ஊருக்குள் மிருகங்கள்
உலவுவதாய்ச் சொன்னார்கள்
 
இருள் கவிந்ததும் வெளிவருவதாயும்
ஒளி வந்ததும்
மறைந்து போவதாயும் பேச்சு

பகலும் இரவுமற்ற
பொழுதுகளில் பார்த்தொமேன்றனர்
நரிகளை ஆடுகளெனச்
சத்தியம் செய்தவர்கள்

ரத்தமும் சதையுமாய்
உண்டு செரித்து, மிருகங்கள்
எச்சமாய் விட்டுச்செல்கின்றன
மிச்ச மீதி உயிரையோ,
அழிக்கப்படாத கொஞ்சம் கற்பையோ,
கிழிக்கப்பட்ட இதயத்தின்
கடைசி ஒலியையோ,
ஒன்பதரை மாதங்கள்
ஒன்று சேர்ந்து
ஒரு நொடிக்குள்
உருக்குலைக்கப்பட்ட சிதைவையோ!

மிருகங்களின் வாயொழுகும்
குருதியில் தோய்ந்தபடி,
குற்ற உணர்வோடு வீடு சேர்கின்றன
செய்தித்தாள்கள்

வளர்ந்த வண்ணமேயிருக்கின்றன
மிருகங்கள் குறித்தான
பேச்சும், பயமும்

தீராதிருப்பது,
மிருகத்தின் உருவம் பற்றிய
சர்ச்சையும்,
மிருகத்தின் மீதான ரகசிய
மோகமும்தான்

புகையுருவமாய்ப் புலப்படாமல்
எழுந்தலைகின்றன உருவங்கள்!

பிறப்புறுப்பைத் தீண்டிச்சென்ற
பககத்துவீட்டுக்காரனைப்
போலிருந்ததாய்ச் சொன்னாள்
புன்னகைக்க மட்டுமே
அறிந்திருந்த ஒரு சிறுமி

சிகரெட் புகையடைந்த
விடுதியறையொன்றில்
வன்புணர்ந்தவனின்
கண்களைக்
கொண்டிருந்ததென்றாள்
வீதியோரத்தில் கிடக்குமொருத்தி

உயிர் பிழிந்து ரசித்த
உருவங்களினூடே ஒளிந்துகொண்ட
காதலனைப்போல்
கோரமாக இருந்ததென்றாள்
இமைப்பதை மறந்துபோன
இமைகளைக் கொண்டவள்

ஆண்மையைத் தன்னிடம் மட்டும்
நிரூபிக்கும்
கணவனின் உயரமிருக்குமென்றாள்
தேனிலவில் உடல் தொலைத்த
மனைவிகளில் ஒருத்தி

தெருமுனையைக் கடக்கையில்
துகிலுரியும் பார்வையை
வீசிச்செல்லும் எவனோ ஒருவனை
ஒத்திருந்ததென்றாள்
எப்போதும் உடை சரி செய்யும்
எவளோ ஒருத்தி

மிருகத்தின் உருவம்
இன்னதென்று தெளியவில்லை.
தன்னைபோலில்லை என்பதே
சந்தோஷம் எல்லோருக்கும்

ஆனால்,
யாருமற்ற இரவுகளில்,
எல்லோரும் சரி பார்க்கிறார்கள்
கண்ணாடி காட்டும் பிம்பத்தில்
கொஞ்சமேனும் மிருகத்தின் சாயலை.

 

எல்லா ஊர்களிலும் ஒரு கதை

ஆணும் பெண்ணும்
காதலித்தார்கள்
காதலனும் காதலியும்
கட்டிக்கொண்டார்கள்
கணவனுக்கும் மனைவிக்கும்
ஒரு குழந்தை பிறந்தது
இப்பொழுது
குழந்தையின்
தந்தையும் தாயும்
ஒன்றாக வசிக்கிறார்கள்


தன்னிரக்கம்

வெயிலை மிதித்ததெண்ணி
வருந்தும் ஒரு கணத்தில்
என் தலை மீது
தன் ராட்சச கால் பதித்து
நடந்து போயிருந்தது
சூரியன்

ஒத்ததிர்வு

நேரெதிர் திசைகளில்
அதிவேகமாகக் கடந்து போய்விட்ட
ரயில்களென இருந்தோம்
நாம்
கடந்துபோன
கணத்தின் அதிர்வு
செல்களில் ஊடுருவி
ஒத்திசைத்துக் கொண்டிருக்கிறது
இன்னும் இருவரிலும்

வாயுள்ளது

நல்லா கூர் தீட்டி
செவப்புக் கலரடிச்சு
'அம்மா' னு வாய் பொளந்து
சாராயம் ஊத்தி
ஊர் சுத்தித் தடையடிச்சு
துணியாட்டி வெறியேத்தி
ஓடவிட்டு கூட்டமாப் பாஞ்சு
வால் புடிச்சு மேல் இழுத்து
திமிலணச்சு
ஆம்பிளத்தனத்த நிரூபிச்ச பெறகு,
குரும்பாட்டுக் கறி தின்னு
திருப்தியா முடிஞ்சு போச்சு
இந்த வருச மாட்டுப்பொங்கலும்.

- சேரல்

Pin It