"நாட்டுப்பற்று என்பதும் தேசத்தின் மீதான காதல் என்பதும் இன்னொரு மனிதக் குழுவை வெறுக்கிற அல்லது காழ்ப்புணர்வு கொள்கிற ஒரு உணர்வு" என்று ஒரு வாதத்தை சமூக நெறிகள் பற்றிய ஆய்வாளர் “பால் கோம்பெர்க்” முன்வைக்கிறார். அது ஓரளவுக்கு உண்மையாகத் தான் இருக்க வேண்டும். இந்திய தேசிய வடிவமும் அதன் ஆளுமை மையங்களும் இடைவிடாது ஒரு அண்டை நாட்டின் மீது வளர்க்கும் காழ்ப்புணர்வு இதற்குச் சான்றாகத் தோன்றுகிறது, அரசியல் நிலையிலான பல்வேறு முரண்பாடுகளைக் கடந்து நம்மைப் போலவே அன்றாடம் வாழ்க்கையை நோக்கிப் போராடுகிற எண்ணற்ற மக்களைக் கொண்ட இன்னொரு தேசத்தை வெறுக்கவும் அதன் மீதான நமது காழ்ப்புணர்வைக் கொட்டித் தீர்க்கவும் நமக்கான காட்சி ஊடகங்களும், அச்சு ஊடகங்களும் தொடர்ந்து ஈடுபடுகின்றன. நாமும் அதனைப் பின்பற்றி முகம் தெரியாத மக்களை, அந்த மக்களின் அழகிய குழந்தைகளை, அவர்களின் வழிபாட்டு முறைகளை, அவர்களின் வாழ்வியல் நடைமுறைகளை வெறுக்கத் துவங்கி இருக்கிறோம்.

பல்வேறு இனக்குழுக்களின் நசுக்கப்பட்ட அடையாளங்கள் அடக்குமுறைகளின் உடைபாடுகளில் சிக்கி முனகிக் கொண்டிருப்பதை இந்திய ராணுவத்திற்கு எதிராக அஸ்ஸாம் பெண்கள் நடத்திய நிர்வாணப் போராட்டம் துவங்கி ராஜதானி விரைவு ரயிலின் கடத்தல் வரையிலான பல்வேறு செயல்பாடுகள் நமக்கு உணர்த்திக் கொண்டே இருக்கின்றன. இவற்றின் உச்சமாக உலகமே இன அழிப்பு என்று எதிர்க்குரல் கொடுக்கிற இனப்படுகொலையை, சிங்களப் பேரினவாதத்தை நியாயம் செய்து ஒரு பக்கம் நீலிக் கண்ணீர் வடித்துக் கொண்டே இன்னொரு பக்கம் ஆயுதங்களைக் கொடுத்துக் கொண்டிருக்கிற தேசிய வடிவம் தங்கள் நாரயணங்களை அனுப்பி தமிழர்களுக்கு எதிரான போர்க் குற்றவாளிகளைக் காப்பாற்ற அமெரிக்கா வரை பறந்து பறந்து தனது தேசிய வடிவத்தை வார்ப்பில் வடிக்கிறது.

இந்த நிலைகளில் “நான் தமிழனா? இல்லை, இந்தியனா?” என்றொரு கேள்வி விடுதலை பெற்ற இந்தியாவில் வாழும் தமிழ் இளைஞர்களை அறுபது ஆண்டுகளுக்குப் பிறகு மிகுந்த வீச்சுடன் எதிர்கொள்கிறது. இந்தக் கேள்வி எழுந்ததன் காரணிகளை நான் உங்களுக்கு அறிமுகம் செய்யத் தேவை இல்லை என்றாலும், எனது மொழியையும், எனது பண்பாட்டையும் கொண்டு வாழ்ந்து வருகிற எனது உறவுகள் என்று நான் கருதுகிற தமிழினத்தின் மீதான ஒரு பேரினவாதப் போரை ஆதரித்து அதன் அழிவிற்குத் துணை நிற்கிற தேசியத்தின் வடிவம் எனக்கானதா என்ற அடிப்படைக் கேள்வியில் இருந்துதான் மேலே தலைப்பில் சொல்லப்பட்டிருக்கும் கேள்வியின் மூலம் ஒளிந்து கிடக்கிறது.

என் பள்ளி நாட்களில் தேசியகீதம் இசைக்கப்பட்ட போது அதனை அவமதிக்கும் வண்ணம் நடந்து கொண்ட எனது சக மாணவனைப் பள்ளியின் வழிபாட்டுக் கூடத்தில் அடித்து என்னை ஒரு தேசப் பற்றாளனாக அடையாளம் கண்டிருக்கிறேன், இந்தியா என்கிற கோட்பாட்டை, தேசிய வடிவத்தை எனக்குள் ஊற்றி வளர்த்த எனது பள்ளிகளின் வகுப்பறைகளும், கல்லூரியின் விளையாட்டு அரங்குகளும், என்னை விட்டு விலகி நீண்ட தூரத்தில் இருப்பதைப் போலவே, தேசத்தின் மீது நான் கொண்ட நம்பிக்கையும் சிதைந்து, சிதிலம் அடைந்து இருக்கிறது, இந்தச் சூழலில் தேசியம் என்கிற கருத்தாக்கத்தின் வேர்களைத் தேடி பயணம் செய்ய வேண்டிய நெருக்கடி உருவாகிறது.

1993 ஆம் ஆண்டு மகாராட்டிர மாநிலத்தின் “லாத்தூர்” மற்றும் “உஸ்மானாபாத்” மாவட்டங்களில் நிகழ்ந்த மிகப்பெரும் கொடிய நிலநடுக்கத்தின் போது, புவி அமைப்பியல் மாணவர்களின் சார்பில் நிதி சேகரிப்பில் ஈடுபட்டு, நினைவேந்தல் சுவரொட்டிகள் ஒட்டி எனது தீவிரமான தேசியச் சிந்தனைகளை வலிமைப்படுத்தி வைத்திருந்தேன். எனக்குள் மிக ஆழமாக ஊடுருவியிருந்த அந்த தேசப்பற்றின் சுவடுகள் இந்தக் கட்டுரை எழுதும் நேரத்தில் எனக்குள் முற்றிலும் இல்லை, நீர்த்துப் போன எனது தேசியம் பற்றிய சிந்தனைகளோடு தேசியம் பற்றிய எனது பார்வை மாறுபாட்டினை அடைந்து வேறு திசையில் பயணிக்கத் துவங்கி இருந்ததை என்னால் உணர முடிந்தது, இந்த மாற்றம் எனக்குள் எவ்வாறு விளைந்தது? இந்த மாற்றத்தின் அடிப்படைக் காரணிகள் என்ன என்பதைப் பற்றி அடிக்கடி நான் சிந்திக்கத் துவங்கி இருந்தேன், அப்படிச் சிந்திக்கும் போது தேசியம் பற்றிய எனது தேடல் துவங்கியது என்று சொல்லலாம்.

வெவ்வேறு முரண்பாடுகள், அரசியல் மற்றும் சமூகத் தாக்கங்களைக் கடந்து தேசியம் என்கிற கருத்துருவாக்கம் ஒரு மாயத் தோற்றமா? அல்லது கற்பிதமா? உலக இயங்கியலின் இன்னொரு பிரிவா? என்கிற பல்வேறு கேள்விகள் எனக்குள் எழுந்து கொண்டே இருக்கிறது......

எந்த ஒரு கருத்தாக்கமும் மனித மனங்களில் ஒரே மாதிரியான விளைவுகளை உருவாக்குவதில்லை, ஒரு தனி மனிதனின் அல்லது சமூகத்தின் உள்வாங்குதலைப் பொருத்தும், அதற்குப் பின்புலமாக இருக்கிற புறக்காரணிகளின் அடிப்படையிலுமே கருத்துருவாக்கங்கள் மாற்றம் பெறுகின்றன, பின்னர் வெளிப்படுத்தப்படுகின்றன. ஆதி காலம் தொட்டு மனிதர்களுக்குள் நிலவும் பல்வேறு முரண்பாடுகள், வேறுபாடுகளாக மருவிப் போராகவும், ஆட்சி மாற்றமாகவும், ஆதிக்கமாகவும் வரலாற்றின் பக்கங்களில் தொடர்ந்து பதிவு செய்யப்பட்டுள்ளது. எல்லாவிதமான கருத்தாக்கங்களையும் போலவே தேசியம் என்பதும் தனி மனிதனின் அல்லது ஒரே சிந்தனையுள்ள மனிதக் குழுக்களின் தன்னியல்பான வாழ்க்கை முறைகளில் இருந்தே கட்டமைக்கப்படுகிறது.

வாழிட ஆதாரங்களை, மொழியை, பழக்கவழக்கங்களை, வழிபாடுகளை மையமாகக் கொண்டு செயல்படும் ஒரு குறிப்பிட்ட மரபுசார் மனிதக் குழு, நீண்ட காலமாகத் தொடர்ந்து செயல்படுகிற போது தேசியம் என்கிற கருத்தாக்கம் தோற்ற மடைகிறது, அதன் கூறுகளின் வலிமையைப் பொறுத்து வடிவம் பெறுகிறது அல்லது வெற்றி பெறுகிறது என்று நம்மால் தேசியத்தைப் புரிந்து கொள்ள இயலும்.

தேசியம் என்கிற கருப்பொருள் ஐரோப்பிய நிலப்பரப்பில் இருந்தே துவங்கியது என்று வாதம் செய்கிற சில மேலைநாட்டு அறிஞர்களை நம்மால் கண்டறிய முடிகிறது, எடுத்துக்காட்டாக "ஜோகன் காட்ப்ரைட்" என்ற ஜெர்மானிய அறிஞரைப் பற்றிக் குறிப்பிடலாம், இவரை தேசியம் என்கிற கோட்பாட்டின் வடிவமைப்பாளராக சித்தரிக்கிறார்கள், ஆனால் இவரது வாதத்தின் நம்பகத்தன்மை ஏனைய கருத்துக்களில் நிகழும் ஒரு ஐரோப்பிய ஆளுமை மனப்போக்கைப் போலவே காணப்படுகிறது, பதினேழாம் நூற்றாண்டின் இறுதிக் காலங்களில் எழுதப்பட்ட சில வரலாற்றுக் குறிப்புகள் உலக வரலாற்றில் எஞ்சிய நிலப்பரப்புகளில் காணக்கிடைத்த உண்மைகளை மறுதலித்து தங்கள் வாழிடங்களின் புறச் சூழலைத் தழுவியே இறுதி செய்யப்படுகிறது என்பதுதான் அதற்கான காரணம்.

ஏறக்குறைய மூன்றாம் நூற்றாண்டின் முன்னதாகவே தொடங்கிச் செழித்திருந்த நமது இலக்கியங்களும், வாழ்வியல் கட்டமைப்புகளும் இத்தகைய ஆய்வுகளில் கணக்கில் கொள்ளப்படவில்லை. ஆகவே தேசியம் பற்றிய நமது கருத்தாக்கம் முன்னரே அறிந்து கொள்ளப்பட்ட ஒன்று என்கிற முடிவுக்கு நம்மால் எளிதில் வர இயலும். தேசியம் என்கிற ஒரு கருத்து வடிவத்தின் இன்றியமையாத பகுதிகளாகப் பண்பாட்டையும், மொழியையும் நம்மால் இனம் காண முடியும், ஒரே மாதிரியான பண்பாட்டையும், மொழியையும் கொண்ட மனிதக் குழுக்களே தேசியம் என்கிற கருத்து வடிவத்தை முழுமை பெறச் செய்யும் காரணிகளாக இருக்க முடியும்.

இதற்கிடையில், தேசியம், தொழில் மயமாதலின் விளைபொருளாகவும், முதலாளித்துவத்தின், ஊடகங்களின் துணைப் பொருளாகவும் சித்தரிக்கப்படுவதும் நிகழ்கிறது, தொழில் மயமாதலின் விளைபொருளாகத் தேசியம் இருப்பதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவாகவே காணப்படுகிறது, வேண்டுமானால், மேற்கத்திய நாடுகளில் இத்தகைய நிகழ்வுகள் உருவாகி இருக்கலாம், ஆனால், ஒட்டு மொத்த உலகிற்கும் தேசியம் என்கிற ஒரு வடிவம் தொழிற்புரட்சிக்கு முன்னதாகவே தோன்றி வளர்ந்திருந்தது என்பது தான் உண்மை. நதிக்கரை நாகரிக காலங்களில் தொழில் மயமாதலின் அடிப்படை ஆழமாகப் பரவி இருக்கவில்லை என்பதும், விவசாயம் அல்லது நிலப்பரப்பு சார்ந்த தொழில்கள் மேம்பட்டிருந்த காலங்களில் கூடத் தேசியம் என்ற கருத்தாக்கத்தின் படிமங்கள் இருந்ததற்கான சான்றுகளை நம்மால் காண இயலும்.

எடுத்துக்காட்டாக “திராவிட நாகரீகம்” தோன்றி வளர்ந்த சிந்து நதியின் சமவெளி சார்ந்த பண்பாட்டுக் காலத்தை (கி.மு 2600 - 1900) தேசியக் கருத்தாக்கங்களை அதன் மூல வேர்களை உருவாக்கிய காலம் என்று சான்றுகளுடன் நம்மால் உறுதி செய்ய முடியும், கலை, கலாசார, மொழிக் கருவிகளோடு செழித்திருந்த சிந்துச் சமவெளி நாகரீகம் தேசியக் கோட்பாட்டின் வெளிப்பாடாகிய தலைமைப் பண்புகளை வரையறுக்கும் வரையில் கிளைத்திருந்தது என்பதை தேசியம் பற்றிய வெவ்வேறு ஆய்வுகளில் “சார்லஸ்” “மேசன்”, “பியூம்ஸ்”, “கன்னிங்காம்” மற்றும் “தேம்ஸ்” போன்ற அறிஞர்கள் உறுதி செய்திருக்கிறார்கள், அதேவேளையில் தேசியம் பற்றிய ஆய்வுகளில் மேற்கண்ட அறிஞர்களின் ஆய்வையும் அதன் முடிவுகளையும் “மிக்கேல் ஜெ ஹெக்கேன்பெர்கர்” மற்றும் “அன்டோனி டி ஸ்மித்” போன்றவர்கள் கணக்கில் எடுத்துக்கொள்ளவில்லை என்பதும் இவர்களது தேசியம் பற்றிய வரையறைகளையும் அதன் நம்பகத்தன்மையையும் கேள்விக்குள்ளாக்குகிறது. தேசியம் பல்வேறு உட்பிரிவுகளைக் கொண்ட அல்லது முரண்பாடுகளை உள்ளடக்கிய ஒரு கோட்பாடாகவே இன்றளவும் காணப்படுகிறது, தேசியத்தின் நன்கு அறியப்பட்ட பிரிவுகளாக கீழ்க்கண்டவற்றை நம்மால் பட்டியலிட முடியும்.

1) மரபு வழியான தேசியம்.

2) அரசியல் வழியான தேசியம்.

3) கொள்கை வழியான தேசியம்.

4) பண்பாட்டு வழியான தேசியம் .

5) காலனி ஆதிக்கத்திற்குப் பிந்தைய தேசியம்.

6) உரிமைகள் வழியான தேசியம்.

7) இடதுசாரி விடுதலை வழியான தேசியம்.

8) மத வழியான தேசியம்.

9) தனிமனித வழிகாட்டுதல் வழியான கொடுங்கோன்மை தேசியம்.

10) இலக்கு வழியான தேசியம்.

இந்தப் பிரிவுகள் தவிர்த்து இன்னும் சில தனி வரையறைகளைக் கொண்ட தேசிய வகைகளும் இருப்பினும், நன்கு அறியப்பட்ட தேசிய வகைகளாக மேற்காணும் பிரிவுகளை அடையாளம் காண இயலும்.

1) மரபு வழியான தேசியம். (Ethnic Nationalism)

ஒரே மொழியை, பழக்க வழக்கங்களைக். குடும்ப அமைப்புகளைக் கொண்டு நீண்ட காலமாக வாழிட ஆதாரங்களை மையமாகக் கொண்டு செயல்படும் தேசிய வடிவத்தை மரபு வழியிலான தேசியம் என்று பொருள் கொள்ளலாம்.

2) அரசியல் வழியான தேசியம். (Civic Nationalism)

வெவ்வேறு மொழிகளையும், பழக்க வழக்கங்களையும் கொண்டிருந்தாலும், ஒரே மாதிரியான அரசியல் வடிவங்களைப் பெற்று ஆட்சி முறைகளில் ஒருங்கிணையும், நில எல்லைகளை மாற்றி அமைக்கும் நெகிழ்வு கொண்ட ஒரு தேசிய வடிவமாக இதனைப் பொருள் கொள்ளலாம்.

3) கொள்கை வழியான தேசியம்.(Expansionist Nationalism)

அரசியல், மொழி மற்றும் கலாசார மதிப்பீடுகளை விடுத்துக் கொள்கைகள் அடிப்படையில் இணைகிற அல்லது உருப்பெருகிற தேசியமாக இதனை நாம் பொருள் கொள்ள இயலும்.

4) பண்பாட்டு வழியான தேசியம். (Cultural Nationalism)

மரபு வழி தேசிய வடிவிற்கும், பண்பாட்டு வழியான தேசிய வடிவிற்கும் பெரிய அளவில் வேறுபாடுகள் இல்லை என்றாலும், மொழி மற்றும் நிலப்பரப்பு எல்லைகளில் நெகிழ்வுத் தன்மை கொண்ட ஒத்த பண்பாட்டில் ஒருங்கிணையும் ஒரு தேசிய வடிவமாக இதனை நாம் பொருள் கொள்ள இயலும்.

5) காலனி ஆதிக்கத்திற்குப் பிந்தைய தேசியம். (Post Colonial Nationalism)

பல்வேறு பண்பாட்டு, மொழி மற்றும் அரசியல், குடும்ப அமைப்பு, வழிபாட்டு முறைகள், கலை வேறுபாடுகளைக் கொண்ட வெவ்வேறு தேசியமாகச் செயல்பட்டு வந்த குழுக்கள், மற்றொரு குழுவின் ஆளுமைக்குப் பிறகு வலிந்து ஒரே மாதிரியான அரசியல் அளவீடுகளில், தனது நிலப்பரப்பை வரையறுத்துக் கொள்கிற தேசிய வடிவமாகவும், ஏற்கனவே உருவாகித் தழைத்திருந்த மரபு வழி மற்றும் அரசியல் வழியிலான தேசிய அடையாளங்களை விழுங்கி ஒரு புதிய தோற்றம் தரக்கூடிய தேசியமாக இதனை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது.

6) உரிமைகள் வழியான தேசியம். (Liberation Nationalism)

ஒரு குறிப்பிட்ட தேசிய வடிவில் இருந்து இழந்த தங்கள் உரிமைகளை மீட்டு மீண்டும் நிறுவுவதற்குப் போராடித் தங்கள் தேசிய வடிவத்தை உள்ளிருந்து மாற்றி அமைக்கிற தேசிய வடிவமாக இதனைப் பொருள் கொள்ள முடியும்.

7) இடதுசாரி விடுதலை வழியான தேசியம். (Left – Wing Nationalism)

குறிப்பிட்ட தேசிய வடிவினால் ஒடுக்குமுறைக்கு உட்பட்ட அல்லது உரிமைகளை இழந்த மனிதக் குழுக்கள் ஒருங்கிணைந்து போராடிப் பொது மக்களுக்கு நன்மை தருகிற அரசியல் வழியிலான தேசிய வடிவத்திற்கு மாற்றம் பெறுகிற தேசிய வடிவம் என்று இதனைப் பொருள் கொள்ளலாம்.

8) மத வழியான தேசியம்.(Religious Nationalism)

ஒரே வழிபாட்டு முறைகளைக் கொண்ட, மத நம்பிக்கைகளின் அடிப்படையில் ஒருங்கிணைந்து உருவாக்கம் பெறுகிற தேசிய வடிவமாக இதனைப் பொருள் கொள்ள இயலும்.

9) தனி மனித வழிகாட்டுதல் வழியான கொடுங்கோன்மை தேசியம். (Fascist Nationalism)

ஒரு தனி மனிதனின் சிந்தனைகளின் அடிப்படையிலும், மாற்றுச் சிந்தனைகளுக்கு இடம் கொடுக்காத மக்களுக்கு எதிரான கொடுங்கோன்மை வழியாக உருப்பெருகிற தேசியமாக இதனைப் பொருள் கொள்ள இயலும்.

10) இலக்கு வழியிலான தேசியம். (Diaspora Nationalism)

வெவ்வேறு நிலப்பரப்புகளில் வாழினும் தங்கள் இலக்கு நோக்கிய செயல்பாடுகள் மூலமாக ஒரு தேசிய வடிவைக் கட்டமைக்கிற அல்லது செயல்படுகிற தேசியக் கருத்தாக்கமாக இதனைப் பொருள் கொள்ள முடியும்.

நீண்ட தேடலுக்குப் பிறகு, என்னால் உள்வாங்கப்பட்ட தேசியம் என்கிற கருத்துரு உண்மையில் எனக்கானது அல்ல என்பதை அரசியல் சார்ந்த, இனம் சார்ந்த அல்லது மொழி சார்ந்த சில அண்மைய நிகழ்வுகள் உறுதி செய்தது மட்டுமன்றி என்னைப் போன்று எண்ணற்ற இளம் தலைமுறைத் தமிழர்களை இந்திய தேசியம் என்கிற கோட்பாட்டில் இருந்து திசை திருப்பி இருக்கிறது. இதன் தாக்கம் வரும் காலங்களில் இந்திய தேசிய அரசியலையும், தமிழ் மக்களின் அரசியல் பற்றிய சிந்தனைகளையும் மாற்றி அமைக்கும்.

நான் மரபு வழியிலான ஒரு தேசத்தில், உயர்ந்த பண்பாட்டு மொழிக் கோவைகளை உள்ளடக்கிய ஒரு தேசிய வடிவத்தில் அல்லது அதற்கும் மேலான " யாதும் ஊரே, யாவரும் கேளிர்" என்ற தேசியங்களைக் கடந்த ஒரு வடிவத்தில் எனது வாழ்வியலைச் செம்மைப்படுத்தி வாழ்ந்த போது, பொருளாதார நோக்கிலும், வல்லரசுக் கனவுகளிலும், முதலாளித்துவச் சிந்தனைகளால் வளர்க்கப்பட்டு வரும் ஒரு குறுகிய இருநூறு ஆண்டுகால நாகரீகத்துடன் இணைத்துக் கொண்டு எனக்கான தேசிய வடிவமாக அதனை ஒப்புக் கொள்வது ஒரு வகையில் அறிவீனமானது என்றே தோன்றுகிறது.

மரபு வழியிலான, மொழி வழியிலான, இன வழியிலான கலைப் பண்பாட்டு வழியிலான எனது உறவுகள் என்று நான் கருதுகிற, மக்களின் வாழ்வியலைக் கேள்விக்குள்ளாக்கும் அல்லது பேரினவாதக் கொள்கைகளுக்கு முட்டுக் கொடுக்கும் ஒரு மண்டல வல்லரசுக் கனவின் வழியாகச் செலுத்தப்படும் தேசியத்திலும், அதன் அரசியல் நிலைப்பாடுகளிலும் எனக்கு முற்றிலும் நம்பிக்கை இழப்பு உருவாகி இருக்கிறது. என்னைப் போலவே எண்ணற்ற தமிழ் இளைஞர்களுக்கும் உருவாகி இருக்கிறது என்பதும் உண்மை.

எனது உறவுகள் என்று நான் கருதுகிற மக்களைப் பாதுகாக்கிற வலிமை இருந்தும், அந்த வலிமையை எம்மிடம் இருந்தே பெற்றிருந்தும் கூட எமது உணர்வுகளைக் கொஞ்சமும் மதிப்புடன் நடத்தாத, எனது நிலப்பரப்பின் வழியாகவே இன அழிப்பிற்கான ஆயுதங்களைக் கொண்டு செல்லத் துணிந்த ஒரு தேசிய வடிவத்தில் நாம் இணைந்து செயல்படுவதும், அதனைக் கொண்டாடி மகிழ்வதும் எனது வழிவழியான மனிதநேயச் சிந்தனைகளுக்கு எதிரானதாகவும், முற்றிலும் முரண்பட்ட ஒரு தேசிய வடிவமாகவும் இருப்பதால் என்னை இந்திய தேசியத்தின் அடிப்படைக் கொள்கைகளை ஏற்றுக் கொண்டதில் இருந்து மாற்றி இருக்கிறது.

இவை அனைத்திற்கும் மேலாக, எனது மரபு வழியிலான தொழில்களை முற்றிலும் அழித்துப் பொருளாதார மயமாக்கல் என்கிற ஒரு முதலாளித்துவ ஏமாற்று வழியை உள்ளிருத்தி அறம்சார்ந்த எனது வாழ்வியலைப் பொருள்சார்ந்த வாழ்வியலாகத் திரிக்க முனைகிற, எனக்கான இன, மொழி அடையாளங்களை சிதைவுறச் செய்து ஒரு மதச்சார்பு வழியில் இயங்கத் துடிக்கிற குழுக்களின் ஆளுமையை தேசியவடிவம் என்று ஏற்றுக் கொள்வதில் பல்வேறு சிக்கல்கள் நிலவுகிறது. இவற்றின் ஆளுமையில் இருந்து விடுபட்டு நிலைத்த மேன்மையான எனது "தமிழன்" என்கிற அடையாளத்துடனேயே நான் வாழவும், அடையாளப்படுத்தப்படவும் விரும்புகிறேன்.

என்னுடைய தேசிய வடிவம் மரபு வழியான முதல் பிரிவில் உலகெங்கும் அறியப்படுகிறது, மனித நேயம் நிறைந்த, சாதி வேறுபாடுகளும், மதக் குழப்பங்களும் அற்ற இயற்கையை வணங்கிப், பெண்களின் தலைமைப் பண்புகளை ஒட்டிக், கலை மற்றும் பண்பாட்டு வெளிகளில் நிறைந்து வாழ்கிற நீண்ட காலத் தேசிய வடிவம் என்னுடையது. அதன் அடையாளங்களை எந்த தேசிய கீதத்தின் இசைப்பிலும் நான் இழப்பதை விரும்பவில்லை. என்னை இந்தியன் என்று யாரும் அழைப்பதை இப்போது நான் வெறுக்கிறேன், குடியுரிமைகள் கொண்ட ஒரு இந்தியனாக நான் இருக்கிற போதிலும், கொள்கை வழியாக நான் இந்திய தேசியத்தில் இருந்து நீண்ட தொலைவில் இருக்கிறேன், அல்லது எனக்குக் குடியுரிமைகள் வழங்கிய ஒரு தேசம் என்னை தனது செயல்பாடுகள் மூலமாக விலக்கி வைத்திருக்கிறது.

நான் இந்தியனாக இருந்தால் தமிழனாக இருக்க முடியாது, உண்மையான தமிழனாக இருந்தால் இந்தியனாக இனி ஒருக்காலும் இருக்க முடியாது, இதனைப் படிக்கும் உங்களில் யாருக்கேனும் தெரிந்தால் சொல்லுங்களேன்!!!!

நான் தமிழனா??? இந்தியனா???

- கை.அறிவழகன்

Pin It