருத்துவம் புரிந்தனர். இதனால் சித்த மருத்துவம் பல போலி மருத்துவர்கள் உருவாகக் காரணமாகி, யார் உண்மையான மருத்துவர், யார் போலியானவர் என்று பிரித்துப் பார்க்க இயலாது போய்விட்டது.

ஆரம்ப கால மருத்துவத்திலிருந்து வேறுபட்ட மராட்டியர் மருத்துவம்

உள்நாட்டு மருத்துவத்தை ஒட்டியே அக்கால கட்டத்தில் ஐரோப்பிய மருத்துவமும் இருந்தது. அவர்கள் இரத்தம், பித்தம், சளி, எரிப்பாற்றல் ஆகியவைகளே உடல் கேட்டிற்கான காரணம். இதற்கு வாந்தி எடுப்பது, இரத்தத்தை வெளியேற்றுவது, அட்டை (Leech) மருத்துவம், பேதி கொடுப்பது ஆகியவை மருத்துவமாகக் கடைப்பிடிக்கப்பட்டது. இது போலவே இயற்கையில் கிடைக்கும் மூலிகை, உலோகம் ஆகியவைகளே மருந்தாகப் பயன்படுத்தப் பட்டன. இரும்பு - இரத்த சோகைக்கும், சிங்கோனா மலேரியாவிற்குமே அந்நிலையில் மருந்தாக இருந்தது. அறுவைச் சிகிச்சைகூட கை, கால்களுக்கானதாக இருந்தது. உடல் உள் உறுப்புகள் கேட்கத் தகாததாகக் கருதப்பட்டது. அறுவை மருத்துவர்கள் 1745-ஆம் ஆண்டு வரை நாவிதர்களுக்கு இணையாகவே கருதப்பட்டனர். தொடக்க நிலையைக் கடந்து உடல் கூறு, உடல் இயங்கியல், வேதியல், பௌதீகம் இருப்பினும் அவை மருத்துவம் புரிய துணை செய்யவில்லை. நோய் அறிதல் என்பது அறிகுறிகளை மட்டும் குறிப்பிட்டதாக இருந்தது. மருத்துவமும் அனுபவத்தை ஒட்டியே அமைந்தது.

1753-ல் கல்வியைக் குறித்த ஜேம்ஸ் லின்ட் (Jameslind) நூலும், எட்வர்ட்ஜென்னரின் (Edward Jenner) அம்மை குத்தல் குறித்த நூல்கள் மட்டுமே மருத்துவம் குறித்த நூல்கள். மற்றைய ஏதும் குறிப்பிடத்தக்கதாக இல்லை என்று கூறலாம். அடிசன், (Addisoன், பிரைட் (Bright) மற்றும் குல் (Gull) போன்றோரின் நூல்கள் பிந்தையதே. 1848 வரை மருந்து போடும் துளையுடைய ஊசிகள் கண்டுபிடிக்கப்படவில்லை. ஆனால் ஐரோப்பிய மருத்துவர்கள் தங்கள் நோயாளிகளிடம் கண்ட அறிகுறி குணப்பாடுகளைப் பதிவு செய்து ஆராய்ந்தனர். அவைகளைச் சான்றுகள் மூலம் மெய்ப்பித்துக் கொண்டார்களேயன்றி நம்பிக்கையினால் அறிவியலை வளர்த்துக் கொள்ளவில்லை. ஹெக்னிமேன் போன்றோர் அந்நிலையில் பரிசோதனை மூலம் மருந்துகளை ஆராய முற்பட்டு, பல மருந்துகளைக் கண்டுபிடித்தனர். ஃபிரடரிக் வில்கிம் (Frederick Wilheim),), சர்டுனர் (Sertuerner1805) ஆகியோர் மூலிகையிலிருந்து நோய்களைக் குணமாக்கும் பொருள்களைத் தனித்துப் பிரித்து எடுத்து ஆய்ந்து மருந்து தயாரிப்புக்கு வித்திட்டனர்.

சரபோஜியின் சித்த மருத்துவத்திற்கான கொடை:

மேற்கூறப்பட்ட நிலையிலேயே மருத்துவச்சேவை சரபோஜியின் ராஜ்யத்திலும் ஐரோப்பாவிலும், நடைமுறையில் இருந்தது. சரபோஜியின் தந்தை இறக்கும் பொழுது சரபோஜி சிறுவனாக இருந்ததால், வளர்க்கும் பொறுப்பைச் சீர்திருத்த கிருத்துவ மிஷனரியான ஸ்வாட்ஜ் பாதிரியிடம் ஒப்படைத்தார். இவர் வழிகாட்டலில் சரபோஜி சென்னையில் ஐரோப்பிய அறிவுஜீவிகளுடன் படித்து, மேலும், மேலும் புதியவைகளை அறிந்து கொள்ள ஆர்வம் கொண்டார். பிறகு பல இந்திய ஐரோப்பிய மொழிகளைக் கற்றுணர்ந்தார். இதன் மூலம் பல மொழி மருத்துவ நூல்களைக் கற்க முனைந்தார். இந்நிலையில் பிரிட்டிஷ் கிழக்கிந்தியக் கம்பெனி வளம் கொழிக்கும் தஞ்சை ஆட்சியை முழுவதும் அரசரிடமிருந்து, தன் வசம் ஆக்கிக்கொண்டது. இருப்பினும் கம்பெனி அரசருக்குத் தன் அறிவுசார்ந்த வேலைகட்கு, செய்கைகளுக்குத் தேவையான பொருளுதவி அளித்தது.

மூலிகைத் தோட்டம்:

ஐரோப்பியக் கல்விபெற்ற அரசர் சரபோஜி பல நோய்களுக்கான மருத்துவக் குறிப்புகளை அறிந்து சோதனை செய்ய முனைந்தார். இதற்காகத் தன்வந்திரி மஹாலின் ஒரு பகுதியில் மருத்துவ சோதனைக்கான மையத்தைத் திறந்து. அதில் 12 இந்திய மருத்துவர்களை நியமித்தார். அவர்கள் நோய்களுக்கான தகுந்த சிகிச்சையை அளித்தனர். ஐரோப்பிய மருத்துவர்கள் நோயாளிகளின் குறிப்பேட்டில், நோயின் தன்மைகளைக் குறித்து வைத்தனர். இதன்படி மன்னர் மருத்துவக் குறிப்பேட்டிலுள்ள மருந்துகளில் சிறந்த வைகளில் 5000 மருத்துவக் குறிப்புகளைச் சேகரித்தார். இதைத் தமிழ் மருத்துவர்களும் சரிபார்த்தனர். இக்குறிப்புகள் பல வகையாகப் பிரிக்கப்பட்டு 18 நூலாக எழுதப்பட்டன. நோயாளிகளிடம் சரியான மருந்து கொடுத்து சோதனை செய்ய மூலிகைத் தோட்டம் பராமரிக்கப்பட்டு, மருந்தும் தயாரிக்கப்பட்டது.

சரபோஜி மருத்துவர்களுக்குச் சரியான மூலிகை களைத் தேர்ந்தெடுத்துப் பயன்படுத்த, சிறந்த ஓவியங்களைக் கொண்டு அரிய மூலிகைகளின் படத்தை அதன் நிறத்தை ஒட்டி வண்ணத்தில் தத்ரூபமாக வரைந்து, அதனடியில் அதன் பயன்களையும், பெயரையும் குறித்து வைத்துள்ளார். அப்படங்கள் அடங்கிய புத்தகம் இன்றும் சரஸ்வதி மஹால் நூலகத்தில் புதிய படங்களைப் போல காட்சியளிக்கின்றன. இதே போல உடற்கூறுகளைக் குறித்த படங்களும் நூல் வடிவத்தில் வண்ணத்திலும் கருப்பு வெள்ளையுமாகவும், இருக்கின்றன. நோயாளிகளைப் பற்றிய குறிப்புகள் படத்துடன் குணப்பாடுகள் எழுதப்பட்டு, அவை பிற்காலச் சந்ததியினருக்கு ஆய்வுக்கு உதவும் விதமாக உள்ளன. இவைகளில் குறிப்பிடத்தக்கது கண் நோய்களைப் பற்றியது ஆகும்.

சரபோஜி யாத்திரை:

சரபோஜி, சரஸ்வதி மஹால் நூலகத்திற்கு மருத்துவம், அறுவைச் சிகிச்சை, தாவர இயல், உடல்கூறு, மிருக மருத்துவம் ஆகியவைகள் குறித்த நூல்களை வாங்கியதோடு அவைகளை அவரே படித்து முக்கியமான கருத்துக்களைக் கோடிட்டு வைத்துள்ளார். மேலும் மன்னர் பழைய ஓலைச்சுவடி நூல்களையும் வாங்கி நூலகத்தின் பயன்பாட்டிற்கு உதவியுள்ளார். இத்துடன் இந்தியாவில் கல்வி கற்பிப்பதில் சிறந்து விளங்கிய காசிக்கு 1820-இல் பரிவாரம், எழுத்தர் மற்றும் அறிஞர்களுடன் யாத்திரை சென்றார். அப்படிச் சென்று வருகையில் பழைமை வாய்ந்த அகத்தியர், தேரையர், பிரம்மமுனி, மச்சமுனி, தன்வந்திரி, சட்டைமுனி, யூகிமுனி, திருமூலர், கொங்கணவர் ஆகியோரின் மருத்துவச் சுவடிகள் திரட்டிக் கொண்டு வரப்பட்டன.

மன்னர் சரபோஜி மருத்துவர்களால் தேர்ந் தெடுக்கப்பட்ட 5000 மருத்துவக் குறிப்புகளின் குணப்பாட்டை அறிந்து தான் முழுவதும் அதை ஏற்றுக்கொண்டு, அதிலிருந்து 900 குறிப்புகளை மராத்தி மொழியில் உரைநடையில் தன் இனத்தாருக்குப் பயன்தரும் வகையில் மொழிபெயர்த்தார். தமிழில் மொழி பெயர்க்கப்பட்ட பாடலாகச் சரஸ்வதி மஹால் நூல் நிலையத்தின் வழியாக “சரபேந்திர வைத்திய ரத்னாவளி” என்ற நூல் 1957-இல் வெளியிடப்பட்டது.

இவ்வளவு சிறப்புற்ற மருத்துவம் தொடர்பான தன்வந்திரி மஹால் எங்கிருந்தது என்பதை எஸ். கணபதிராவ் மோடி ஆவணங்களை ஆராய்ந்த பிறகு சரஸ்வதி மஹால் உள்ள இடத்திலேயே நடைபெற்று வந்தது என்று கூறுகிறார். இதுவே கிராமங்களில் நடைபெற்ற ஆரோக்கிய சாலைகளுக்குத் தலைமைப் பீடமாகத் திகழ்ந்தது. இந்த ஆரோக்கியசாலையில் மருத்துவர், டிரஸ்சர், மருந்தாளுநர், கணக்கர், உதவி புரிவர் ஆகியோர் பணிபுரிந்தனர்.

பல்கலைக்கழகம்:

கணபதிராவின் மோடி ஆவண ஆய்வின்படி சித்த மருத்துவ ஆய்வுகளுடன் மன்னர் நவ வைத்திய கலாநிதி சாலை என்ற சிறு பல்கலைக்கழகத்தை ஆரம்பித்து மருத்துவக் கல்வியைப் போதித்ததாகக் கூறுகிறார். மன்னர் தன்வந்திரி மஹால் குறித்த செயல்பாடுகளை, சுவாமி வைத்தியர் ஆலோசனையுடன் நடத்தியுள்ளார். மன்னர் இறந்த பிறகும்கூட தன்வந்திரி மஹால் மருத்துவமனை செயல்பாட்டில் இருந்துள்ளது என்பதை உடற்கூறு குறித்த நூல்கள், அறுவைச் சிகிச்சைக்கான உபகரணங்கள் மற்றும் நூல்கள் வாங்கப் பட்டுள்ளதை மோடி ஆவணங்கள் மூலம் அறிய முடிகிறது.

(Heritage of the Tamils Siddha Medicine: P. 59 - 86).

Pin It