ஏழு கடல்
ஏழு மலை தாண்டி
சிறைப்பட்ட
கிளியொன்று
உயிர் தாங்கி நிற்கிறது
இருத்தலின் பொருட்டல்ல...
வாழ்தலின் நிமித்தமாய்..

உடனிருத்தலென்பது
எனக்கு
உயிர்த்தலின் பொழுது
ஏகாந்த பொழுதது..

மீட்டப்பட வேண்டிய
வீணையொன்று
விரலுக்காய் காத்திருத்தலைப் போன்றது...

சத்தத்தால் ஆனதா?
மௌனத்தால் நிரம்பியதா?
வார்த்தைகள் நிறைந்ததா?
ஏதொன்றாகிப் போனாலும்
அது
எனக்கான பொழுது!

கூந்தல்
கலைத்த
காற்றுக்கு
உன் சாயல்
சீண்டி சீண்டி
சிலிர்க்கச் செய்வதால்..

தடுமாறிய
பொழுதுகளில்
தாங்கிப் பிடித்த
உன் கைகளுக்கு
தாய்மையின் வாசம்!

விடைபெறுதலின்
பொருட்டு
கோர்த்துக் கொள்கிற
விரல்களுக்குள்ளும்
பாஷை உண்டென்பதறிக!

காலச்சக்கரம்
கடந்து போகையில்
நெகிழ்ந்த பார்வையோடு
விடைபெற விழைகையில்
பத்ரமாயிரு!
என்ற வார்த்தைகளின்
வாஞ்சையுணர்ந்து கொள்..

நீ
செல்லும்
வரை
நின்று
கசியுமொரு வலி
உணர
இன்னுமோர் முறை
சந்திக்கத் தான் வேண்டும்!

 - இசைமலர்