பட்டென்று குதித்து
படக்கென்று கால் படாமல்
நகர்ந்து விடும் பூனையை
ஒரு பேச்சுக்கு
கள்ள பூனை என்கிறேன்
மறுபேச்சுக்கு
சக பூனையைப் போல
மாறி விடும் முகத்தை
என்ன செய்து மாற்றுவது
அந்நிய மியாவ் சத்தம்
செவிக்கொன்றாய் எதிரொலிக்க
அச்சுறுத்தும் பூனை நடை
தனித்த கால்களின் குறுக்கே
அட்டகாச மீசையில்
மடங்கி எழும்பும் கண்களோடு
ஜோடி பூனைகள் எதிரும் புதிரும்
பொதுமொழிக்குள் தன்னை தானே
காட்டிக் கொடுத்தல்தான்
பூனைகளுக்கும் அழகு
கண்டதும் மறக்கும் நிறத்தோடு
ஒன்று வரலாம் அல்லது போகலாம்
ஒரு புத்தம் புது சுவர்
இப்படியாக
தினம் ஒரு பூனைக்குத்தான் காத்திருக்கிறது

- கவிஜி

Comments

14 comments

14
bharathichanadran
அருமை. நவீனம் விளையாடுகிறது.
குமரன்
நவீன விளையாட்டை விளங்கப்படுத்தினால் நாங்களும் சேர்ந்து விளையாடுவோம்
bharathichanadran
ஒரு கவிதை, அதன் தரத்தில் வாசகரின் பார்வையாலேயே மதிப்பிடப்படுகிறது.

ஏன் கவிதை சரியில்லை என்பதற்குக் காரணம் கூறப்படுவத்ற்குச் சாத்தியம் ஆகிறபொழுது, ஏன் கவிதை நவீனமானது என்பதற்குக் காரணமும் சாத்தியமும் இல்லாமலா போய்விடும்.

முப்பரிமாண கவிதை புரிதலில் கவிதையின் இடத்தை அறியும் அளவுக்கு வாசகனின் தரமும் உயர்ந்திருந்தாலே போதும். கவிதை கவிதையாகி விடும். தரமின்மையால் எப்போதும் எல்லாமும் காலியாகித் தான் கிடக்கும்.

மனிதகுணம் ஆளுக்காள் தன் முகத்தையும் குணத்தையும் மாற்றி மாற்றிக் கொண்டு பூனைத்தனமாய் தானே வாழ்கின்றோம். நாம் மட்டுமல்ல. நம் எதிராக இருப்பவரும் பூனையாகத் தானே நம்மிடம் வேசமிடுகிறார். கவிஜி என்பதை கவிச்சி என் அழைப்பதன் பூனைத் தனம் என்ன? இதுதானே? இது தான் கவிதையாகி இருக்கீறது.

நடைமுறைவாதம் (Pragmatism) எனும் நவீனக் கோட்பாட்டை அறிந்து கவிதையைப் பாருங்கள். எல்லாம் அதில் நவீனமாய் விளையாடிவதை உணரலாம்.
இதற்கு முன்னர் கூட ஒரு முறை கவிஜி கவிதைக்கு இதெல்லாம் கவிதை தானா எனத் தாங்கள் கேட்டதாக உணர்கிறேன். கவிதையின் பண்பு வேறு. அதை எல்லோரும் அப்படியே புரிந்து கொள்ள வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. வாசிப்பவருக்குத் தக அது தன்னை வெளிப்படுத்திக் கொள்ளும். பூனை பிறரை ஏமாற்றி கள்ளத்தனமாக நமது பொருளைத் திண்ணும் பழக்கமுடையது. அது செய்யும் தவறை தடாலடியாகச் செய்யாமல் பதுங்கிச் செய்வது. இதைத் தானே மனித சமூகம் இன்று செய்து கொண்டிருக்கிறது. மிருகங்களின் குணத்தொடு தானே இன்று மனித உலா .
எனக்கு இக்கவிதை நவீனத்தைக் கொண்டுள்ளது என உணர்கிறேன். தங்களுக்கும் அதே விளைவைத் தரவில்லை என்றால் தரமில்லை என்றாகிறாகிவிடாது என்றும் உணர்கின்றேன்
மேலதிக உரையாடல் தமிழுக்கு ஆரோக்கியமாகும். தொடர்க.
குமரன்
இது ஒரு கவிதை என்று கண்டிப்பாக நம்புகிறீர்களா என்ற எனது பதிவு இங்கு வெளியிடப்படவில்லை அது எப்படி தங்கள் பார்வைக்கு வந்தது அப்படியாயின் இங்கும் இந்த சிறிய விடயத்தில் கூட உள்ளடி வேலை நடக்கின்றதா
குமரன்
பாரதி சந்திரன் முடியுமானால் மேலே உள்ளதை அனைவரும் விளங்கிக்கொள்ளும் வகையில் ஒரு சிறு கட்டுரையாக எழுத முடியுமா
bharathichanadran
அனைவரும் விளங்கிக்கொள்ளு ம் வகையில் ஒரு சிறு கட்டுரையாக எழுத முடியுமா? என்றால் அது முடியாது. ஆனால், விளாவாரியாக அந்தக் கவிதைக்குள் உள்புகுந்து வீரியமான அதன் பொருளை விளக்க முடியும். நவீனம் உலகளாவிய பார்வையுடையது. கோட்பாடுகளை உள்ளடக்கியது. அது அனைவருக்கும் பரிட்சையமானதாக இருக்குமானால் தாராளமாக எழுதுகிறேன்.
குமரன்
வீரியமான அதன் பொருளை எங்களுக்கும் விளங்க வைக்க முடியுமா
bharathichanadran
கவிதையை விளக்க முடியுமா என்பதற்குத் தான் முன்பே கூறினேன். எல்லோருக்கும் விளங்க வைக்க முடியாது. ஆனால் நான் உணர்ந்தவற்றை விரிவாக விளக்க முடியும் என்று.

கவிதை எனக்குப் புரிந்தவாறே உங்களுக்கும் புரிய வேண்டும் என்பதோ, ஒரு கவிதை எல்லோருக்கும் பொதுவான பொருளை மட்டுமே தர வேண்டும் என்பதோ கிடையாது என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்.

அவரவர் அனுபவங்கள், மொழியின் ஆழம் இவற்றால் கவிதையின் பொருள் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொன்றாய் புலப்படும். அதுவே. சரியானதும் கூட.
எனவே தான் திருக்குறளுக்கு 1000 உரைகள். திருவள்ளுவர் ஒன்றைத் தான் எழுதினார். ஆனால் அவரவர் அவர்கள் பாட்டுக்குப் பொருள் எழுதினர்.

திரைப்படம் ஒன்று பலருக்குப் பிடிக்கும். சிலருக்குப் பிடிக்காது. என் அனுபவம் மற்றும் என் விருப்பம் படம் நன்றாக இருக்கிறது. ஆனால் மாற்றுச் சிந்தனையாளர்க்கு அது பிடிக்காது, அதற்காக அந்தப் படம் நல்ல படமென்பதில்லை என்று கூறிவிட முடியாது.

கவிதை புரிதலைக் குறித்துப் படிமக் கவிஞர் அபி அவர்கள் ஒரு பேட்டியில் கூறும்பொழுது கீழ்க்கண்டவாறு கூறுகிறார். அதாவது,

உங்கள் கவிதைகள் பலவும் பொதுவாசகர்கள் அணுகுவதற்குச் சற்று சிரமமாக இருக்கிறதல்லவா. அப்படிப்பட்ட வாசகர்களுக்கு நீங்கள் என்ன சொல்வீர்கள்?

‘புரிந்துகொள்ளல்’ என்பதற்கான புதிய அர்த்தம் இன்று தேவை. புரிந்துகொள்வது என்பது சொற்களின் அகராதி அர்த்தத்தைப் புரிந்துகொள்வது அல்ல. பொழிப்புரை கவிதை ஆகாது. சொல்லின் த்வனி என்ன, படிமங்கள் எங்கே கொண்டுசெல்கின்றன, மனசில் கவிதை உருவாக்கும் சலனங்கள் எவ்வுணர்வு சார்ந்தவை – என்ற ரீதியில் வாசகன் தன் அனுபவங்களைத் திரட்டிப் பார்க்க வேண்டும். புரிந்துகொள்ளுதல் என்பது அனுபவப்படுத்திப் பார்த்துக்கொள்வதுதான். ஒவ்வொரு வாசகனுக்கும் ஒவ்வொரு அனுபவம். ஒரே கவிதை பல்வேறு அனுபவங்களைக் கிளரச் செய்யும். உங்களுக்குக் கிடைக்கும் அனுபவம்தான் கவிதையின் அர்த்தம். உங்கள் பக்குவத்துக்கேற்ப கவிதை வேறொரு நாள் வேறோர் அனுபவம் தரும்.

உங்கள் புரிதலுக்கு என் அனுப்வம் தேவையென்றால் , சிறிதென்ன பெரிதாகவே பதில் தருவோம், நன்றி.
bharathichanadran
”மாறா” படத்திற்கு ஒரு விமர்சனம் எழுதிக் கீற்று நந்தன் ஐயாவிற்கு அனுப்பினேன். எனக்குப் பிடித்த படம் அது. ஆனால் அப்படம் அவருக்குப் பிடிக்கவில்லை. கொள்கை சார்ந்து எல்லா இலக்கியங்களையும் அணுகுவது சில இதழாளர்களின் பழக்கம். இலக்கியமாகக் கருதாமல், அதில் நம் கொள்கை இருந்தால் மட்டுமே அது இலக்கியம் என அதைத் தவிர்ப்பது என்பது கூட இன்று இயல்பாய் நடப்பது தான்.
குமரன்
அப்படியாயின் திருக்குறளுக்கு கூட உரை எழுத முடியும் ஆனால் இதற்கு முடியாது போல இருக்கிறது

பெரிதாக வேண்டாம் முதலில் சிறிதாக வேனும் வரட்டும் அது புரியவில்லை என்றால் பெரிதாகக் கேட்கிறேன்
bharathichandran
பூனை மனிதர்கள் - பண்புத்தொகை.
மனிதப்பூனைகள்- உருவகம்.
இது இலக்கணம் ஆகா உண்மை.
நீயும் நானும்
அல்ல அல்ல
எல்லாம்.
எதிரும் புதிரும்
நீளமும் அகலமும்
மேடும் பள்ளமும்
அதுவும் இதுவும்
எல்லாம்.
அதாகாவே மாறி அலைகிறது.
ஜாக்கிரதை.

கவிதையின் பொருள் சிறியதாக இவ்வளவு தான்.
”கீற்றில் கவிஞர் கவிஜியின் கவிதைகள் வெளிப்படுத்தும் நவீனக் கோட்பாடுகள் ” எனும் தலைப்பில் மிகப்பெரும் கட்டுரை எழுத இருக்கின்றேன். ஆனால் அதை நந்தன் சார் வெளியிடமாட்டார் என்றே நினைக்கின்றேன்.
அதை வெளியிடக் குமரன் சார் நீங்களே எனக்கு உதவுங்கள்
குமரன்
பூனை மனிதர்கள்
உவமைத்தொகை?

இப்படித்தான் கட்டுரை எழுதப் போகிறீர் என்றால் கவிச்சி கட்டாயமாக உங்களுக்கு உதவி செய்வார்
bharathichandran
பூனை மனிதர்கள்
உவமைத்தொகை?

நீங்கள் தவறு சொல்வீர்கள். தெரியும். அதனால் தான் அப்படி இலக்கணம் பார்க்கக் கூடாது என்று தான்
இது இலக்கணம் ஆகா என்று எழுதினேன். ஆனால் அது பண்பு அல்ல உவமை என்று விளக்கம் தருகிறீர்.
நான் தவறு தவறாக எழுதுவதாகவும் அப்படியாயின் கவிச்சி உதவுவாரென நக்கல் வேறு.
ஏன் கவிச்சியை தனிப்பட்ட முறையில் பிடிக்காதோ. அதற்கு அவர் படைப்பு என்ன செய்தது
குமரன்
எனக்கு கவிச்சியை யார் என்று தெரியாது

படைப்பு!?

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.