குற்றப் பரம்பரைச் சட்டத்தின் கொடுமைகள்
இங்கிலாந்தில் குற்றப் பரம்பரையாக முத்திரை குத்தப்பட்ட நாடோடிகளை (‘ஜிப்ஸிகள்’ போன்றவர்களை) ஒடுக்குவதற்காக இயற்றப்பட்ட சட்டங்களை முன்மாதிரியாகக் கொண்டு, இந்தியாவில் தனிநபர்களை ஒடுக்கும் விதமாகப் ‘போக்கிரிகள் தடைச்சட்டம்’ (1836) முதன் முதலில் அறிமுகப் படுத்தப்பட்டது. பின்பு ஒட்டுமொத்த இனத்தையே குற்றவாளிகளாக அறிவிக்கும் குற்றப் பரம்பரைச் சட்டம் (1871) கொண்டு வரப்பட்டது.
இந்தச் சட்டத்தின்படி, மாவட்ட ஆட்சித்தலைவர் எந்த ஒரு சாதியையும் குற்றப் பரம்பரையாக அறிவிக்கலாம்; அதை நீதிமன்றம் கேள்வி கேட்க முடியாது; குற்றவாளி - நிரபராதி என்ற பாகுபாடு எல்லாம் கிடையாது; ஒரு சாதியில் பிறந்த அனைவரும் பிறவி குற்றவாளிகள்தான் என்றது அந்தச் சட்டம். இந்தச் சட்டத்தின் கீழ் கொண்டு வரப்பட்ட சமூகத்தினருக்கு சொந்தமான இடத்தில் அரசானது தேடுதல் நடத்துவதோ அவர்களைக் கைது செய்வதற்கோ எந்தவித பிடியாணையும் இல்லாமல் இந்தச் சட்டத்தின் பெயரில் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் காவல்துறைக்கு அதிகாரம் உண்டு.
பட்டியலில் இடம்பெற்றுள்ள ஜாதியினைச் சேர்ந்த 16 வயதுக்கு மேற்பட்ட (சில இடங்களில் வரம்பு 11 வயதாக இருந்தது) அனைவரும் தங்கள் பெயர், முகவரி மற்றும் கைரேகையைக் காவல் நிலையத்தில் பதிவு செய்ய வேண்டும்.
கண்காணிப்பில் இருந்த சில கிராமங்களில் இரண்டு பதிவேடுகள் பராமரிக்கப்பட்டன. முதலாவது பதிவேட்டில் பல்வேறு காரணங்களால் (குறிப்பிட்ட கிராமத்தில் வசிப்பதே போதுமான காரணம்) கண்காணிப்பின் கீழ் உள்ளோரின் பெயர், தந்தை பெயர், தொழில், அங்க அடையாளங்கள், கைரேகை ஆகியவை பதிவு செய்யப்பட்டன. சில இடங்களில் கட்டை விரல் மட்டுமல்லாமல் எல்லா விரல்களின் ரேகையும் எடுக்கப்பட்டது. இரண்டாவது பதிவேடு நீதிமன்றத்தால் ‘குற்றவாளி’ என்று அறிவிக்கப் பட்டவர்களுக்கானது. இதில் முதல் பதிவேட்டின் அதே விவரங்களே பதிவு செய்யப்பட்டன.
முதல் பதிவேட்டில் உள்ளவர்கள் தினமும் காவல்நிலையத்தில் கைநாட்டு வைக்க வேண்டும். வெளியூர் செல்ல வேண்டுமென்றால் அவர்கள் கிராமப் பஞ்சாயத்தின் அனுமதி பெற்று, பின்னரே செல்ல வேண்டும். இதனால் ‘கைரேகைச் சட்டம்’ என்று பொதுமக்கள் இந்தச் சட்டத்தை அழைக்கத் தொடங்கினர். இரவு 11 மணியில் இருந்து காலை 5 மணிக்குள் மக்கள் கைநாட்டுகளை வைக்க வேண்டும். இதனால் அதிக மக்கள் இருந்த ஊர்களில் மாலை 7 மணி முதலே மக்கள் வரிசைகளில் நிற்கத் துவங்கினர்.
இரண்டாம் பதிவேட்டில் பெயர் உள்ளவர்களின் நிலை இன்னும் மோசம். வெளியூர் செல்ல வேண்டுமானால் ராதாரிச் சீட்டு பெற வேண்டும்.இவர்கள் மாலை 7 மணிமுதல் காவல் நிலையத்திற்கு எதிரே இருந்த திறந்த வெளியில்தான் இருக்க வேண்டும். குளிரோ மழையோ அங்கேதான் தூங்க வேண்டும். இதற்கிடையே இரவில் 4 முறை அனைவரும் இருக்கிறார்களா என்று முன்னிலைப்படுத்தி சரிபார்ப்பார்கள். அநேகமாக இரவு முழுவதும் தூங்க முடியாது. வயதானவர், புதிதாக திருமணமானவர்கள், வீட்டில் குழந்தை, தாய், நோய்வாய்ப்பட்டு உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தால்கூட விதிவிலக்கு கிடையாது. மனைவியின் பிரசவ நாளில் கூட அவர்களுக்கு விலக்குகள் அளிக்கப்படவில்லை.
ஓர் ஊரில் எந்தத் திருட்டு நடந்தாலும் உரிய குற்றவாளி கண்டுபிடிக்கப்படும் வரையில் இரண்டாவது பதிவேட்டில் உள்ளவர்களே அந்தக் குற்றத்தைச் செய்தவர்களாகக் கருதப்பட்டனர். முன்னர் அவர்கள் மீது இருந்த குற்றச்சாட்டு எதுவானாலும் உடன் இதுவும் ஒரு குற்றமாக சேர்த்துக் கொள்ளப்பட்டது. இதனால் காவல்துறை நிம்மதியாக இருக்க, ஊரில் உள்ள பெரிய மனிதர்கள் குற்றவாளிகளைத் தேடி அலைந்தனர். இந்தச் சட்டத்தில் இருந்து விலக்குப் பெற்றவர்களும் உள்ளனர்.
பல ஊர்களில் இந்த வித்தியாசம் இல்லாமல் ஒரே பதிவேடு பயன்படுத்தப்பட்டது. அந்த இடங்களில் எல்லோருமே காவல்நிலையத்தில்தான் படுக்க வேண்டும். காவல்நிலையம் இல்லாத ஊர்களில் ஊர் மந்தையில் காவல்துறை கண்காணிப்பில் தூங்க வேண்டும். வெளியூர் செல்ல வேண்டுமானால் அனைவருமே ராதாரிச் சீட்டு வாங்க வேண்டும்.
இன்னும் சில இடங்களில் சூரியன் மறைந்த பின்பும் சூரிய உதயத்திற்கு முன்பும் வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது. வீட்டுக்குள்ளேயே தங்களைக் கட்டுப்படுத்திக் கொள்ள வேண்டும் என்ற கட்டுப்பாடு இருந்தது. மாலை ஆறு மணிக்குமேல் நள்ளிரவோ அதிகாலையோ எந்த நேரத்திலும் ஒர் அரிக்கேன் விளக்குடன் ஒரு ஏட்டும், போலீஸும் வந்து விசிலடிப்பார்கள். அப்படி விசிலடிக்கும் போது, கிராமத்திலிருக்கும் ஆண்கள் எல்லோரும் ஒரு மைய இடத்தில் திரண்டு காலை மடக்கி உட்கார வேண்டும். பெயரைக் கூப்பிடும்போது சம்பந்தப்பட்டவர் ‘ஆஜர் ஏட்டையா’ என்று கூற வேண்டும். அப்படி வராமல், தூங்கிவிட்டாலோ சம்மந்தப்பட்டவர் அங்கு இல்லை என்றாலோ அதற்கும் தண்டனை உண்டு. ஒரு மாதமோ இரண்டு மாதமோ ஸ்டேஷனில் காவலுக்குப் படுக்க வேண்டும். இதற்கு கோர்ட் சட்டம் கிடையாது. வழக்காடுபவர், நீதிபதி எல்லாமே ஏட்டையா தான்.
சூரியன் தோன்றி மறையும் வரை வீட்டிலிருந்து வேறு எங்காவது ஊர்களுக்குப் போய்விட்டு வர வேண்டுமானால்கூட சட்டப்பிரிவு 10-ன்படி அரசுக்குத் தெரிவிக்க வேண்டும். அரசு கொடுத்த ‘ராதாரிச் சீட்டு’ (ராத்திரிச் சீட்டு) என்ற அனுமதி அட்டையை எப்போதும் தங்களுடன் வைத்துக் கொள்ள வேண்டும். இந்தச் சீட்டை மறந்து வைத்தால் அந்தக் காரணம் ஒன்றே கைது செய்யப்படப் போதுமானது.
ராதாரிச் சீட்டில் (G- பாஸ்) அந்த ஊரின் குற்றப் பரம்பரைச் சட்டப்படி நியமிக்கப்பட்ட அதிகாரியிடம் அனுமதி கையெழுத்து பெற்றுதான் வெளியூருக்கு செல்ல வேண்டும். அவ்வாறு செல்லும்போது எங்கு செல்கிறேன், எதற்காகச் செல்கிறேன், யாரைச் சந்திக்கப் போகிறேன், எவ்வளவு நேரம் அங்கே இருப்பேன், உத்தேசமாக எத்தனை மணிக்கு திரும்புவேன் போன்ற விபரங்களை தெரிவிக்க வேண்டும். அதேபோல் எந்த ஊருக்குச் செல்கிறோமோ அந்த ஊரில் இதற்கென நியமிக்கப்பட்ட உரிய அதிகாரியிடம் முன்னிலைப்படுத்திய விபரத்தைத் தெரிவித்து, அதேபோல் திரும்புவதற்கான அனுமதி பாஸ் பெற்று திரும்பி வர வேண்டும்.
சில இடங்களில் மூன்று பாஸ்கள் வழங்கப்பட்டன. ஒன்று அந்தப் பகுதியினைச் சேர்ந்த காவல் நிலையத்திற்கும் இன்னொன்று அந்த நபர் செல்லவிருக்கும் பகுதியினைச் சேர்ந்த காவல் நிலையத்திற்கும் மற்றொன்று அந்த நபருக்கும் தரப்பட்டது.
சில ஊர்களில் காவலர்களுக்கு பதிலாக உள்ளூர் பெரிய மனிதர்கள் அடங்கிய குழுக்கள் கையெழுத்து வாங்கும் பணியினைச் செய்தன. மேலும், ராதாரிச் சீட்டு வழங்கும் பணியினையும் செய்தன. கள்ளர் பகுதிகளில் இந்தக் குழுக்கள் ‘கள்ளர் பஞ்சாயத்துகள்’ என்று அழைக்கப்பட்டன. விவசாய நிலம் வைத்திருந்த விவசாயிகள், நிலவரி கட்டுபவர்கள், நிரந்தரத் தொழில் செய்வோர், அரசு அலுவலர், நிரந்தரமாக ஒரே இடத்தில் வசிப்போர் ஆகியோர் பலர் இந்தக் குழுக்கள் மூலம் கைநாட்டு வைப்பதிலிருந்து விலக்குகளையும் பெற்றனர். ஆங்கில ஆதிக்கத்திற்கு எதிராக எந்த நடவடிக்கைகளிலும் ஈடுபடாதவர்களுக்கே இந்த விலக்குகள் அளிக்கப்பட்டன.
ராதாரிச் சீட்டு விதிகளை மீறினால் 6 மாதம் முதல் 3 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை கிடைக்கும். கட்டுப்பாட்டு எல்லைக்கு வெளியே வந்தால் தலையாரிகூட அவரைக் கைது செய்யலாம். சந்தேகம் வரும்படி ஒருவர் நடந்து கொண்டால்கூட அவருக்கு 3 ஆண்டு சிறை தண்டனை உண்டு. இந்தச் சட்டத்தின்கீழ் ஒரு தீப்பெட்டியும் கத்திரிக்கோலும் கையில் இருந்தது என்பதற்காக ஒருவர்மீது குற்றவழக்குப் பதிவு செய்யப்பட்டது. இப்படி ஏராளமான அடக்குமுறைப் பிரிவுகள் அந்தச் சட்டத்தில் இருந்தன.
இச்சட்டத்தினால் காவல்துறையின் அடக்குமுறை அத்துமீறி இருந்தது. ராதாரிச் சீட்டு வாங்க அதிகாரிகளுக்கு கையூட்டு தரவேண்டி இருந்தது. அந்த மக்கள் இந்த கையூட்டு பணத்தைக் கொடுக்க கோழி போன்ற உடைமைகளை விற்றுதான் சமாளிக்க வேண்டியிருந்தது. இந்த அடக்குமுறையால் விவசாய வேலை கெட்டுப் போனது; வறுமை வளர்ந்தது; பொய் வழக்குகளால் நீதிமன்றங்களுக்கு அலைந்து சொற்ப நிலங்களையும் இழந்தனர்.
குற்றப் பரம்பரையினர் சட்டத்தின் கீழ் ஒரு குற்றவாளி ஒரு கிராமத்தில் நடமாடினார் என்றால் அந்தக் கிராமத்தில் உள்ள அனைத்து ஆண்களுமே விசாரணைக்கு ஆளாக்கப்பட வழி வகுத்தது. இப்படியாகக் கண்காணிக்கப்படும் கிராமங்களின் பட்டியல் நீண்டு கொண்டே சென்றது. இதனால் சில காலத்திலேயே மதுரையில் இருந்த அனைத்து கிராமங்களும் அரசால் கண்காணிக்கப்படும் கிராமங்களாயின. இதற்கென தனித்த ஒரு அமைப்பையே ஆங்கிலேய அரசு உருவாக்கியது. அரசின் அடக்குமுறைகள் உச்சத்தை அடைந்தன.
இந்த அடக்குமுறையின் தீவிரத் தன்மையை மாயாண்டித்தேவர் வழக்கினைப் பற்றி பார்த்தாலே உணர முடியும். மாயாண்டித் தேவர் என்பவர் இரவு நேரத்தில் ஒரு வீட்டிற்குள் கதவை உடைத்து நுழைந்து ஒரு ஆட்டினைத் திருடியதாக வழக்கு பதிவு செய்யப்பட்டு அந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. கடைசியாக இதற்கு ஏழு ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை வழங்கி தீர்ப்பளிக்கப்பட்டது. இதில் வழங்கப்பட்ட ஏழு ஆண்டுகள் கடுங்காவல் என்பது மிகக் குறைவானது; இவர் குற்றப் பரம்பரை நபர் என்பதாலும் மூன்றாவதாக பெற்ற தண்டனை என்பதாலும் தீவாந்திர ஆயுள் தண்டனையோ நாடு கடத்தும் ஆயுள் தண்டனையோ ஏன் வழங்கக்கூடாது என்று அரசு மேல்முறையீடு செய்தது. மேலும், மாவட்ட அமர்வு நீதிபதி தீவாந்திர ஆயுள் தண்டனை அல்லது நாடு கடத்தப்பட்ட ஆயுள் தண்டனை வழங்காததற்கு உரிய காரணத்தையும் கூறவில்லை என்று மேல்முறையீட்டில் கூறியிருந்தது! இப்படியாக அற்பமான குற்றங்களுக்கும், முறையாக நிரூபிக்கப்படாத குற்றச்சாட்டுகளுக்கும் கூட கடுமையான தண்டனைகள் வழங்கப்பட்டன.
குற்றப் பரம்பரைச் சட்டம் பல்வேறு கொடூரமான பிரிவுகளை உள்ளடக்கியதாக இருந்தது. அதில் குறிப்பிடப்பட வேண்டிய ஒன்று பிரிவு 24. இந்தப் பிரிவின்படி, பதிவு செய்யப்பட்ட குற்றப் பரம்பரையினைச் சேர்ந்த நபர் எவரேனும், ஏதேனும் குறிப்பிட்ட இடத்தில் காணப்பட்டால் அவர் வழிப்பறியோ திருட்டோ குற்றச்செயல் செய்வதற்காகத்தான் வாய்ப்பை எதிர்பார்த்து காத்திருக்கிறார் என்று நீதிமன்றம் திருப்தி அடைந்தால், அந்த நபருக்கு மூன்று ஆண்டுகள் வரை கடுங்காவல் தண்டனையும் ஆயிரம் ரூபாய் வரை அபராதமும் வழங்க பிரிவு 24(B) அதிகாரம் வழங்கியுள்ளது.
குற்றப் பரம்பரையின் கீழ் பட்டியலிடப்பட்ட ஒரு நபர் ஒன்றும் செய்யாமல் இருந்தால் கூட குற்றம் செய்வதற்காகத்தான் நின்றிருக்கிறார் என்று கருதி தண்டனை வழங்கினர். இதே போன்று இந்தக் குற்றப் பரம்பரை என்று பட்டியலிடப்பட்ட மக்கள் குற்றச் செயல்களில் ஈடுபடுகிறார்கள் என்று சொல்லி கடுமையான சட்டத்தின் பிடியில் வைக்கப்பட்டு அவர்கள் ஒடுக்கப்பட்டார்கள்.
குற்றப் பரம்பரைச் சட்டத்தின் பிரிவு 16, குற்றப் பரம்பரையைச் சேர்ந்த நபராகப் பதிவு செய்த நபர்களை செட்டில்மெண்ட்டிற்கு அனுப்பும் அதிகாரத்தை அளித்தது. செட்டில்மெண்ட், மறுசீரமைப்பு செட்டில்மெண்ட், சிறப்பு செட்டில்மெண்ட் என்று உருவாக்கவும், செட்டில்மெண்டில் உள்ளவர்களை அதே பகுதியிலோ, வேறு பகுதிக்கோ, வேறு மாவட்டத்திற்கோ வேறு மாநிலத்திற்கோகூட மாற்றி செட்டில்மெண்ட் பகுதி உருவாக்கவும் அதிகாரம் வழங்கப்பட்டது.
ஒரு குற்றப் பரம்பரை சமூகக் குழுவை வேறொரு சமூக இனக்குழுவோடு இணைத்து செட்டில்மெண்ட் உருவாக்கலாம். பெற்றோர்களையும் குழந்தைகளையும் தனித் தனியாகப் பிரித்து தனித்தனி செட்டில்மெண்டிற்கும்கூட அனுப்பலாம்.
ஒரு குறிப்பிட்ட நிலப்பகுதியை செட்டில்மெண்ட் ஏரியா என அறிவித்து அதில் இம்மக்களைக் குடியேற்றலாம். மேலும் இம்மக்கள், ஆலை, தொழிற்சாலை, சுரங்கம், கல்குவாரி, தேயிலை/காபி தோட்டம், பெரிய விவசாயப் பண்ணை போன்ற இடங்களுக்கு வேலைக்குச் செல்ல நிர்பந்திக்கப் பட்டார்கள். மலேசியா, இலங்கை, பினாங்கு, இந்தியாவின் மற்ற பகுதிகளுக்கு வேலைக்காகப் பலவந்தமாக அனுப்பப்பட்டவர்களில் பெரும்பாலானவர்கள் குற்றப் பரம்பரையினர் தான்.
குற்றப் பரம்பரைச் சட்டம் அமலில் இருக்கும் தொழிற்சாலை, தேயிலைத் தோட்டம் போன்ற இடங்களில் தொழிலாளர் சட்டம் செல்லாது. சிறுசிறு குற்றங்களுக்குக் கூட இவ்வாறு நாடு கடத்தப்பட்டு இந்தத் தோட்டங்களில் அரைஅடிமைகளாக சுரண்டப்பட்டனர். இவர்களுக்கு தொழிலாளர்களுக்குரிய எந்த உரிமையும், கூலியும் கொடுக்கப்படாமல் கடுமையாக சுரண்டப்பட்டனர். ஆப்பிரிக்க, ஆஸ்திரேலிய பழங்குடிகள் மீது விதிக்கப்பட்ட கடுமையான இனவெறி உழைப்புச் சுரண்டல் இங்கே இச்சட்டத்தின் அடிப்படையில் இம்மக்கள் மீது திணிக்கப்பட்டது.
மாகாண அரசு குற்றப் பரம்பரையினரில் ஒரு பகுதியினரைக் கடுமையாகக் கண்காணிக்கப்பட வேண்டியவர்கள் என்று கருதினால் அவர்களைச் சிறப்பு செட்டில்மெண்டுக்கு மாற்றலாம்.
இன்றைய ஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்டத்தில் ஸ்டூவர்ட்புரம் அப்படியான ஒரு சிறப்பு செட்டில்மெண்ட் பகுதிக்கு எடுத்துக்காட்டு. அது ஏருகுலாஸ் என்று அழைக்கப்படும் ஏருகுல ஆதிவாசிகளுக்காக உருவாக்கப் பட்டது. இந்தியாவில் செட்டில்மெண்டுகளை தீவிரமாகப் பின்பற்றி உருவாக்கி நடத்திய ‘ஹார்ல்ட் ஸ்டூவர்ட்’ என்பவரின் பெயரிலேயே அந்த செட்டில்மெண்ட் ’ஸ்டூவர்ட்புரம்’ என்று பெயரிடப்பட்டது. அதில் மட்டும் 6000 ஏருகுல ஆதிவாசிகள் இருந்தார்கள்.
அதேபோல குற்றப்பழங்குடி மக்களின் நடமாட்டத்தை முடக்கிக் கட்டுப்படுத்த ’சால்வேசன் ஆர்மி’ என்ற அமைப்பை உருவாக்கி இருந்தனர். செட்டில்மெண்டுக்குள் உள்ள விவகாரங்களை இது கவனிக்கும். இதனுடைய ஊழியர்கள் ராணுவ உடையுடன் இருப்பார்கள். இதனை ஈவிரக்கமற்ற நிழல் ஏகாதிபத்திய அமைப்பு என்பார்கள். இராணுவ நடைமுறையைப் பின்பற்றியவர்கள், இதன் தலைவரை ஜெனரல் பூத் என்று அழைத்தனர்.
அதேபோல இந்த சால்வேசன் ஆர்மி துப்பாக்கி போன்ற ஆயுதங்களையும் பயன்படுத்தி தாக்குதல்கள் நடத்துவார்கள். ஒரு குறிப்பிட்ட பகுதியை திடீரென்று ஆக்கிரமித்து போர் போன்ற சூழலை உருவாக்கி செட்டில்மெண்டை உருவாக்குவார்கள். இந்தக் குற்றப் பரம்பரைச் சட்டம் இவர்களுக்கு இவ்வளவு அதிகாரத்தினை வழங்கியிருந்தது.
ஒரு நாளைக்கு ஒன்று முதல் நான்கு முறை வரை குற்றப் பரம்பரையினர் என்று கருதப்படும் நபர்களை முன்னிலைப்படுத்தி சரி பார்ப்பார்கள். சரிபார்க்கும் போது இல்லாவிட்டால் கடுமையான தண்டனை வழங்கப்படும். ஒழுக்கம், கட்டுப்பாடு என்ற பெயரில் கடுமையான அடக்குமுறைகளை ஏவினார்கள். செட்டில்மெண்டுக்கு வெளியே காவல்துறை கண்காணிப்பில் ஈடுபடும் எவரும் அனுமதி பெறாமல் செட்டில்மெண்டுக்கு உள்ளே வரவோ வெளியே செல்லவோ கட்டுப்பாடு விதிக்கப்பட்டிருந்தது.
இந்த சால்வேசன் ஆர்மி இந்தியா முழுவதும் ஆயிரக்கணக்கான செட்டில்மெண்ட் முகாம்களை ஆரம்பித்தது.
கூட்டம் கூட்டமாக குழுக்களாக இனக்குழுவாக வாழ்பவர்களை இந்த சால்வேசன் ஆர்மி முதலில் குடும்பங்களாகத் தனியே பிரிக்கும். பின்பு அந்தக் குடும்பத்தையே தனியாகப் பிரிக்கும். ஒரு குடும்பத்தில் உள்ள குழந்தைகளைத் தனியே பிரித்து, வேறு செட்டில்மெண்ட் முகாமுக்கு மாற்றி இவர்களின் அடர்த்தியைக் குறைத்தது. கூட்டு வாழ்க்கை வாழ்ந்தவர்களை அவர்களின் இயல்பிருந்து மாற்றினார்கள்.
இவர்களைப் பயன்படுத்தவேண்டும் என்பதற்காக வறண்ட நிலங்களை 500 முதல் 1000 ஏக்கர் நிலத்தை ஒரு குடும்பத்திற்கு இவ்வளவு எனத் தனியே பிரித்துக் கொடுத்து அவர்களின் கூட்டு வாழ்க்கையைச் சிதைத்தது. நாடோடியாக வாழ்ந்தவர்களை நிரந்தரமாக ஓரிடத்தில் வசிக்க வைத்தார்கள். விவசாயம் செய்து பழக்கமில்லாதவர்களை விவசாயம் செய்யச் சொல்லிக் கட்டாயப்படுத்தியது. சாகுபடி செய்து விளைச்சலை அதிகப்படுத்தாவிட்டால் தண்டனை வழங்கப்பட்டது.
உசிலம்பட்டி பகுதிகளில் இருந்து 1917 ஆம் ஆண்டு 19 பிறமலைக்கள்ளர் இனக் குடும்பங்களை மனைவி, மக்கள் மற்றும் பெற்றோர்களோடு அழைத்துச் சென்று தேனி மாவட்டம் கூடலூர் மலைப்பகுதியில் ’குள்ளப்பக் கவுண்டன்பட்டி’யில் செட்டில்மெண்ட் அமைக்கப்பட்டது. 1919 ஆம் ஆண்டு மலேரியா மற்றும் கடுமையான தொற்றுநோய் வந்ததால் செட்டில்மெண்ட் திட்டம் நிறுத்தப்பட்டது.
மேலும், பிறமலைக்கள்ளர் சமூகத்திலிருந்து நூற்றுக்கணக்கானக் குடும்பங்களை சொந்த மண்ணிலிருந்து அகற்றி சென்னைக்கு அருகில் உள்ள பம்மல், ஒட்டேரி பிரிஸ்லி நகர் மற்றும் விருதாசலத்துக்கு அருகில் உள்ள அஜிஸ் நகர் பகுதிகளில் மிக மோசமான செட்டில்மெண்ட் முகாம் அமைத்து அவர்களைக் கடுமையாக கண்காணிப்புக்கு உட்படுத்தினார்கள். கிட்டத்தட்ட நாற்பது ஆண்டுகளுக்கு மேல் 1947 வரை அந்த முகாம்களுக்குள் என்ன நடக்கிறது என்ற விவரங்களை வெளி உலகம் அறியாமலேயே இருந்தது.
இப்படியாக மிக மோசமான மனித உரிமைகளுக்கெதிரானப் பல பிரிவுகளை அந்தச் சட்டம் கொண்டிருந்தது. இந்தச் சட்டத்திற்கெதிராக மக்கள்திரள் போராட்டங்கள் பல நடத்தப்பட்டன. இறுதியாக, சென்னை மாகாண சட்டமன்றத்தில் குற்றப் பரம்பரைச் சட்டத்தை முற்றிலும் ரத்து செய்கின்ற தீர்மானம் பெரும்பான்மை பலத்துடன் நிறைவேறியது. பிறகு, ஆளுநர் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டு, 1947 ஜூன் 5 ஆம் தேதி குற்றப் பரம்பரைச் சட்டத்தை ரத்து செய்வதற்கான அரசு ஆணை வெளியிடப்பட்டது.
தகவல் உதவி: குற்றப் பரம்பரைச் சட்டம் ஒரு மீளாய்வு - வழ. பாலதண்டாயுதம்
- மே 17 இயக்கக் குரல்