இந்தியா முழுவதும் உள்ளூர் மொழியில் மருத்துவம்

கல்கத்தாவில் உள்ளூர்மொழி வழி மருத்துவக் கல்வி ஆரம்பம்

18ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் மருத்துவ மனையில் வேலை பார்த்த பிரிட்டிஷ் சர்ஜன்கள் சில இந்தியர்களுக்கு நோய்கள் மற்றும் மருத்துவம் குறித்து பயிற்சி கொடுத்தனர். என்றாலும் இது ஒரு வரைமுறைக்கு உட்பட்டதாக இருக்கவில்லை. இப்படி பயிற்சி பெற்றவர்கள் சுதேசி மருத்துவர்கள் என அழைக்கப்பட்டனர். இவர்கள் அரசால் ஒரு ரெஜிமெண்ட்டுக்கு இருவரும் மற்றும் சிவில் ஸ்டேஷன்களுக்கு ஒருவர் அல்லது அதற்கு மேலும் பணியில் அமர்த்தப்பட்டார்கள். இவர்களை மக்களும் அரசும் கம்பவுண்டர் என அழைத்தனர். மேற் பதவிக்குச் செல்ல இவர்கள் தேர்வுக்கு ஆளாயினர்.

1813 சார்ட்டர் சட்டத்திற்குப் பிறகே ரூ. 1 லட்சம் இந்தியருக்கான கல்விக்குப்  பணம் ஒதுக்கப்பட்டது. இச்சமயத்தில் காலனி அரசு மருத்துவக் கல்வியை இந்தியருக்கு எந்த மொழியில் தருவது என்பதில் கவலை கொண்டது. மேலும் சப் மெடிக்கல் சர்வீஸ் ஆட்களை ஐரோப்பியர்களைக் கொண்ட ராணுவத்திற்கு (1812) அனுமதிக்க வேண்டியதாகவும் இருந்தது. ஆகவே இதற்காக நாட்டு மருத்துவர்களை உருவாக்கத் தகுந்த கல்வி நிலையங்களை ஏற்படுத்த வேண்டியதாய் இருந்தது. ஆரம்பத்தில் இந்தியர்கள் இப்பயிற்சிக்கு அனுமதிக்கப்படவில்லை. 1822க்குப் பிறகே இது சாத்தியமானது. இதற்கான மெடிக்கல் போர்டு சமஸ்கிருதத்தில் உள்ள மிகச் சிறந்த ஆயுர்வேத மருத்துவ நூல்களை 1822இல் சமர்ப்பித்து ஒரு முக்கிய நிகழ்வை உண்டாக்கியது. அதாவது உள்நாட்டு ஆயுர்வேத மருத்துவத்துடன் நவீன மருத்துவத்தையும் இணைத்துக் கற்பிப்பதே இதன் நோக்கம் ஆகும். (Medicine and Raj, p.19)

சுதேசி மொழியில் வங்காளத்தில் மேலை மருத்துவம்

ஆரம்ப காலத்தில் ராணுவத்திற்குத் தேவையான சுதேசி மருத்துவர்கள் ஆங்கிலத்தில் இல்லாது உள் நாட்டு மொழிகளிலேயே கற்பித்து அதே சமயத்தில் ஐரோப்பியர்களின் மேன்மையை விளக்கும் நவீன மருத்துவத்தையும் இணைத்துக் கற்பிக்க வேண்டியதாய் இருந்தது. ஆகவே, ஆரம்பத்தில் உள்நாட்டு மருத்துவ நிறுவனம் 1822இல் கல்கத்தாவில் டாக்டர் ஜேம்ஸ் ஜெம்மிசனை கண்காணிப்பாளராகக் கொண்டு ஆரம்பிக்கப்பட்டது. இவருக்கு ஊதியம் ரூ. 800/-. இவருக்கு உதவியாக ஒரு பண்டிட் பதவியில் அமர்த்தப் பட்டார். 1824 அக்டோபர் மருத்துவப் பள்ளி திறக்கப் பட்டது.

இந்த நிறுவனத்தில் 20 மாணவர்கள் தங்கள் படிப்பை உள்நாட்டு மொழியில் படிக்க ஆரம்பித்தனர். இதற்காக இந்தி அல்லது உருதில் ஆங்கில மருத்துவ நூல்களைக் கண்காணிப்பாளர் இந்திய மொழியிய லாளர்கள் துணையுடன் மொழிபெயர்த்துக் கொணர முயன்றனர். இதனைத் தொடர்ந்து லண்டன் பார்ம கோபிய 1825இல் மதுசூதன் குப்தாவால் மொழி பெயர்க்கப்பட்டது. இவர் சுதேசி மருத்துவ நிறுவனத்தில் மாணவராக இருந்து பிறகு கல்கத்தா மருத்துவக் கல்லூரிக்கு இந்தி வகுப்புகளுக்கு ஆசிரியராகப் பணியாற்றி, ஹ¨ப்பரின் உடற்கூறு வடிமேகம் (Hooper’s Anatomist’s vademecum)  எனும் நூலை மொழிபெயர்த்தார். இதற்காக ரூ.1000 இவருக்கு வழங்கப்பட்டது.

பண்டைய முறையில் மருத்துவ வகுப்புகள் நடத்தி மெழுகு பொம்மைகளைக் கொண்டு உடல் கூறு சுதேசி மொழியில் கற்பிக்கப்பட்டது. பிறகு ஆடு மாடுகள் மிருகங்கள் உடற்கூறைக் கற்க பயன் படுத்தப்பட்டது.

இந்நிறுவனத்தில் படித்த மாணவர்கள் மாதத்திற்கு ரூ. 8 பெற்றனர். இந்நிலையத்தில் படித்து தேர்ச்சி பெற்றபின் ராணுவத்தில் அல்லது அரசில் வேலைக்கு அமர்த்தப்பட்டு மாதத்திற்கு ரூ. 20 ஊதியமாக அளிக்கப்பட்டு 15 ஆண்டுகள் பணிபுரிய அனுமதிக்கப்பட்டனர். இதுதவிர பாதுகாப்புப் பணிக்குச் சென்றால் கூடுதல் ரூ.5 கொடுக்கப் பட்டது.

மேலை மருத்துவத்துடன் இந்திய மருத்துவமும் கற்பிக்கப்பட்டது

3 ஆண்டுகள் படிப்புப் பயிற்சியின்பொழுது இரண்டாகப் பிரிக்கப்பட்டு, முதல் பகுதியில் மருந்து தயாரித்தல், உடலியங்கியல் மற்றும் உடல்கூறு ஆகியன போதிக்கப்பட்டன. இரண்டாம் பகுதியில் மருத்துவம், அறுவை சிகிச்சை கற்பிக்கப்பட்டன. நோயாளிகளைப் பார்த்துப் படிக்க கல்கத்தாவின் பல மருத்துவமனைகளுக்குச் சென்று வந்தனர். உடற்கூறு கற்கும்போது மனித உடலைச் சோதனையிட்டுப் படிக்காது, சிறு விலங்குகளை அதற்குப் பயன் படுத்தினர். மேலும் பொது மருத்துவமனையில் நடைபெறும் சவப் பரிசோதனையின் போது பார்வையிட அனுமதிக்கப்பட்டனர். இக்காலகட்டத்தில் கண்காணிப்பாளர் டாக்டர் ஜெம்மிசன் இறந்த பிறகு, சர்ஜன் பீட்டர் பிரீட்டம்  (Peter(PeterBrettrom) பதவி ஏற்றார். இதே நேரத்தில் கல்கத்தா சமஸ்கிருத கல்லூரியில் சமஸ்கிருத மருத்துவ வகுப்புகள் தொடங்கப்பட்டு, அங்கு சரகர், சுசுருதா நூல்கள் கற்பிக்கப்பட்டன.

இத்துடன் உருதில் மொழிபெயர்க்கப்பட்ட நூல்களும் போதிக்கப் பட்டன. இதேபோல கல்கத்தா மதரசாவில் உருதில் மொழிபெயர்க்கப்பட்ட ஹ¨ப்பர் உடல்கூறு வடிமேகம் உட்பட பல நூல்கள் கற்பிக்கப் பட்டன. இந்நிலையில் உள்நாட்டு மொழியில் பயிற்றுவிப்பது அரசிற்குப் பெரும் தொல்லையாகவும் முறையாகக் கல்வியைக் கொடுக்க முடியவில்லையோ என்ற எண்ணமும் பள்ளி இயக்குநர்களுக்கு இருந்தது. இதன் வெளிப்பாடாக 1824 பிப்ரவரி 18இல் ஜேம்ஸ்மில், “இம்மாதிரி உள்நாட்டு நூல்களைக் கற்பிப்பதும், அவற்றைக் கற்பிக்கத் தேவையானவர் களை உத்தியோகத்தில் சேர்ப்பதும் தேவையற்றது என்பதைவிட, பொருளற்றது. மேலும் நமக்கு இந்துக்கள் அறிந்ததைக் கற்பிப்பது என்பது முழுமையான கல்வி ஆகாது,' என்று அரசுக்குப் பரிந்துரை செய்தார். பள்ளி இயக்குநர், உள்நாட்டு மொழிப் பள்ளியை மூட ஆணை பிறப்பித்தார். அரசு, இதற்கு உடன்படாது, இதன் தேவையை உணர்த்தியது. இதற்காகக் கிழக்கிந்தியக் கம்பெனியில் 1826 ஜூன் 21 பெரும் சர்ச்சையும் வாக்குவாதமும் நடைபெற்று கடைசியில் ஆணை திரும்பப் பெறப்பட்டது.

சுதேசிக் கல்வி வழி படிக்க பண உதவி

1830 நவம்பரில் டெய்லர் காலத்தில் அதிக மொழிபெயர்ப்புகள் நடைபெற்றன. இக்காலத்தில் சமஸ்கிருத கல்லூரிக்கு அருகில் 30 படுக்கை வசதியுடன் மருத்துவமனை கட்டப்பட்டது. இந்த மருத்துவமனை பாபுராம் கம்யூல்சென் என்பவரால் பெரும் தொகை அன்பளிப்பு அளிக்கப்பட்ட பின்னரே கட்டப்பட்டது. இவர் சமூக நீதிக் காவலர் கேசவ் சந்திரசென்னின் பேரனாவார். டைலர் இந்திய மொழிகளில் கற்பிப்பதன் அவசியத்தை வலியுறுத்தி, ஆங்கில வழிப் படிப்பை மறுத்து வந்தார். ஜான் டெய்லருக்குப் பிறகு பிரிட்டன் பணியில் அமர்ந்தார்.  சுதேசி மொழி வழிக் கல்வி 1835 வரையிலும் நடைபெற்று பிறகு அது அரசால் புறக்கணிக்கப் பட்டது.  இது இப்படி இருக்க,

மாணவர் ஆர்வம் காட்டவில்லை, பிராமணர்கள் உடல்கூறு கற்க மறுப்பு

பள்ளி நடந்து கொண்டிருக்கும்போது (1824-34) மாணவர்கள் சேர்க்கை மிகவும் குறைவாக இருந்தது. ஆர்வம் காட்டவில்லை. இதற்காகப் பள்ளி பிள்ளை களுக்கு ஊக்கத் தொகையைக் கூட்டிக் கொடுத்து, அரசுப் பதவிகளில் முக்கியத்துவம் அளிக்கப்படும் என்று கூறியது. கடைசியாக நிரந்தர வேலை அளிப்பதாகக் கூறிய பிறகே மாணவர் எண்ணிக்கை கூடியது. பிராமணர் உடற்கூறு படிப்பது கூடாது என்ற மூடநம்பிக்கையும் மாணவர் சேர்க்கைக்கு ஒரு தடையாய் இருந்தது. ஆரம்ப காலத்தில் சுதேசி மருத்துவ மாணவர்கள் உள்நாட்டு இராணுவ அதிகாரிகளின் பிள்ளைகள் அல்லது உள்நாட்டு மருத்துவர்கள் பிள்ளைகளாகவே இருந்தனர். பொது மக்களிலிருந்து மிகச்சிலரே மாணவராகச் சேர்ந்து படித்தனர்.

சுதேசி மொழி வழிக் கல்வி - அரசு ஏமாற்றமடைந்தது

மருத்துவக் கல்வி கற்பிப்பதில் திடீர் திருப்புமுனை 1833இல் நிகழ்ந்தது. கவர்னர் ஜெனரல் லார்ட் வில்லியம் பென்டிங் (William Bentinck) உள்நாட்டு மருத்துவ நிலையங்கள் எப்படி நடை பெறுகின்றன என்பதைக் குறித்து அறிக்கை அளிக்க ஒரு கமிட்டியை அமைத்து கேட்டுக் கொண்டார். இதன்படி அறிக்கை சமர்ப்பித்தபோது அரசு பெரும் ஏமாற்றம் அடைந்தது.

இதற்கு ஜான் டெய்லர் உள்நாட்டு மொழி மருத்துவத்தின் சிறப்பைக் கூறி வாதிட்டாலும், ஆங்கிலத்தை ஆதரிப்பவர் சார்பாக அலெக்சாண்டர் டர்ப் வாதாடினார். இதன்படி நூல்கள், படம், அனைத்தும் மிகுதியாக சொல்ல முடியாத அளவில் ஆங்கிலத்தில் உள்ளது. ஆனால், உள்நாட்டு மொழியில் மருத்துவம் மிகவும் அறிவுசார்ந்ததாக இல்லை. மேலும் செப்பமற்று உள்ளதாகக் கூறினார். பிறகு மெக்காலேயின் கல்வி அறிக்கையின்படி 1835 கல்கத்தா மருத்துவக் கல்லூரி ஆரம்பித்த நிலையில் ஆங்கிலம் பயிற்சிமொழி ஆக்கப்பட்டது.

உள்நாட்டு மொழிவழிக் கல்வி மறுப்பு

பென்டிக் கமிட்டியின் அறிக்கை 1834 அக்டோபர் உள்நாட்டு மொழிப் பயிற்சியைத் தடை செய்யக் கோரியது. அக்கமிட்டி இதற்குக் காரணமாக “உள் நாட்டு மருத்துவர்களைப் பெரும் பணச்செலவில் உருவாக்கியதால், அவர்களின் மூலம் அரசு பெறும் நன்மை குறைந்தது. மேலும் இவர்கட்கு கற்பிக்க ஆங்கிலமும் உள்நாட்டு மொழியும் கற்பிப்பவர் களுக்குக் கூடுதல் ஊதியம் தர வேண்டியதாய் உள்ளது. அதிக அளவு பணச் செலவு, நூல் எழுத, மொழி மாற்றத்திற்காக செலவிட வேண்டியதாய் உள்ளது. மற்றும் இம்மாணவர்கள் தங்கள் மத நம்பிக்கை காரணமாக உடற்கூறு பயிற்சி பெறாது பட்டம் பெறுவதால் குறையுள்ள படிப்பாகவே பட்டது எனக் கூறப்பட்டது. வங்காள உள்நாட்டு மருத்துவ நிலையமே காலனி அரசின் முதல் கல்லூரியாகும்.  இது மூடப்பட்ட பிறகு மீண்டும் 85 ஆண்டுகள் கழித்தே 1991இல் புரவன்சியல் அரசு சட்டத்தின்படி (Provincial Government Act) மறு பரிசீலனைக்கு வந்து புத்துயிர் பெற்றது.

மெடிக்கல் கவுன்சிலின் பரிந்துரைப்படி பென்டிக்கினால் 1835 உள்ளூர் மொழி மருத்துவ நிலையங்களை மூட ஆணை பிறப்பிக்கப்பட்டது. இதன்படி கல்கத்தாவில் சமஸ்கிருத கல்லூரி மற்றும் மதரசாவில் நடைபெற்று வந்த கல்லூரிகள் மூடப் பட்டு, கல்கத்தா மருத்துவக் கல்லூரி 1835 பிப்ரவரி 1இல் தொடங்க அடிக்கல் நாட்டப்பட்டது. இதனால் நிலையத்திலிருந்த நூல்களும், உபகரணங்களும் புதிய மருத்துவக் கல்லூரிக்கு மாற்றப்பட்டு அங்கு வேலை பார்த்த “வைத்தியப் பேராசிரியர்Ó மதுசூதன் குப்தாவும் அவருடன் வேலை பார்த்த மற்ற இருவரும் புதிய மருத்துவக் கல்லூரிக்கு மாற்றப்பட்டனர். மருத்துவக் கல்லூரி கண்காணிப் பாளர், உதவி மருத்துவர், இரசாயனத் துறைக்கான பேராசிரியர் என மூவருடன் 50 மாணவர்களைக் கொண்டு கல்லூரி தொடங்கியது. மாணவர்களுக்குத் தகுதிக்குத் தகுந்தபடி ரூ. 7 - 12 வரை உதவித் தொகை வழங்கப்பட்டது. இவர்கள் தேர்ச்சி பெற்ற வுடன் சப் அசிஸ்டண்ட் சர்ஜனாக அரசில் பதவி பெற்றனர். அல்லது தனியாக அவர்கள் விருப்பத்திற் கேற்ற இடத்தில் மருத்துவம் செய்யவும் அனுமதிக்கப் பட்டனர்.

ஆங்கில வழிப்படிப்பும் வேலை வாய்ப்பும்

வங்கத்தில் கல்வியும் மேலை விஞ்ஞானமும் ஆங்கில மொழி மூலம் கற்பிக்க உள்ளூர் மொழி களிடமிருந்து மாற்றம் பெற்றமைக்குச் சமூக ரீதியாக 1820-30களில் அங்கீகாரம் கிடைத்தது. உள்ளூர்வாசி களான மொகலாயர் ஆட்சி போனபின்பு தங்களுடைய வலிமையை இழந்தனர். புதிய படித்த சமுதாயமான பைத்ராலாக் (Baidralok), பிராமணர், பனியாஸ், கயாஸ்தாஸ் போன்ற இந்து உயர்சாதிக்காரர்கள் 18ஆம் நூற்றாண்டின் பிந்தைய பகுதியில் கிழக்கிந்தியக் கம்பெனியின் முகவர், துபாசி (மொழி பெயர்ப்பாளர்) மற்றும் வேலை ஆட்களாகவும் ஆகினர். இதற்குப் பெரும் துணையாய் இருந்தது ஆங்கில மொழிக் கல்விக்கு இவர்கள் மரியதே ஆகும். ஏனெனில் பன்னெடுங்காலமாகத் தங்களை ஆட்சி செய்த மொகலாயர்கள் மொழியையே பின்பற்றி வாழ வேண்டியதாய் இருந்தது. இக்கால கட்டத்தில் பாரசீக மொழி படித்த பல மேதைகள்கூட ஆங்கில வழிக்குத் திரும்பினர். 

அரசு உதவி இன்றி - இந்துக் கல்லூரி

இதன் தொடர்பாக உயர்சாதியினர் கல்கத்தாவில் 1816இல் இந்துக் கல்லூரியை அரசு உதவி இன்றியே ஆரம்பித்தனர். இதில் வானியல், வேதியியல், புவி இயல், வாழ்வியல் போன்ற விஞ்ஞான பாடங்கள் கற்பிக்கப்பட்டன. இக்கல்லூரியில் 1828இல் மொத்தம் 400 மாணவர்கள் கல்வி கற்றனர். இவர்கள் அனைவரும் இந்துக்களே ஆவர். இதன்பின் பல ஆங்கிலப் பள்ளிகள் திறக்கப்பட்டு, உயர்சாதியினர் அரசு வேலைகளுக்குத் தங்களை ஆயத்தப்படுத்திக் கொண்டனர். இதனைப் பெரிதும் ஆதரித்து இராஜாராம் மோகன்ராய் 1823 டிசம்பர் 11 அன்று தன் பிரசித்தபெற்ற பேச்சில், “மேலை விஞ்ஞானத்தைக் கற்றல் என்பது ஓர் அருமருந்து.  இது பல இந்துக் களைத் தீமைகளிலிருந்து உய்விக்கும்Ó என்ற

கருத்து இடம் பெற்றது.  இதைத் தொடர்ந்து மற்றொரு சமூக ஆர்வலர் பாபு ரதே காந்தவும், பெண் கல்விக்கு முக்கியத்துவம் அளிக்கக் கோரினார். இக்கால கட்டம்  பிராமணர்கள் உடற்கூறைக் கற்றுக் கொள்ள பிணப் பரிசோதனை செய்வது தங்கள் இந்து மதத்திற்கு எதிரானது என்று கருதிய காலமாகும். ஆனால் 1836 ஜனவரி 10இல் மதுசூதன் குப்தா மற்றும் அவர் மாணவர்களான உமாசந்திரன் சேட், துவாரகாநாத் குப்தா, ராஜ் கிறிஸ்டோ டே மற்றும் ஒருவருடன் ஆசிரியர் குட்டேவ் துணையுடன் பிணப் பரிசோதனையை, கல்லூரியின் ஒரு பகுதியில் நிகழ்த்தினார். ((Medicine and the Raj, p. 28)

இவர் பிணப்பரிசோதனை நிகழ்த்துவதற்குமுன் இதனைப் போற்றும் விதமாக கல்கத்தா வில்லியம் கோட்டையில் 50 முறை பீரங்கி முழங்கியது.

இதனை நினைவில் நிறுத்தும் விதமாக Drink Water Bethune - a member of Supreme Council,  கல்லூரிக்கு 1850இல் மதுசூதன் குப்தா படத்தை அன்பளிப்பாக அளித்தார். அது இன்றும் அங்குக் காட்சி அளிக்கிறது.

மதுசூதன் குப்தா பிணப் பரிசோதனை செய்த இரண்டு ஆண்டுகளுக்குப்பின், மற்றவர்களும் பிணப் பரிசோதனை செய்து உடல்கூறைக் கற்கத் தொடங்கினர். இதை வெள்ளையர்கள், இந்தியாவே மேலை விஞ்ஞானத்தை ஏற்றுக் கொண்டது போல் வியந்து போற்றினர்.

ஆங்கிலமொழி வழிப் பயிற்சி மூலம் 50 மாணவர்களும், எல்லா இனத்தவரும், மதத்தவரும் இணைந்து ஆங்கிலம் - வங்காளம் அல்லது ஆங்கிலம் - இந்தி மொழியில் படிக்கவும் எழுதவும் தெரிந்தவர்கள் கற்று வந்தனர். இவர்களுடன் சில மாணவர்கள் இலங்கை, பர்மாவிலிருந்தும் வந்து படித்தனர்.

ஆங்கில வழிக் கல்வி நடைபெற்றுக் கொண் டிருக்கும் அதே சமயம், ராணுவ வகுப்பு உள்ளூர் மொழியில் திட்டமிட்டபடி ஆரம்பிக்கப்பட்டது. 15 மாணவர்கள் உள்ளூர் மொழியை எழுதவும் படிக்கவும் தெரிந்த நிலையில் அனுமதிக்கப்பட்டு, மாத உதவி ஊதியம் ரூ.5 அளிக்கப்பட்டது. இவர் களும் கல்லூரி வளாகத்தில் வசிக்க அனுமதிக்கப் பட்டனர். இவ்வகுப்புகளுக்கு மதுசூதன் குப்தாவுடன் 4 ஆசிரியர்கள் பணியமர்த்தப்பட்டனர். இவர்கள் அனைவரும் இந்தியர்களே. இதில் மதுசூதன் குப்தா 1843 இல் கண்காணிப்பாளராகி ராணுவ வகுப்பையும் தலைமையேற்று  நடத்தினார். இது பழைய உள்ளூர் மொழி நிறுவனத்தைப்போல் இல்லாது மருத்துவ மனை, பரிசோதனைக்கூடம், சவப் பரிசோதனை ஆகிய வசதிகளுடன் கற்பிக்கப்பட்டன.  இதற்குப் பிறகு, 1853 வங்காளத்தைக் கற்பிக்கும் மொழியாகக் கொண்டு புதிய வகுப்புகளில் மாவட்ட மற்றும் கிராம மருத்துவமனைகளுக்குச் சென்று வேலை செய்ய கற்பிக்கப்பட்டது.

ஆனால், இராணுவ வகுப்பு மாணவர்கள் அரசுக்குத் தேவையான அளவிற்கு எண்ணிக்கையில் சேர்க்கையில் இல்லை.  சேர்ந்தவர்களும் ஒழுங்காகக் கல்வி கற்கவில்லை. இதனால் பலர் படிப்பைவிட்டு வெளியேற வேண்டியவர்களாயினர். 1838இல் இராணுவத்திற்கு அதிகமான உள்நாட்டு மருத்து வர்கள் தேவைப்பட்டபோது, கல்லூரி கவுன்சில் இங்குப் படித்தவர்களை அனுப்ப மறுத்தது. ஏனெனில் இவர்களைச் சேர்த்தால் ஐரோப்பியர் களின் பழக்க வழக்கங்களுக்கு எதிராகக் களங்கத்தை ஏற்படுத்துபவர்களாக இருப்பார்கள் என நம்பியதனால் ஆகும்.

இந்தியருக்கு மேல்நாட்டில் உயர்கல்வி

எனினும் கல்கத்தா கல்லூரியில் படித்த மாணவர்கள் உயர்படிப்பு படிக்க உள்ளூர் வாசியான பாபு துவாரகநாத் (Babu Dwarakanath) தனது செலவில் இருவரை டாக்டர் குட்டேவ் 1845இல் இங்கிலாந்திற்குச் செல்லும்போது அழைத்துச் சென்றார். இத்துடன் குட்டேவ் உதவியுடன் மற்ற இரு மாணவர்களும் இங்கிலாந்து சென்றனர். லண்டன் சென்ற நான்கு மாணவர்கள் துவாரகநாத் போஸ், கோபால் சந்திர கில், போலநாத் போஸ், சர்ஜ்கோமர் சக்கரவர்த்தி - இவர்கள் அனைவரும் அங்குப் படித்து தேர்வில் வெற்றி பெற்று (MRCS) 1846இல் இந்தியா திரும்பினர். இதில் சுர்சி கோமர் சக்ரவர்த்தி லண்டனில் தங்கி எம்.டி. படித்து லண்டனில் ஐ.எம்.எஸ். தேர்வில் முதலாவதாக வெற்றி பெற்றார். (1853) இவரே இந்தியர்களில் முதலாவதாக இந்திய மருத்துவப் பணித் துறையில் வேலை செய்து கல்லூரிப் பேராசிரியராக வேலை பார்த்ததுடன், கல்கத்தா நகரில் சிறந்த மருத்துவ ஆலோசகராகவும் விளங்கியவர்.

இருவகை வகுப்புகள்

1842 வரை கல்லூரியில் வகுப்பு ஆரம்பித்த பிறகு, ஆங்கிலக் கல்வி பிரைமரி கிளாஸ் என்றும், ராணுவ வகுப்பு, செகண்டரி வகுப்பு எனவும் அழைக்கப்பட்டன. மக்கள் மத்தியில் படிக்க வரவேற்பு ஏற்படும் என்ற காரணத்திற்காக ஆங்கில வகுப்பு மாணவர்கள் உதவித்தொகை பெற்றனர். ஆனால் 1843க்குப் பிறகு, படிக்க இலவச அனுமதி மட்டும் அளிக்கப்பட்டு, உதவித் தொகை கொடுப்பது சிறிது சிறிதாகக் குறைக்கப்பட்டது. 1857-58இல் உதவித்தொகை பெறுபவர் எண்ணிக்கை 50லிருந்து 35 ஆனது. உதவித்தொகையின்றி படித்தவர் எண்ணிக்கை 75 ஆனது. 1858க்குப் பிறகு ரூ.5 பிரைமரி வகுப்பில் சேர கட்டணம் வசூலிக்கப்பட்டது. பணம் கொடுத்து படிக்கும் பழக்கம் 20 ஆண்டுகளில் கிட்டத்தட்ட முழுமையானது. இவர்கள் கல்கத்தா பல்கலையில் பட்டம் பெற்று மேற்படிப்பிற்கு இங்கிலாந்து செல்ல அனுமதிக்கப்பட்டனர்.

ஆங்கில வகுப்புகளில் உயர்ஜாதி இந்துக்கள்

பிரைமரி வகுப்பில் பெரும்பாலோர் இந்துக்களே.  இதேபோல் ராணுவ வகுப்பில் முழுவதுமாக இஸ்லாமியர்களே மாணவர்களாக இருந்தனர். 1857-58 கணக்குப்படி (பிரைமரி வகுப்பில்) மொத்தம் 80இல் 79 இந்துக்களும் 1 முஸ்லீமும் இருந்தனர். இந்துக்களில் பிராமணர் - 32, காஸ்டோ - 30,  பைட்டோ - 9 ஆகும். இதனால் நாம் அறிவது, ஆங்கில வழிக் கல்வியை ஆதரித்துப் படித்தவர்கள், இஸ்லாமியர்களை விட இந்துக்களே என்பதாகும். ஏனெனில், இஸ்லாமியர்கள் தங்கள் மொகலாய ஆட்சி இழப்பு என்பதிலிருந்து மீளாது இருந்து, தங்கள் மதக் கொள்கைப் பிடியிலும் சிக்கி இருந்தனர். இதற்கு மாறாக, உயர்ஜாதி இந்துக்களில் (எ.கா. பிராமணர்கள், பனியாக்கள்) பெரும்பான்மை யானவர்கள் ஆங்கில வழிக் கல்வி கற்று அரசுக்கு அவசியமானவர்களாக மாறினர்.

ராணுவப் பள்ளியில் அதிகமாக இஸ்லாமியர்

ஆனால் இதற்கு மாறாக ராணுவப் பள்ளியில் 115 மாணவர்களில் 94 முஸ்லீம்கள்.  இவர்களில் பெரும்பாலானவர்கள் வடமேற்கு பிரதேசத்தைச்  (North West Pradesh) சேர்ந்தவர்கள்.  மற்றவர்கள் 21 பேர் இந்துக்கள் வங்காளத்தைச் சேர்ந்தவர்கள்.

இதன்பிறகு, ராணுவ வகுப்பில் சேர ஆங்கிலம் எழுதப்படிக்கத் தெரிந்திருக்க வேண்டும் என அரசு நிர்ப்பந்தம் செய்தது. இது முஸ்லீம் மாணவர்களைப் பெரிதும் பாதித்தது. பிறகு, படிப்பில் சேர ஆங்கில சோதனையில் வெற்றி பெற்றால் ரூ.250 உதவித் தொகை வழங்கப்பட்டது. இதில் முஸ்லீம் மாணவர்கள் பெரிதும் தோல்வியைக் கண்டனர். இதன் காரணமாகவே ஆக்ராவில் ஆங்கிலவழிக் கல்வி மருத்துவக் கல்லூரி 1853இல் தொடங்கப்பட்டது.

1852-53இல் வங்காள மொழி வழி மருத்துவப் படிப்பு உள்நாட்டு மருத்துவர்களை உருவாக்க ஆரம்பிக்கப்பட்டது. இதில் தேறியவர்கள் ஜூனியர் ராங்க்கில் அரசிலும், ஜெயில், தேயிலைத் தோட்டம், சுரங்கம் மற்றும் தொடர்வண்டி நிர்வாகத்திலும் பணியாற்றினர். இவர்கள் ஆங்கில வழிக் கல்வி பயின்றவர்களைக் காட்டிலும் அதிகமாக ஐரோப்பிய மருத்துவத்தைப் பரப்பினர். சுதேசி மொழியில் படிக்கும் போது இவர்கள் சவப் பரிசோதனை செய்வதும் படிப்பதும் திருப்திகரமாக இருந்தன.

வங்கமொழி பேசும் இஸ்லாமியருக்கு படிக்க ஆர்வமில்லை

சேர்க்கைக்கு வங்காள மொழியில் பள்ளி நடத்த (1852-53)  அழைப்பு அனுப்பப்பட்டது. இதில் 40 பேர் சேர்க்கப்பட்டனர். 30 நபர்கள் உதவித்தொகை பெற்றனர். இவ்வகுப்புக்கும் சேர்த்து மதுசூதன் குப்தா கண்காணிப்பாளர் ஆனார். 1852 மாணவர் சேர்க்கையில் முஸ்லீம்கள் மிகக் குறைவு. இவர்கள் வங்க மொழி பேசுபவராக இருந்தும், மாணவராக ஆர்வம் காட்டவில்லை. இதற்குக் காரணம் யூனானி மருத்துவத்தில் இருந்த நம்பிக்கை, அதைத் தங்களுடையது என்று நினைத்தது. மற்றொரு காரணம், தங்கள் மதம், தத்துவம் மற்றும் பண்டைய இலக்கியங்களைப் படிக்க வேண்டும் என்ற கொள்கைப் பிடிப்பு.

உலகின் மிகப்பெரிய கல்லூரியாக இருந்தும் அரசுக்குத் தேவையான பாதி அளவுகூட மக்களுக்குச் சேவை செய்ய சப் அசிஸ்டண்ட் சர்ஜன் மற்றும் சுதேசி மருத்துவர்களை உற்பத்தி செய்ய முடியவில்லை. ஆகவே, 1856 ஆம் ஆண்டு 447 மூன்றாம் தர உதவியாளர்களாகப் படிக்காதவர்களை அரசு மற்றும் இராணுவ சேர்க்கைக்கு உட்படுத்திட வேண்டியதாயிற்று. இதற்கு மற்றொரு காரணம், கல்லூரியில் சேர்ந்தவர்களும் பாதியிலேயே படிப்பை விட்டுச்சென்றதும் அடக்கம். இதில் வங்காள மொழியில் படித்தவர்கள் அதிகமாகும். சிலர் சில மாதம் உதவித்தொகையை மட்டும் பெற்றுக் கொண்டு, சில மாதங்களில் படிப்பை நிறுத்தினர். இது வறுமையின் காரணமாகவே ஆகும். மற்றும் சிலர் தனியாக மருத்துவ ஆலோசனை வழங்கச் சென்றதால் அரசின் பதவியில் சேரவில்லை மற்றும் சிலர் இங்கிலாந்திற்கு மேற்படிப்பிற்குச் சென்றனர். சிலர் இரயில்வே சேவையில் கூடுதல் ஊதியத்துடன் பணியாற்றினர். இன்னும் சிலர் தேயிலைத் தோட்டத்தில் சரியாகப் பட்டம் பெறாத நிலையில் ‘கூலி டாக்டர்’ என்ற பெயருடன் வேலை பார்த்தனர். இதற்கு 1865இல் அரசு தடை விதித்தாலும், தேயிலைத் தோட்ட முதலாளிகளின் ஆதிக்க சக்தியால் தடையை மீறி வேலை பார்ப்பதற்கு யாதொரு தடங்கலுமின்றி பணிபுரிந்தனர்.

வங்காள மொழியில் படித்து வெளிவந்து மருத்துவ ஆலோசனை வழங்கியவர்கள் உள்ளூரில் வேலைபார்த்த வைத்தியர் கிபிராஜ்களுக்கு (Kibirajes) எதிராளியாகத் தோற்றமளித்தனர். இதனால் பல உயிர்கள் காப்பாற்றப்பட்டன. இப்படி நல்ல நிகழ்வுகளைப் பாராட்டும் விதமாக வங்காள மொழியில் கற்பித்த ஆசிரியருக்கு ராய் பகதூர், கான்பகதூர் பட்டங்கள் (எ.கா. அறுவை மருத்துவர் பாபுராம் நாராயணன் போன்றவர்களுக்கு) வழங்கப் பட்டன. (Medicine and the Raj, p.29-33).

பயிற்று மொழி குறித்து வங்காளத்தைப் போன்ற வரலாற்றுத் தரவுகள் மதராசைப் பொருத்தமட்டில் மிக மிகக் குறைவாகவே காணக் கிடைக்கின்றன.

Pin It