நோய் நாடி நோய் முதல் நாடுதல் மருத்துவர் களின் பண்பு. இவர்கள் நோயைப் போக்குவதுடன் மீண்டும் அந்நோய் வராதபடி எச்சரிக்கையாய் இருக்கும்படி கூறுபவர்கள்.
“தாய் முத லிருந்து தன் நோய்முதல் உரைப்ப.” (பெருங்கதை: 1-36:294)
“இன்றென் வண்ணம் இடை தெரிந்து எண்ணி
நுண்ணிதின் நோக்கி நோய் முதல் நாடிற்
பின்னிது காக்கும் பெற்றியரிதென.” (பெருங்கதை : 1-35:57)
“நோயுற அறியும் மருந்தோ ரன்ன
வாய்மொழிச் சூழ்ச்சித் தோழற்கு உணர்த்தலின்” (பெருங்கதை : 4-7 : 152)
பெருங்கதை என்னும் நூலில் அதன் ஆசிரியர் கொங்குவேளிர் என்பவர் நோயை வேருடன் நீக்கும் மருந்தைப் போலத் துன்பங்களை முற்றிலும் நீக்குதற்குரிய வழிகளைக் கூறும் நண்பர்களுக்கு மருந்தை உவமையாகக் கூறியுள்ளார்.
நல்வாழ்வுக் கொள்கை
சங்க காலச் சான்றோர் பிறரை வாழ்த்தும் போது நோயற்ற வாழ்வு பெற வேண்டி வாழ்த்தியதை சங்கப் பாடல்களில் காணலாம்.
“நோன்சிலை வேட்டுவ நோயிலை ஆகுக” (புறம் : 205)
“நோயிலை ஆகுமதி பெரும” (புறம் : 209)
“நோயிலர் ஆகநின் புதல்வர்” (புறம் : 196)
“பசி இலவாகுக பிணிசேண் நீங்குக” (ஐங்கு : 5)
என்று வாழ்த்துவதை மரபாகக் கடைப்பிடித்தவர் என்பதை, புலவர்களின் கூற்றால் அக்கால மக்கள் நோயற்று வாழ விரும்பியதில் கொண்டிருந்த வேட்கையும் பிணி பற்றிய விழிப்புணர்ச்சியும் நன்கு புலனாகிறது.
மக்களின் நலவாழ்வுக் கொள்கையாக, “வரும் முன் காப்போம்,” என்பது முக்கியமாகும், இதன் படி, “எய்ட்சு” என்று சொல்லப்படுகின்ற ஆட்கொல்லி நோயின் கொடுமையை எண்ணித் தடுப்பு முறையே முதல் மருத்துவமாகக் கூறப்படுகின்றது. வள்ளுவரின் ஓர் ஆழமான சிந்தனையில் எதையும் வருமுன் காப்பதுதான் மாமருந்தாகும் எனக்கூறி, அவ்வாறு காக்காவிட்டால் நெருப்பு முகத்து நின்ற வைக்கோல் போர் போல், அவன் வாழ்க்கை அழிந்துவிடும் என்பதை
“வருமுன்னர்க் காவாதான் வாழ்க்கை எரிமுன்னர்
வைத்தூறு போலக் கெடும்” (435)
என்ற குறளில் “வருமுன்னர்க் காப்பது” சிறப்பாகக் குறிப்பிடப்படுகிறது.
உடல் தூய்மை
மாதவிலக்கில் புணரக்கூடாது : உடல் தூய்மை யானது. தொல்காப்பியர் காலத்திற்கு முன்னரே தமிழகத்தில் நிலவியதைத் தொல்காப்பியக் கற்பியலில் காணப்படும் “பூப்பு” பற்றிய நூற்பாவால் அறியலாம்.
மாதவிலக்கின் போது மகளிர் வீட்டிற்குப் புறத்தே விலகி இருப்பர். இதன் நோக்கம் கண வருடன் உடன் உறைதல், புணர்தல் ஆகியவற்றைத் தவிர்த்தலே ஆகும்.
“பூப்பின் புறப்பா டீராறு நாளும்
நீத்த கன்றுரையார் என்மனார் புலவர்”
(தொல். கற். : 46)
பூப்பின் நீத்து என்னும் சொற்றொடர் பூப்பு நிகழ்ந்த மூன்று நாளும் தலைவியைத் தொடுதலும், அவளுடன் உறைதலும் நீங்க வேண்டும் என்பதை உணர்த்தும். அப்படிப் புணர்ந்தால், “சூதக சன்னி” என்னும் நரம்புக் கோளாறு (சித்த மருத்துவ நோய் நாடல்: ப.27) ஏற்படும் என்று சித்த மருத்துவத்தில் கூறப்பட்டாலும், இக்கால அறிவியலின்படி உடல் தூய்மை, துப்புரவு சார்ந்ததாகவே இத்தடுப்பு முறை எண்ணப்படுகிறது. பூப்புற்ற நிலையிலிருப் போரைக் “கலந் தொடா மகளிர்” (புறம்: 299) எனப் புறநானூறு குறிப்பிடுவதும் நோக்கத்தக்கது.
இதுபோலவே சங்கமருவிய காலத்தில் பல நல்வாழ்வுக் கோட்பாடுகள் கூறப்பட்டுள்ளன. கூந்தலில், கஸ்தூரி போன்ற மணப்பொருட் களைத் தேய்த்துக் கொண்டு நீராடுதல் உண்டு என்பதை
“நானம் கமழும் கதுப்பினாய்” (நாலடியார் : 294)
என்று நாலடியார் சுட்டியுள்ளது.
சுற்றுப்புறச் சூழல் தூய்மை
நீர்த்தூய்மை
புதிய நீரிலேயே நீராடுதல் வேண்டும் என்ற உணர்வு மிக்கிருந்ததைக் காணமுடிகிறது.
“அணங் குடைப் பனித்துறை தொண்டி அன்ன
மணம் கமழ் பொழில்”
என்னும் ஐங்குறுநூற்றுப் பாடலின் (174 : 2-3) வரிகள் இதனை எடுத்துரைக்கின்றன.
புது வெள்ளத்தில் நீராடுதல் உடலுக்கும், மனதுக்கும் மகிழ்வைத் தரும் என்ற குறிப்பும் காணப்படுகிறது. இச்செய்தியினை:
“முளி இலை கழித்தன முகிழ் இணரொடு வரும்
விருந்தின் தீம் நீர் மருந்து மாகும்.”
என்னும் நற்றிணை (53)யின் வரிகள் குறிப்பிடு கின்றன. மேலும் அக்கால மக்கள் பெரும்பாலும் ஓடும் நீர் நிலைகளிலேயே நீராடினர் என்பதையும் உணர முடிகிறது. நீராடல் இளமையைத் தரக் கூடியது எனும் செய்தியினை;
“சேய் உற்ற கார் நீர் வரவு
நீ தக்கதாய் தைந்தீர் நிறம் தெளிந்தாய் என்மாரும்
............................................
கிழவர் கிழவியர் என்னாது ஏழ்காறும்
மழ ஈன்று மல்லற் கேள் மன்னுக என்மாரும்.”
என்னும் பரிபாடல் வரிகள் (பரி. 11 : 114-121) எடுத்துரைக்கின்றன.
சங்ககால மக்கள் குடிப்பதற்கும், நீராடுவதற்கும் சுத்தமான நீரினையே பயன்படுத்தியுள்ளனர் என்பது தெரிய வருகிறது. இச் செய்தியினை;
“முன்றில் இருந்த முதுவாய்ச்சாடி
யாம் கஃடு உண்டென வறிது மாசின்று.” (புறம் : 319)
என்னும் புறப்பாடல் வரிகள் குறிப்பிடுகின்றது. மேலும் தங்கள் தேவைக்கான குடிநீரைத் தேங்கி யிருக்கும் நிலைகளிலன்றி ஓடும் நீர் நிலைகளி லிருந்தும் எடுத்துப் பயன்படுத்தியுள்ளனர் என்பதை,
“நல் மரன் நளி நறுந்தண் சாரல்
கல்மிசை அருவி தண்ணெனப்பருகி.”
எனும் புறப்பாடல் (150 : 15-16) ஓடும் அருவி நீரைப் பருகியமையைப் புலப்படுத்துகிறது.
தனிமனிதத் தூய்மை என்பது பெரும்பாலும் நீரினாலேயே காக்கப்படுகிறது. இக்கருத்தை வலியுறுத்தும் விதமாக,
“புறந்தூய்மை நீரால் அமையும்”
என்ற குறள் கருத்தும் அமைந்துள்ளது. இதனால் உடலைச் சுத்தம் செய்வதுடன், சுத்தத்துடன் இருக்க வேண்டும் என்ற உணர்வு பெறப்படுகிறது. சுத்தம் சோறு போடும் என்ற பழமொழி நினைக்கத் தக்கது.
தூய்மையான வீடு
வீட்டைத் தூய்மை செய்து வைத்துக் கொள்வது மட்டுமின்றி வீட்டின் முன்பகுதியைச் சாணமிட்டுப் பெருக்கிச் சுத்தமாக வைத்திருந்த செய்தியினை,
“பைஞ் சேறு மெழுகிய படிவநல் நகர்”
(பெரும்பாண். : 298)
என்னும் அடிகள் எடுத்துரைக்கின்றது. மாட்டுச் சாணம் மிகச் சிறந்த கிருமி நாசினியாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
“இடுமுள்வேலி எருப்படுவரைப்பின்” (பெரும்பாண். : நா. - 154)
இப்பாடல் வரி மூலம் சுற்றுப்புறம் மாசு படாது விலங்குகட்குத் தனி இடம் இருந்துள்ள தையும் அறிய முடிகிறது.
மேலும்,
“பாரி பறம்பிற் பனிச்சுனைத் தெண்ணீர்
தைஇத் திங்கள் தண்ணிய தரினும்.”
என்னும் குறுந்தொகைப் பாடல் (196 : 3-4) வரியும்,
“சுனை நீர்ச்சேற்று உலைக்கூட்டும்”
என்னும் அகநானூற்றின் (169) வரியும் சுனை நீரைக் குடிக்கவும், சமைக்கவும் பயன்படுத்தியமையைக் காட்டுகின்றன.
சுடுநீர்ச் சேமக்கலன்
நலனைக் காக்க சுடு நீரும் சேமக்கலனும், பனிக்காலத்தில் சூடாக்கிய நீரைக் குடிப்பதற்குப் பயன்படுத்திய செய்தியினையும், அதனைச் சேமக் கலத்தில் (பிளாஸ்க்) வைத்திருந்து தேவைப்படும் போது பருகியதையும்,
“அற்சிர வெய்ய வெப்பத் தண்ணீர்
சேமச் செப்பில் பெறீ இயரோ நீயே”
என்னும் குறுந்தொகைப் பாடலின் (277 : 4-5) வரிகள் புலப்படுத்துகின்றன.
அழுக்கற்ற ஆடைகளை அணிவதில் மிகுந்த நாட்டம் செலுத்தியமையை,
“புகைமுகந்தன்ன மாசில் தூவுடை” (திருமுருகு - 138)
“மாசில் காம்பு சொலித்தன்ன அறுவை”
(சிறு பாண். : 235)
இந்தப் பாடல் வரிகளினால் அக்காலத்தில் நோய் நொடியின்றி உடல் தூய்மையுடன் வாழ வழி வகுத்ததை அறிய முடிகிறது.
மனைகளில் வேம்பு
மனையில் உள்ளவர்கள், நோய்வாய்ப்
பட்டாலோ, ஊரில் நோய்க் குறி காணப் பட்டாலோ, நோய்த்தடுப்பு முறையாக மனையையும், சுற்றியுள்ள பகுதியையும் தூய்மைப்படுத்துவர். அதைப் போல மனைகளுக்குள் வெளிப்புறமிருந்து நோய்க் கிருமிகள் மனைக்குள் புகாமல் மனையைப் பாதுகாக்கும் பொருட்டு, மனையின் முகப்பில் வேம்பின் இலைகளைக் கொத்தாகச் செருகி வைக்கும் பழக்கம் இருந்திருக்கிறது என்பதை,
தீங்கனி இரவமோடு வேம்பு மனைச் செரீஇ
(புறம் : 281)
இப்பழக்கம் இன்றும் கிராமப்புறங்களில் அம்மை நோய் கண்ட வீடுகளில் காணலாம்.
ஒலி மாசுபாடு
சங்க காலத்திலேயே ஒலி மாசுபடுவதைத் தடுத்து உடல் நலம் பேணுவது குறித்த குறிப்புகள் காணக்கிடக்கின்றன. (எ.கா.) கரும்பு ஆலைகளும் அங்குப் பயன்படுத்தப்பட்ட இயந்திரங்களும் இரைச்சலை ஏற்படுத்திய செய்தியை இலக்கி யங்கள் பதிவு செய்துள்ளன. கரும்பு பிழியும் இயந்திரங்களின் ஓசையானது யானை பிளிறு வதைப் போன்று இருப்பதாக ஐங்குறுநூற்றுப் பாடல் (55) தெரிவிக்கின்றது.
வினை முடித்து மீளும் தலைவன் தலைவியைக் காண வேண்டும் என்ற ஆவலில் தேரில் விரை கிறான். அத்தேரின் மணி ஒலி வண்டுகளுக்கும் பறவைகளுக்கும் துன்பம் செய்யும் எனக் கருதி, அம்மணி நாக்கை நூலால் கட்டித் தேரை ஓட்டி வருகிறார் என்பதை,
“பூத்த பொங்கர்த் துணையோடு வதிந்த
தாது உண் பறவை பேதுறல் அஞ்சி
மணிநா ஆர்த்த மாண்வினைத் தேரன்.”
(அகம் - 4 : 10 - 12)
என்ற பாடலடிகள் சுட்டியுள்ளது.
எல்லோரும் உறங்கும் இரவுப் பொழுதில் தம் வீடு திரும்பும் தலைவன், ஒலியெழுப்புகின்ற தனது தேரை முன்னரே நிறுத்தி நடந்தே வீடு வருகிறான் என்பதை,
“பாணி பிழையா மாண்வினைக் கலிமா
துஞ்சு ஊர் யாமத்துத் தெவிட்டல் ஓம்பி
நெடும்தேர் அகல நீக்கி பை யெனக்
குன்று இழி களிற்றின் குவவுமணல் நீந்தி
இரவில் வம்மோ.”
(அகம் - 360 : 11 - 14)
என்ற பாடலடிகள் சுட்டியுள்ளது.
நல்வாழ்விற்கு உடற்பயிற்சி
உடம்பைச் செம்மையாய் வளர்ப்பதற்கு நல்லுணவும், நற்பயிற்சியும் இன்றியமையாதது. இத்தகைய உடற்பயிற்சிக்கேற்ற உயரிய பல விளையாட்டுக்கள் அக்காலத்தில் தமிழ் மக்கள் வாழ்க்கையில் அமைந்திருந்தன.
ஆடவனின் விளையாட்டுக்கள்
கொல்லேறு தழுவுதல், மற்போர் புரிதல், நீரில் மூழ்கி மண் எடுத்து விளையாடுதல் ஆகியவை ஆடவர்க்குரிய விளையாட்டுக்கள். விழாக்காலங் களில் போர்ப்பயிற்சி செய்து காட்டுவதும் இதில் அடங்கும்.
இது தவிர மரங்களில் ஏறி, மடுக்களில் குதித்து விளையாடுவதும் வீர விளையாட்டுக் களில் ஒன்றாகக் கருதப்பட்டது. (தமிழக வரலாறும் தமிழர் பண்பாடும் முனைவர் ந. அறிவுராஜ், முனைவர் ஆ. குமார், 2014 - பக். 90)
பந்தாட்டம்
இக்காலத்தில் இளைஞர் விரும்பி விளை யாடும் பந்தாட்டம், பழந்தமிழ் நாட்டிலேயே வழங்கியதாக அறியப்படுகின்றது. மன்னர் வாழும் தலைநகரத்தில் பந்தாடும் இடமும், ஒன்றாக விளங்கிற்று. இவ்வாறு அமைந்த அரங்குகள் பல பத்திகளால் வகுக்கப்பட்டு, பத்தி தோறும் பசும்பொன்னும் பன்மணியும் இழைக்கப்பட்டு, விளிம்பில் முத்து அழுத்தப்பட்டுக் கண்களைக் கவரும் வகையில் அமைந்திருந்தன.
அவ்வரங்கின் அழகை,
“முத்தம் வாய் புரிந்தன
மொய் கதிர்ப் பசும் பொனால்
சித்தி ரத்தியற்றிய
செல்வம் மல்கு பன் மணி
பத்தியிற் குயிற்றிவான்
பதித்து வைத்த போல்வன
இத்திறந்த பந்தெறிந்து
இளையராடு பூமியே” (சீவக சிந். : 150)
என்று சிந்தாமணி எடுத்துரைக்கின்றது. இவ்வாறு வகுத்தமைந்த அழகிய அரங்கத்தில் மங்கையரும் பந்தாடி மகிழ்ந்தனர்.
இவ்விரு வகை விளையாட்டோடு காலாலே பந்தடித்து விளையாடும் வழக்கமும், அக்காலத்து இளைஞரிடம் அமைந்திருந்தது. பந்தைக் காலால் எடுத்தலும், கையினால் அடித்தலும், நெற்றியால் தட்டுதலும், பத்தியாய்ப் புடைத்தலும், பரந்துலாவும் படி அடித்தலும் ஆகிய பலவகை விளையாட்டுக் களை இளைஞர்கள் விரும்பி ஆடி எல்லையற்ற இன்பமுற்றார்கள். (தமிழின்பம் : 148-152) என் பதை, சீவகசிந்தாமணி சிறப்புற இப்பொழுது ஆங்கில மக்களால் மேலை நாடுகளில் வெகுவாக வழங்கக் காணலாம்.
பெண்கள் பந்தாடுதல்
மயில் போன்ற சாயலமைந்த ஒரு மெல்லியல் மாது வளையணிந்த கையால் வலப்புறமும், இடப் புறமும், பந்தைப் போக்கி ஊக்கமாய் விளையாடக் கண்ட தோழியர் தம் தலைமகளின் மெல்லிய மேனி வருந்துமே என்று கிரங்கி நின்றார் என்பதை,
“துணையில் தோகை மஞ்ஞை
ஈயற்கிவரும் வகை போல்
மணியார் வளைசேர் முன் கை
வலனும் இடனும் போக்கி
இணையில் தோழி மார்கள்
இறுமால் இடை யென் றிரங்க
அணியார் கோதை பூம்பந்
தாடு மவளைக் காண்மின்” (சீவக சிந். : 925)
என்னும் கவியால் இனிது அறியமுடிகின்றது. மென்மையும், அழகும் அமைந்த போது, அரங்கத்தில் அங்குமிங்கும், செங்கை நீட்டிப் பந்தடிக்கும் ஆர்வம் மெல்லிய தோகை மயில் பறந்து வரும் ஈயலைப் பற்றுதற்கு அவற்றின் மேல் விரைந்து செல்லும் பான்மையில் அமைந்திருப்பது சால அழகியதாகும்.
இது தவிர மங்கையர் சிறு பந்துகளை மேலே வீசிப் பிடித்து விளையாடும் வழக்கமும், அக் காலத்தில் இருந்ததென்று தெரிகின்றது. இப் பந்துகள் தூய வெண்மையாய்ப் பளிங்கு போல் இலங்கிய பான்மையையும் சார்ந்த தன் வண்ண மாய் விளங்கிய தன்மையையும்,
“மையரி நெடுங்கண் நோக்கம்
படுதலும் கருகிவந்து
கைபுகில் சிவந்து காட்டும்
கந்துகம் பலவும் கண்டார்”
(பாலகாண்டம் மிதிலை : 16)
என்று கம்பர் வியந்துரைக்கின்றார்.
உடல் உறுதி பெற விளையாட்டு
விளையாட்டாகவே கடல் நீராடும் பரதவ மகளிர், பனை நுங்கின் நீரையும் கருப்பஞ்சாற்றையும் கலந்து பருகிக் கடலில் பாய்ந்து நீராடுவர். (புறம் : 34). இவ்விளையாட்டு உடலை வலிமையுடன் இருக்க உதவுகிறது. மேலும் அந்நேரத்தில் உடல் சோர்வடையாது இருக்க உடன் ஊட்டமளிக்கும் பானம் குடித்தது, இன்றைய நிலையில் உடல் சோர்வடையாமல் இருக்க பானங்களை (Health Drinks) அருந்துவதை ஒத்ததாக உள்ளது.
ஊஞ்சல் ஆட்டம்
இது தவிர மகளிர் கடல் அலையின்கண் நீராடி மகிழ்ந்தனர் (குறுந்தொகை : 144) பனை நாரினாலே திரித்த கயிற்றை மரக்கிளையில் பிணித்துத் தொங்கவிட்ட ஊஞ்சலில் ஆடினர். (நற். : 92)
வரிப்பந்தாட்டம்
பந்தாடுதல் நூலினால் வரிந்து கட்டப்பட்ட ஒரு வகைப் பந்தினைக் கொண்டு ஆடுதல் அன்றைய வழக்கமாக இருந்தது. மாடி வீடுகளில் மேல் மாடத்தில் மெல்லிய பெண்கள் வரிப்பந்தாடியது பற்றிப் பெரும்பாணாற்றுப்படை.
“பீலி மஞ்ஞையின் இயலிக் கால
தமனியப் பொற்சிலம் பொலிப்ப உயர் நிலை
வான் தோய் மாடத்து வரிப்பந் தசை இ.”
(பெரும்பாண் : 331 - 333)
என்று குறிப்பிட்டுள்ளது.
கைப்பந்தும், கால்பந்தும் ஆடினர் (நற். 104-374)
வரிப்பந்து ஆடினர் (கலித்தொகை : 51)
இதே போல் திண்ணைகளில் கழங்கினை வைத்து விளையாடியதாக,
“செறியரிச் சிலம்பின் குறுந்தொடி மகளிர்
பொலஞ்செய் கழங்கிற் றெற்றி யாடும்” (புறம். : 36)
என்ற புறநானூற்றுப் பாடலடிகள் சுட்டியுள்ளது.
கழங்காடு மகளிர்
இயற்கையில் கிடைக்கும் காய்களைக் கொண்டு எறிந்தும் எடுத்தும், உயரத் தூக்கிப் போட்டுப் பிடித்தும், கீழே கொட்டியுள்ளதைப் பொறுக்கியும் ஆடுவது கழங்காகும். பெண்கள் மட்டுமே பகலில் தங்களது இல்லங்களிலும் பின்புறங்களிலும், மர நிழலிலும், மேல் மாடங்களிலும் அமர்ந்து கழங்கு ஆடுவர். இருவர் பாடிக் கொண்டே கழங்கு ஆடுவர்.
“கழங்காடு மகளிரோதை யாயத்து” (சிலம்பு : 27 - 245)
என்ற வரிகள் மூலம் நீர்ப்படைக் காதையில்
மகளிர் ஆரவாரம் பொருந்திய கூட்டத்துடன் கழங்காடுகின்ற நிகழ்ச்சி குறிப்பிடப்படுகிறது. பெரும்பாணாற்றுப்படையில் பந்தாடிக் களைத்த பெண்கள் கைவளையல்கள் அசைந்தாடும்படி முத்து போல் மணல் பரப்பிய கழங்காடு இடத்தில் பொன்னால் செய்த கழற்காய்களைக் கொண்டு விளையாடுவர் என்பதை,
“கைபுனை குறுந் தொடி தத்தப் பைபய
முத்த வார்மணற் பொற் கழங்காடும்”
(பெரும்பாண். : 334-335)
என்ற வரிகளில் குறிப்பிடப்படுகிறது. இவ்வாட்டத் திற்கு ஒத்ததாகத் தற்காலத்தில் கற்களால், “ஏழுகல் ஆட்டம்” என்றும் அரளிக்காய்களைக் கொண்டு ஆடுவதைக் கழற்சிக்காய் ஆட்டம் என்றும் கூறுவர்.
உடற்பயிற்சி
உடற்பயிற்சி உரம் அளிக்கும். உரம் உள்ள வர்கள் நோயின்றி வாழலாம். இக்கருத்தைக் கொண்ட உடற்பயிற்சியைப் பற்றிய செய்யுள் ஒன்றை ஏலாதி என்ற நூல்,
“எடுத்தல், முடக்கல், நிமிர்த்தல், நிலையே
படுத்தலோடு, ஆடல் பகரின் - அடுத்து உயிர்
ஆறு தொழில் என்று அறைந்தார் உயர்ந்தவர்
வேறு தொழிலாய் விரித்து” (பா. 69)
என்று குறிப்பிட்டுள்ளது.
கையை ஊன்றி உடம்பை மேலே தூக்கு வதாகிய தண்டால், கை கால்களை முடக்கியிருத்த லாகிய ஆசனம், நிமிர்ந்து நிற்றல், தலை கீழாக நிற்றல், படுத்துச் செய்யும் பயிற்சி, குதித்தல் இவை உடற்பயிற்சிகளாகும். இவைகளின் சிறப்பைக் கூற வேண்டுமானால், பெரியோர்கள் உடம்பில் உயிர் அமைதியோடு வாழ்வதற்கான தொழில்கள் என்று இவைகளையே வேறு வேறு தொழில்களாகக் கூறினார்கள். இச்செய்யுளைக் கொண்டு தமிழர்கள் நெடுங்காலம் நலமுடன் வாழ உடற்பயிற்சி செய்து வந்ததைத் தெரிந்துகொள்ள முடிகிறது.
பொதுவான நோய்த்தடுப்பு முறை
வைகறைத் துயில் எழுதல், மலம், சிறுநீர், புணர்ச்சி, அதரபானம் போன்ற எச்சில்கள் உண்டான போது படித்தலையும், பேசுதலையும் தவிர்த்தல், தூய்மை குன்றிய காலத்தும், வாந்தி எடுத்த போதும், மயிர் களைந்த பின்னும், புணர்ச்சி நிகழ்ந்த பின்னும், மலஜலம் கழித்த காலத்தும் நீராடுதல் (ஆசாரக் கோவை : 4, 8, 10). பிறர் உடுத்திய அழுக்காடை, செருப்பு ஆகியவற்றைத் தீண்டாமை, இரவில் மரத்தின் கண் சேராமை, வாயிற்படிக்கு நேராகக் கட்டிலிட்டுப் படுக்காமை, மாலையில் உறங்காமை (ஆசாரக்கோவை : 12, 13, 22, 29, 30). வடக்குப் புறமும், வடகிழக்கு, வடமேற்கு, தென்கிழக்கு, தென்மேற்கு ஆகிய பக்கங்களில் தலை வைக்காமலும், போர்த்திக் கொண்டு உறங்குதல், மலஜலத்தைப் பகலில் தெற்கு நோக்கியும், இரவில் வடக்கு நோக்கியும் கழித்தல் ஆகாது (ஆசாரக்கோவை : 33) அடுக்களையை எச்சிற் படுத்தக்கூடாது. தன் கண்ணிற்கு மருந்து எழுதிய கோலால் அவ்வெச்சில் கழியாது, பிறர் கண்ணுக்கு மருந்து ஊட்டக் கூடாது (ஆசாரக்கோவை : 39, 4). மாதவிடாய் நிகழ்ந்தால் மூன்று நாள் மெய்யுறலாகாது. நீராடிய பின்பு பன்னிரண்டு நாளும் இணைந்து உறைதல் வேண்டும். உச்சிப்பொழுது, நடு இரவு, காலை, மாலை ஆகிய நேரங்களில் திருவாதிரை, திருவோணம், அமாவாசை, பௌர்ணமி, அட்டமி, பிறந்த நாள் ஆகிய நாட்களில் மனைவியுடன் தொடர்பு கொள்ளக் கூடாது. பாழ்வீடு, சுடுகாடு, பாழ்மரம் ஆகிய இடங்களில் சேராமலும் பகலில் தூங்காமலும் இருப்பது நோயின்மைக்கு வழி யாகும். பிறரைப் பார்த்து உடம்பு நன்றாக இருக் கிறது என்று சொல்வது தீயொழுக்கமாகும். (ஆசாரக் கோவை : 42, 43, 57, 59).
மேற்சொன்ன செய்திகள் நல்லொழுக்க விதி களாகவும், நல்வாழ்விற்கான தடுப்புமுறைகளாகவும் வலியுறுத்தப்படுகின்றன.
இதுபோலவே தேரையாரின் வெண்பாவில் நோய்த்தடுப்பு முறை நன்கு விளக்கப்பட்டுள்ளது.
“திண்ணம் இரண்டுள்ளே சிக்கல் அடக்காமல்
பெண்ணின் பாலொன்றைப் பெருக்காமல் - உண்ணுங்கால்
நீர் கருக்கி மோர் பெருக்கி நெய்யுருக்கி உண்பவர்தம்
பேர் உரைக்கின் போமே பிணி.”
மலஜலச் சிக்கலின்றி, பெண் மீது அதிக மோகம் கொள்ளாமல், உண்ணும் வேளையில் அதிக நீரைக்கொதிக்கவைத்து மோரை நீர்விட்டுப் பெருக்கி, நெய்யை நன்கு உருக்கி உண்பவர்க்கும் பிணி இல்லை என்பது பாடலின் நோய்த் தடுப்பு முறை கருத்தாகும்.
கந்த மூலம் உண்டு கடுந்தவம் புரிந்த முனிவரும் உடலின் பெருமையை உணர்ந்து, அதனைப் பேண வேண்டும் என்று அருளிய பொன்னுரைகள் தமிழ் நூல்களில் ஆங்காங்கே காணக் கிடைக்கின்றன.
“உடம்பார் அழியின் உயிரார் அழிவர்
திடம்பட மெய்ஞ்ஞானம் சேரவு மாட்டார்
உடம்பை வளர்க்கும் உபாயம் அறிந்தே
உடம்பை வளர்த்தேன் உயிர் வளர்த்தேனே”
என்பது திருமூலர் அருளிய திருமந்திரமாகும். ஆகவே பழந்தமிழ் மக்கள் உயிரைப் பேணிய வாறே உடலையும் பேணினார்கள் என்பதும், உடலை இகழத்தலைப்பட்ட பேதைமை இடைக் காலத்தில் இந்நாட்டில் புகுந்தது என்பதும் அறிஞரது கருத்தாகும்.