துயரப்பிரிவின் மடியில்
துவண்டுறங்குகையில்
நித்திரையின் கரம்பற்றி
நீள்கிறதோர் கனவில்
ஆவாரஞ்செடிகள்
அடர்ந்திருக்கும் வெளியின்
ஆம்பல் குளமருகே
ஆழ்ந்தென் விழிநோக்கி
அறிவிக்கிறாயுன் நேசத்தை...

*

சந்திப்பின் முடிவில்
பசுமையினிழைகளோடும்
வெண்பட்டுக் கூம்பென
விரிந்திராத மொட்டினைக்
கொடுத்துப் போகிறாய்
குழந்தையின் முறுவலுடன்..

*

அல்லியை விடவும்
அழகாயிருக்கிறது
அதன் தண்டு...
ஈரம் பொதிந்ததாய்..
இதழினும் பளபளப்பாய் ..
இதயத்தில் பதியனிட ஏதுவாய்....


*

தாயின் இடுப்பினின்று
தரையிறங்க நழுவுமோர்
மழலையின் துள்ளலுடன்
மலர்த்தண்டினின்று
மண்நோக்கி வீழ்கின்றன
நீர்த்துளிகளுடன் சில
கவிதைகளும்..

*

விடியலின் மின்தடைக்கு
விழி திறக்கையில்
எழிற்கூம்பின் வடிவொத்து
எரிசுடரின் கீழ்
உருகும் மெழுகினுடல்
உவமையாகிறதென்
அல்லித்தாளுக்கு...

*

ஒப்புமையின் உக்கிரம் தாளாது
உள்ளத்தின் பதியன்களை
அழுகையடக்கி அறுத்தெறிகையில்
அடித்தண்டில் சேறென
அப்பிக்கிடக்கும் வலியை
அகற்றும் திறனில்லை
எனக்கு.

- கௌரிப்ரியா