கவிதைக்கு என்று தமிழில் நீண்ட அறுபடாத தொடர்ச்சியுண்டு. இன்று வரை சமூக வலைதளங்களிலும் கூட கவிதைகள் பகிரப்பட்டு எல்லாத் தரப்பினரிடையேயும் செல்வாக்கு மிக்க வடிவமாகக் கவிதை திகழ்கிறது. புதுக்கவிதைகள் சமூகத்தின் வெகுசனத் தளத்தில் கோலோச்சிக் கொண்டிருக்கிற இன்றைய காலத்திலும் தொல்காப்பியத்தில் குறிப்பிடும் நடையியல் குறித்த செய்யுள் புதுக்கவிதைக்கும் பொருந்துமாறு உள்ளது.

ஒத்த காட்சி உத்திவகை விரிப்பின்

நுதலிய தறிதல் அதிகார முறையே

தொகுத்துக் கூறல் வகுத்துமெய்ந் நிறுத்தல்

மொழிந்த பொருளோடு ஒன்ற வைத்தல்

மொழியா ததனை முட்டின்றி முடித்தல்

வாரா ததனான் வந்தது முடித்தல்

வந்தது கொண்டு வாராதது முடித்தல்           (தொல்.பொருள். 656)

இச்சூத்திரத்தில் முப்பத்திரண்டு உத்திகள் தொல்காப்பியரால் மொழியப்பட்டுள்ளன. இவ்வுத்திகள் கலை இலக்கியங்களுக்கு முக்கியமாக கவிதை வடிவத்திற்குப் பொருந்திப் போவது குறிப்பிடத்தக்கது.

புதுக்கவிதையின் தோற்றம் என்பது வடிவங்களிலும் சொல்முறையிலும் உள்ளடக்கத்திலும் புதிய மாற்றங்களைக் கொண்டு வந்தது. “கருத்துக்களைச் சொல்லும் உத்தி முறையில் புதுக்கவிதை ஒரு சகாப்தத்தையே படைத்து விட்டது” (மா. கோவிந்தராசு, 2011, ப.127) என்று ந. பிச்சமூர்த்தி சொல்வது புதுக்கவிதையின் வருகையால் கவிதைப்படைப்பில் ஏற்பட்ட மாற்றங்களைப் புரிந்து கொள்ளும் விதமாக உள்ளது.

நவீன வாழ்க்கை கொண்டுள்ள அனுபவங்களை எழுதப்புகுந்த கவிஞர்கள் விதவிதமான வெளிப்பாட்டு முறைகளில் கவிதைகளை எழுதலாயினர். “சில கவிதைகள் அர்த்தங்களை வெளிப்படுத்தும்; அர்த்தம் சப்தத்தைத் தவிர்க்கும்... சில கவிதைகள் கவிஞனின் அனுபவங்களை வெளிப்படுத்தும்... சில கவிதைகள் தேடலை வெளிப்படுத்தும். புதுக்கவிதை தன்னைத் தன்னுள் தேடுகிறது.” (மேலது, ப.128) என்று தமிழ்நாடன் கூறுவது புதுக்கவிதைகளின் படைப்பியல் சார்ந்த விளக்கத்திற்கு நம்மை இட்டுச்செல்லும்.

புதுக்கவிதைகளில் சங்க இலக்கியத்தின் அகமரபின் தொடர்ச்சியையும் அதன் வெளிப்பாடுகளையும் காண முடிகிறது. ஆனால், இது நேரடியாகப் பயன்படுத்தப்படவில்லை என்பதுடன் அகமரபின் காதலின் அனுபவங்கள் நவீனத் தன்மைக்கு ஏற்பப் படைத்துக் காட்டப்பட்டுள்ளன என்பதையும் புதுக்கவிதைகளின் வாயிலாகக் இக்கட்டுரை நிறுவ முற்படுகிறது.

பிரிதலும் பிரிதல் நிமித்தமும்

சங்க இலக்கிய பாலைத் திணையின் உரிப்பொருள் பிரிதலும் பிரிதல் நிமித்தமும் என்பதாகும். இதனையே கவிக்கோ அப்துல் ரகுமான் ‘சாவி இருக்கும் வரை’ என்கிற கவிதையில்,

ஞாபக முட்கள்

காயங்களைச் சுட்டி

வட்டமிடும்

என் ஏகாந்தத்தின்

இதயத் துடிப்பாக,

பிரிந்து சென்ற உன்

காலடி ஓசை (அப்துல் ரகுமான், 2018, ப. 62)

என்கிறார். இக்கவிதை காதல் இணையரின் பிரிவுத் துன்பத்தின் அனுபவமாய் வெளிப்படுகிறது. பிரிவு ஏற்படுத்திவிட்டுப் போகும் வடுக்கள் நினைவுகளில் தங்கிவிடும் அவலம் சங்க இலக்கியக் கவிதைக்கு சற்றும் குறைவுறாத மன வெளிப்பாடாய் கவிக்கோவின் கவிதையில் வெளிப்படுவது இங்குக் கவனிக்கத்தக்கது. இந்தப் பிரிவுத் துன்பத்தையே இன்னொரு கவிதையில் கவிக்கோ வெளிப்படுத்தியிருக்கிறார்.

பிரிவை ஞாபகப்படுத்திக் கொண்டு இருப்பது நினைவுகளே. நினைவுகள் தான் பிரிவுக்காலத்தில் நோயாகவும் மருந்தாகவும் காதலர்களுக்குள் செயல்படுகிறது. இதனை மிகவும் நுணுக்கமாக எழுதியிருக்கிற கவிக்கோ,

ஒருவர் நினைவை

ஒருவர் கொளுத்திக்கொண்டு

இருவரும் எரிவோம்

மெதுவாக

நான் மெழுகுவர்த்தியாக

நீ ஊதுவத்தியாக       (மேலது, ப. 73)

என்ற கவிதை வரிகளைத் தொடர்ந்து தன் நினைவுகளை எரித்துப் பலியாக்கிக் கொள்ளும் இந்தச் செயலுக்கு முத்தாய்ப்பாய்,

அணைந்ததும் என்னை

மறந்துவிடும் வேதனைக்கு

உன் ஞாபகம்

சுற்றிக் கொண்டிருக்கும்       (மேலது, ப. 73)

என்று முடிக்கிறார் கவிஞர்.

காதலின் காட்சியின்பமும் உன்மத்த நிலையும் காதலர்கள் பார்வையாலேயே பேசிக்கொள்ளும் செயலை வள்ளுவர்,

கண்ணோடு கண்ணிணை நோக்கொக்கின் வாய்ச்சொற்கள்

என்ன பயனும் இல

என்பார். அதேபோலத் தான் காதல் வாழ்வில் காட்சியின்பம் என்பது தொடக்க நிலையில் மட்டுமல்லாமல் காதலின் அனைத்து நிலையிலும் இருக்கும் என்பதை சங்க இலக்கியங்களும் தொல்காப்பியமும் குறிப்பிடுகின்றன. இதனையே கவிக்கோ,

கரைவரை வந்துபின்

திரும்பும் அலைகள்போல்

என்வரை வந்துபின்

மீளும்உன் பார்வைகள்!

பாவம்!

மௌன மணலில்

தலைபுதைத்து மறைய எண்ணும்

தீக்கோழி

உன் இதயம்!           (மேலது, ப. 154)

மனித உணர்வுகளிலேயே காதலுக்கு என்று ஒரு நேர்மறையான குணநலன் மனிதர்களிடையே உண்டு. ஏனெனில், காதல் எல்லாக் காலத்திலும் பாடப்படுவதுண்டு. முக்கியமாக வீரயுகக் காலம் என்று வருணிக்கப்படும் சங்க காலத்திலும் காதலுக்கென்று தனித்த இடத்தை வழங்கினர். காதலின் இந்தக் குணம் குறித்து கவிஞர் சி.மணி தன் கவிதையில் வெளிப்படுத்தியுள்ளார்.

காதல் காதல் என்ப; காதல்

வெறியும் நோயும் அன்றே; நினைப்பின்,

இறக்கம் நோக்கிப் பாயும் நீராம்;

சாதல் கவிந்த வாழ்வில்

வானம் தந்த வாம நிலவாம். (சி.மணி, 2004, ப.25)

மனித நாகரிகத்தின் பரிணாம வளர்ச்சியில் காதலின் நீங்கா இடம் குறித்த ஒரு செறிவான பார்வையை கவிஞர் சி. மணி முன்வைப்பது இங்கு நோக்கத்தக்கது.

அதேபோல் கவிஞர் கி.அ.சச்சிதானந்தம் ஒரு ஆணின் மனவெளிப்பாடுகளைத் தன் கவிதையில் வடித்துள்ளார். காதல் மிகும்போது ஒருவித உன்மத்த நிலையை அடைந்துவிடுவது ஆணுக்கும் பெண்ணுக்கும் இயல்பான ஒன்றாகும். இந்த உன்மத்த நிலையில் காதலரின் உருவத்தை மட்டுமல்ல அவர் இயங்குகின்ற அத்தனை இடங்களிலும் காதல் அவர் உருவத்தைக் கற்பனை செய்துகொள்ள வைக்கும். அவரை நினைத்து அஃறிணைப் பொருட்களிடம் புலம்ப வைக்கும். இதற்கு ‘காமம் மிக்க கழிபடர் கிளவி’ என்று அக இலக்கணம் சொல்லும். இதே பாணியை கவிஞர் கி.அ. சச்சிதானந்தம் தன் கவிதையில் பெண்ணை நினைத்து உருகும் ஆணாக வெளிப்படுத்தியுள்ளார்.

உன்னை

நான் பின் தொடர்ந்து வந்தேன்.

உன்னைப்

பார்க்கும் போதெல்லாம்,

பின்பு நீ காணாமலே போய்விட்டாய்

ஒரு தடவை

அந்தக் கரடுமுரடான

சுவரின்மேல்

உன்நிழல் விழுந்ததைக் கண்டேன்

முத்தமிட முனைந்தேன் முடியவில்லை

குறுக்கே விழுந்தது என்நிழல்      (கி.அ.சச்சிதானந்தம், 2004, பக். 58 - 59)

உன்மத்த நிலையில் காதலை நினைத்து உருகும் ஆணின் மனவெளிப்பாடுகளை இக்கவிதையில் எளிமையாகப் புரிந்து கொள்ள முடிகிறது.

கவிஞர் கவிஜி காதலியைத் தேடிக் கண்டடைந்து அடைந்த இன்பத்தைக் கவிதையாகத் தந்திருக்கிறார்.

கதவுக்குப் பின்னா ஒளிந்திருக்கிறாய்

கள்ளி

நீ காதலுக்குப் பின்னால் ஒளிந்திருக்கிறாய் (கவிஜி, 2023)

அதேபோல் கவிஞர் பிரேமில் பானு சந்திரன் ஒரு ஆண் காதலின் மிகுதியால் புலம்புவது என்பது காதலியின் ஒரு சொல்லுக்காக, ஒரு பார்வைக்காக, ஒரு தொடுதலுக்காகத் தான் என்பதை தன் ‘பேச்சு’ என்ற கவிதையில் வெளிப்படுத்துகிறார்.

கருத்தழிவின் கழிவு

காதலன் பிதற்றல்.

அவள் சொல்லோ

வெறும் பார்வை

வெறும் விரல்கள்

மணலில்

விட்ட வடுக்கள். (பிரேமில் பானு சந்திரன், 2004, ப. 69)

காதலில் கவலை தான் நிறைந்திருக்கும் என்கிற தோற்றம் எப்போதும் உள்ளது. கவலைக்கு முதன்மைக் காரணம் பிரிவு. பிரிவுத் துன்பம் காதலரைப் புலம்ப வைக்கும். ‘பூக்களும் காயம் செய்யும்’ என்கிற கவிதையில் கவிஞர் வைரமுத்து காதலியின் பிரிவு ஏக்கம் ஆழ்த்தும் துன்ப வெள்ளத்தில் கரைந்து போகும் ஆணின் பெருமூச்சுச் சத்தத்தை மொழியில் வடித்துள்ளார்.

என் மார்புக்கு வெளியே

ஆடும் என் இதயம்

என் பொத்தானில் சுற்றிய

உன் ஒற்றை முடியில்

உன் ஞாபக வெள்ளம்

தேங்கி நிற்குது

முட்டி அழுத்தி நீ

முகம்பதித்த பள்ளத்தில் (வைரமுத்து, 2012,)

என்று சொல்கிறவர் இறுதியில் பிரிந்துபோன இந்தக் காதலுறவின் மிச்சம் என்பது சொல்லக்கூடாத சில நினைவுகளும் சொல்லக்கூடிய ஒரு கவிதையும் என்று முடிக்கிறார் கவிஞர் வைரமுத்து. காதல் பொதுவாகவே மனித இருத்தலுக்கான அடிப்படை உணர்வுத் தேவைகளைப் பூர்த்தி செய்யவே உதவும். ஆனால், இந்த ‘உதவுதல்’ என்பது பெரும் மனவலியையும் வாழ்வின் நிச்சயமின்மையை அதிகப்படுத்தவே செய்யும் என்பதையும் நாம் மறுக்க இயலாதது. இதனால் தான் ‘காதலித்துப் பார்’ என்கிற கவிதையில் கவிஞர் வைரமுத்து,

அதற்காகவேனும்...

வாழ்ந்துகொண்டே

சாகவும் முடியுமே

செத்துக் கொண்டே

வாழவும் முடியுமே

அதற்காகவேனும்...         

காதலித்துப் பார்!  (மேலது)

என்கிறார்.

இந்தப் பிரிவொழுக்கத்தையே தொல்காப்பியர் ஐந்திணை ஒழுக்கத்தில் பாலைத் திணைக்கான உரிப்பொருளாகக் குறிப்பிட்டுள்ளார்.

புணர்தல் பிரிதல் இருத்தல் இரங்கல்

ஊடல் இவற்றின் நிமித்தம் என்றிவை

தேருங்காலை திணைக்குரிப் பொருளே (தொல். பொருள். 960)

இங்கு தொல்காப்பியர் ஐந்திணைகளில் ஒவ்வொரு திணைக்கும் ஒவ்வொரு உரிப்பொருளான ஒழுக்கத்தைச் சொல்லிச் செல்கிற நிலையில் இன்றைய நவீன காலத்தில் இந்தப் பிரிதல் பல நிலைகளில் ஏற்படுகிறது. காதலில் எப்போதும் பிரிவு என்பது முக்கியமானதொரு பாடுபொருளாகக் கவிஞர்களால் பாடப்படுவது சங்க இலக்கியம் தொட்டு இயல்பாகவே உள்ளது. அதனையே இக்கவிதைகளும் உணர்த்துகின்றன.

அலர் தூற்றும் கவிதைகள்

காதலர்கள் சங்ககாலச் சமூகத்தில் இன்று போல் அன்றும் ஒளிந்து ஒளிந்து தான் காதலிப்பார்கள். இது தெரிந்த ஊரார் அலர் தூற்றுவார்கள். காதலிப்பது என்பது அன்றும் இன்றும் எளிதில் எல்லோருக்கும் பேசக் கிடைக்கும் ஒரு பேசுபொருள். கவிஞர் மீரா ‘கத்திரிக்காய் என்ன காதலா?’ என்ற தன்னுடைய கவிதையில் வாணி மணாளன் என்கிற தொடர்கதையாசிரியர் இரவில் காதல் என்ன கத்திரிக்காயா? என்ற தொடர் எழுதிவிட்டு, காலையில் எழுந்து சந்தைக்குச் செல்வதைப் பற்றி எழுதுகிறார். அங்கு அவர் கத்திரிக்காய் விலையைக் கேட்டவர் அதிர்ந்து போகிறார். ஆனால், கத்திரிக்காய் கடைக்காரனோ பின்வருமாறு அந்தத் தொடர்கதையாசிரியரிடம் சொல்கிறான்:

அவ்வளவு மலிவாய்

அள்ளிக்கொண்டு செல்ல

கத்திரிக்காய் என்ன காதலா? (மீரா, 2012)

காதலின் வெகுசன ஏற்பு இந்தியச் சமூகத்தில் இன்றும் ஒரு மலிவான எண்ணத்துடனேயே அணுகப்படுகிறது என்பது இந்தக் கவிதை மூலம் எளிமையாகக் காட்டப்படுகிறது.

சங்கக் கவிதையில் பெயர் தெரியாத புலவர் எழுதிய “யாயும் ஞாயும் யாரா கியரோ” என்கிற கவிதை இன்றைய சாதி, பொருளாதார ஏற்றத்தாழ்வுகளினூடே காதல் மலர்கின்ற போது எழுதப்படுமாயின் எப்படி இருக்கும் என்கிற பகடியே மீராவின் ‘கணக்குப் பார்த்த காதல்’. காதலர்கள் பேசிக்கொள்கிறார்கள். அவனுக்கும் அவளுக்கும் ஒரே ஊரான வாசுதேவ நல்லூர் என்றும் மேலும் இருவரும் ஒரே மதம், ஒரே சாதி எல்லாவற்றுக்கும் மேலாக இருவரின் தந்தையும் சொந்தக்காரர்கள். அதனை தன் கவிதையில்,

உனக்கும் எனக்கும்

ஒரே ஊர் -

வாசுதேவ நல்லூர்...

நீயும் நானும்

ஒரே மதம்...

திருநெல்வேலிச்

சைவப் பிள்ளைமார்

வகுப்பும் கூட,..

உன்றன் தந்தையும்

என்றன் தந்தையும்

சொந்தக் காரர்கள்...

மைத்துனன் மார்கள்.

எனவே

செம்புலப் பெயல்நீர் போல

அன்புடை நெஞ்சம் தாம்கலந் தனவே (மீரா, 2012)

என்கிறார் கவிஞர் மீரா.

இதேபோல் பெயர் தெரியாத இருவர் அறிமுகமாகி நண்பர்களாகி தினமும் பேசிக் கொண்டு இறுதியில் திருமணம் செய்து கொள்வதை கவிஞர் வெ. இறையன்பு தன் கவிதையில் கூறியுள்ளார்.

நாங்கள் இருவரும்

காதலில் நம்பிக்கையில்லை

என்ற எங்கள்

ஒத்தக் கருத்தினால்

அறிமுகமாகி,

சந்தித்துப் பேசி

நண்பர்களானோம்.

அடுத்த ஆவணியில்

எங்கள்

திருமணம். (வெ. இறையன்பு, 2000, பக். 32-33)

இதனையே இறையனார் அகப்பொருள் “கற்பு என்பது களவின் வழித்தே” என்று திருமணம் என்பது காதலித்துத் திருமணம் செய்வதே என்று பண்டைய தமிழர் மரபைப் பறைசாற்றுகிறது. இதனையே புதுக் கவிதைகளும் காதலை மையப்படுத்துவதன் மூலம் நவீனத் தலைமுறைக்குக் கடத்த முயற்சிக்கின்றன.

நவீனக் காதல் வடிவங்கள்

காதலிக்கும் பெண்ணுக்கு மலர் கொடுப்பது என்பது சங்க இலக்கியத்திலிருந்து தொடர்ந்து வரும் பண்பாடு. மலர் கொடுத்து தன்னுடைய காதல் விருப்பத்தைத் தெரிவிப்பதையோ அல்லது காதலிக்கும் பெண்ணை மகிழ்ச்சிப்படுத்தவோ காதலன் விரும்புவது இயல்பானது. இதையே குறுந்தொகை 312ஆம் பாடலில்,

இரண்டறி கள்வி நங் காதலோளே

முரண்கொள் துப்பிற் செல்வேல் மலையன்

முள்ளூர்க் கானம் நாற வந்து

நள்ளென் கங்குல் நம்மோ ரன்னள்

கூந்தல் வேய்ந்த விரவுமலர் உதிர்த்துச்

சாந்துளர் நறுங்கதுப் பெண்ணெய் நீவி

தமரோ ரன்னள் வைகறை யானே  (குறு. 312)

என்ற பாடலில் தலைவிக்கு தலைவன் கொடுத்த பூவைச் சூடியவள் தலைவனுடன் கூடி விட்டு இறுதியில் அவள் தன் வீடு செல்லும் போது உதறிவிட்டுச் சென்றமையைப் பார்க்க முடிகிறது.

இது போன்ற ஒரு நிகழ்வையே கவிஞர் மீரா ‘கனவுகள் + கற்பனைகள்=காகிதங்கள்’ என்கிற கவிதைத் தொகுப்பில் காட்சிப்படுத்தியிருக்கிறார். இதை,

பூங்கொடியே உனக்குப்

பூ வாங்கி வருகிறேன்

முதன்முதலில் தானம் தர ஆசைப்பட்டவன்

கர்ணன் வீட்டுக் கதவைத்

தட்டியது மாதிரி!             (மீரா, 2012)

என்று குறிப்பிடுகிறார்.

சங்க இலக்கியத்தில் குறியிடம் என்பது களவு வாழ்க்கையில் முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது. பகற்குறி, இரவுக்குறி என்று இரண்டு வகையாக இலக்கண ஆசிரியர்களால் குறிக்கப்படுகிறது. இந்தக் குறியில் காதலன், காதலி இருவரும் ஒருவருக்காக மற்றொருவர் காத்திருப்பது இயல்பானதாகும். ஆனால், இக்குறியை முடிவு செய்வது தலைவியே என்பதை தொல்காப்பியர் இலக்கணத்தில் சுட்டுகிறார்.

அவன்வரம்பு இறத்தல் அறம்தனக்கு இன்மையின்

களஞ்சுட்டுக் கிளவி கிழவியது ஆகும்

தான்செலற்கு உரிய வழிஆக லான                (தொல்.பொருள். 118)

இவ்வாறு காதலிக்காகக் காதலன் ஒருவன் காத்திருக்கிற செயலை புதுக்கவிதை ஒன்று விவரிக்கிறது. அப்போது எல்லாவிதமான பெண்களும் வந்து போகிறார்கள். ஆனால், அவன் எதிர்நோக்கும் பெண் மட்டும் வரவேயில்லை. இறுதியில்,

விளக்குக் கம்பம்

நடைக் கொம்பாய்

நிற்கும் தெருவில்

பிறபெண்கள்

வந்தார் போனார் அவள் வரலே. (ஞானக்கூத்தன், 2014)

என்று முடிக்கிறார் கவிஞர்.

சங்க இலக்கியத்தில் காதலுக்கென்று தனித்த இடம் வழங்கப்பட்டது போல் புதுக்கவிதைகளிலும் தனித்ததொரு இடம் வழங்கப்பட்டிருக்கிறது. ஆனால், நவீன வாழ்க்கை ஏற்படுத்திய வாழ்வியல் நெருக்கடிகள் புதிய புதிய உள்ளடக்கங்களைக் கொண்ட கவிதைகளைத் தோற்றுவிக்கின்றன. கவிஞர்களும் காதலை அங்கொன்றும் இங்கொன்றுமாகப் பாடினாலும் இன்றும் காதலுக்கான மனித இன்றியமையாமை கொஞ்சம் கூடக் குறையவில்லை என்பதை உய்த்துணர்ந்து கொள்ள இயலும்.

உசாத்துணை

  • அப்துல் ரகுமான். (2018). கவிக்கோ கவிதைகள். சென்னை: நேஷனல் பப்ளிஷர்ஸ்.
  • இளையபாரதி (தொ.ஆ.). (2000). சுபமங்களா இதழ்த் தொகுப்பு. சென்னை: கலைஞன் பதிப்பகம்.
  • கோவிந்தராசு, மா. (2011). புதுக்கவிதைக் கட்டமைப்பு. சென்னை: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட்..,.
  • சச்சிதானந்தம், கி.அ. (தொ.ஆ). (2004). நடை இதழ்த் தொகுப்பு. சென்னை: சந்தியா பதிப்பகம்.
  • சிவலிங்கனார், ஆ (ப.ஆ). (2017). தொல்காப்பியம் உரைவளம் - பொருளதிகாரம் களவியல். சென்னை: உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்.
  • பாலசுப்பிரமணியன், கு.வெ. (உ.ஆ). (2019). தொல்காப்பியம் மூலமும் உரையும். சென்னை: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட்..,.
  • www.eluthu.com <http://www.eluthu.com>
  • www.keetru.com <http://www.keetru.com>

- முனைவர் பெ. முருகன், தமிழ்த்துறைத் தலைவர், ஹாஜி கருத்த ராவுத்தர் ஹவுதியா கல்லூரி, உத்தமபாளையம், தேனி மாவட்டம்.

Pin It