சைவ உணவில் சாதனை செய்வதும்
அசைவ உணவில் அசத்தி முடிப்பதும்
பெண்களே பெருமூச்சுவிட
என் சமையலில் எச்சில் ஊறும் மனைவிக்கு...
ஊற வைத்து உருட்டிக் கசக்கியும்
அடித்துத் துவைத்து அலசிப்பிழிந்தும்
குருட்டழுக்கு போகலேயே
அவரு வந்து தொவச்சாத்தான்
தும்பை பூவாய் துணி சிரிக்கும் என
என் மீது நம்பிக்கை வைக்கும் மனைவிக்கு...
கோழி கூவும் நேரத்திலே
கூட்டிப் பெருக்கி சாணமிட்டு
வண்ணப்பொடி கையிலெடுத்து
வார்த்து வைத்த கோலங்களை
வச்ச கண்ணு மாறாதா
வழிப்போக்கர் யாவரும்...
ஊருக்கண்ணே
உங்க மேலேதான்னு
செல்லமாய் கன்னத்தைக் கிள்ளி
திருஷ்டி சுத்திப்போடும் என்மனைவிக்குத்
தெரியுமா..?
இந்த அனுவபமெல்லாம்
ஒரு கை ஊனமான என் தாய்க்கு
நான் செய் ஒத்தாசையால் வந்ததென்று...