இரவுகளைத் திருடி விற்கும்
மூன்றாம்தர வணிகன்
உங்களைத் தேடிவரும் வேளையில்
உங்கள் மனைவி உங்களோடு
வன்கலகம் செய்தபடியிருக்கலாம்,
உங்கள் குழந்தை உங்களை
கேலியின் உச்சத்தில் பரிகசிக்கலாம்
உங்கள் தாயோ தந்தையோ
இருந்திருந்தால் இப்படியெல்லாம் நடக்காதென
அண்டை வீட்டாருடன்
புலம்பத்துவங்கும் வேளை
புலருகின்ற சூரியனின்
முதல் வெளிச்சம்
கையில் ஒரு சுருக்குக் கயிறோடு
வருவதை கவனிக்கத் தவறுகிறீர்கள்.
முதல் கொலையாளி யாரென்று அறியாமலே
நீங்கள் அஸ்தமித்துவிடுகிறீர்கள்!
இடையறாது புலம்பும் உங்களை
இம்முறை மௌனித்து திகைப்பேற்படுத்த
சொப்பன குமாரிகளின் நாட்டிய நிகழ்வுகளும்
அடலேறென ஆர்ப்பரித்துப் பந்தாடும்
உங்கள் அபிமான நாயகனின்
அந்தரங்க லீலைகளும் விருந்தாக்கப்படுகின்றது.
பசிப்பது பற்றியோ
உடலில் ஊர்ந்து போகிற பூச்சியைப் பற்றியோ
எதுவுமே சொல்லத் திராணியற்றுப் போன
உங்கள் மாபெரும் தலைவன்
ஒரு மடலை எழுதுகிறான்
தொன்மையின் வரலாற்று மைதொட்டு
உங்களின் கொலையாளி
இம்முறையும் தப்பித்துப் போகிறான்.
நியாயத்தின் தராசுகளை
முன்னோர்களிடமிருந்து பெற்ற உங்களை
இரக்கமற்று தூற்றுகிறது நடைமுறை.
ஒவ்வொரு எடைக்கல்லையும்
எண்ணியெண்ணி கடலில் எறிவதாக எண்ணி
வீசிக்கொண்டிருக்கிறீர்கள்
அது முதலில்
உங்கள் வாழ்க்கைத் துணையைக் கொல்கிறது
பிறகு கவனமாய்
உங்கள் பிள்ளைகளைக் கொல்கிறது
பிறகான பிறகு
எக்கலிப்புடன் இறுதிக்கல்லை
உங்களுக்கென்று குறி பார்க்கிறது.
கொலையாளியின் மூன்றாவது முயற்சியிலும்
நீங்கள் உயிர்த்தெழும் ரகசியம்
தெருவில் கூவிக் கூவி விற்கிற
ஏதோ ஒரு லேகிய மகிமையென்றே
சுற்றம் திகைக்கிறது.
அரசோ உங்களை கொலை செய்துவிட்ட திருப்தியில்
இறப்புப் பட்டியலில் கூடுதல் பெயரை இணைக்கிறது.
கொலையாளிகளைத் தருகிறீர்கள்
கொலையாளிகளின் அடையாளங்கள்
உங்களைக் குழப்புகிறது.
வாழ்க்கைத்துணையின் உருவத்தை
குழந்தைகளின் பிம்பத்தை
பெற்றோர்களின் சாயலை
கொண்டலையும் கொலையாளிக்கம் மிரண்டு
உங்களைத் திருப்தியாக செய்கிறீர்கள்
நீங்கள் கொலை செய்கிறீர்கள்
தெய்வ அம்சம் கவனமாக பொருந்துகிறது
இந்த முறை உங்களுக்கு!