ஆலமர விழுது பிடித்து

அந்தரத்தில் ஊஞ்சலாடி

மகிழ்ந்திருக்கிறேன்

 

பூவரசு மரக்கிளையில்

மரக்குரங்கு விளையாடி

களித்திருக்கிறேன்

 

புளிய மரமேறி

புளியம்பழம் பறித்து

வீட்டுக்கு கொடுத்து

பெயரெடுத்திருக்கிறேன்

 

வேப்பமரத்திலேறி

காப்புக் கட்ட - இலைகளை

பறித்துக் கொடுத்திருக்கிறேன்

 

கொடுக்காப்புளி மரமேறி

கொத்துக் கொத்தாய் பழம் புடுங்கி

பகிர்ந்து தின்றிருக்கிறேன்

 

முருங்கை மரக்காய்களை

மரமேறாமல் லாவகமாய்

புடுங்கி கொடுத்திருக்கிறேன்

 

பாதாணி மரமேறி

பழுத்துச் சிவந்த கனிகளை

பறித்துச் சுவைத்திருக்கிறேன்

 

அன்று மரங்களோடு

உடல் வளைய விளையாடினேன்

 

இன்று பட்டனைத் தட்டி

உடல் நோகாமல் ஆடுகிறான்

கம்ப்யூட்டர் கேம்ஸ்

நோவோடு!

 

Pin It