மகளிர் மருத்துவம் என்னும் கோட்பாட்டின்படி பெண்களின் நலவாழ்வுக்கு ஒரு சிறப்பான இடத்தைக் காலனிய அரசு மேலை மருத்துவத்தின் மூலம் அளிக்க விரும்பியது. இது இந்தியாவில் வரலாற்று ரீதியான முக்கிய நிகழ்வாகும். ஏனெனில், 1870ஆம் ஆண்டிற்கு முன் மிகக் குறைந்த அளவே இதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. 19ஆம் நூற்றாண்டில் ஆரம்பகாலத்தில் மருத்துவம் பார்த்து மக்களுக்கு நலம் பேணும் பணியில் மிகக் குறைந்த அளவே பெண்கள் பங்கெடுத்தனர். இராணுவம், சிறை, மருத்துவமனை ஆகிய இடங்களில் ஆண்களே ஆதிக்கம் செலுத்தினர்.

பெண்கள் மருத்துவம் படிக்க அனுமதிக்கப்படவில்லை. ஏனெனில் ஆணுக்கு அடங்கியவளே பெண் என்ற சித்தாந்தம் மற்றும் கடுமையாகக் கடைப்பிடிக்கப்பட்ட பர்தா முறையும் இதற்கான காரணங்களாகும். மேலும் தாதிகள் மருத்துவம் செய்வது என்பது கீழ்ச் சாதிக்கு என்பது எழுதப்படாத சட்டமாக இருந்தது. கர்நாடகாவில் லம்பாடிகள், கேரளாவில் பறையர்கள், தமிழ்நாட்டில் வண்ணாத்திகளும் நாவிதர்களும் தாதி வேலை பார்த்தனர். அவர்கள் எந்தவிதமான முறையான பயிற்சியுமின்றி பழைமையான முறையிலே பிரசவம் பார்த்து வந்தனர். பிரிட்டனிலும் கூட பெண்கள் மருத்துவம் படிப்பதற்கு 19ஆம் நூற்றாண்டின் ஆரம்பகாலம் வரை அனுமதி மறுப்பு நீடித்தது.

1878ஆம் ஆண்டு மதராஸ் மருத்துவக் கல்லூரி பெண்களை மருத்துவம் படிக்க அனுமதித்தது. 1880க்குப் பிறகு, மருத்துவக் கல்வி இந்தியாவில் பரவலாக்கப்பட்டு அரசால் பல மருத்துவக் கல்லூரிகள் திறக்கப்பட்டன. இந்நிலையில் மகளிர் நல கழகங்களும் அறக்கட்டளைகளும் பெண்கள் மருத்துவம் கற்க உதவின.

kasturiba gandhi hospitalகோஷா மருத்துவமனை / ராயல் விக்டோரியா உயர்சாதி மற்றும் கோஷா பெண்களுக்கான மருத்துவமனை

மதராஸ் மாநகரத்தின் மற்றொரு சிறப்பு வாய்ந்த மருத்துவமனை ராயல் விக்டோரியா உயர்சாதி மற்றும் கோஷா பெண்களுக்கான மருத்துவமனையாகும். இதன் நிறுவனர், மதராஸ் மருத்துவக் கல்லூரியின் முதல் மாணவியான டாக்டர் மேரி ஸ்கர்லிப். இவர் மகளிருக்காக மதராசில் முன்னரே மருத்துவமனை உள்ள பொழுதும் ஒரு மகளிர் மருத்துவமனையை 1885 தொடங்குவதற்கான காரணம், ஆண் மருத்துவர்களால் நடத்தப்படும் மருத்துவமனைக்கு சில சமூக, மத கோட்பாட்டிற்கு உட்பட்டு ஆண்களிடம் மருத்துவம் செய்துகொள்ள விரும்பாத பெண்களுக்கு மருத்துவம் அளிப்பதற்காகவே ஆகும்.

1878-1882இல் இவர் இங்கிலாந்திற்குப் படிப்பிற்காகச் சென்றபொழுது, விக்டோரியா ராணியை சந்தித்து, இந்தியப் பெண்மணிகளுக்குத் தகுந்த பெண் மருத்துவர் இல்லை என்று எடுத்துக்கூறி, பிறகு இளவரசர் வேல்ஸ் மற்றும் இளவரசி வேல்ஸ் ஆகியோரிடமும் இதைப் பற்றிக் கூறினார். இந்தியாவிற்கு வந்து, தனது மருத்துவத் தொழிலை ஆரம்பித்து அளவுக்கு மிஞ்சிய நோயாளிகளுக்கு மருத்துவம் செய்தாலும், அதில் தான் மனநிறைவு கொள்ளாது பெண்களுக்காக மட்டும் ஒரு மருத்துவமனை தொடங்குவதிலேயே நாட்டம் கொண்டார். இதற்கு உதவிட, மதராஸ் கவர்னர் மனைவி லேடி கான்ட் கூப் (Gant Guff) மற்றும், சர்ஜன் ஜெனாலிடம் உதவி நாடினார். இவர்கள் துணையுடன் மதராசில் முக்கிய பிரமுகர்களுடன் ஒரு கூட்டம் நடைபெற்றது. இம்மருத்துவமனையை எப்படித் தொடங்குவது? மற்றும் அதற்கான செலவினங்கள் குறித்துப் பேச மேதகு லேடி கிராண்ட் டப்ரின் தலைமையில் 1885 மார்ச் 6ஆம் தேதி ஒரு கூட்டம் நடைபெற்றது. இதில் கஸ்தூரி பாஸ்யம் அய்யங்கார், திவான்பகதூர் ஆர்.ரெங்கநாதராவ், விஜயநகர ராஜா, வெங்கடகிரி ராஜா, நீதியரசர் முத்துசாமி அய்யர், ராஜா சர் செவாலியர் ராமசாமி முதலியார் ஆகியோர் உயர்சாதி மற்றும் கோஷா பெண்களுக்கான மருத்துவமனை உருவாக்கக் கூடினர். இம்மருத்துவமனையை உருவாக்க அக்கூட்டத்திலேயே ரூ.70ஆயிரம் திரட்டப்பட்டு, 1885 டிசம்பர் 7ஆம் தேதி மேதகு லேடி கிராண்ட் டப்ரினால் மருத்துவமனை திறக்கப்பட்டது. இம்மருத்துவமனையை நிறுவ முயற்சி எடுத்த டாக்டர் ஸ்கர்லிப் முயற்சியால் இம்மருத்துவமனைக்கு இராணி விக்டோரியா பெயர் வைத்திட இராணியின் அனுமதி பெற்று சூட்டப்பட்டது.

இம்மருத்துவமனை தொடங்க, திருவாங்கூர் ராஜா, புதுக்கோட்டை ராஜா, ஆற்காடு இளவரசர் ஆகியோரும் தங்கள் ஆதரவைத் தெரிவித்தனர்.

(The Madras Centenary Commemoration, volume, New Delhi, Asia Education Service, 1994)

சேப்பாக்கத்தில் மருத்துவமனை

இம்மருத்துவமனை தொடக்கத்தில் நுங்கம்பாக்கத்தில் மூர்கார்டனில் உள்ள மாண்புமிகு மிர் ஹ¨மாயூன் ஷா பகதூரின் வீட்டில் வாடகையின்றி ஆரம்பிக்கப்பட்டது. பிறகு, திருவல்லிக்கேணியிலிருந்து சேப்பாக்கத்திற்குச் சிறிது தெற்கில் 1890இல் அரசு இடத்துடன், மருந்து வாங்க ரூ.10 ஆயிரம் அளித்தபிறகு, மருத்துவமனைக்கான கட்டடங்கள் நிரந்தரமாகக் கட்டப்பட்டன. கண்காணிப்பாளர் வீடு கட்ட விஜயநகர ராஜா ரூ. 32 ஆயிரம், உள்நோயாளிகள் பிரிவு கட்டடங்கள் கட்ட மதராஸ் விக்டோரியா மகாராணியின் மகளிர் சேமநல நிதியிலிருந்து ரூ. 50 ஆயிரம், பிரசவக்கூடம் மற்றும் தொற்றுள்ளவருக்கு பிரசவம் பார்க்க ஒரு கூடம் லேடி பாஸ்யம் அய்யங்காரினாலும் கட்டப்பட்டு மருத்துவமனை திறக்கப்பட்டது. அப்போது கண்காணிப்பாளராகப் பொறுப்பேற்றவர் குமாரி ஹென்ரிக் (Hendric)..

ஆரம்பத்தில் இம்மருத்துவமனை டப்ரின் நிதியத்தின் கண்காணிப்பில் இருந்து வந்ததை, 1921 ஏப்ரல் 16ஆம் தேதி அரசு தனக்குக் கீழ் கொண்டு வந்தது. இதன் முதல் கண்காணிப்பாளராக, மேரி பியூடன் (Mary Beadon), பிறகு குமாரி மேதகு லசாரஸ்சும், மதுரமும் முதல் இரண்டு இந்திய கண்காணிப்பாளர்கள் என்ற பெருமை பெற்றனர்.

இம்மருத்துவமனை செயல்பாடுகளில், குறிப்பிடும்படியான ஒரு செய்தி. பிராமணர், சூத்திரர், இஸ்லாமியர் ஆகியோருக்குத் தனித்தனியான படுக்கைக் கூடங்களும் இருந்தன. உயர்சாதிக்கென்று உயர்சாதிக்காரர்களால் தனி சமையலும் நடைபெற்றன. (Billington Women in India. p.107)

பிரசவத்திற்காகத் தொடங்கிய இம்மருத்துவமனையில் பொதுவாக மற்ற நோய்களுக்கும் தனித்தனிப் பகுதிகள் தற்பொழுது இயங்கி வருகின்றன.

வேல்ஸ் இளவரசர் இந்திய வருகையை நினைவு கூற, 1922இல் பொது மக்களிடமிருந்து திரட்டப்பட்ட பணத்தால் குழந்தைகள் மருத்துவமனை பழைய மருத்துவமனையை ஒட்டியபடி கட்டி 1936 ஏப்ரலில் 52 படுக்கைகளுடன் திறக்கப்பட்டது.

ஆண்டுக்கு ஆண்டு நோயாளிகளின் வருகை பெருகிய இன்றைய காலகட்டத்தில் ஓர் ஆராய்ச்சிக்கான மருத்துவமனையாகக் கஸ்தூரிபாய் மருத்துவமனை என்று பெயர் மாற்றம் பெற்று நடைபெற்று வருகின்றது.

வேலூரில் மகளிர் மருத்துவமனை / சி.எம்.சி.தோற்றம்

டாக்டர் இடா ஸ்கடருக்கு முன் அவர் தந்தை டாக்டர் எச்.என்.ஸ்கடர் நடத்திய மருத்துவமனையில், ஆரம்ப காலத்தில் மருத்துவம் பெற மிக கவனத்துடன், கொஞ்சம் வெட்கத்துடன் மற்றும் பீதியுடனே கீழ்மட்ட சாதியினரே வந்தாலும், பிறகு இந்நிலை படிப்படியாக மாறியது. குறிப்பாக, உயர்மட்ட இந்துக்களும், இஸ்லாமியர்களும்கூட எத்தயக்கமுமின்றி மருத்துவம் பெற்றனர். இதில் ஒரு செய்தி என்னவெனில், மருத்துவமனையில் மருத்துவம் பெற்ற பலர், மருத்துமனைக்குள்ளேயே கிறித்தவ சமயத்தைத் தழுவினர். இது அம்மருத்துவமனையை நடத்திய ஆங்கில மிசனரிகளுக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளித்தது, இந்நிலையில் டாக்டர் ஸ்கடர் ஒவ்வொரு மிஷனரியும் ஒரு கையில் வேதத்தை வைத்துக் கொண்டு மருத்துவம் செய்ய மற்றொரு கையைத் தயாராக வைத்திருக்க வேண்டும் என்று கூறினார். ஆனால் பல மிஷனரிகள் (1830) இதுபோல் மருத்துவ சேவை செய்யாது உள்ளனர் என மனம் வருந்தினார்.

இதற்குப் பிறகே தந்தையுடன் டாக்டர் இடா ஸ்கடர் 1990இல் இந்தியாவிற்கு வருகையுற்ற காலத்தில் மிகச்சில இந்திய, மேலை நாட்டு மகளிர் மருத்துவர் மற்றும் பயிற்சி பெற்ற தாதிகள் ஆகியோரால் பிரசவம் பார்க்கப்பட்டது. என்னென்ன உத்திகளைக் கையாண்டால் மகளிர் மருத்துவத்தை மேம்படுத்தலாம் என்ற நோக்கோடு இந்தியாவின் சிறந்த மருத்துவ மேதைகளுடன் இடா ஸ்கடர் நட்பு கொண்டாடினார். அவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள் வட இந்தியாவில் வசித்த அமெரிக்க மிஷனரியான சி. ஸ்வான் (C.Swain), ஐரிஷ் திருச்சபையைச் சேர்ந்த சூசன் பிரைன் (C.Swain), பூனே டாக்டர் லென்டிஸ் பெர்னார்ட் (Lentice Bernard), டாக்டர் பிராட்லி (Dr. Bradley), ரெபெகா வாக்கர் (Rebecca Walker), டாக்டர் ஃபென்னி காமா (Dr. Fenny Cama), முதன் முதலில் இந்தியாவில் மருத்துவப் பட்டம் பெற்ற டாக்டர் ஆனந்தபாய் ஜோஷி, பிறகு வெளிநாட்டில் பட்டம் பெற்ற மருத்துவப் பெண்மணி, மற்றும் ராயபுரம் மருத்துவமனையைத் திறக்கக் காரணமான மால்டிடா மாக்ஹெல் (Maltida Mchail) ஆகியோர்களாவர். (Improvement of the conditions of Child Birth in India, p.2)

டாக்டர் இடாவிற்கு ஏன் இந்த ஆர்வம் தோன்றியது?

1820இல் டாக்டர் ஜான் ஸ்கடர் இந்தியாவில் மதுரை மற்றும் சென்னையில் துயருற்றவர்களுக்குத் தன் பணியை அர்ப்பணித்து வந்தார். பிறகு இராணிப்பேட்டையில் வசித்தபோது 1870 டிசம்பர் 9இல் இவருக்கு இடா ஸ்கடர் பிறந்தார். இடா சிறுமியாகத் தன் பெற்றோருடன் வசித்தபோது, ஓர் இரவு மூன்று முறை உள்ளூர்வாசிகள் தங்கள் வீடுகளுக்குப் பிரசவம் பார்க்க அழைத்தனர். இடாவிற்குப் பேறுகால மருத்துவம் பற்றிய பயிற்சி இல்லை. ஆகவே, ஏதும் செய்ய முடியவில்லை. தந்தை ஒரு டாக்டராக இருப்பினும் சமூகத்தில் இருந்த சில சமூகக் கட்டுப்பாடுகளின் காரணமாக, ஆண் டாக்டர் என்பதால் பிரசவம் பார்க்க அனுமதிக்கப்படவில்லை. விடிந்தவுடன் இடாவிற்கு பேரதிர்ச்சி காத்துக் கொண்டிருந்தது. இரவில் இடாவை மருத்துவம் பார்க்க அழைக்கப்பட்ட வீடுகளில் இருந்த மூன்று கருவுற்ற பெண்களும் இறந்துவிட்டனர். அப்போது, “இதுவே இந்திய மகளிரைக் காப்பாற்ற, மருத்துவ நிறுவனங்களை நிறுவ, கடவுள் கட்டளையிட்ட நாள்” என்று இடா நினைத்தாராம்.

இதன் பிறகு, அமெரிக்காவிற்குச் சென்று, பிளடெல்பியாவில் உள்ள கார்நெல் (CORNEL) பல்கலைக்கழகத்தில் உள்ள மகளிர் மருத்துவக்கல்லூரியில் சேர்ந்து, 1895இல் மருத்துவப் பட்டம் பெற்று இந்தியாவிற்குத் திரும்பினார்.

முதன் முதலில் மருத்துவத் தொழிலைத் தன்னுடைய தந்தையின் வீட்டிலேயே தொடங்கினார். இதுவே பிறகு மேரி தாபர்செல் மருத்துவமனை ஆனது. அதன் பிறகு, ஒரு மருத்துவ ஆலோசனைக் கூடம் 1906இல் ஆரம்பிக்கப்பட்டு, அங்கு போய்வர குதிரை வண்டி பயன்படுத்தப்பட்டது. இவருக்கு உதவியாக இருவர் வேலைக்கு அமர்த்தப்பட்டு ஒருவர் ஆவணங்களை ஒழுங்குபடுத்தவும், மற்றொருவர் மருந்து தயாரித்துக் கொடுக்கவும் உதவி வந்தார்கள். பிறகு இது 1924இல் தொட்டிப்பாளையத்திற்கு மாற்றலானது.

வேலூரில் கிறித்தவ மருத்துவக் கல்லூரி 1918இல் டாக்டர் இடா ஸ்கடரால் ஆரம்பிக்கப்பட்டது. இவரே இதன் முதல் முதல்வர். ஆரம்பத்தில் மகளிர் மருத்துவர்களுக்குத் தகுந்த பயிற்சி அளிக்கப்பட்டது. ஆரம்பத்தில் எல்.எம்.பி. 1933 வரை நடைபெற்று, பிறகு, டி.எம். & எஸ் படிப்பும் நடைபெற்று, 1942இல் மதராஸ் பல்கலைக்கழகத்துடன் இணைந்தது.

முதல் தொகுதியில் 25 மாணவர்கள் படித்தனர். இடா ஸ்கடர் 1944இல் ஓய்வு பெற்றார். பிறகு, சிறப்பு நிலை முதல்வராக 1947 வரை நீடித்தார். இவ்வாண்டு 10 ஆண்கள் படிக்க தேர்வு ஆனார்கள். இக்கல்லூரி அமெரிக்கன் காலேஜ் ஆப் ஏசியா நிதிமூலம் நடைபெற்றது. இதற்குப் பெரும் உதவியாகப் பணியாற்றியவர் திருமதி ஹென்றி வபிய போடி.

இது தவிர 8 வட அமெரிக்க மிஷனரிகளும், 5 பிரிட்டிஷ் மிஷனரிகளும், உதவிக் கரம் நீட்டின. தற்பொழுது 39 இந்திய தேவாலயங்களுடனும் மிஷனரி சபைகளுடனும் அமெரிக்கா, கனடா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, டென்மார்க் தேசத்தின் மிஷனரிகளும் உதவுகின்றன.

1907 இல் ஸ்கடர் செவிலியர் பயிற்சி நிலையத்தைச் செல்வி யூக்டனை (Houghton) தலைமை மருத்துவராகப் பணியமர்த்தி ஆரம்பித்தார். இதன் மூலம் முதன்முதலில் வீடுகளுக்குச் சென்று, மேலை மருத்துவ முறையில் செவிலியர்கள் பிரசவம் பார்க்கும் முறை அறிமுகப்படுத்தப்பட்டது. இதன் தொடர்ச்சியாக, டாக்டர் ஸ்கடரால் பள்ளிகொண்டாவிலும், குடியாத்தத்திலும் மருந்தகங்கள் தோன்றின.

இவருடைய மகத்தான மருத்துவ சேவையைப் பாராட்டி இந்திய அரசு 1939இல் “Kiser I India” என்ற விருதுடன் தங்கப்பதக்கமும் வழங்கியது. (Growth of Medical Education, p.59)

கல்யாணி மருத்துவமனை: (மெதோடிஸ்ட் மதராஸ் மிஷனரி சங்கம்)

இதைத் தொடங்கியவர் திவான்பகதூர் நாராயணய்யர் சுப்பிரமணியம். இவர் பாரிஸ்டர் படித்த வழக்கறிஞராக மதராஸ் உயர்நீதி மன்றத்தில் பணியாற்றிய பிறகு அட்மினிஸ்ட்ரேடிவ் ஜெனரல் மற்றும் மதராஸ் ஆபீஸ் டிரஸ்டியாகப் பணியாற்றியவர். இவர் பிராமண வகுப்பைச் சேர்ந்தவர், என்றாலும் பிறகு கிறித்துவ மதத்தைத் தழுவியவர். இவரால் மதராஸ் மைலாப்பூரில் தன் தாய் கல்யாணி நினைவாக மகளிர் மற்றும் குழந்தைகளுக்கான மருத்துவமனையை உருவாக்கி லண்டன் மெதோடிஸ்ட் மிஷனரியிடம் இதனை நடத்துமாறு ஒப்படைத்தார். பின்னர் இம்மருத்துவமனை தென்னிந்திய கிருத்துவ சபையினரால் நடத்தப்பட்டது. இம்மருத்துவமனையை 1909இல் திறந்தவர் மெதோடிஸ்ட் மிஷனரியைச் சார்ந்த லேடி ஒயிட். அந்நிலையில் 24 படுக்கைகளுடன் மிகவும் அர்ப்பணிப்புடன் பணியாற்றும் செவிலியர்களால் நடத்தப்பட்டது. இம்மருத்துவமனை இன்றும் பெரிய அளவில் மிகச் சிறப்பாக நடந்து வருவது குறிப்பிடத்தக்கது. (Improvement of the conditions of child birth, p.122, V.Gayathri thesis. p.213)

மகளிர் மருத்துவ தன்னார்வ நிறுவனங்கள்

தன்னார்வ நிறுவனமான, மதராஸ் மாகாண மகளிர் மற்றும் குழந்தைகள் நலக் கழகம் 1921இல் ஆரம்பிக்கப்பட்டு குழந்தை நல மையங்களை நடத்த உதவித்தொகை வழங்கியது. மேலும் இந்நிறுவனம் சுகாதாரப் பணியாளர்களுடன் பேறுகால மகளிரைக் கண்காணித்து அறிவுரை கூறுதல், மகளிர், குழந்தை குறித்த நலவாழ்வுக்கான, மேம்படுத்தக்கூடிய கருத்துக்களை பிரச்சாரம் செய்தல் ஆகியவைகளை மேற்கொண்டது.

1929இல் இக்கழகம் ஏழு மையங்களை மாநகராட்சியின் உதவித்தொகையோடு நடத்தியது. கிராமப்புறங்களில் 46 குழந்தை நல மையங்களுக்கு மாதம் ரூ. 25 வழங்கியது. இதுபோலவே, 1931இல் இந்திய செஞ்சிலுவைச் சங்கம் மதராஸ் மாகாணம் உட்பட இந்தியாவின் பல இடங்களில் மகப்பேறு மற்றும் குழந்தை நல சங்கங்களை ஆரம்பித்தது. மற்றும் செயின்ட் ஜான் ஆம்புலன்ஸ் கழகமும் மகளிர் மருத்துவத்தில் புதிய புதிய முறைகளையும் மற்றும் குழந்தை நலத்தையும் பேண பாடுபட்டது.

டாக்டர் சு.நரேந்திரன்