தமிழ்ப் பேரரசன் இராசராசன் கட்டி எழுப்பிய தஞ்சைப் பெரியகோயில் உள்ளிட்ட, 88 கோயில்களுக்கு, மராட்டியத்தைச் சேர்ந்த பாபாஜி பான்ஸ்லே என்பவர் பரம்பரை அறங்காவலராக இருக்கிறார். தஞ்சை மண்ணை வஞ்சகமாக ஆக்கிரமித்து, அதை ஒரு இலட்சம் பகோடாவுக்கு கிழக்கிந்திய கம்பெனியிடம் விற்று பிரித்தானிய ஆட்சியரின் கீழ் அடிமையாக்கிய மராட்டிய அரசக் குடும்பத்தின் வாரிசு இவர்.

பாபாஜியின் முன்னோர்கள் பெரிய கோவிலைக் கட்டவில்லை. அவர்கள் யாரும் பெரிய கோயிலுக்குச் சொத்து எதுவும் எழுதி வைக்கவில்லை. அன்றாட வழிபாடுகள் பான்ஸ்லேயின் சொந்தப் பணத்திலிருந்தும் நடைபெறவில்லை. மாறாக கோயில் பணத்தை சம்பளமாகவும், பரம்பரை அறங்காவலர் என்ற போர்வையில் சட்டத்திற்குப் புறம்பாகவும் கோயில் பணத்தைச் சுரண்டி மராட்டிய மாநிலத்தில் அவர் முதலீடு செய்கிறார்.

தஞ்சைப் பெரிய கோயில் உள்ளிட்ட அரண்மனை தேவஸ்தான கோயில்களின் சொத்துகளை பான்ஸ்லேயும், அவரது முன்னோர் களும் விற்றுச் சொந்தச் செலவு செய்து கொண்டார்கள். பெரியகோயிலில் இருந்த பேரரசன் இராசராசன் மற்றும் பட்டத்தரசி உலகமாதேவி ஆகியோரின் செப்புத் திருமேனி களைக் களவாடி குசராத்தில் உள்ள தனியாருக்கு விற்று விட்டார்கள். அச்சிலைகள் இப்போது ஆமதாபாத் சாராபாய் அருங்காட்சியகம் என்ற தனியார் நிறுவனத்தில் உள்ளன. அண்மையில் கூட, பெரிய கோயிலுக்கு வழங்கப்பட்ட 130 அடி நீள உருத்திராட்ச மாலை பான்ஸ்லே நிர்வாகத்தால் களவு போயுள்ளது.

பெரிய கோயிலில் நடந்த இம்முறை கேடுகளைத் தடுக்க, 2006 முதல் தஞ்சைப் பெரிய கோவில் உரிமை மீட்புக் குழு பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றது. தொடர்ந்து நடத்தப்பட்ட போராட்டங்களின் காரணமாக,பான்ஸ்லேவை ’மூத்த இளவரசர்’ என மாவட்ட நிர்வாகம் அழைத்து வந்தது தடுக்கப் பட்டது.

பெரிய கோயில் உள்ளிட்ட 88 கோயில்களுக்கு பரம்பரை அறங்காவலராக உள்ள அவரை அப்பதவியிலிருந்து நீக்கி, அக்கோயில்களை இந்து அறநிலையத்துறையின் முழுக்கட்டுப் பாட்டின் கீழ் கொண்டு வர வேண்டும், களவாடப்பட்ட பேரரசன் இராசராசன், உலகமாதேவி செப்புத் திருமேனிகளை மீட்டு வந்து தஞ்சைப் பெரிய கோயிலில் வைக்க வேண்டும் என்பன உள்ளிட்டக் கோரிக்கைகளை வலியுறுத்தி, பேரரசன் இராசராசன் 1026ஆம் ஆண்டு பிறந்தநாள் விழாவின் நிறைவு நாளான 05.11.2011 சனி அன்று காலை தஞ்சைப் பெரியகோயில் உரிமை மீட்புக்குழு பேரணி மற்றும் ஆர்ப்பாட்டத்தை நடத்தியது.

தஞ்சை அண்ணா சிலையில் தொடங்கிய பேரணி தெற்கு வீதி வழியாகச் சென்று சிவகங்கைப் பூங்கா எதிரில் நிறைவடைந்தது. த.பெ.கோ.உ.மீ.கு. தலைவர் திரு. அய்யனாவரம் சி.முருகேசன் தலை மையில் நடந்த பேரணியை, ஒரத்தநாடு திரு. கோ. இளவழகன் துவக்கி வைத்தார். அங்கு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், உரிமை மீட்புக்குழுவின் பொரு ளாளர் தோழர் பழ.இராசேந்திரன், துணைத்தலைவர் திருமதி க.பத்மா, த.தே.பொ.க. மாவட்டச் செயலாளர் தோழர் குழ.பால்ராசு, திருவாளர்கள் துரை.சிங்கம், துரை.மதிவாணன், தஞ்சை இராமதாஸ் ஆகியோர் கண்டன உரை நிகழ்த்தினர். த.தே.பொ.க. தலை வரும், உரிமை மீட்புக்குழுவின் ஒருங்கிணைப்பா ளருமான தோழர் பெ.மணியரசன் நிறைவுரையாற் றினார்.

பேரணியில் காவிரிக் கலைக் குழுவினரின் தப்பாட்டம் எழுச்சி கூட்டியது.

திரளான மக்கள் பங்களிப்புடன் நடந்த பேரணி - ஆர்ப்பாட்ட நிகழ்வு தஞ்சை நகர வீதிகளில் புத்தெழுச்சியை உண்டாக்கியது.

Pin It