thozar njanam

நள்ளிரவு கடந்த நேரம் அந்தத் தொலைபேசிச் செய்தி வந்தது. ”நான் ஞானத்தோட அம்மா” என்று அறிமுகம் செய்து கொண்டு, என்ன ஏது என்று நான் கேட்குமுன்பே சொல்லி முடித்து விட்டார்கள்: ஞானத்தின் மனைவி செத்துட்டா என்றார்கள். ”ஞானம்?” என்று நான் கேட்டு முடிப்பதற்குள்ளேயே அவனும் செத்துட்டான்யா என்றார்கள். ஐயோ!

”விவரந்தெரியாத குழந்தையை வச்சுகிட்டு என்ன செய்யறதுனு தெரியாமத் தவிச்சுகிட்டிருக்கேன்! நீங்கதான் எனக்கு வழி சொல்லணும்!” என்ன நடந்தது என்று சுருக்கமாகக் கேட்டுத் தெரிந்து கொண்டேன். கணவன் மனைவி இருவருக்கும் கோவிட்-19 தொற்று இருவரும் காட்டுமன்னார் கோயில் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். முதலில் மனைவி இறந்து விட்டார்.

பிறகு தோழர் ஞானம் வீட்டுக்குப் போய் பார்த்துக் கொள்ளலாம் என்று வந்து விட்டார். ஆனால் அடுத்த சில நாளில் அவரும் இறந்து விட்டார். இருவர் உடலையும் ஊராட்சிப் பணியாளர்கள் வந்து எடுத்துப் போய் அடக்கம் செய்தார்களாம். அடுத்த மாதம் வாடகை கொடுக்கக் கூட என்ன செய்வது என்று தெரியவில்லை என்று அம்மா சொன்னார்கள்.

5 வயதுப் பையன் -- ஞானம் இணையரின் வளர்ப்புப் பிள்ளை -- என்ன நடக்கிறது என்று தெரியாமல் விளையாடிக் கொண்டே இருக்கிறான் என்றார்கள். அவனிடமிருந்து கைப்பேசியை வாங்கவே முடியவில்லை, அவன் தூங்கிய பிறகு அதை வாங்கி உங்கள் தொலைபேசி எண்ணைக் கண்டுபிடித்துப் பேசுகிறேன் என்றார்கள்.

எனக்கு அம்மாவை நன்றாகத் தெரியும், ஒருமுறை மயிலாடுதுறையில் கூட்டம் பேசி விட்டு அவர்கள் வீட்டில் இரவுத் தங்கிய நினைவு. மீண்டும் மயிலாடுதுறையில் ஞானம் திருமணத்துக்குப் போயிருந்த போது பார்த்தேன். ஆறுதலடைங்க, காலையில் விடிந்த பிறகு பேசலாம் என்று சொல்லி விட்டேன்.

ஞானம் பற்றிய நினைவுகள்: இயக்க அலுவலகம் அப்போது அம்பத்தூரில் இருந்தது. இயக்கத் திங்களேடாகத் தமிழ்த் தேசம் வெளிவந்து கொண்டிருந்தது. நானும் தோழர்களும் நகரப் பேருந்துகளிலும் புறநகரத் தொடர்வண்டிகளிலும் ஏறிப் பயணிகளிடம் பேசி இதழ் விற்பனை செய்வது வழக்கம்.

ஒரு நாள் அந்தப் பணி முடிந்து பேருந்தில் தமிழ்த் தேசம் இதழ்கள் நிறைந்த பையுடன் அம்பத்தூர் திரும்பிக் கொண்டிருந்தேன். என் பக்கத்து இருக்கையில் உட்கார்ந்திருந்த குங்குமப் பொட்டு இளைஞர் என்னைப் பார்த்துப் புன்னகை பூத்தார்.

நான் இதைப் படியுஙகள் என்று தமிழ்த் தேசம் இதழைக் கையில் கொடுத்தேன். ஆர்வமாய்ப் பார்த்துக் கொண்டே “நீங்கள்?” என்றார். தியாகு, இந்த இதழின் ஆசிரியர் என்றேன். இதழைத் திருப்பிக் கொடுத்த போது நீங்களே எடுத்துப் போய்ப் படியுங்கள் என்றேன்.

என்ன வேலை செய்றீங்க? ”தனியார் கம்பெனியில் விற்பனைப் பிரதிநிதியா இருக்கேன். நிரந்தர வேலை இல்லை.” உங்களுக்கு ஏதாவது அரசியல் உண்டா? ஆர்எஸ்எஸ் கொள்கை பிடிக்கும் என்றார். இருக்கட்டும், தொடர்ந்து தொடர்பில் இருங்கள், இதழில் முகவரி உள்ளது, எப்போது வேண்டுமானாலும் வாருங்கள் என்று கூறிக் கைகுலுக்கி விடைகொடுத்து அனுப்பினேன்.

அடுத்த சில நாளில் இயக்க அலுவலகம் வந்தார். பழைய இதழ்கள், புத்தகங்கள் எடுத்துப் படிப்பார். மருதுபாண்டியன், நலங்கிள்ளி, கதிர்க்குமரன் உள்ளிட்ட தோழர்களிடம் ஏதாவது கேள்வி கேட்டுக் கொண்டே இருப்பார். என்னிடமும் நேரம் கேட்டுப் பேசுவார். ஒரே கேள்வியைப் பலமுறை கேட்பார்.

நாங்கள் கொடுக்கும் நடைமுறைப் பணிகளைக் கவனமாகச் செய்வார். அந்த நேரம் அம்பத்தூரில் நாங்கள் நடத்திக் கொண்டிருந்த மக்கள் கோரிக்கை இயக்கம் நடத்திக் கொண்டிருந்தோம். வீடுவீடாகச் சென்று துண்டறிக்கை கொடுத்து உண்டியலேந்துவோம். அதில் மற்றத் தோழர்களுடன் அவரும் அலுப்பின்றிக் கலந்து கொண்டார்.

ஞானம் தனக்கு நிரந்தர வேலை இல்லாததால் தோழர்களிடம் அவ்வப்போது கைமாற்று வாங்குவார். தோழர்கள் தமக்குள் கடன் வாங்குவது கொடுப்பதில் பிழை இல்லை, ஆனால் அதற்கொரு வரம்பு வைத்துக் கொள்ளுங்கள் என்று அறிவுறுத்துவேன். என்னைப் பொறுத்த வரை ஆயிரம் ரூபாய்தான் எல்லை. ஆயிரம் ரூபாய்க்கு மேல் கடன் கொடுக்கவும் மாட்டேன். கடன் வாங்கவும் மாட்டேன் என்று சொல்லிக் கொள்வேன்.

ஒரு நாள் ஞானம் என்னிடம் வந்து “தோழர், உதவி வேண்டுமே” என்றார். ”சொல்லுங்க ஞானம்.” ”மூணு மாசமா வீட்டு வாடகை கொடுக்கல, வேலையும் கிடைக்கல, அம்மா ஏதாவது கடன் வாங்கிட்டு வாடான்றாங்க.” ”என்ன வேணும் சொல்லுங்க?” “நாலாயிரம்? அடுத்த மாசம் கொடுத்துருவேன்.”

”சரி, மாலைக்குள் தருகிறேன்” என்றேன். எப்படியோ கொடுத்தும் விட்டேன். மறு நாள் இரு தோழர்களை ஆவடி அருகிலிருந்த அவர் வீட்டுக்கு நேரில் அனுப்பி அம்மாவையும் பார்த்து விட்டு, வீட்டுரிமையாளரிடமும் பேசி வரச் செய்தேன்.

2009 ஈழப் போர் நிறைவுற்ற பின் 2010இல் தமிழ் மீட்பு தமிழர் மீட்பு நெடுநடைப்பயணம் நடத்தத் திட்டமிட்டுக் கொண்டிருந்தோம். தஞ்சை, நாகை, திருவாரூர் மாவட்டங்களில் 1000 கிலோமீட்டருக்கு மேல் 47 நாள் நடக்கத் திட்டம். ஞானம் “நானும் நடக்கலாமா?” என்றார். நடக்கலாமே? ”இயக்கத்தில் சேரலாமா?” ”சேரலாமே!”

”ஆர் எஸ் எஸ் கொள்கை என்னாச்சு?”

"அது எப்பயோ போயாச்சு."

மகிழ்ச்சி! என்று சொல்லி விட்டு உற்றுப் பார்த்தேன். 

"கடவுள் நம்பிக்கையை விட முடியாது, குங்குமப் பொட்டையும் விட முடியாது" என்றார். 

"அதெல்லாம் விடத் தேவையில்லை" எனறேன். 

"ஒன்று கேட்க வேண்டும், தவறில்லையே?"

"கேளுங்கள்" என்றேன். 

"நீங்க சாதி பார்ப்பீங்களா?" 

“இது என்ன கேள்வி?”

பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்பது எல்லாவற்றுக்கும் தான்! குமுகத்திலும் அமைப்பிலும்!

"சரி, இனி உங்களோடுதான்! நடைப் பயணத்தில் வரணும்." 

"வரலாம்." 

கோடிக்கரை முதல் கும்பகோணம் வரை 1047 கிலோமீட்டர் 47 நாள் நடந்தார். அந்த நெடுநடைப்பயணத்தில் பொறுப்புடன் புத்தக விற்பனை செய்தார்.கொடுத்த பணி எதுவானாலும் மறுக்காமல் செய்து அனைத்துத் தோழர்களின் அன்பையும் பெற்றார்,

விழியிழந்த பெண்ணை மணக்கும் முடிவைத் தெரிவித்த போது வரவேற்றேன். மணவிழாவுக்கு நேரில் சென்று வாழ்த்தி மகிழ்ந்தேன் இயக்கம் சார்பில் கையில் ஒரு தொகையைக் கொடுத்து "கடனில்லை, கடமை” என்றேன். 

கடைசி வரை நிலையான வருமானம் இல்லாமல் இருந்தார். ஆனால் இயக்கத்துக்குத் தன் திங்கள் பங்களிப்பைத் தவறாமல் செய்து வந்தார். நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜகவைத் தோற்கடிக்க வேண்டும் என்றால் திமுகவை ஆதரிக்க வேண்டும் என்று உறுதியாக நம்பினார். 

முகநூலில் ஞானம் பொன்னையா என்ற பெயரில் உதயசூரியன் சின்னத்தோடு தொடர்ந்து இடுகையிட்டு அதற்காக என்னோடும் தோழர்களோடும் வாதிட்டு வந்தார். ஆர் எஸ் எஸ் ஆதரவு நிலையிலிருந்து தீவிர எதிர்ப்பு நிலைக்கு மாறியதன் விளைவாக இருக்கலாம். முடியட்டும், பேசிக் கொள்வோம் என்று இருந்தேன்.

அதற்கு வாய்ப்பில்லாமற் போய் விட்டது. எல்லாம் ஒரு புறமிருக்க, இயக்கத்துக்கான பங்களிப்பை மறவாமல் செய்து வந்தார். கடைசியாக இந்த மே தொடக்கத்தில் இரண்டு மாதத்துக்கு 200 அனுப்பி விட்டுப் புலனத்தில் தகவல் கொடுத்தார்.

இயக்கத்துக்கும் தமிழ்க் குமுகத்துக்கும் ஞானத்தின் எதிர்காலப் பங்களிப்பு குறித்து என் நம்பிக்கைகள் பொய்த்துப் போயின ஞானம் போன்ற அரிதான தோழர்களை பெருந்தொற்றுக்குப் பறிகொடுக்கும் போது எந்தத் தன்னாறுதலும் எடுபடாமல் போகிறது

போய் விட்டவர்களுக்காகவும் சேர்த்து உழைக்க வேண்டிய பொறுப்பு பிழைத்திருப்பவர்களுக்கு உள்ளது.

- செங்காட்டான்

 

Pin It